பச்சிலை

ராம்பிரசாத் 

 

“டொக் டொக் டொக்”

மரக்கதவில் இரைச்சல் உண்டாக்கும் சத்தம் கேட்டு ஞானன் குடிலின் கதவைத் திறந்து வெளியே வந்தார். வெளியே வானதி நின்றிருந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

“ஜோஸ்.. ஜோஸ்.. ஜோஸை காணவில்லை,” என்றாள் மூச்சு வாங்கியபடி.

நிதானம் கொள்ளக் கேட்கும் தோரணையில் கைகளை அசைத்தபடி ஞானன், வானதியை குடிலின் வாசலில் இருந்த மர நாற்காலியில் அமர வைத்தார். அவளின் மூச்சு சீராகும் வரை பொறுத்திருந்தார்.

“நீங்கள் என் குடிலில் நான் தயாரித்துத் தந்த உற்சாக பானம் அருந்தினீர்களே. அதுவரை பாதுகாப்பாகத்தானே இருந்தீர்கள். அதன் பின் புறப்பட்டு எங்கே சென்றீர்கள்?” என்றார்.

“காட்டுக்குள் நடைப்பயணம் சென்றோம். ஒரு கட்டத்தில் நதி ஒன்று வந்தது. ஜோஸ் முதலில் நதியைக் கடந்தான். நான் கடக்க எத்தனிப்பதற்குள் நதியில் வெள்ளம் வந்துவிட்டது. சற்று தொலைவில் இருந்த பாலம் வழியாக நான் ஜோஸ் இருந்த கரைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து அதை நோக்கி நடந்தேன். ஆனால், நான் பாலம் கடந்தபோது ஜோஸ் அந்தப்புறம் இல்லை. அங்குமிங்கும் தேடினேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் காட்டு வழிப்பாதையைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை,” என்றாள் வானதி.

“சரி, இருங்கள். நாம் இருவரும் செல்லலாம். நிச்சயம் ஜோஸைக் கண்டுபிடித்துவிடலாம்,” என்று சொல்லிவிட்டு, ஒரு சிம்னியும், தண்ணீர் போத்தலையும் எடுத்துக்கொண்டார். வானதியை முன்னால் நடக்க விட்டு அவளைப் பின் தொடர்ந்து நடந்தார். வானதி, தானும் ஜோஸும் சென்ற பாதையை, தன் நினைவடுக்கிலிருந்து தெரிவு செய்து கவனமாக நடந்தாள். அவளது கண்கள், காட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஜோஸின் உருவத்தை தேடி அலைந்தன.

வழி நெடுகிலும், அவனது கால் தடங்களையோ அல்லது அவன் பயன்படுத்திக் கைவிட்ட பொருட்களையோ தேடிச்செல்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். நேரம் மதிய வேளை தாண்டி மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வெளிச்சம் குன்றி இருள் கவியத் துவங்கிவிட்டால், தேடிச்செல்வது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆதலால் தேடலில் சற்று துரிதம் காட்டினார்கள். லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது.

காடு அவ்வப்போது குழப்பியது. தோற்றப் போலிகளைக் காட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தது. இருந்தும் வானதி பழக்கப்பட்ட பாதையை மிகக் கவனமாக நினைவு கூர்ந்து ஞானனை வழி நடத்தினாள். ஞானன் தன் கையிலிருந்த அறிவாளால் பாதையில் இடையூறுகளாக இருந்த செடிகள், கொடிகளை வெட்டி விலக்கி வழி ஏற்படுத்தியபடி நடந்தார். அவ்வப்போது கடந்து செல்ல நேர்ந்த மரங்களில் அறிவாளைப் பாய்ச்சி, பாதையை குறிக்க அடையாளங்களை ஆழப் பதித்தார்.

