போஸ்டர்

லட்சுமிஹர்

 “லோ கேக்குதா… ஹலோ,“ சிக்னல் கெடைக்காம அப்படியே நடந்து கேணிப் பக்கம் இருக்குற பம்பு செட்டு வரைக்கும் வந்துட்டான் அமுதன். வெயிலு அவனப் பாத்து ரொம்ப நேரமா பல்ல காட்டிட்டு இருந்துச்சு, சுளீர்னு.

செல்போன தலைக்கு மேல சிக்னல் கெடைக்க தூக்கிட்டு அலஞ்சவன் சடாலுனு காதுல வச்சு பதட்டப்பட்டுப் போனவனாட்டம், “ஹலோ..”

“சொல்லுங்க “

“ ராம் கடையா?”

“ஆமா“

“அப்பாக்கு எழவு போஸ்டர் அடிக்கணும், அதான் கூப்டேன் “

“போட்டோ அனுப்புங்க இன்னைக்கு மதியம் கொடுத்தரலாம்”

தன்னோட தீனிய பாதி புடுங்குன வேகமாட்டம், “ஐயோ.. நீங்க வேற இன்னும் எங்க அப்பேன் சாகல.. எதுக்கு இம்புட்டு அவசரம்!“

“நீதான்யா இப்ப போன் பண்ண“

“இல்ல.எம்புட்டுனு கேக்கலாம்னுதான்“

அமுதன் எம்புட்டு ஆகுன்றத மட்டும் கேட்டு வச்சுக்கிட்டான். ராத்திரி முழிச்சிருந்து ட்ரிப்பு கார் ஓட்டுன வலி பிக்க கை, கால நீட்டி நெட்டி புடுச்சு, பொறந்ததுலருந்து பீபேண்ட வீட்டு முன்வாசல்ல வந்து உக்காந்தான்.

கொடஞ்சதுல மிச்சமிருந்த மலை அடிவார கிராமம். எண்ணுனா ஒரு ஐம்பது வீடுகதான் தேறும், போனீங்கனா மதுர ரோடு திருமங்கலம் விளக்குல எறங்கிக்கலாம்.

கைல வச்சுருந்த செல்போன திண்ணையில வச்சுட்டு வீட்டுக்குள்ள போனான். நடுவீட்ல அவன் அப்பே மணிமுத்து படுத்துருந்துச்சு, விடுஞ்சப்போ மணியக்கா வச்சுட்டு போன சாதம் கம்முனு மணிமுத்து எந்திரிக்கட்டுமுனு இருக்க.

அப்பே படுத்துருந்த கட்டுலு பக்கம் போனவன் தட்டையும் தொனைக்கு கையில் எடுத்துகிட்டு அப்பே காது பக்கம் போய், ‘சாப்டலயா இன்னும்’

பதிலுக்கு, நீ சொன்னது கேட்டுச்சுன்ற மாதிரி தலைய ஆட்டி கண்ண தொறந்து மூடிக்கிட்டார் தொர.

தட்லருந்த சாதத்த கைக்கு இம்புட்டா எடுத்து ஊட்டுனான். இத்துனுண்டுதான் சோறு, ரெண்டு வாய்க்கு மேல உள்ள போல. தண்ணியக் கொடுத்து வேலைய முடுச்சுகிட்டான் .

‘எப்ப வந்த..?” மணியக்கா சவுண்டு உள்ள கேட்டுச்சு. கட்டுலுல உக்காந்திருந்தவன் எந்திருச்சு தட்ட ஓரமா போட்டு கைய கழுவிக்கிட்டான், “இப்போதா உள்ள நொழஞ்சே அத்த, சாப்டாம வச்சுருந்தாரு அதா எடுத்தே ஊட்ட, கொஞ்சூண்டு தான் சாப்ட்டாரு.”

