தர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் – நரோபா

நரோபா

 

 

பதாகை சிறப்பிதழுக்காக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய மதுரை இல்லத்தில் சந்தித்து ஒரு நாள் முழுக்க உரையாடினேன். சிறு சிறு ஒலிக் கோப்புகளாக ஏறத்தாழ 200 நிமிட உரையாடலை பதாகை நண்பர்கள் பிரித்துக்கொண்டு அப்படியே தட்டச்சு செய்தோம். பேச்சுத் தமிழில் இருந்த நேர்காணலை முழுக்க எழுத்துத் தமிழிற்கு மாற்றுவது மிகுந்த நேரத்தை எடுத்துக் கொண்டது. இப்படி மாற்றும்போது கூடுதல் கவனம் தேவை, எழுத்தாளரின் தனிமொழியையும் இழந்துவிடக்கூடாது. 112 பக்கங்கள் நீண்ட நேர்காணல் திருத்தங்களுக்குப் பிறகு சுமார் 80 பக்கங்களுக்கு வந்தது. அவரளித்த மிக நீண்ட பேட்டி.

மின் அஞ்சல் வழி நேர்காணல்கள் சில செய்திருக்கிறேன். ஒப்பீட்டளவில் அது சுலபமும்கூட. சரியான கேள்விகளை கேட்டுவிட்டு பொறுப்பை எழுத்தாளரிடம் விட்டு விடலாம். எழுத்தாளரே நேர்காணலின் தன்மைக்கு பொறுப்பு. கவனத்துடன் பொறுமையாக பதில்களை செம்மைப்படுத்தி அனுப்புவதற்கு போதிய இடைவெளி இருக்கும். ‘புதிய குரல்கள்’ பகுதியில் வந்த ஐந்து நேர்காணல்களுமே எழுத்தாளர்களின் முனைப்பால் நல்ல நேர்காணல்களாக அமைந்தன. எழுத்தாளரை நேரில் சந்தித்து உரையாடி அதை நேர்காணலாக பதிவாக்குவதில் இருவரின் பங்களிப்பும் உண்டு. சரியான கேள்விகள் எழுப்ப வேண்டும், சரியான திசை நோக்கி உரையாடலைக் கொண்டு செல்லவும் வேண்டும். அவ்வகையில் என்னளவில் இது நிறைவான நேர்காணலாகவே வடிவெடுத்துள்ளது. ஒருவேளை சில பகுதிகள் சுணக்கமாக இருந்தால் அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்.

முன்னரே சுரேஷ்குமார இந்திரஜித் பல நேர்காணல்கள் அளித்துள்ளார். அதில் பேசப்பட்டவை சிலவும் இந்த நேர்காணலின் ஊடாக விவாதிக்கப்பட்டன. அவருடைய இளமைக் கால நினைவுகள், ஆதர்சங்கள், எழுத்தாளரானதின் உந்து சக்தி, அவருடைய இசை ஆர்வம் என பலவற்றை தொட்டுச் செல்கிறது உரையாடல். மிக முக்கியமாக, அவருடைய படைப்புவெளியை, கதைகள் உருவான கதையை சுவாரசியமாக ஆவணப்படுத்துகிறது. சந்திப்பின் கதையை தனியாக சிறிய கட்டுரையாக எழுதிவிட்டதால் மேலும் நீட்டி முழக்க விரும்பவில்லை. இந்த நேர்காணலுக்குப் பின்னும்கூட முழுமையாக உரையாடி முடிக்காத ஒரு நிறைவின்மையே எஞ்சி இருக்கிறது.

Image result for rameshwaram temple

 நரோபா– உங்கள் இளமைக் கால ராமேஸ்வர வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது? அங்கிருந்த மனிதர்கள் பற்றிய நினைவுகள்?

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் தீது அறிந்தவர்கள். சின்னச் சின்ன விஷயங்கள்தான். பெரிய குற்றங்கள் புரிபவர்கள் அல்ல. நான் எட்டாவது படித்தபோது, தோழர்கள் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது வகுப்புக்களில் இருந்தார்கள். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல், பசங்கள் எல்லாம் சேர்ந்து அங்கு போய் சீட்டு விளையாடுவோம். அது ஒரு பழக்கம். அப்போது வீட்டு வாடகைத் தொகை ஐந்து ரூபாயை எல்லாரும் சேர்ந்து பகிர்ந்து கொள்வார்கள். ராஜ கோபுரத்தை விட்டு விடலாம், அதைத் தவிர்த்து சிறிய கோபுரங்கள் உண்டு. கோவிலின் மேல் தளத்திற்கு சென்று விட்டால் சிறிய கோபுரங்களின் வாசலுக்குள் சென்றுவிடலாம். சிமிண்டு தரை. ஒரு மாதிரியான காற்று. இப்போது நினைத்தால்கூட புல்லரிக்கிறது. அங்குதான் எல்லா பசங்களும் கூடுவார்கள். தீப்பெட்டி ஒளித்து வைத்திருப்பார்கள். சிகரெட் மட்டும் வாங்கிச் சென்று பிடிப்பார்கள். எட்டாம் வகுப்பிலேயே எனக்கு சிகரெட் வழக்கம் வந்துவிட்டது. வெளியேயும் குடிப்பார்கள். ஆனாலும் அந்த குளிர்ந்த தரையில், பயங்கரமான காற்றில், அந்த இடத்தில் அமர்ந்தும் படுத்தும் குடிப்பதில் ஓர் ஆர்வம் இருந்தது. இதெல்லாம் சேர்ந்து புனிதம் என ஒன்றில்லை என உணர்த்தியது.

நரோபா– நீங்கள் இவற்றைக் கூறும்போது, சீட்டாட்டம், ஏமாற்றும் மனிதர்கள் போன்ற உங்கள் கதையின் கருப்பொருட்களின் தாக்கத்தை இங்கிருந்து பெற்றதாக கூறலாமா?

சுரேஷ்– எதற்காக இதை எல்லாம் சொல்கிறேன் என்றால், நான் ஒழுங்கான அமைப்பில், நல்லவர்களை கண்டு பழகி பார்த்து வளர்ந்த ஆள் இல்லை. தீதுகளும் அறிந்த ஆட்களோடு பழகியவன். ஆகவே தீதுகளை நன்கறிவேன். நகரத்தில் நாமறிந்த உறவினர்கள், நண்பர்கள் என ஒத்தவர்களோடு பழகி வளர்வது என்பது வேறு. இங்கு வளர்வது என்பது வேறு.

இங்கு எதுவுமே புனிதமில்லை என்பதை உள்ளூர்க்காரன் அறிவான். ஆனால் அவனும் கடவுளை வணங்குவான். அது வேறு விஷயம். ஆனால் அவன் நன்கறிவான். ஒரு ஆள் அறிமுகம் ஆகிறார் என்றால் பார்த்தவுடனே அவரை நம்ப மாட்டார்கள். அவன் தோற்றத்துக்குப் பின்னாடி ஏதோ ஒரு சூது இருக்கும் என்று முதலிலேயே முடிவு செய்து விடுவார்கள். அதையும் மீறி எவனாவது ஒருத்தன் வந்தான்னா செத்தான்.

நரோபா– உங்களுக்கு ராமேசுவரத்துல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ரொம்ப வினோதமான நினைவுகள், நிகழ்வுகள் ஏதும் உண்டா?

சுரேஷ்— எனக்கு இந்த அனுபவங்கள்தான் பெரிய அனுபவங்களாக இருந்தன. நான் அங்கு இருந்தது நான்கு வருடங்கள்தான். ராமேஸ்வரத்தில் நான் தங்கியிருந்த நாட்களில் கிடைத்த அறிவு, படிப்பினை, ஞானம், இவையெல்லாம்தான் ரொம்ப முக்கியம் என்று நான் நினைக்கறேன்.

நரோபா– இப்போது அந்த நண்பர்கள் எல்லாம் தொடர்பில் உள்ளார்களா?

சுரேஷ்— தொடர்பில் யாரும் கிடையாது.

நரோபா– ராமேஸ்வரத்துக்குச் செல்வது உண்டா?

சுரேஷ்– பணி ஓய்விற்குப் பின் ராமேஸ்வரத்துக்கு சென்று வந்தேன். பின்னர் என் உறவினர்களோடு சென்று வந்தேன். பூர்வீக வீடுகளையும், தெருவையும், பழைய மனிதர்களையும் பார்த்தோம்.

நரோபா– இத்தனை ஆண்டுகளில் நீங்கள் இடையில் சென்றதே இல்லையா?

சுரேஷ்– சொந்த வாழ்வில் எனக்குச் சில கசப்புகளையும் மனக் கஷ்டங்களையும் தந்த ஊர் அது. அந்த ஞாபகங்களைப் புதுப்பித்து கொள்வதில் ஒரு சில சங்கடங்கள் உண்டு. மேலும் அங்கிருந்த வீடுகளை நாங்கள் விற்றுவிட்டோம். இடையில் ஒரே ஒரு முறை எங்கள் மாமா இறந்தபோது அஸ்தியை கரைப்பதற்கு அங்கே சென்று, சொந்த வீடுகளை ஒரு முறை கண்டுவிட்டு வந்தோம். அவ்வளவுதான்.

நரோபா– ராமேஸ்வரத்திற்குப் பிறகு நீங்கள் கல்லூரிக்கு மதுரை வந்து விட்டீர்கள் அல்லவா?

சுரேஷ்— ஆம், மதுரைக்கு வந்துவிட்டேன். இங்கு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பியூசி படித்தேன். பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அங்கும் அப்படி ஒன்றும் பெரிய அறிவுச்சூழல் நிலவியதாகச் சொல்ல முடியாது, தவறாமல் வகுப்பிற்கு வரும் ஆட்களே மிகக் குறைவு.

நரோபா– சிறார் இலக்கியம், குழந்தை இலக்கியம் படித்து, ஜெயகாந்தன் வழியாக நவீன இலக்கியத்திற்குள் நுழைந்தீர்களா? அலல்து நேரடியாக ஜெயகாந்தன் அறிமுகமா?

சுரேஷ்– எனக்கு ஜெயகாந்தன் ஏற்கனவே அறிமுகமாகி விட்டார். பொம்மை கதையை எனக்கு எங்கள் அண்ணி கூறியபோதே எனக்கு பத்து அல்லது எட்டு வயது இருக்கும்.

ராமேஸ்வரம் சென்றபிறகு எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை. நூலகத்திற்குச் செல்வேன். அங்கு நான் சிறார் புத்தகங்கள் வாசிப்பேன். சங்கர்லால் துப்பறியும் நாவல்கள், அறிவியல் சம்பந்தப்பட்ட நூல்கள் படிப்பேன்- வண்ணத்துப்பூச்சியின் நிறம் ஏன் அப்படி உள்ளது? பூமி ஏன் சுற்றுகிறது? சந்திரன் எப்படிப்பட்டது? இது போல அறிவியல் தொடர்பான விஷயங்கள் படிப்பேன். காமிக்ஸ் படித்ததில்லை. சங்கர்லால் வாசித்தது நினைவிருக்கிறது என்றாலும், மிகுந்த பிரேமையோடு வாசித்தவை அறிவியல் நூல்கள்தான்.

பினனர் ஜெயகாந்தன், நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் குமுதத்தில் ஒரு பக்கம் எழுதிக் கொண்டு இருந்தார். ‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் அது பிற்பாடு புத்தகமாகவும் வந்தது. அது மிக முக்கியமான புத்தகம். என் மனதை வடிவமைத்ததே அந்த புத்தகம்தான்.

எங்கள் அண்ணி தொடர்களாக வருவதை பைண்ட் செய்வார்கள். அப்படி பைண்ட் செய்த நூல்களில் அப்போது நான் வாசித்தவை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாரிஸுக்குப் போ’ போன்றவை… அவர்களுடைய அலமாரியில் நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் ஊருக்குப் போகும்போது விரும்பிப் படிப்பது ‘பாரிஸுக்குப் போ’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. அப்போதெல்லாம் ஆனந்த விகடன் ‘எப்படா வரும்’ என்று இருக்கும். அந்த கதையில் பெரிய திருப்பங்கள் எல்லாம் ஏதுமிருக்காது. ஆனாலும் காத்துக் கொண்டிருப்போம். எந்தக் கிழமை என்று இப்போது நினைவில்லை. அதில் கோபுலு வரைந்த ஹென்றியை எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நான் மட்டுமல்ல, என் அண்ணன் பிள்ளைகள் உட்பட எவருமே ஹென்றியை மறக்க முடியாது. எல்லோருக்குமே அவர் ஒரு பெரிய லட்சிய கதாநாயகர். பெரும் ஆளுமை அவர், நம்மால இருக்க முடியாத, அடைய முடியாத ஆளுமையை அவர் அடைந்திருந்தார். பிறர் எழுதுவது போன்ற பொய்யான நேசம் அல்ல அவருடையது.

நான் ஒரு நட்பைப் பற்றி எழுதுகிறேன் என்றால் அந்த நட்புக்குள் உள்ள பொறாமையைப் பற்றி எழுதுவேன். எனக்கு அதுதான் முக்கியம். அதுதான் கதை என எனக்குத் தெரியும். இதை மறைத்துவிட்டு நீங்கள் அதைப் பார்க்கமுடியாது. அதனுடைய ஒரு அங்கம் இது. இதே போல் ஆண்- பெண் உறவுகளில் பொறாமை இருக்கும், வம்பு இருக்கும், நேரம் பார்த்து நாம் அவர்களை எப்போது தாக்கலாம் என்று மனம் காத்திருக்கும்– உடல் ரீதியாக என்றில்லை, ஆண்– பெண் உறவுகளில், கணவன்- மனைவி உறவில்கூட பயங்கரமான ஒரு வன்மம் இருக்கும். அதற்கு இணையாக நீங்கள் எந்த உறவிலும் காண முடியாது.

நரோபா– உங்கள் கதையில் இப்படியான தருணங்கள் நிறைய உள்ளன.

சுரேஷ்– ஆம். மற்ற உறவுகளில் இல்லாத ஒரு வன்மம் இதில் இருந்துகொண்டே இருக்கும்.

நரோபா– இதற்கு காரணம் இந்திய குடும்ப முறையாக இருக்குமா?

சுரேஷ்– அண்ணி, அத்தை, அக்கா, சித்தி, பெரியம்மா என இந்த மாதிரி உறவுகள் எதனோடும் ஆணுக்கு மோதல் கிடையாது. ஆனால் இவையல்லாமல் ஒரு தோழியாகவும், உடலை பகிர்ந்துகொள்ளக் கூடியவளாகவும் ஒரு பெண் மனைவியாக வருகிறாள். அவளுடன்தான் நமக்கு மோதல் நேர்கிறது. மோதல் என்றால் உடல் ரீதியாக அல்ல, உள ரீதியாக. பெரியம்மா, அத்தை மாதிரியான பிற பெண்கள் அரிதாக வருபவர்கள். அக்கா தங்கைகளுடன் உள்ள உறவு வேறு மாதிரி. ஒரு ஆணிடம் இருக்கக்கூடிய இயற்கையான ஆத்திரம், வன்மம், ஒரு பெண்ணிடம் இருக்கக்கூடிய இயற்கையான ஆத்திரம், வன்மம், இது எல்லாம் மோதிச் சேரும் இடம் இது. இங்குதான் வேற எங்குமே இல்லாத உறவு உள்ளது என்பதை நான் குடும்ப நீதிமன்றங்களில் அன்றாடம் கண்ட நிகழ்ச்சிகள் ஊர்ஜிதம் செய்தன. ஒரு பெண் செருப்பை எடுத்துக்கொண்டு கணவனை அடிக்க ஓடிப் போனதைப் பார்த்திருக்கேன். மற்றவர்கள் கூறுவது போல், கணவன், புல்லானாலும் புருஷன், இப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இப்போது அவனுடைய ‘எக்ஸ்போசர்’ எனக்கு பிடிக்கவில்லை, ஆகவே எனக்கு அவனுடன் வாழ விருப்பமில்லை, என்று சொல்லக்கூடிய பெண்கள் இருக்கக்கூடிய மாறுதலான காலகட்டம் இது.

நரோபா– உங்க கதைகளில் ‘திருமணத்துக்கு அப்பால உறவு கொண்டிருக்கக் கூடிய’ ஆண்கள் எல்லோரும் கண்ணியமானவர்களாக உள்ளார்கள். உறவுச் சுரண்டல் என்றில்லாமல், ஆணும் பெண்ணும் அதை விரும்பி ஏற்பதாக உள்ளது. ஆண்கள் யாரும் அந்தப் பெண்களைக் கைவிடுவதில்லை, சொத்து ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். வேற வேற தொகுப்புகளில் வரக்கூடிய கதைகளைப் பார்க்கும்போது இது ஒரு பொதுத்தன்மை என தோன்றுகிறது. இந்தப் போக்கிற்கு நேரெதிராக “ஆங்கில புத்தகம் படிக்கும் பெண்” எனும் கதை என்று நினைவு, அதில் அவள் தன்னைப் பற்றி நன்றாக சொல்லிக் கொண்டே வருவாள். ஆனால் இறுதியில் “உன்னால எனக்கு குழந்தை கிடைச்சிருச்சு” என்று திருப்பி விடுவாள்.

சுரேஷ்– ‘உன்னால்தான் குழந்தை பிறந்தது’ என்பது ஒரு பொய், அந்த இடத்தில் ஒரு சிறிய திருப்பம் உண்டு. அந்தக் கதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே அது கை மீறிச் சென்றுவிட்டது. பிறகு, கதையில் வரும் அந்த விலைமாது பேசுவது எல்லாம் உண்மையா எனும் சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. நான்தான் எழுதுகிறேன், ஆனால் எழுதிக்கொண்டு இருக்கும்போதே எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இது எல்லாம் உண்மையா எனும் சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. ஏன் என்றால் இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போறது, பேங்களூரில் அவளுக்கு நேரும் கொடுமை, பணம் அனுப்புவது என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வருகிறாள். பிறகு அவள் காரை நோக்கிச் செல்கிறாள், அந்தப் பெண்ணை பார்க்கிறாள். உடனே சொல்லி விடுகிறாள்.. அந்த இடத்தில்தான் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? புத்தகம் கையில் இருக்கிறதா ?

(புத்தகத்தில் கதையைக் காண்பித்து சொல்கிறார் ‘இங்க அவ பொய் சொல்றா’)

நரோபா– இல்லை, நான் வாசிக்கும்போது, இவ்வளவு நேரம் சொன்னது பொய்யாகவும், கடைசியில அவனை நோகடிக்க வேண்டும் எனச் சொல்வது உண்மையாகவும் தோன்றியது… உங்கள் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மனதில் நிற்கின்றன..

சுரேஷ்– அதற்காகத்தானே அப்படி வைப்பதே!

நரோபா– நீலராஜன், நீலச்செல்வி, சூரியகுமாரி, பூமிகுமாரி, சந்திரகுமாரி, ஆல்பிரட் சின்னதுரை- இப்படி பேர் வைக்கிறது எல்லாம் பிரக்ஞைபூர்வ முடிவுகளா?

சுரேஷ்– ஆம். பிரக்ஞைபூர்வமாகத்தான் வைக்கிறேன். எனக்கு ஜோசப் ரத்தினசாமி என்றொரு நண்பர் இருந்தார். இரண்டும் கலந்த பெயர் அது. அதற்கு முன்பே ஜூலியஸ் பால் கரிகாலன் என்று ஒருவர் என்னுடன் பியூசி படித்தார். அவர் தம்பி பெயர் கிளாடியஸ் குலோத்துங்கன். அந்தப் பெயர் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது, மற்றதெல்லாம் மறந்து விட்டது, நேரில் வந்தால்கூட அடையாளம் தெரியாது. இந்தியா டுடே என்று நினைவு, கதைகளில் பெயர் விசித்திரமாக இருக்கிறதே என்று இதைப்பற்றி என்னிடம் கட்டுரை வாங்கிப் போட்டார்கள்..

நரோபா– பெரும்பாலான கதைகளில் பாத்திரங்களைப் பற்றிய வர்ணனை அதிகம் இருக்காது. ஆனால் பெயரே அவர்களுடைய தனித்தன்மையை நிறுவ போதும் என்பதால் இந்த யுத்தி என புரிந்து கொள்கிறேன்.

சுரேஷ்– கிளாடியஸ் குலோத்துங்கன், ஜூலியஸ் பால் கரிகாலன், சூரியகுமாரி, பொய்கைக்கரையாள், இந்த மாதிரியான சில பெயர்கள் கற்பனையைத் தூண்டுது. சில பெயர்கள் மட்டையாக இருக்கும். ராமசாமி மட்டையான பெயர். கிளாடியஸ் குலோத்துங்கன் அப்படியான பெயர் இல்லை. இப்படியான பெயர்களை நான் ஆரம்பத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இடப்பக்க மூக்குத்தி தொகுப்பில் இந்த மாதிரி பெயர்களை விட்டுட்டேன். தொடர்ச்சியாக இதையே செய்துகொண்டு இருக்க முடியாது என்பதால் தவிர்த்து விட்டேன்.

பொதுவாக என் கதைகளில் ஒரு ‘மர்மம்’ இருக்கும். இது பொய்யா நிஜமா, அல்லது, தோற்றம் முக்கியமில்லை, தோற்றத்துக்குப் பின்னால் என்ன? ஜெயமோகன் என்னுடைய ‘இடப்பக்க மூக்குத்தி’ வெளியீட்டின்போது சேதுவின் கதை ஒன்றைப் பற்றி கூறினார். வரைபடம் இருக்கிறது, ஆனால் அந்த வரைபடத்தின் வழியாக நீங்கள் போய்ச் சேரும் இடம் என ஒன்று இல்லை. வாசகர்கள் அவரவருக்கு வேண்டிய இடத்தை கண்டடைகிறார்கள். இப்படிப்பட்ட கதைகளைப் பொறுத்தவரையில், ஒரு வரைபடத்தை அளிப்பதே என் வேலை. அது இந்த இடத்துக்குத்தான் போய்ச் சேரும் என்பது எனக்கே திட்டவட்டமாக தெரியாது. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவரின் அனுபவத்திற்கும், இயல்பிற்கும், வாசக பரப்புக்கும் உகந்தது போல் ஓரிடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த “இடப்பக்க மூக்குத்தி” கதையை, அல்லது இந்த “காமத்தின் வாள்”, “உருமாற்றமும் சாமியாரும்”, கதையை எடுத்துக் கொள்ளுங்கள், அவரவர் அவரவருக்கு தகுந்த மாதிரி அந்த இடத்தை அடைகிறார்கள். நான் அந்தக் கதையில என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை நுட்பமாக வாசிக்க வேண்டும். பெரும்பாலும் நாம் நுட்பங்களை கவனிப்பதில்லை. அந்தக் கதையில ஆழ்ந்த ஒரு ரகசியம் உள்ளது என்று கூறியுள்ளேன். முதல் பத்தியில் அந்தப் பெண்ணுக்கு பிராமணப் பெண்ணின் சாயல் இருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேன். இது எல்லாம் என்னவென்றால், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களின் உள்ளக் கிடக்கையினுடைய ரகசிய வேட்கையின் பிம்பம்தான் அது. இதைதான் நான் சொல்ல வருகிறேன். ஆனால் வாசிப்பவர்களுக்கு அது என்னவாக உள்ளது என ஒன்றும் சொல்ல முடியாது. இப்போது நான் உங்களுக்கு ஒரு வரைபடம் வரைந்து கொடுத்துவிடுகிறேன், உள் சென்று நீங்கள் ஒரு இடத்தை அடையலாம். நீங்க எதை அடைந்தாலும் அதற்கு நியாயம் உள்ளவகையில்தான் இந்தப் பாதை இருக்கும.

நரோபா– உங்கள் பெரும்பாலான கதைகள் ‘திறந்த முடிவோடு’ தான் இருக்கின்றன.

