எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1982ல் வெளியானது. அதற்குப் பிறகு பதினோரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘மறைந்து திரியும் கிழவன்’ வெளிவந்தது. காலக்கிரமமாகப் பார்க்கையில் ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும் ஒவ்வொரு வகையானவையாக இருக்கின்றன. பகற்கனவைப் போல் விரியும் புனைவுவெளியைப் பொதுவான அம்சமாகச் சொல்லலாம். நிறைய கதைகளில் கதை என்பது இல்லை. புனைவு மட்டுமாக, புகை எழும்பி ஆவியாகி மறைவதைப் போல மறைந்துவிடுகிறது. அந்த விவரணைகளைக் கொண்டு, சம்பவங்களைக் கொண்டு, வாசகர்கள் கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது.

மனதின் இயல்பே ஒன்றைத் தொட்டு ஒன்றாய் அறிந்து கொள்ளுதல்தான். ஒரு விசயம் குறித்து எண்ணங்கள் குவிகையில் தானாகவே இன்னொன்று ஞாபகத்துக்கு வரும். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்பது சற்று ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே பிடிபடும். இந்த வகையான கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித்திடம் நிறையக் காண முடிகிறது.

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் தொந்தரவு தரும் ஓர் அம்சம் கதாபாத்திரங்களின் பெயர்கள். ‘ஒரு காரும் ஐந்து நபர்களும்’ என்ற சிறுகதையில் நீலராஜ் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அருகில் 16 வயது மகள் நீலச்செல்வி; பின்னால் மனைவி மகிஷா, தாயார் நீலவேணியம்மாள், மாமியார் பஞ்சரத்தினம்மாள். நீலராஜ் அவருடைய தங்கை நீலகுமாரி வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்த விபரங்கள் எல்லாமே முதல் பத்தியில் வந்துவிடுகிறது. இது ஏதோ ஒருவகை மன விலக்கத்தையும், தொந்தரவையும் தருகிறது. ஆசிரியர் பெயர் வைப்பதில் வேண்டுமென்றே கையாளும் இந்த யுக்தியின் நோக்கமும் இந்த விலகலுக்காகவா என்ற கேள்வி எழுகிறது. ‘மாய யதார்த்தம்’ என்ற கதையில் தாயார் பெயர் சூர்யகுமாரி. இரண்டு மகள்களின் பெயர்கள் சந்திரகுமாரி, பூமிகுமாரி.

2013ல் வந்த ‘நடன மங்கை’யில் தான் ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதோ இன்றைய தேதி 16/10/17 அன்று எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று தேடிவிட்டேன். 12 சிறுகதைகள் கொண்ட ‘இடப்பக்க மூக்குத்தி’ என்ற தொகுப்புதான் வந்திருக்கிறது. ஏற்கெனவே சொன்னபடி கதையிலிருந்தும், விவரிக்கும் முறையிலிருந்தும் எழுத்தாளர் வாசகனை கொஞ்சம் தள்ளி நின்று பார்க்க வைக்கிறார். விவரணைகளில் அதிகம் உரையாடல்கள் இருப்பதில்லை. உரையாடல் நிகழுமிடங்களில்கூட அறிக்கையாக மாற்றிச் சொல்லப்படுகிறது. மேலும், அநாவசிய விவரிப்புகள் இல்லாத காரணத்தால், வரிக்கு வரி கதையின் காலகட்டம் வேகமாக நகரும் வண்ணம் உள்ளது. உண்மையில் இவரது நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கணத்தில் மின்னலாய் வெட்டும் நினைவுகள், பயம், ஆர்வம், ஆசைகள் நீண்டு விரிந்து பின் மனமெனும் பெட்டிக்குள் வந்து அடைகின்றன. ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பில் முதல் கதை ‘திரை’. ஒரு திருமணமான பெண்ணுடன் விடுதியில் தங்குகிறான் குமார். இருவரும் ஒருவருக்காக ஒருவர் பாவனைகளால் நடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண் பார்வதி அவனைப் போல ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிறாள். குமார் அது சரிவராது, அப்படி ஒரு குழந்தை பிறந்தால் தான் அதைப் பிரிந்து இருப்பது சிரமம்; மேலும், தன்னுடைய குழந்தையை உரிமை கொண்டாட முடியாமல், அந்தக் குழந்தைக்கு இன்னொருவர் தகப்பனாய் இருப்பதில் தனக்கு உடன்பாடில்லை, என்கிறான். அது அவளுக்குச் சங்கடம் தராதா, என்ற கேள்விக்கு பார்வதியிடம் பதிலில்லை. ஜன்னலை மறைத்துத் தொங்கும் திரை விலக, பார்வதியின் கணவன் வருகிறான். குமாரை வரச் சொல்கிறான். இருவரும் வெளியேறி நடக்கிறார்கள். சாலைகள், தெருக்கள் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள். குமார் தன்னை அவள் கணவன் தாக்கக்கூடும் என்றும் அதற்குத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறான். தன்னுடைய எண்ணங்கள் அவனுக்குத் தெரியுமோ, தெரிந்தால் எப்படி நடந்து கொள்வது என்று யோசிக்கிறான். இது அவனை அயற்சியடைய வைக்கிறது. நடந்து நடந்து அவர்கள் வந்த இடத்துக்கே வருகிறார்கள். பார்த்தால் அருகில் அவள் கணவனைக் காணோம். சோர்வுடன் அறைக்கு வருகிறான். திரை வெறுமனே ஆடிக் கொண்டிருக்கிறது.

‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பிலுள்ள ‘பிம்பங்கள்’ என்ற கதையையும் இந்த வகையில் சேர்க்கலாம். வெறும் பாவனைகளாலும், ஜோடனைப் பேச்சுக்களாலும் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதன் சாத்தியங்கள், அப்படிச் செய்யாமல் பத்தோடு பதினொன்றாக இருப்பதின் பகற்கனவுகள் விவரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பாத்திரத்தின் பெயர் சந்திராஜித். (எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு பெற்றோர் வைத்த பெயர் சுரேஷ் சந்திரகுமார். அலுவலகப பெயர் சுரேஷ்குமார்). ஒரு மசாலா படம் பார்த்துவிட்டு சிகரெட் குடித்துக் கொண்டிருப்பவனுக்கு காவியுடை நினைவுக்கு வருகிறது. காவியுடை அணிந்தபடி பங்களாக்கள் நிறைந்த தெருவில் நடக்கிறான். ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டில் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது, அதுதான் தன்னை நோக்கி இழுத்து வந்தது என்று சொல்ல, அங்கிருக்கும் பெரியவர் ஆறு வயதில் இறந்த தன் பேத்தியை தெய்வமாக வழிபடுவதாகச் சொல்கிறார். அதைப் பார்க்க சந்திராஜித் சுவாமிகள் கேட்டு உள்ளே சென்று பூஜையறையில் தியானிக்கிறார். அந்தப் பேத்தி பார்வதியின் அம்சம் கொண்டவள் என்று சொல்லி பூஜை செய்கிறான். குடும்பத்தினர் பரவசத்தில் இருக்கின்றனர். அங்கேயே சாப்பிட்டுவிட்டு, அந்தப் பெரியவரின் காரில் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் சுவரொட்டிகளைப் பார்த்தபடி வருகிறான். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், கூலிங் கிளாஸ், கையில் சிகரெட்டுடன் ஒரு பங்களாவுக்குள் நுழைகிறான். தன்னை கன்னட நடிகர் என்றும் தனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதும் இரசிகையைத் தேடி வந்திருப்பதாகவும் சொல்கிறான். அங்கிருக்கும் பெண்ணும் அவள் கணவனும் அவனுடன் ஆவலுடன் உரையாடுகிறார்கள். தனது சினிமா வாழ்க்கை குறித்துப் பேசுகிறான். அவர்களுக்கு பெரிய நடிகருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதில் ரொம்பவே சந்தோஷம். குளிர்பானம், இனிப்பு சாப்பிட்டுவிட்டு வெளியேறுகிறான். வழியில் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதுடன் கதை முடிகிறது.

தமிழ் சேனல்களை இரண்டிரண்டு நிமிடங்களாகப் பார்ப்பது போன்ற தோற்றம் தரும் சிறுகதை ‘அறிக்கை’. துண்டுச்சிதறல்களாக விழும் காட்சித் துணுக்குகளை கொலாஜ் (Collage) தொகுப்பைப் போல் கட்டி அதன் அபத்தத்தைச் சுட்டி நிற்கிறது இந்தக் கதை. ஓர் அஜீரணம் பிடித்த ஊர்வன வகை ஜந்துவைப் போல வருடங்கள் நெளிகின்றன. சினிமாவைத் தின்று சினிமாவை வெளியேற்றுகிறது அது. யாருக்கென்றே தெரியாமல் வாசிக்கப்படாமல் பழைய புத்தகக்கடைக்கு எடைக்கு எடுத்துச் செல்லப்படும் கவிதைத் தொகுப்புகளைப் போல பொருளாதார அறிக்கையை குப்பைக்கூடையில் அள்ளித் திணிக்கிறான் குப்பை பொறுக்குபவன்.

