ஸ்மால்

ஸிந்துஜா

“கோயிலுக்கு வந்துட்டு கால் வலிக்கறதுன்னு சொல்லக் கூடாதும்பா. நானும் குழந்தையும் இங்க சித்த உக்காந்துக்கறோம். நீங்க போய் ஸ்டால்லேர்ந்து பிரசாதம் வாங்கிண்டு வாங்கோ” என்று உமா சேதுவை அனுப்பி விட்டு முன் வாசலைப் பார்த்தபடி இருந்த மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் பிரகாரத்தைச் சுற்றி வந்த களைப்புக்கு மண்டபத்து நிழல் இதமாக இருந்தது.

“அம்மா பசிக்கறது” என்றாள் குழந்தை. காலையில் ஒரு இட்லி சாப்பிட்டது. இரண்டு வயசுக்கு இவ்வளவு நேரம் பசி தாங்கியதே பெரிய விஷயம்.

“இதோ அப்பா வந்துடுவா. வெளிலே போய் ஹோட்டல்ல சாப்பிடலாமா? குழந்தை என்ன சாப்பிடப் போறா?” என்று குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி உமா கேட்டாள்.

“ஐஸ்கீம்” என்றாள் குழந்தை.

“ஆமா. அதான் உன்னோட லஞ்ச்!” என்று சிரித்தாள்.

அப்போது “நீங்க…நீ…உமாதானே?” என்ற குரல் கேட்டது.

உமா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. குரல் கூட. ஆனால் அவளது க்ஷண நேர சிந்தனையில் விடை கிடைக்கவில்லை.

“ஆமா. நீங்க?” அவள் அவனை உற்றுப் பார்த்தாள். உயரமாக இருந்தான். முன் நெற்றி பெரிதாக இருப்பது போலத் தோற்றமளித்தது. பிரகாசமான வழுக்கை ! கண்களைக் கண்ணாடி கவர்ந்திருந்தது. மீசையற்ற பளீர் முகம். ஐயோ ! யார் இது? ஞாபகத்துக்கு வராமல் அடம் பிடிக்கும் நினைவு மீது எரிச்சல் ஏற்பட்டது.

“நான் ரமணி” என்று சிரித்தான். கீழ் உதடு லேசாக வளைந்து சிரித்ததைப் பார்த்ததும் அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது.

“மணிபர்ஸ் ரமணியா?” வார்த்தைகள் வேகமாக வெளியே வந்து புரண்டு விட்டன. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “ஸாரி”

“அவனேதான்” என்று அவன் மறுபடியும் சிரித்தான்.

அவள் அவனை உட்காரச் சொன்னாள் . சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டான்.

“அடையாளமே தெரியலையே” என்றாள் உமா. பத்து வருஷங்கள் இவ்வளவு கீறல்களை ஏற்றி விடுமா முகத்திலும் உடலிலும்?

அப்போது அவன் முன் நெற்றியில் தலை மயிர் புரண்டு அலையும். சொன்ன பேச்சைக் கேட்காத குழந்தை போல. தலை முழுதும் அடர்த்தியான கறுப்பு மயிர். கண்ணாடியும் கிடையாது அப்போது. அதனால் பார்வையின் கூர்மையையும் சாந்தத்தையும் வெளிப்படையாகக் கண்கள் காட்டி விடும். பிறக்கும் போதே லேசாகப் பின்னப்பட்டிருந்த கீழ் உதடை ஆப்பரேஷன் செய்த பின்னும் சற்றுக் கோணலாகத் தோன்றுவதைச் சரி செய்ய முடியவில்லை. சிரிக்கும் போது அவன் வாய் சற்று அகலமாகத் தோன்றும். அதனால் பட்டப் பெயர். எவரையும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம். அவளுடைய இளம் வயதுத் தோழன். நெருக்கமான தோழன்.

“ஆனா நீ கொஞ்சம் கூட மாறலையே? முன் நெத்தி தலைமயிர்லே மாத்திரம் கொஞ்சம் வெள்ளை. அப்போ பாத்ததை விட இப்ப கொஞ்சம் குண்டு, மத்தபடி… ”

“நிறுத்து, நிறுத்து, அசிங்கமா ஆயிட்டேன்னு எவ்வளவு அழகா சொல்றே” என்று சிரித்தாள்.

