2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல்.

பதாகை: இவ்வருட புத்தக கண்காட்சிக்கு என்னவெல்லாம் புத்தகங்கள் வெளியிடுகிறீர்கள்?

பேயோன்: ஒரு புத்தகம்கூட இல்லை. ஆண்டிறுதி வெளியீடாகச் சென்ற ஆண்டு போல் ஒரே ஒரு உரைநடைத் தொகுப்பை மின்னூல் ஆக்கிவருகிறேன். புத்தகத்தின் தலைப்பு ‘வாழ்க்கையின் அர்த்தம்’. மொத்தம் 36 படைப்புகள். இதில் ரேமன், பனிப் புயல் ஆகிய நீள்கதைகள், இரண்டு’குடும்ப’க் கதைகள், கடிதங்கள், உரை, நூல் அறிமுகம், அனுபவப் பகிர்வுகள், ஒரு குட்டி நாடகம், அதற்குத் திரைக்கதை ஆகியவை இருக்கும். எல்லாமே என் வலைத்தளத்திலும் படிக்கக் கிடைப்பவைதான். இந்தப் புத்தகம் என் வலைத்தளத்தில் epub வடிவத்தில் கிடைக்கும். freetamilebooks.com-இல் வேறு சில வடிவங்களிலும் கிடைக்கலாம்.

பதாகை: இவை எழுதப்பட்ட விதம் மற்றும் வளர்ச்சி பற்றி ஏதேனும் சுவாரசியமான அனுபவங்கள்?

பேயோன்: ‘ஒரு லோட்டா இரத்தம்’ கதையில் ஒரு பயங்கரப் பத்தி எழுத்தாளர் எந்த அமர எழுத்தாளரை அல்லது வேறு ஆளுமையைப் பற்றியாவது எழுதினால் அந்த ஆளுமை கோர மரணமடைவார். இந்தத் தொடர் கொலைகளை இன்டர்போல் துப்பறியும் இதுதான் கதை. ஆர்வமாக எழுதத் தொடங்கினாலும் மூன்று அத்தியாயங்களுக்குப் பின்பு கதை நகரவில்லை. பல மாதங்களுக்குப் பின்பு ஒருநாள் ஓர் இணைய இதழில் வான் கோக் பற்றிப் படுகேவலமாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் பார்த்தேன். கொலைவெறி வந்தது. அந்தக் கட்டுரையைக் கிண்டல் செய்து ‘ஒழிந்தான் ஓவியன்’ என்ற அத்தியாயத்தை எழுதினேன். அந்த உத்வேகத்தில் கதையைத் தொடர்ந்து எழுதி முடித்தேன்.

பதாகை: உங்கள் எழுத்தில் எப்போதும் எதிர்பாரா இடத்தில் அங்கதத்தை புதைத்து வைத்திருப்பீர்கள். வாசகருக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கவல்லது. எழுத்தின் உருவாக்கத்தில் உங்களுக்கு என்று ஏதும் ஏதும் தனிக்குறிக்கோள்கள், அல்லது அதன் நோக்கம் பற்றிய ஒரு வரையறை என்று ஏதேனும் வடிவம் உருவாக்கிக் கொள்கிறீர்களா?

