யோகம்

ஸ்ரீதர் நாராயணன்

வின்செண்ட் நன்றாக தூங்கி இரண்டு நாட்களாயிற்று. கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பழகிப் போன ஊர். இன்று முதல் மொத்தமாக அந்நியமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டான். அந்த வங்கியை சுற்றி பார்வையை விட்டான். விஸ்தாரமான கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நிச்சலனமான சாலை நீண்டு கிடந்தது. எத்தனை நாட்கள் அந்த சாலையில் நடந்து சென்றிருக்கிறான். முனை திரும்பியதும் சின்ன பார்பர் ஷாப் வரும். மஞ்சள் நிறத்து வியட்நாமிய முடி திருத்துநர் இவனை முதலில் பார்த்தபோதே ‘நீ இந்தியாவிலிருந்தா வருகிறாய்? ரஜினிகாந்தின் நாடு’ என்று சொல்லி தலையை ஆட்டி சிரித்தான். ட்யூக்கோ என்னவோ அவன் பெயர். இவன் பதிலுக்கு சொன்னது எதுவும் அவனுக்கு புரியாது. ஆனாலும் தலையை தலையை ஆட்டி சிரிப்பான். அதன் முன்னே இருக்கும் பஸ்டாப்பில்தான் 24-S பிடித்து வீட்டுக்குப் போவான். இன்று வீட்டுக்குப் போக வேண்டியதில்லை. பதிலாக 521-E பஸ்ஸை பிடித்தால் ஒன்றரை மணிநேரத்தில் நியுயார்க் நகரத்திற்குள் புகுந்து, இரண்டு சப்வே மாறி, ஒரு ஏர்ட்ரைன் பிடித்தால் ஜேஎஃப்கே ஏர்போர்ட்… இந்தியா போனால் புவனேஷ்வரோ, சண்டிகரோ, பெங்களூரோ, குர்கானோ… இப்போதைக்கு எதுவும் நிலையில்லை…

‘அடுத்தது யார்?’ என்ற குரலைக் கேட்டு வின்செண்ட் நனவுலகிற்கு மீண்டான். காசாளர் மேஜையிலிருந்த பெண்மணிதான் கையைத் தூக்கி அவனை அழைத்தார். கவுண்டருக்கு அருகேப் போனதும்,

‘உங்களுக்கு எப்படி உதவி செய்யட்டும்?’ என்று இனிமையான குரலில் கேட்டவரைப் பார்த்ததும் வின்செண்ட்டிற்கு ஆச்சரியமாக இருந்தது. அது பாட்ரீஷியா. அவன் குடியிருந்த ராத்மென் குடியிருப்பிற்கு அருகே இருந்த செவன்த் டே சர்ச்சின் கோயர் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர். அவருக்கு பார்வை குறைபாடு உண்டு. அவரெப்படி வங்கி காசாளர் மேஜையில்?

‘பாட்ரீஷியா! அது வின்செண்ட் வர்கீஸ். வங்கிக் கணக்கை முடித்துக்கொள்கிறாராம். மீதமிருக்கும் பணத்தை பைசல் பண்ணி அனுப்பி விடுகிறாயா? நான் சற்று அவசரமாக வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்’ என்று சொல்லியவாறே, இவனிடம் வந்து கைகுலுக்கி விட்டு ‘உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்’ வங்கியை விட்டு வெளிக்கிளம்பினார் ராண்டர். அந்த அமைதியான வியாழக்கிழமை மதியத்தில் வங்கியில் வின்செண்ட்டையும் பாட்ரீஷியாவையும் தவிர யாருமில்லை.

‘ஹலோ பாட்ரீஷியா.. எப்படி இருக்கிறீர்கள்?’ தயக்கத்துடன் ஆரம்பித்தான் வின்செண்ட்.