முழுமையாக ஒரு மணி நேரம் கடந்த பின் ஒரு வழியாக, அவர்கள் இருவரும் நதிக்கரையை அடைந்தார்கள். மரப்பாலத்தில் ஏறி நதியைக் கடந்தார்கள். அங்குமிங்கும் ஆராய்ந்ததில், ஈர சதுப்பு நிலத்தில் மனிதக் காலணித் தடமும், சிறுத்தை ஒன்றின் காலடித்தடமும் ஒருங்கே தென்பட்டன. அதைப் பார்த்துவிட்டு, வானதி அழத்துவங்கினாள்.

“அய்யோ கடவுளே.. ஜோஸ்.. உன்னை காலனுக்கு பறி கொடுத்துவிட்டேனா?” என்று அரற்றினாள்.

“பொறு. பதறாதே,” என்ற ஞானன், தடங்களைக் கூர்மையாக அவதானித்துவிட்டு, “காடு தடயங்களை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்க வல்லது,” என்றார்.

வானதி, கண்ணீருடன் ஞானனைப் பார்க்க, “சிறுத்தையின் கால் தடம் மூன்று நாட்களாகியிருக்கும். ஆனால், காலணியின் கால் தடம் வெகு சமீபத்தில் தான் உருவாகியிருக்கிறது. ஜோஸ் காட்டின் அழகில் மயங்கி, சிறுத்தையின் கால்தடங்கள் மீது நடப்பதை உணராமல் கடந்திருப்பான்,” என்றார்.

வானதிக்கு தன்னை சமாதானம் செய்துகொள்ள அந்த விளக்கம், அதிலிருந்த தர்க்கம் போதுமானதாக இருந்தது. அதன் பிறகு ஞானனும், வானதியும் காட்டினூடே விரைந்து நடக்கலானார்கள். மாலை மெல்ல மெல்ல கவிந்து கொண்டிருந்தது.

பசுங்காட்டின் மணம் நாசியைத் துளைத்தது. தூரத்தில் கொட்டும் அருவியின் சீரான ஓசை ஒரு மெல்லிசையாய் நீண்டது. அருவிக்கு அருகே இருந்த காளி கோவிலிலும் ஜோஸின் கால் தடங்கள் தென்பட்டன. மிளாக்கள் நீர் அருந்த வந்திருந்தன. முகில்கள் இறங்கிய வானத்தில் தேக்கி வைத்த மழையைக் கொட்டிக் கவிழ்க்கும் திட்டத்தின் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு. துடுப்பு வால் கரிச்சான் மற்றும் வெண்வயிற்று வால் காக்கை ஆகியன தென்பட்டன. செந்தலை பஞ்சுருட்டானை மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையையும் கொண்டு அங்குமிங்கும் கீச்சிட்டு தாவியபடி ஈர்த்தது. சீகார்ப் பூங்குருவி , அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு, சுடர் தொண்டைச்சின்னான் குருவிகள் ஜோஸைத் தேடும் வானதி, ஞானன் கவனங்களை ஈர்க்க முயன்று தோற்றன. இவற்றுடன் மிக அழகிய காட்டுப் பறவைகளும், கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகளும், நாரைகளும் மற்றும் பல வித நீர்ப்பறவைகளும் அருவியை ஒட்டிய தடாகத்தில் நீர் அருந்த இறங்கியிருந்தன.

எதிரில் மலைகளின் உச்சிப்பாறைகள் உருண்டு திரண்டு ஒரு போர் வீரன் போல் நின்றிருந்தன. அதற்கும் மேலாக விண்ணைத் தொட்டுவிடும்படி நின்றிருந்தன சிறு மரங்கள். கீழிருந்து பார்க்கையில் ஒரு பஞ்சுக் கூரை போல் மேகக் கூட்டங்கள் விரவிக் கிடந்தன. மேகங்கள் திரண்டு, தங்களிடமிருந்த நீர்ச்சத்தை சட்டென்று மழைத்துளிகளாக அள்ளி வீசி காற்றடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகள் கிழித்தன. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

காடுகளில் மாலையின் அறிமுக சமிக்ஞையாக விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தூரத்தில் புதர்களுக்குப் பின்னால் ஏதேதோ கொடிய வன விலங்கின் சாயல் மிரட்சி கூட்டியது. சமிக்ஞையைச் சரியாகப் புரிந்துகொண்ட ஞானன் நடையில் வேகம் கூட்டினார்.