பேயோன்: முதலில் துண்டிலக்கியம் என்பது நகைச்சுவைக்காக மிகைப்படுத்திய பதம். அது நகைச்சுவைத் துணுக்குதான். அதை இலக்கிய வகைமை என்பதெல்லாம் ஓவர். 🙂 ஆனால் எடிட்டிங் மற்றும் மொழியியல் சவால்கள் இருக்கின்றன. வாக்கியத்தின் நீளம், ஒலி போன்ற கூறுகள் நகைச்சுவைக்கு எவ்வளவு வலு சேர்க்கின்றன என்பது பற்றி ட்விட்டரில் எழுதும்போது நிறைய கற்றுக்கொண்டேன். எனவே ட்வீட்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன். சில எண்ணத் துணுக்குகளை அப்படித்தான் எழுத முடியும் என்றும் சொல்லலாம். நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல. அதற்கான விஷய அறிவோ அர்ப்பணிப்பு உணர்வோ ஒழுக்கமோ (discipline), வடிவம் குறித்த அறிவோ, ஏன், ambitiousness கூட இல்லை. நான் முற்றிலும் spontaneityயை நம்பி எழுதுபவன். அதனால்தான் திட்டமிட்டு எழுதுவதில்லை. ஒரு லோட்டா இரத்தத்திற்கு ஓர் அத்தியாயப் பட்டியல் போட்டு வேலைசெய்ய முயன்றேன், ஆனால் அதைப் பயன்படுத்தவில்லை. நோக்கம் என்று பார்த்தால் நான் எழுதுவது நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். மற்றவர்களைச் சிரிக்கவைப்பது நோக்கம் அல்ல. மற்றவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. எனக்குப் பிடித்தால் என்னுடைய ‘அலைநீள’த்தில் இருப்பவர்களுக்கும் பிடிக்கும்தானே? என் படைப்புகளுக்கு நான் ஒரே ஒரு விதி வைத்திருக்கிறேன். ஒரு படைப்பில் குறைந்தது 70 சதவீதமாவது நன்றாக இருக்க வேண்டும், அந்தப் படைப்பைக் கைவிட முடியாதபடி redeeming lines – அதாவது ஜோக்குகள் – நிறைய இருக்க வேண்டும். ஜோக்குகளாகத் தோல்வியடையும் வரிகள் இருந்தால்கூடப் பரவாயில்லை, அவை படைப்பை பாதிக்காமல் இருந்தால் போதும். இதுதான் எனக்குக் குறைந்தபட்சத் தரம்.

பதாகை: தொடர்ந்து ஏழு வருடங்களாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள். இந்த எழுத்து உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களிலோ, அல்லது உங்கள் பார்வையிலோ என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்திருக்கின்றன?

பேயோன்: ஐயா, நான் ஏழாம் வகுப்பு படித்தபோது என் பள்ளித் தோழர்களைக் கதாபாத்திரங்களாக வைத்து ஒரு துப்பறியும் கதையும் நகைச்சுவை நாடகமும் எழுதியிருக்கிறேன். பதினோராம் வகுப்பில் என் அக்கவுன்டன்சி ஆசிரியரைப் பற்றி விருத்தமும் ஒரு கற்பனைச் சித்தரைப் பற்றி இன்னொரு நீண்ட மரபுக் கவிதையும் எழுதியிருக்கிறேன் (செய்யுள் இலக்கணம் நினைவில் இருந்த காலம்). அபத்த நகைச்சுவை வகைப்பட்ட எனது முதல் சிறுகதை முயற்சி 2002 வாக்கில் ஒரு சிற்றிதழில் பிரசுரமானது. திசைகாட்டிப் பறவையையும் அப்போதுதான் எழுதினேன். எனவே விட்டு விட்டுப் பதினைந்து ஆண்டுகளாக எழுதுவதாகச் சொல்லலாம், நீங்கள் சொல்வது மாதிரியும் சொல்லலாம். 🙂 என் எழுத்து என் பழக்கவழக்கங்களிலோ பார்வையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. காதில் விழும் உரையாடல் துணுக்குகள், தகவல் துண்டுகள் போன்றவை எழுதும்போது நினைவுக்கு வந்து பயன்படும், அவ்வளவுதான். இது எழுதும் எல்லோருக்கும் நடப்பதுதான்.

பதாகை: எழுதும்போது எதிர்கொண்ட எழுத்துக்கு அப்பால், புறச்சூழல் சார்ந்த பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி கூறுங்களேன்.

பேயோன்: வேலை. எனக்கு மோசமான மறதி உண்டு. ஒரு கதை, ட்வீட், கவிதை, கட்டுரை யோசனை தோன்றினால் உடனே அதைக் குறிப்பாகவாவது எழுதிவிட வேண்டும். நல்ல சொல்லாக்கங்கள் தோன்றும். எதிலாவது பயன்படுத்த அவற்றை எழுதிவைக்க வேண்டும். ஆனால் வேறு எது பற்றியும் யோசிக்க முடியாத அளவுக்கு வேலைச் சுமை இருக்கும்போது இவையெல்லாம் எழுத முடியாமல் தொலைந்துவிடும். நான்கைந்து கதைகள் இப்படிப் பாதியில் நிற்கின்றன. அவற்றை எழுதி முடிக்க வாய்ப்பில்லை. இன்னொன்று, ஒரு வேகத்தில் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்போது உறவுகள், கடமைகள் குறுக்கிட்டால் அது உருப்பட்ட மாதிரிதான். வேலையை விட்டு லாட்டரி அடிப்பதுதான் இதற்குத் தீர்வு.

