விடுவிப்பு- அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…”

“நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு.

“கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்கா, இங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுது,” என்று லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கமாக சூப்ரவைசர் வருவதைப் பார்த்த வடிவு லட்சுமியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள். இருவரும் அவன் போவதையே ஓரக்கண்ணால் பார்த்தபடி தங்கள் வேலையைப் பார்த்தனர்.

“மொதல்ல இவங்கிட்ட இருந்து தப்பிச்சி ஓடனும்” என்றாள் லட்சுமி.

“எங்கனு போவ, எங்க போனாலும் இவன போல ஒருத்தன் கைலப்புடிச்சிகினு வருவானுங்கதான். போறதுனா அது சம்பளத்துக்குனுதான் இருக்கனும்” என்றாள் வடிவு.

“நீ சொல்றத பாத்தா எதோ எடம் பாத்துட்ட போல”

“க்கும் டீ… இன்னும் நல்லா கத்து, எல்லத்துக்கும் கேக்கட்டும்” என்று கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் வடிவு.

“ஆமா மிஷின் ஓடற சத்தத்துல நான் பேசறதுதான் இப்ப கேக்கப்போவுது. எதுனா நல்ல கம்பேனினா நாமளும் வரலாம்னுதான் கேட்டன்,” என்று சமாதான தொனியில் சொன்னாள் லட்சுமி. வடிவு பதில் எதுவும் சொல்லவில்லை. வடிவு எதாவது சொல்வாளா என்று இரண்டு முறை அவளைப் பார்த்தவாறே இருந்தாள். ஆனால் அதன் பிறகு அன்றைய வேலை முடியும் வரை வடிவு எதுவுமே பேசவில்லை. மதிய நேரத்தில்கூட சாப்பிட வராமல் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு அவளைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டாள், “ச்சீ… இன்னா பொம்பள இவ, சின்ன வயசுலருந்து ஒன்னாவேதான இருக்கோம். ஒன்னாதான் படிச்சோம், கட்டிக்கினு போனதுகூடப் பக்கத்து பக்கத்து தெருவுலதான். இத்தினி நாளுக்கும் ஒன்னாவேதான் இருக்கோம். ஒரு நல்ல கம்பேனியா வந்தா நமக்குச் சொன்னா இன்னா. இவ சொத்தயா நாம கேக்கறோம்,” லட்சுமி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே வடிவு வந்து வேகமாகச் சாப்பிட்டு லட்சுமியுடன் முடித்தாள்.

லட்சுமியும், வடியும் முத்திரைப்பாளையத்தில்தான் ஒன்றாகப் படித்தார்கள். ஒன்றாகவே பத்தாவது ஃபெயில் ஆகி ஒருவர் பின் ஒருவராகச் சிறிய இடைவெளியில் திருமணம் செய்துகொண்டு இப்போது இருவருமே ஐயங்குட்டிப்பாளையத்தில் பக்கத்துப் பக்கத்து தெருவில் வசிக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். இருவருமே மாநிறம், சம உயரம்தான். லட்சுமி எப்பவுமே ஒரே மாதிரிதான் இருந்தாள், எலும்பும் தோலுமாக. ஆனால் வடிவு திருமணத்திற்குப்பின் நன்றாக சதை போட்டு இருவருக்குமான வயது வித்தியாசம் அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு காட்டியது. தான் சீக்கிரம் கிழவியாகிவிட்டோமே என்று லட்சுமியைப் பார்க்கும்போதெல்லாம் வடிவுக்குத் தோன்றுவதுண்டு.

மாலை வேலை முடிந்து இருவருமே மேட்டுப்பாளையம் சறுவலில் சாலையில் இறங்கிவந்து கொண்டிருந்தனர். வழக்கமாக அப்படியே குறுக்கு வழியாகச் சென்று முத்திரைப்பாளையம் வழியாகச் செல்வதுதான் அவர்கள் வழக்கம். ஏதேனும் அவசர வேலைகள் இருந்தால் கீழ் ரோட்டுக்கு வந்து டெம்போ  பிடித்துச் செல்வார்கள்.

வடிவு பேச்சைத் துவங்கினாள், “லெட்சுமி, மதியம் அந்த புது கம்பெனி மேனேஜருகிட்ட தாண்டி பேசிகினு இருந்தன்.” என்றாள்.

லட்சுமி பதில் எதுவும் சொல்லவில்லை.

