தன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்  

சுரேஷ் பிரதீப்

Image may contain: Suresh Pradheep, outdoor

தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய வளமான நிலைக்கு பொதுவாகச் சொல்லப்படும் ஒரு காரணம் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்த பன்முக நோக்கு கொண்ட விரிந்த சிறுகதைத் தளம் என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் ஒரு கூற்று. அது உண்மையும்கூட. புதுமைப்பித்தனின் கதைகள் இன்றும் சவால் அளிப்பவையாக, மறுவாசிப்பினைக் கோருகிறவையாக, இருக்கின்றன. அப்படியொரு வலுவான ஆரம்பத்தின் காரணமாக அவருக்குப் பிறகு எழுத வந்தவர்கள் வேறு வேறு களங்களையும் கூறுமுறைகளையும் தேடிச்சென்று தமிழ்ச்சிறுகதை மரபை மேலும் வலுவானதாக மாற்றினர். புதுமைப்பித்தனுக்கு பிறகானவர்களில் சிறுகதை ஆசிரியர்களில் பலர் கவிஞர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். வெற்றிகரமான பல சிறுகதை ஆசிரியர்கள் தமிழில் உருவாகி வலுப்பெற்ற புதுக்கவிதை மரபுடன் தொடர்புடையவர்கள். தொடக்க கால உதாரணம் ந. பிச்சமூர்த்தி. பிச்சமூர்த்தியின் உரைநடையை வாசிக்கும் ஒருவர் அரை நூற்றாண்டு தாண்டியும் அவர் மொழியில் தேய்வழக்குகள் குறைவாக இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். சுந்தர ராமசாமி (பசுவய்யா), வண்ணதாசன் (கல்யாண்ஜி), யுவன் சந்திரசேகர் (எம். யுவன்) என நீளும் சிறுகதை ஆசிரியர்களான கவிஞர்களின் பட்டியல் போகன் சங்கரின் வழியாக இன்றும் தொடர்கிறது. இளம் எழுத்தாளரான விஷால் ராஜாவும் தொடக்க காலங்களில் கவிதைகள் எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இவர்கள் அனைவரின் வழியாகவும் கவிதை என நான் குறிப்பிடுவது நவீனக் கவிதை அல்லது புதுக்கவிதையை மட்டுமே. கவிதை சிறுகதைகளுடன் இத்தகைய நெருக்கமான ஊடாட்டத்தை நிகழ்த்தி இருப்பது சூழலின் தேவையும்கூடத்தான். பிற மொழிகளில் அறுபதுகளில் நவீனத்துவத்தின் வாயிலாக அடையப்பட்ட சாத்தியங்களை புதுமைப்பித்தன் நாற்பதுகளிலேயே நிகழ்த்தி விடுகிறார். ஆகவே வெவ்வேறு வகையான நடை மற்றும் மொழிகளுக்குள் தமிழ்ச் சிறுகதைகள் பயணிக்கத் தொடங்குகின்றன. இந்தப் பயணத்தின் விளைவுகளில் முக்கியமானது சிறுகதையும் கவிதை போன்ற படிமம் மற்றும் குறியீடுகளின் வாயிலாக இயங்கத் தொடங்கியதுதான். பூடகமான கூறல் முறை, மொழியை திருகிவிடுதல், சூழலை அறிந்தவர்கள் தொட்டெடுக்கக்கூடிய ஆழ்ந்த அங்கதம், என தமிழ்ச் சிறுகதை உரைநடையில் நிகழ்த்தக்கூடிய பெரும் சாதனைகளை நிகழ்த்தியது உண்மையே. ஆனால் இதன் எதிர்விளைவு சிறுகதை வாசகன் பூடகத்தையும் நுண்மையையும் புதுமையையும் தேடுகிறவனாக மாறி விட்டான். இயல்பான மொழி வெளிப்பாட்டின் மூலம் நேரடியாக கதை சொல்லும் படைப்பாளிகளை அவனால் உள்வாங்க முடியவில்லை. அசோகமித்திரனை இலக்கிய வாசகனிடம் கொண்டு சென்று சேர்ப்பது இன்றும் சவாலான பணியே. எளிமையைத் தாண்டி அவரது சிறுகதைகளின் நுண்மையை தொட்டுக் காட்ட மற்றொரு பெரும்படைப்பாளியாலேயே முடிகிறது. (எனக்கு அசோகமித்திரனை அவரின் முழு ஆகிருதியுடன் அறிமுகம் செய்தவர் ஜெயமோகன்).

சுரேஷ்குமார இந்திரஜித்தும் நேரடியான கூறல் முறையும் பெரும் முரண்கள் இல்லாத நேரடியானவை போன்ற தோற்றம் கொள்ளும் அவரது சிறுகதைகளால் கவனம் பெறாமல் விடப்பட்ட படைப்பாளி என்ற எண்ணம் அவரது ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தபோது எழுந்தது.