சற்று தள்ளி, ஒரு புகைப்படம், செடி ஒன்றின் சிக்கலான கிளைகளுக்கு மத்தியில் அகப்பட்டு விடுபட இயலாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது. ஞானன் அதை கையிலெடுத்தார். வானதி அருகாமையில் வந்து பார்த்தாள். ஜோஸ் ஒரு மரத்தின் அருகே நின்று தன்னைத் தானே புகைப்படம் எடுத்தது போலிருந்தது. அந்த மரத்தின் மேனியெங்கும் ஆங்காங்கே வெடித்து, ஒரு விதமான காளான் முளைத்தது போன்ற தோற்றத்தில் மிக வினோதமாக இருந்தது. பச்சிலைகளுக்கு நடுவே ஆங்காங்கே வெளிர் ரோஜா நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. மரத்தின் கிளைப்பட்டைகளில் ஆங்காங்கே சாம்பல் அல்லது சந்தன நிறம் கண்டிருந்தது. கூழ் போல் மரத்தின் கிளைகளிலிருந்து எதுவோ ஒழுகிக் கொண்டிருந்தது.

ஞானனும், வானதியும் சுற்றிலும் பார்த்தார்கள். எங்குமே அந்த மரம் தென்படவில்லை.

“பல அறிபுனைக் கதைகளில் இதுபோன்ற வினோதமான மரங்கள் குறித்துப் நாங்கள் படித்திருக்கிறோம். மனிதன் மரமாகிவிட்ட கதைகள். அந்தக் கதைகளை நினைவூட்டியிருப்பதால் இந்தப் புகைப்படத்தை எடுத்திருப்பான். மேலும், இந்தக் காடு குறித்தும், இந்த மரங்கள் குறித்தும் இங்கு வந்து சென்ற சிலர் சொன்ன செவிவழிச் செய்திகளைக் கேட்டு ஆர்வம் உந்தியே இங்கு வர விரும்பினான் ஜோஸ். அதுமட்டுமல்லாமல் , அவனுக்கு அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளைப் பார்க்கவே விருப்பம். ஆனால், அதற்கு அதிகம் செல்வாகும். நம் ஊர் காடுகளும் அமேசான் காடுகளும் ஒப்பீட்டளவில் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். அதனாலும், இந்தக் காட்டிற்கு வர விரும்பினான்,” என்றாள் வானதி.

“அதற்கு உங்களுக்கு வேறு காடே கிடைக்கவில்லையா?” என்றார் ஞானன்.

“இந்த உலகில் பெண் இனம் தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். பிறகு தான் ஆண் இனம் உருவாகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில், பெண்ணான எனக்கே முன்னுரிமை அளிக்க விரும்புவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆகையால், இந்தக் காட்டிற்குத்தான் வரவேண்டும் என்று தேர்வு செய்தது நான் தான். இப்படி ஆகுமென்று யார் தான் யூகித்திருக்க முடியும்?” என்றாள் வானதி.

புகைப்படத்தில், அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்திருந்தது. மிக அதிக உயரமில்லை. குட்டையும் இல்லை. சீராக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு நேரம் பார்வைக்கு வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகப் பட்டது. சில நேரங்களில் சர்ப்பமும், சில சமயங்களில் முதலையும், இன்ன பிற ஊர்வன விலங்குகளுமாய் அது பார்வைக்குத் தோன்றுவதாகத் தோற்றமளித்தது வினோதமாக இருந்தது.

