சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா

நரோபா

மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும் கூட.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப்பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்டு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.

அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.

மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.  அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை  பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.

“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா?” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதாகை குழுவில் ஏற்றினேன்.

பேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்கு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா?” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா?” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார். ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்

வீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேரம் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டேன் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா?” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா?” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.