பதாகை: பேயோன் 1000ல் இருந்து உங்கள் படைப்புகள் எப்படிப்பட்ட வரவேற்பு பெறும், எத்தகைய வாசகர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்ததா? இப்போது அது மாறியிருக்கிறதா?

பேயோன்: பேயோன் 1000 தமிழில் முதல் ட்வீட் தொகுப்பு என்ற அளவில் குறிப்பிடத்தக்க புத்தகம். ஆனால் அதற்குக் கிடைத்த கவனிப்புக்கு/வரவேற்புக்கு அது தகுதியற்றது. முதிர்ச்சியற்ற அசட்டு நகைச்சுவை அதில் நிறைய உண்டு. அப்போது அந்த மாதிரி ட்வீட்டுகள் புதிதாக இருந்ததால் புத்தகம் பிழைத்துக்கொண்டது. இருந்தாலும் சுருக்கமான நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிப் பழகுவதற்கும் தன்னம்பிக்கைக்கும் அது பயனுள்ளதாக இருந்தது. என்னைப் பொறுத்த வரை என் முதல் புத்தகம் ‘திசைகாட்டிப் பறவை’தான். இதை எங்காவது சொல்ல நினைத்தேன், நன்றி. 🙂 ‘என் வாசகர்கள்’ என்றால் என்னைப் போன்ற பார்வையை, வாசிப்பை, ஆதங்கங்களை, எரிச்சல்களை, வெறுப்புகளைக் கொண்டவர்கள்தான் நான் எழுதுவதைப் பொருட்படுத்துவார்கள் என்று தெரியும். ட்விட்டரில் எங்கள் in jokes சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதைப் பார்க்கலாம். ஆனால் முன்பு இருந்த வாசகர்கள் இப்போது இல்லையோ என்று எனக்குச் சந்தேகம். ‘ஒரு சாகக் கதை’, ‘ஒரு சின்ன பிரச்சினை’ போல் பரிசோதனை ரீதியாக எழுதுவதில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொன்று நான் standup comedyஇன் எழுத்து வடிவம் என்று நினைக்கும் ‘டைரிக் குறிப்புகள்’ மாதிரி படைப்புகள் நிறைய எழுதத் தொடங்கினேன். திரும்பத் திரும்ப அதையே எழுதுவது போல் ஆனது. எனவே சிறுகதைகள் எழுத முடிவுசெய்து ஒரு நெடுங்கதையும் சில சிறுகதைகளும் எழுதினேன். பழைய வாசகர்கள் திரும்பி வரவில்லை. ஆனால் நான் முன்பு எழுதியது போல் திரும்ப எழுத முடியாது. ‘நம்மை மீறிய விஷயம்’, ‘ரேமன்’, ‘விஷ ஊசி’ போன்ற கதைகளைத்தான் எழுத விரும்புகிறேன். புதிய வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று, தவறான காரணங்களுக்காக ரசிக்கிறார்கள் மற்றும்/அல்லது சீக்கிரம் கழன்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பதாகை: நீங்க அண்மையில் எழுதியதில் விஷ ஊசி மிகப் பிரமாதமாக இருந்தது, அதிலும் குறிப்பாக முதல் அத்தியாயம்… ஆனால் ஏனோ தொடர்ந்து எழுதவில்லை என்பது ஏமாற்றம்தான். … எடிட்டிங் மற்றும் மொழியியல் சவால்கள் இருக்கின்றன. எனவே அதைத் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.” என்று நீங்கள் சொல்வது குறித்து யோசிப்பதற்கு இருக்கிறது. இணையத்தில் எழுதுபவர்களில் ஸ்டைலிஸ்டுகள் என்று சொல்லத்தக்கவர்கள் மிகக் குறைவு, அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதில் நீங்கள் முதல் சில இடங்களில் இருப்பீர்கள். மொழி மீதான அக்கறை- அதன் தேய்வழக்குகளை விளிப்பது இதில் சாதாரண விஷயம், அதைவிட முக்கியமாக, சொல்லாக்கமும் வாக்கிய அமைப்பும் ஒரு விழிப்பு நிலையில் நிகழ வேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கும் கவனம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, இந்த உரையாடலில், “புதிய வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று, தவறான காரணங்களுக்காக ரசிக்கிறார்கள் மற்றும்/அல்லது சீக்கிரம் கழன்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்,” என்பதில் மற்றும்/ அல்லது என்பது and/or என்பதன் நேரடி தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அது ஒரு சுவாரசியம் என்றால், உண்மையில் இந்த இரு வாக்கியங்களின் பொருள் என்ன என்று யோசிப்பது அடுத்த சுவாரசியம். இந்த விஷயத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பேயோன்: மொழி மீது கண்டிப்பாக கவனம் உண்டு