‘ஓ!, நீங்களா? உங்களை சர்ச்சில் பார்த்திருக்கிறேன். ஷனா டோவா. சொல்லுங்கள் உங்கள் அக்கௌண்ட் நம்பரை’ என்று சிரித்தார் பாட்ரீஷியா.
அவர் முன்பிருந்த சராசரிக்கும் அகலமான கணிணி திரையும், நீலவண்ணத்தில் ஒளிரும் விசைப்பலகையும் அவருடை பார்வைக்குறையை நிவர்த்தி செய்ய உபகாரமாக இருக்கும் என்று புரிந்தது. மேஜைக்கு அப்புறம் இருந்துகொண்டு கணிணி திரையில் என் வங்கி கணக்கைப் பற்றிய விவரங்களை தேடத் தொடங்கினார்.

‘ஏன் திடீரென வங்கிக் கணக்கை மூடுகிறீர்கள் மிஸ்டர். வர்க்கீஸ்?’ விசைப்பலகையை இயக்கிக் கொண்டே கேட்டார் பாட்ரீஷியா.

‘வேலை தீர்ந்துவிட்டது. ஊருக்குப் போகிறேன்.’

‘ஓ! எவ்வளவு வருடங்களாக ஜேஸ்டன்வில்லில் இருக்கிறீர்கள்?’

‘இருக்கிறது என்ன… இருக்கிறது. இருந்தேன். இன்றோடு சரியாக இரண்டாயிரத்து நானூற்று இருபத்தியொரு நாட்கள். ஆறு ஆண்டுகள் ஏழு மாதங்கள் பதினெட்டு நாட்கள்’ என்றான்.

நாட்களின் எண்ணிக்கையைக் கேட்டு சிரித்தார் பாட்ரீஷியா. இரண்டாயிறத்து நானூற்றி இருபத்தியொன்றும் ஒரே மாதிரியான அச்சில் வார்த்த இரண்டாயிறத்து நானூற்றி இருபத்தியொரு நாட்கள். அந்த சிறிய ஊரில், அத்தனை காலத்தில் பெரிதாக எதுவும் மாறியதில்லை. அதே தபால் அலுவலகம், அதே இலியாஸ் மளிகைக் கடை, அதே பால் பண்ணை, அதே ஸ்டார்பக்ஸ். காப்பி கொடுக்கும் கேத்தி அம்மையார் கூட மாறியதில்லை. ஆனால் அவருடைய புன்னகை மட்டும் எப்போதும் புதியதாக இருக்கும். ஆம். ஒரே மாதிரியான நாட்கள்தான் என்றாலும் எப்போதும் ஏதோ ஒரு புதுமை நிகழ்ந்துவிடுகிறது. ‘ஷனா டோவா’ என்று பாட்ரீஷியா வாழ்த்தியது போல அவருடைய நம்பிக்கைக்குகந்த இந்த பரிசுத்த புத்தாண்டு துவக்கத்தில் தனக்கு என்ன புதுமை காத்திருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டான் வின்செண்ட்.

‘இன்றேவா காலி செய்துகொண்டு போகிறீர்கள்?’ எனக் கேட்டார்.

‘காலியெல்லாம் காலையே செய்தாகிவிட்டது. நீங்கள் இப்பொழுது கணக்கை முடித்து பணத்தைக் கொடுத்தால், இதோ பத்து நிமிஷத்தில் இப்படியே 521-E பஸ்ஸில் புறப்பட்டுவிடுவேன்’ என்றான்.

‘இன்று மாலை ஷோஃபார் வழிபாட்டுக்கு நீங்கள் இருக்கமாட்டீர்களா?’ என்றுக் கேட்டார். நான் ஊரில் இருந்தபோதெல்லாம் இவ்வளவு சிரத்தையாக பக்தி செய்ததில்லை அம்மணி. இங்கு வந்துதான் தனிமையால் உந்தப்பட்ட ஆத்ம பரிசோதனைகள் எல்லாம் என நினைத்துக் கொண்டான்.

‘ம்ஹூம். இன்னும் ஐந்தரை மணிநேரத்தில் ஃப்ளைட்டில் இருக்க வேண்டும்’ என்றான்.

‘பிரச்னையேயில்லை. உங்கள் கணக்கை மூடியாகி விட்டது. உங்கள் கணக்கில் $252 டாலர்களும் 44 செண்ட்களும் இருக்கின்றன. கேஷாக வாங்கிக்கொள்கிறீர்களா இல்லை, ட்ராவலர்ஸ் செக்கா?’ என்றார்.