தன்னிலையின் விலக்கம்

தன்னிலையில் கதை சொல்வது (ஒரு கதைசொல்லியின் மூலம் சொல்லப்படும் கதைகள்) நவீனத்துவத்தின் முக்கியமான உத்திகளில் ஒன்று. நவீன இலக்கியமே ஒரு வகையில் தன்னிலையைச் சொல்வதுதான். படைப்பாளி என்ற தனித்த ஒருவன் ஒட்டுமொத்தமாகத் திரும்பி மலை போல அவன் முன்னே நிற்கும் மரபையும் வரலாற்றையும் பண்பாட்டையும் விமர்சிக்க தன்னை அதிலிருந்து விலக்கிக் கொண்டவனாக அதன் மாற்றின்மையால் தாக்கப்பட்டு தன் நீதியுணர்ச்சியால் துன்பப்படுகிறவனாக தன்னை சித்தரித்துக் கொண்டான். அந்தத் துன்பத்திற்காக அவன் கோபமும் கொண்டான். கண்ணீர் சிந்தினான். ஏளனிப்பவனாக மாறினான். இந்த கோபத்தையும் கண்ணீரையும் ஏளனத்தையும் புதுமைப்பித்தனிலேயே (ஏளனம் சற்று தூக்கல் அவரிடம்) நாம் காண முடியும். அதன் பிறகு அறிவும் நிதானமும் இத்தன்மைகளை மட்டுப்படுத்தினாலும் தன்னிலையில் கதை சொல்லும்போது பெரும்பாலான படைப்பாளிகள் இந்த கோபத்தின், கண்ணீரின், ஏளனத்தின், கூறினை கண்டுகொள்ள முடியும்.

பன்னிரெண்டு கதைகள் கொண்ட ‘நானும் ஒருவன்’ தொகுப்பில் நான்கு கதைகள் தன்னிலையில் சொல்லப்பட்டுள்ளன. ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’, ‘அந்த மனிதர்கள்’, ‘ஒரு திருமணம்’ என சில கதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூறுமுறையின் அடிப்படையில் மற்றவையும் தன்னிலைக் கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித் வேறுபடுவது இந்த தன்னிலைகளில் கோபத்தின், கண்ணீரின், ஏளனத்தின், சாயல் தென்படுவதில்லை என்பதே. இவற்றை கடந்துவந்துவிட்ட சமநிலையும் அந்த சமநிலையில் எழும் தடுமாற்றங்களாக மட்டுமே இச்சிறுகதைகளின் திருப்பங்களும் அமைந்துள்ளன. மிகத் தெளிவான பரப்பில் சரளமான மொழியில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இச்சிறுகதைகளின் முரண்கள் செறிவுடன் எழுந்து வருகின்றன.

கதைகள்

முதல் கதையான ‘நானும் ஒருவன்’ வன்முறைக்கான உந்துதலால் அடியாளாக மாறிப்போகும் ஒருவனைத் தன்னிலையாகக் கொண்டிருக்கிறது. “சண்டைக்கான புள்ளி” தன்னுள் உருவாவதை தொடர்ந்து செல்லும் அவன் வன்முறையாளனாக மாறி இறக்கிறான். இறக்கும் தருவாயில் சண்டைக்கான அவனது உந்துதல் மறைவது ஒரு முடிவாகவும் இறக்காமல் அவன் மேலெழுவது மற்றொரு முடிவாகவும் சொல்லப்பட்டிருப்பது மீண்டும் இக்கதையை வேறொரு கோணத்தில் இருந்து வாசிக்க வைக்கிறது.

‘மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்’ என்ற கதை “நவீன சாமியார் உருவாக்கத்தையும்” ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ என்ற கதை பின்நவீனத்துவ கோட்பாடுகளையும் நுட்பமாக பகடி செய்கிறது. அதிலும் பின்நவீனத்துவவாதியின் மனைவி கோட்பாடுகளை உண்மையில் நெருங்கி ஆராய்பவனில் தொடங்கி பாவனைகள் வழியாக வாழ்கிறவன் என்பது வரை தன் எல்லைகளை விரித்துக் கொள்கிறது.

’உறையிட்ட கத்தி‘ பகையால் மாற்றி மாற்றி கொலை செய்து கொள்ளும் இரண்டு குடும்பங்களின் கதையை சொல்லத் தொடங்கி தாய்மை பழியுணர்ச்சியை நீக்குவதாகக் காட்டி இறுதியில் தாய்மையும் பொருளற்று போய் நிற்கும் இடத்தில் முடிகிறது. இத்தொகுப்பில் இலக்கியத்தின் என்றென்றைக்குமான பேசுபொருளான பொருளின்மையை பிரதிபலிக்கும் கதையாக ‘உறையிட்ட கத்தி’யை வகைப்படுத்தலாம். கணவனைக் கொன்றவனை பழி தீர்க்க நினைக்கும் பெண் தான் கருவுற்றிருப்பது தெரிந்து அந்த எண்ணத்தை கைவிடுகிறாள். அவளது மாமனாரின் குரலில் சொல்லப்பட்டிருக்கிறது இக்கதை.