“சும்மா கிண்டல் பண்ணினேன்” என்று சிரித்தான் அவனும்.

“அம்மா, பசிக்கிறது” என்று குழந்தை சிணுங்கினாள்.

“இதோ அப்பா வந்துடுவார்டா கண்ணா” என்ற அவள் அவனிடம் கணவன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வரச் சென்றிருந்ததைச் சொன்னாள்.

“சாக்லேட் சாப்பிடறயா?” என்று கேட்டபடி கால்சட்டைப் பைக்குள் கையை விட்டு இரண்டு சாக்லேட்டுகளை எடுத்துத் தந்தான், குழந்தை அம்மாவைப் பார்த்தது.

“வாங்கிக்கோ. வாங்கிண்டு என்ன சொல்லணும்?” என்று கேட்டாள் உமா.

அது கையை நீட்டவில்லை. உமா சாக்லேட்டுகளை வாங்கி அதன் கையில் கொடுத்தாள். உயர்ரக சாக்லேட்டுகள். மேல்நாட்டைச் சேர்ந்தவைஎன்பதைச் சுற்றியிருந்த வண்ணக் காகிதத்தில் இருந்த புரியாத எழுத்துக்கள் காண்பித்துக் கொடுத்தன.

“தங்கியிருக்கற ஹோட்டல்லே கொடுத்தானேன்னு வாங்கி பாக்கெட்லே போட்டுண்டேன்” என்றான்.

“எந்த ஹோட்டல்?”

“ரிஜென்ஸி.”

“காஞ்சிபுரத்து ஸ்டார் ஹோட்டல்!” என்று சிரித்தாள் உமா.

குழந்தை அம்மாவிடம் வாங்கிய சாக்லேட் ஒன்றைப் பிரித்தபடி அவனைப் பார்த்து ” டேங்யூ” என்று மழலையில் மிழற்றியது.

“அடேயப்பா!” என்றான் ரமணி.

“நீயும் எங்களை மாதிரி வெளியூர்தானா?” என்று கேட்டாள் உமா.

“ஆமா. நா இப்போ டில்லியிலே இருக்கேன். நீ?”

“நாங்க பெங்களூர்லே இருக்கோம். நாலஞ்சு வருஷமா எனக்குதான் இங்க வந்து காமாட்சியைப் பாத்துட்டுப் போகணும்னு. சின்னவளா இருக்கறச்சே முதல் தடவையா வந்தப்போ அவளோட முகத்திலே பளீர்னு மின்ற முத்து மூக்குத்தியும், காதிலே வைரத் தோடும் கழுத்திலே ரத்னப் பதக்கமும், மோகன மாலையும் , வைடூரிய புஷ்பராகத்தால பண்ணின தாலியும்னு ஜொலிக்கறதைப் பாத்து மயங்கிட்டேன். ஆனா இப்போ வந்திருக்கறச்சே அதெல்லாம் ஒண்ணும் கண்ணிலே படலே. இப்பவும் அவ்வளவு அலங்காரமும் அவ உடம்பிலே இருந்தாலும் நான் பாக்கறச்சே பளீர்னு வெறும் மூஞ்சியும், ஆளை அடிக்கிற சிரிப்பும்தான் எனக்குத் தெரிஞ்சது. மனசெல்லாம் ஏதோ ஒரு குளிர்ச்சி பரவர மாதிரி இருந்தது எனக்கு ” என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள். “ஆனா அவருக்கு இந்தக் கோயில் குளமெல்லாம் போறதுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது. நான்தான் இழுத்துண்டு வந்தேன்.”

“எனக்கும் அம்மனின் முகத்தைப் பாத்து ஒரே பிரமிப்பா இருந்தது. ஆனா நீ சொல்ற மாதிரி எனக்குச் சொல்லத் தெரியலே” என்றான் ரமணி. தொடர்ந்து “அப்போ மனசைக் கவர்ந்த விஷயம்லாம் இப்பவும் கவரணும்னு இருக்கறதில்லையே” என்றான்.

“வயசாயிடுத்துங்கறே !” என்று சிரித்தாள் உமா. “ஆனா எல்லாத்தையும் அப்படிக் கழிச்சுக் கட்டிட முடியாதுன்னு வச்சுக்கோயேன்.”

அவன் அவள் சொல்வதின் அர்த்தத்தைக் கிரகிக்க முயன்றான்..