“உனுக்கும் சேத்துதாண்டி பேசனன்”.

இப்போதும் லட்சுமி பதில் சொல்லவில்லை. ஆனால் காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு, வடிவு என்ன சொல்லப் போகிறாள் என்று கவனித்தாள். வடிவு தொடர்ந்தாள், “அந்தாளு என்னாடானா கம்பேனிதான் மேட்டுபாளையத்துல இருக்கு, ஆனா ஆப்பீஸ் பாண்டில இருக்கு மொதல்ல அங்க வந்து பாருங்கனு சொல்றான். நீ என்னாடி சொல்ற நாளைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாமா?” என்றாள்.

லெட்சுமி யோசித்தாள். அவள் கணவன் துரைராஜ்க்கு லட்சுமி வடிவுடன் பழகுவது சுத்தமாகப் பிடிக்காது. வேலை நேரம் தவிர அதிகம் அவள் வடிவுடன் செலவிடமாட்டாள். வடிவைப் பற்றி வீட்டிலும் பேசமாட்டாள். அப்படித்தான் ஒரு நாள் வடிவு சும்மா இல்லாம எதோ கேட்க போக துரைராஜ் அடித்த அடியை இன்று நினைத்தாலும் லட்சுமியின் உடல் நடுங்கும். அவளால் வலி தாங்க முடியாமல் அவன் காலிலேயே விழுந்தாள். அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவள் குழந்தையை துக்கிக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். பிறகு துரைராஜே வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். இதை இவள் வடிவிடம்கூட சொல்லவில்லை. அவள் என்றுமே தன் கணவனை விட்டுக் கொடுத்ததில்லை. இப்போது போய் புது கம்பேனி, அதுவும் வடிவுடன் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன், இந்த கம்பேனியில் என்ன பிரச்சனை என ஆயிரம் கேள்விகள் வரும். நீ வேலைக்கே போக வேண்டாம், என்று கூட சொல்லிவிடுவான். எதோ கொஞ்சம் கஸ்டமில்லாம இருக்கு அதுக்கும் உல வெச்சுக்க வேண்டாம், என்று லட்சுமிக்குத் தோன்றியது.

“இன்னாடி, நான் கேட்டுனே இருக்கன். நீ கனவு கண்டுனுவர” என்றாள் வடிவு.

“நீ கேட்டததான் யோசிச்சினு வரன். நாம ரெண்டு பேரும் ஒண்ணா போனா சரிவராது. தனித்தனியா கிளம்புவோம். பாண்டி பஸ் ஸ்டாண்டுலருந்து ஒண்ணா போலாம்,” என்றாள்.

வடிவு சரி என்று சொல்ல இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

மறுநாள் லட்சுமி கிளம்பி சரியாக பாண்டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டாள். அவர்கள் பேசிக்கொண்டதுபோல் பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் காத்திருந்தாள். ரொமப நேரம் ஆகியும் வடிவைக் காணவில்லை. வடிவுக்கு கைபேசியில் அழைத்தாள். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. லெட்சுமிக்கு எரிச்சலாக வந்தது. இவளை நம்பி வந்தது தப்பா போச்சே, என்று நொந்துக்கொண்டாள். காலையிலிருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. மிகவும் சோர்வாக இருந்ததால் எதிரில் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று, ஒரு டீ, என்றாள். அப்படியே வடிவு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள். டீ மட்டும்தான் வந்தது. டீக்கடை ஒட்டியே ஒரு லாட்ஜ் இருந்தது. யாரும் உள்ளே போன மாதிரியும் தெரியவில்லை, வந்த மாதிரியும் தெரியவில்லை. இவள் லாட்ஜையே பார்த்துக் கொண்டிருந்ததை உள்ளே இருந்து பார்த்த ஒருவன் அவளிடம் வந்து, “உள்ள உங்கள கூப்பிடறாங்க” என்றான்.

“என்னயா” என்றாள் லட்சுமி.

“ஆமாம்மா” என்றான் அவன்.

“எதுக்கு” என்றாள்.

“அட என்னானுதான் வந்து கேட்டு போயேன்மா” என்றான்.