டாலர் நோட்டின் பச்சை நிறத்திற்கு இந்தியாவில் தனி மவுசு உண்டு. ஏர்போர்ட் பணியாளரிலிருந்து டாக்ஸிக்காரர்வரை டாலர் நோட்டை தடவி தடவிப் பார்த்து வாங்கிக் கொள்வார்கள்.

‘காசாகவே வாங்கிக் கொள்கிறேன்’ என்று புன்னகத்தான்.

‘சின்ன நோட்டுகளா, பெரிய நோட்டுகளா?’

‘ஆங்… பெருசாவே கொடுங்களேன்’ என்று சொன்னவன் திடீரென ஞானோதயம் பெற்றவனாக

‘இல்ல ஒரு நூறும், மிச்சத்தை இருபது இருபது பில்லா கொடுத்திருங்க’என்றான்.
ஒற்றை டாலர்களாக கொடுக்காதவரை நல்லது. அத்தனையையும் மடியில் கட்டிக் கொண்டு கனத்துடன் அலைய வேண்டியிருக்கும்.

முதலில் நூறை கையிலெடுத்தவர், வின்செண்ட் மாற்றிச் சொன்னதும், வேகமாக இருபது டாலர் பில்லை எடுத்தார். பிறகு அதன் மேல் வரிசையாக பன்னிரெண்டு நூறு டாலர் பில்களை அடுக்கினார். அதன் மேல் ஒரு பத்து டாலர் நோட்டு. பிறகு சில்லறைகளை எண்ணி எடுத்தார். மீண்டும் வரிசைகிரமமாக எல்லாவற்றையும் எண்ணி அடுக்கி ஒரு கவரில் போட்டு நீட்டினார். நோட்டு டினாமினேஷன் மாறிப் போய்விட்ட உணர்வே இல்லாமல் சிரித்துக் கொண்டே ‘உங்கள் பிரயாணம் இனிமையாக நடந்தேற வாழ்த்துகள்’ என்றார்.

பேட்ரீஷியா கொடுத்த கவரில் அளவுக்கு அதிகமான பணம் இருக்கிறது என்பது வின்செண்ட்டிற்கு நன்றாகத் தெரிந்தது. ஏனோ, அதைச் சொல்லி அந்தக் கவரை பேட்ரிஷியாவிடம் திருப்பிக் கொடுத்து சரியான பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிடே, அந்த பணக்கவரை அப்படியே வாங்கிக் கொண்டான். அனிச்சையாக ஒரு தாங்க்ஸும் சொல்லிவிட்டு திரும்பி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். லேசாக வியர்க்கத் தொடங்கியிருந்த நெற்றியை மெலிதாக கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான். வங்கியை விட்டு வெளியே வந்ததும், ஆச்சரியமாக அவனை அவனே தனியாகப் பிரிந்தது பார்ப்பது போல பார்த்துக் கொண்டான். என்ன செய்கிறோம் என்றொரு கேள்வி மெள்ள மெள்ள மனதில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தெருவில் இறங்கி நடக்கும்போது, இன்னொரு மூலையில், மனசு கணக்குப் போட்டுப் பார்க்கத் தொடங்கியது.
முழுவதுமாக ஆயிரத்து இருநூற்று டாலர்களும் சொச்சமும். கண்பார்வை குறைபாடாலோ, வேறு ஏதோ குழப்பத்தாலோ, பாட்ரீஷியா அம்மாள் டினாமினேஷன் மாற்றி கொடுத்ததில் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் டாலர்கள் அதிகம் இருந்தன அந்த கவரில். இந்திய மதிப்பில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பணம். கைப்பெட்டியை தரையில் உருட்டியபடி இழுத்துக்கொண்டே வேகமாக நடந்து முக்கு திரும்பிததும், அங்கே 521-E பஸ் கிளம்பத் தயாராக நின்றுகொண்டிருந்தது. ஒரு நொடி… ஒரு நொடியில் ஒரு பகுதி.. வங்கிக்கு திரும்பிச் செல்லும் உந்துதல் ஏற்பட சற்று தயங்கினான்.