சுரேஷ்– இப்படியும் ஆகலாம், அப்படியும் ஆகலாம், பொய் சொன்னாளா இல்லையா? இப்போது நீங்கள் சொன்னீங்க இல்லையா, ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’ கதை, அவள் உண்மை சொல்கிற மாதிரி நினைத்துப் பார்த்தாலும் அது வேறு மாதிரிதான் உள்ளது. ஒரு பொய் சொல்வோமே என்பதாக பொய் சொல்லி, போகிற போக்கில் இவனைக் காயப்படுத்த வேண்டும் என்று அவளுக்கு தோன்றியிருக்க வேண்டும். இதுதான் மனதினுடைய உட்கிடக்கை என்பது. பழகிக்கொண்டே இருப்பார்கள். நண்பர்களுக்குள் தண்ணியடிக்கும்போது தகராறு ஏற்பட்டு ஒருத்தனை ஒருத்தன் கொன்றுவிடுவான். அந்த நேரத்தில் மட்டுமா அந்த வன்மம் இருந்திருக்கும்? ஆசிரியன் அதன் உட்கிடக்கை கண்டுபிடிக்க வேண்டும். அவளுக்கு என்ன தோணியிருக்கும் என்றால், இவனை கஷ்டப்படுத்தி அதிர்ச்சி அடையச் செய்ய வேண்டும். ஆனால் அந்த ‘ஆங்கில புத்தகம் படிக்கும் பெண்’ யாரென்பது ஒரு மர்மம். அது இவளுக்கும், இவளை வைத்து பராமரிக்கிறாரே, அவருக்கும் உண்டான பெண்ணா, அல்லது, அந்தப் பெண்ணிடம் இவள் வேலை பார்க்கிறாளா, இவளுடைய நிறுவனத்தில் அவள் வேலை பார்க்கிறாளா… எதுவுமே தெரியவில்லை.

ஏன் இந்த மர்மம் உருவாகிறது என்று ஒரு கேள்வி வரும். ஊகிக்க, கற்பனை செய்ய, வாசக வெளியை நான் அளிக்கிறேன். இன்னொருவர் அவளை பராமரிப்பவரின் மகள் என்று எண்ணலாம், அல்லது மகனாக வந்து திரும்ப காப்பாற்றுபவரின் மனைவியாக இருக்கலாம், அல்லது உண்மையாவே இவரோட குழந்தையாகக்கூட இருக்கலாம்.

ஏன் இந்தக் கதையில் இத்தனை பொய் வருகிறது என்றால் விலைமாதர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதையை சொல்வார்கள். பெரும்பாலும் ஒரேசாயல் இருக்கும். வருகிறவன் என் கதையை விரும்புகிறான் என்பதை அவர்களின் உள்ளுணர்வு காட்டிவிடும். அதற்குகந்த கதைகளை ஜோடிப்பார்கள். நாளடைவில் இக்கலையில் நன்றாக தேறி விடுவார்கள்.

ஒரு முறை, ஜெயமோகனும் ஒரு இயக்குனரும் ஒரு இடத்திற்குச் சென்று பேசுவார்கள். அந்த இயக்குனர் இவள் வறுமையில் உழன்று இந்த நிலைக்கு வந்தாள் என்று நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால் அவள் அப்படிச் சொல்லாமல் விருப்பத்தினால்தான் வருகிறேன் என்பதாக சொல்வாள். எழுதுகிற எல்லாவற்றிலுமே பெருமளவுக்கு உளவியல் கூறுகள் உள்ளிருந்து கொண்டே இருக்கும்.

‘கணவன் மனைவி’ என்ற கதையில் நிர்பந்தப்படுத்தி ரோஜாப்பூ என்ற ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான். பிறகு அவனுக்கு வாதம் வந்துவிடும். அப்போது அவள் அவனை பழிவாங்குவாள். பராமரித்தாலும் அவனால் ஏற்பட்ட வதைகள், தன்னுடைய வாழ்வை இந்த வயோதிகனுக்கு கொடுத்து விட்டோமே என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும். வயதானவர்களுடன் உள்ள சிக்கல் என்னவென்றால், வயதேற வயதேற அந்த காமத்தை அடைய முடியாது. இயலாமையினால் அவள் மேல் எரிந்து விழுவான். இவனுக்கு அக்குளில் இருந்து வியர்வை நாத்தம் வரும் என்று எழுதியிருப்பேன், அவன் இறந்த பிறகு அந்த வியர்வை நாத்தம் மறைந்தது என்று எழுதியிருப்பேன், இந்த மாதிரி நுட்பங்களை கவனிக்க வேண்டும். அவள் சொல்வாள், ‘நீயும் சென்ட்டு போட்டுக்க, உன் அக்குள் நாத்தம் தாங்க முடியாமதான் நான் சென்ட்டு போட்டுக்கறேன்’, அவன் ‘நீ ஏன் அவன்கூட போற’ எனக் கேட்பான், ‘நான் யார்கூட போனாலும் நீ ஏன் அவன்கூட போறன்னு தான் கேப்ப’ என்று பதில் சொல்லுவாள். கடைசியில் ஏதோ ஒரு ஆத்திரத்தில ஒரு எத்து எத்திவிட்டு சென்று விடுவாள். அவன் இறந்துவிடுவான். பிறகு இவள் அழுவாள். பழைய ஞாபகங்கள் வரும். இப்படித்தான் மனதினுடைய சேர்க்கை மிகுந்த சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. இளம் வயதில் வயோதிகனை திருமணம் செய்து கொள்கிறாள். அவனால் வதைபடுகிறாள். எப்போதெல்லாம் இயலுமோ அப்போதெல்லாம் வதைக்கிறான். இறுதியில் அவனுக்கு முடியாமல் போகிறது. இவள்தான் அவனை பராமரிக்கிறாள். அப்போது அவளுடைய ஆத்திரத்தை தணித்துக் கொள்கிறாள். எத்தனை சிடுக்குகள்!

நரோபா– ஆண் பெண் உறவுகளில், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள் பற்றி உங்கள் கதைகளில் தொடர்ந்து வருகிறது. நிறைய கதைகளில் தோல்வியடைந்த நடிகைகள், பெரிய வாய்ப்பு கிடைக்காத துணை நடிகைகள், இப்படி சினிமா உலகின் வாழ்க்கைகள், சித்தரிப்புகள் உங்க கதைகளில் சிறப்பாக வந்துள்ளது. ‘ரகசிய வார்த்தை’ கதையின் இறுதியில் அந்த பாட்டி எம்.ஜி ஆர் சொல்லிவிட்டார் எனும்போது ஒரு சின்ன சிரிப்பு உள்ளது கதையில். சினிமாவிற்குள் இயங்காமலேயே ஓரளவு சரியாக அவரகளின் உலகை சித்தரித்து உள்ளீர்கள் என சொல்லலாம்.

சுரேஷ்– ‘ரகசிய வார்த்தை’, ‘முற்றுப்புள்ளி’, ‘நிகழ்காலம் இறந்த காலம்’, பிறகு இந்த காரைக்கால் அம்மையார் சம்பந்தப்பட்ட கதை. ஒரு கதை எப்படி உருவாகிறது என்பதைச் சொன்னால் ரொம்ப நூதனமாக இருக்கும். கதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பேன். தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும்போது. அதில் ‘ரங்கு ரங்கம்மா’ என்று பாட்டு பாடிக்கொண்டு, ஒருத்தி நடனமாடுவாள், கர்சீப்பை விசிறியடிப்பாள். உடனே எனக்கு ஒரு கதை உதயமாகிவிட்டது.

நரோபா– ‘நடன மங்கை’ அதுதானே?

சுரேஷ்– ‘நடன மங்கை’ தான்– கதை வந்து விழுந்துவிட்டது. எந்தக் கதையுமே நான் விரும்பும் போக்கில் சென்றதே கிடையாது. நீர் கீழே கொட்டுகிறது, அது எப்படி போகும் என்று உங்களால் சொல்ல முடியுமா? அதனுடைய போக்கில் செல்லும். எங்கு தாழ்வாக உள்ளதோ அங்கு செல்லும். அதே மாதிரி, எழுத ஆரம்பித்ததிற்கு பிறகு எப்படிச் செல்லும் என்றே தெரியாது. முன்முடிவு என்பதே கிடையாது. வெகு சில கதைகளுக்குதான் முன்முடிவு இருக்கும்.

இவன் அந்தப் பெண்ணைக் கண்டவுடன் அவளை ‘புக்’ செய்வதற்காக செல்கிறான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்கிறான். வேறு வேறு அடையாளங்களை ஏற்கிறான். இவன் நினைக்கும் பெண்ணும் வெவ்வேறு விதமாக இருக்கிறாள். தெலுங்குக்காரியாக, மெட்ராஸ்காரியாக, கிருஸ்தவளாக, பிராமணப் பொண்ணா- இப்படிப் பல மாதிரி அவன் மனதில் தோன்றுகிறாள். கடைசியில் அந்த இடத்துக்குப் போகாமலே சென்றுவிடுகிறான். ஒரு பெண்ணினுடைய தோற்றம் எழுப்பக்கூடிய கற்பனைகளை நான் சொல்ல முயல்கிறேன், அவ்வளவுதான். அப்படித்தான் சொல்ல முடியும். நீங்க இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால் ஒன்றையும் சொல்ல முடியாது. நீ கண்டடைந்து கொள் என்று மட்டும்தான் நான் சொல்ல முடியும்.

நரோபா– எனக்கு ‘நடனமங்கை’ கதையில் அவள் ‘கர்சீப்பை’ தூக்கி வீசுகிறாள் அல்லவா, கதையையும் மீறி அந்த காட்சி மனதில் நின்று விடுகிறது. நீங்கள் சொன்ன பிறகுதான் அந்த பாட்டுடன் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டேன். அந்த செயல் அவனுக்கு கிளர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதை எண்ணி அவன் கிளர்ச்சி அடைகிறான். இந்த மாதிரி ஒரு சில செயலை மட்டும் சொல்லி, மொத்த பிரக்ஞையும் அந்த ஒரு செயலில் அமர்கிறது. இதே போல் மற்றொரு கதையைச் சொல்லலாம். ‘அவரவர் வழி’. இதில் மொத்தமாக இருவருடைய வாழ்க்கை சரிதத்தை சொல்லிட்டு, இருவரும் பின்புறத்தை தட்டிக்கொள்ளும் இடம் என்னை வெகுவாக ஈர்த்தது. அவன் மொத்த வாழ்க்கையும், அந்த ஒரு செயலில், அந்த ஒரு சின்ன சமிக்ஞையில் வந்து முடிகிறது.

சுரேஷ்– அந்தக் கதையைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கதை ரொம்ப முக்கியமான கதைதான். இருவரும் ஒரு காலத்துல காதலர்களா இருந்தவர்கள். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் குடும்ப நெருக்கடி காரணமாகவும் பிரிந்து, இவன் ஒரு வாழ்க்கையில் இருக்கிறான், அவள் ஒரு வாழ்க்கையில் இருக்கிறாள். இருவருக்குமே வளர்ந்த பிள்ளைகள் உள்ளார்கள். ஆனால் இவன் மனதிற்குள் அவளும் அவள் மனதிற்குள் இவனும் இல்லாமல் போய்விடுவார்களா என்ன? இந்த “மாயப்பெண்” கதையில் வயதான ஒருவன், முதல் முதலில் காதலித்த, தொட்டுக்கொண்ட, ஒருத்தியை இன்னும் நினைத்துக்கொண்டு இருக்கிறான். ‘அவரவர் வழி’ கதையைப் பொறுத்த வரையில், அவன் மனதிற்குள் அவளும், அவள் மனதிற்குள் அவனும் இருக்கிறார்கள். ஆனால் அதை இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் மிக ஆர்டிஸ்டிக்காக போய்விடுகிறது. இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் உனக்குள் இருக்கிறேன், நீ எனக்குள் இருக்கிறாய் என்பதை பின்புறத்தைத் தட்டிக் கொள்வதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு இருவரும் அவரவர் வழியில் சென்று விடுவார்கள். ஆனாலும் மரணம் வரைக்கும் இவன் மனதில் அவள் இருப்பாள். ஆனால் இவ்வளவுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பம்.

நரோபா– பாத்திரங்களின் பெயர்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருந்தோம். பாத்திரங்களின் பெயர்கள் அளவுக்கு கதைகளின் பெயர்கள் மனதில் நிற்பதில்லை– ‘உறவு’, ‘சந்திப்பு’, ‘காத்திருந்தவன்’, கதைகளினுடைய பெயர்கள் சாதாரணமாக உள்ளன. இதுவும் ஒரு பிரக்ஞைபூர்வ முடிவா? வாசிக்கும்போது இந்த கதைக்கு வேற பெயர் வைத்திருக்கலாமே என்று கூட தோன்றியது. அதனுடைய படிமமோ அல்லது வேறு ஏதோ ஒன்று அதிலிருந்து மேலெழுந்து வருவது மாதிரி… ’புதுவிதமான செடிகளும் வர்ணப் பூக்களும் செடிகளும்’ ‘காலத்தின் அலமாரி’ ‘மாபெரும் சூதாட்டம்’ என்றெல்லாம் சில கதைகளுக்கு கற்பனையை தூண்டும் பெயர்கள் உள்ளன என்றாலும்.

சுரேஷ்– வைத்திருக்கலாம்தான்.

‘உறவு’ என்றொரு கதை. அதில் சந்திரபிரபு என்று ஒருவன் வருவான், சௌதாமிணி என்று ஒருத்தி வருவாள். ‘திரை’ என்று ஒரு கதை உள்ளது. சின்னச் சின்ன கதைகள். இந்த ‘உறவு’ கதையில் அவள் வீட்டுக்கு வருவான், துளசிச் செடிக்கு பின்னால் அவள் நிற்கிறாள், அப்போது அவள் பாதி துளசிச் செடியாகவும், பாதி அவளாகவும் தெரிகிறாள். அந்தக் குழந்தை பேசும். கொஞ்சம் நேரம் அமர்ந்த பின், என்ன ஆகும்னா, அந்த வீடு, உட்கார்ந்து இருக்கும் நாற்காலி, கோப்பையில் இருக்கும் நீர், அடித்திருக்கும் ஆணி, என எல்லாமே இவனை நெருக்குவதாக தோன்றும். இந்த மாதிரி இடங்களில் எனது படைப்பூக்கம் நன்றாக வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன். மற்றொரு உதாரணம், ‘பீகாரும் ஜாக்குலினும்’ கதையில், அவன் ஷட்டரை திறந்தவுடன் வருவான். அந்த இடத்தில ஒரு வரி வரும். “புத்தரைக் கண்ட, மௌரியரைக் கண்ட, ஷேர்ஷா ஆண்ட, ஆயிரத்து எழுநூற்றி அறுபத்து நாலாம் ஆண்டு பக்ஸார் போரில் ஆங்கிலேயருக்கு கைமாறி பின்னால சுதந்திர இந்தியாவுக்குச் சொந்தமான, பூமியில் கைகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தேன்” என்று இருக்கும். இந்த இடத்தில் மொத்த வரலாற்றையும் கொண்டு வந்துவிட்டோம், இப்படியான கதை நடக்கிறது.

நரோபா– ஆம். பிரமாதமான வரி– குறித்து வைத்துள்ளேன். “புத்தரைக் கண்ட, மௌரியரைக் கண்ட, அசோகரைக் கண்ட, ஷேர்ஷாவைக் கண்ட பின்னர் வங்காள நவாபுக்குச் சொந்தமாகி ஆயிரத்து எழுநூத்து அறுபத்து நாலாம் ஆண்டு நடைபெற்ற பக்ஸார் போரில் பிரிட்டிஷாருக்கு கைமாறி தற்போது சுதந்திர இந்தியாவில் உள்ள அதிகாரம் விளைந்த பூமியில் நான் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன்”

சுரேஷ்– இது எவ்வளவு புதுமையான வரி, அந்தக் கதையை மாற்றி அமைக்கிறது இல்லையா? கதையில் ‘ரிலிஜன் அண்ட் கேஸ்ட் இன் இந்தியன் பாலிட்டிக்ஸ்’ என்ற நூலின் களப் பணிக்கு பீகாருக்கு வரும்போதுதான் இந்த கொலை நடக்கிறது. ‘இந்தியா எ மிஸ்டீரியஸ் கண்ட்ரி’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறாள், ‘ரிலிஜன் அன்ட் கேஸ்ட் இன் இந்தியன் பாலிடிக்ஸ்’ என்று செல்லும்போதுதான் பீகாரில் இறந்து போகிறான்.

இந்த ஒரு ‘பத்தி’ உள்ளதே, நான்கு வரிதான், ஆனால் அந்த நான்கு வரி இந்தியாவோட சரித்திரத்தைச் சொல்லிவிடுகிறது. தற்கால பீகாரையும் வரலாற்று காலகட்டத்தின் பீகாரையும் சொல்லிவிடுகிறது. இதுதான் நான் உருவாக்க விரும்புவது. வெறும் கதையில்லை.

நரோபா– கதைசொல்லி தன்னை ஒரு ‘பெங்காலி’யாகத்தான் சொல்லிக் கொள்கிறார்.

சுரேஷ்– இல்லை அவன் பொய் சொல்கிறான். நான் வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவன், நான் தாதாபாய் நௌரோஜிக்கு சொந்தமானவன், என்று இப்படி அதில் ஒரு நகைச்சுவை வந்துகொண்டே இருக்கும், மலையாளத்தில் பேசினான் என்று ஒரு இடத்தில் வரும்.

நரோபா– இந்த கதையோட தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் கழிந்து ஒரு கதை எழுதியுள்ளீர்கள்– ‘புனைவுகளின் உரையாடல்’. ‘பீகாரும் ஜாக்குலினும்’ கதை ‘95-ல் வந்துள்ளது, ‘புனைவுகளின் உரையாடல்’ ‘99 என்று நினைக்கிறேன். நாலு வருடம் கழித்து இந்தக் கதையோட தொடர்ச்சியாக..

சுரேஷ்– ஆனால் இந்தக் கதையோட தொடர்ச்சியாக அதை எழுவில்லை.

நரோபா– இருக்கலாம், ஆனால் இந்தக் கதையில் பீகார் கதைப் பற்றிய குறிப்பு உள்ளது.

சுரேஷ்– எனக்கு ‘கிரையோஜெனிக்ஸ்’ பற்றி நன்றாகத் தெரியும் என்று சொல்வது, வாசக பரப்பில் கற்பனைகளையும் சில விநோதங்களையும் உருவாக்குவதற்குதான். வெறுமே, ராஜம் காபி ஆற்றிக்கொண்டு வந்தாள், என்று எழுதுவதில் என்ன இருக்கிறது? அப்படி தற்செயலாக ஒரு தொடர்பு உருவாகி இருக்கலாம்.

நரோபா– அந்த தொடர்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சுரேஷ்– என் கதைகளெல்லாம் ஒரு சின்ன புள்ளியில தான் உருவாகின்றன. இப்போது இங்கு ஒரு இம்பீரியல் டாக்கீஸ் இருக்கிறது, அடித்தட்டு ஆட்கள்தான் வருவார்கள். அருகில் ஒரு டீக்கடை இருக்கிறது. அந்தக் கடையில் ஒருமுறை நிற்கிறேன், அங்கு ஸ்டாலின் படம், லெனின் படம், காந்தி படமெல்லாம் இருக்கும். அங்கு நிற்கும்போதுதான் அந்த இருவரையும் நான் பார்க்கிறேன். நாங்கள் ஜெர்மனியிலிருந்து வருகிறோம் என்றார்கள். நீங்க சார்த்தர் பிறந்த தேசத்திலிருந்து தான் வருகிறீர்களா என்று கேட்டேன். இல்லை அவர் பிறந்தது பிரான்ஸ் என்றார்கள். நான் தலையில் அடித்துக்கொண்டு வந்துவிட்டேன். இப்ப இந்த விஷயம் ஒரு கதையாகிறது. கதையை யோசிக்கும்போது பீஹார் வருகிறது, பின்னர் பீஹார் மாநில சரித்திரம் நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி ஞாபகத்துக்கு வருகிற பல விஷயங்கள் சேர்ந்து ஒரு கதை ஆகிறது. அந்த செயல்பாட்டை விளக்க முடியாது. பிரமிள் ஓரிடத்தில் சொல்கிறார் ‘’குருவிகள் பறந்து செல்லும் பாதையையும், ஞானியர் ஞானத்தை அடையும் வழியையும் நம்மால் வரைந்து காட்ட முடியாது.” புத்தர் எப்படி ஞானம் அடைந்தார் என்று பார்த்தால் அது அல்பக் காரணத்தில் ஏற்பட்ட தூண்டுதலினால் இருக்கும். ஒரு முதியவரை, செத்துப்போனவரைப் பார்த்தார். சடாரென ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பெரும் தாவல் ஒன்று நிகழ்ந்து விடும்.

நரோபா– அந்த மாதிரி மாற்றம்கூட உங்கள் கதையில் வருகிறது. அந்த காரைக்கால் அம்மையார் கதை. அவள் மனம் சட்டென மாறிவிடும். அப்படி இன்னொரு கதையில் கூட, ஒரு கார் டிரைவர் வந்து ஒரு சில வரிகள் சொல்வான்..

சுரேஷ்– ஒரு உள்மன மாறுதல் ஏற்படும். எல்லோருக்கும் எப்போதும் எதற்கு உடலை கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் எனும் எண்ணம் வருகிறது. சிவானந்தம் என்பவன், இந்த கதையில் வரும் நடிகையின் மகளின் காரோட்டியாக செல்வான். அப்போது மலைகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தெரியும். அதைச் சொன்னதும் அந்த நடிகைக்கு ஞானம் கிடைக்கும். சிறிய கவித்துவமான பகுதிதான் அது. இந்த கதையில் வருபவள் தான் காரைக்கால் அம்மையார் கதையிலும் வருகிறாள்.

நரோபா: அதன் தொடர்ச்சி என சொல்லலாம்

சுரேஷ்– ஆம் அதன் தொடர்ச்சிதான். நான்தான் இந்த கதையில் வந்த உண்மையான பெண், ஆனால் ஏன் பொய்யாக அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று உங்கள் கதையில் எழுதினீர்கள் என்று கேட்பாள். மீண்டும் மீண்டும் விளக்க முயற்சிப்பாள். அவள் உள்மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்றேன், ஆனால் அது ஏன் நேர்ந்தது என்று சொல்லத் தெரியவில்லை. அந்த இடைவெளியைப் பற்றி தெரியவில்லை. இவள் இறுதியில் காரைக்கால் அம்மையார் மாதிரி உருவத்தைச் சிதைத்துக்கொண்டு மாறுகிறாள். வாசக இடைவெளியும் நுட்பங்களும் உள்ள கதைகள். தவிரவும் ஒரு விஷயத்தில தலைகீழ் அரசியல் என்று ஒன்றுண்டு. இப்போது நீங்கள் எந்த விஷயம் சொன்னாலும், அது எப்படிப்பட்ட புனிதமான விஷயமாக இருந்தாலும், எவ்வளவு லட்சியமுடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதற்குள் ஒரு தலைகீழான தன்மை உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்றே வைத்துக் கொள்வோம், அதற்குள்ளும்கூட தலைகீழான விஷயம் இருக்கும். உண்டியலை நிமிண்டி அதிலிருந்த காசை எடுத்து பரோட்டா சாப்பிடுவார்கள், இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். மத விஷயமாயிருந்தாலும், மத எதிர்ப்பு விஷயமாயிருந்தாலும் சரி.