“இந்தக் காட்டில் சுற்றுலா வந்த மனிதர்களில் சிலர் காணாமல் போன கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். முடிந்தவரை கவனமாக இருப்பது என்று முடிவு செய்துதான் வந்தோம். எங்குமே எவ்விதப் பிரச்சனையும் எழுவதற்கான சாத்தியங்கள் முழுவதுமாக இல்லை என்று சொல்லிவிடமுடியாதல்லவா?” என்றாள் வானதி தொடர்ந்து.

“இந்த அடர்ந்த வனத்தில், காற்று ஒரு காகிதப் புகைப்படத்தை அதிகம் தூரம் கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. இந்த மரம் இங்கு எங்காவது அருகில் தான் இருக்க வேண்டும்,” என்ற ஞானன் அந்த மரத்தைத் தேடத்துவங்கினார். வானதியும் இணைந்துகொண்டாள்.

இருவருமாக அங்குமிங்கும் தேடியதில் அந்த மரம் சற்று தொலைவில் தென்பட்டது. ஞானனும், வானதியும் அந்த மரத்தை நெருங்கி கிட்டத்தில் பார்த்தார்கள். சுற்றி வந்தார்கள். ஓரிடத்தில், ஜோஸின் சட்டையின் ஒரு பகுதி மரத்தின் பட்டைக்குள் சிக்கியிருப்பதான தோற்றம் தந்தது. வானதி அதைப் பிடித்து இழுக்க, யாரோ அந்த சட்டையை மரத்துடன் இறுகப் பிணைத்து இணைப்பான் ஒன்றினால் இணைத்தது போலிருந்தது. வானதி தன் பலம் முழுமைக்கு பிரயோகித்து அந்த மரத்தின் இடுக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜோஸை வெளியே இழுக்க முயல, சட்டை கையோடு கிழிந்து வந்தது. ஜோஸின் உடல் மரத்தினுள் முழுமையாக மறைந்தது.

அதிர்ச்சியடைந்த வானதி, தன்னிடம் ஒட்டிக்கொண்ட பதட்டமோ, அதிர்ச்சியோ ஞானனிடம் ஒட்டாததையும், அவர் மரத்தையே ஆழமாகப் பார்த்துக்கொண்டே இருப்பதையும் உணர்ந்து மேலும் பீதியடைந்தாள்.

“இந்த மரத்தைப் பாரேன். புகைப்படத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்போது சற்று மேலாக இருக்கிறது அல்லவா?” என்றார் ஞானன் மரத்தின் எழிலை உள்வாங்கியபடி.

“என்ன இது? நான் ஜோஸ் குறித்து பதட்டமாக இருக்கிறேன். நீங்கள் மரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஜோஸ் எங்கே? அவன் சட்டை மரத்தின் இடுக்கில் எப்படி வந்தது? ஜோஸ் மரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டுவிட்டானா? அல்லது ஜோஸ் வாசிக்கும் அறிபுனைக் கதைகளில் வருவதைப்போல் ஒருவேளை ஜோஸ் மரமாகிவிட்டானா?” என்றாள் வானதி பதட்டம் தனியாமல்.

“அவன் மரமாகியிருக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாகத் தெரியும்,” என்றார் ஞானன்.

“பின்னே? அவன் எங்கே? அவன் சட்டை இங்கே எப்படி வந்தது? அவனை யார் என்ன செய்தார்கள்?”

ஞானன் எதுவும் பேசாமல் அந்த மரத்தையே ஆழமாக ஊடுறுவிக் கொண்டிருந்தார்.

“ஞானன், என்ன செய்கிறீர்கள்? அவன் மரத்தினுள் எப்படி அகப்பட்டான்? இங்கே என்ன நடக்கிறது?” என்றாள் பதட்டத்துடன்.