’மூன்று பெண்கள்‘ நவீன வாழ்வில் மக்களை நுழைத்துக் கொள்ளும் குழந்தையற்ற நவீனத் தம்பதிகளை ஒரு மரபான நம்பிக்கை அலைகழிப்பதைச் சொல்கிறது. வடிவ ரீதியாக இத்தொகுப்பின் மிகச்சிறப்பான கதையாக நான் கணிப்பது ‘மூன்று பெண்களை’த்தான். நூறு வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் ஒரு “குலச்சாபத்தை” ஆண் குழந்தையை தத்தெடுப்பதன் வழியாக கடந்து செல்ல நினைக்கின்றனர் அந்த தம்பதிகள். திராவிட இயக்கங்கள் உருவாக்கிய மாயங்களை முற்போக்கு லட்சியவாதம் கொடுத்த நம்பிக்கைகளை கடந்துவிட்ட லட்சியமற்ற எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு காலத்தில் மரபான நம்பிக்கைகளும் சிக்கல்களும் மனிதனை அலைகழிக்கத் தொடங்கி இருப்பதன் குறியீடாக இக்கதையை வாசிக்கலாம்.

‘ரெட்டைக் கொலை’ கதையில் தலித் ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அந்த ஊரின் ஊராட்சித் தலைவரால் வழக்கறிஞரிடம் அழைத்து வரப்படுகிறார். கொலை செய்தது யார் என்பது குறிப்பாக கதையில் சொல்லப்படாதது பல்வேறு ஊகங்களுக்கு கதைக்குள் வாய்ப்பளிக்கிறது. ஆண்டாள் கோதையாக அரங்கநாதனை மணக்கச் செல்வதை ‘ஒரு திருமணம்’ என்ற கதை சொல்கிறது. இத்தொகுப்பில் மொழி அழகாக வெளிப்பட்டிருக்கும் கதையும் ஆண்டாளின் அம்மாவின் வழியாக ஒரு நடைமுறை முடிவைத் தொட்டிருப்பதும் இக்கதையை முக்கியமானதாக மாற்றுகின்றன. ‘நானும் ஒருவன்’ போலவே இரண்டு முடிவுகள் இக்கதையில் எட்டப்பட்டாலும் இரண்டாவது முடிவின் “கட்டுடைப்பு” அம்சம் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

Image result for நானும் ஒருவன்

‘அப்பத்தா’ மற்றும் ‘மனைவிகள்’ ஆகிய கதைகள் இணைத்து வாசிக்கப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஆண் பெண் உறவின் விளக்க முடியாத வண்ணங்களை எந்தவித அதிர்ச்சி மதிப்புகளும் இல்லாமல் முன் வைக்கின்றன இவ்விரு கதைகளும். மகனுடைய மனைவியின் அழகில் ஈர்க்கப்படும் தந்தையாக, அந்த ஈர்ப்புடன் போராடுகிறவராக, அப்பத்தா கதையின் ரத்தினகுமார் வருகிறார். ‘மனைவிகள்’ கதையில் துக்க விசாரிப்புக்குச் செல்லும் கதைசொல்லியின் ரயில் பயணித்தினூடாக அவர் தந்தைக்கு இரண்டு மனைவி இருந்தது, அதனால் தந்தை இறந்தபோது எழுந்த சிக்கல்கள், இயல்பாகவே பெண்களை நோக்கி ஈர்க்கப்படும் கதைசொல்லியின் குணம், என நகர்ந்து கணவன் இறந்ததை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனைவியினை காணும் கதைசொல்லியின் அதிர்ச்சியுடன் இக்கதை முடிகிறது. இரண்டு கதைகளிலுமே பொதுவான அம்சம் என சொல்லத்தக்கது பெண்ணின் மீதான ஈர்ப்பை வெவ்வேறானதாக சித்தரித்துக் கொள்ளும் ஆணின் உள வண்ணங்களை இரண்டு கதைகளும் சித்தரிக்கின்றன என்பதே.