ஒரு கதை உருவாகும் இடம் மிகச் சாதாரணமானதாகக்கூட இருக்கலாம். ஒரு கவர்ச்சி நடிகை கஷ்டப்படுவதை பிரபல வாரப் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். அப்போது அவரைப் பற்றி எழுத வேண்டும் எனத் தோன்றியது. முற்றுப்புள்ளி கதையில் வருபவனின் ஆமாவின் சாயலில் அவள் இருக்கிறாள். அது உள்ளே தொந்திரவு செய்கிறது. நான் அதற்குள் ஆழமாகச் செல்லவில்லை. ஈடிபஸ் காம்ப்ளக்சிற்குள் சென்றுவிடும். அவனுடைய அம்மா சாயலில் இருப்பதினால்தான் அவன் விரும்புகிறானா? தெரியவில்லை.

நரோபா– அது நேரடியாகவே இருக்கிறதே.

சுரேஷ்– அவன் அம்மா சாயலில் இருப்பதால்தான் அவன் விரும்புகிறான். ஆனால் அவள் ஒரு கவர்ச்சி நடிகை. அவன் சேகரித்து வைத்துள்ள படங்கள் எல்லாமே கவர்ச்சி நடிகையாக இருக்கும் படங்களாகத்தான் உள்ளது. இது அவனுக்கு மிகப்பெரிய தொந்திரவாக இருக்கிறது. அவள் குடும்பப் பாத்திரங்களில் வரவில்லை. அது ஒரு சிக்கல்.

நரோபா– உங்களுடைய பல கதைகளில் அப்படியான வீழ்ச்சியின் சித்திரம் வருகிறது.

சுரேஷ்– நன்றாக இருந்தவன் விழுவதை நான் கட்சி அடிப்படையிலோ, கொள்கை அடிப்படையிலோ பார்க்க மாட்டேன். என் தாத்தா சொல்வார் ‘இளச்சவன் பக்கம் இருக்க வேண்டும்’ என்று. அவன் எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம்.

நரோபா– உங்கள் கணியன் பூங்குன்றனார் கதைகூட இந்த அடிப்படையில் உளது தானே..

சுரேஷ்– ஆம். ஒரு நடுத்தர பிராமண குடும்பம், அந்தப் பெண்ணுக்கு கால் கொஞ்சம் ஊனமாக உள்ளது. பிராமணர் என்பதால் அவளுக்கு வேலை கொடுப்பதில் பிரச்சினை உள்ளது. ஆனால் இவர் வேலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இவருக்கு உள்ளேஒரு பரிவுணர்வுத் தன்மை இருக்கிறது அல்லவா.

நரோபா– இல்லை, பரிவுணர்வு என்பதைக் காட்டிலும் நேர்மறை அரசியலாகவே காண்கிறேன்.

சுரேஷ்– அப்படியும் இருக்கலாம். அந்த மாதிரி ஆட்களிடம் வெறுப்பு இருக்க வேண்டும் என்று எண்ணுகிற சூழலில், இந்த மாதிரி நேரங்களில் நான் அவர்கள் பக்கம்தான் இருப்பேன் எனும் தலைகீழ்த்தன்மை இதற்குள் இருக்கும். நீங்கள் ஒரு புனிதமானத் தன்மையைப் பற்றி பேசும்போது சம்பந்தமே இல்லாத வகையில் வேறு ஒன்று குறுக்கே வரும். கடவுளை வேண்டிக்கொண்டு கொள்ளை அடிப்பவன் இருக்கிறான். திருடப் போகிறவன் கொள்ளையடிக்கப் போகிறவன் எல்லாரும் சாமிகிட்ட நேர்த்துகிட்டுத்தான் கிளம்புகிறார்கள். இந்த உளவியலை எப்படி விளக்கிக் கொள்வது? எந்த விதத்தில் இது தொடர்புடையது? இது எந்த வகையிலும் தொடர்புபடுத்த இயலாதது. ஆனால் அவன் மனதிற்கு இது அவசியமாய் இருக்கிறது. இந்தியாவில் இப்படி எத்தனையோ முரண்கள் உள்ளன.

“சிலநேரம் சில மனிதர்கள்” நாவலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறேன். வாசித்தீர்களா?

நரோபா– நாவல் வாசித்திருக்கிறேன். ஆனால் அதன் முன்னுரை வாசித்ததில்லை.

சுரேஷ்– பெண்களுடைய சோகக் கதைகளுக்கு ஆண்கள் கவனம் கொடுப்பார்கள். பாஞ்சாலி, சீதை, சாவித்திரி, கண்ணகி, இந்த சோகக் கதைகளை எப்போதும் இந்தியர்கள் மதிப்பார்கள், வணங்குவார்கள். ஆனால் இதைக் கொண்டு பெண்களைப் பற்றிய பார்வை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. அது வேறு மாதிரி இருக்கும்.

நரோபா– ஆம். இந்த இருமை இருந்துக்கொண்டுதான் இருக்கும்.

சுரேஷ்– ஆமாம். மகளைக் கொல்கிறவனாக இருக்கலாம். அவன் திரெளபதியை கும்பிடுகிறவனாக இருக்கலாம். இந்த சிடுக்குகளை எப்படி பார்ப்பீர்கள்? என்னோட முறை என்னவென்றால், சம்பிரதாயமான முறையில் கதை சொல்வது இல்லை. தலைகீழாக இருக்கிற விஷயங்களைச் சொல்ல வேண்டும். அதை புதிர்த்தன்மையுடன் சொல்ல வேண்டும்.

அது மாதிரி நடனமங்கை தொகுப்பில் ‘கோவில் பிரகாரம்’ என்றொரு கதை. ஒரு பிராமணர் இருபது ஏக்கர் நிலம் வைத்திருப்பார். ஆனால் அந்த நிலத்தை அனுபவிக்க முடியாது. குத்தகைதாரன் பணம் கொடுக்க மாட்டான். அவருக்கு ஒரு பெண் இருப்பாள். நல்ல வளமாக வாழ்ந்த குடும்பம். பெண்ணுக்கு திருமணம் முடிக்க வேண்டும், ஆனால் வழியில்லை. இந்த மாதிரி பிரச்னைகள் நிலவுகின்றன. அப்போது அவள் தூக்கிட்டு இறந்து விடுகிறாள். அப்போது அவர் வீட்டுக்கு வருவார். பிரச்சினை முடிந்துவிட்டது என்று உள்மனதில் தோன்றும். இதைத்தான், இந்த தலைகீழ் அரசியலைத்தான் நான் காட்ட விழைகிறேன்.

‘மனைவிகள்’ என்றொரு கதை, ஒரு கேதத்திற்காக செல்வார்கள். அந்த அம்மாள் கணவன் இறந்தது பற்றி எந்த துக்கமும் இல்லாமல் இருப்பவள். இரண்டு, மூன்று மனைவிகள் வருவார்கள். இவனுடைய தந்தை இரு தாரங்கள் உடையவர் என்றெல்லாம் வரும். கதை இறுதியில் அவள் தன் போக்கில் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு, கூட்டம் நிறைய வந்தது, வெடி நிறைய போட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பாள்.

நரோபா– ஆம். அவர் துக்கத்தில் இருப்பவர் போல ஏன் நடிக்கவில்லை என்பதுதான் எனக்கு புதிராக இருந்தது.

சுரேஷ்– எழுதும் விஷயமெல்லாம் வித்தியாசமானதாகவும், சம்பிரதாயமில்லாததாகவும், புதுமையானதாகவும், இயன்ற வரை வாசகருக்கு இடைவெளி அளிப்பதாகவும் எழுத முனைகிறேன். இயல்பாக மர்மமும் சேர்ந்து கொள்கிறது.

நரோபா– உங்கள் ‘அறிக்கை’ கதை படித்ததும் சிரிப்பு வந்தது. நுட்பமாக சினிமாவை முழுவதுமாக கிண்டல் செய்துள்ளீர்கள். கடைசியில் அந்தப் பையன் குப்பைக் கூடையில் இருந்து இந்தியாவின் பட்ஜெட் பற்றிய புள்ளி விபரத்தையும் படிக்கிறான். இது புதுமையாக இருந்தது.

சுரேஷ்– நான் அந்தக் கதையை பரிகாசம் பண்ணி எழுதவில்லை. எப்படி திரைக்கதை இருக்கோ அதைத்தான் எழுதியிருக்கிறேன். வாசிக்கும் புத்திசாலி வாசகனுக்கு பரிகாசம் செய்தது போல் இருக்கும். பாமரன் வாசிச்சா இதோ ஒரு கதை எழுதியிருக்கிறான் என்றுதான் தோன்றும். சாதாரண கதையாகத்தான் தெரியும். ஏன் இப்படி எழுதி இருக்கார்? என யோசிக்கும்போதுதான் தெரியும். ஒருவருக்கு தத்ரூபமாக எழுதியிருப்பதாகத் தெரியும். மறுபுறம் ஒரு புத்திசாலிக்கு அந்த தத்ரூபம் பரிகாசமாக இருப்பதாகத் தெரியும். இந்தியா டுடேயில் வந்திருந்த உண்மையான புள்ளிவிவரம் அது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது இந்த மாதிரி ஒரு கேலிக்கூத்து நடந்துகொண்டிருக்கே என்பதுதான் அந்த கதையோட தரப்பு. இந்த மாதிரியெல்லாம் புதிதாக யோசிச்சுத்தான் நான் கதைகளை செய்தேன்.

இதே போல் ஒரு கதையில், மகா குருவிற்கு இளைய குரு பணிவிடை செய்வதை தத்ரூபமாக எழுதியிருப்பேன். நான் பரிகாசம் என்று அறிவித்துக்கொண்டு எதுவும் செய்யவில்லை. அவர் உட்கார்ந்திருப்பார். உடல் முழுக்க பூக்கள் விழுந்திருக்கும். (சிரிக்கிறார்) கொட்டாவி வரும் கொட்டாவி விடுவார். இதெல்லாம் நான் பார்த்ததுதான். தத்ரூபமா சொல்கிறேன். பாமரன் அதைப் படித்துவிட்டு கும்பிடுவான். புத்திசாலி அதைப் படித்துவிட்டு இதில் பரிகாசம் இருக்கிறது என்று புரிந்துகொள்வான். இந்த காலை கழுவுவது. நெளிவது, கொட்டாவி விடுவது. அந்த பூ வந்து கொட்டுவது என எல்லாமே கேலியாக இருக்கும்.

நரோபா– உங்களுடைய நிறைய கதைகளில் சாதி ஒரு முக்கியமான பேசுபொருளாக வருகிறது. ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பிலும் வருகிறது. ‘வழிமறைத்திருக்கிறதே’ என்ற நாட்டைக்குறிஞ்சி பாட்டு’.

சுரேஷ்– இரண்டு கதைகளில் வரும். ‘சிலந்தி வலை’, ‘வழிமறைத்திருக்கிறதே’. இதில் மேல் சாதி என்று குறிப்பிடப்படுவது பிராமணர்களை அல்ல.

நரோபா– ஆம் அது தெரிகிறது.

சுரேஷ்– ஆம். பிராமணர்கள் அல்லாத இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில்தான் இன்று சிக்கல் உள்ளது. இந்தக் கதையில் சஞ்சய் சுப்ரமணியன் நாட்டக்குறிஞ்சியில் பாடுகிறார். கோபால கிருஷ்ண பாரதியாரோட பாடல். “வழிமறைத்திருக்குதே, மலை போல ஒரு மாடு படுத்திருக்குதே, விலகாதோ மாடு” என்பதுதான் அந்த பாடல். அவர் நந்தி எனும் வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அது ஏன்? அப்படி ஒரு கோணத்தில நாம் பயணித்து பார்க்கலாம். கோபாலகிருஷ்ண பாரதியார் ஏன் நந்தன் கதையை எடுத்தார் என யோசிக்கலாம். மேலும் அவர் உட்பட பலரும் அந்தக் காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதச் செய்ய பாடுபட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். இந்த நந்தன் கதை அவர் மீது ஏன் தாக்கம் செலுத்தியது என்பது ஒரு கேள்விக்குறி. கோபால கிருஷ்ண பாரதியார் ஒரு பிராமணர்.

அந்தப்பாடல்-

“வழிமறைத்திருக்குதே, மலை போல ஒரு மாடு படுத்திருக்குதே, விலகாதோ மாடு
தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும், உற்றுப்பார்த்தால் சற்றே விலகாதோ”

இந்த பாடலை நாட்டக்குறிஞ்சி ராகத்தில் பாடுகிறார்.

நான் ஆட்சியர் அலுவலகத்தில் சிரஸ்தார் பதவியில் இருந்தவன். அது தாஸில்தார் பதவியை விட பெரிய பதவி. அதில் மாஜிஸ்ட்ரியல் சிரஸ்தார், ஜெனரல் சிரஸ்தார் என்று இரண்டு உண்டு. இந்த ஜெனரல் சிரஸ்தார் என்பது நிர்வாகம் சார்ந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் இவனுக்கு மேல் பதவியில் இருப்பவர்கூட அஞ்சுவார்கள். ஏனெனில் அவர்கள் மேல் ஏதாவது குற்றச்சாட்டு என்றால் ஜெனரல் சிரஸ்தார்தான் முன்னெடுப்பார். மாஜிஸ்டிரல் சிரஸ்தார்என்பது சட்ட ஒழுங்கு சார்ந்தது, குண்டாஸ் ஆக்ட் போல் பல சட்டங்களை நிர்வகிப்பது. நான் இரண்டு பதவியிலும் இருந்திருக்கிறேன்.

‘புதுவிதமான செடிகளும் வர்ண பூக்களும்’ கதைகளில் வருகிற நான்கு பேருமே குண்டாஸ் ஆக்டில் கைதானவர்கள். அந்த கதைகளிலே ஒரு உண்மைத்தன்மை உண்டு. ஏனெனில் உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானவை. எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அது.

இந்த ‘வழி மறைத்திருக்குதே’ கதை இருக்கிறதே. இந்த கதை ஒரு ஆதிக்க சாதியும் தலித்தும் ஒன்றாக இருக்கும் ஊரில் ஆதிக்க சாதி வணங்கும் மரத்தை கும்பிடுவதில் பிரச்சனை வந்தது. அறுபது வருஷமாக உள்ளது. இரண்டு தரப்பிலும் மாறி மாறி சிக்கல். நான் அங்கு இருந்தபோது முதல்வருக்கெல்லாம் அறிக்கை அனுப்ப வேண்டும்.

அரச மரத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் வணங்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். இதை வெளியே போய், வேற நாடுகளில் சொன்னால் அவனால் இதை ஜீரணிக்கவே முடியாது. நம் சட்டத்திலேயே Temple Entry Authorisation Act, 1947 என்று ஒரு சட்டம் உள்ளது. அதன்படி இந்துக்கள் வழிபடும் எல்லா இடங்களிலும் சாதிப் பாகுபாடு பார்க்காது அனுமதிக்க வேண்டும் என்று உள்ளது. இதெல்லாம் எழுத்தளவில் உள்ளது. ஆனால் இரண்டு தரப்பிலேயும் ஒத்துப் போவதில்லை.

இறந்தவர்களில் ஒருவன் அப்போதுதான் திருமணம் முடித்து பிள்ளை பெற்றவன், மற்றொருவன் கும்பலில் இருந்தவன், இந்த கும்பலில் சுடும்போது எப்போதும் அப்பாவிதான் இறக்கிறான். அது எப்படி அமைகிறது என்று தெரிவதில்லை. இது ஒரு பெரிய மர்மம். ஏன் ஒன்றும் தெரியாதவன் இதில் மாட்டுகிறான்?

சஞ்சய் பாட்டு பாடுகிறார். அப்போது பல்லவி வரும். பிறகு சரணம். சரணத்தில் தான் இந்த கதை வருகிறது. உங்களுக்கு சங்கீதத்தில் ஆர்வம் உண்டா?

நரோபா– உண்டு. ஓரளவு பரிச்சயம் உண்டு.

சுரேஷ்– இந்த பாட்டோட சரணத்தை இந்த உண்மை நிகழ்வுகள் வந்து நிரப்புகிறது. வித்தியாசமாக செய்வதற்காக வலிந்து செய்வது கிடையாது.

நரோபா– ஆம் அதன் வடிவம் வித்தியாசமாக உள்ளது.

சுரேஷ்– ஆமாம். இயற்கையாவே அப்படித்தான் வருகிறது. வித்தியாசமா செய்ய வேண்டும் என கிடையாது. இதில் வித்தியாசமான கதைகள் இரண்டு வருது. ‘சிலந்தி வலை’ மற்றும் ‘யாரோ இவள் யாரோ’.

நரோபா– பணமதிப்பு நீக்கம் பற்றி ஒரு கதை உண்டே?

சுரேஷ்– ஆமாம். டீமானிடைசேஷன் பற்றி இப்போது வாத பிரதிவாதங்கள் நடக்கிறது. நானும் டீமானிடைசேஷன் சமயத்தில் கஷ்டப்பட்டவன்தான். 2500 ரூபா பணத்தை பெரிய சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருக்கும் ஊர்தான் இது. ஒரு நாளில் அவருடைய வாழ்கையை காண்பித்திருப்பேன். ஆரம்பத்திலிருந்தே பெண்ணாயிருந்தால் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் எனும் வார்த்தை அவளை அமுக்கிக் கொண்டே இருக்கும். அவள் வாழ்க்கையில் அதற்கு உகந்தாற்போல் கஷ்டங்கள அனுபவித்துக்கொண்டே வருகிறாள். அந்த 2500 பணம் செல்லாமல் போகிறது. அத எப்படி மாற்றுவது என்று குழம்புகிறாள். பிறகு அவள் மாற்றி இருக்கலாம். அது வேறு விஷயம். அந்த துயரம், கஷ்டம் இதெல்லாம் பதிவு பண்ண வேண்டுமே. எனக்கும் அப்போது காலில் அடிபட்டிருந்தது. வெளியே எங்கும் போக முடியாது.

என் மனைவிக்கு வெளியுலகம் தெரியாது. நான் என்னுடைய நண்பர் வங்கிக்காரர் ஒருவரிடம் சொல்லியிருந்தேன், எட்டாயிரம் ரூபாய் 500 தாளாக இருக்கிறது. எழுநூறு ரூபாய்க்குத்தான் நூறு ரூபாய் உள்ளது. 4000 தான் மாற்ற முடியும் என்று சொல்கிறார்களே என்று கேட்டேன். நீங்கள் இங்கு வாருங்கள், பார்த்துக் கொள்ளலாம் என்றார். கம்பூன்றி நடந்து சென்றேன். பெரும் கூட்டம். ஆதார் அட்டை கேட்கிறார்கள். என்னென்னலாமோ கேட்கிறார்கள். அரிசி பஞ்சம் என்றால் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. 1966, 67 ஆண்டுகளில் அரிசியை வெளிச் சந்தையில் வாங்க முடியாது. எங்குமே கிடைக்காது. முழுக்க ரேஷன் அரிசியை நம்பித்தான் இருந்தார்கள். பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எதுவும் கிடையாது.12 வயதில் நான் போய் அந்த வரிசையில்லாத ஒரு கூட்டத்தில் முண்டி அரிசியை வாங்கியதற்கு நிகரான துயரம் அது. புள்ளி விபரங்களைப் பற்றி, அரசியலைப் பற்றி நான் சொல்லவில்லை, மக்கள் அனுபவித்த துயரத்தைத்தான் சொல்கிறேன்.

பிறகு என்ன நடந்தது என்றால், 4000 கொடுத்தால் இரண்டு 2000 நோட்டைக் கொடுத்தார்கள்.

நரோபா– ஆம். அதை செலவுக்கு மாற்றவே முடியாது

சுரேஷ்– ஆமாம். அதை மாற்ற முடியவில்லை. நண்பர் இரண்டு இரண்டாயிரத்த வாங்கிக்கொண்டு, நூறு ரூபாய் தாள்களை கொடுத்தார். ஆட்டோவில் போக வேண்டும், மருத்துவரிடம் செல்ல வேண்டும், சாப்பிட வேண்டும், இப்படி எத்தனையோ. ஏடிஎம்மிற்கு போய் எடுக்கவே முடியவில்லை. வரிசையில் நிற்கவே முடியாது. மனைவிக்கு பின் நம்பர் போடத் தெரியாது. பெரிய கஷ்டத்த அனுபவித்தாகிவிட்டது. அந்த கஷ்டத்த சொல்வோம் என்று எழுதிய கதை. இதற்குள் பெரிய மர்மத்தை கொண்டு வர முடியாது, கலாபூர்வமான அற்புதத்தை நிகழ்த்திவிட முடியாத யதார்த்தமான கதை. ஆனாலும் இந்த மாதிரியான விஷயங்களை எழுத வேண்டும். கொஞ்சம் பிசகினால்கூட பிரசாரத் தொனி வந்துவிடும்.

அந்த எல்லைக்கு செல்லாமல் இயன்றவரை எழுதுவோம். ஏனெனில் நான் பார்த்ததுண்டு. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தங்களுடைய சாதி தெரியாத பொது இடங்களில் கூட வேண்டுமென்றால், தங்கள் சாதி வெளிப்பட்டுவிடுமோ எனும் பதட்டம் வந்துவிடும். அவர்களை வைத்துக்கொண்டே எதாவது பேசுவார்கள். முடிந்தவரை மறைத்துகொள்ளவே பார்ப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை பதிவாக்க வேண்டும் என தோன்றியது.

நரோபா– உங்கள் கதைகளில் ‘தற்செயல்களின் விளைவுகள்’ ஒரு முக்கியமான பேசுபொருளாக இருக்கிறதே?

சுரேஷ்– ஒரு கதையில் நான் எழுதியிருக்கிறேன். ஒரு பத்திரிக்கையில் வாசித்த செய்தி அது. சைக்கிளில் சென்று கொண்டிருப்பவன் மீது பறந்து கொண்டிருக்கும் பருந்திடமிருந்து தவறிய பாம்பு விழுந்து, அந்த பாம்பு கொத்தி இறந்து விடுவான். இந்த ‘இல்லாஜிகல் அப்ஸர்டிட்டி’ (தர்க்கமற்ற அபத்தம்) என்னை எப்போதும் அச்சுறுத்தும் ஒன்று. காலில் அடிப்பட்டதென்று சொன்னேன் அல்லவா? நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன், மாநகராட்சி குப்பை வண்டி சென்று கொண்டிருக்கிறது, அதன் மீது ஒரு படுதா கட்டியிருப்பார்கள். அந்த படுதாவை ஒழுங்காக கட்டமாட்டார்கள், அது காற்றில் கலையும் என்பதால் அதன் மீது கற்களை தூக்கி வைத்துவிடுவார்கள். நான் குப்பை லாரிக்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறேன். அந்த கல் மெள்ள மெள்ள நகர்ந்து சரியாக என் வண்டி வரும்போது விழுந்து, கல் மீது வண்டி ஏறி வழுக்கி கால் மாட்டிக்கொண்டது. (கால் தழும்பை காட்டுகிறார்). இந்த இடத்தில் சதையெல்லாம் பிய்ந்து இரத்தக் காயம் ஏற்பட்டுப் போனது. இதை நீங்கள் எப்படி சொல்வீர்கள்? அந்த குப்பை லாரி வரும் நேரமும் நான் வரும் நேரமும் ஒன்றாக அமைவது ஒரு பெரிய விஷயம். அடுத்து, அதற்குமேலுள்ள கல், அதை வைத்தவன் எவன் என்றே எனக்கு தெரியாது. வைத்தவனுக்கும் அது என் மேல் விழும் என்று தெரியாது. அது சரியாக என் வண்டி மேல் விழும் என்பது..

நரோபா– லட்சத்தில் ஓர் வாய்ப்பு.

