வெல்ஸ் டவருடன் ஒரு உரையாடல் – தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

 
நன்றி என்பிஆர் – 
 
உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு, இதற்கு கிடைத்திருக்கும் இப்படிப்பட்ட வரவேற்பு. இது எப்படியிருக்கிறது?
 
சுவாரசியமான விஷயம்தான். என்னால் இதை நினைத்தே பார்க்க முடியவில்லை. பொதுவாக, அமெரிக்காவில் சிறுகதை தொகுப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பற்றி நான் அறிந்து கொண்ட அளவில், உண்மையில் என் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அது எவராலும் கவனிக்கப்படாது, விமரிசகர்களால் கடுமையாகக் கண்டனம் செய்யப்படாமல் மறைந்தால் நல்லது என்பதாகதான் இருந்தது. அவர்கள் இதை விரும்புகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்னை ஊக்குவிப்பதாக இருக்கிறது. பிரமாதமாக இருக்கிறது.

 
இதில் ஒன்பது கதைகள் இருக்கின்றன.
 
ஆமாம்..
 
இவை எல்லாமே வேறெங்கோ பதிப்பிக்கப்பட்டவை. ஆனால் நீங்கள் சும்மா அவற்றை எடுத்து, இதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. புத்தக வடிவில் பதிப்பிக்கப்படுவதற்குமுன் இவற்றை திருத்தி எழுதுவதில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது.
 
ஆமாம். இது ஒரு சுவாரசியமான வேலைதான். முதலில் கைப்பிரதியை பதிப்பிக்க விற்றபோது கொடுத்ததில் இருந்த கதைகளில் இரண்டு கதைகளை அது திரும்பி வந்தபோது படித்துப் பார்த்ததும் இது மிக மிக மோசமாக இருக்கிறது என்று உடனே நினைத்தேன். ஹார்ட்கவர் புத்தகத்தில் இடம் பெறும் தகுதி இவற்றுக்கு கொஞ்சமும் கிடையாது. எனவே இரண்டு கதைகளை அதிலிருந்து நீக்கினேன். அப்புறம் இன்னொன்று- அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான்கைந்து கதைகள், அவற்றைப் பெரிய அளவில் திருத்தி எழுதினேன் – கதைசொல்லும் கோணத்தையெல்லாம் மாற்றினேன். ஒரு பாத்திரத்தின் பார்வையில் சொல்லப்பட்ட கதையை வேறொரு பாத்திரத்தின் பார்வையில் திருத்தி எழுதினேன். தன்மை ஒருமையில் இருக்கும் கதையை எடுத்துக் கொண்டேன், நான் இப்படிச் செய்தேன் என்றெல்லாம் எழுதியதை, படர்க்கை ஒருமையில் மாற்றி எழுதினேன். கதைகள் எனக்கு திருப்தியாக இருக்கும்வரை மிகப் பெரிய அளவில் அவற்றின் கதையமைப்பை மாற்றி எழுதினேன்.
 
ஒரு வகையில், அவை ஏறத்தாழ புதிய கதைகள் என்றே சொல்லலாம்.
 
ஆமாம், அவற்றில் சில கதைகள். ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட சில கதைகளை முழுக்க முழுக்க மாற்றி எழுதினேன். அவற்றை புதிய கதைகளாகவே பதிப்பிக்க அனுப்பியிருந்தாலும் சரியாக இருக்கும்.
 
உங்கள் சிறுகதைகளைப் பற்றி பேசுவோம். வினோதமானவை, தொல்லை செய்பவை, சிறிது இருண்மையானவை, ஆனால் நகைச்சுவையாகவும் உள்ள கதைகள் என்று உங்கள் கதைகள் அதிக அளவில் விவரிக்கப்படுகின்றன. வினோதமான, தொல்லை செய்யும் விஷயங்கள் உங்கள் கதைகளில் இருப்பதை என்னால் உணர முடிகிறது, ஆனால் இதெல்லாம் பொருத்தமான விவரணைகள்தானா? உங்கள் கதைகளை நீங்கள் எவ்வாறு பொதுமைப்படுத்தி விவரிப்பீர்கள்?
 