மணியக்கா அமுதனோட அப்பாக்கு கூடப் பொறந்த கடைசி தங்கச்சி. அமுதனுக்கு வெவரம் தெருஞ்சது மொத மணியக்கா அங்க தான் இருக்கு. அத்துட்டு வந்தவன்னு ஊர் சொல்லுது, நான் சொல்லல.

“அமுதா.. அப்பனுக்கு நோவு கூடுதுடா“ மணியக்கா அத சொல்லி முடிக்கிறதுக்குள்ள அண்ணே படுத்திருந்த கட்டுலுக்கு கீழ போய் உக்காந்துகிச்சு.

அமுதன் மணிமுத்த ஒருக்கா பாத்த வாக்குல அதுக்கு பதில் சொல்லாம வெளிய கெளம்பிட்டான்.

திண்ணையில கெடந்த செல்போன பாத்த உடனே தான் விட்டு போன அப்பன் போட்டோ நெனப்பு தொத்திக்கிச்சு.

வெளிலருந்து திரும்ப நடுவீடுக்கு வந்தவன் மணியக்காகிட்ட, “அப்பா போட்டோ இருக்கா அத்த”

மணியக்கா, “அதெல்லாம் தெர்ல அமுதா. அண்ணே கல்யாணத்தப்ப எடுத்த போட்டோதான்.. அதயும் உங்க அம்மா…” உங்க அம்மானு மேல சொல்ல வந்தத வேணும்னே சொல்லாம விட்ருச்சு.

வீட்டுல இருந்த சாமான் ஒன்னையும் விடல எல்லாத்துலையும் போட்டோ இருக்கானு மூக்க நொழச்சுட்டான். ஒரு போட்டோனாது கைல மாட்டிக்கும்னு நெனச்சவனுக்கு, ஒன்னும் இல்லேன்றத ஏத்துக்க முடில. மிச்ச சொச்சம் விட்டுருந்த எடத்துலயும் தேடிப்புட்டான், ‘பெப்பே’.

ஹாலுக்கு வந்தவன் அத்தையப் பாத்து, “வேற எங்கயாச்சும் போன போது எடுத்தது இருக்குமா?“

மணியக்காவுக்கு அப்படி ஏதும் ஞாபகம் இல்ல, “நம்ம கல்யாணி வீட்டு விசேஷத்தப்போ போட்டோ எடுத்துட்டு இருந்தாங்கனு அண்ணே சொல்லுச்சு.“

கல்யாணி வீட்டு ஆளுங்க இங்கிருந்து கெளம்பி ரொம்ப நாள் ஆச்சு. எங்குட்டு போய் அமுதன் அத தேட. போனு அடிக்கும் சத்தம். அமுதனோட ஓனர் தான்.

“அமுதா வேலைக்கு வர முடியுமா நாளைக்கு ..?”

“அப்பாக்கு முடியாம இருக்குணா.. இந்த வாரம் முடு….” பாதியோடு நிறுத்திக்கிட்டான்.

“ஹாஸ்பிட்டல் போகலயா”

“வச்சு பாத்துட்டு வந்தாச்சுணா. கடைசி நேரம் தான். ஒன்னும் முடியல, அதான் கூட்டிட்டு வந்துட்டோம்.”

“எங்க பாத்த?.. ”

“நம்ம உசிலம்பட்டி பிரபாகரன் டாக்டர் கிட்டதாணா ”

“நல்லா பாப்பாரே. நல்ல மனுஷன் ஆச்சே.”

“ஆமாணா”

“அப்பனா எல்லா முடுஞ்சுதானா,” என இழுத்தார் ஓனர்.

….