சுரேஷ்– இல்லாஜிக்கல் அப்சர்டிட்டி. இது எப்போதுமே எனக்கு ஒரு பெரிய பிரச்சினை. பாம்பு கீழே விழுகிறது. சைக்கிளில்தான் போய் கொண்டிருக்கிறான். சைக்கிளில் சென்று கொண்டிருப்பவன் ஒரு நகர்வில்தான் இருக்கிறான். அந்த நகர்வும் பாம்பு விழுவதும் ஒரே சமயத்தில் இணைகிறது. அப்போது அது கொத்தவும் செய்கிறது. இறந்து போகிறான். இதெல்லாம் எப்படி? இல்லாஜிகல் மனிதனுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் இது. சமீபத்தில் செய்தியில் வாசித்தேன், சென்னையிலோ பெங்களூரிலோ, சரியாக நினைவில்லை, ரயில் நிலையத்தில் காய்கறிக் கூடைக்காரி அமர்ந்திருக்கிறாள். ஒரு மாடு பிளாட்பாரத்தில் நிற்கிறது. அப்போது வரும் ரயில் மாட்டின் மீது மோதி, அந்த மாடு பறந்து வந்து அமர்ந்திருக்கும் கூடைக்காரி மீது விழுந்து இறந்து விடுகிறாள். இதை நீங்கள் நம்புவீர்களா?

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சட்டென பதிந்து போகும். 60- 70 வயதான ஒருவர் ஒத்தக்கடையில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இன்று நேற்று அல்ல, இருபது வருடங்களாக அங்குதான் அமர்ந்திருப்பார். பஸ் சென்று கொண்டிருக்கிறது. சமயங்களில் சாலையில் கிடக்கும் கல் சக்கரத்தின் விளிம்பில் படும்போது தூக்கி எறியப்படும். அவர் அன்று உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, சக்கர விளிம்பில் பட்டு தெறித்த கல் நேராக பொட்டில் அடித்து செத்துப் போனார்.

ஒரே கல். அது பொட்டில் அடிக்காமல், தோளில் பட்டிருந்தால்கூட பிழைத்திருப்பார். இந்த மாதிரி தர்க்கமற்ற அபத்தங்களை கவனத்தில் கொண்டவனுக்கு எல்லாமே அச்சுறுத்தலாக இருக்கும் இல்லையா?

நரோபா– நீங்கள் நிறைய கதைகளில் இதைக் கையாண்டு உள்ளீர்கள். ‘புதிர்வெளி பயணங்கள்’ என்கிற கதையிலேயே முழுக்க முழுக்க இதுதான். எல்லாமே எதிர்பார்க்காததுதான். அந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆட்கள் ஒவ்வொருவரையும் சந்தித்துக்கொண்டே இருப்பான். முந்தைய தொகுப்பான ‘மாபெரும் சூதாட்டத்திலும்’கூட நிறைய கதைகள் தற்செயலின் விளைவுகளை சொல்கிறது. யுவன் சந்திரசேகரும் நீங்களும் இந்த தளத்தில் கொஞ்சம் ஒத்து பயணிப்பதாக தோன்றியது.

சுரேஷ்– முதலில் வந்தது ‘அலையும் சிறகுகள்’ எனும் தொகுப்பு. அப்போது நான் வாலிபன். இருபத்தொம்பது வயதுதான் இருக்கும். முப்பது முப்பதியொண்ணுக்குள்ள அந்த தொகுப்பை எழுதி முடித்துவிட்டேன். 79 ல் எழுத ஆரம்பித்தேன். 1982 ல். ‘அலையும் சிறகுகள்’ தொகுப்பு வந்துவிட்டது அதில் ஒரு தனி மனிதனோட தத்தளிப்புகள் இருக்கிறது அல்லவா, வாழ்க்கையின் சக்கரத்தைப் பிடித்து ஏறுவதற்கான தத்தளிப்பு. அதுதான் அந்த கதைகளில் அதிகம்.

நரோபா– இருத்தலியல் சிக்கல் என சொல்லலாமா?

சுரேஷ்– ஆம். அதுதான் அந்த கதைகளில் இடம் பெற்றிருக்கும். அதற்கு பிறகு இங்கு இலத்தீன அமெரிக்க சிறுகதைகள் அறிமுகமாகிறது. அவை உள்ளே நுழைந்ததும் எனக்கு ரொம்ப ஆச்சரியம். ஒரு கதை இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் அவசியம் கிடையாது. மையமற்ற கதை. கதைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கதை சொல்லும் முறை தான் முக்கியம். இவையெல்லாம் ஒரு போதனையாக நமக்கு கிடைக்கிறது. அடடா, இதற்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி ஒரு பாணியில், அதற்கு பின்னர் நான் எழுத ஆரம்பித்த கதைகள் அமைந்தன. அனைத்துமே புதுமையான கதைகள்தான்.

நரோபா– ஆம்.

சுரேஷ்– அந்த ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பில் பல கதைகள் வழமையான வடிவத்திற்குள் அடங்காதவை. நீங்கள் குறிப்பிட்டீர்களே ‘அறிக்கை’ எனும் கதை, இங்கு இலத்தீன் அமெரிக்க கதைகள் அறிமுகமாகவில்லை என்றால், அதை இந்த வடிவத்தில் யோசித்திருக்கவே முடியாது. பிறகு, ஒரு காலகட்டத்தில் ‘அவரவர் வழி’ வரும்போது, இந்த பாணியை மாற்றுவோம். எவ்வளவு காலத்திற்கு ஒரே மாதிரி எழுதுவது என்று யோசித்து மாற்றினேன்.

நரோபா– ஆக, இந்த மாற்றம் என்பது பிரக்ஞைபூர்வமான முடிவா?

சுரேஷ்– ஆம். பிரக்ஞைபூர்வமான முடிவேதான். ‘அவரவர் வழி’ கதைகளுக்காக காத்திருந்தேன், 2005க்கு பிறகு, அதாவது நாலைந்து வருடத்திற்கு பிறகு தான் எழுதினேன். அதன் பிறகு ‘நானும் ஒருவன்’ வந்தது.

நரோபா– அந்த தொகுப்பு முழுவதுமே குற்றம், குற்றத்தின் பின்னணி பற்றியதாக உள்ளன. சுயசரிதைத்தன்மை கொண்ட கதைகள் என்றும்கூட சொல்லலாம்.

சுரேஷ்– இல்லை, ‘நானும் ஒருவன்’ கதைகளோட பாணி, சித்திரிப்பு ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பில் உள்ள ‘மயில் கழுத்து’ கதையின் தாக்கத்தில் முன்னெடுத்தவை.

அந்தக் கதையும் ஒரு காரணம். அதை வாசித்தவுடனே எனக்கு கதாபாத்திரங்களை விஸ்தரித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. பொதுவாக என்னுடைய கதைகளில் விவரணைகள் இருக்காது. விவரணைகள் இருந்தால் அதை வாசிக்கவே மாட்டேன், ஈடுபாடு இல்லாமல் ஆகிவிடும், வார்த்தைகளின் இரைச்சல், இதெல்லாம் வீண் என்றே எனக்கு தோன்றும். ஆனால் ‘நானும் ஒருவன்’ தொகுப்பில் உள்ள கதைகள் வாசித்து பார்த்தால் அவை அனைத்தும் வேறு மாதிரி உள்ளது தெரியும். கொஞ்சம் விரிவாகச் செல்லும் கதைகள் அவை. கொஞ்சம் பெரிய கதைகளாகவும் இருக்கும், கதாபாத்திரங்களை விஸ்தரித்திருப்பேன்.

நரோபா– கதாபாத்திர சித்தரிப்பு மாதிரிதான் இந்தக் கதைகள் இருக்கிறது. பெரும்பாலும் ஒரு மனிதனுடைய மொத்த வாழ்க்கைச் சரிதத்தையும் சொல்கிற மாதிரிதான் உள்ளது. ‘மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்’, ‘உறையிட்ட கத்தி’, ‘ஒரு திருமணம்’ எல்லாமே ஓரளவு பெரிய கதைகள்தான்.

சுரேஷ்– ஆமாம். அந்த மாதிரி எழுதியிருப்பேன். இந்த தொகுப்பு இந்த வடிவத்தில் இருக்கும், இதற்கு அடுத்த தொகுப்பு வேறு மாதிரி இருக்கும், இப்போது வந்தது வேறு மாதிரி இருக்கும். எந்த தொகுப்பு மாதிரியும் மற்றொன்று இருக்கக்கூடாது. சாயல் இருக்கலாம். அது வேறு விஷயம்.

நரோபா– குற்றம், குற்ற உளவியல் தளங்களை பேசும் கதைகள் நீங்கள் கணிசமாக எழுதி உள்ளீர்கள். ‘நானும் ஒருவன்’ தொகுப்பில் உள்ள ‘மினுங்கும் கண்கள்’ கூட ஒரு உதாரணம். ஒரு சிறுவன் அவர்களை ஏமாற்றுவது பற்றிச் சொல்லும் கதை.

சுரேஷ்– நான் முன்னரே சொன்னது போல, தலைகீழ் விஷயங்களை சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்தச் சிறுவனுக்கு சோறு போடுகிறார். அதைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து, இது கர்த்தரோட ஆசிர்வாதம் என்று நினைக்கிறார். ஆனால் அவன் கொள்ளையடிப்பவனாக இருக்கிறான்.

நரோபா– அவன் கடைசியில் உயிருடன் விட்டதற்குக்கூட சோறு போட்டதினால்தான் என்று நினைக்கிறார்.

சுரேஷ்– அப்படி அவர் நினைத்துக் கொள்கிறார். யாரும் ஒருவரை எளிதில் கொல்ல மாட்டார்கள். முடிந்தளவுக்கு தப்பிக்கத்தான் வழி பார்ப்பார்களே தவிர, ஒரு சேதத்தை உண்டாக்க வேண்டும் என்று வேண்டுமானால் யோசிப்பார்கள்.

நரோபா– சாட்சியம் இருக்கக் கூடாது எனும் பிரக்ஞைகூட இருக்கலாம்.

சுரேஷ்– இப்போது நீங்கள் என்னோடு வந்தால்கூட அந்தக் கழுத்து அறுபட்ட ஆளை நான் காண்பிப்பேன்.

நரோபா– ஓ!

சுரேஷ்– அந்தக் கதை இப்படித்தான்- ஒரு ஆள் வருகிறார், காயத்தைக் காட்டி என்னவென்று கேட்டேன், அப்போது அவர் ‘இந்த மாதிரி சோறு போட்டேங்க. வீட்டுக்குள்ள எப்படி வந்தான்னே தெரியல. நைட்ல பாத்தா சத்தம் கேட்டுச்சு. பாத்தா கழுத்தறுத்துட்டு ஓடிப் போயிட்டான்.’ என்கிறார். இதை நான் கதையாக உருவாக்கியிருக்கிறேன்.

நரோபா– ஆனால், இந்த குற்றக் கதைகள் எல்லாம் வாசிக்கும்போது நீங்கள் ஏதோ ஆய்வு செய்து எழுதியதாக தோன்றியது. அசலான குற்றங்களை அண்மையில் கவனித்து எழுதிய மாதிரி. ‘நானும் ஒருவன்’கூட அப்படித்தான் தோன்றியது.

சுரேஷ்– இல்லை, என்னோட உத்தியோகம் சார்ந்து முதலில் எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால், நாம் ஒருவர் மீது மிகவும் இரக்கப்படுவோம். இரக்கப்பட்டு நாம் அவனுக்கு எதாவது காரியம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். ஆனால் அது பொய்யாக இருக்கும்.

இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. நான் பணியில் இருந்தபோது, ஒரு அம்மா வந்து அழுகிறார். வீடு இடிந்து விட்டது என்று, அதற்கு ஆயிரம் ரூபாயோ என்னமோ கொடுப்பார்கள். மழையில் விழுந்துவிட்டது, இன்னும் ஏதேதோ சொல்கிறார். வேலையை முடித்துக்கொண்டு சரி போய் பார்க்கலாம் என்று இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று பார்த்தால் வீடு அப்படியே நிற்கிறது. இப்படி பல அனுபவங்கள். வெகுஜனங்கள் அப்பாவிகள்தான். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் உடனே நம்பிவிட முடியாது. அது வேறு மாதிரியும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று உணரும் சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி கிடைத்துக்கொண்டே இருந்தது.  ஆகவே தலைகீழ் விஷயங்களப் பற்றித்தான் அதிகமும் எழுதுகிறேன். தலைகீழ் விஷயங்கள், இல்லாஜிகல் அப்ஸர்டிட்டி, சமூகத்தில் எப்படியாவது பிழைத்திருப்பது என இது எல்லாமே பிரச்சினையாக உள்ளது. நட்புக்குள் இருக்கும் துரோகம், பொறாமை இதுபோன்ற முரணான விஷயங்களும் உண்டு.

நரோபா– சில கதைகளில் நல்ல பகடி முயற்சி செய்துள்ளீர்கள், ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ சரியான கிண்டல். இதிலுள்ள ஹிப்போகிரசியத்தான் நீங்க சொல்வதாக புரிந்துகொண்டேன். மற்றொரு கதை ‘பறக்கும் திருடனுக்குள்’ என்று நினைவு, அதில் அவன் ஒரு மகாராஜாவாக மாறிவிடுவான். அதில் ஒரு தீர்ப்பு சொல்வான். அதாவது ஏன் நீ ஒரு திருடன் இல்லை என்று சொல்லியிருப்பான். ஒரே ஒரு வரிதான். உங்களுக்கு இயல்பாகவே பகடியும் வருகிறது. குறைந்த மொழியிலேயே அதை கடத்திவிடவும் முடிகிறது.

சுரேஷ்– அது நாம் படிக்கிற பார்க்கிற அனுபவங்கள் சார்ந்து இருக்கிறது. ழான் ஜெனே (Jean Genet) வந்து திருடன். உங்களுக்கு தெரியும் இல்லியா?

நரோபா– இல்லை. தெரியாது.

சுரேஷ்– ழான் ஜெனே ஃப்ரான்ஸ்சில் ஒரு திருடன். வேசிக்கு பிறந்தவன்.  அண்டர்வேர்ல்டில் தான் வளர்கிறான். அம்மாவும் எங்கேயோ போய்விடுகிறாள். ஒண்ணும் தெரியாது. அநாதையாக வளர்ந்தவன். அவன் அடிக்கடி திருட்டுக் குற்றங்களுக்காக ஜெயிலுக்கு போகிறான். அவன் ஜெயிலுக்குள் வந்த பிறகு ஒரு புத்தகம் எழுதுகிறான். ‘மிராக்கிள் ஆஃப் த ரோஸ்’ அது ரொம்ப முக்கியமான புத்தகம். அப்போது சார்த்தர் மற்றும் வேறு சிலர் சேர்ந்து இவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்று சொல்லி விடுதலை செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஃப்ரான்ஸ் நாட்டு அதிபர் தலையிட்டு அவனை விடுதலை செய்ய சொல்கிறார். அவனைப் பற்றி சார்த்தர் ‘செயின்ட் ஜெனே’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கார். என்னிடம் அந்த புத்தகம் உள்ளது. வாசிக்க முடியாது. ஆயிரம் பக்கங்களுக்கு நீளும்.

நரோபா– இங்கு கூட ‘திருடன் மணியம்பிள்ளை’ உள்ளாரே

சுரேஷ்– ஆமாம். அவர் வேறொரு பார்வையில் பார்க்கிறார். இவன் எதையும் களங்கமில்லாமல் செய்கிறான். ஒரு பாதிரியார் பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது வேறு, ஆனால் இவன் எந்த தொழிலையும் தொழில் நேர்த்தியுடன் செய்கிறான். அவன் கொல்வதில்லை. திருடன் அவ்வளவுதான். மணியம் பிள்ளை மாதிரிதான், அவனுக்கும் திருடிய பின் ஒரு பரவசம் கிடைக்குது. யாரும் கண்டுபிடிக்க முடியாததை நாம் வெற்றிகரமாக செய்துவிட்டோம். அதாவது எந்த சாகசச் செயலும் ஒரு பரவசத்தை கொடுக்கும். எனது ‘நானும் ஒருவன்’ கதையில் இந்த பரவசம் வரும்.

நரோபா– ஒவ்வொரு இடத்திலும் சண்டை போட்டுவிட்டு வரும்போது அவனுக்கு கிளர்ச்சி உண்டாகுது. அடுத்த சண்டைக்கு தயாராக இருப்பான்.

சுரேஷ்– அந்தக் கதையில் நான் இரண்டு விதமான மனப்போக்குகளை காண்பித்திருப்பேன். அவன் வெட்டுப்பட்டு சாவது போலவும், சாகாதது போலவும், வெட்டுப்பட்டது ஒரு கற்பனையாக தோன்றும். இரண்டு சாத்தியங்களைத்தான் சொல்கிறேன்.

நரோபா– ‘ஒரு திருமணம்’ கதைகூட அப்படித்தானே.

சுரேஷ்– அதைப் பொறுத்தவரைக்கும் ஒரே சாத்தியம்தான். ஆனால் நான் வேறு மாதிரியாக காண்பித்திருப்பேன்.

நரோபா– அந்த கதைக்கெல்லாம் உங்களுக்கு ஏதும் எதிர்ப்பு வரவில்லையா?

சுரேஷ்– ஒன்றும் வரவில்லை. இந்த ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ கதைக்குதான் நிறைய பேர் கெட்டவார்த்தையில் திட்டி மெயில் அனுப்பினார்கள் என்று ஹமீது (மனுஷ்யபுத்திரன்) சொன்னார். “அவர்களுக்கு உங்கள் மெயில் ஐடி தெரியாது. அனுப்பி விடட்டுமா?” என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

நரோபா– பொதுவாக உங்கள் கதைகளுக்கு எதிர்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா?

சுரேஷ்– கதைகளைப் பொறுத்தவரை எனக்கு அப்படி எதுவும் வந்ததே இல்லை. பின் நவீனத்துவாவதியின் மனைவிக்கு மட்டும் வந்ததாக ஹமீது சொன்னார்.

நரோபா– இதையும் கூட முன்னுரையில் எழுதியுள்ளீர்கள் அல்லது ஏதோ ஓர் பேட்டியில் சொல்லியுள்ளீர்கள்.

சுரேஷ்– எங்கோ சொல்லியிருக்கிறேன். மற்றபடி என்னுடைய கதைகள் வெகுஜன பரப்பின் வாசிப்பிற்கு உரியவை கிடையாது. குறிப்பிட்ட எழுத்தாளர்கள் படிப்பார்கள். குறிப்பிட்ட வாசகர்கள்தான் வாசிப்பார்கள் மொத்த வாசக பரப்பே அவ்வளவுதான். இந்த ‘நடன மங்கை’ தொகுப்பின் கடைசியில், இலங்கை தொடர்பான கதை வரும். எல்லா தலைவர்களும் வருவார்கள்.

நரோபா– ஆம். ‘கலந்துரையாடல்’. நல்ல பகடி கதை.

சுரேஷ்– ஆம். அதில் ஒரு நல்ல பகடி உள்ளது. எல்லா தலைவர்களுமே வருவதால், எவராவது கொடி பிடிக்கலாம். இந்த ‘கனியன் பூங்குன்றனார்’ கதையில் நீ ஏன் பிராமணர்களைப் பார்த்து வருத்தம் கொள்கிறாய் என்று ஒரு வாசகன் கேள்வி கேட்கிறான்.

இப்போது நினைத்துப் பார்த்தால், ஒரேயொரு முறை மட்டும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. உயிர்மையில் அபுனைவு பத்தி எழுதி கொண்டிருந்தேன். அதில் இளையராஜாவின் இசை எனக்குப் பிடிக்காது என்று எழுதி இருந்தேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி நவீனமாக்கி வைத்திருந்த இசையை இவர் பின்னால் இழுத்துச் செல்கிறார் என்றொரு அபிப்ராயம் எனக்கு இருந்தது.

இவருடைய ‘மச்சானை பாத்தீங்களா’ காது கொடுத்து கேட்க முடியாது. நாராசம். இதைத்தான் எழுதியிருந்தேன். நான் ஜாதியைப் பற்றி எல்லாம் எதுவுமே எழுதவில்லை. இசையைப் பற்றிதான் சொல்லியிருந்தேன்.

நரோபா– பேட்டியில் உள்ளது..

சுரேஷ்– அப்போது நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன.

நரோபா– ஓ! இளையராஜாவை எப்படிச் சொல்லலாம் என்றா?

சுரேஷ்– ஆம். அதைவிட சாதி ரீதியாக அதைக் கொண்டு சென்றார்கள். நானும் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டு இருந்தேன். பிறகு கொஞ்ச நாளில் அது அடங்கிப் போனது. இது ஒன்றுதான் அச்சுறுத்தல் என சொல்லலாம். இளையராஜாவை விமர்சித்ததற்கு அவர் சேர்ந்த சமூகத்தார் சிலர் வழியாக கொஞ்சம் மிரட்டல்கள் வந்தன. பெரிய அளவில் என்றில்லை. தொலைபேசி அழைப்புகள் வந்தன. பதினைந்து இருபது நாட்கள் கொஞ்சம் அவதியாக இருந்தது. சமயங்களில் நான் எடுக்க மாட்டேன். நள்ளிரவுகூட அழைப்பார்கள். இவர்களிடம் என்ன பேசிவிட முடியும்? எப்படி நீங்கள் அப்படி சொல்லலாம் என்றால், ஒன்றும் சொல்ல இயலாது, என்னுடைய ரசனை அப்படித்தான் என்று மட்டும்தான் சொல்ல இயலும்.

ஆனால் எனக்கு இன்று வரை அதே அபிப்ராயந்தான். ஏனெனில், விஸ்வநாதன் ராமமூர்த்தி தபேலாவை ஒழித்தார்கள், ஆனால் இவர் எல்லா பாடல்களிலும் எடுத்தவுடன் டங்கு டாக்கு டங்கு டாக்கு என்று அடிக்க ஆரம்பிப்பார். பூராவும் பழைய பாணி, பழைய நெடி வீசுது. மெல்லிசை என்று கொண்டு வந்த, விஸ்வநாதன்– ராமமூர்த்தி தபேலாவை பயன்படுத்த மாட்டார்கள். பேங்கோஸ், வயலின்தான் பயன்படுத்துவார்கள். ராமமூர்த்தி வயலின் வாசிக்கக் கூடியவர். மெட்டுக்கள் கொஞ்சம் திரும்பத் திரும்ப வருவது போல இருக்கும். அது வேற விஷயம். ஆனால் இளையராஜா பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டார், அவருக்கு இத்தனை பெரிய இடம் எப்படி கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்கள் பிராயத்தில் கேட்ட பாடல்களோடு நினைவுகளால் பிணைந்துள்ளது. அதனால் அவர்கள் அந்தப் பாடல்களை அவர்கள் விரும்பி கேட்கிறார்களோ? அதற்காக அவர் போட்ட பாட்டுகள் எல்லாமே மட்டம் என்று நான் சொல்ல வரவில்லை.

நரோபா– புரிகிறது.

சுரேஷ்– பாட்டுக்கள் போட்டிருக்கார். அவர் அடைய வேண்டிய நிலை இதுவல்ல என்பதே நான் சொல்ல வருவது.

நரோபா– அவருடைய முக்கிய பங்களிப்பு என்பது செவ்வியல் இசைக்கு திரைபாணி அளித்தது என்று சொல்வார்கள். ராகங்களை திரையிசையில் அதிகம் அறிமுகம் செய்தவர் என்றும் சொல்வார்கள்.

