சுரேஷ்குமார இந்திரஜித்:  இடம் / புலம் / கதைகள்- சுகுமாரன்

சுகுமாரன்

Image may contain: 1 person, smiling, close-up

றத்தாழ மூன்றரை அல்லது நான்கு பதிற்றாண்டுகளாக சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் எழுதி வருகிறார். அவ்வப்போது மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். எழுதுபவர். அவருடைய எழுத்தாக நான் முதலில் வாசித்தது கட்டுரையைத்தான். எழுபதுகளின் இறுதியில் ‘கணையாழி’  யில் பெரியாரைப் பற்றி அதன் மூன்று இதழ்களில் அவர் எழுதிய நீண்ட கட்டுரை கவனத்தை ஈர்த்தது. இன்று அதன் சாரம் நினைவில் இல்லை என்றாலும் அந்த ஈர்ப்பு மறக்க முடியாததாகவே இருக்கிறது. வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட கட்டுரை அது. ஏறத்தாழக் கட்டுரை வெளியான இதழ்கள் ஒன்றிலேயோ அல்லது அதற்குப் பின்போ அவருடைய சிறுகதையும் வெளியானது. அலையும் சிறகுகள் என்ற அந்த முதல் கதை (முதல் கதைதானா?) பரவலான விவாதத்துக்கு உள்ளானது. தொடர்ந்து சிற்றிதழ்களில் அவரது கதைகள் வெளியாயின. இந்தச் செயல் புதிய சிறுகதையாளர் ஒருவரின் வருகையைத் திடமாக அறிவித்தது. ஒருவேளை அவரும் தனக்கான ஊடகம் சிறுகதைதான் என்பதை இந்த நிகழ்விலிருந்து உணர்ந்து கொண்டிருக்கக்கூடும். கட்டுரைகள், மதிப்புரைகளைக் கைவிட்டு புனைவில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டியது இதனாலாக இருக்கலாம் என்பது என் யூகம். பெரியார் பற்றிய கட்டுரையை அவர் நிராகரித்ததன் காரணமும் ஒருவேளை இதுவாக இருக்கக்கூடும்.

முதன்மையாக ஒரு சிறுகதையாளராகவே கருதப்படுபவர். எழுதத் தொடங்கிய காலப் பகுதியில் எழுத வந்தவர்களுடன் ஒப்பிட்டால் சுரேஷ்குமார இந்திரஜித் மிகச் சரளமாகவும் அதிகமாகவும் எழுதியிருக்கிறார் என்பது இந்தக் குறிப்புக்காக அவரது இதுவரையான கதைகளைப் பார்வையிடுகையில் புலனானது. அண்மையில் வெளிவந்த இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பிலுள்ள கதைகளையும் சேர்த்து 82 கதைகளை எழுதியிருக்கிறார். அவரது சமகாலத்தவர் எவரும் இந்த எண்ணிக்கையை எட்டவில்லை.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான சிறுகதையாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான பிரபஞ்சன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம் ஆகியோரும் அவர்களுக்குச் சற்று முன்னதாக எழுதத் தொடங்கி இந்தக் காலப்பகுதியில் தங்களது இடத்தை நிறுவிக் கொண்ட அசோகமித்திரன், வண்ணதாசன், அம்பை போன்றோரும் தமிழ்ச் சிறுகதையில் நிகரற்ற பங்களிப்புகளைச் செய்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து சிறுகதையாக்கத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் அன்று அதிகம் பேசப்பட்டவர்கள் மூவர். சுரேஷ்குமார இந்திரஜித், திலீப்குமார், விமலாதித்த மாமல்லன். எண்பதுகளின் சிறுகதைக் கலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதையாளர்களாக இந்த மூவரும் நம்பிக்கையளித்தார்கள். அந்த நம்பிக்கையை இவர்கள் எழுதிய கதைகளும் வலுப்படுத்தின. எண்பதுகளில் எழுதப்பட்ட மதிப்புரைகளிலும் கதை விவாதங்களிலும் மூவரும் குறிப்பிடப்பட்டனர். மாறுபட்ட கூறுமுறைகள் கொண்டிருந்தவர்கள்; எனினும் சில பொது இயல்புகளில் ஒற்றுமை கொண்டவர்கள். அநேகமாக இவர்கள் மூவரும் எழுதிய கதைகளில் நகரமே முதன்மையான களமாக இருந்தது. நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சிக்கல்களே இவற்றில் கதைப் பொருளாக அமைந்திருந்தன. சிறுகதையை நுட்பமான ஒன்றாக முன்வைக்கும் நேர்த்தியும் பொதுவானதாக இருந்தது. இவை ஒப்பீடல்ல; வாசகனாக எனது அனுமானங்கள் மட்டுமே.