“சரி அப்போ எந்த விசயனாலும் சொல்லு. கைல பணம் இருக்குல “

“வேணுனா கேக்குறேணா.“ பம்பு செட்டு நிழல் அமுதனுக்கு புடுச்சதுதான், அந்தப் பக்கம் இருக்குற கெணத்த எட்டிப் பாத்தான், அடி மட்டத்துல கெடஞ்சு தண்ணி அழுக்கேறி போய். இங்க சின்ன வயசுல வந்துருக்கான், அம்மா கூடத்தான். அமுதனோட அம்மா மணிமுத்தோட கோச்சுட்டு போனதுக்கு பின்னாடி கெணத்து பக்கம் வந்ததே இல்ல பம்பு செட்டோடையே நின்னுக்குவான். அதுக்கப்பறோம் அம்மா பத்தி அமுதனுக்கு ஒண்ணுமே தெரியாது .

“கடைசியா இங்க விழுந்துச்சு. கெணத்துல,“ அது தான் அம்மா பத்தி அமுதனோட கடைசி ஞாபகம்.

“அதோட சாபமோ என்னவோ அதுகப்பறோம் இந்த கேணி நெம்பவே இல்ல“.

அமுதன் அம்மா பத்தி யார்ட்ட கேட்டாலும் ஒழுங்கான தகவலே இல்ல.

அதான் மணியக்கா போட்டோ பத்தி சொல்லும் போது திக்குச்சு, ஒரு பயத்தோட. “அம்மா எடுத்துட்டு போயிருக்கும்னு.“ அது அண்ணனுக்கு கேட்டுப்புடும்னு, அதுக்கடுத்து சொல்ல வந்த வார்த்தைய முழுங்கிப் புடுச்சு. மணியக்காவும் அமுதனோட அம்மாவும் தான் எப்பயும் ஒண்ணா சுத்துவாங்க. அமுதனோட அம்மா போனதுல இருந்து மணியக்கா இந்த கெணத்துப் பக்கம் வாரத நிப்பாட்டிக்கிச்சு. சின்னாளப்பட்டி பக்கம் அவங்க அம்மா அப்பாவோடதான் அமுதனோட அம்மா இருக்காங்கனு ஒரு சேதி அவ்ளோதான்.

அப்பா போட்டோக்கு என்ன பண்ணணும்னு தெரியாம இருக்கான் அமுதன். இப்ப போய் இதெல்லா போட்டு மனசுக்குள்ள ஒளப்பிகிட்டு கெடந்தான் .

திடீருன்னு கட்டுல்ல படுத்துக்கெடக்கும் அப்பேன் எந்துருச்சு அமுதன் கைய புடுச்சு அந்த கெணத்துகிட்ட கூட்டி போய் ஒன்னும் பேசாம ஓஓன்னு அலறமாட்டம் கனா கண்டுருக்கான், அப்போ அவங்க அப்பேன் சின்ன வயசுக்காரனாட்டம் இருந்தாரு, அழுதுட்டிருந்தவர திடீருன்னு காணல, அமுதன் அந்த கெணத்தவே சுத்தி வந்துட்டு இருந்தான். சுத்தி வந்தான். சுத்தி சுத்தி, சுத்தி வந்துட்டே இருந்தான்.

“ஏன்டா எங்களுக்கலாம் டவர் கெடைக்க மாட்டிது பேசணுனா கூட. நீ மட்டும் எப்பயும் போனு கையுமா சுத்துற“

ஊர்ல இப்போ இருக்கவங்கள விரல விட்டு எண்ணிப்புடலாம். எல்லா இங்கிருந்து நகந்து போய்ருச்சுங்க, இல்ல இன்னும் பொழப்ப தேடி கெளம்பிட்டே தான் இருக்குங்க ஜனம். இளவட்டங்களே கொறஞ்சு போச்சு. அப்படிருந்தும் இங்கருக்கும் சிலதுகள்ல ஊமையன் மகன் வடிவேலு கொஞ்சம் ஊருக்குள்ள ஜோரா திரியிறவன், பையன் பசும்பொன்னு பாலிடெக்னிக் காலேஜில படிக்கிறான்.

“அண்னே இது டச் மொபைல். நா காலேஜில இருந்தே படம் ஏத்திட்டு வந்துருவேன் அத பாப்பே. இங்க வாங்க நாம செல்பி எடுப்போம்“

“எம்புட்டுடா. இது.”