சுரேஷ்– ஏ.ஆர் ரஹ்மான் போட்ட ராகங்களை விடவா? ‘மார்கழிப் பூவே’ என்றொரு பாட்டு உள்ளது, அது இந்தோளம். அதே ராகத்தில் அவர் என்ன பாட்டு போட்டிருக்கார் என ஞாபகத்தில் இல்லை. ஆனால் அந்த அளவுக்கு இருக்காது. ‘அழகான ராட்சசியே’ என்று ஒரு பாட்டு, அது ரீதி கௌலை. இவர் ரீதி கௌலையில் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று ஒரு சம்பிரதாயமான பாட்டு போட்டிருக்கிறார். நீங்கள் அதையும் இதையும் ஒப்பிடவே முடியாது. மிகச் சாதாரணமான மெட்டு அது. தபேலாவையும், புல்லாங்குழலையும் வைத்துக்கொண்டு பாடுவது. ஒரு இசைச் சேர்க்கை. ஆனால் ரஹ்மான் பாடலில் புதுமைகள் பல பார்க்கலாம்

நரோபா– பொதுவாக உங்களுக்கு எப்படி மரபிசையின் மீது ஈடுபாடு வந்தது? தமிழிசை சம்பந்தமாகவும் நீங்கள் சில பணிகளை செய்கிறீர்கள். மரபிசை உங்கள் படைப்பூக்கத்திற்கு ஏதாவது வகையில் பங்களிப்பு ஆற்றுகிறதா?

சுரேஷ்– படைப்பூக்கத்திற்கும் அதற்கும் எதுவும் சம்பந்தமில்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள், எனது பாட்டிகூட படித்தவர் தான். எனது பாட்டி என்றால், அவருக்கு எத்தனை வயதென்றே சொல்ல முடியாது, நினைவு தெரிந்த நாளில் இருந்தே பாட்டியாகவே இருந்தவர், எனக்கு இப்போது 65 ஆகிறது, எனக்கு முப்பதிருக்கும்போது அம்மாவிற்கே அறுபதிருக்கும், அப்போதுதான் அந்த பாட்டி இறந்தார். அவர் வாசிப்பார். அவருடைய கணவர் ராமநாதபுர சமஸ்தானத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர். எனது தந்தை அக்காலத்தில் இண்டர்மீடியட் படித்தவர். எனது மூத்த சகோதரர் ராமேஸ்வரம் தீவின் முதல் பொறியாளர். எல்லோருக்குமே படிப்பில் ஆர்வம் உண்டு. எனது அண்ணியின் வருகைக்குப் பின் புத்தகங்கள் வீட்டிற்குள் நுழைந்தன. இத்தகைய வாசிப்பு பின்னணி உள்ளதால் புஸ்தகங்கள் அறிமுகமாகின. இசையைப் பொறுத்தவரை எனது அண்ணனுக்கும் மாமாவிற்கும் இசை கேட்கும் பழக்கம் உண்டு. அவர்களுக்கு எப்படி இந்தப் பழக்கம் வந்தது என தெரியவில்லை. கிராமபோனில் மதுரை சோமு, எம்.எஸ்., தியாகராஜ பாகவதர், ஜி.என்.பி. என முக்கியமான ஆட்களுடைய பாடல்களை போட்டுக் கேட்பார்கள். நானும் கேட்பேன். அவர்கள் இல்லாதபோது நானே போட்டுக் கேட்க துவங்கினேன். பின்னர் நான் அப்போதே சபாக்களுக்குச் செல்லத் துவங்கினேன். சென்னையில் இருந்தபோது திரைப்பட நூற்றாண்டு விழாவோ பவள விழாவோ, ஏதோ ஒன்று நிகழ்ந்தது, சரியாக நினைவில்லை, பழைய திரைப்படங்களை திரையிட்டார்கள். அப்போது எம்.எஸ்.சும், ஜி.என்.பியும் சேர்ந்து ஜோடியாக நடித்த ‘சகுந்தலை’ திரைப்படம் பார்த்தேன். எனது அண்ணனின் கிராமபோன் ரிக்கார்டுகளில் ‘சகுந்தலை’ பாடலும் உண்டு. சட்டென நினைவில்லை, சில பாடல்கள் எல்லாம் மிக பிரமாதமாக இருக்கும், கழுத்தில் மாலையை போட்டுக்கொண்டு “எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன” என்று பாடிக் கொண்டே எம்.எஸ். நடந்து வருவார், ஜோடி பாடல்களில் எம்.எஸ். ஜி.என்.பியை தூக்கி வீசியிருப்பார். மெல்லிசையில் பிரமாதப்படுத்தியிருப்பார், ‘பிரேமையில் யாமும் மகிழ்ந்தேனே’, அவருடைய ஒரு பிர்க்காவிற்கு முன் ஜி.என்.பியால் நிற்கவே முடியாது, அப்போதே இசையின் நுட்பங்களைப் புரிந்து கொண்டேன். ‘சகுந்தலை‘ திரைப்படத்தை அன்று, மறுநாள், மூன்றாம் நாள் என நாலைந்து நாட்கள் பாடல்களுக்காக திரும்ப திரும்ப பார்த்தேன். ஆனால் எம்.எஸ்.ஸின் கர்நாடக இசையின் மீது அதிக மதிப்பு கிடையாது, முழுவதும் பக்தி இசையாகச் சுருங்கிவிட்டது, வேறொரு பேட்டியில்கூட குறிப்பிட்டிருக்கிறேன், சதாசிவத்தின் ஆளுகையின்கீழ் மனைவியாக இல்லாமல், ஜி.என்.பியுடன், ஒரு துணையாக, திருமணம் ஆகாமல் இருந்தால்கூட தன்னளவில் பெரிய படைப்பூக்கம் மிக்க இசைக் கலைஞராக திகழ்ந்திருக்க முடியும். ஆனால் பக்தி இசை அவரை விழுங்கிவிட்டது.

Image result for gnb and ms

நரோபா– பொதுவாகவே கர்நாடக இசையில் பக்தி ஒரு தளையாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

சுரேஷ்– ஆம் என்றே எண்ணுகிறேன். எழுதவும் செய்திருக்கிறேன். பக்தியில் இருந்து கர்நாடக இசையை வெளியே கொண்டு வந்தால் இன்னும் பெரிய இடத்திற்குச் செல்லும். சஞ்சய்யை வைத்துக் கொண்டு சில ஏற்பாடுகளை செய்ய நினைத்தேன். சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை., ‘காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்.. மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை… ’இந்த நான்கு வரிகளை வைத்துக்கொண்டு ராகம் தானம் பல்லவி பாடுங்கள் நன்றாக இருக்கும் என்றேன். பக்தி விலகிவிட்டால் நிறைய நல்ல பாடல் வரிகள் உண்டு, சினிமா பாடல்களிலேயே நிறைய நல்ல வரிகள் உண்டு, ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினிலே இருக்கையில் எனக்கு’ இந்த இரண்டு வரிகளை மட்டுமே கொண்டு ராகம் தானம் பல்லவி பாடலாம். இசை அறிமுகமானபின், சபாக்களுக்கு சென்றேன், இசைத்தட்டுக்கள் கேட்டேன், பின்னர் டேப் ரிக்கார்டர் கேட்டேன், எனக்கு உவப்பானவராக மதுரை மணி ஐயர் மற்றும் சோமுவைச் சொல்லலாம். இருவருமே சம்பிரதாயமாக பாடுபவர்கள் அல்ல, என்னை ஜி.என்.பி அவ்வளவாக ஈர்த்ததில்லை, மணி அய்யர் ‘உழழழோ’ என்றெல்லாம் பாடுவார், ‘கமகம காக ஜகஜகஜாகா’ என்றெல்லாம் பாடுவார், அவரை எதற்குள் அடக்க முடியும் என்றே தெரியாது, சோமு பேகடா ராகம் தானம் பல்லவி ஒன்று கொடுத்திருக்கிறார், வெவ்வேறு ராகங்களாக இணைத்து கொளுத்தியிருப்பார், யூ டியுபில் இருக்கிறது, முதலில் விட்டுவிடுவேன், கடைசியில் ஸ்வரம் பாடும் இடத்திற்கு சென்றுவிடுவேன், சம்பிரதாயமான இசையை ஜி.என்.பி, மகராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோர் வழங்குவார்கள், ஆனால் மணி ஐயர் சம்பிரதாயமாக இசைப்பவர் அல்ல, ஸ்வரத்தில் புதுமையாக பாடுவார், வயலின் வாசித்துக் கொண்டிருக்கும்போது, இவர் பாட்டுக்கு ‘லாலாலலாலாலா’ என்றெல்லாம் பாடுவார், இப்படியெல்லாம் பாடவே மாட்டார்கள், சோமுவும் கிட்டத்தட்ட இப்படித்தான், இருவரிடம் மட்டும்தான் சம்பிரதாயம் இல்லாத இசையைக் கண்டேன். பின்னர் ஒரு கட்டத்தில் சம்பிரதாயமான இசையில் மிக மேன்மையான இசையை சேஷகோபாலனிடம் பார்த்தேன், தர்மவாதியில் ஒரு பாடல், நீண்ட நாட்கள் ஒரு கேசட் வைத்திருந்தேன், இப்போது கேசட்டே இல்லை, மிகப் பிரமாதமாக இருக்கும்.

இதன் பின்னர் சஞ்சய்தான், ராகம் தானம் பல்லவியில் வித்தைக்காரர். ஸ்வரம் பாடுவதில்தான் படைப்பூக்கத்தை காட்ட முடியும், கீர்த்தனை மட்டும் பாடினால், பாட்டைப் பாடுவதுதானே, ஆலாபனையில் ஓரளவு வெளிப்படுத்த முடியும், சங்கீதத்தின் சிறப்பு என்பது ஆலாபானையிலும் ஸ்வரத்திலும்தான் இருக்கிறது, பாட்டு என்பது ஒரு சாக்கு, பாட்டையும் பிர்க்கா போட்டு நுட்பமாக பாடலாம் என்பது வேறு விஷயம், ஆனால் ஆழமான சங்கீதத்திற்கு ஸ்வரமும், ஆலாபனையும் முக்கியம், அப்படி பார்க்கையில் எனக்கு சஞ்சய் சுப்பிரமணியன் முக்கியமானவராக தெரிகிறார், வருடத்திற்கு இருமுறை மதுரைக்கு வருவார், எங்களுடன் இரவுணவு உண்பார், முன்னரே கூறிவிடுவேன் ஏதோ ஒன்றை பாடுங்கள் என, ‘தமிழுக்கும் அமுதென்று பெயர், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்’ முக்கால் மணி நேரம் ராகம் தானம் பல்லவி செய்தார், மற்றொரு தருணத்தில் ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்…’ இது பாரதியார் பாடல், அது பாரதிதாசன் பாடல், இதை ராகம் தானம் பல்லவி செய்தார், மிக அற்புதமாக இருந்தது, திருக்குறளைக்கூட ராகம் தானம் பல்லவி செய்கிறார், எல்லாமே சாத்தியம்தான்.

Image result for sanjay subrahmanyan

நரோபா– டி.எம்.கிருஷ்ணாகூட இப்படி நிறைய செய்கிறார் அல்லவா

சுரேஷ்– அவர் பக்தியை விட்டு வெளிவந்து நிறைய பாடல்கள் பாடுகிறார். ஆனால் நான் ஏற்கனவே எழுதி இருந்தேன்…

நரோபா– பாடகராக அவர் சஞ்சய் அளவுக்கு இல்லை எனச் சொல்லலாமா?

சுரேஷ்– இல்லை அப்படி ஒப்பிட வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். சங்கீத உலகத்தின் முதல் கலகக்காரன். என்னுடைய மதிப்பிற்குரியவர், அந்த மரியாதை எப்போதும் உண்டு. சங்கீத உலகில் இருப்பவர்கள், சபாக்களை நடத்துபவர்கள் ஆகியோரைப் போல் சனாதான மனப்பான்மை கொண்டவர்கள் வேறு எங்குமே இல்லை.. சபா முக்கியஸ்தர்கள் பேசுவதைக் கேட்டாலே சுர்ரென ஏறும், நான் எழுதிய புத்தகத்தை ஒருவர் படித்துவிட்டு கொடுத்தேன், நீங்கள் என்ன மிகவும் கீழிருக்கும் ஆட்களை பற்றி எல்லாம் பரிதாபப்பட்டு எழுதுகிறீர்களே என்று கேட்டார். இந்த மனப்பாங்கை சகிக்கவே முடிவதில்லை. சனாதன மனப்பாங்கு சமூகத்தில் பரவலாக வேறு எங்குமே இல்லை, முழுக்க சங்கீத உலகத்தில் திரண்டு நிற்கிறது. சபாக்கள் எல்லாமே பிராமணர்களால்தான் நடத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பிராமணர் அல்லாதவர்களே நான்கைந்து பேர்தான் கச்சேரியில் உட்கார்ந்து இருப்போம். அவர்களுடன் பழக பழகத்தான் அவர்களின் சனாதன மனப்பாங்கு தெரிகிறது. நவீன சிந்தனைகளே இல்லை. இவை எல்லாம் ஓரிடத்தில் சேர்ந்து இருக்கிறது.

அதற்குள்ளே இருந்துக்கொண்டு கிருஷ்ணா புரட்சி செய்கிறார். பாடகர்களை நடுவில் அமரச் செய்து இரு பக்கமும் பிறரை அமரச் செய்வார்கள், இவர் அரைவட்டமாக அமர்கிறார். பாடகர் பாடிய பிறகு வயலின் வாசிப்பது வழக்கம். ஒரு கச்சேரியில், “நீ வயலினை வாசி, நான் அதைப் பாடி காண்பிக்கிறேன்”, என்கிறார். எல்லா கச்சேரிகளிலும் இப்படிச் செய்வதில்லை. சில கச்சேரிகளில் செய்கிறார். இந்த வடிவத்தையே மாற்ற வேண்டும் என்கிறார். எதற்கு ராகம் தானம் பல்லவியை கடைசியில் பாட வேண்டும்? அன்று ஒரு கச்சேரியில் எடுத்தவுடனே ராகம் தானம் பல்லவியை பாடுகிறார். இவர்களுக்கு எல்லாம் பதட்டம், ராகம் தானம் பல்லவியை எப்படி முதலில் பாடலாம்? இதை கடைசியில்தான் பாடவேண்டும். ‘அய்யா அப்படி எதாவது விதி இருக்காய்யா..இல்லைங்க அது தான பழக்கம், அப்படித்தான செய்யணும், இவன் என்னங்க இப்படி செய்றான், எல்லாத்தையும் உடைக்கிறான்’ இப்படித்தான் எதாது ஒரு சர்ச்சை வந்துவிடுகிறது. அவர் அதற்காகத்தான் அப்படி செய்கிறார். முன்னால் பாடினால் என்ன பின்னால் பாடினால் என்ன? நல்லாயிருந்தால் சரிதானே. அந்த வகையில் அவர் பெரிய புரட்சிக்காரர்.

சங்கீதத்த பொறுத்தவரையில் விளம்ப காலத்தில் அவர் பாடுகிறார். உங்களுக்கு விளம்ப காலம் என்றால் தெரியுமா? விளம்ப காலம், துரித காலம் என்று இரண்டு உண்டு. விளம்ப காலம் என்றால் மெதுவாக பாடுவது, துரித காலம் என்றால் கொஞ்சம் வேகமா பாடுவது. சஞ்சய் துரித காலத்தில் பாடுவார். பாம்பே ஜெயஸ்ரீ விளம்ப காலத்தில் பாடுவார். ஓரளவு மத்திம காலத்திற்கு வந்துவிட்டுச் செல்வார்கள். பாம்பே ஜெயஸ்ரீ சங்கீதம் பாடுவதை எல்லாம் கேட்கவே முடியாது, மத்திம காலத்திற்கே வர மாட்டார், மிக மெதுவாக விளம்ப காலத்திலேயே பாடுவார். கிருஷ்ணா விளம்ப காலத்திலும் மத்திம காலத்திலும் பாடுவார். நான் அவரிடம் விளம்ப காலத்தில்தான் பாடுகிறீர்களா? என்று கேட்டேன், ஆம் என்றார், மிகவும் லயித்துப் பாடுவார், அவருடைய சிறப்பு என்பது எப்படி லயிச்சு பாடுகிறார் என்பதே. சஞ்சய் பாடலில் கொண்டு வரும் வித்தைகளை இவர் கொண்டு வருவதில்லை. மக்கள் பழக்கத்திற்கு அடிமை ஆகிவிடுவார்கள். பழக்கத்தை மீற மாட்டார்கள், பழகிய தளத்திலேயே செல்வார்கள். எங்கள் அம்மா எனக்கு சின்ன வயதிருக்கும்போதே விதவை ஆகிவிட்டார்கள். பூ போட்ட சீலை கட்ட முடியாது, நெற்றியில் பொட்டு வைக்கமுடியாது, செருப்பு போடுவதே பெரிய விஷயமாக இருக்கும், அந்த மாதிரி ஒரு சூழ்நிலை, இன்று எல்லோரும் சின்ன பொட்டாவது வைத்துக் கொள்கிறார்கள், சில பேரு பூவும் சூடிக் கொள்கிறார்கள், பூ போட்ட சீலை எல்லாம் இன்று ஒரு விஷயமே இல்லை. சமூகம் மெதுவாக உள்வாங்கி வந்திருக்கு. இந்த மாற்றம் வர எத்தனை வருடம் ஆகியிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

நரோபா– ஒரு முப்பது வருஷம்..

சுரேஷ்– முப்பது வருடமா! என்னுடைய இந்த 65 வயது வாழ்க்கையில், நான் சமீபமாக, ஒரு பத்து வருடமாகதான் இந்த மாற்றத்தைப் பார்க்கிறேன். அதற்கு முன்னால் இந்திய சமூகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் எத்தனை காலமிருக்கும்? இத்தனை காலமாக இது நடக்கவில்லையே. நான் கிருஷ்ணாவிடம், நீங்கள் ஏதோ மாற்றம் கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள், ஆனால் உங்கள் காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை என்று சொன்னேன். இந்த பொட்டு வைக்கும் விஷயத்தை பத்தி பெல்ஜியத்தில் இருப்பவனிடம் சொன்னால் அவனுக்கு இந்த விஷயமே புரியாது. இங்கே அது பெரிய விஷயமாக இருக்கிறது, கடந்த பத்து வருடமாகதான் இந்த மாற்றங்களைக் காண்கிறேன், பத்துகூட இல்லை ஐந்து வருடங்கள்தான். கிராமத்திற்குச் சென்றால் தாவணியே கிடையாது, சுடிதார்தான், எனக்கு தெரிந்து 1980 வரைகூட நவீன உடை அணிந்திருந்தால் கிராமத்தில்- எம்.ஜி.ஆரே ‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள’ என்று கிண்டல் செய்வார்- சாலையில் சுடிதாரோடு நடந்தால் கிண்டல் செய்த காலங்கள் எல்லாம் உண்டு. இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ எத்தனை நூற்றாண்டு ஆகியிருக்கு?

கிருஷ்ணாவிடம் சொன்னேன், நீங்க சொல்வது எல்லாம் சரிதான், ஆனால் கஷ்டம், நல்ல விஷயமும்கூட, எல்லா கலையும் ஒன்றே என ஆக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அது கொஞ்சம் கஷ்டம், செவ்வியலும் நாட்டுப்புறமும் வெவ்வேறான ரசிகர்களுக்கு உகந்தது. என்னால்கூட நாட்டுப்புறப் பாடல்களை ரசிக்க முடியாது. அறிவுபூர்வமாக நோக்கினால் அதிலும் ஒரு படைப்பூக்கம் இருக்கிறது என்பது புரிகிறது, ஆனால் அது எனக்கு வசப்படாமல் இருக்கலாம், கூத்து பார்த்திருக்கிறேன், அது என்னை ஈர்க்கவில்லை. ஆனால் தர்பாரி கானடாவில் ஒருவர் இழுத்து பாடுகிறார் என்றால் அது என்னை ஈர்க்கிறது. இப்போதும் கிருஷ்ணாவை கச்சேரிகளில் தவிர்க்க முடிவதில்லையே, அழைக்கிறார்களே. தவிர்க்கலாம் என்றால் மகசேசே விருது வாங்குகிறார், இந்திரா காந்தி விருது வாங்குகிறார், இதெல்லாம் உங்கள் பாதுகாப்புக்குதான், இன்னமும் எவன் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போது அவனுக்கு என்ன யோசனை வரும் என்றால், இவர் ஒரு வித்தியாசமான பிறவி, எதற்கும் நாமும் அங்கீகரித்து விடுவோம். அவர் தன் போக்கில் எதையாவது சொல்லிக் கொண்டு போகட்டும். பாடுவதைப் பாடட்டும். பொறம்போக்கு என்று ஒரு பாடலை பாடியிருப்பார். கேட்டதுண்டா? அதை போல் பிறர் செய்ய முடியுமா?

Image result for tm krishna

இப்போதைய சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு ஆள். அவர் தாழ்த்தப்பட்டவர்களை கர்நாடக சங்கீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார். அவர் சொல்வது நிறைவேற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது எனது அபிப்பிராயம். அடுத்ததாக ஜனங்களின் மந்தை குணம் ஒரு சிக்கல். ஒரு கதையில்கூட எழுதி இருப்பேன், ‘மந்தையில ஒருத்தனா இருந்தா என்ன செய்வது?’ எந்தக் கதை என்று நினைவில்லை. புதுமைப்பித்தனின், ‘சிற்பியின் நரகம்’ என்றொரு கதை நினைவிருக்கிறதா? அதோட சுருக்கம் மட்டும் சொல்கிறேன். ஒரு சிற்பி நடராஜர் சிலையை வடிப்பார். ஒரு நாத்திகன், ரோமாபுரிக்காரன் இதை என்ன செய்யப் போகிறாய் என கேட்பான். கோவிலில் பிரதிஷ்டை செய்யப் போகிறேன் என்பான். வேண்டாம், அந்தப்புரத்தில் வைத்தால்கூட பயன்படும், கோவிலில் வைக்காதே, இதை எவருமே கவனிக்க மாட்டார்கள். மகத்தான கலையை உருவாக்கி இருக்கிறாய், இதற்கு நிகராக எதையுமே வைக்க முடியாது, படைப்பூக்கம் மிகுந்தது என்பான். கடைசியில் அவர் கோவிலில் நிறுவி விடுவார், பிரதிஷ்டை செய்த பின் கூட்டம் கூட்டமாக மக்கள் எனக்கு மோக்ஷம் கொடு என வணங்கி செல்வார்கள். சிற்பி பார்த்த வரையில் எவருமே அந்த சிலையின் நுட்பத்தையோ படைப்பூக்கத்தையோ காணவில்லை. சிற்பி அன்று இரவு வீட்டிற்கு வருவார், கனவு காண்பார், கனவில் அந்த சிலையைத் தழுவி, அற்பச் சிலையே என்று சொல்லி உடைத்து விடுவார், திடுக்கிட்டு விழிப்பார், விழித்ததும் விபூதியைப் பூசி கொள்வார், அவ்வளவுதான் கதை அத்தோடு முடிந்தது.

புதுமைப்பித்தன் படைப்பூக்கத்துடன், தனித்தன்மையுடன் இரு, மந்தையாக இருக்காதே என்கிறார்.

நரோபா– உங்களை முதலிலேயே கேட்க வேண்டும் என்று நினைத்தேன், சுரேஷ் சந்திரகுமார் எப்படி சுரேஷ்குமார இந்திரஜித் ஆனார்?

சுரேஷ்– என் தாத்தா வைத்த பெயர் சுரேஷ் சந்திரகுமார். என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது சுரேஷ்குமார் எனும் பெயரில் சேர்த்துவிட்டார்கள். நான் சுரேஷ்குமார் எனும் பேரிலேயே சின்னச் சின்ன கதைகள் எழுதியிருக்கேன். ஒரு வகுப்புக்குள் சென்று சுரேஷ்குமார் என்று அழைத்தால் நான்கு பேர் எழுவார்கள்.

நரோபா– ஆமாம் 60/70களில் மிகவும் பொதுவான பெயர்தானே அது?