இவள் டீக்கு காசை நீட்ட, அவன் தடுத்தான். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், என்று அவளை உள்ளே கூட்டிச் சென்றான். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிந்த டீக்கடைக்காரனுக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அவள் பெரிதாக கத்துவது கேட்டது. அவளுக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தாள். வேகமாக வெளியே வந்து டீக்கடைக்காரனிடம் காசை வீசிவிட்டுச் சென்றாள். அழைத்துச் சென்றவன் வெளியே வந்தான். அவனிடம் டீக்கடைக்காரன், “இன்னா படியிலயா” என்றான்.

அவன் இல்லை என்பது போல் உதட்டைச் சுளித்தான்.

லட்சுமி பேருந்தில் போய்க்கொண்டிருந்தாள். வடிவின் மேல் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இப்போது பிரச்சனை வடிவோ அல்லது அந்த லாட்ஜ்காரனோ இல்ல. இவள் லாட்ஜில் இருந்து வெளியேறியதைப் துரைராஜின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டான். அதை நினைத்துத்தான் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவள் அவனை பார்த்தமாதிரியே காட்டிக்கொள்ளாமல் வந்து பேருந்தில் ஏறினாள். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. “இவன் போய் அவனிடம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான். அவன் அடித்தே கொன்றுவிடுவான். அதுக்கு நாமலே செத்துடலாம். அய்யோ புள்ளய என்ன பண்றது,” இப்படி பல திசைகளில் அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு இது தேவைதான் என்று நினைத்துக்கொண்டாள். இந்த வடிவுக்கு நாளைக்கு இருக்கு, என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்து மேட்டுப்பாளையம் வந்தது. மணி ஒன்பதரைதான் ஆகியிருந்தது. வேலைக்கே போகலாம் என்று வேகமாக மேடு ஏறினாள். தனக்கு பின்னாலேயே யாரோ வருவது போல் இருக்க, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிந்தான். இந்தச் சனியன் புடிச்சவன் ஏன் நம்ப பின்னாடி வரான், என்று எரிச்சலானாள். மீண்டும் திரும்பிப் பார்த்தாள் அவன் தன் முழுப்பல்லை காட்டிச் சிரித்தான். இவள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக கம்பேனிக்குள் நுழைந்து, தாமதமாக வந்ததற்கான வசையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கே வடிவு அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் லட்சுமிக்கு அவளை அப்படியே மிதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது.

லட்சுமியின் முகத்தை பார்ர்கும்போதே வடிவுக்குப் பயமாக இருந்தது. தாமதமாக வந்ததால் முதலில் லட்சுமி எதுவும் பேசவில்லை. அமைதியாக தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மதியம் உணவு இடைவெளியின்போது லட்சுமி திட்டியதில் வடிவு அழுதேவிட்டாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

“இல்ல லெட்சுமி, நான் நேத்து என் வீட்டுகாரர்கிட்ட சொன்னேன். அவரு உடனே நானே உன்ன கூட்டினு போறன்னிட்டாரு. காலைலயே கிளம்பிட்டோம். போன வீட்டுலயே வச்சிட்டன்னு பாதி வழியிலதான் தெரிஞ்சிச்சி. நீ வரத்துக்குக் கொஞ்சம் முன்னாடிதான் வந்தன். அஞ்சி நிமிசத்துல நானே யாருகிட்டயாது போன் வாங்கி உன்ன கூப்பிடலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. நான் வேணும்ன்னுலாம் ஒண்ணும் பண்ணல லெட்சுமி,” என்றாள்.

ஆனால் லட்சுமியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மீண்டும் வடிவிடம் ஏறினாள்.

“இப்ப அந்தச் சனியன் புடிச்சவன் வேற பின்னாடியே வரானே நான் என்ன பண்றது. என் வூட்டுக்காரங்கிட்ட சொல்லிட்டா இன்னா பண்றது,” என்றாள்.

“ஏய், அண்ணன் அதெல்லாம் நம்பாதுடீ,” என்றாள் வடிவு.

“நீ ஏன் அங்க போனன்னு முதல்ல உத உழும். வந்து வாங்கிக்கறியா?”

வடிவு அமைதியாக இருந்தாள். அன்றைய வேலை முடிந்து இருவரும் குறுக்கு வழியாகச் சென்றனர். அவன் வருகிறானா என்று அவ்வப்போது பார்த்தவாறே வந்தாள் லட்சுமி.