“7000 ணா..”

“ஒக்காலோளி உனக்கெல்லா எவண்டா வாங்கித் தரது. ”

“எங்க மாமே வச்சுருந்துச்சு. அது புதுசு வாங்குனதும் எனக்கு பழச கொடுத்துடுச்சு.“

“ஏன்டா உங்கொக்காவ கட்டுனவன் அம்புட்டு க்ராக்கியாடா? சிருச்சு தொலையாத மாட்டுப் பல்லு தெரிது. இங்க வா எனக்கு ஒரு ஒத்தாச பண்ணு“

ஹால்ல நொழஞ்சதும் கட்டில்ல படுத்துருந்த மணிமுத்தை ரெண்டு பேரும் பாத்தாங்க. மணியக்கா அமுதனோட வந்த வடிவேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தா. அமுதன் கட்டில மூலையில இருந்து கொஞ்சம் வெளிச்சம் மேல படுறமாட்டம் நகத்துனான்.

வடிவேலு கையில வச்சுருந்த மொபைல் போனுல கேமராவ ஆன் செஞ்சு மணிமுத்துக்கு பக்கத்துல போனவன், “அண்னே அப்பா கண்ண மூடி இருக்காரு “

கட்டில்ல உக்காந்திருந்த அமுதன், அப்பன் காதுக்கு பக்கத்துல போய். “எப்போய். அமுதே வந்துருக்கே, கண்ண தொறங்க“

ஒன்னும் கேக்காத மாட்டம் பெருசு இருக்க, பக்கத்துல நின்ன மணியக்கா, “நேத்துலருந்து ஒண்ணுமே உள்ள போகல.“

கொசுவம் போட்டு கட்டிருந்த சேலையோட மூக்க எடுத்து ஒப்பாரி பாடப் போன வாயப் பொத்திக்கிட்டா.

இன்னு கொஞ்சம் சத்தமா அதட்ற தொனில, “எப்போய் அமுதே வந்துருக்கே கண்ணத் தொற..”

இந்தா பொலச்சுப் போனு பெருசு மொகத்த கொஞ்ச அசச்சுக் காட்ட, பக்கத்துல இருந்த வடிவேல, “டேய். மாட்டுப் பல்லு மவனே, கரெக்டா எடு. என்ன பாரினா போற, பக்கத்துல வந்து எட்றா”

அமுதே அதுக்குள்ள அவங்க அப்பன் முகத்த தண்ணில தொடச்சுட்டு, கொஞ்சம் பவுடரையும் போட்டுவிட்டான் .

“எப்போய் இங்க பாரு.. இங்க பாரு…” அதுக்குள்ள வடிவேலு நாலு தடவ பட்டன அழுத்தி சத்தம் வெளிய கேக்குற அளவுக்கு போட்டோ எடுத்துட்டு இருந்தான்.

மணிமுத்துனால பாதி முடிது, ஆனா முழுசா கண்ணத் தொறக்க முடில. முடுஞ்ச அளவு பாத்தாங்க அப்பறோம் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விட்டுட்டாங்க.

எடுத்த போட்டோவ பாத்த அமுதனுக்கு அதுல ஒன்னு கூட நல்லதா புடிபடல. ஏன்னா அப்பனோட பாதி கண்ணு மூடிதான் இருந்துச்சு.

“எதுவுமே நல்லா இல்லண்ணே “

மொகத்த உம்முன்னு வச்சுக்கிட்டு, “ஆமாடா,“ தலைய மட்டும் ஆட்டி, எடுத்த போட்டோவையே பாத்துட்டு இருந்தான் அமுதன்.