இவன் தயக்கத்தைப் பார்த்ததும், ‘வந்து ஏறிக் கொள்’ என்று பஸ் டிரைவர் கையைக் காட்ட, அதையே சமிக்ஞையாக ஏற்றுக்கொண்டு, திபுதிபுவென ஓடிப் போய் பஸ்ஸில் ஏறிவிட்டான்.

எதிர்சீட்டில் அமர்ந்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்த பெரியவர் நட்போடு புன்னகைத்தார்.

‘பாருங்கள், இதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏழு வருடங்கள் வரி கட்டியிருக்கிறேன். சோஷியல் சர்வீஸ்க்கு பணம் அழுதிருக்கிறேன். பீட்ஸா கடைகளில் குழந்தைகள் நல நிதிக்கான உண்டியலில் சில்லறை போட்டிருக்கிறேன். காப்பி கடைகளில் கிடைத்த பென்னிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். லைப்ரரி, அல்ஸ்மைர் நிதி, சர்ச் நன்கொடை… இதில் எதையும் நான் இனி இருந்து அனுபவிக்க போவதில்லை. ஆற அமர கூட்டிக் கழித்துப் பார்த்தால் பல்லாயிரங்களுக்கு மேல் இந்த ஊருக்காக செலவழித்திருக்கிறேன். அதற்குமுன்னால் இந்தப் பணம் எம்மாத்திரம்?’ என்று வாய்விட்டுக் கேட்க மிக விரும்பினான். ஆனால் அதற்கு முன்னால் உடலெல்லாம் வியர்க்க தொடங்கிவிட்டிருந்தது.

இந்த நஷ்டத்தை வங்கி யார் மேல் சுமத்தும்? என்றக் கேள்வி மனதின் ஓரத்தில் ரம்பமாக அறுத்துக் கொண்டிருந்தது வின்செண்ட்டை. பார்வை குறைபாடுள்ள பேட்ரீஷியா மேலா? இல்லை வங்கி மேலாளர் எரிக் மேலா? இல்லை வேறெதுவும் அநாமத்து கணக்கில் எழுதி விடுவார்களா.