“ஏன் பதட்டப்படுகிறாய், வானதி? நிதானம் கொள். நேற்று உற்சாக பானம் அருந்தினாயே? அது ஒரு மூலிகைச் செடி தானே. அந்த மூலிகைச்செடியை நீ கபளீகரம் செய்கிறாய் என்று இங்கே உள்ள ஆயிரம் கோடி தாவரங்கள் உன் போல் பதட்டப்பட்டனவா?” என்றார் ஞானன்.

“என்ன அபத்தமாகக் கேட்கிறீர்கள்? அதுவும், ஜோஸைத் தேடிக் கொண்டிருக்கையில்,” என்றாள் வானதி லேசான முகச்சுளிப்புடன்.

“கேள்விக்கு என்ன பதில்?”

“இல்லை தான். ஆனால், இது ஒரு கேள்வியா? காலங்காலமாக நாம் பச்சிலைகளும், மூலிகைகளும் எடுத்துக்கொள்வதுதானே. இதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது?”

“ஏன் இல்லை? அதே போல், ஆயிரம் கோடி மனிதர்களில் ஓரிருவரை ஒரு தாவரம் தன் நோய்களுக்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன?” என்றார் ஞானன், மரத்தின் எழிலை அங்குலம் அங்குலமாக அவதானித்தபடி.

“என்ன? என்ன சொல்கிறீர்கள்?”

“இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விண்ணிலிருந்து ஒரு கல் வந்து விழுந்தது. அது முதல் தான் இப்படி நடக்கிறது. என் பாட்டனார் கவனித்தார். தலைமுறை தலைமுறையாக இந்த மரங்களுக்கு நாங்கள் சேவகம் செய்கிறோம். இந்த ரகசியத்தை ரகசியமாகவே கட்டிக் காக்கிறோம். காட்டின் இந்தப் பகுதியில் இதுகாறும் அந்த மர- நோய்மை அண்டாதிருந்தது. அந்தக் கல் விழுந்ததிலிருந்து, இந்தக் காட்டிலுள்ள சில மரங்கள் வினோதமாக வளர்கின்றன. நோய்வாய்ப்படுகின்றன. அவை நோய்வாய்ப்படுகையில் அவற்றுக்கு பிரத்தியேக மருத்து தேவைப்படுகிறது. மனிதர்கள் நோய்வாய்ப்படுகையில் பிரத்தியேக குணாதிசயங்கள் கொண்ட பச்சிலைகள் உண்பது போலத்தான் இதுவும். இலைகளில் பிரத்தியேகமானவை மூலிகையாவது போல், விலங்குகளில் பிரத்தியேகமான மனிதர்கள் தான் இம்மரங்களின் நோய்களுக்கான மூலிகை, பச்சிலை ஆகிறார்கள் என்று என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டபோது நானும் சற்று அதிர்ந்து தான் போனேன். பிறகு அதுவே பழகிவிட்டது. இந்தக் காட்டில் இறக்க நேர்ந்தவர்கள், காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், காணாமல் போனவர்களில் கணிசமானவர்கள் உண்மையிலேயே காணாமல் போகவில்லை. அவர்கள் இங்குள்ள மரங்களுக்கு மருந்தாகியிருக்கிறார்கள். அந்த வகையில், அவர்கள் சராசரி மனிதர்களின் ஆயுளைத் தாண்டி நூற்றுக்கணக்கான வருடங்கள் கூட வாழ இயலும். நீங்கள் வெற்றிலையை நாவிலேயே இருத்தி, சாற்றை மட்டும் விழுங்குவது போலத்தான்”

வானதி இமைகள் இமைக்க மறுத்த ஸ்திதியில் ஞானனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படியானால், ஜோஸ் மரமாகிவிட்டானா?”

