மூக முனி

– எஸ். சுரேஷ் –

“இவன் ரஷீத் பாய் அழுதத ஒரு தடவை பார்த்தானாம். ரஷீத் பாய் அழுவாரா? அவரு ஒரு சின்ன தாதா. இவன் காஸ் விடறான்” என்று அருணைக் கைகாட்டி பஷீர் பாயிடம் சொன்னேன்.

“எங்க பார்த்த? எப்போ பார்த்த?” என்று அருணிடம் பஷீர் பாய் கேட்டார்.

நான் முஸ்தபா சார்கிட்ட ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தப்போ பார்த்தேன். அன்றைக்கு நீங்களும் ரஷீத் பாயும் அங்க வந்தீங்க. அப்போதான் ரஷீத் பாய் முஸ்தபா சார்கிட்ட ஏதோ சொல்லி அழுதார். நான் பார்த்தேன்”, என்றான் அருண்.

“நிஜம்தான்” என்றார் பஷீர் பாய்.

“நிஜமா? ரஷீத் பாய் எவ்வளவு பலசாலி. அவர் எதுக்கு அழுதாரு?” என்று ஆச்சரியத்துடன் நாங்கள் எல்லோரும் கேட்டோம்.

“அது ஒரு பெரிய கதை. உட்காருங்க. சொல்றேன்”, என்றார் பஷீர் பாய்.

“பேய்க் கதையா?” என்று கேட்டான் பஜ்ஜி.

“ஆமாம். பேய்க்கதைதான்”, என்று பஷீர் பாய் சொன்னவுடன் நாங்கள் எல்லோரும் உட்கார்ந்து கொண்டோம்.

பஷீர் பாய் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். எங்களுக்கு அவ்வப்பொழுது கதைகள் சொல்லுவார். அவர் தன் அண்ணன்களைப் போல்தான் இருப்பார். ஆனால் குள்ளம், மாநிறம். சுருட்டை தலைமுடி. அவரது அண்ணன்கள் ஜகாங்கீர் பாயும், ரஷீத் பாயும் திடகாத்திரமாக இருப்பார்கள். ஜகாங்கீர் பாய் எல்லோருடனும் சிரித்துப் பேசுவார் என்றாலும் அவரைக் கண்டால் எல்லோருக்கும் பயம். ரஷீத் யாருடனும் அதிகம் பேச மாட்டார். ‘உம்’ என்றுதான் இருப்பார். அவர் ‘பாஸ்டன் கபே’ என்னும் இரானி டீ கடை நடத்திக் கொண்டிருந்தார்.

பஷீர் பாய் ஒரு மளிகை கடை வைத்திருந்தார். அதன் அருகில் அவர் வீடு. இவை இரண்டையும் இணைக்கும் திண்ணையில்தான் எப்பொழுதும் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பார்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு பெற்றோர்கள் எப்பொழுதும் நீதிக் கதைகளையே சொல்வார்கள். இல்லையேல் அமர் சித்ர கதா வாங்கிக் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் டிவி வந்த சமயம். அதிலும் நீதி போதனைகள்தான். அதனாலேயே பஷீர் பாயின் கதைகள் எங்களுக்கு வெகுவாக பிடித்திருந்தது. அவர் எங்கள் காலனி மக்கள் பற்றி கதை சொல்வார், பேய் கதைகள் சொல்வார், ரௌடிகளைப் பற்றியும் கொலைகள் பற்றியும் கதை சொல்வார். சில சமயங்களில் ‘ஏ’ ஜோக் சொல்வார். அவர் எங்கள் காலனி ஆட்களைப் பற்றி எதுவும் சொல்லும்பொழுது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் கதை சுவாரஸ்யமாக இருக்கும்.

““நாகு பனி காவலா என்று அவன் ரஷீத் முன்னால் நின்றான்”, என்று ஆரம்பித்தார் பஷீர் பாய். “கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்த ரஷீத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தான். ஒல்லியான உடம்பு, சிக்கு பிடிச்ச தலை, கருப்பா இருந்தான் ஆனால் அவன் உடம்பு பூரா வெள்ளையா புழுதி படிஞ்சிருந்தது. எவ்வளவு நாள் ஆச்சோ அவன் குளிச்சு. எந்த கலர்ன்னே தெரியாத அளவுக்கு அழுக்கா இருந்த ஒரு சட்டையப் போட்டுக்கிட்டிருந்தான்.