இவரது சிறுகதைகளின் களங்கள் பல்வேறு விதமானவை. திருடர்களும் அவர்களின் வாழ்வியலும் அடிக்கடி வருகின்றன. அறம் என்பதோ, நீதி என்பதோ எங்கும் திணிக்கப்படுவதில்லை. திருடர்களின் குழந்தைப் பருவத்தை இலேசாய் கோடிகாட்டிச் செல்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அதிலுள்ள பிசகு மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘பறக்கும் திருடனுக்குள்’ என்ற சிறுகதையில் வரும் மஞ்சக்காளைக்கு தாய் யாரென்று தெரியாது. சொந்தமில்லாத ஒரு குஷ்டரோகியான தாத்தாவின் பராமரிப்பில் வளர்கிறான். அவர் ஒரு சிறுமியின் போட்டோவைப் பார்த்து அவ்வப்போது கண்ணீர் விடுகிறார். அவரது காலத்துக்குப் பிறகு அந்த போட்டோவை மஞ்சக்காளை வைத்துக்கொள்கிறான். திருட ஆரம்பிக்கிறான். அந்த போட்டோவை மண்ணுக்குள் புதைத்து வைக்கிறான். போலீஸில் பிடிபட்டு அடிபடும்போது, அம்மா என்று அலறும்போது, அந்தப் புகைப்படச் சிறுமியின் பிம்பம் மனதில் எழுகிறது. யார் கடவுள்? யார் அம்மா? இங்கே மனதுக்கு மனமே சமாதானமளிப்பதாய் இருக்கிறது.

‘அவரவர் வழி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘பங்குப் பணம்’ என்ற சிறுகதையும் திருமலை நம்பி என்ற திருடனைப் பற்றியதுதான். இதிலும் சிறு வயது வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தாயும் தகப்பனும் திருட்டுத் தொழில் செய்து சிறைக்குப் போனதால், பள்ளிக்கூடத்தில் இவனையும் எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஒருமுறை ஒரு பிள்ளையின் கலர் பென்சில் டப்பா காணாமல் போய்விட, செய்யாத குற்றத்துக்கு பிரம்படி படுகிறான்.

இந்தத் தொகுப்பின் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை ‘அவரவர் வழி’. வேறொருவரை மணம் முடித்துக் கொண்ட இரண்டு காதலர்கள், இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் ஓர் இரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகள் உண்டு. கடந்த காலமும் எதிர்காலமும் எல்லை தெரியாத துக்கக் கடலாய் கிடக்கிறது. நிறுத்தம் வந்தவுடன் இறங்குகிறார்கள். அவர் அவளது பின்புறத்தில் தட்டுகிறார். அவரை முன்னே செல்லவிட்டு அவளும் தட்டுகிறாள். இருவரும் சென்றுவிடுகிறார்கள்.

இந்தத் தொகுப்பில் பிற எந்தக் கதைகளும் மனதில் ஒட்டவில்லை. இதில் ‘புதிர் வழிப் பயணம்’ என்ற கதை ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது. சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் ஒருவனின் மீது, வானத்தில் பாம்பைத் தூக்கிச் சென்ற பருந்து அதைத் தவறவிட்டதால், அந்த சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவனின் மேல் விழுந்து தீண்டி அவன் இறந்துவிடுகிறான். இந்தத் தற்செயலின் ஒழுங்கின்மையில் உள்ள கச்சிதமான ஒழுங்கு எழுத்தாளரைத் தொந்தரவு செய்வதை உணர முடிகிறது. 2014-ல் தமிழ் இந்துவில் வந்த அவரது பேட்டியிலும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இவரது நாலைந்து கதைகளில் இந்தத் தற்செயலின் அபூர்வத்தைச் சொல்லியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இதற்கு உதாரணமாய் இன்னொரு கதை இருக்கிறது, ‘ஒரு காதல் கதை’.