ஆரம்பக் காலங்களில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதிய இந்தக் கதையாளர்களின் தொகுப்புகள் ஓரிரண்டு ஆண்டு இடைவெளியில்வெளிவந்ததை இன்னொரு ஒற்றுமையாகச் சொல்லலாம். விமலாதித்த மாமல்லனின் ‘அறியாத முகங்கள்’ , சுரேஷ்குமார இந்திரஜித்தின் அலையும் சிறகுகள்’ இரண்டும் 83-இலும் திலீப் குமாரின் மூங்கில் குருத்து’ 85-இலும் வெளியாயின. எண்பதுகளின் கதைப் போக்கை விளங்கிக் கொள்ள இவை உதவின. ஒன்றுக்கொன்று வேறுபட்ட இந்த எழுத்தின் தனித்தன்மைகள் சிறுகதைக் கலையின் பன்முகத்தன்மையை துலங்கச் செய்தன. சிறுகதையின் அடிப்படை இயல்புகளில் சில கூறுகளைச் சேர்த்தன. நுட்பமாகக் கதை சொல்லுதல், செறிவான மொழியைப் பயன்படுத்துதல், வாசகனின் ஊகத்துக்குக் கதையின் மையத்தை விட்டுவிடுதல் ஆகிய அலகுகளை இவை சேர்த்தன. இந்த அலகுகளை மிகக் கறாராகப் பின்பற்றியவராக சுரேஷ்குமார இந்திரஜித்தைக் குறிப்பிடலாம். நானும் ஒருவன்’ தொகுப்பு முந்தைய கதைகள் பெரும்பான்மையும் இறுக்கமானவை; வடிவக் கச்சிதம் கொண்டவை. சுருங்கச் சொல்வதே சிறுகதை என்ற கருத்தை அவர் கதைகள் எடுத்துக் காட்டின. அவரது எந்தக் கதையும் ஆறு, ஏழு பக்கங்களைத் தாண்டியதில்லை. இருந்தும் அதிக எண்ணிக்கையில் கதைகள் வெளியாயின. குறிப்பிட்ட மூவரில் அதிகமாக எழுதியவரும் தொடர்ந்து எழுதியவரும் சுரேஷ்குமார இந்திரஜித் என்பதை அண்மை வாசிப்பில் அவதானித்தேன். தொடக்க காலக் கதைகளைத் தீவிரமாகவும் வேகமாகவும் எழுதிய மாமல்லனும் திலீப்குமாரும் ஒரு கட்டத்தில் நிதானமான வெளிப்பாட்டாளர்களாகவும் கதை எழுதாப் பருவத்தைக் கொண்டவர்களாகவும் ஆகியியிருக்கிறார்கள். கதையில்லாப் பருவத்தை காணாதவராக சுரேஷ்குமார இந்திரஜித் தொடர்ந்திருப்பதை மீள்வாசிப்பில் கண்டுபிடித்தேன். இந்தத் தொடர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமல்ல; தனது கதையாக்கத்தின் இன்னொரு கட்டத்தை அடையவும் அவருக்கு உதவியிருக்கிறது. மாபெரும் சூதாட்டம் ‘ என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பவை அலையும் சிறகுகள்’, கிழவனின் வருகை’ ஆகிய முதல் இரண்டு தொகுப்புகளில் வெளிவந்தவையும் வெளிவராதவையுமான கதைகள். இந்தக் கதைகளை அவரது முதல் கட்டமாகவும் நானும் ஒருவன் முதல் ‘இடப்பக்க மூக்குத்தி’ வரையிலான தொகுப்புகளில் இடம் பெறும் கதைகளை இரண்டாம் கட்டமாகவும் எளிதில் வகைப்படுத்திவிடலாம்.