“வெற்றிலையை நீ வாயில் இட்டு குதப்பினால், வெற்றிலை குட்டி மனிதனாகிவிடுகிறதா? இல்லை அல்லவா? வெற்றிலை வெற்றிலையாகவே தான் நீடிக்கிறது. இதோ பார்.. நீ பலவற்றைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறாய். மனிதன் விழுங்குவதாலேயே செடிகள் மரணிப்பதில்லை. செடிகளின் உள் இயக்கம் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான அனைத்து புறச்சூழலும் சரியாக அமையும் பட்சத்தில் மனிதனின் உடலுக்குள்ளிருந்தபடி கூட செடிகள் ஜீவித்தே தான் இருக்கும். அந்தப்படி, மனிதனின் உடல் என்பது அந்தச் செடிகளைப் பொறுத்த வரை வெறும் வெளி தான்”

“அது போலத்தான் ஜோஸும் என்கிறீர்களா?”

“நிச்சயமாக. ஒன்று சொல்லட்டுமா? பெண் இனம் தான் முதலில் தோன்றியது என்று ஜோஸ் சொன்னதாகச் சொன்னாய் அல்லவா?. ஆதலால் பெண் இனத்திற்கே முன்னுரிமை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பூமியில் மனிதப் பெண் இனம் தோன்றுவதற்கு முன்பே தாவரங்கள் தோன்றியிருக்க வேண்டும். பெண் இனம் தான் மூத்தது என்பதை ஒப்புக்கொள்ளும் நீ இதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி யோசித்துப் பார். பூமி என்ற இந்த கிரகமே தாவரங்களுக்கானதென்றால்? மனிதர்கள் முதலான விலங்குகள் அனைத்தும், தாவரங்கள் தங்கள் பிழைத்தலுக்கென உருவாக்கிய இந்திரிய சாத்தியங்களின் பக்க விளைவுகள்தான் என்றால்? அப்படியென்றால், தாவரமான இந்த மரம், தன் பிழைப்புக்கென, தான் உருவாக்கிய மனிதர்களில் ஒன்றே ஒன்றை தன் நோய்க்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்றார் ஞானன்.

“ஒரு பெரிய மரத்தின் கிளையில் இலையாக ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, இலையானது மரத்தையும், மரம் வீற்றிருக்கும் இந்த வெளியையும், இவை அமையப்பெற்றிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தையுமே தன் வெளியாகக் கொள்கிறது. நோயின் நிமித்தம் அதே இலையை மூலிகையாக, பச்சிலையாக நீங்கள் உட்கொள்கையில் அது உங்கள் உடலையே பிரபஞ்ச வெளியாகக் கொள்வதில்லையா? அந்தப் பிரபஞ்சவெளியில், அது ஒப்பீட்டளவில் எத்தனை சிறியதாய் இருப்பினும், அதற்குள்ளும் தன் இயல்பை வெளிப்படுத்துவதில்லையா? அந்த இலையைப் பொருத்த மட்டில், பிரபஞ்ச வெளிக்கும், உங்கள் உடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. இரண்டையுமே அதனதன் இடத்தில் சமமான அளவில் சிக்கலான ஒழுங்கைக் கொண்டுள்ளதாகத்தான் கொள்கிறது. அல்லவா? மனிதர்கள் இருக்கும் ஒரே வெளியை, வெவ்வேறாய்க் காண்கிறார்கள்.இத்தனைக்கும் ஒவ்வொன்றிற்கும் மிகச் சன்னமான வித்தியாசமே. பார்க்கப்போனால், இந்த சன்னமான வித்தியாசங்களே மனிதர்களை வேறுபடுத்துகிறது. ஆனால், வெளியாக, அவ்வெளியில் இயக்கமாக மனிதர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். படுக்கையில், வைக்கோலுக்கும், பஞ்சுமெத்தைக்கும் தான் வித்தியாசமே ஒழிய உறக்கங்களுக்கும், கனவுகளுக்கும் அல்ல ”