2012ல் வெளியான ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுப்பு முந்தைய தொகுப்புகளின் அறிக்கைத்தன்மை (passive)-யிலிருந்து விலகி நேரடியாய் கதை சொல்கின்றன. ‘நானும் ஒருவன்’ என்ற தலைப்பிலான சிறுகதையில் சண்டையில் ஆர்வமுள்ள, சண்டை உருவாகும் கணத்தை உள்ளுணர்வால் அறிந்து சண்டை உக்கிரமாகும்போது பரவசமடையும் ஒரு போக்கிரியைப் பற்றிய கதை. சண்டைகளின் மூலம் பேர் வாங்கி, ஒரு பெரும்புள்ளியிடம் வேலைக்குச் சேர்ந்து முன்னேறி, வாழ்க்கையில் ஒரு நிலையை அடைபவனைப் பற்றியது. கத்தியெடுத்தவனுக்குக் கத்தியால் சாவு என்ற பழமொழியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நாம் அன்றாடம் சந்திப்பவர்களிலும், அரசியல்வாதிகளிலும் இத்தகையவர்களைத்தானே அதிகமும் பார்க்கிறோம்? வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அறம்சார் விழுமியங்களின் நிலை இன்று கேள்விக்குறியதாகிறது. இதே போன்ற வாழ்க்கை அபத்தத்தையும், அறம் குறித்த கேள்வியையும் எழுப்பும் இன்னொரு கதை ‘உறையிட்ட கத்தி’. அம்மாயில்லாத குடும்பம். மகனுக்குத் திருமணமாகி விட்டது. மகள் ஓர் அடாவடியான பேர்வழியைக் காதலிக்கிறாள். அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மகள் பிடிவாதம் பிடிக்க, மருமகளும் காதலுக்கு ஆதரவு தெரிவிக்க, அம்மா இல்லாத பெண் பிள்ளையின்மீது ஏற்பட்ட பரிவில் அவரும் சரியென்கிறார். திருமணத்திற்குப் பிறகு மகளுக்கு நிறையப் பிரச்சினைகள் வருகின்றன. மகளை மாப்பிள்ளை வீட்டில் அடித்து அவளை ஆசுபத்திரியில் சேர்க்கிறார்கள். என்னவென்று கேட்கப் போன மகனுடன் தகராறு ஏற்பட்டு அவனைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார்கள். மகளும் கொஞ்ச நாளில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மருமகள் வயிற்றில் குழந்தையிருக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே வெளியே வந்துவிடுகிறார்கள். அப்பனுக்கு மாப்பிள்ளை வீட்டாரைப் பழிதீர்க்க வேண்டுமென்று இருக்கிறது. மருமகள் தடுக்கிறாள். மாப்பிள்ளை வீட்டாரின் அடாவடிக்கு அவர்களுக்கு நல்ல சாவு வராது, சீரழிவார்கள் என்று நினைக்கிறார். ஆனால் மருமகள் வயிற்றில் கருவோடு ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறாள். தகப்பன் கையில் பாதுகாப்புக்கு எப்போதும் ஒரு கத்தியை வைத்திருக்கிறார். குளிக்கும்போதுகூட கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது அது. இந்தக் கதையில் அந்தக் கத்தி யாருக்கு எதிராக, எதிலிருந்து காத்துக்கொள்ள வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

இந்த வாழ்க்கை அபத்தமும், அறமின்மையும் ஒருவகையில் முன்பு சொன்ன அந்த சைக்கிள் ஓட்டுபவனின் மீது பாம்பு தீண்டிய சம்பவத்தோடு நுட்பமாய் தொடர்புறுகிறது. இதிலுள்ள ‘மூன்று பெண்கள்’ என்ற சிறுகதையும் இதற்கு உதாரணமாகலாம். இதில் கோடியில் ஒன்றாய் நிகழும் அதிசயம், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டமாக வெளிப்படுகிறது. ஆறு தலைமுறையாக வாரிசு இல்லாமல் போகிறது ஒரு குடும்பத்தில். இந்தப் பிரச்சினையால் அந்தப் பெண்ணை யாரும் மணமுடிக்க முன்வரவில்லை. திருமண வயதைக் கடந்து முதிர்ந்த பெண்ணை 40 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்கிறார். அவர்களும் தத்தெடுக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற கணவன், பூமி அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருப்பதே ஒரு தற்செயல் என்பது போல இதுவும் ஒரு தற்செயல் என்கிறான்.