எண்பதுகளில் விமர்சன வசதிக்காக ஓர் அளவீடு கையாளப்பட்டது. தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்களான புதுமைப்பித்தனையும் கு.ப. ராஜகோபாலனையும் முன்னிருத்திச் செய்யப்பட்ட வகைப்பாடு அது. மானுடத்தின் புறம் சார்ந்த சிக்கல்களைச் சொல்லும் கதைகளை எழுதுபவர்கள் புதுமைப்பித்தன் வழி வந்தவர்கள், அகச்சிக்கல்களைப் பேசும் கதைகளை எழுதுபவர்கள் கு.ப.ரா., மரபைச் சார்ந்தவர்கள் என்றும் சுட்டப்பட்டார்கள். இது கறாரான அளவுகோல் அல்ல. ஆனால் ஓர் எழுத்தாளரை அடையாளம் காணவும் வாசிப்பில் நெருங்கி உரையாடவும் இந்த அளவுகோல் துணையாக இருந்தது. புறச் செயல்களும் தோற்றங்களும் அக நடவடிக்கைகளுடனும் உணர்வுகளுடனும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவாகும் மனநிலையை மௌனியின் கதைகள் சித்தரித்தன. அந்தக் கதைகளில் புறம் மங்கலாகவும் உணர்வுகள் தீவிரமாகவும் கையாளப்பட்டாலும் இரண்டையும் கடந்த புதிரான நிலையே முதன்மையானதாக வெளிப்பட்டது. புறத்தின் பருண்மையோ உணர்வின் நுண்மையோ அல்ல; இரண்டுக்கும் இடையில் நிலவும் புதிர்த்தன்மையை விளங்கிக் கொள்ளும் எத்தனமே மௌனி கதைகளின் மையம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளும் இந்த மையத்தை நோக்கியே செல்பவை. ஆனால் புதிர்த்தன்மையை விளங்கிக் கொள்வதை அல்ல; அந்தப் புதிரை அடையாளம் காட்டுவதையே முக்கியமாகக் கொள்பவை. மௌனியிடமிருந்து அவர் விலகும் புள்ளி இதுவே. அவர் ஒன்றும் இடங்களும் குறிப்பிடத்தக்கவை. மௌனி பாத்திரங்கள் பெரும்பான்மையும் பெயரற்றவை. அநாமதேயமானவை. அவன் அல்லது அவள். கதை சொல்லப்படுவது பெரும்பாலும் தன்மைக்கூற்றாகவே. இந்த இயல்புகளை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளிலும் காணமுடியும்.

சுரேஷ்குமார இந்திரஜித், மௌனியை முற்றிலும் நிராகரிக்கும் இரு அம்சங்களே அவரது தனித்துவமான இடத்தை நிர்ணயிக்கின்றன. மௌனி புதிரின் மையத்தை விளங்கிக் கொள்ள அலைக்கழிகிறார். அவரே முட்டி மோதி வெளிப்படுத்த இடர்ப்படுகிறார். அங்கே வாசகனுக்கு அனுமதியில்லை. சுரேஷ்குமார இந்திரஜித் புதிரின் மையத்தைத் துல்லியமாக வாசகனுக்குக் காட்டுகிறார். அவனே அதை விளங்கிக் கொள்ளச் சுதந்திரம் அளிக்கிறார். இது முதலாவது அம்சம். மௌனி மையப் புதிரை, புலன்கடந்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார். அதை படைப்பின் ஆன்மீகம் என்று வரையறுக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித் மர்மத்தைப் புலன்களின் தத்தளிப்பாகவே சித்தரிக்கிறார். படைப்பில் நிகழும் உலகியல் செயல்பாடாகவே நிலைநிறுத்துகிறார். இது இரண்டாவது அம்சம். இவை இரண்டுமே தமிழ்ச் சிறுகதையில் அவரது இடத்தை உறுதி செய்கின்றன. இதை மேலும் விரித்துச் சொன்னால், பக்தி இலக்கியங்கள், மதச்சார்பான காவியங்கள் நீங்கலாகத் தமிழ் இலக்கியம் இம்மை இயல்பையே கொண்டிருப்பவை. அதன் நவீன கண்ணியாகவே சுரேஷ்குமார இந்திரஜித் படைப்பை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இம்மைசார் இயல்புள்ள கூறுமுறையில் வெற்றிகளை ஈட்டிய படைப்பாளியாக அவரைச் சொல்ல விரும்புகிறேன்.