மண்டைய ஒடச்சுக்கிட்டு ஏதோ புது ஓசன வந்தகணக்கா வடிவேலு, “அண்ணே.. பேசாட்டுக்கு நம்ம கம்ப்யூட்டர்ல கொடுத்து கண்ண மட்டும் தொறக்குற மாட்டம் பண்ணிரலாமா?“

“இங்க யாருடா அப்டிலா பண்ணுவாங்க? உனக்கு யாராச்சு தெரியுமா?“

“தெரியு.. அப்பனா போட்டோவா மாத்திட்டு வரேன் மொதல நானு,“ சொல்லிகிட்டே அங்கேந்து கெளம்பிட்டான்.

ரெண்டு நாளா நீர் ஆகாரம் மட்டு உள்ள போய் மணிமுத்து உடல காப்பாத்தி வச்சுட்டு இருந்துருச்சு. வடிவேலு சொன்ன ஓசன சரியா வரல. அந்த போட்டோல கண்ண தொறந்ததும் வேத்து ஆளு யாரோ போல ஆகிட்டதால வேணாம்னு சொல்லிட்டான்.

ஹால்ல அப்பாவ பாத்தபடி அமுதனும் வடிவேலும் உக்காந்து இருந்தாங்க..

“இப்போ என்னாணே பண்றது.. ”

….

“போட்டோவும் சரியா வரலையேணே,“ அமுதன திரும்பி பாத்தான்.

“போஸ்டர் அடுச்சு நல்லா தூக்கி போடலாம்னு இருந்தேன். நடக்காது போலயே.”

அமுதன் மண்டைக்குள்ள இப்போ எழவுக்கு எவ்ளோ செலவாகுங்கிறது மனக்கணக்காக ஓடிட்டு இருந்துச்சு..

“அண்ணா பேசாட்டுக்கு வரஞ்சரலாமா? “

“அதுவு இப்போ கண்ண தொறந்த மாட்டம் தான இருக்கும்”.

மணியக்கா படுத்தே கெடந்த அவ அண்ணனுக்கு தண்ணி தொட்டு எடுத்தா. ஒடம்ப திருப்பாம ஒரே பக்கம் இத்தன நாளு படுத்தே கிடந்ததால பின்னாடி முதுகெல்லா தோல் பிஞ்சு சொத சொதனு கெணத்து பாசாம் பிடிச்சது போல இருந்துச்சு கூட பூஞ்சை வாசம். ஒத்தாசைக்கு உக்காந்துருக்க, மணியக்காக்கு எப்புடி இது அண்ணி விழுந்த கெணத்த ஞாபகம் படுத்தாம போயிரும்?.

பெருச கயித்து கட்டில்லருந்து இரும்பு கட்டிலுக்கு மாத்தியாச்சு. மாத்துன கட்டிலு பெருசுக்கு புடிக்கலங்குற மாதிரி அன்னைக்கு நைட்டே செத்து போச்சு.

ஒரு கட்டத்துல சுத்துரத நிப்பாட்டிட்டு ஈரம் வத்தி போயிருந்த கெணத்த அமுதன் எட்டிப் பாத்தான்.

அப்பனுக்கு தான் நெனச்சத எதுவும் பண்ணமுடியாம போன வருத்தம் முகத்துல தெருஞ்சாலும், அத காட்டிக்காம அப்பன் பக்கத்துல போனவனுக்கு என்ன தோணுச்சோனு தெரில, இதுவரைக்கும் அவர்கிட்ட சொல்லாத ஒன்ன சொல்லப் போரவனாட்டம் மரச் சேருல உக்கார வச்சு செவுத்தோட சாத்தி வச்சுருந்த மணிமுத்து காதுகிட்ட போய், யாரு பாத்தா என்னங்குற தொனியில அவன், “அந்த கெணறு இன்னும் ஆழம் போலப்பா”

அமுதன் வெளிய வந்து அடுத்த சடங்குக்கான வேலைய பாக்கப் போக, பெருசோட போட்டோ இல்லாம வெறும் எழுத்த மட்டும் வச்சு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிருந்துச்சு. அதுலயும் அம்புட்டு பெழ!

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.