ஒரு நாத்திகரின் பார்வையோடு ஆண்டாளின் வாழ்க்கையை வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘ஒரு திருமணம்’. முன்பு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளநிலை பாடத்திட்டத்தில் எழுத்தாளர் டி. செல்வராஜ் எழுதிய ‘நோன்பு’ என்ற சிறுகதை சேர்க்கப்பட்டிருந்தது. அந்தக் கதையில் ஆண்டாளை தாசிமகளாக அதில் சித்தரித்து பிரச்சினையைக் கிளப்பியது. சுரேஷ்குமார இந்திரஜித் நைசாக தப்பித்துக் கொண்டார். ஆண்டாளின் தாய் பேசிக்கொள்வதுபோல இரண்டு வரிகள் வருகின்றன. ஆனால் அதை வைத்து தாசியினம் என்று சொல்லலாம் அல்லது மறுக்கலாம். (‘என் வாழ்வு அவளைப் பீடிக்கக் கூடாது. என்னைப்போல் அலைக்கழியக் கூடாது என்றுதானே நான் அவ்வாறு செய்தேன்’). மற்றபடி ஆசிரியர் ஆண்டாளின் பாடல்களில் மனம் உருகியிருப்பதை உணர முடிகிறது. கதை முடிவில், ஸ்ரீரங்கத்துக்கு அரங்கரை மணம் செய்துகொள்ளக் கிளம்பிச் செல்லும் 15-16 வயது நிரம்பிய ஆண்டாள், எங்கே அரங்கர் தனக்குக் காட்சி தராவிட்டால் அவமானமாகப் போய்விடுமே, அது அரங்கருக்கு இழுக்கே என்று எண்ணி, விசமருந்தி விடுகிறாள். கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து உடலெல்லாம் நீலம் பாரிக்க இறந்து கிடக்கிறாள். நீலவண்ணன் அவளை ஆட்கொண்டுவிட்டதாக ஊரார் போற்றுகிறார்கள் என்று முடிகிறது கதை.

இந்தத் தொகுப்பிலுள்ள ‘மினுங்கும் கண்கள்’ நல்ல சிறுகதை. இரக்கம் என்ற பெயரிலான பாவனையை, சுய ஏமாற்றை மின்னல் வெட்டைப் போலப் பிளந்து காட்டுகிறது. அதே போல ‘அந்த மனிதர்கள்’ என்ற சிறுகதையும் குறிப்பிடத்தக்கது. சந்திரன் என்னும் அடியாளைப் பற்றிய கதை இது. இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டையில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இருவரை வெட்டுவதற்காக வேனில் கிளம்புகிறார்கள். போவதற்கு முன் வரும் வழியில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பின் கோஷ்டியினருடன் அரிவாளுடன் வெட்டுவதற்குத் தயாராகிறான் சந்திரன். மனிதாபிமானத்துக்கும், கூலிக்குக் கொலை செய்வதற்கும் இடையில் உள்ள கோடு எங்கே சந்திரன் வரைந்து கொள்கிறான்?

2013-ல் வந்த ‘நடன மங்கை’ தொகுப்பில் ‘வீடு திரும்புதல்’ என்ற சிறுகதை இவரது சிறந்த படைப்புகளுள் ஒன்று. திருமணமாகி எட்டு மாதத்தில் இறந்துபோகும் கணவனின் வீட்டைவிட்டு தாய் வீட்டுக்குக் கிளம்பும் பெண்ணைப் பற்றியது. கடந்தகாலத்தைவிட மிகக் கனமாக எதிர்காலம் வந்து உட்கார்ந்துகொள்வதை சித்திரமாய்க் காட்டுகிறது. இது தவிர எந்தக் கதையும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. இதில் ‘புன்னகை’ என்ற சிறுகதை திராவிடர் கழக இதழில் வேண்டுமானால் வெளியிடலாம். அப்பட்டமான பிரச்சாரக் கதை. ‘கால்பந்தும் அவளும்’ மற்றும் ‘எழுத்தாளன், நடிகை, காரைக்காலம்மையார்’ இரண்டும் முன்பு சொன்ன அந்த விதியின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட கதைகள்.

சுரேஷ்குமார இந்திரஜித் யதார்த்த உலகில், யதார்த்த சமூகத்தில் உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை, மாயம் காட்டும் அகவுலக யதார்த்தங்களை, அதன் பிரதிபலிப்புகளை புனைவு வெளியில் நிகழ்த்துகிறார். ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பில் மிகச் சிறப்பாக இத்தன்மை கொண்ட கதைகளைக் காணலாம். Passive narration மூலமும், குழப்பமூட்டும் ஊர்ப்பெயர்கள் மற்றும் கதை மாந்தர்களின் பெயர்கள் மூலமும் வாசிப்பவருக்கும் கதைக்கும் நடுவே இடைவெளியை உருவாக்கி, வாசகரின் உணர்வுப்பூர்வமான அணுகலைத் தடுக்கிறார். ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுதியில் சில கதைகள் மட்டும் இதை மீறியிருக்கின்றன. கதைகளுக்கான உத்திகளை அந்தந்தக் கதைகளே தீர்மானிக்கின்றன என்று எழுத்தாளர் சொன்னாலும், தனக்கென எழுத்து முறையில் தனி பாணியை கைக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. உளவியல் ரீதியாக அலசுதல், புரிந்துகொள்ள முயலுதல், அற விழுமியங்களற்று வாழ்வின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை, நிதானத்துடன் ஒருவித விலகலோடு அவதானித்து முன்வைப்பவையாக இவரது படைப்புகள் உள்ளன.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.