“ரஷீத் அவனைப் பார்த்தவுடன் அவன் மறுபடியும் கேட்டான், “எனக்கு ஒரு வேலை வேண்டும்”. இவன் ஒரு பிச்சைக்காரன்னு நினைச்சு ரஷீத் கல்லாவிலிருந்து ஒரு நாலணா எடுத்து அவனுக்குக் கொடுத்தான். “நாகு பைசல் ஒத்து. எனக்கு ஒரு வேலை வேணும்” என்று மறுபடியும் சொன்னான் வந்தவன். “க்யா காம் கர்த்தா” என்று கேட்டான் ரஷீத். “என்ன வேல சொல்றீங்களோ அத பண்றேன்”. ரஷீத் அவனைப் பார்த்து பரிதாபப்பட்டான் போலிருக்கு. “சரி. டேபிள் தொட, ஹோட்டல்ல தினமும் ஸாப் பண்ணு. இதுதான் இப்போதைக்கு உன் வேலை” என்று அவனை வேலைக்கு சேர்த்துக்கிட்டான். இது அவனுக்கு வருங்காலத்துல பிரச்சனை கொடுக்கும்ன்னு அப்போ தெரியல.

“வந்தவன் எந்த ஊருன்னு யாருக்கும் தெரியாது. சப்ளையர் ரெட்டி பல தடவை அவனைக் கேட்டான். ஆனால் அவன் எதுவும் பதில் சொல்லலை. அவனுக்கு பெத்தவங்க இருக்காங்களா, சொந்தக்காரங்க இருக்காங்களான்னும் தெரியல. யார் கேட்டாலும் பதில் இல்ல. கொஞ்ச நாள் எல்லோரும் கேட்டு பார்த்தாங்க, சலிச்சுப் போயி அவனுக்கு ‘மூக முனி’ ன்னு பேர் வெச்சாங்க.”

“”அப்படின்னா என்ன?” பம்பாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த நிதின் கேட்டான்.

“மூக என்றால் ஊமைன்னு அர்த்தம். அவன் ஒரு மௌன முனி மாதிரி இருந்தான். ரஷீத் சொன்னாதான் ஒரு காரியம் பண்ணுவான். வேற யார் சொன்னாலும் பண்ணமாட்டான். ஒரு நாள் ஜகாங்கீர் பாய் அவனைப் போய் ஏதோ வாங்கிட்டு வரச் சொன்னான் ஆனா அவன் ரஷீத் சொல்லாம போக மாட்டேன்னு சொல்லிட்டான். ஜகாங்கீர் அவன ரெண்டு அறை விட்டான். ஆனாலும் அவன் போகல. நல்ல வேல ரஷீத் அப்போ வந்தானோ அவன் பிழைச்சான்.

“ரெட்டி, இன்னும் எங்க தங்கை பையன் மும்மது ரெண்டு பேரும் இவன ரொம்ப படுத்துவாங்க. ராத்திரில கல்லு காம்பௌண்ட் போயி நல்லா குடிச்சிட்டு ஹோட்டலுக்கு வந்து இவன அடிப்பாங்க, இல்ல ஹோட்டல்ல வாந்தி எடுப்பாங்க. இவன்தான் அதைக் கழுவணும். அதே போல மேஜைய சரியா துடைக்கல, டம்பளர் சரியா கழுவல அப்படின்னு எதாவது ஒரு சாக்கச் சொல்லி ரெண்டு அறை விடுவாங்க. அவனும் அத வாங்கிப்பான் ஆனா ஒன்னும் சொல்ல மாட்டான். ரஷீத் இருந்த மட்டும் யாரும் அவன ஒன்னும் பண்ண மாட்டாங்க.

“ரெண்டு வருஷத்துல அவனத் தேடி ஒரு ஆள் வந்ததில்ல, அவனும் எங்கயும் போனதில்ல. எந்த பண்டிகையா இருந்தாலும் அவன் ஹோட்டல்லதான் இருப்பான். வெயில் காலம்னா மொட்ட மாடில, இல்லேனா சமையல் அறைல. அவன் ஒரே சொக்காதான் ரொம்ப நாள் போட்டுட்டு இருந்தான். அது கிழிஞ்சி பல நாள் ஆனா பிறகு ரஷீத் அவனுடைய பழைய சொக்கா ஒன்ன அவனுக்கு குடுத்தான். அதுவும் சில நாள்லயே நிறம் தெரியாத அளவுக்கு அழுக்கா ஆயிடுச்சு.

“ரெட்டிக்கு மட்டும் இவன் மேல நம்பிக்கையே இல்ல. ரெட்டி ஆந்திரா ஆளு. அவன் ரஷீத்கிட்ட எப்பவும், “அண்ணா, இவன் ஏதோ திட்டத்தோடதான் வந்திருக்கான். நல்லவனா நடிக்கறான். இந்த தெலங்கானாகாரங்கள நம்பக் கூடாது. இவங்க எல்லாம் காம் சோர். எப்படி வேலைய செய்யாம பணம் சம்பாதிக்கலாம்னு பாப்பாங்க. ஒரு நாள் இவன் எல்லா பணத்தையும் எடுத்துக்கிட்டு மாயமாயிடுவான் பாருங்க,” என்று அவன் காதுபடவே சொல்லுவான். “சும்மா இருடா. அவனால நமக்கு ஒரு தொல்லையும் வராது” என்று சொல்லுவான் ரஷீத், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல்.