சுரேஷ்– ஆம். சுரேஷ்குமார், சுரேஷ்பாபு இப்படி. என் அலுவலகத்திலேயே ஐந்து பேர் இருந்தார்கள். பள்ளியில் படிக்கும்போதே, 70களிலே நான் முடிவு செய்து கொண்டேன். சம்பிரதாயமாக கதை சொல்லும் ஆளில்லை நாம், மாயமாக விசித்திரமாக சொல்லப் போகிறவன். ஆகவே இந்திரஜித் எனும் பெய்ர் பொருத்தமாகப் பட்டது. இந்திரஜித் என்று சொல்லும்போது எழும் ஓசைநயம் பிடித்திருந்தது. இந்திரஜித் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றால், சுரேஷ்குமார் எனும் பெயரில் நிறைய கதை வெளியாகிவிட்டது. அப்போது இலங்கை பெயர்கள் தமிழ் சூழலில் மிகவும் பிரபலம். குமாரா, குணவீரா… இப்படி. சரி நாம சுரேஷ்குமார இந்திரஜித் என்று பெயரை மாற்றினால் என்ன என்று தோன்றியது. அனேகர் சுரேஷ்குமார் இந்திரஜித் என்றுதான் எழுதுவார்கள். ஆனால் உண்மையில் என் பெயர் சுரேஷ்குமார இந்திரஜித். இந்த பெயரை வைத்து எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது இந்த பெயரில உலகத்திலேயே யாரும் கிடையாது என்பது. (சிரிக்கிறார்)

(நரோபாவும் சிரிக்கிறார்)

சுரேஷ்– அப்புறம் இந்த தாக்கத்தில் சென்னையில் சிலர் பேரை மாற்றிக்கொண்டார்கள். அப்போது சென்னையில பரீக்‌ஷா ஞாநியின் இடத்தில் பிரபஞ்சன், திலீப்குமார், நான், மாமல்லன் (அப்போது அவர் பேரு நரசிம்மன்), எல்லாரும் சந்திப்போம். மாமல்லன் மிகவும் வசீகரமாக இருப்பார். அஸ்வினி என்று ஒரு பத்திரிக்கையில் மாமல்லன் என்ற பெயரில் ஏற்கனவே ஒருத்தர் எழுதினார். சரி, அதனால் வேறு எதையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும் என யோசித்து, விமலாதித்த மாமல்லன் என்கிற பெயரை அவரே முடிவு செய்தார். நாங்கள் அப்போது உடனிருந்தோம். இப்போது இந்திரஜித் எனும் பேரில் ஒருவர் மலேசியாவில எழுதுகிறார்.

நரோபா: உங்களுக்கு மரபு பற்றியும் தொன்மங்களைப் பற்றியும் இருக்கும் மதிப்பீடு பற்றிய கேள்வி இது. சில கதைகளில் நீங்கள் மரபை கருவாக வைத்துள்ளீர்கள். தொன்மங்கள், மரபான நம்பிக்கைகள் பற்றி கொஞ்சம் பேசலாம்…

சுரேஷ்– முக்கியமான விஷயம்- கட்டுடைப்பு, ஒன்று எப்படி உருவாகுதோ அதை உடைத்துப் பார்க்கவேண்டும். நீங்கள் என்ன கேட்டீர்கள்?

நரோபா– தொன்மங்கள் பற்றி. ரொம்ப குறைவான கதைகளில்தான் தொன்மங்கள் பேசப்பட்டுள்ளன.

சுரேஷ்– ஆம் அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கதை ‘விரித்த கூந்தல்’ பாஞ்சாலியின் சபதத்தை நினைவு படுத்தக் கூடியது. என் அனுபவம் கொண்டு பார்க்கும்போது எங்கள் வீடுகளில் கூந்தலை விரித்துப் போட்டிருந்தால் திட்டுவார்கள். கூந்தல் என்பது பிறரது கண்களில் ஆர்வத்தைத் தூண்டுவது. அழகும்கூட. பழிவாங்குவதின் குறியீடு. இந்த பெண்கள் எல்லாருக்குமே திருமணம் பிரச்சினைதான். ஒரு ஆணுக்கு உடைமையாக இருப்பதும் பிரச்சினைதான். பெண்களின் விரித்த கூந்தல் ஏன் அப்படி தொந்திரவு பண்ணிக் கொண்டிருக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது. பாஞ்சாலியின் விரித்த கூந்தல் பழி வாங்குவதன் குறியீடு. அந்த கதையில் வரும் பிச்சைக்காரி தேருக்கு அடியில் மணப்பெண் மாதிரி அமர்ந்திருப்பாள். அந்தக் காட்சியை என்னால் விவரிக்க முடியாது. ஏன் ஒரு பைத்தியக்காரி அப்படி ஒரு விரித்த கூந்தலோடு உட்கார்ந்திருக்கிறாள்? வாடிப்போன பூவை சூடிக்கொண்டு ஏன் அப்படி உட்கார்ந்திருக்கிறாள்? நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள், அவள் அப்படி அமர்ந்திருக்கிறாள். இதையெல்லாம் நீங்கள் விளக்க முடியாது. இதை ஒரு காட்சியாகவே உள்வாங்கினால் தான் நீங்க அதில் பயணிக்க முடியும். அதை விவரிக்கத் தொடங்கினால் நான் தோற்றுப்போயிடுவேன். சொல்லச் சொல்லச் சொல்ல அங்கு ஒன்றுமில்லாமல் போய் விடும்.

அதே மாதிரி, மஹாபாரதம் எனக்கு தொன்மம் கிடையாது. அது இதிகாசம். அதில் வரும் கிருஷ்ணனைக் கடவுளாகப் பார்க்க வேண்டாம். அவன் அதீத மனிதன். அந்த இதிகாசத்தில் குண மோதல்கள் நிறைய உள்ளது. மன மோதல்களை எல்லா கதாபாத்திரங்களும் சந்தித்தபடி இருக்கும். ஒரு காரியத்தை விளக்க வேண்டுமென்றால் ஒரு கதாபாத்திரத்தை உவமானமாகச் சொல்லி விளக்குவார்கள். தொன்மம் என்று சொல்லும்போது, எது தொன்மம் என்பது எனக்குத் தெரியவில்லை. சிலம்பு, விரித்த கூந்தல் இப்படி சில குறியீடுகள் உள்ளன. மற்றபடி மதத்தை முன்னெடுக்கும் நூலாக இருந்துவிடக்கூடாது. சில கதைகளில் இந்து மதத்தை நான் கேலி செய்திருப்பேன். கேலி என்றால், நான் அதை தத்துரூபமா சொல்கிறேன் அது கேலியாக ஆகிவிடுகிறது. என்ன செய்வது? கமலஹாசனின் அன்பே சிவம் படத்தில் எல்லா தப்பையும் செய்துவிட்டு அன்பே சிவம் என்று சொல்லிகொண்டிருக்கும் ஒரு பாத்திரம். அது இங்கு இருக்கும் இயல்புதான். முருகா என்று சொல்லிவிட்டு அடுத்து எவனைக் கெடுக்கலாம் என்று திட்டம் போடுவார்கள். அதனால் நாம் இந்த மாதிரி மரபைக் கட்டுடைக்க வேண்டும்.

நரோபா– பின்நவீனத்துவத்தில் இது போன்ற தொன்மங்களுக்கு மீள்விளக்கம் செய்கிறார்கள். ‘விரித்த கூந்தல்’ வெளிநாடுகளில் எப்படி பொருள்படும்? இது போன்ற படிமங்களை எப்படி பார்க்கிறீர்கள்? போர்ஹெஸ் அவரோட கதைகளை நவீனத்துவத்துவத்திற்கு தொடர்பில்லாமல் எழுதுகிறார். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பவை போல. கிரேக்க தத்துவத்தையும் எடுத்துக்கொள்கிறார். அது போல நம் தொன்மங்களின் படிமங்களை மட்டும் எடுத்து பார்க்கும் ஆர்வம் உண்டா?

சுரேஷ்– எனக்குத் தொன்மங்களில் அத்தனை ஈடுபாடு இல்லை. தொன்மங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணம் சொல்லுங்கள்?

நரோபா– அதாவது பழைய நாட்டாரியல் தொன்மங்களைக் கதையாகப் பயன்படுத்துவது. உதாரணத்திற்கு அகலிகை கதையை புதுமைப்பித்தன் எழுதியிருப்பார். ஜெயமோகன்கூட ‘மாடன்மோட்சம்’ கதையில் கிறிஸ்துவத்துக்கும் நம் நாட்டார் தெய்வங்களுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியை அரசியல் பகடியாகச் சொல்லியிருப்பார். அது மாதிரி.

சுரேஷ்– எனக்கு அதில் ஆர்வம் இல்லை. முடிந்தால் demythify செய்வேன். இப்ப ‘போதி’யில் கூட ஜெயமோகன் அதைச் செய்திருப்பார். மடம் என்றால் ஒரு அதிகாரச் போட்டி இருக்கும். தலைமை எப்ப சாவார் என்று இன்னொருத்தன் சதி செய்வான். இதுதான் தலைகீழ் கோணம். இதுதான் demythify பண்றது. என்னால் அந்த மாதிரி demythify பண்ண முடியும். ‘ஒரு திருமணம்’ என்ற கதையில் ஆண்டாளை அப்படித்தான் அணுகியிருப்பேன். விஷ்ணு இவரைக் கூட்டிப்போவதற்கு வழி கிடையாது. அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் என வரலாறு தெரியவில்லை. மாயமாக மறைந்திருக்க முடியாது. இறந்திருக்க வேண்டும். பகுத்தறிவுடன் சிலவற்றை காணலாம். ராமலிங்க அடிகளார் ஒரு அறைக்குள் போய் காணாமப்போயிட்டதாக சொல்வார்கள். அப்படி ஆக முடியுமா? அவர் எதாவது ஊர் பேர் தெரியாத இடத்துக்குப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கு. மறைந்துத் திரியும் கிழவனாக இருக்கலாம். நம்மால் நம்ப முடியாது இல்லையா?

நரோபா– இலங்கை IPKF சிக்கலை பற்றி 1991 லியே ஒரு கதை எழுதியுள்ளீர்கள்.‘சந்திப்பு’. இலங்கை கதைகள் அனைத்துமே வேற ஒரு தேசத்தில நடப்பதாக எழுதியிருந்தது நன்றாக இருந்தது. இந்திய சமூகத்தைப் பற்றிய பெரிய அவதானிப்புகள் அந்த கதைகளில் இருந்தன.

சுரேஷ்– இன்னொருவன் பார்வையிலிருந்து பார்த்தால் நம் பிரச்சனைகள் வேறு மாதிரி தெரியும். அதுதான் நான் செய்ததும். மேலும் சில விஷயங்களை அப்படி சொன்னால்தான் துலக்கமான பார்வை கிடைக்கும். என்னுடைய ஒரு கதையில் ஒரு குளம் வரும். ஒரு ஏக்கர் பரப்போட இருக்கும் அது. மஹாமக குளம் மாதிரி. அந்த குளத்தோட பரப்பளவுக்கு ஜனத்தொகையைக் கணக்கு செய்தால் எந்த விஷயத்திலும் அது அடங்காது. ஆனால் முட்டிக்கால் அளவுதான் தண்ணீர் இருக்கும். இவ்வளவு பேர் இறங்கினால் தண்ணீர் என்ன ஆகும்? அது வேற ஒரு விஷயம். ஒரே நேரத்தில் அந்த குளத்தில் குதிப்பார்கள். கடவுள்களுக்கு நான்கு மனைவி ஐந்து மனைவி எனச் சொல்லும்போது அதில ஒருத்தன், என்னடா இப்படியிருக்கு, எனச் சொல்வான். அது பகடிதான். ஆனால் நம்மிடையே இது இருக்கிறது.

இந்து மதத்தில ஒரு பன்மைத்துவம் உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில எப்படி இருக்கு? அவனால் இந்து என்பவன் யார் என திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. those who are not christians, who are not parsis, who are not muslims என்று சொல்லி தான் Hindus என்று சொல்லமுடிகிறது. ஒரு கல்லைக் கும்பிடுகிறார்கள், மரத்தைக் கும்பிடுகிறார்கள், பெரிய சிவலிங்கத்தையும் கும்பிடுகிறார்கள். எதை வேண்டுமானாலும் கும்பிடலாம். காற்று, மரம், நீர் அப்படி. அப்படி என்றால் அதற்குள் ஒரு தத்துவம் இருக்கு என்று நினைத்துக்கொள்ள வேண்டும். இந்த பன்மைத்துவம் ஒரு சிறப்பும்கூட. ஆனால் இதில் தலைகீழாக்கம் இருக்கு. என் அனுபவத்தில் நாங்கள் சிறு தெய்வங்களைக் கும்பிடுவதில்லை. சிறு தெய்வக் கோயில்களுக்குப் போவதில் ஈடுபாடு கிடையாது. பெருந்தெய்வம்தான். எங்கே சென்றாலும் நான் பெருங்கோயிலுக்குப் போவேன். எனக்குப் பிடிக்கும். என்னுடைய குடும்பப் பின்னணியில் சிவாலயங்கள்தான் முக்கியம். ராமேஸ்வரத்தில் வாழ்ந்த எங்கள் அப்பாபெயர் ராமநாதன். அடுத்த வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் எல்லாரும் ‘ராமநாதன்’ தான். நான் டிகிரி படிக்கும்போதுதான் பெருமாள் கோயிலுக்கு உள்ளயே போகிறேன். வடக்கு மாசி வீதியில் ஒரு பெருமாள் கோயிலிருக்கு. அங்க துளசி கொடுத்து தலல ஒரு..அதற்கு என்ன பெயர்..

நரோபா– சடாரி

சுரேஷ்– ஆம், சடாரி வைத்தார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்னடா இது விபூதி கொடுக்காமல், துளசி கொடுக்கிறார்களே என்று. அப்புறம்தான் எனக்கு பெருமாள் கோயில் இப்படித்தான் என்றே தெரிந்தது. பன்மைத்துவம் மரபாக உள்ளதால், எல்லாவற்றிலுமே பன்மைத்துவத்துடன் இருக்க வேண்டும். காந்தி நம்மைக் குடிமை சமூகமாக மாற்றுகிறார். அரசியல்படுத்துகிறார். இங்கு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துரோகம் உட்கணக்காக ரொம்ப காலமாக உள்ளது. இந்த விரோதம் நீடிக்கும்வரை ஒற்றுமை இருக்காது. ஒற்றுமை இல்லை என்றால் எதுவும் சாதிக்க முடியாது. அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு சேர்ந்து வாழ்கிறார்கள். இந்தியாவிலதான் இத்தனை எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இருக்கிறாகள். இதெல்லாம் அவர் வைத்த வாதங்கள். எப்போதுமே இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்றுதானே வலியுறுத்தினார். சுதந்திரம் அடைந்த அன்று பெங்காலில் ஒரு முஸ்லிமின் குடிசையில்தானே உட்கார்ந்திருந்தார். அதுவும் நவகாளியில் இந்துக்களைக் கொன்றவன் என பழி சுமத்தப்பட்டவனுடன் அமர்ந்திருக்கிறார்.

நரோபா-சுஹர்வாடி

சுரேஷ்– ஆம். அவனேதான். அவனும் கூட உட்கார்ந்திருக்கிறான். யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது, என்னுடனே இருங்கள் என வலியுறுத்தினார். ஆனால் இன்றைய இந்தியாவின் நிலை அப்படி இல்லை..

நரோபா– மரபிலக்கிய பயிற்சி உண்டா?

சுரேஷ்– இல்லை. ஆனால் ஆண்டாள் பாடல்கள், மாணிக்கவாசகர் பாடல்கள் எல்லாம் வாசித்து அசந்து போயிருக்கிறேன். நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேன் என்றால், அது தமிழ் மூலமாகத்தான். ‘நெருப்பென நின்ற நெடுமாலே’, என்று வரும். மாணிக்கவாசகர் பாடல் வரிகள் நிறைய சொல்லலாம். ஆண்டாளோட கிருஷ்ணன் ரொம்பப் பிரியமான கிருஷ்ணன். அந்தக் கிருஷ்ணன் வேற கிருஷ்ணன். அந்த தமிழ் பாடல்கள் வழியா நான் அடைந்த கடவுள் ஒரு கதாபாத்திரம். கும்பிடுவது நம் பழக்கம் அவ்வளவுதான்.

நரோபா– அதாவது நம் மொழியின் அழகு பக்தியில் வெளிப்படுகிறது.

சுரேஷ்– ஆம் மொழி வழியாக, பாடல் வழியாக நான் நெக்குருகி விடுகிறேன். பாடல்களைக் கேட்டால் அழுகை வந்து விடும் எனக்கு.

நரோபா– சுந்தர ராமசாமியுடன் உங்களுக்கு நல்ல உறவு இருந்தது அல்லவா? மற்றபடி இலக்கிய வட்டாரத்தில நண்பர்கள், இலக்கிய வட்டத் தொடர்புகள், ஊக்கப்படுத்தியவர்கள், கடுமையாக விமர்சனம் செய்து நிராகரித்தவர்கள் என, நீங்கள் எழுதத்தொடங்கும்போது சூழல் எப்படி இருந்தது?

சுரேஷ்– சுரேஷ்குமார இந்திரஜித் எனும் அடையாளத்துடன் நான் எழுதத் தொடங்கி, நான்கைந்து கதைகள் வந்ததுமே இலக்கிய வட்டாரத்தில ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆளாகிவிட்டேன். உடனே எனக்கு ஒரு தொகுப்பும் வந்தது. ‘அலையும் சிறகுகள்’. ஒன்பது கதைகள்தான். அப்போதே இதில் கதை இல்லை என்று சொன்னார்கள். உதாரணத்திற்கு, ஒரு பெரிய கட்டிடம் இருக்கும், அதனருகே பல ஊழியர்கள் பெருமூச்சு விட்டபடி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் அப்போது கடலை வாங்குவார்கள் என்று தெரிந்துகொண்டு கடலை விற்கும் புத்திசாலி அவன் என்று அந்த தொகுப்பில் எழுதி இருப்பேன்.

அடுத்த தொகுப்பு ‘மறைந்து திரியும் கிழவன்’ எல்லாமே நவீன கதைகள். மிகப் பிடித்த கதை என்றால் ‘மாபெரும் சூதாட்டம்’ தான். நான் முன்னரே சொன்னது போல illogical absurdity பற்றி எழுதியிருக்கிறேன். அவருடைய அம்மா கர்ப்பமாக இருக்கும்போது ஒரு தலைவர் செத்துப் போய்விட்டார் என்று கல் எறிந்ததில் அப்பா இறந்துவிட்டார். இது எவ்வளவு பெரிய அபத்தம். அந்த சூதாட்டத்தில அடுத்தவன் என்ன சீட்டு வைத்திருக்கிறான் என்பது தெரியாது. அது வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் உவமானம். ஒரு காரியத்தை எடுத்துச் செய்வதில் உள்ள சிக்கலில் ஒருவன் நீதிமன்றத்திற்கு போய் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருப்பான். வேலை முடிந்திருக்காது.

நரோபா– அந்தப் பகுதிகள் காஃப்காவின் ‘விசாரணை’யை நினைவுபடுத்தியது.

சுரேஷ்– அந்த கணவன் மனைவி இருவருமே சீட்டு விளையாடுவார்கள். முதலில் காசு வைத்து விளையாட மாட்டார்கள். அப்புறம் நான் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார்கள், இல்லை நீ தோற்க வேண்டும் என்று சொல்வார்கள். அவன் சீட்டை இவள் பார்க்க வேண்டும் என சொல்வாள். அதையே அவனும் சொல்வான். அவர்களுக்குள் சண்டை வரும் முதிய வயதில் எதிரில் யாரும் இல்லாமல் ஒருத்தர் மட்டுமே தனியாக இருபக்கமும் சீட்டாடிக் கொண்டு இருப்பார். இது எத்தனை முக்கியமான படிமம். தேருக்குக் கீழ பிச்சைக்காரி மணப்பெண் கோலத்தில உட்கார்ந்திருப்பது மாதிரி.

நரோபா– ஆமாம் ரொம்ப பிரமாதமானக் கதை.

சுரேஷ்– அப்படி பார்த்தா நான் வாழ்வில் இருக்கும் அபத்தத்தை, தர்க்கமில்லாதவற்றை நவீன முறையில் அணுகியிருக்கிறேன் இல்லையா? சம்பிரதாயமான முறையில் இல்லை.

நரோபா– அதுக்கு எந்த மாதிரியான விமர்சனம் வந்தது?

சுரேஷ்– எனக்கென்று சில ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக உள்ளது என்றார்கள். நான் இன்னொரு நேர்காணலில் சொல்லியிருக்கிறேன். க்ளாசிக்கல் கதைகள் வெகுஜனங்களை சென்று சேர்ந்துவிடும். இலக்கிய ஆர்வலர்களையும் சென்று சேர்ந்துவிடும். ஆனால் நவீன கதைகள், சம்பிரதாயமான கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். உதாரணத்துக்கு, லத்தீன் அமெரிக்க கதைகளை எடுத்துக்கொண்டால், அந்தக் கதைகள் வேறுபட்ட நிலங்களிலும், வேறுபட்ட களங்களிலும், வேறுபட்ட சூழல்களிலும் நடக்கின்றன. அதுக்கு ஒரு க்ளாஸிக்கல் அங்கீகாரம் அங்குள்ள வெகுஜனங்ககளிடம் உள்ளது. மார்க்கேஸ் எழுதின பாணி அங்க அங்கீகரிக்கப்பட்டிருக்கு. தமிழ்ச் சமூகத்தில் க்ளாஸிக்கள் கதைகள் மட்டும்தான் வெகுஜனங்களின் அங்கீகாரத்திற்கு வரும். நவீனதத்துவ, பின்நவீனத்துவ கதைகளுக்கு இன்று என்றில்லை, என்றுமே அங்கீகாரம் கிடைக்காது என்பதே என் அபிப்பிராயம். தமிழ் மக்களுக்கு அந்தளவு கவனிப்பு கிடையாது. அறிவார்ந்த சமூகமென்றால் கவனிப்பார்கள். மெளனி இறந்துபோய் ஐம்பது வருடங்கள் ஆகிறது. இன்னும் ஐம்பது வருடமானாலும்கூட இதே மாதிரிதான் குறைவான மக்கள் கவனிப்பார்கள். என் கதைகள் அந்தளவு இல்லை. ஆனால் இதுவும் கவர வேண்டும். கிளாஸிக்கல் கதைகளைப்போல் வெகுஜன அங்கீகாரம் இந்த மாதிரி நவீன கதைகளுக்கு வர வேண்டும். அது இதுவரை நிகழவில்லை. ஒரு வகையில பாதுகாப்பு, இன்னொரு வகையில சிக்கல்.

நரோபா– சரிதான்…

சுரேஷ்– நான் இந்தச் சூழலைக் கற்பனை செய்து தான் “நள்ளிரவில் சூரியன்” கதை எழுதினேன். இந்த மாதிரி எழுதும் ஒருத்தன் பிரபலமான எழுத்தாளன் ஆகிவிடுகிறான்.

நரோபா– ஆமாம். நான் அதைக் குறித்து வைத்துள்ளேன். அதானது அதில் வரும் எல்லாமே நடைமுறை சாத்தியமற்றவைதான் (சிரிக்கிறார்). முதலில் எழுத்தாளருக்கு பதிப்பாளர் அவ்வளவு கொடுப்பது. எல்லாமே வேடிக்கைதான் அந்த கதையில்.

சுரேஷ்– பேருந்து நடத்துனர் துவங்கி எல்லாருமே அவனை அடையாளம் கண்டுகொள்வார்கள். அது எப்படிப்பட்ட பாவனை!

நரோபா– பணி சார்ந்து நிறைய பயணம் செய்துள்ளீர்களா? பணி மாற்றம் அல்லது பணிக்காகப் புது ஊர்களுக்குப் போவது?

சுரேஷ்– எல்லாமே மதுரை மாவட்டத்திற்குள்தான். ஆனால் பல மனிதர்களைச் சந்தித்து இருக்கிறேன். பொய்யானவர்கள், கெட்டவர்கள், அரசியல்வாதிகள்.