அதுதான் என் கதைகளிலும் கட்டுரைகளிலும் மைய அம்சம். வேதனை வடியும் ஒரு வாக்கியத்திற்கிடையே செமிகோலன் பயன்படுத்துவது என்று நிறுத்தக்குறிகள் மூலமும் நகைச்சுவையின் தாக்கத்தை அதிகரிக்கலாம். பெரிய, சிறிய ஊடகங்களிலும் இப்போது இணையத்திலும் பயன்படுத்தப்படும் மொழிதான் எனது தலையாய அக்கறை. கவிதை, கதை, கட்டுரை என்று எழுதினாலும் அது பற்றிய ரெஃபரன்ஸ்கள் வந்துவிடும். படம் வரைந்தால்கூட வரும்.   காரணம், நான் தமிழில் இலக்கியப் புத்தகங்களை மிகக் குறைவாகவே படித்திருக்கிறேன். வெகுஜன இலக்கியம்தான் அதிகம் படித்தது. அதனால்தான் தொடர்ந்து அதன் கருவிகளைப் பயன்படுத்துகிறேன். and/or என்பது என்னை வசீகரிக்கும் ஒரு பிரயோகம். என் தொழில் மொழிபெயர்ப்பு என்பதால், doctors and/or nurses என்பதை ‘மருத்துவர்கள், தாதிகள் அல்லது இருவரும்’ என்று மொழிபெயர்ப்பேன். இப்போது literal translation வேண்டும் பாமர எடிட்டர்களுடனான போராட்டங்களுக்குப் பிறகு ‘மற்றும்/அல்லது’ என்றுதான் எழுதுகிறேன். விஷ ஊசியைத் தொடந்து எழுதவே விருப்பம். எழுதுவேன் என்றுதான் நினைக்கிறேன்.

பதாகை: பேயோன் என்பதொரு புனைவு பாத்திரம்தான் என்று உங்களை உருவாக்கிய எழுத்தாளர் பலமுறை சொல்லி வந்திருக்கிறார். இப்போதும் பேயோனுக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளியை பேணி வருகிறீர்களா?

பேயோன்: உருவாக்கிய எழுத்தாளர்தான் இதை எழுதிக்கொண்டிருப்பது. புனைவுப் பாத்திரமாக எழுதினாலும் எனது விருப்பு வெறுப்புகளை என் எழுத்தில் காட்டாமல் இருப்பதில்லை. இடைவெளி குறைந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சிறுகதை எழுதி அதில் பேயோனை விபத்தில் சாகடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பல அபத்தங்களுக்குப் பேயோன் என்ற அற்புதமான சாக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் இடைவெளியை அதிகரித்துக்கொள்வதே நல்லது என்று நினைக்கிறேன்.

பதாகை: வரும் காலத்தில் பேயோனிடமிருந்து என்ன மாதிரியான படைப்புகளை எதிர்பார்க்கலாம்?