விரித்த கூந்தல்’ கதையை உதாரணமாகப் பார்க்கலாம். விரித்த கூந்தலுடன் நடமாடும் பெண்களை அறிந்திருக்கும் ஒருவன் அருவியில் குளித்து முடித்து நிற்கும் பெண்ணின் தோற்றத்தால் சஞ்சலமடைகிறான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் சட்டென்று விளங்குகிறது. அது திரௌபதியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இந்த இடம் வெவ்வேறு தளமாற்றங்களுக்கு ஆதாரமான இடம். திரௌபதியின் கூந்தல் ஒரு உருவகமாகி புலன் கடந்த ஒரு தளத்துக்குச் செல்வது சுலபமும்கூட. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித்தின் இம்மைசார் படைப்பாக்க நிலை அதற்கு முற்படுவதில்லை. மாறாக, விரித்த கூந்தல் ஓர் ஆஸ்திரேலியனுக்கோ அமெரிக்கனுக்கோ தாக்கத்தைத் தராது என்று பாத்திரத்தை யோசிக்க விட்டு மனக் கனத்தை இல்லாமலாக்குகிறது. அவரது மொத்தக் கதைகளின் மைய இழை இது என்று தோன்றுகிறது. அவரது படைப்பாக்கத்தில் இந்த இழை அறாமல் நீள்கிறது. அண்மைக் காலக் கதையான மாயப் பெண் அதற்குச் சான்று. எண்பத்து மூன்று வயதான பாத்திரம் தனது பால்ய சகியான ரோகிணியைத் தேடிப் போகிறார். அவளுடைய பேத்தியான மகா நதி அவரை பாட்டியிடம் அழைத்துச் செல்கிறாள். அங்கே நிகழ்வது ஒரு லௌகீக மாயம். ரோகிணியை முத்தமிடுகிறார் கிழவர். அவளும் முத்தமிடுகிறாள். அது கலைந்து தெளியும்போது மாயப் பெண் உதடுகளைக் குவித்துக் காற்றில் முத்தமிடுகிறாள். இவர் தொட நெருங்கும்போது கரைந்து மறைகிறாள். இந்த லோலிட்டாத்தனமான சூழலை அமானுஷ்யமான ஒன்றாக மாற்ற ஆசிரியர் விரும்புவதில்லை. உலகியல் தளத்திலேயே தொடர்கிறார். ‘அவள் ஜொலித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே மாயமாக மறைந்து போனாள். நான் தனித்து நின்றேன். காகம் கத்தும் குரல் கேட்டது,’ என்று கதை முடிகிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் தனி இயல்புகளில் ஒன்றாக இதைச் சொல்லாம். இரு கட்டங்களாக அவரது கதைகளை வகைப்படுத்திப் பார்த்தாலும் தொடர்ந்து வரும் குணமாகவே இது தோன்றுகிறது. ‘மறைந்து திரியும் கிழவன், கால்பந்தும் அவளும்’, முதலான பல கதைகளிலும் இந்த இயல்பைப் பார்க்கலாம்.

மாபெரும் சூதாட்டம்‘ தொகுப்பின் பின் அட்டையில் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளுக்கான அறிமுகக் குறிப்பாக இடம் பெறும் வாசகம் என்னை யோசிக்கச் செய்தது. ‘முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர்’ என்பது அந்த வாசகம். ‘முன்னோடிகளின் பாதிப்பில்லாத தடம்’ என்ற வாசகமே என்னை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைவழியைத் தேடத் தூண்டியது. அப்படி ஒரு தடம் இலக்கியத்தில் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையே தூண்டுதலுக்கு முகாந்திரம். மௌனி எழுத்தின் நேர் பாதிப்பு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் இயங்கும் மொழியில் ஓட்டத்தில் அவர் மேற்கொண்ட தேர்வில் மறைமுகமாக நிகழச் சாத்தியங்கள் அதிகம். இது ஒரு பொருளில் மொழியின் வலு. இன்னொரு பொருளில் படைப்பாக்கத்தின் தவிர்க்கவியலாமை. இந்த்த் தொடர்ச்சிதான் இலக்கியத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது. இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். ஆற்றில் முகந்த நீரில் அப்போது நிலவிய தட்பமோ வெப்பமோ நீருடன் கலந்திருக்கிறது. அதை இன்னொரு கொள்கலத்தில் மாற்றிய பின்னேதான் அதன் தட்ப வெப்பம் மாறுகிறது. மொழியில் நிகழும் பாதிப்பும் இது போன்றதுதான் என்று தோன்றுகிறது. இந்தத் தலைமுறைச் சிறுகதையாளர்களான எஸ். செந்தில்குமாரிடமும் குலசேகரனிடமும் சுரேஷ் குமார இந்திரஜித்தின் பாதிப்பை நான் உணர்வது இந்தப் பின்புலத்தில்தான்.