மறுநாள் தெருமுனையிலிருந்து பின்னாடியே வந்தான். பார்க்கும்போதெல்லாம் பல்லைக் காட்டினான். இது தினமும் தொடர ஆரம்பித்தது. லட்சுமிக்கு வீட்டிலும் வேலை ஓடவில்லை, கம்பெனியிலும் வேலை ஓடவில்லை. தூக்கம் தொலைந்தது. எந்த தப்பும் பண்ணாமல் ஏன் இந்த நரக வேதனை என்று நினைத்துக் கொண்டாள். இது இன்னும் எத்தனை நாள் தொடருமோ தெரியவில்லையே.

“பேசாம உன் வீட்டுக்காருகிட்ட சொல்லிடு” என்றாள் வடிவு. அவள் புது கம்பெனிக்கு மாறியதிலிருந்து அவளைப் பார்க்க முடியவில்லை லட்சுமியால். அதான் கடைக்கு போகிற சாக்கில் வடிவு வீட்டிற்கு வந்தாள். இருவரும் பல யோசனைகளை ஆராய்ந்தனர். முடிவில் எதுவும் திருப்தியாக இல்லை. லட்சுமி கிளம்பினாள்.

“சரி வடிவு நான் கிளம்பறன்,” என்றாள்.

இருவரும் வீட்டு வாசலுக்கு வந்தனர். எதிர்க்கடை வாசலில் அவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் வடிவு ஆவேசமாக விளக்குமாற்றை எடுத்து அடிக்கப் போனாள். லட்சுமி அவளைத் தடுத்துவிட்டாள். ஆனால் வடிவின் வாயை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் லட்சுமியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். வடிவு மீண்டும் தனக்கு உலை வைத்துவிட்டாள் என நினைத்துக்கொண்டாள்.

சில தினங்களாக அவன் வரவில்லை. லட்சுமிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் சும்மா இருப்பான் என்று மட்டும் தோன்றவில்லை. ஒரு நாள் அவள் வேலைவிட்டு வரும்போது ஒரு சந்தில் அவளை மடக்கி நேரடியாகவே கேட்டான், “உங்கிட்ட முதலும் கடைசியுமா கேக்கறன் என் கூட ஒருவாட்டி வர முடியுமா முடியாதா?” என்றான்.

லட்சுமிக்கு காதில் யாரோ அமிலத்தை ஊத்தியதுபோல் இருந்தது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு வேகமாகச் சென்றாள். அவன் அப்படிக் கேட்டதை அவளால் தாங்க முடியவில்லை. இரவு முழுவதும் அழுதாள். மறுநாள் உடம்பு சரியில்லை என்று வேலைக்குப் போகவில்லை. விட்டில் இருந்த வேலைகள் அன்று அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எந்த நினைப்பும் வரவில்லை. பின் மதியத்தில் அவள் கணவன் துரைராஜ் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான். அவனுடன் சில நண்பர்கள் வந்தார்கள். துரைராஜ் முகத்தில் சில இடங்களில் வீங்கியிருந்தது. சட்டை முழுவதும் கிழிந்து தொங்கியது. லட்சுமி பதற்றமாக அவனிடம் ஓடினாள். அவன் நண்பர்கள் அதற்குள், “ஒண்ணும் இல்லமா, சின்னா ஒரு தகராறு. எல்லாம் பேசி முடிச்சாசு. பதறாத” என்றனர். பிறகு துரைராஜிடம் திரும்பி, “துரை இத இத்தோட விடு. அவன்லாம் ஒரு ஆளுனு அவன்கூட போய்… சரிவிடு. நாளைக்கு நல்ல ரெஸ்ட் எடு பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

அனைவரும் போனபின் லட்சுமி மெல்ல அவனிடம் “எதுக்கு சண்ட” என்றாள்.

சிறிது அமைதியாக இருந்தவன் அவளிடம், “அந்தப் பரதேசி இல்ல, செல்வம்” என்றான்.

லட்சுமிக்கு பகீர் என்றது. அவன்தான் என்று நினைத்துக்கொண்டாள். துரை தொடர்ந்தான், “அந்த நாயி எங்கிட்டயே வந்து உன்னப்பத்தி தப்பா சொல்றான். உன்ன அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு. அதான் அடிச்சி அவன் வாய உடச்சிட்டன்.”

லட்சுமி தான் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது. இவள் அழுவதைப் பார்த்த துரைராஜ், “அட நீயேன் அழற, அவன் கிடக்கறன் பொறம்போக்கு” என்றான்.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.