கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்

அரிசங்கர்

சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.

புத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கதைகள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.

அந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.

மனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.

இதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.

வாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம்  குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.

 

 

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.