“டில்லிலேர்ந்து நீ எப்படி இவ்வளவு தூரம்?” என்று கேட்டாள் உமா.

“மெட்றாஸ்லே என் மச்சினன் பையனோட கல்யாணம்னு வந்தேன். நேத்திக்குக் கல்யாணம் முடிஞ்சது. நாளைக்கு ஊருக்குத் திரும்பிப் போறேன். நடுவிலே ஒரு நாள் இருக்கேன்னு இங்க வந்தேன்.”

“உன் ஒய்ப்?”.

“இல்லே. அவளுக்கு இங்கல்லாம் வந்து போறதிலே இன்ட்ரெஸ்ட் கிடையாது. வரலைன்னு சொல்லிட்டா. அவளுக்குத் தெரிஞ்ச பெயிண்டரோட எக்சிபிஷன் சோழமணடலத்திலே நடக்கறதுன்னு போயிருக்கா” என்றான்.

“ஓ, பெயிண்டிங் பெரிய விஷயமாச்சே!” என்றாள் உமா.

அவன் கண்கள் அகலமாக விரிந்து அவளைப் பார்த்தன.

“ஏன் தப்பா எதாவது சொல்லிட்டேனா?”

“இல்லே. அன்னிக்கு மாதிரியே இப்பவும் இருக்கியே. எதைப் பாத்தாலும் எதைக் கேட்டாலும் எதைத் தொட்டாலும் நன்னா இருக்குங்கற ரண்டு வார்த்தையை வாயில வச்சிண்டு…”

“நம்ப கிட்டே வரவாகிட்டே எதுக்கு ஆயாசமா பேசணும்? அவா சந்தோஷப் படணும்னுதானே வரா?”

“அன்னிக்கும் உங்கப்பா சந்தோஷப்பட்டா போறும்ன்னு நீ நினைச்சுதான்…” என்று மேலே சொல்லாமல் நிறுத்தி விட்டான்.

அவள் பதில் எதுவும் அளிக்காது அவனைப் பார்த்தாள். அவள் வலது கை விரல்கள் குழந்தையின் தலையைத் தடவிக்கொண்டிருந்தன.

“இன்னமும் அந்தப் பழசையெல்லாம் நினைச்சிண்டிருக்கயா?”

“எப்பவும் நினைச்சிண்டு இருக்கறதைப் பழசுன்னு எப்படிக் கூப்பிடறது?”

அவள் மறுபடியும் பேசாமல் இருந்தாள்.

“ஏன் உனக்கு ஞாபகம் வரதில்லையா?”

“நினைப்பு ஒண்ணைத்தானே எனக்கே எனக்குன்னு வச்சிண்டு சந்தோஷப்பட முடியும்? அதை நான் எப்படி எதுக்காக விட்டுக் கொடுக்கப் போறேன்?” என்றாள் அவள்.

தொடர்ந்து “இன்னிக்கு உன்னைப் பாக்கப் போறேன்னு உன்னைப் பாக்கற நிமிஷம் வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனா காமாட்சி நீயும் நாலுலே ரண்டுலே சந்தோஷப்பட்டுக்கோயேன்டின்னு அனுப்பி வச்சுட்டா போல இருக்கு” என்றாள். அவனைத் தின்று விடுவது போல ஒருமுறை ஏற இறங்க முழுதாகப் பார்த்தாள்

“அம்மா, அப்பா!” என்றது குழந்தை.

அவன் திரும்பிப் பார்த்தான். அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த நபருக்கு அவன் வயதுதான் இருக்கும். கொஞ்சம் பூசின உடம்பு. உமாவை விட ஒரு பிடி உயரம் கம்மி என்பது போலக் காட்சியளித்தான். கையில் ஒரு மஞ்சள் நிறப் பை. பிரசாதம் அடங்கியிருக்கும்.

சேது அவர்களை நெருங்கியதும் குழந்தை அவனை நோக்கித் தாவியது. கையிலிருந்த பையை உமாவிடம் கொடுத்து விட்டு அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். ஆனால் அவன் பார்வை மட்டும் ரமணியை விட்டு விலகவில்லை.