‘கணியன் பூங்குன்றனார்’ ஒரு அரசியல் சிக்கலையும் மனிதனின் இயல்பான கருணை உணர்வையும் இணைக்க முயல்கிறது. திராவிட கொள்கைகளின் வழியாக லாபம் பெறும் ஒரு பெரிய மனிதர் ஏழை பிராமணனுக்கு உதவ நினைப்பதாக கதை பின்னப்பட்டுள்ளது. கூறலில் சிறப்பாக வெளிப்பட்டிருந்தாலும் முடிவும் கதையின் சிக்கலை தெளிவாக கோடிட்டாலும் ஒரு செயற்கைத்தனம் இந்தக்கதையை மட்டும் தொகுப்பில் அந்நியமாக உணரச்செய்கிறது.

எல்லா பக்கங்களில் இருந்தும் கைவிடப்படும் ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது ‘மினுங்கும் கண்கள்’. இயல்பான அன்புணர்வு கொண்ட அந்தோணிராஜ் எல்லா தரப்பினராலும் அலைகழிக்கப்படுகிறார். நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடிக்கும்போதுகூட பிழை நிகழ்கிறது. ஒரு மகள் விவாக ரத்து கோரி நிற்கிறாள். மற்றொரு மகள் மதம் மாறி வாழ்கிறாள். பசியென்று வந்த சிறுவனுக்கு உணவிடுகிறார். அவனே கத்தியை எடுத்து கழுத்தில் வைக்கிறான். உணவிட்டதால் கழுத்தில் கத்தியை இறக்காமல் விட்டான் என அந்தோணிராஜ் ஆசுவாசம் கொள்வதில் கதை முடிவது ஒரு நேரம் அபத்தமாகவும் இயல்பானதாகவும் தோன்றுகிறது.

‘அந்த மனிதர்கள்’ என்ற கதையில் குழுச்சண்டை, கொலை, பழிவாங்கல், என நகரும் வாழ்வில் அப்படி வன்முறையில் ஈடுபடப் போகிறவன் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை எப்படி பொருள் கொள்வதென திண்டாடினேன். பின்னரே கதையின் தலைப்பு நினைவுக்கு வந்தது. நமக்கு பிரச்சினை எல்லாம் “அந்த” மனிதர்களுடன் மட்டும்தான். “அந்த” வெல்லப்பட வேண்டிய, வீழ்த்தப்பட வேண்டிய, மனிதர்களைத் தவிர நமக்கு அனைவரும் அணுக்கமானவர்கள்தானா என்ற கேள்வியை இக்கதை எழுப்பிவிட்டது.

சலிப்பின்மையின் துயர்

இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் சிக்கலாக (என்னுள்ளும் இச்சிக்கல் உண்டு) நான் கணிப்பது வாழ்விலும் எழுத்திலும் அவர்கள் கண்டடையக்கூடிய சலிப்பும் பொருளின்மையும். ஆச்சரியப்படுத்தும் விதமாக வாழ்க்கை அவ்வளவு நம்பிக்கை தரக்கூடியதாக இல்லாத முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இந்த சலிப்பு இல்லை. அவர்களிடம் இருந்தது கோபமும் துயரும் நிலையின்மையுமே. பொது எதிரி என ஒருவர் இல்லாமலாகிவிட்ட இன்றைய நிலையில் இளைஞர்களிடம் சலிப்பேற்படுவது இயல்பானதே. ஆனால் அது செயல் புரிவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான காரணமாக ஆவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் பாத்திரங்கள் அனைவரும் தொடர்ந்து செயல் புரிகிறவர்களாக, முடிவு எத்தகையது என்பதை எண்ணி குழம்பாமல் தொடர்ந்து செயல்படுகிறவர்களாக, வாழ்வை அதன் தீவிரத்துடன் எதிர்கொள்கிறவர்களாகவே வருகின்றனர். அதே நேரம் பொருளின்மையால் அலைகழிக்கப்படும் துயரையும் அடைகின்றனர்.

சமகால இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் அறிய முன்னோடியான சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகில் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது.

அதீத வன்முறை, அதிர்ச்சியூட்டும் சித்தரிப்புகள் போன்றவை அளிக்கும் சலிப்பிலிருந்து இக்கதைகள் நம்மை வெளியே எடுக்கின்றன. மனம் கொள்ளும் நுட்பமான சஞ்சலங்களை இக்கதைகள் காட்சிப்படுத்துகின்றன. எளிமையின் மூலமாகவே நமக்குள் நுழையும் தன்மை கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை மரபின் வலுவான பின்னணியில் தன் குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.

 (‘நானும் ஒருவன்’ ஆசிரியரின் சமீபத்திய தொகுப்பு. ‘மாபெரும் சூதாட்டம்’ (2005), ‘அவரவர் வழி’ (2009) என இதற்கு முன்னர் ஆசிரியர் எழுதிய சிறுகதைகள் இரண்டு நூல்களாக தொகுப்பப்பட்டுள்ளன. ‘இடப்பக்க மூக்குத்தி’ என்றொரு நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது).

 

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.