பழுத்து சிதறிய இலைகள்  

பத்மகுமாரி

தடாலென்ற சத்தத்தோடு உரிக்கப்படாத ஒரு பச்சை தேங்காய் தேவியின்  கால் பெருவிரலுக்கு மிக நெருக்கத்தில் வந்து விழுந்தது. தேங்காயை தூக்கி எறிந்து விட்டு, மூச்சிறைக்க புறவாசலில் அரைத் துண்டோடு நின்று கொண்டிருந்த சுந்தரத்தை திரும்பிக்கூட பார்க்காமல், பால் பாத்திரத்தை எடுத்து வைத்து பாக்கெட் பாலை கத்தரித்து சிந்தி விடாதபடி கவனமாக ஊற்றினாள்.

“செய்யுறதையும் செஞ்சிட்டு வாய தொறக்காளா பாரு. வாயில மண்ண அள்ளி போட்டிருக்கா,” அடுத்த தேங்காயை உரிக்கும் கம்பியில் ஓங்கிக் குத்தினான் சுந்தரம். பால் பொங்கி மேலே வந்தது.

தேவிக்கும் சுந்தரத்திற்கும் கல்யாணம் முடிந்திருந்த மூன்றாவது மாதத்தில், கோபத்தில் சுந்தரம் தூக்கி எறிந்த சோற்றுப் பானை தேவியின் மூஞ்சிக்கு நேரே பறந்து வந்தபொழுது படாரென்று பிடித்துக் கொண்டாள். அவளுக்கு கல்யாணத்தின் பொழுது போடுவதாக பேசியிருந்த கணக்கில் அரை பவுன் குறைத்து போட்டுவிட்டது தெரிந்ததில் இருந்து சுந்தரம் அவள் மீது அடிக்கடி கோபப்பட ஆரம்பித்திருந்தான். அவளை அடிக்கவும் திட்டுவதற்கும் வேட்டை நாய் போல காரணங்களை துரத்தித் துரத்தி பிடித்தான்.

“நாலு கிராம் போட வக்கில்ல, தம்பி கல்யாணத்துக்கு அக்கா முந்தின நாளே வரணும்னு எந்த மூஞ்சிய வச்சிட்டு உங்க வீட்டுல கேக்குறாங்க”

“இப்ப என்ன உங்க அப்பனா செத்துப் போயிட்டான். ஒப்பாரி வச்சது போதும். எந்திரிச்சு சீலைய கட்டு,” படுத்திருந்த அவள் முடியைப் பிடித்து இழுத்து தள்ளினான்.

ஊரே உறங்கிப் போய் தெரு அமைதியாக இருந்தது. தூரத்தில் ஒற்றை நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. “இந்நேரம் ஊரு அழைச்சு முடிச்சு இருப்பாங்க, தேவி வரலயான்னு கேட்ட ஊர்க்காரங்க முன்னாடி உங்க அப்பன் ஏமாத்துக்காரன் கூறிக் குறுகி போயிருப்பான்ல,” சுந்தரம் வெறி பிடித்தவன் மாதிரி அண்ணாந்து பார்த்து கத்தி சிரித்தான். காம்பவுண்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த மாங்கிளை தேவியின் பின்னந்தலையை உரசி உரசி மேலும் கீழும் ஆடியது. திரும்பி அதைக் கைக்குள் ஒருநிமிடம் பொத்திப் பிடித்து விட்டுவிட்டு, உறுமிக் கொண்டிருந்த பைக்கின் பின்பக்கம் அவள் ஏறிக் கொள்ள, அவள் கைக்குள்ளிருந்து வெளி வந்த கிளை எம்பி மேலே ஒருமுறை போய்விட்டு, அதன் இடத்திற்கு வந்து லேசாக மேலும் கீழும் அசைந்தது.

பைக் உறுமிக் கொண்டு பறந்தது. சற்று நேரத்திற்கு முன் கைக்குள் அடங்கிக் கொண்ட மாங்கிளையை போல், கைக்குள் பொத்திக் கொள்ள ஒரு பிஞ்சு உயிர் இருந்திருந்தால் இந்த பயணம் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.

அவள் பிறந்த வீட்டிற்கு அவர்கள் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வந்து இறங்கிய போது வாசல் திறந்து கிடக்க முற்றத்தில் காலை தொங்கப்  போட்டபடி, தேவியின் அம்மாவும் அப்பாவும் எதிர் எதிர் தூணில் சாய்ந்து, நகரும் மேகங்களை அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்‌.