‘நன்றாக நினைவிருக்கிறது ஆபீசர். 521-E பஸ்ஸில்தான் போகிறேன் என்று சொன்னான். ஐந்தரை மணி நேரத்தில் ஃப்ளைட் என்றும் சொன்னான். இப்போதே நீங்கள் போனால்…’ என்று பேட்ரீஷியா அம்மையார் போலிசுக்கு தகவல் சொல்வது போல் காட்சி மனதில் ஓடியது. எப்படியும் பஸ்ஸை தாண்டி போலிஸ்கார் யாரேனும் வந்து குறுக்கே மறித்து நிறுத்துவார்கள் என்பதில் நிச்சயமாக இருந்தேன். இல்லை வழியிலிருக்கும் ஊர்களில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி ‘வின்செண்ட் யாருப்பா’ எனக் கேட்டுக் கொண்டே விலங்கோடு வருவார்களா.
இந்த திடீர் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் சுத்த பொய். எல்லாம் பம்மாத்து கணக்கு. ஒன்று கூடினால் வேறொன்று குறையத்தான் வேண்டும். ஆனால், இன்று செய்ததற்கு பெயர் திருட்டு. இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கை துரோகம் எனலாம். ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் எரிக் அவனை பேட்ரீஷியா அம்மையாரிடம் தனியே விட்டுச் சென்றிருப்பார்? சேச்சே… பார்வை குறைபாடுள்ளவர்களை ஏன் வங்கியில் டெல்லர்களாக வைத்திருக்கிறார்கள்? மாற்று திறனாளிகளை ஊக்குவிப்பதில் என்ன தவறு? எலிமெண்ட்ரி பள்ளியில், குழந்தைகளுக்கு மாற்று திறனாளிகள் எப்படி எல்லா வேலையையும் தங்குதடையில்லாமல் செய்ய முடியும்.. எம்மாதிரியான உபகரணங்கள் தேவைப்படும் என்று செய்முறைகள் காட்டியதை ஜேஸ்டன்வில் ஹெரால்டில் படித்திருக்கிறான். எத்தனை பேர்கள் தொழில்நுட்ப துணை கொண்டு தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்வை தொடங்குவார்களோ, இப்படி அவர்களுடைய நம்பிக்கையை எல்லாம் குலைக்கும்படியான ஒரு காரியத்தை…. வின்செண்ட்டிற்கு
நியூயார்க் நகரில் ஃப்ராங்க்ளின் அவென்யூவை தவறவிட்டு ரோத்மென்ஸ் வரைப் போய் பிறகு வேறு சப்வே பிடித்து மாறி ஒருவழியாக ஹோவார்ட் பீச் போய் சேரும்போதே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. மூன்று டாலர் நட்டம் என்று நினைத்துக் கொண்டான். ஏர் ட்ரெயின் பிடித்து ஏர்போர்ட் வந்து சேரும்போது வின்செண்ட் மிகவும் சோர்ந்து போயிருந்தான். வியர்வையில் சட்டையெல்லாம் முழுவதுமாக நனைந்துவிட்டது. யாராவது ‘ஆர் யூ ஆல்ரைட்’ என்று கேட்டிருந்தால் ‘ப்ளீஸ் கால் த ஆம்புலன்ஸ்’ என்று நொறுங்கி விழுந்திருப்பானா இருக்கும்.
சட்டைக்காலர் அருகே மைக்கில் பேசிக்கொண்டே, நீட்டிய துப்பாக்கியுடன் ஏதோ ஓரு போலீஸ்காரர் தன் முன்னே வந்து நிற்கப் போகிரார் என எதிர்பார்த்தபடியே இருந்தான்.

‘ஜேஸ்டன்வில்லில் பாங்கா? அந்த ஊர் எங்கிருக்கிறது… நான் மேன்ஹாட்டனில் இருந்து வருகிறேன்.’என்று டபாய்த்தால் நம்புவார்களா. பொய் சொன்னதற்கும் சேர்த்து கேஸ் எழுதிவிடுவார்களா.

குவைத் ஏர்வேஸ் கவுண்ட்டரைத் தேடிப் பார்த்தான். இதோ, ஏறக்குறைய முடிந்தது போலத்தான். போர்டிங் பாஸ் வாங்கி,பாதுகாப்பு சோதனைகளை கடந்து உள்ளே போனால் ஒருமணி நேரத்தில் ஃப்ளைட் கிளம்பிவிடும். அடுத்த பன்னிரெண்டு மணிநேரங்களில் குவைத். அங்கிருந்து சென்னை. ‘தாய்மண்ணே வணக்கம்’ என்று தரையில் முத்தமிட்டு புளகாங்கிதப்படலாம். கண்ணோரங்களால் ஏதும் போலிஸ் தொப்பி தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.

‘ஃப்ரீஸ்… அப்படியே நகராம நில்லுங்க’ என்று ப்ரூஸ் வில்லிஸ் சாயலில் யாரேனும் குறுக்கே ஓடினால் என்ன செய்வது? தடாலென குப்புற விழுந்து மறைத்துக் கொள்ள வேண்டுமா? விழுவதுதான் விழுகிறோம் ப்ரூஸ் வில்லிஸ் காலிலே நேரடியாக விழுந்து ‘பாருங்க… இதெல்லாம் ஒரு கணநேர சபலம்’என மன்றாட வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

ஒருவகையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா என்றொரு சுயவதை மனநிலைக்கு போய்விட்டிருந்தான் வின்செண்ட். அவன் எண்ணத்தை அறிந்து கொண்டவர் போல, டிக்கெட் கவுண்டரில் இருந்த உயரமானவர் தன்னுடைய குடமிளகாய் மூக்கைத் தூக்கி அவன் பாஸ்போர்ட்டை புரட்டி புரட்டி பார்த்தார்.