நரோபா– ஒரு கதையில்கூட நீங்கள் இந்த ஒப்பந்ததாரர்கள் பற்றி எழுதி இருந்தீர்கள். ‘நானும் ஒருவன்’ தொகுப்பில் தான் என்று நினைவு. போன ஆட்சியில் இருந்த நடைமுறை என்றுதான் நினைக்கிறேன்.

சுரேஷ்– ஆம். பணம் போன உடனே டெண்டர் போட்டுக் கொடுத்து விடுவார்கள். ஈ டெண்டர் எல்லாம் பெயருக்கு எல்லா அரசிலும் இருந்ததுதான். ஆனால் எதுவும் சரியாக வேலை செய்யாது. மனிதர்களை நிறைய பார்த்தேன். அந்த மனிதர்கள்தான் எனக்குப் பாடம் கொடுத்தவர்கள். என்னை அப்படியே நம்பிவிடாதே! இதனாலேயே மனிதனை அப்படியே நம்பும் கதாபாத்திரங்கள் வந்தால் ஜீரணிக்கவே முடியாது. அது எப்படி முடியும்?

நரோபா– பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் அனுபவ எல்லைக்குப் பிறகு ஒரு கட்டத்தில் வரலாறு அல்லது தத்துவம் போன்ற துறைகளுக்குச் செல்வார்கள். அபுனைவுகளுக்குப் பிறகு புனைவுக்கே அங்கிருந்து தங்கள் கருப்பொருள்களை எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் அபுனைவு புத்தகங்கள் நிறைய படிப்பது உண்டா? தன்வரலாற்று நூல்கள், வரலாறு அடிப்படையிலானவை. ஏனெனில் நான் உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது கவனித்தது என்னவென்றால் நீங்கள் சட்டென விரிவான வரலாற்றுப் பார்வையை அளிக்க முயல்கிறீர்கள். அபுனைவுகளின் பாதிப்பு எப்படிப்பட்டது?

சுரேஷ்– புனைவைப் படிப்பது போலவே அபுனைவும் வாசிப்பேன். கதைக்குத் தேவை என்றால் கண்டிப்பாக படிப்பேன். இந்த ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ கதையில் வருகிற வரிகள் எல்லாமே முனைவர் ஆய்வு புத்தகத்திலிருந்து எடுத்தவை. நான் முன்னரே சொன்னது போல ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக எழுதினால் அது சிரிப்புக்கு வழிவகுத்துவிடும். அதுதான் உண்மை. அந்த மாதிரி ஒரு கதையில் மானுடவியல் வந்தால் அதற்கு தேவையான புத்தகங்கள் படிப்பேன். அபுனைவுகள் படிப்பேன். எனக்கு அல்ப விஷயங்களிலிருந்து கருக்கள் வரும். ஒரு பெரிய பத்திரிக்கையில் கவர்ச்சி நடிகை ஒருத்தி கஷ்டப்படுகிறாள் என வந்ததும் எனக்குக் கதை கிடைத்துவிடும். இப்படி ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஒரு கதை… (கதை பெயர் சொல்கிறார்) அது என் ஓட்டுனரிடமிருந்து கிடைத்தது. சொல்லப் போனால் எங்கோ கிடைக்கும் ஒரு அல்ப விஷயம் படைப்பூக்கத்தின் வழியில் கதையாக மாறிவிடும். இது ஒரு வழிமுறை. அது என்ன எப்படி என்று விளக்கமுடியாது.

நரோபா– நீங்கள் யாரைப்பற்றி எழுதி உள்ளீர்களோ அவர்கள் வாசித்து உங்களைச் சந்தித்திருக்கிறார்களா?

சுரேஷ்-அந்த மாதிரி கிடையாது.

நரோபா– என்னைப்பற்றி ஏன் இப்படி எழுதினாய்?, என்று கேட்டு.

சுரேஷ்– அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தக் கதையில் வந்திருப்பது நான்தானே? என்று கேட்டவர்கள் உண்டு.

நரோபா– உங்கள் மனைவி, பிள்ளைகள், அம்மா கதைகள் வாசிப்பார்களா?

சுரேஷ்- இல்லை.

நரோபா– உங்க கதைகள்?

சுரேஷ்– இல்லை. என் புத்தகங்கள் வந்தவுடன் அவரிடம் கொடுத்துவிடுவேன். என் மனைவியிடம் ஒரு சிவப்பு பை கொடுத்திருக்கிறேன். சிவப்பு பை என்று சொன்னால்தான் தெரியும். அதில் நான் எழுதிய புத்தகங்கள், நான் கொடுத்த நேர்காணல்கள், புத்தக வடிவம் பெறாத எழுத்துக்கள் எனச் சில தொகுப்புகள் உள்ளன. நமக்கு சொத்து என்று எதுவும் கிடையாது. இதுதான். என் காலத்துக்குப் பிறகு அதை கண்ணனிடம் (சுந்தர ராமசாமி மகன்) கொடுத்து விடு, அவர் ஏதாவது செய்து கொள்ளட்டும் என்று கொடுத்து வைத்திருக்கிறேன். ஏனெனில் எந்த நேரத்தில எது நடக்கும் என்று தெரியாது.

என் நண்பர் ஒருவர் சோபாவிலிருந்து எழுந்து உணவு மேசைக்கு வருவதற்குள் இறந்துவிட்டார். சரி, நாம் உயிருடன் இருக்கும்போதே, நம் புத்தகங்களுக்கு ஒரு வழி செய்துவிட வேண்டும், என்று எண்ணினேன். என்னிடம் இருந்த புத்தகங்கள், பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தேன். சிறு பத்திரிக்கைகளை எல்லாம் பைண்ட் செய்து வைத்திருப்பேன். காலச்சுவடு, சுபமங்களா என எல்லாவற்றையும். சரி, உயிருடன் இருக்கும்போதே ஒரு வழி செய்து விடவேண்டும் என்று எண்ணினேன். அதையெல்லாம் அப்படியே எடுத்து மூட்டை கட்டி வைத்திருந்தேன். கண்ணனை அழைத்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுங்கள் என்றேன். பத்திநாதன் என்பவரை அனுப்பி எடுத்து சென்று அவர் அலுவலக மாடியில் உள்ள நூலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். பொதுவாக இறந்த பின்னால்தான் வைப்பார்கள் (சிரிக்கிறார்), சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், லாசரா என்று அந்த நூலகத்தில் வைத்திருக்கிறார்கள். நான் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் “சுரேஷ்குமார இந்திரஜித், மதுரை” என்று ஸ்டாம்ப் அடித்து அனுப்பிவிட்டேன். நம்மிடம் வேறு என்ன சொத்து உள்ளது? ‘மீட்சி’ இதழ்கள் மட்டும் வைத்திருந்தேன். தேவேந்திர பூபதி கேட்டுக்கொண்டே இருந்தார். 35 ஆவது இதழ் வரைக்கும் இருந்தது. என்னோட தனிப்பட்ட பிரதியாக வைத்திருந்தேன், என் எழுத்து பாணியில் மாற்றம் வர காரணம் ‘மீட்சி’ இதழ்தான். நிறைய வெளிநாட்டு எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார்கள், நிறைய மொழியாக்கங்கள் வரும். சம்பிரதாயமில்லாத எழுத்துகள் நிறைய வரும். ஓ இப்படியெல்லாம் எழுதலாமா என எனக்கு ஊக்கம் கொடுத்த கதைகள். போர்ஹெஸ் படித்த பின்புதான் இந்த அறிக்கை மாதிரியெல்லாம் கதை எழுத முடிந்தது. அதே மாதிரி போர்ஹெஸ் வாசிக்கவில்லை என்றால் ‘சந்திப்பு’ எனும் கதையை எழுதியிருக்க முடியாது. ஆனால் அவர்களை போலி செய்வதாக இருந்துவிடவும் கூடாது.

நரோபா– தமிழ்ச் சூழலுக்கு உகந்த மாற்றங்கள் தேவையாய் இருக்கும்.

சுரேஷ்– ஆம் நம்முடைய பார்வையை அக்கதைகள் மாற்றியுள்ளன. சரி, இப்படியும் எழுதலாம் என்று ஒரு தடம் போட்டுக் கொடுத்திருக்கிறது. அந்தளவு அதை மதிக்க வேண்டும். நான் என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

நரோபா– சிறுபத்திரிக்கையெல்லாம் கண்ணனிடம் கொடுத்தது பற்றி.

சுரேஷ்– ‘மீட்சி’ இதழெல்லாம் பூபதியைக் கூப்பிட்டு அதில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டேன். பழனியில் அவர் ஒரு நூலகம் வைத்திருக்கிறார். என் சேகரிப்பில் உள்ள பிற புத்தகங்களையும் எனக்குப் பிறகு அதில் கொண்டு போய் சேர்த்துவிடுவார். அவ்வளவுதான்.

நரோபா– உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்? தாக்கம் செலுத்தியவர்கள் என்றும் சொல்லலாம்.

Image result for jeyakanthan

சுரேஷ்– பிடித்த எழுத்தாளர் என்றால் ஜெயகாந்தனைத்தான் சொல்வேன். ரெண்டாவது, எனக்குப் பிடித்த கதைகளை எழுதியிருக்கிற எழுத்தாளர்கள் யார் என்றால், வண்ணநிலவனைச் சொல்வேன், பிறகு சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன்.

நரோபா– உங்கள் முன்னுரையில், சுந்தர ராமசாமி, போர்ஹெஸ் பற்றி கூறியுள்ளீர்கள். அப்புறம் லாவண்யா எழுதிய ‘க்ளவுன்ஸ்’ என்று ஒரு கதை பற்றியும் சொல்லியுள்ளீர்கள்.

சுரேஷ்– ஆம். பிரக்ஞை பத்திரிக்கையில் வந்திருந்தது. அதில் லாவண்யா என்பவர் எழுதிய கதைதான் ‘க்ளவுன்ஸ்’. தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கும். அதன் பிரதி இருக்கிறது, அவசியமென்றால் தருகிறேன். ஜெயகாந்தன் பல விதங்களில் என் மீது தாக்கம் செலுத்தி இருக்கிறார். அவர் வீட்டில் செருப்பு போட்டு நடப்பார் என்றால், நானும் செருப்பு போட்டுக்கொண்டு நடந்தேன். “நினைத்துப் பார்க்கிறேன்” எனும் பத்தியில் நான் இறந்து போனவர்களைப் பார்க்கப் போகமாட்டேன் என்று எழுதியிருப்பார். நாம் போகாமல் இருக்க முடியாது; திட்டுவார்கள். நான் போவேன். ஆனால் முகத்தைப் பார்க்க மாட்டேன்.

நரோபா– அந்த ‘க்ளவுன்ஸ்’ கதையில் என்ன தனித்தன்மை?

சுரேஷ்– நான் எந்தக் கதையை எழுதத் தொடங்குவதற்கு முன்னும் ஒரு கதையைப் படிப்பேன். அதுதான் ‘க்ளவுன்ஸ்’. ஏனெனில், புதிய கதை எழுதும்போதெல்லாம் மெளனியின் ‘மாறுதல்’ கதையைப் படிப்பேன் என்று ஜெயகாந்தன் சொல்லியிருந்தார். அதனால் நானும். ‘க்ளவுன்ஸ்’ கதையைப் படிப்பேன். ஒன்றுமே புரியாது. இப்போதும்கூட. நானும் நூற்றுக்கணக்கான தடவை படித்திருப்பேன். ஆனால் அந்த கதையில் ஒரு பெரிய படைப்பூகத்தை உருவாக்குகின்ற அம்சம் புதைந்திருக்கிறது. ஆனால் அது படிக்கிறவனை சார்ந்தது.

நரோபா– நீங்கள் இதைச் சொல்லும்போது ஜெயமோகன் சொன்ன ஒரு நகைச்சுவை ஞாபகத்தில் வருகிறது. அ.முத்துலிங்கம் ஒரு தடவை ஜெயமோகனிடம் கேட்டாராம். எப்படி நீங்கள் எழுதிக் குவிக்கிறீர்கள். நான் கணினியை திறந்து, எதுவும் எழுதத் தோன்றாதபோது அருண்மொழி, அருண்மொழி, அருண்மொழி என்று தட்டச்சுவேன். எதாவது ஒரு வார்த்தை சட்டெனத் தோன்றும். உடனே எழுதத் தொடங்கிடுவேன் என்றாராம். அதற்கு அ.முத்துலிங்கம், நானும் அருண்மொழி, அருண்மொழி என்று எழுதுகிறேன், எனக்கு கதை வரமாட்டேங்குதே, என்றாராம்.

சுரேஷ்– நீங்கள் முத்துலிங்கம் என்று சொன்னதும் ஞாபகம் வருது. எனக்கும் அவருக்குமான ஒரு மின்னஞ்சல் தொடர்பு. அவர் ‘தடம்’ பத்திரிக்கையில் ஒரு கதை எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு எப்பவுமே இந்த க்ளாஸிக்களான கதைகள் மனதில் நிற்கும். ‘போதி’, சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’, ராஜேந்திர சோழனின் ‘சாவி’ இந்த மாதிரி கதைகள்தான் மனதில் நிற்கும். நான் முத்துலிங்கத்திற்கு ஆங்கிலத்தில் மெயில் எழுதினேன், க்ளாஸிக்கல் கதைகளை படிக்கும்போதெல்லாம், நான் ஒரு stupid magical writer என்பது ஞாபகம் வரும், என்றேன். இல்லை, நீங்கள் பெருந்தன்மையாக சொல்றீங்க, என்று சொன்னார். அப்போது எனக்கு writer’s block இருந்தது. அதற்கு அவர் எனக்கு ப்ளாக் ஆக இருக்கும்போது நான் ஆங்கில கவிதைகள் படிப்பேன், ப்ளாக் போய் விடும் என்று சொன்னார். அப்போது ஒரு நாள் பழைய பாடல் கேட்கும்போது எம்ஜிஆர் சரோஜாதேவியோட ஒரு பாட்டு. ‘கட்டான கட்டழகு கண்ணா’ என்று ஒரு பாட்டு. சரோஜாதேவியைப் பார்த்ததும் ப்ளாக் விலகிவிட்டது (சிரிக்கிறார்). நான் இதை அவருக்கு எழுதினேன். அடுத்த நாளே ஒரு கதை எழுதினேன். அதைத் தொடர்ந்து ஒரு கதை.

நரோபா– பொதுவாக ஒரே அமர்வில் ஒரு கதையை எழுதிவிடுவீர்களா?

சுரேஷ்– ஒரே அமர்வில் எழுத மாட்டேன். விட்டு விட்டுத்தான் எழுத வேண்டும்.

நரோபா– திருத்தி எழுதுவதுண்டா?

சுரேஷ்– உண்டு. பிரசுரமானபின்னும்கூட திருத்தியிருக்கிறேன். இந்த தொகுப்பில்கூட திருத்தியிருக்கிறேன்

நரோபா-எழுதும் இடம் சார்ந்து செண்டிமெண்ட் உண்டா? எஸ்.ராவுக்கு அவரோட மேஜை தவிர எங்கேயும் எழுத முடியாது என்றார், ஜெயமோகனுக்கு அவருடைய அறை மற்றும் கணினி மீது பிடிப்பு உண்டு.

சுரேஷ்– அப்படியெல்லாம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் எழுதுவேன்.

நரோபா– இப்போதும் கையில்தான் எழுதுகிறீர்களா அல்லது கணினியா?

சுரேஷ்– கையில்தான் எழுதுகிறேன். கணினியில் பத்து வரிக்கு மேல் எழுத முடியாது.

நரோபா– உங்களுடைய எழுத்து பாணி பற்றி சுந்தர ராமசாமி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? உங்களுடையதும் அவருடையதும் வித்தியாசமானது.

சுரேஷ்– அவருக்கு முதல் தொகுப்பே பிடித்திருந்தது. விமலாதித்த மாலம்மன் கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார். அவர் அனுப்பிய கடிதம் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரே அமர்வில் வாசித்தேன், என நேர்மறையாக எழுதி இருந்தார். குறிப்பாக ‘மறைந்து திரியும் கிழவன்’ முன்னுரை அவருக்குப் பிடித்திருந்தது. அதைப் பற்றி ஒரு தடவை என்னிடம் பேசியிருக்கார்.

நரோபா– பொதுவாவே உங்கள் எல்லா தொகுப்புகளிலுமே முன்னுரைகள் சிறப்பாக உள்ளன. இந்த கதைகள் எப்படிப்பட்டவை, எப்படி வாசிக்கப்பட வேண்டும், விமர்சனங்களுக்கு பதில் என்று செறிவாக இருக்கும். என்ன விதமான கால மாற்றங்கள் உங்கள் எழுத்தில் ஏற்பட்டிருக்கிறது, என்று எல்லாவற்றையும் முன்னுரைகள் கொண்டே வகுத்துக் கொள்ளலாம்.

Image result for sundara ramaswamy

சுரேஷ்– அவருக்கு முதல் தொகுப்பும் பிடித்திருந்தது. அடுத்து வந்த ‘மறைந்து திரியும் கிழவனு’ம் அதன் முன்னுரையும்கூட பிடித்திருந்தது. இது மிகவும் வித்தியாசமான தொகுப்பு எனும் எண்ணம் அவருக்கு இருந்தது. அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளவும் செய்தார். அவர் 2005ல் இறந்து போகும் வரையில் நான் எழுதிய எல்லா கதைகளுமே அவருக்கு பிடித்திருந்தது. என் மேலும், எழுத்துக்கள் மீதும் மதிப்பும் நல்ல அபிபிராயமும் வைத்திருந்தார்.

நரோபா– விமலாதித்த மாமல்லன் உங்கள் தொகுப்பை அவருக்கு கொடுத்த பிறகுதான் உங்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டதா?

சுரேஷ்– இல்லை. அதற்கு முன்பே சந்தித்துவிட்டேன். அந்த தொகுப்பிற்கு அட்டை வடிவமைப்பிற்கு விமலாதித்த மாமல்லன்தான் எங்கோ ஆர்வமாகச் சென்று ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். இந்த புத்தகத்தை அவர்தான் கொண்டு சேர்த்தார்.

சுந்தர ராமசாமிக்கு சிஷ்யர்கள் மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அவர்களில் பலர் தனி ஆளுமையாக உருவாகினார்கள். அதற்கு காரணம், கூட இருப்பவர்கள் தங்களை உணர்ந்து கொள்ள அவர் தூண்டுதலாக இருந்தார். மற்ற இடங்களில் சீடர்களாக இருந்தவர்கள் தனி ஆளுமைகளாக மலரவில்லை. ஓஷோவாகட்டும் ஜே.கிருஷ்ணமூர்த்தியா இருக்கட்டும், சீடர்களுடன் பேசும்போதே அவர்கள் இவர்களிடம் எப்படி இருந்தார்கள் என்பது தெரிந்து விடுகிறது. சிந்தனைகள் பலகீனமாக இருக்கிறது. ஏதோ ஒரு அபிமானம் இருக்கலாம், இவங்க எதிர்பார்க்கும் ஒன்று அவர்களிடம் உள்ளது, ஆகவே சீடர்களை பெரிதாக எண்ணுவதில்லை. ஆனால் தனி ஆளுமையாக உருவாக்க வேண்டுமே? அது சுந்தர ராமசாமியால்தான் முடிந்தது.

ஆனால் அதற்கு பிறகு அவர் மாதிரி யாரும் இல்லை. எழுத்தாளரைச் சுத்தி கூட்டம் இல்லையே. ராமகிருஷ்ணனைக்கூட சொல்ல முடியாது. ஜெயமோகனைச் சுத்தி ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கிறது. கிண்டலுக்காகச் சொல்லவில்லை, ஆனால் அதிலிருந்து ஒருவரும் வரவில்லையே. நான் சொல்ல வருவதன் பொருள் வேறு, சுந்தர ராமசாமியை எல்லோரும் பீடம் என்று சொன்னார்கள். அவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். அவர் குரு எனும் பதத்திற்கு உண்மையான அர்த்தத்தில் செயல்பட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு ஜென் குரு அப்படித்தானே இருப்பார். ஒரு ஜென் குரு, தனக்கு எதிரான/ மாற்றான கருத்துக்கள் உடையவர்களையும் தன்னையறியாமல் உருவாக்குவார்.

நரோபா– உங்களுடைய சில கதைகளில் கனவு கலைவதன் சித்திரம் வருகிறது. குறிப்பாக ‘பகல் கனவுகள்’, ஜடாமுடி கச்சேரிக்கு செல்வான், அங்கே பாடுபவரைப் பார்த்து கனவு காண்பான், இப்படி, காலத்தை வளைத்தலும் நிகழ்கிறது.

சுரேஷ்– ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்று ஒரு கதை உள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதற்குப் பின் கதை துவங்கும். அந்தக் கதை முடியும் நேரத்தில் இவன் அந்த தொலைபேசியை எடுப்பதற்காக சென்று கொண்டே இருப்பான். அவ்வளவுதான். அந்த இடைவெளியில் ஒரு கதையை சொல்லிவிடுவேன். உடனே நம்முடைய, கற்பனை, கற்பனை என்றும் சொல்லிவிட முடியாது, எதையோ ஒன்றை உருவாக்குகிறது. ஒருத்தி தொலைபேசியில் பேசுகிறாள், இவனோடு நட்புடன் இருப்பவள், கணவனுடன் சண்டையிட்டு குழந்தையுடன் வந்து விட்டேன், என்னை அழைத்துச் செல் என்கிறாள். அவளை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்கிறான். தற்பொழுது இங்கு இருந்து கொள், இங்குதான் தங்க வைக்க முடியும் என்கிறான். வேறு வீடு பாருங்கள், அங்கு தங்கிக்கொள்ளலாம் என்கிறாள், அப்போது ஜன்னல் வழியாக பெண்ணின் படத்தை வரைவதைக் கண்டு அதைப்பற்றி சொல்கிறாள். குளித்துவிட்டு ஈர முடியை கீழே இப்படிபோட்டு கசக்குகிறாள், தண்ணீர் சிதறும். கணவனுடன் சண்டையிட்டு வந்திருக்கிறாள், இவனுக்கு அவளை இந்தக் கோலத்தில் பார்த்தவுடன் உணர்ச்சி பொங்கும். இதென்ன பெரிய சோதனை என்று எண்ணிக் கொள்வான். அப்போது தொலைபேசி அடிக்கிறதே எடுக்க வேண்டுமே என்று சென்று கொண்டிருப்பான். அவ்வளவுதான். இந்த இடைவெளியில் ஒரு கதையை சொல்லி விடுகிறோம்.

‘தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்’ கதை படித்ததில்லை, சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன், அவர் கடைசி நேரத்தில் திடீர் என்று அவருக்கு ஒரு கனவு போல் வருகிறது. அப்போது கல்யாணமாகி, வேறு ஒருவளுடன் குடும்பமாக இருப்பதாக தோன்றி அடுத்த கணம் இங்கே வந்துவிடுகிறார். அதே மாதிரி, ‘ஜே ஜெ சில குறிப்புகள்’, ஒரு நாவல் துவங்கும்போது முச்சந்தியில் ஒருவன் நிற்கிறான். வாகன நெரிசல். ஆனால் கதை முடியும்போதும் அங்குதான் நிற்கிறான். அந்த இடைவெளியில் கதை நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. இது ஒரு உத்தி.

நரோபா– ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதையிலும் கூட இம்மாதிரி வரும்.

சுரேஷ்– ஆம், அதிலும், இன்னும் வேறு கதைகளிலும் வரும். அந்தக் கதையில் எது நிஜம் எது கற்பனை, எது நாம் நினைப்பது?- ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதையில் இவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இருப்பான், ஆனால் நடப்பு வேறு, இந்த இடைவெளியில் நாம் ஒரு கதை சொல்லிவிடுகிறோம்.