அதிகச் சிரமமில்லாமலேயே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை இரு கட்டங்களைச் சேர்ந்தவையாகப் பகுத்து விட முடியும். மாபெரும் சூதாட்டம் வரையிலான கதைகளை முதல் கட்டமாகவும் நானும் ஒருவன், அவரவர் வழி, நடன மங்கை, இடப் பக்க மூக்குத்தி ஆகிய தொகுப்பிலுள்ள கதைகளை இரண்டாம் கட்டமாகவும் பகுக்கலாம். முதற்கட்ட கதைகளை காலத்துக்கு ஆசிரியர் அளித்த கதைகள் என்றும் இரண்டாம் கட்டக் கதைகளைக் காலம் ஆசிரியருக்கு அளித்த கதைகள் என்றும் அழைக்க விரும்புகிறேன். முன்னவை இறுக்கமான வடிவிலும் நெகிழ்ச்சிக் குறைவான நடையிலும் எழுதப்பட்டவை. உணர்ச்சித் ததும்பல்களோ உரத்த குரலோ இல்லாதவை. பெரும்பாலும் மங்கலான பின்புலம் கொண்டவை. அதை அந்தக் காலப் பகுதி எழுத்துக்களின் இருண்மை எனலாம். அதனாலேயே அவற்றைக் காலம் அளித்த கதைகளாக இனங்காண்கிறேன். இரண்டாம் கட்டக் கதைகள் அதிக இறுக்கமில்லாதவையாகவும் நெகிழ்வான நடையைக் கொண்டவையாகவும் அமைந்திருப்பவை. அதுவரை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் காணப்படாத மெல்லிய அங்கதமும் பகடியும் இரண்டாம் கட்டக் கதைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘பின் நவீனத்துவ்வாதியின் மனைவி கதையை முதற்கட்ட்த்தில் அவர் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. இந்தப் பாகுபாட்டை மீறியும் அவரது ஆதாரக் கூறுகள் இன்னும் தொடர்கின்றன. கதைகளுக்குள்ளிருந்து கதைகளை மீட்கும் அவரது படைப்பியல்பு புதிய கதைகளிலும் செயல்படுகின்றன. முன்பை விட மேலும் துலக்கமாகவே. கதைகளைச் சொல்வதல்ல; கதை நிகழ்வின் மர்மத்தின் முன் வாசகனை அழைத்துச் சென்று நிறுத்துவதே போதுமானது என்ற சுரேஷ்குமார சூத்திரம் செழுமை பெற்றிருப்பதை புதிய கதைகளில் பார்க்கலாம். மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனோன், வழி மறைத்திருக்குதே, காமத்தின் வாள் ஆகிய கதைகள் மர்மத்தை வெளிப்படுத்தாமலேயே முடிகின்றன. ஆனால் வாசகன் வாசித்துப் புரிந்துகொள்ளும் திறப்புகளை வெளிப்படையாகவே முன்வைக்கின்றன.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளைப் பற்றி ‘கலைகள் கதைகள் சிறுகதைகள்’ என்ற கட்டுரையில் சுந்தர ராமசாமி பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார். ’ சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் ஒதுக்கப்பட்ட மனிதன் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தின் சக்கரங்களில் தொற்றி ஏற வழிவகை தெரியாமல் வியாகூலம் கொள்கிறான்’. இந்தக் குறிப்பை எழுதுவதற்கான மீள் வாசிப்பில் படித்தவற்றில் ‘மல்லிகைச் சரம் கதையில் யோசனை தயங்கி நின்றபோது மேற்கோள் வரி மனதில் புரண்டது. படைப்பாளியாக சுரேஷ் குமார இந்திரஜித் இந்த மானுடச் சிக்கலை தனது கதைகளில் தொடர்ந்து முன்வைக்கவே எத்தனிக்கிறார் என்று பட்டது. கூடவே சுந்தர ராமசாமியின் வாசகமே இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட ஆகச்சரியான மதிப்பீடு என்றும் தோன்றியது. படைப்பை அலகிட்டு வாய்ப்பாடு காண்கிற பிரக்ஞைபூர்வமான செயலைக் காட்டிலும் தற்கண உள்ளுணர்வின் தற்கண மின்னல் வாசிப்பை ஒளியூட்டக் கூடியதாக இருக்கலாம். இருக்கிறது என்பதே இந்தக் குறிப்புக்கு உந்துதல்.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.