“ஒரு நாள் ரஷீத் அவன் மனைவியின் தங்கச் சங்கிலியை கடைக்கு கொண்டு வந்து கல்லாவில் வைத்தான்.” குரலைத் தாழ்த்தி பஷீர் பாய் சொன்னார், ”ரஷீத் மனைவி ஒரு தங்க பைத்தியம். எப்போ பார் இந்த சங்கிலிய வித்து அந்த வளையல வாங்கறது, இந்த மோதிரத்த வித்து அந்தத் தோடு வாங்கறது. இதுதான் அவ வேல. அந்த மாதிரி ஒரு வேலையாதான் அந்த சங்கிலிய கொண்டு வந்தான்”.

இதைச் சொல்லிவிட்டு மறுபடியும் சகஜமான குரலில் தொடர்ந்தார், “சங்கிலிய ஹோட்டல்ல வச்சிட்டு ரஷீத் வேற வேலையா வெளியில போயிட்டு மத்தியானம் வந்தான். வந்தவன் கல்லாவுல பாத்தா தங்கச் சங்கிலிய காணோம்!! ‘உம்’முன்னு இருக்கற ரஷீத் மூஞ்சி இன்னும் கடுப்பாச்சு. “டேய் ரெட்டி, இங்க வா. யார்டா இங்க இருந்த சங்கிலிய எடுத்தது?”. “தங்கமா?” என்று கேட்டான் ரெட்டி. “எதுவா இருந்தா உனக்கென்ன? சங்கிலிய யாரு எடுத்தாங்க?” என்றான் ரஷீத். சுற்றும் முற்றும் பார்த்த ரெட்டி, “ஆஹா. பாருங்க. நம்ப மூக முனி கண்ல படல பாருங்க. அவன் எப்பவும் இங்கதானே இருப்பான். இப்போ பாருங்க, ஆளக் காணோம். நான் எப்போலேர்ந்தோ சொல்றேன். இவன நம்பாதீங்க, இவன நம்பாதீங்கன்னு. கேட்டீங்களா. இப்போ பாருங்க. சங்கிலிய தூக்கிட்டு ஓடிட்டான்.” ரஷீத்துக்கு வந்த கோபத்தில் ரெட்டிக்கு நல்லா அடி விழுந்திருக்கும். என் தங்கை நல்ல சமயத்துல வந்து அவன காப்பாத்தினா,

“ரெட்டிய அடிக்கணும்ன்னு இருந்த ரஷீத், “ரஷீத் பாய் இதர் ஆவோ” என்று எங்க தங்கையின் குரல் கேட்டு திரும்பினான். ஹோட்டலுக்கு வெளியில் அவள் நின்றிருந்தாள், ரஷித் வெளியே வந்தான். அவள் முகத்தை பார்த்தாலே ஏதோ பிரச்சனை இருக்குன்னு தெரிந்தது. “க்யா ஹுவா” என்று ரஷீத் அவளைக் கேட்டான். அவள் பிள்ளை மும்மது ஒரு பெண்ணுடன் ஓடிப் போய்விட்டான் என்ற விஷயத்தை அவனிடம் சொன்னாள் அவள். இன்னும் விசாரிப்பதற்குள் ஜகாங்கீர் பாய் அங்கு வந்துவிட்டார். தங்கை அவரிடம் செய்தியைச் செல்லச் சென்றாள்.

“ஹோட்டலுக்குள் மறுபடியும் வந்த ரஷீத்துக்கு அது டக்கென்று தோன்றியது. ரெட்டியைப் பார்த்து, “மும்மது இங்கு வந்தானா?” என்று கேட்டான். “ஆமாம். கொஞ்ச நேரம் கல்லால உட்கார்ந்து இருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதுல ஒரு பெண் இருந்தா. அந்த ஆட்டோல ஏறிப் போனான்”.

“சங்கிலி எங்கு போயிருக்கும் என்று ரஷீத்துக்குப் புரிந்துவிட்டது. இதை எப்படி சமாளிப்பது என்று அவன் யோசிச்சுக்கிட்டிருக்கும்பொழுது டீ மாஸ்டர் முஸ்தபா ஓடி வந்தான். “மொட்ட மாடில நம்ப மூக முனி மூர்ச்சையா இருக்கான். உயிரோட இருக்கானா இல்லையான்னுகூட எனக்கு தெரியல”.