ஒரு சம்பிரதாயமான வடிவத்தில் இருக்காது இந்தக் கதை. அதில சில விஷயங்களைச் சொல்ல முடியாது. புதிய திறப்புகளை அளிக்க வேண்டும். இதற்கு முன்னோடி எல்லாம் இல்லை, எனக்கா தோன்றுவதுதான். இந்த மாதிரி நிறைய கதைகள் உண்டு. ஒருத்தன் போய்க்கொண்டு இருக்கும்போதே வேறு உலகம் கிளம்பும். இதை நான் முன்னுரையிலேயே சொல்லியிருப்பேன், ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போதே ஒருத்தன் மெரீனா பீச் சென்று திரும்பி விடுவான்.ஆசிரியர் இயற்பியல் நடத்திக்கொண்டு இருக்கிறார். அதை விட்டுவிட்டு, இவன் வெளியே வேடிக்கை பார்ப்பது, அங்கு நடப்பது இதையெல்லாம் சித்தரித்துவிட்டு ஆசிரியர் இயற்பியல் நடத்துவதைச் சொல்வதோடு முடித்துவிடலாம். இதெல்லாம் ஒரு உத்தி.

ஒருத்தன் ஒரு கோப்பையில், ஒரு மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு, அடுத்தது குடிப்பதற்குள், ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு வருவான். இரண்டு வரிதான் வரும். இது என் பாணி, ஆனால் பொதுவாக சம்பிரதாயமாக இருப்பதற்கும் இசைபவன்தான் நான்.

நரோபா– ‘சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும்’ வாசிக்கும்போது இப்போது ‘புனைவுக் கட்டுரை’ என்று ஒரு வகைமை உள்ளது. கதை இல்லாமல், கட்டுரையின் வடிவு ஆனால் புனைவு. இது ஒரு புனைவுக் கட்டுரை என்று வகைபடுத்தலாம் என்று தோன்றியது.

சுரேஷ்– ‘கலந்துரையாடல்’ இருக்கிறதே, அதை நான் கட்டுரையாகத்தான் எழுதினேன். அவர்கள் அதை கதையாக போட்டுவிட்டார்கள். நான் கட்டுரையாக எழுதினால் கதையாக போட்டால் எப்படி? என்று கேட்டேன். அது கதை மாதிரிதானே இருந்தது என்று சொன்னார்கள். சரி அப்படி என்றால் கதையாகவே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிட்டேன். அதற்குள் கதை என்றே பிரசுரமாகிவிட்டது. ஆனால் கட்டுரை என்று நினைத்துதான் அனுப்பினேன். ஆனால் தலைப்பில் கட்டுரை என்று குறிப்பிட்டேனா என்று நினைவில்லை.

இந்தக் கதை கட்டுரை மாதிரிதான் இருக்கும். நீங்கள் போர்ஹெஸ்சினுடைய கதைகள் எல்லாம் படித்துப் பார்த்ததுண்டா? பல கதைகளில் கதாபாத்திரங்களே இருக்காது, சம்பவங்களே இருக்காது, ஆனால் அவர் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டே போவார். நமக்கு அது கொஞ்சம் படிப்பதற்கு சிரமமாகவும் இருக்கும். புதுமைப்பித்தன் இப்படி எத்தனையோ கதைகளை கருத்துரு அடிப்படையில் எழுதி இருக்கிறார். நானும் அதே மாதிரி எழுதி பார்த்தேன். நாம் தான் ரீல் விடுவோமே, டோகுடா சோனி, நான் தாய்லாந்தில் இருந்து வந்திருக்கிறேன், என்று இது மாதிரி எழுதுவது எல்லாம் உற்சாகமாக இருக்கும்.

நரோபா– சமூரியா கதைகள் என்றே தனியா இருக்கும் போலிருக்கிறதே, ஒரு ஐந்தாறு கதைகள் சொல்லலாமா…

சுரேஷ்– இரண்டோ மூன்றோ இருக்கலாம்… எனக்கு அந்த மாதிரி எழுதப் பிடிக்கும். அமெரிக்காவில் இருந்து விமானத்தில் வந்து கொண்டு இருந்தேன். அருகே வேறு ஒருவர் அமர்ந்திருப்பார். அவர் பெயர் டோகுடா சோனி, என்பது போல ரீல் விடுகிறேன், அவர், உடனே என்னுடைய நாவலில் இந்த நாவல்தான் சிறந்த நாவல் என்று நான் எண்ணுகிறேன், மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு நாவலை சிறந்த நாவல், என்று நினைக்கிறார்கள். நீங்கள் எப்படி எழுத வந்தீர்கள் என்று கேட்கிறார். உடனே எனக்கு ஒரு குரு இருந்தார், என்று அந்தக் கதையைச் சொல்கிறார். டொகுடோ சோனிதானே, அவர் பெயர்?

நரோபா– டொகுடோ ஷோனி.

சுரேஷ்– ரீல் விடுவதுதான். இது எல்லாவற்றிற்கும் உண்டான பதில் ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் உள்ளது. எது நிஜம், எது புனைவு, எது பொய் என்றே தெரியாது. என் மொத்த படைப்புலகத்தின் ஆதாரமே இதுதான். எது நிஜம், எது புனைவு, எது பொய் என்றே தெரியாது

நரோபா– “அந்த முகம்” கதையில் அந்தப் பெண் கிட்டத்தட்ட விஸ்வரூப தரிசனம் மாதிரி, விராட வடிவம் கொள்கிறாள், ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொன்று வருகிறது.

சுரேஷ்– குறியீடுதான் அது. அந்த மாதிரி நெறைய குறியீடுகள் உண்டு. ‘விரித்த கூந்தல்’ பைத்தியம் மணப்பெண் கோலத்தில் அமர்வது போல..

நரோபா– அந்த ‘எலும்புக் கூடுகள்’ கதை…

சுரேஷ்– அதைப் பற்றி சுந்தர ராமசாமி கடிதம் எழுதி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கதை வாசித்த நிறைவு, நன்றாக இருந்தது என்று எழுதி இருந்தார்.

நரோபா– ‘காலத்தின் அலமாரி’, ‘எலும்புக்கூடுகள்,’ ‘மர்மக்கதை,’ இதெல்லாம் சேர்த்து படிக்கும்போது ஒரு அரசியல் அமைப்பு, ராணுவம், ராணுவ அத்துமீறல்கள் பற்றிய ஒரு பார்வை கிடைக்கிறது.

சுரேஷ்– ஒரு அரசாங்கம் நினைக்கும்போது ஒரு சரித்திரத்தையே மாற்ற முடியும். அந்த சமூகத்தில் இருக்கக்கூடிய மக்கள் மத்தியில ஒரு ஆழமான பிளவையும் ஆதாரபூர்வமாக ஏற்படுத்த முடியும். ‘எலும்புக்கூடுகள்’, கதையில் சர்வாதிகாரி வரலாற்றை மாற்றி எழுதச் சொல்கிறான். இப்படிச் சொன்னால், இந்த இரண்டு ஜனங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உண்டாகும், சிறுபான்மையினர் தான் பெரும்பான்மையினரை கொன்று பிணமாக குவித்திருக்கிறார்கள் என்று மாற்றிச் சொல்ல சொல்வார். மானுடவியலாளர் மனரீதியாக பாதிக்கப்படுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனம் பாதிக்கப்படுகிறது. இறுதியில் ஏதோ ஒரு சக்திக்கு கீழ்படிந்துதான் நடக்க வேண்டும் என்று மனநோயாளி ஆகி விடுகிறார். முக்கியமான கதைதான் அது.

இது எல்லாமே வித்தியாசமான கதைகள்தானே, அதே மாதிரி பாணியும் வித்தியாசமான பாணிதான். எழுதப்பட்ட முறையும் வித்தியாசமானதுதான், களமும் வித்தியாசமானதுதான். கதாபாத்திரங்களும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான்.

நரோபா– நீங்கள் ஒரு நேர்காணலில், ஜெயகாந்தன் நீதியின்பாற்பட்டு நின்ற ஒரு ஆள், அந்த நீதி முக்கியமான இடமாக படுகிறது என்று சொல்லியிருந்தீர்கள்

சுரேஷ்– என்னுடைய மனதை வடிவமைத்ததில் அவருக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு.

நரோபா– ஆனால் அது உங்கள் கதைகளில் வெளிப்படவில்லை, இல்லையா?

சுரேஷ்– இல்லை. வெளிப்படாது. அசோகமித்திரனிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யாரென்று கேட்டால், தேவன், கல்கி என்கிறார். அவர் எழுத்துக்கும் இவர்களின் எழுத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

தமிழ் இலக்கிய உலகத்தில் பெரிய ஆட்கள் என்று அசோகமித்திரன், ஜானகிராமன், ஜெயகாந்தன் என இவர்களை எல்லாம் சொல்கிறார்கள் இல்லையா? எனக்கு, ஜானகிராமன் நல்ல எழுத்தாளர்தான், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை கிடையாது. அவரோட ‘மரப்பசு’- ‘மோகமுள்’ என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை, வளவள என்று கதை மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்- ‘அடி’ என்று ஒரு கதை உள்ளது, மிக முக்கியமான கதை. குறுநாவல், மிகப்பிடித்த கதையும் கூட, அவர் ஒரு முக்கியமான எழுத்தாளர் எப்படியும் மக்களை சென்றடைந்து விடுவார். அவரது கதைகளில் எப்பவும் ஒரு அழகான பெண் வந்துவிடுவாள்.

நரோபா– உங்கள் மொழியை நீங்கள் எப்படி வடிவமைத்துக் கொண்டீர்கள்? பிரக்ஞைபூர்வமாகவா? ஒவ்வொரு வார்த்தைக்கும் கனம் அளித்து மிகவும் கவனமாக இருப்பீர்களா? நடையில், உணர்வுகளை வெளியேற்றி கொஞ்சம் வெலகி நின்று எழுதுவதாக தோன்றியது.

சுரேஷ்– நான் எழுதும்போது மிக கவனமாகத்தான் எழுதுவேன், வாக்கியங்கள் சரியாக அமைகிறதா, என்று பார்ப்பேன். செண்டன்ஸ் சரியா அமையுதா, என்னன்னு. அப்படியும் பிரசுரம் ஆன பிறகு வாக்கியங்களை மாற்றிப் போட்டிருக்கலாமோ என்று நினைப்பேன். அதில மிகவும் பிரக்ஞைபூர்வமாகத்தான் இருப்பேன். எனக்கு வளவள என்று சொல்வது ஒத்து வராது. ஒரு விஷயத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என பார்ப்பேன். எதற்காக வளவள என்று இழுக்க வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள். இந்த விவரணை எல்லாம் யார் உன்னை கேட்டார்கள். அதெல்லாம் தேவையில்லை. திரைச்சீலை போட்டிருக்கு, அது போட்டிருக்கு, இது போட்டிருக்கு, திரைச்சீலை அந்த நிறத்தில் இருந்தது, இந்த நிறத்தில் இருந்தது, யாரெல்லாம் இருந்தார்கள்- இதெல்லாம் எதற்கு எழுதி கொண்டு இருக்கிறீர்கள்? வந்தான், பேசிக்கொண்டு இருந்தான், இதை செய்தான், சுருக்கமாகச் சொல்லுங்கள், வளவள என்று பேசாதே, என சொல்லும் வகையில்தான் அந்த கதைகள் உள்ளன. அபப்டித்தான் எழுதவும் முடியும். எனக்கு அவசியம் மிகுந்தால் மட்டும் சில புற விவரணைகள் வரும். புறச்சித்தரிப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

ஜானகிராமன் கதையில் உரையாடல்கள் பக்கம் பக்கமாக நீளும். உள்ளத்தில் ஏதோ ஒன்றை மறைத்துக்கொண்டு பேசிக்கொள்வார்கள். அதை அவர் அப்படியே காண்பிப்பார். அந்த மாதிரியான உரையாடல்கள் என்னால் எழுத முடியாது. அதே மாதிரி புறச்சித்தரிப்புகள் அதிகமாக எழுதுவதும்- முடியாது.

நரோபா– நீங்கள் எழுதியதிலேயே பெரிய கதை எது?

சுரேஷ்– ‘காலத்தின் அலமாரி’தான். ஏழெட்டு, ஒன்பது பக்கங்கள் போகும், ‘ஒரு இடத்திற்கு பல வரைபடங்கள்..’ கதையும்கூட பெரிதுதான்.

‘திருமண வரவேற்பு’ என்று ஒரு கதை இருக்குது. அது மூன்று துண்டாக இருக்கும். எளிய கதை, எளிதாக வாசிக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றால், மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளன அல்லவா, இதில் மூன்றாவதையும் முதல் பகுதியையும் இடம் மாற்றி, இரண்டாவதை இரண்டாவதாகவே வாசித்தால் சாதாரண கதை

நரோபா– எனக்கு உங்கள் தொகுப்புகளில் ‘நானும் ஒருவன்’ மிகவும் பிடித்திருந்தது.

சுரேஷ்– கதாபாத்திரச் சித்தரிப்பு, விவரணைகள், எல்லாமே நன்றாக வந்திருக்கும்.

நரோபா– மற்ற கதைகளோட ஒப்பிடும்போது, உணர்வுகளும் கொஞ்சம் தூக்குதலாக இருந்ததாக தோன்றியது

சுரேஷ்– அது இறுக்கம் குறைவு. மற்ற கதைகள் எல்லாம் கொஞ்சம் இறுக்கம் அதிகமாக இருக்கும். இதில் கொஞ்சம் நெகிழ்வாக எழுதியிருப்பேன். ஆனால் என்னன்னா, இந்த ‘நானும் ஒருவன்’ தொகுப்பு அதிகமாக பேசப்படவில்லை. அது ஏன் என்றே தெரியவில்லை.

நரோபா– உங்கள் பாணி இல்லை என்பதால் அப்படி ஆகியிருக்குமா?

சுரேஷ்– காலச்சுவடில் வைத்திருப்பார்கள், ‘மாபெரும் சூதாட்டம்’ வாங்கிச் செல்வார்கள், ஆனால் ‘நானும் ஒருவன்’ வாங்க மாட்டார்கள். அதே போல் ‘நடன மங்கை’ ஓடிவிட்டது. ‘இடப்பக்க மூக்குத்தி’யும் நன்றாக போகிறது.

நரோபா– சாகித்ய அகாதெமி விருது, பரிந்துரைகள் இது மாதிரி எதுவும் நிகழ்ந்துள்ளதா?

சுரேஷ்– ஒரு விருதுகூட இதுவரை யாரும் கொடுத்ததில்லை.

நரோபா– அதைப்பற்றிய வருத்தம் ஏதும் உண்டா உங்களுக்கு?

சுரேஷ்– மகிழ்ச்சியாகத்தான் இருக்கேன்!

நரோபா– இல்லை சரியான அங்கீகாரம் இல்லையே எனும் வருத்தம்?.

சுரேஷ்– முன்னரே சொன்னது போல், என்னுடைய எழுத்து மற்றும் பாணி கொஞ்சம் அறிவார்ந்த எழுத்தாளர்கள், அறிவார்ந்த வாசகர்களுக்குதான் பிடிக்கும் எனும் எண்ணம் எனக்குண்டு. பெரிய பரப்பை என்னால் அடைய முடியாது எனும் எண்ணமும் உண்டு. இதுதான் தலை எழுத்து என்று ஏற்றுகொள்ள வேண்டியதுதான்.

லத்தீன் அமெரிக்க பாணியை அங்குள்ள மக்கள், வெகுஜன மக்கள் தங்களுடைய பாணியாக இயல்பாக எப்படி ஏற்றுக் கொண்டார்களோ அப்படி இங்கு ஏற்றுகொள்ளப்படாது, இங்கு அம்மாதிரி சூழல் இல்லை.

நரோபா– நியாயமாக பார்த்தால் மகாபாரத கதைகளைப் படித்திருக்கும் மக்களுக்கு இந்த கதைகள்தானே உவக்க வேண்டும்.

சுரேஷ்– வராது. அது வராது. அதனுடையே கதை சொல்லல் நேர்க்கோட்டில் உள்ளது. இதில் என்னவெல்லாமோ வந்து கலந்துவிடுகிறது. ஆகவே இதை ஒப்பிடுவது சரியாக வராது. மகாபாரதத்திலும் மாய யதார்த்த விஷயங்கள் நிறைய உண்டு.

நரோபா– அதை இயல்பாக எடுத்துக்கொண்ட நம் மக்களின் மனங்களுக்குள் இந்த பாணி ஏன் நுழைய முடியாமல் போகிறது?

சுரேஷ்– சுந்தர ராமசாமிகூட மார்க்கெஸ்சை முன்வைத்து சொன்னார்- மார்க்கெஸ் வினோதங்களை எழுதுபவர். இந்த வினோதங்கள் இந்திய புராணங்களிலும் இதிகாசங்களிலும் நிறையவே உள்ளன. ஆக இங்கிருப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாக தெரிய வேண்டிய அவசியமில்லை என்பது போல சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய எழுத்து அந்த மாதிரி கிடையாது. அந்த வகையில், மார்க்கெஸ்ஸினுடைய வினோதங்கள் மாதிரி வராது. இது வேறு மாதிரி, புதிதாக யாராவது பெயர் வைக்க வேண்டும்.

அவர் சொல்கிறார், ஒரு குரங்கு வாலைச் சுருட்டி நாற்காலியாக்கி அரசனை விட உயரத்தில் அமர்கிறது. வாலில் தீயை ஏந்தி ஒரு நகரத்தையே எரிக்கிறது. இதெல்லாம் மாய யதார்த்தவாதம் தானே? என்று கேட்கிறார். இதில் இல்லாத எதை அதில் காணப் போகிறீர்கள்? அவருக்கு மார்க்கெஸ் அதிகமாக ஈர்த்ததாக தெரியவில்லை. ஆனால் போர்ஹெஸ் பற்றி ரொம்ப பேசி இருக்கிறார். அதனால், இந்த எழுத்துக்களை நீங்க அந்த வகையில் சேர்க்க முடியாது. புராணங்கள், இதிகாசங்கள் வகையில் இது சேராது. எல்லோரையும் ஈர்க்கவில்லை எனும்போதே இது வேறு வகை என்பது நிறுவப்படுகிறது.

என்னுடைய புத்தகங்கள் சென்று சேர்வது கடினம். ஜெயகாந்தன் சென்று சேர்ந்து விடுவார், ராமசாமி சென்று சேர்வதும்கூட கஷ்டம்தான், அது நம்மைச் சீண்டும். எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று நினைத்துக்கொண்டு வாங்குவார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் அவருடைய கதைகள் சென்று சேர்வதும் கஷ்டம்தான். புதுமைப்பித்தன் கதைகள் சென்று சேரலாம், ஏனெனில் இறுதியில் ஏதோ பாடத்தையோ எதையோ ஒன்றை சொல்லிவிடுகிறார். அவருடையதில் அறிவுபூர்வமான கதைகள் நிறைய உண்டு.

நரோபா– இறுதியாக, நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? எழுத்தின் வழி நீங்கள் அடைய முற்படுவது என்ன?

சுரேஷ்– படைப்பு மனநிலை உள்ளவர்கள், எழுத்தாளர்களாக உருவாகிறார்கள். இந்தப் படைப்பு மனநிலையே கவிதைகளையும், சிறுகதைகளையும், நாவல்களையும் உருவாக்குகின்றன. தனிமனித நிலையிலும், சமூக மனித நிலையிலும் அவைக்கு சில பார்வைகள் உருவாகின்றன. இந்தப் பார்வைகள் படைப்புகளை உருவாக்குவதில் பின்புலமாக இருக்கின்றன. பழைய மதிப்பீடுகளைக் கேள்வி கேட்கும், அவற்றைக் கலைக்கும் படைப்புகளை ஜெயகாந்தன் பெருவாரியாக உருவாக்கினார். அவரே என் விழிகளைத் திறந்த ஆசானாக இருந்தார். நான் என் பாணி எழுத்துக்களால் வேறு வகையில் அவரைப் பின் தொடர்ந்தேன் என நினைக்கிறேன்.

பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும், மாயத்தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும், தர்க்கத்திற்கு புலப்படாத வாழ்வின் அபத்தத் திருப்பங்களைக் கூறுவதிலும், பிடிபடாத வாழ்வின் மர்மங்களைக் காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன். இவற்றை நவீனச் செவ்வியல் படைப்புகளாக மாற்றவேண்டும் என்ற நினைப்பு எனக்கு இருக்கிறது. வழக்கமான செவ்வியல் படைப்புகளும் என் தனிப்பட்ட விருப்பத்திற்குரியதாக இருக்கின்றன என்பதையும் நான் கூற வேண்டியுள்ளது.

எதற்காக எழுதுகிறேன் என்ற கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தாலும், இவ்வாறு ஏதேதோ சொல்ல வைக்கிறது.

எழுத்தின் வழியாக நீங்கள் அடைய முனைவது என்ன என்ற கேள்விக்கான பதிலும் மேற்கூறிய பதிலில் மறைந்துள்ளது.

ஓர் இலக்கியக் கூட்டத்தில் பார்வையாளனாக இருந்தேன். போடியத்தில் கவிஞர் இன்னொரு கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சுவரின் இரு பக்கமும் குழல் விளக்குகள் இருந்தன. போடியத்திற்கு பின்புறம் கண்ணாடியால் ஆன தடுப்பு வெளிப்புறம் தெரிந்தது. வெயில் நேரம். கண்ணாடிக்கு மறுபுறம் அடிக்கும் வெயில் அறைக்குள் பிரதிபலித்து பேசிக்கொண்டிருக்கும் கவிஞரின் உருவத்தை நிழலாக மாற்றிப் பார்வைக்குத் தெளிவாகத் தெரியாமல் ஆக்கிக்கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடித் தடுப்பை ஒரு திரைச்சீலையால் மறைத்தால் வெளிச்சம் உள்ளே வராது. போடியத்தில் பேசிக்கொண்டிருக்கும் கவிஞரைத் தெளிவாக பார்க்கமுடியும்.

பக்கத்திலிருந்தவரிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த கூட்டம் நடத்தும் அமைப்பாளருக்குத் தொடர்புடையவரிடம் கூறினேன். ஒன்றும் நடக்கவில்லை. என்னைக் கடந்து செல்லும் பணியாளர்களிடம் கூற முயன்றேன். அவர்கள் என் பக்கம் திரும்பிக்கூட பாரக்கவில்லை. வேறு யாருக்கும் இது ஒரு சிக்கலாக இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதைச் சரி செய்வது தன்னுடைய வேலையல்ல என்று நினைத்து அமர்ந்திருப்பார்கள். கூட்டம் நடத்தும் அமைப்பின் பிரதானமானவர் என்னைக் கடந்து சென்றபோது, அவரை அழைத்து என்னருகில் அமரச் செய்து, பேசிக்கொண்டிருக்கும் கவிஞரின் உருவம் நிழலாகத் தெளிவாக தெரியாததைப் பார்க்கச் சொன்னேன். திரைச்சீலையால் கண்ணாடியை மறைத்தால் வெளியே உள்ள வெளிச்சம் பிரதிபலிக்காது, கவிஞரின் உருவம் தெளிவாகத் தெரியும் என்றேன். அவர் சென்ற சிறிது நேரத்தில் ஒரு பணியாளர், திரைச்சீலையினால் கண்ணாடியை மறைத்தார். இப்போது கவிஞரின் உருவம் தெளிவாகத் தெரிந்தது. பிறகுதான் என்னால் சகஜ நிலைக்கு வர முடிந்தது. கவிஞனின் பேச்சையும் என்னால் கவனிக்க முடிந்தது– இது நான் கூற முனைவது பற்றிய ஓர் உவமானம். நிகழ்ச்சி.

நிறைவு.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.