உமா ரமணியிடம் ” இவர்தான் என் ஆத்துக்காரர். சேதுன்னு பேர். இவன் ரமணி. எங்க ஊர்க்காரன். பால்யத்துலேர்ந்து பழக்கம். எதேச்சையா என்னைப் பாத்ததும் அடையாளம் கண்டு பிடிச்சுட்டான். எனக்குத்தான் அவன் யார்னு புரியறதுக்கு ரண்டு நிமிஷம் ஆச்சு. பத்து வருஷம் கழிச்சுப் பாக்கறோம்” என்று சிரித்தாள் உமா.

சேது “ஓ!” என்றான். அவன்கண்கள் லேசாகப் படபடத்து இமைகள் ஏறி இறங்கின. அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டால் அம்மாதிரி அவன் முகம் போவதை அவள் கவனித்திருக்கிறாள். உமா ரமணியைப் பார்த்தாள். அவனும் உன்னிப்பாக சேதுவைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ரமணி சேதுவைப் பார்த்து “கிளாட் டு மீட் யூ” என்று புன்னகையுடன் சொன்னான்.

“நம்ப கல்யாணத்துக்கு இவர் வந்தாரோ?” என்று சேது கேட்டான்.

“இல்லை. நான் வரலே. எனக்கு அப்போதான் டில்லிலே வேலை கிடைக்கும் போல இருந்ததுன்னு அங்கே இருந்தேன்” என்றான் ரமணி. அவன் பார்வை உமாவின் மேல் பட்டு விலகி நின்றது.

“இல்லே. பால்யத்திலேர்ந்து சிநேகம்னு சொன்னேளே. அதான் கேட்டேன். இப்பதான் நாம ஒருத்தருக்கொருத்தர் முதல் தடவையா பாக்கறோம். இல்லே?” என்றான் சேது.

“ஆமா.”

அப்போது குழந்தை “அம்மா, மூச்சா” என்றது.

உமா கணவனைப் பார்த்தாள்.

சேது அவளிடம் ” வெளி வாசலுக்கு ரைட் சைடிலே ஒரு பே அண்ட் யூஸ் டாய்லெட் இருக்கு. நா வரச்சே அங்கதான் போனேன். க்ளீனா வச்சிருக்கான்” என்றான். “நீ வரவரைக்கும் நா இவரோட பேசிண்டு இருக்கேன்.”

உமா ரமணியைப் பார்த்து “என்ஜாய் மை ஹஸ்பன்ட்ஸ் கம்பனி” என்று சொன்னாள். அது எச்சரிக்கும் குரல் போல ஒலித்தது.

“உங்களைப் பத்தி உமா ஜாஸ்தி சொன்னதில்லே. அவ அப்பா ஒரு தடவை வந்திருந்தப்போ நீங்க நன்னா வசதியா இருக்கறதா உமா கிட்டே சொல்லிண்டு இருந்தார். உங்க ஒய்ப் சைடிலே அவா பெரிய இடம்னு அவர் சொன்னப்பிலே எனக்கு ஞாபகம்” என்றான்.

“யாரு ராமகிருஷ்ண மாமாவா? ஆமா. எங்க ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்ப சிநேகம். அக்கா அத்தை மாமா பெரியப்பா பெரியம்மான்னு உறவு வச்சுதான் ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் கூப்பிடுவோம்” என்று சிரித்தான் ரமணி. அவன் மனைவி பக்க செல்வாக்கைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

“நீங்க உமா ஆத்துக்குப் பக்கத்திலே இருந்தேளா? இல்லே ஒரே தெருவா?”

“ஒரே ஆத்திலே அவா கீழே , நாங்க மேலே இருந்தோம். அது உமாவோட தாத்தா வீடு. நாங்க வாடகைக்கு இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். ஆனா நான் அவளுக்கு இரண்டு வருஷம் சீனியர். அவளுக்கு கணக்கு சைன்ஸ் எல்லாத்துக்கும் நான்தான் ட்யூஷன் வாத்தியார்.”

சேதுவின் முகத்தில் புன்னகை தெரிகின்றதா என்று ரமணி பார்த்தான். இல்லை.

“அப்ப ரொம்ப நெருங்கின பழக்கம்னு சொல்லுங்கோ.”

ரமணி உடனே பதில் சொல்லவில்லை. சற்றுக் கழித்து “நாம ஒருத்தரை ஒருத்தர் தினமும் பாத்துக்கறதில்லையா, அது மாதிரிதான்” என்றான்.