“ரஷீத், ரெட்டி, முஸ்தபா மூன்று பேரும் மாடிப்படி கிடுகிடுவென்று ஏறினார்கள். முஸ்தபா யூகித்தது போல் ‘மூக முனி’ இறந்து கிடந்தான்.

“ஹெப்பார் டாக்டர் வந்து மரணத்தை உறுதிபடுத்தின பிறகுதான் குழப்பமே ஆரம்பித்தது. இந்தப் பிணத்தை என்ன செய்வது என்பதுதான் அந்தக் குழப்பம். இவன் அப்பா அம்மா யாரு, இவன் எந்த ஊரு, என்ன மதம், என்ன குலம், ஒண்ணுமே தெரியாது. யாருக்குச் சொல்லி அனுப்பறது? யார் இவனை எரிப்பாங்க? இல்ல பொதைப்பாங்க? இவன் என்னிக்கும் பூஜா பண்ணதில்ல, மசூதிக்குப் போனதில்ல, சர்ச்சுக்குப் போனதில்ல. இப்போ இவன எந்த மதம்ன்னு நெனைக்கறது? இதுதான் பெரிய பிரச்சினையா இருந்தது.

“முதல்ல ரெட்டிகிட்ட ரஷீத் கேட்டான், “இவன சுடுகாட்டுக்குக் கொண்டு போயிடலாமா? நீதான் அவன் அண்ணான்னு சொல்லி வேலைய முடிச்சிடலாம்”. ரெட்டிக்கு இதுல அவ்வளவு சம்மதம் இல்ல. ஹோட்டலுக்கு பக்கத்து வீட்ல இருக்கற தீக்ஷிதுலுவ கேக்கப் போனான். திரும்பி வந்தவன், “அண்ணா, வேணாம். தீக்ஷிதுலு ஏதேதோ சொல்றாரு. பித்ரு சாபம் வரும், மித்ரு சாபம் வரும் அப்படின்னு. எனக்கு பயமா இருக்கு நான் இத பண்ணல. நாம இதை அனாதை பிணம்னு கவர்ன்மெண்ட்டுக்கு கொடுத்துடலாம்” என்றான்.

“பஷீருக்கு அதில் விருப்பம் இல்லை. ‘மூக முனி’ முஸ்லிம் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாததால் இஸ்லாமியச் சடங்கு செய்ய முடியாது. மண்ட குழம்பிப் போன ரஷீத், எப்பவும் போல் ஜகாங்கீர் பாயிடம் சரணடைந்தான்.

“முதலில் அவனை நன்றாகத் திட்டிவிட்டு, “யஹின் ரஹ். அபி ஆத்தும்” என்று சொல்லிவிட்டு ஜகாங்கீர் அங்கிருந்து கிளம்பினான். ஒரு அரைமணி கழித்து பால்ராஜுடன் வந்தான்.”

“யாரு நம்ப சுண்ணம்பட்டி பால்ராஜா?” என்று கேட்டான் புஜ்ஜி

“அவனேதான். பால்ராஜ் ஜகாங்கீருக்கு நல்ல தோஸ்த். ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப அட்டகாசம் பண்ணியிருக்காங்க. பால்ராஜ் அந்த பிணத்தைப் பார்த்தான். “மை தேக்லேதோம்” என்றான் ஜகாங்கீரிடம். “இப்போவே வரேன்” என்று கிளம்பியவன் கால் மணி நேரம் கழித்து வந்தான். மூக முனி கழுத்தில், சிலுவை தொங்கிய ஒரு செயின் மாட்டினான். அவன் பக்கத்தில், சைடு எல்லாம் சிவப்பா இருக்குமே, அந்த பைபிள் புத்தகத்தை வைத்தான். அதைச் செய்துவிட்டு அவன் பாதிரியைக் கூப்பிட்டு வந்து, “இவன் என் தூரத்து சொந்தம், யாருமில்லை பாவம், இவனைப் புதைக்க வேண்டும். செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றான். பாதிரி சற்று தயங்கினார். ஏதோ சரியில்லை என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் பால்ராஜ் அழுத்தமாக மறுபடியும் அவன் தன் உறவுக்காரன் என்று சொல்ல, பாதிரி இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தார். ரஷீத்திடம் அதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு பால்ராஜ் போனான்..

“மூக முனிக்கு ஒரு சவப்பெட்டி தயார் செய்யப்பட்டது. அந்தக் குதிர வண்டி இருக்குமே, அவங்களுக்கு, அந்த வண்டி வந்தது. அதுல சவப்பெட்டிய வச்சு நம்ப போயகுடா சிமெட்ரிக்கு கொண்டு போனோம். ரஷீத், நான், பால்ராஜ், ரெட்டி இன்னும் முஸ்தபா. நாங்க அஞ்சு பேருதான் இருந்தோம். எங்கள சந்தேகத்தோட பார்த்துக்கிட்டே பாதிரியார் இறுதிச் சடங்கை முடித்தார்.”