‘இப்படி ஓரமா நிக்கிறீங்களா’ என்று வின்செண்ட்டை ஓரங்கட்டிவிட்டு வரிசையில் இருந்த அடுத்திருந்த தெலுங்கு குடும்பத்தை கவனிக்க போய்விட்டார்.

வின்செண்ட்டின் சந்தேகம் ஏறக்குறைய ஊர்ஜிதமாகிவிட்டது. வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ‘இன்றே ஊருக்குப் போகிறேன். இன்ன பஸ்ஸில் ஏறி இன்ன நேரத்தில் போகிறேன்’ என்று வரிசையாக உளறி வைத்துவிட்டு வந்திருப்பதால், சுலபமாக ட்ரேஸ் செய்து விட்டார்களோ என நினைத்துக் கொண்டிருக்கும் போது, தோளில் ‘பட்’டென ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் கோட் சூட்டில் ஒருவர். நிச்சயம் போலிஸ் இல்லை. ஏதாவது மேனேஜராக இருக்க வேண்டும்.

‘வாருங்கள் அந்த அறைக்குப் போகலாம்’ என்று அவனை மரியாதையாக அழைத்துக் கொண்டு போனார்.

உள்ளே நுழைந்ததும் விலங்கை மாட்டுவார்களா, இல்லை ஓரமாக குத்தவைத்து உட்காரச் சொல்வார்களா என்று திகிலோடு எட்டிப் பார்த்தால் நல்லவிதமாக நாற்காலியெல்லாம் போட்டிருந்தார்கள். ‘பாருங்கள்… மிஸ்டர். வர்கீஸ்..’

‘நீங்கள் வின்செண்ட் என்றே அழைக்கலாம்’.

‘ஆங்… மிஸ்டர் வின்செண்ட்… உங்கள் பாஸ்போர்ட்டைக் கொஞ்சம் கொடுக்கிறீர்களா’ என்று வாங்கி பல்வேறு கோணங்களில் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

‘பாருங்கள் உங்கள் அமெரிக்க வீசா காலாவதியாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக’

‘ஹா! அது நான் இந்தியாவை விட்டு கிளம்பும்போது வாங்கியது. பிறகு இங்கே இருந்தபடிக்கே நீட்டித்ததால் பாஸ்போர்ட்டில் பதிவாகவில்லை. இதோ இமிகிரேஷன் கொடுத்த ப்ரூவல் நோட்டீஸ் தனியாக இருக்கிறது பாருங்கள்’என்றான்.

‘அது தெரியும் மிஸ்டர் வர்கீஸ். பாருங்கள். நீங்கள் போகும் விமானம் நேராக குவைத் போவதில்லை உங்கள் பயணத்தில் இடையே எரிபொருள் நிரப்ப, ஐரோப்பிய நகரத்தில் ஒரு டெக்னிகல் ஸ்டாப் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு பாஸ்போர்ட்டில் முறையாக இருக்க வேண்டும். டெக்னிகல் பிராப்ளம்’ என்றார் சிரித்தபடியே.

‘ஏன்? நானா ஃப்யூயல் நிரப்பப் போகிறேன்… நான் பிளேனை விட்டே இறங்க மாட்டேனே ஐயா.’ என்று படபடத்தான்.

‘உங்கள் பேரில் எந்த பிரச்னையுமில்லை மிஸ்டர் வின்செண்ட். இது ஒரு வேண்டத்தகாத நடைமுறைச் சிக்கல். ஏர்போர்ட் ட்ரான்ஸிட் விசா என்று ஒன்று இருக்கிறது. ஆனால் இப்போது நேரமில்லை. வேறு வழியில்லை. உங்கள் பிரயாணத்தை கேன்சல் செய்ய வேண்டியதுதான்’

பயணத்தை ரத்து செய்துவிட்டு எங்கு போவது என்று மலைப்பாக இருந்தது வின்செண்ட்டிற்கு.