“பிரபஞ்ச வெளியை தங்கள் வெளியாகக் கொள்ளும் மனிதர்கள், ஒரு மரத்தின் நோய்க்கான பச்சிலையாகையில் பிரபஞ்ச வெளியையே தன் வெளியாகக் கொள்ளும் மரத்தை ஏன் தங்கள் வெளியாகக் கொள்ளக்கூடாது? வெளியில் வாழ்வதற்கும், அந்த வெளிக்கு சமமான, அளவில் சிறிய ஒரு வெளிக்குள் இயங்கிக்கொள்வதற்கும், இயக்க ரீதியில், என்ன வித்தியாசம் இருக்க முடியும்? உயிர்களில் மூத்த உயிரான, தாவரங்களே அப்படி ஒரு வித்தியாசத்தை தங்கள் இருப்புக்குக் கற்பித்துக்கொள்ளாதபோது, அப்படி ஒரு வித்தியாசம் தங்களுக்கு இருப்பதாக மனிதன் தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் மதிப்பு என்பது எத்தனை மடத்தனமானது என்பதை நீ உணர்கிறாயா?” என்றார் ஞானன் தொடர்ந்து.

“நீங்கள் சொல்வது மிக வினோதமாக இருக்கிறது. இப்படி நான் இதுகாறும் கேள்விப்பட்டது கூட இல்லை. எனக்கு விளங்கவில்லை. ஒரு கொலைக்கு நிகராக இங்கே எதுவோ நடக்கிறது. அதன் விளிம்பையே நான் தொட்டிருப்பதாக உணர்கிறேன். நீங்கள் ஒரு கொலையை, எதை எதையோ சொல்லிக் குழப்புகிறீர்கள்,” என்றாள் வானதி.

“இந்த பூமியில் உயிர்கள் சார்ந்த உன் பார்வையை நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் வானதி. இல்லையேல், அனர்த்தங்களையே உண்டு, அனர்த்தங்களையே செரித்து வாழும் ஒரு அற்ப பிறவியாக மட்டுமே நீ வாழ்ந்து மரிப்பாய். உனக்கும் ஒரு கிணற்றுத்தவளைக்கும் பெரிதாக பேதங்கள் இல்லாமல் போகும். ஜோஸுக்கு என்ன நடந்ததோ, அது, இப்பூமியில் உயிர்களின் பார்வையில், நன்றாகவே நடந்தது. இனியும் நடக்கும். அந்த நிகழ்வுகளை, ‘காட்டிற்குள் தொலைந்தவர்கள்’ என்று மனிதர்கள் கடந்து போவது இனியும் தொடரும். ஜோஸ் தன் கைக்கு எட்டாத அமேசான் காடுகளில் தொலையும் அனுபவத்தை, இந்தக் காட்டில் தொலைவதில் பெற முயற்சித்தே இங்கு வந்திருக்கிறான். ஒருவேளை அதனால் தான் இந்த மரங்கள் அவனைத் தெரிவு செய்தனவோ என்னவோ? அவனிடத்தில் வெளிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பெரிதாக இல்லை என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஜோஸை நீ காப்பாற்ற முனைய வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ,அவன் எப்போதும் போல தனக்கான வெளியில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறான். அந்த வெளி ஒரு மரத்திற்குள் இருக்கிறது என்பது மட்டுமே உன் போன்ற சராசரி மனிதர்களை சலனம் கொள்ள வைக்கும் ஒரே வித்தியாசம்,” என்ற ஞானன், மரத்தை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, திரும்பி வந்த வழியே நடக்கலானார்.

செய்வதறியாது திகைத்த வானதி மரத்தையே கையாலாகாமல் பார்த்து நின்றாள். மரம் முன்பு தோன்றியதைவிடவும் தெளிவாகவும், ஒளி பொருந்தியதாகவும் தோற்றமளித்தது.

 

One comment

  1. அதி நுட்பமான பொருள் பொதிந்த சிந்திக்க வைக்கும் கதை! கதாசிரியருக்கு வாழ்ததுக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.