“பால்ராஜ் இவன தன் சொந்தக்காரன்னு சொன்னானே, அவனுக்கு பாவம் வராதா?”, என்று கேட்டான் அருண்.

“பாவத்துக்குத் தகுந்த மாதிரி ஜகாங்கீர் அவனுக்கு பணத்த கொடுத்திருப்பான்”, என்று சொன்னார் பஷீர் பாய்.

“இது முடிஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும். ஒரு நாள் ராத்திரி பத்து மணி போல் “பஷீர், தர்வாஜா கோல்” என்று சத்தமா கத்திக்கிட்டு ரஷீத் என் வீட்டு கதவை மடமடன்னு தட்டிக்கிட்டிருந்தான்.” சற்று குரலைத் தாழ்த்தி, “கல்யாணம் ஆனவன் வீட்டுக்கதவ ராத்திரி பத்து மணி அளவுல தட்டக்கூடாது. ஒண்ணு எல்லாரும் தூங்கப் போகறதுக்கு முன்னாடி தட்டணும் இல்லேன்னா ஒரு பன்னண்டு மணி அளவுல தட்டணும்.” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டினார் பஷீர் பாய். நாங்களும் புரிந்தது போல் புன்னகைத்தோம்.

“நான் கதவத் திறக்க கொஞ்சம் டைம் ஆச்சு. அதுக்குள்ள பல தடவ கதவ தட்டி பக்கத்து வீட்டுக்காரங்களையும் எழுப்பிட்டான் ரஷீத். கதவ திறந்தவுடனே, “பேய். என் ரூம்ல பேய் இருக்கு. பேய்”, என்று சொல்ல ஆரம்பித்தான் ரஷீத். எனக்கு ஒன்னும் புரியலை. “உட்காரு” என்று சொல்லி இதோ இந்த திண்ணைலதான் உட்கார வச்சேன். ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வரச் சொல்லி அவனுக்குக் கொடுத்தேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு அவன் சொன்னான், “எனக்கு இன்னிக்கி சாயங்காலத்திலிருந்து ஒரே தலைவலி. அதனால வீட்டுக்கு சீக்கிரம் வந்து, சாப்பிட்டுட்டு, அம்ருதாஞ்சன் தலைல தடவிக்கிட்டு படுக்கப் போனேன். ஒரு கால் மணி தூங்கி இருப்பேன். கட்டில்ல என் கால்மாட்டுல யாரோ உட்கார்ந்துக்கிட்டு இருந்த மாதிரி தோணிச்சு. பீபீதானோன்னு நெனைச்சேன். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கினேன். ஆனா யாரோ இருக்கிற மாதிரியே இருந்தது. யார்தான்னு கண்ண முழிச்சிப் பார்த்தா, அவன் உட்கார்ந்து இருக்கான்”

“”யாரு”ன்னு நான் கேட்டேன். “அதான் ஒரு காலத்துல நம்ப ஹோட்டல்ல வேலை செஞ்சானே. அவன்”. “யாரு” என்று மறுபடியும் கேட்டேன். “அதான் அந்த மூக முனி”. “அவன் எதுக்கு உங்கிட்ட வந்தான்?” என்று கேட்டேன். ரஷீத்துக்கு கோவம் வந்தது, “நானா கூப்பிட்டேன் அவனை? எனக்கென்ன தெரியும் அவன் எதுக்கு வந்தான்னு?”. “சரி, என்ன சொன்னான் அவன்? என்ன செய்தான் அவன்?” “ஒண்ணுமே பண்ணல. அப்படியே உட்கார்ந்திருந்தான். எப்பவும் போல பாக்க பரிதாபமா இருந்தான். அதே அழுக்கு சொக்கா, அதே பரட்டை முடி. நாத்தம்தான் இல்ல”. “சரி, நீ ஏதோ பயந்திருக்க. இன்னிக்கு இங்கயே படு”, என்று என் வீட்டில் ரஷீத்தைப் படுக்க வைத்தேன்.