சுந்தரம் தொண்டையை செருமி அவர்களுக்கு அவன் வருகையை சொன்னான். தேவியின் அம்மா அவளை ஓடிப் போய் கட்டிக்கொண்டாள். கல்யாணத்திற்காக வந்திருந்தவர்கள் முன் அறையில் ஜமுக்களத்தில் வரிசையாக படுத்திருந்தார்கள். ஒரு பத்து வயது குழந்தையின் பாதம் பக்கத்தில் படுத்திருந்த பெண்ணின் தொடையின் மேல் கிடந்தது.

“இல்லாத பாவத்துக்குத்தான தராம இருக்கோம். வச்சுக்கிட்டா இருக்கோம்,” தேவியின்‌ அம்மா அவளைக் கட்டிக் கொண்டபடியே குலுங்கி அழுதாள். சுந்தரம் திரும்பிப் பார்க்காமல் படுப்பறை ஓரத்தில் செருப்பை கழற்றி போட்டுவிட்டு நேராக உள் அறைக்கு சென்று விட்டான். தேவியின் அப்பாவின் கண்கள் பளபளத்திருந்தது நிலா வெளிச்சத்தில் தெரிந்தது.

மூணு பெண் பிள்ளைகள் பெற்றிருந்த தனக்கு ஒரு நிரந்தர வேலை அமையாமல் போனது தான் இத்தனைக்கும் காரணம் என்று தன்னையே அவர் நொந்துக் கொண்டார். அவர் அண்ணன் தம்பி தருவதாக சொன்னது, தேவியின் அம்மாவின் அண்ணன் தம்பி தருவதாக சொன்னது, தான் சேர்த்து வைத்திருந்தது என்று எல்லாத்தையும் கூட்டிப் பார்த்து தான் அவர் சபையில் வாக்கு கொடுத்திருந்தார்.

“ஒரு பவுன் தாரதா சொல்லிகிட்டு, இப்படி கல்யாணத்துக்கு தலைக்கநாள் அரை பவுன் கொண்டு நீட்டுறியே. கடைசி நேரத்தில நான் எங்கன போய் புரட்டுவேன்?”

“அது உம்ம பிரச்சனை. நீரு மூணு பொட்ட பிள்ளை பெத்து போட்டதுக்கு நான் மூணு பவுன் தண்டம் அழ முடியுமா. முதல்ல சொன்னேன். இப்போ இவ்ளோ தான் முடிஞ்சது,” தேவியின் தாய் மாமா சொன்னது.

எல்லாத்தையும் திரும்பவும் யோசித்த போது பாரம் ஏறி அவர் மூச்சு முட்டிக் கொண்டு பெருமூச்சாக வெளி வந்தது. தேவியைக் கூட்டிக் கொண்டு அம்மா முற்றத்தில் ஏறினாள்.

ஒருதடவை முன்கதவை திறந்த தேவியை உதைத்து உள்ளே தள்ளியபடி வீட்டுக்குள் நுழைந்தான் சுந்தரம். அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். சட்டையை கழற்றாமல் வலது முக்கில் கிடந்த மர நாற்காலியில் போய் அவன் அமர்ந்து கொண்டான். அவள் நெளிந்து எழுந்து முட்டைக் கட்டிக்கொண்டு அதே இடத்தில் இருந்தாள்.

““இருக்கத பாரு, பொம்மை மாதிரி. ஒன்னும் கொண்டு வரல. வயித்தையும் சேர்த்து கழுவிப் போட்டுட்டு வந்திட்டா. அவன் அவன் பிள்ளை குட்டி பெத்து , பொண்டாட்டி வீட்டு பிடிமானத்துல வீடு வாசல்ன்னு மேல ஏறுறான். நான் உன்ன கட்டிக்கிட்டு கிணத்துக்குள்ள கிடக்கேன். போய்  காப்பிய போடுடி.,” சேலை தலைப்பில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்து அடுக்களைக்குள் சென்றாள்.

சுந்தரத்தின் நட்பு வட்டாரத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருக்கிறது அல்லது யாரேனும் புது வீடு கட்டி முடித்திருக்கிறார்கள் என்று அவள் புரிந்து கொண்டாள்.

காப்பியை அவன் கையில் கொண்டு கொடுத்தபொழுது டம்ளர் திரும்பி அவள் பக்கம் பறந்து வந்தது. அவள் இடப்பக்கமாக விலகிக் கொள்ள காப்பி ஒரு அமீபா வடிவத்தில் தரையில் பரந்து கிடந்தது. அவன் எழுந்து படுக்கறைக்கு சென்றான்.