“ஆனா இவ்வளவு வருஷங் கழிச்சு கரெக்ட்டா உமாவைக் கண்டு பிடிச்சிட்டேளே!” என்றான் சேது.

அந்தக் குரலில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா என்று ரமணி பார்த்தான். இருப்பது போலவும் இருந்தது. இல்லாதது போலவும். இருந்தது

அப்போது உமா திரும்பி விட்டாள் . கணவனைப் பார்த்து “என்ன சொல்றான் ரமணி?” என்று கேட்டாள்.

“இவ்வளவு வருஷங் கழிச்சு எப்படி நான் உன்னை அடையாளம் கண்டு பிடிச்சேன்னு கேக்கறார்” என்று ரமணி பதில் சொன்னான்.

“அன்னிக்கிப் பாத்த அதே அச்சுப் பிச்சு முகம் கொஞ்சம் கூட மாறாம இருக்கேன்னு பாத்துக் கண்டு பிடிச்சிட்டான்” என்றாள் உமா.
பிறகு கணவனைப் பார்த்து “குழந்தை பசிக்கிறதுன்னு அப்போலேந்து சொல்லிண்டு இருக்கு. நாம கிளம்பலாமா?” என்று கேட்டாள்.

“ஓ கிளம்பலாமே!” என்று சேது எழுந்தான். ரமணியும் எழுந்தான். ‘எங்களுடன் சேர்ந்து சாப்பிட வாயேன்’ என்று சேது கூப்பிடுவான் என்று உமா எதிர்பார்த்தாள். அவன் கூப்பிடவில்லை. சரியான கிறுக்கு என்று உமா மனதுக்குள் திட்டினாள்.

“ரமணி, நீயும் எங்களோட சாப்பிட வாயேன்” என்றாள் உமா.

அவன் “இல்லே உமா. நான் லேட்டா டிபன் சாப்பிட்டேன். பசியே இல்லை” என்று மறுத்தான்.

சேது ரமணியிடம் “உங்க ஒய்ப், குழந்தையெல்லாம் கூட்டிண்டு வரலையா?” என்று கேட்டான்.

“ஒய்ப் மெட்றாஸ்ட்லே வேலையிருக்குன்னு தங்கிட்டா. குழந்தை அம்மாவை விட்டு எங்கையும் வராது.”

“குழந்தை இருக்கா? நீ சொல்லவே இல்லையே. பையனா பொண்ணா?” என்று உமா ஆவலுடன் கேட்டாள்.

“பையன்தான். இந்தப் பொட்டுண்ட விட ஒண்ணு ரண்டு வயசு ஜாஸ்தி இருப்பான்.”

உமா “போட்டோ இருக்கா? எனக்குப் பாக்கணும் போல இருக்கு” என்றாள்.

அவன் கால்சட்டையின் பின்புறப் பாக்கெட்டிலிருந்த பர்ஸை எடுத்துத் திறந்து போட்டோ ஒன்றை வெளியே எடுத்துக் கொடுத்தான். போட்டோவில் ரமணியுடன் அவனது குழந்தையும் அதன் அம்மாவும் இருந்தார்கள். உமா “ரொம்பக் க்யூட்டா இருக்கே குழந்தை!” என்று சொன்னபடி போட்டோவை சேதுவிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்த சேது “அட, ஆர். நிர்மலா மாதிரி இருக்காளே உங்க ஒய்ப்!” என்று ஆச்சரியத்துடன் ரமணியைப் பார்த்தான்.

ரமணி அவனிடம் “நிர்மலாவை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். உமாவும் கணவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

“ஆமா. திருச்சியிலே நாங்க ஆண்டார் தெருவிலே இருந்தப்போ எங்க ஆத்துக்கு எதிர் ஆத்திலே அவ இருந்தா. நான் அவ ஆத்திலேதான் எப்பவும் இருப்பேன். இல்லாட்டா அவ எங்காத்துலே. ரெண்டு பேரும் சேந்து ரொம்ப ஊர் சுத்துவோம். சினிமா போவோம். குட் ஓல்ட் டேஸ். திடீர்னு இன்னிக்கி அவ உங்க ஒய்ப்ன்னு தெரியறப்போ என்ன ஆச்சரியமா இருக்கு? தி வேர்ல்டு இஸ் ஸோ ஸ்மால்” என்றான் சேது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.