“அடுத்த நாள் இரவு மூக முனி மறுபடியும் ரஷீத் அறையில் இருந்தானாம். ரஷீத் அவன் மனைவியை எழுப்பிக் காட்டினான். ஆனால் அவளோ “எனக்கு யாரும் தெரியலையே” என்று சொல்லிவிட்டாள். ரஷீத் தூங்கவேயில்லை. அதற்கடுத்த நாளும் இதே நடந்தது. ரஷீத் மனைவிக்கு ஒரே கோபம். இரவு செய்ய வேண்டியதை செய்யாமல் (இங்கு பஷீர் பாய் எங்களை பார்த்து கண் சிமிட்டினார்), அவளைத் தூங்கவும் விடமாட்டேன் என்கிறான் என்று அவளுக்கு எரிச்சல். அடுத்த நாள் ரஷீத் ஹோட்டலில் ரெட்டியுடன் படுத்தான். அங்கேயும் மூக முனி வந்துவிட்டான். ஒரு நாள் ஜகாங்கீர் பாய்கூட படுக்கச் சொன்னேன். அன்னிக்கும் அவன் வந்தான். ரஷீத் நிலவரம் கர்ப்யு வந்த ஓல்ட் சிடி போல போல கவலைக்கிடமானது. அவன் மேல் கோவமாக இருந்த அவன் மனைவி இப்போ ரொம்ப கவலைப்பட்டாள். ஜகாங்கீர் கானாலும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காணமுடியவில்லை என்றால், கடைசி புகலிடம் எங்கள் அம்மி ஜான்தான்.

“உலகத்தில் பல பேர் தன் குழந்தைகளுக்குக் கெட்டது செய்யவே பிறந்திருக்காங்கன்னு எங்க அம்மி ஜானின் நம்பிக்கை. ரஷீத் மனைவி ரஷீத் நிலமைய அம்மி ஜான்கிட்ட சொன்னவுடனே அவங்க எங்களோட ஒரு பத்து பதினஞ்சு உறவினர்கள திட்டி அவங்களுக்கு சாபம் கொடுத்தாங்க. இதுல பல பேருக்கு நாங்க இருக்கோம்ன்னு தெரியுமான்னுகூட எனக்கு தெரியாது. இந்த சாக்குல ரஷீத் மனைவியோட அப்பா அம்மாவுக்குக்கூட திட்டு விழுந்தது. திட்டின பிறகு, ரஷீத்தையும் அவன் மனைவியையும் மதீனாகிட்ட இருக்கற ஒரு பாபாகிட்ட அழைச்சிட்டு போனாங்க. அவர் ரஷீத் கைல ஒரு தாபீஜ் கட்டினாரு. அன்னிக்கு ரஷீத் வீட்டுக்கு வந்து, சாம்பிராணி புகை எல்லாம் போட்டு ஏதோ மந்திரம் சொல்லிட்டு போனாரு. இனி இந்த பக்கம் எந்த பேயும், ஜின்னும் வராது என்று சபதம் செஞ்சிட்டு போனாரு. ஆனா அன்னிக்கு ராத்திரி மூக முனி வந்தான்.

“அடுத்தது எங்க அம்மி ஜான் மாகாளி கொவில்லேர்ந்து ஒரு பூஜாரிய கூட்டிட்டு வந்தாங்க. அவன் நெறைய எலுமிச்சை பழத்த நறுக்கி அதுல மஞ்சள் குங்குமம் தடவி எல்லா அறையிலும் எல்லா மூலைலயும் வச்சிட்டு, சொம்புல இருந்த தண்ணிய வேப்ப இலையால எல்லார் மேலயும் தெளிச்சிட்டு, இனி இந்த அறைக்குள்ள வர எல்லா பேயும் பயப்படும் என்று சொல்லிட்டு போனான். ஆனா மூக முனி பயப்படல. அன்று இரவும் வந்தான்.

““அவன் வேற மதம். நாம அவன் கிறிஸ்துவனா புதைச்சிட்டோம். அதுனாலதான் அவன் வரான்” என்று பீதியை கிளப்பினான் ரெட்டி. “அப்படி இருந்தா இவ்வளவு நாள் கழிச்சி எதுக்கு வரான்?” என்று கேட்டான் ரஷீத். இருந்தாலும் பால்ராஜ் மூலமா அந்தப் பாதிரியை தனக்காக வேண்டிக்கொள்ள சொன்னான். பாதிரியும் வேண்டிக்கிட்டார். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இரவு தப்பாமல் மூக முனி வந்துக்கிட்டுதான் இருந்தான்.