திரும்பி  அதே மரநாற்காலியில் வந்தமர்ந்து கொண்டு, “ உன்னால ஒரு பிரயோசனமில்லை இந்த வீட்டுல. நல்லா என் காசுல ஏறி இருந்து தின்னுட்டு இருக்க,” அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்த பொழுது காப்பி உறிஞ்சியிருந்த அழுக்கு துணியை குழாய் தண்ணீரில் அவள் அலசிக் கொண்டிருந்தாள்.

“உன் அப்பன் உனக்கு மட்டும் நாமம் போட்டு விட்டுட்டான். இப்ப உன் தங்கச்சிக்கு மட்டும் உனக்கு போட்டத விட ஒரு பவுன் கூட போட்டு விடுறான். அது பொழைக்கத் தெரிஞ்ச பிள்ள. மாப்பிள வீட்டுக்கு இப்பமே கூடுதலா கேட்டு வாங்கி கொடுக்குது. உனக்கு மிச்சம் போட்டிருந்த நாலு கிராம திருப்ப வாங்கவே நாலு வருஷம் ஆச்சு. அதுவும் நீ எங்க வாங்கின. நான் போட்ட ஆட்டத்தில உங்க அப்பன் கொண்டு வச்சான் இல்லேனா நாமம் போட்டிருப்பான்,” மள மள என திட்டி முடித்து விட்டு சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பி சென்றான் சுந்தரம்.

அவன் போன பிறகு வெளியே வந்து மாங்கிளையை பிடித்தபடி கொஞ்ச நேரம் நின்றிருந்தாள் தேவி. கண்களில் இருந்து கோடு கோடாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

பால் பொங்கி விடாமல் அவள் அடுப்பை நிறுத்திய பொழுது, அவன் தோடு உரித்திருந்த தேங்காய்களை பையில் எடுத்துக் கொண்டு வெளியே இறங்கிச்  சென்றிருந்தான். அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. எப்பொழுதுமே அவளிடம் சொல்லிவிட்டு வெளியே போகிற பழக்கம் அவனுக்கு இருந்ததில்லை.

புறவாசலில் கிடந்த தேங்காய் சவுரி குவியலில் இருந்து ஒவ்வொன்றாக சாக்குப்  பையில் எடுத்து போட, “நமக்கு காசு பணம் இல்லாட்டியும் மானம் முக்கியம்மா. அந்த மனுசன் கோலம் நமக்கு தெரிஞ்சாச்சு. இந்த தடவ  மாமா எப்படியோ பேசி உன்ன திரும்ப கூட்டிட்டு போறதுக்கு ஒத்துகிட வச்சுட்டாங்க. எப்பவும் ஒண்ணு போல் இருக்காது.  கட்டிக் கொடுத்த மூத்த பிள்ளை வீட்டோட வந்து இருக்கு தெரிஞ்சா, அடுத்த ரெண்டு பொட்டப் பிள்ளைய வெளிய இறக்க முடியாது தாயி. அவர்கிட்ட எதிர்த்துலாம் பேசாத இனி. பேசுனா பேசிட்டு போட்டும். நம்ம மேலயும் தப்பு இருக்குல. பேசுனத பேசுனபடி செய்யாம போனது நம்ம தப்பு தான. அவர  அனுசரிச்சு போய் சூதானமா பொழச்சுக்கோ”  அம்மா வருஷங்களுக்கு முன்னாடி சொன்னது இப்பொழுது சொல்வது போல் வார்த்தை மாறாமல் காதுக்குள் ஒலித்தது. பதினைந்து என்று எண்ணி கடைசி தேங்காய் சவுரியை எண்ணிப் போட்டு சாக்கு மூட்டையை கட்டி முடித்தாள்.

“உன் ரெண்டாவது தங்கச்சிக்கு பேசி முடிச்சிருக்க இடம் என் தூரத்து சொந்தம்தான்,” ஒருவாரம் முன்னாடி சந்தையில் பார்த்த பொழுது லீலா அக்கா சொன்னதும் கூடவே சேர்ந்து ஞாபகம் வந்தது. எப்பொழுது எதைக் கொண்டு தர வேண்டும் என்று நமக்கே தெரியாமல் ஞாபகங்கள் கணக்கிட்டு வைத்து முன் நீட்டி விடுகின்றன.

கட்டிய சாக்கு மூட்டையை அவள் முக்கோடு எடுத்து வைத்த பொழுது, பழுத்த முருங்கை இலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக புறவாசலில் சிதறிக் கிடந்தன.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.