அந்த மேனேஜர், தன்னுடைய கோட் பட்டன்களை திருகிக்கொண்டும், கணிணித் திரையை மேய்ந்துகொண்டும், ஃபோனில் பேசிக்கொண்டும், காப்பியை குடித்துக் கொண்டும் மேலும் சில நிமிடங்களைப் போக்கியவர்,

‘உங்கள் அதிர்ஷ்டம், நாளைக் காலை ஒன்பதரைக்கு புறப்படும் ஃப்ளைட் நேராக குவைத் போகிறது. அதில் ஓர் இடம் இருப்பதாக அசார் சொல்கிறார். இன்றைய பிரயாணத்தை ரத்து செய்துவிட்டு நாளைக்கு போவது ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்கான ஒரே தீர்வு. உங்களுக்கு சௌகரியப்படுமா?’ என்றார்.

‘என்னை நடை பயணமாக இந்தியா அனுப்பினாலும் எனக்கு சௌகரியமே. இப்போது நானென்ன செய்ய வேண்டும்?’ என்றான் வின்செண்ட்.

‘மிக நல்லது. அசார் உங்களுக்கு உதவுவார்’ என்று மீண்டும் குடமிளகாய் மூக்கரிடம் அனுப்பி வைத்தார்.

‘இது நான்-ட்ரான்ஸ்ஃபரபிள் டிக்கெட் சார். அதனால் உங்கள் இன்றைய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். உங்கள் வங்கிக் கார்டுக்கே பணம் திருப்பியாகிவிட்டது. புதிய டிக்கெட்டிற்கு எப்படி பணம் செலுத்தப் போகிறீர்கள்?’

‘ஐயய்யோ. அது டெபிட் கார்டாச்சே. அந்த வங்கிக் கணக்கை இன்னிக்குத்தானே மூடினேன்? எவ்வளவு பணம் திருப்பினீர்கள்?’ என்றான் பதட்டமாக.

‘தொள்ளாயிரத்து எண்பது டாலர்கள். அதிலொரு சிக்கலும் இருக்காது சார். நீங்கள் உங்கள் பாங்க்கை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்களேன். புதிய டிக்கெட்டிற்கு ஆயிரத்து இருநூற்று பதினேழு டாலர்கள் ஆகிறது’ என்றார்.

கையில் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து புதிய டிக்கெட்டையும், மறுநாள் பயணத்திற்கான போர்டிங் பாஸையும் அப்பொழுதே வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். இரண்டு நாட்களான பதட்டங்கள் எல்லாம் அடங்கிப் போயிருக்க, மனதின் ஒரு மூலையில் கணக்கு ஓட ஆரம்பித்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் நட்டம்தான். ஆனால் டிக்கெட் குழப்பம் தீர்ந்ததே. ஓரிடத்தில் கூடினால் பிறிதோரிடத்தில் ஏதாவது குறைந்துதானே ஆக வேண்டும். இன்றைக்கு அடித்தது இப்படியொரு யோகம்.

சௌகரியமான நாற்காலியைத் தேடி அமர்ந்து கால்நீட்டி சாய்ந்துகொண்டான். அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் புன்னகைத்து ‘*ஷனா டோவா’ என்றான். அந்தப் பெண் இனிமையாக புன்னகைத்தது. பாட்ரீஷியாவைப் போல். இனி காலை ஒன்பது மணிவரை நிம்மதியாக கிடந்து உறங்கலாம்.

*Shannah Tovah:- சப்பாத்தில் (Shabbhat) நம்பிக்கை வைத்திருக்கும் கிறிஸ்துவ சர்ச்களை சேர்ந்தவர்கள் அதி பரிசுத்த நாளன்று (Rosh Hashanah) ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது. யூத புதுவருடம் இந்நாளில்தான் தொடங்குகிறது என்பது நம்பிக்கை. இவ்வருட (2014) ரோஸ் ஹஸன்னா செப் 25ம் கொண்டாடப்பட்டது.

2 comments

  1. இந்த கதைக்கு அதிர்ஷ்ட கணக்கு என்பதை விட DIVINE RETRIBUTION என்றே வைத்திருக்கலாம். கதையோட்டம் சுற்றுப்புற வர்ணனைகளைத்தவிர்த்து கதா நாயகனின் guilty conscience reactions பற்றியதாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.