“”அவன்தான் ஒன்றும் செய்யவில்லையே, வந்துவிட்டு போறான், விட்டு விடு” என்றேன். ரஷீத்துக்கு கோவம் வந்தது. “உன் வீட்டில் அவன் வந்தால் தெரியும். இனி தினமும் உன் வீட்டில் படுக்கவா?” என்றான். நான் யாரிடமும் பயப்பட மாட்டேன். ஜகாங்கீர், யாதகிரி, பால்ராஜ் எந்த தாதாவா இருக்கட்டும், ஒண்டிக்கு ஒண்டி மோதத் தயார். ஆனா இந்த பேய், ஜின் இதுகிட்ட எனக்கு கொஞ்சம் பயம்தான். ரஷீத்தை சமாதானப்படுத்த, “நாம போயி ப்ரொபசரப் பார்ப்போம். மந்திரம்லாம் நம்பள கைவிட்டுடிச்சி. விஞ்ஞானம் நம்பள காப்பாத்துதா பார்ப்போம்” என்று சொல்லி அவனை ப்ரொபசர் முஸ்தபா வீட்டிற்குக் கூட்டிட்டு வந்தேன். “ப்ரொபசரிடம் நடந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ரஷீத் அழ ஆரம்பித்து விட்டான். அப்போதுதான் நீ பார்த்திருக்க வேண்டும்”, என்று அருணை நோக்கிச் சொன்னார் பஷீர் பாய்.

“ஆமாம்” என்பது போல் தலையை ஆட்டினான் அருண். “எல்லாத்தையும் கேட்ட ப்ரொபசர், சைகாலஜி பற்றி ஒரு சின்ன கிளாஸ் எடுத்தாரு. எனக்கும் ரஷீத்துக்கும் ஒன்னும் புரியலை. இருந்தாலும் தலைய ஆட்டிக்கிட்டிருந்தோம். எல்லாம் சொல்லிவிட்டு அவர் ரஷீத்தைப் பார்த்து சொன்னார், “உன் ஆழ்மனதில் அவன் ஞாபகம் இருக்கு. அதுதான் இப்பொழுது வெளியே வருகிறது. அவனை நீ கொடுமைப்படுத்தி இருக்கலாம். அடித்திருக்கலாம். அதைப் பற்றிய குற்ற உணர்வு உனக்குள்ள இருக்கு. அதுதான் தினமும் ராத்திரியில் வெளியே வருது”.

““அப்படி ஒன்றும் இல்லை ப்ரொபசர்” என்றான் ரஷீத். “என்ன தவிர எல்லோரும் அவன கொடுமைப்படுத்தினாங்க. நான்தான் அவன நல்லா பார்த்துக்கிட்டேன். அவன் நினைவே பல மாசமா எனக்கு இல்லை. ஜகாங்கீர் கான் தேர்தல்ல நின்னாரு. அதுக்கு வேல. அல்வால்ல நாங்க கட்டுற வீட்டுக்கு செய்யவேண்டிய வேலைன்னு எவ்வளவோ வேல போன பல மாசமா என்னைப் பத்தி நெனைக்கவே டைம் இல்லை. இவனப் பத்தி எங்க நினைக்கறது?”

“”இல்ல. இது ஆழ் மனம் சம்பந்தப்பட்டது..” என்ற ப்ரொபசர் முடிக்கறதுக்கு முன்னால அவர் மனைவி பாத்திமா டீச்சர் எங்களைப் பார்த்துச் சொன்னார், “மோன்டா மார்க்கெட்டுக்குப் போயி ஒரு பூமாலை, ஒரு பூச்செண்டு, கொஞ்சம் உதிரிப்பூ இன்னும் ஒரு நாலு மெழுகுவர்த்தி வாங்கிட்டு வாங்க”.

“பாத்திமா டீச்சர் தன்னிடம் ட்யூஷனுக்கு வரும் பசங்களை இப்படி வீட்டு வேலைக்காக அனுப்புவது உண்டு. எங்களைச் சொல்ல நாங்க தயங்கினோம். ப்ரொபசரப் பார்த்தோம். “சீக்கிரம் போங்கப்பா” ன்னு டீச்சர் விரட்ட, நாங்க மோன்டா போய் எல்லா சாமானையும் வாங்கிக்கிட்டு டீச்சர் முன் ஆஜர் ஆனோம். “இந்த மாலை, பூச்செண்டு ரெண்டையும் அவன் கல்லறை மேல வைங்க. அப்புறம் பூவைத் தூவுங்க. கடைசியா மெழுகுவர்த்தி கொளுத்தி கல்லறை மேல வச்சிட்டு, அவனை ஒரு நிமிஷம் நினைச்சுக்கிட்டு மெளனமா இருங்க. அப்புறம் வீட்டுக்குப் போங்க. எல்லாம் சரியாகிடும்” என்றார் டீச்சர். எங்களுக்கு ஒன்றும் புரியலை. ப்ரொபசருக்கும் ஒன்றும் புரியலை. மனைவி இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறார் என்பதால், “பீபி சொல்றபடி பண்ணுங்க. நாளைக்கு வந்து என்ன பாருங்க”, என்றார். நாங்களும் கல்லறைக்குச் சென்று மாலை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு வந்தோம்.