பேயோன்: மேலும் குடும்பக் கதைகளை எழுதத் திட்டம். அறிவியல் நகைச்சுவைப் புனைவுகள் எழுத ஆசை. பரிசோதனை ரீதியாக எழுதவும் ஆசை. அதற்கெல்லாம் படிக்க வேண்டும். நேரம் கிடைக்க வேண்டும். ராமாயண, மகாபாரதக் கதைகளில் ஊதிப் பெரிதுபடுத்தச் சின்னச் சின்னதாக நிறைய கதைத் துணுக்குகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்வேன். ட்விட்டரிலேயே மிக நகைச்சுவையான ஆள் என்று அழைக்கப்படும் ஸ்டாண்ட்அப் காமெடியனும் நகைச்சுவை எழுத்தாளருமான Rob Delaney, சமீபத்தில் ஒரு ட்வீட் எழுதினார்:

இது இங்கே சிலருக்கு நகைச்சுவையாகத் தெரியாமல் போகலாம். சிலர் தங்களுக்குத் தெரிந்த ஒரே வார்த்தையான ‘மொக்கை’ என்பதை உதிர்த்துவிட்டு மூளையைச் சுருக்கிக்கொள்வார்கள். இதில் ‘என் மகளின் கிறிஸ்துமஸ் கச்சேரி இன்றைக்கு நடக்கிறது!” என்று ஆச்சரியக்குறியுடன் பரவசப்பட்டு, அடுத்த வாக்கியத்திலேயே “நான் போகவில்லை, ஏனென்றால் அவள் அசிங்கமாக இருக்கிறாள்’ என்று வேகமாக ‘பன்ச்’ வைப்பதுதான், குறிப்பாக மகளை அவலட்சணம் என்று சொல்வதுதான் நகைச்சுவை. ஏனென்றால் எந்தத் தகப்பனும் தன் குழந்தையை அவலட்சணம் என்று சொல்வது வழக்கத்திற்கு மாறானது. இதுதான் இங்கே நகைச்சுவை. நம் ஆட்களுக்கு இந்த மாதிரி படித்தால் வியர்த்துக்கொட்டிவிடும். இங்கே black humour என்பது சினிமாவில் வந்தால்தான் ஜீரணிக்கத்தக்கதாக இருக்கிறது. எழுதினால் வக்கிரம் ஆகிவிடும். “பூனைக் கன்றுகள் அழகல்ல” என்று ஒரு கட்டுரை எழுதினேன். தன் மகனின் அவலட்சணத்தைப் பற்றி ஒரு தகப்பன் பகிர்ந்துகொள்ளும் அனுபவக் குறிப்பு அது. அதைப் படித்த பலர் சமூக ஊடகத்தில் என்னை சைக்கோ என்று வர்ணித்தார்கள். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அதற்குச் சுட்டி கொடுத்தபோது ஒருவர் “இது சரியா?” என்ற கேள்வியுடன் அதைப் பகிர்ந்துகொண்டார். 🙂 இவர்களை The Onion படிக்கவைத்தால், Louis CKஐக் கேட்கவைத்தால் என்ன ஆகும்? ஆனால் உருகி உருகி எழுதப்படும் விஷயங்களைக் கட்டி வைத்து உதைக்கலாம் போல் தோன்றுகிறது. குற்றக் குழந்தைகள், ஒரு கை ஓசை ஆகியவை இந்த வகைதான். இப்படி இன்னும் நிறைய எழுதலாம் என்று இருக்கிறேன். எனக்கு உலகிலேயே மிக அழகான விஷயம், மிகவும் நெகிழ்ச்சியும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் விஷயம் என் குழந்தைதான். ஆனால் நகைச்சுவை என்பது வேறு உலகம். தமிழில் பிளாக் ஹ்யூமர் பெருமளவு unexplored territory. இதை நம் கைக்குள் போட்டுக்கொண்டால் நல்லதுதான். 🙂

பதாகை: இந்த வருட புத்தக கண்காட்சியில் யாருடைய படைப்புகளை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பேயோன்: நான் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிக்குப் போவதில்லை. படிக்கும் பழக்கமும் அறவே இல்லை. எனவே யாருடைய படைப்புகளையும் நான் எதிர்பார்க்கவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இந்த வருடப் புத்தகக் காட்சியில் நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பேயோனின் புதிய வெளியீடான ‘வாழ்க்கையின் அர்த்தம்’ நூலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

அந்த நூலில் இடம்பெற்ற பேயோனின் முன்னுரையை இங்கே வாசிக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.