“அடுத்த நாள் ரஷீத்தை காலை பத்து மணி அளவில் பார்க்க ஹோட்டலுக்குப் போனேன். அப்பொழுதுதான் அவன் ஸ்கூட்டரில் வந்து இறங்கினான். “என்ன ஆச்சு?” என்றேன். “அவன் வந்தானா?” “வந்தான் ஆனா போயிட்டான்” “என்ன?” “ராத்திரி எப்போதும்போல் நான் என் அறைக்குள் சென்றேன். அவன் கட்டிலில் உட்கார்ந்துக்கிட்டிருந்தான். என்னை உற்றுப் பார்த்தான். பார்த்துக்கிட்டே மெதுவா மறைய ஆரம்பிச்சான். ஒரு விநாடிதான். முழுசா மறைஞ்சுட்டான். நான் தூங்க ஆரம்பிச்சேன். பத்து நிமிஷத்துக்கு ஒரு தடம் விழித்துப் பார்த்தேன், அவன் இல்லை. என்னால் நம்ப முடியவில்லை. விட்டுவிட்டுதான் தூங்கிக்கிட்டிருந்தேன். காலை மூணு மணி அளவில்தான் நல்லா தூக்கம் வந்தது. இதுபோல தூங்கி ரொம்ப நாள் ஆச்சு” என்றான்.

“ஒரு வாரம் பயத்துடன்தான் ரஷீத் தூங்கினான். மெதுவா இனி மூக முனி வரமாட்டான் என்று உறுதியாச்சு. அதற்கு பின்தான் அவன் மனைவி படுக்கையறைக்குள் வர ஆரம்பித்தாள்.

“ஒரு நாள் நானும் ரஷீத்தும் ஸ்கூட்டர்ல போறப்போ பாத்திமா டீச்சரைப் பாத்தோம். அவங்க வீட்டு காம்பவுண்ட் சுவர்கிட்ட நின்னுட்டு இருந்தாங்க. “எப்படி இருக்க ரஷீத். அவன் வருவத நிறுத்திட்டானா?” என்று கேட்டார். “இப்போ எல்லாம் வருவது இல்ல டீச்சர். நீங்க சொன்ன மாதிரி பண்ணோம். அப்புறம் அவனக் காணோம்”. “வருஷா வருஷம் அவன் என்னிக்கி செத்தானோ அன்னிக்கி அவன் கல்லறைக்குப் போயி இதையே பண்ணுங்க” “பண்றோம் டீச்சர்” என்று வாக்கு கொடுத்துட்டு வந்தோம். போன ரெண்டு வருஷமா ரஷீத் ..”

“எவ்வளவு நேரமாச்சு உங்கள மார்க்கெட்டுக்குப் போகச் சொல்லி? இன்னும் இங்கயே கதை சொல்லிட்டிருக்கீங்க. ஒரு பொறுப்பு வேணாம்?”, அசரீரி போல் உள்ளிருந்து பஷீர் பாயின் மனைவி குரல் கேட்டது.

“பேய், ஜின் இதெல்லாம் சமாளிக்கலாம். ஆனா இவங்கள சமாளிக்கறது கஷ்டம்” என்று வீட்டின் உள்பக்கம் விரலை நீட்டி காட்டிவிட்டு “சலோரே அபி” என்று எங்களைத் துரத்தினார் பஷீர் பாய்.

“பேய் எல்லாம் வந்ததால நான் ஏதாவது த்ரில்லிங்கா நடக்கும்னு பார்த்தேன். காஷ்மோரா மாதிரி. ஆனா இந்த பேய் பூவுக்கு பயந்து ஓடிவிட்டது” என்றேன் நான்.

“ஒவ்வொரு பேய் ஒவ்வொரு மாதிரி” என்றான் புஜ்ஜி

“நீ ஏதோ தினமும் பேயப் பாக்கற மாதிரி பேசற”, என்றான் அருண். “பேயே கிடையாது. இது சைகாலஜி பிராப்ளம்தான்.” என்று அடித்துச் சொன்னான் அவன்

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றி சற்று நேரம் எங்களுக்குள் சர்ச்சை நிகழ்ந்தது. கடைசியில் எல்லோரும் இன்று பஷீர் பாய் சொன்ன கதையில் பேய்க் கதைக்கு வேண்டிய திருப்பங்களும், திரில்லும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, கிரிக்கெட் ஆட மைதானத்திற்கு விரைந்தோம்.

One comment

  1. It’s a good read. Takes you through the motions of story listeners. Most of us have come across people like Basheer Bhai in our lives. Rather than giving me a feel of reading the story, it gave me a feel of listening to a casual story teller, who weaves his imaginations through real life incidents. The best part is side comments, which is so real with such story tellers.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.