தெரியவில்லை. அவை வினோதமாக இருக்கலாம் என்பது புரிகிறது, ஆனால் அப்படிப்பட்ட தொகுப்பை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கதை எழுத உட்காரவில்லை. ஒரு கதை எழுத முடியும் என்று நம்பிக்கை வர வேண்டுமென்றால், அது தனக்குரிய இடத்தை தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் – வெறுமையிலிருந்து அதன் இருப்பைப் பறித்துக் கொள்ள வேண்டும், அது தனக்குரிய சூழலைத் தானாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம், வித்தியாசமான ஒரு கருப்பொருளைப் பேசுவதாக இருக்கலாம் என்பது புரிகிறது. ஒரு எழுத்தாளனாக நான், எனக்கு பழக்கமில்லாத எதையோ எழுத வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது, அல்லது எதையாவது நான் புதிதாகக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்.
 
எழுத உட்காரும்போது கதை எங்கே செல்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஒரு பத்திரிக்கையாளராகவும்கூட என்னால் நான் எழுதுவதன் திசையைத் தீர்மானிக்க முடிவதில்லை.
 
நிச்சயமாக.
 
அல்லது, இதுதான் பிளாட்டாக இருக்கப் போகிறது என்று ஒரு ஐடியா உங்களுக்கு இருக்கிறதா, இல்லை கதை தானாகவே உருவாகிறதா?
 
இது கஷ்டமான கேள்வி- இன்னும் நான் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இரு வழிகளிலும் செய்திருக்கிறேன். மிக அதிக அளவில் பிளாட் செய்தால், அது நிஜமாகவே ஆபத்தானது, அதிக முன் அனுமானத்துடன், அல்லது மிகவும் கவனமாக நீங்கள் கதையமைப்பைத் தொகுக்கப் பார்க்கிறீர்கள். நல்ல வெற்றி பெற்ற கதைகள் மிகச் சிறிய ஒரு ஐடியாவில் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன் – அது ஒரு வாக்கியமாக இருக்கலாம், அல்லது ஒரு காட்சியாக இருக்கலாம். கதையை அணுகும்போது எது உங்களை யோசிக்க வைக்கும் முதன்மை உந்துவிசையாக இருக்கிறதோ, அதை அப்படியே செல்ல விடவேண்டியதுதான் என்று நினைக்கிறேன். அது உங்களை இன்னமும் பெரிய இடத்துக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். துவக்கத்தில் அதிக அளவில் கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு ஆரம்பித்தால், வறட்சியான, தோல்வியில் முடியக்கூடும். 
 
பாத்திரத்தின் பார்வையை ஒரு கதையில் மாற்றியதாகச் சொன்னீர்கள். அந்தக் கதையின் பெயர், “retreat” என்று நினைக்கிறேன் . இரு சகோதரர்களைப் பற்றிய கதை, அதில் ஒருவன் ஓரளவுக்கு வெற்றி பெற்று ஆசிரமம் போன்ற ஒன்றைத் துவக்குவான் என்று நினைக்கிறேன். அவன் எங்கு துவக்குகிறான்?
 
மெய்ன்.
 
அவர்களில் மற்ற சகோதரன், வெற்றி பெற முடியாத இசைக்கலைஞன் அங்கு வருகிறான். முதலில் கதை இசைக்கலைஞனாக இருக்கும் இளைய சகோதரனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தொகுப்பில் மூத்த சகோதரனின் பார்வையில் இருக்கிறது.
 
ஆமாம்.
 
இதற்கு முன் இப்படி கேள்விப்பட்டதில்லை. திருத்தி எழுதுவது என்பது இப்படி புரிந்துகொள்ளப்படுவதை இப்போதுதான் பார்க்கிறேன். இதை எப்படிச் செய்கிறீர்கள்? இது கதையைப் பெரிய அளவில் மாற்றுவதாக இருந்ததா?
 
மாற்றியது என்றுதான் நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் டெவலப்பராக வளர முயற்சி செய்து தோற்றுப் போனவனின் கதை இது என்பதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. ஒரு காலத்தில் பெரிய பணக்காரனாக இருந்தவன். சில முதலீடுகள் மோசம் போகின்றன. அதனால், மெய்னில் இந்த இடத்தை வாங்கிக் கொண்டு அங்கே ஆசிரமம் மாதிர்யான ஒரு ரிட்ரீட் ஒன்றை அமைத்துக் கொண்டு அங்கு செல்கிறான். சிக்கலில் இருப்பவன் என்று சொல்லலாம். இவன், தன்னம்பிக்கை மிகுந்தவன். கொஞ்சம் பெருமை பேசுகிறவன். முதல் கதையில், இளைய சகோதரன் அங்கு வருகிறான், அவன் சகித்துக் கொள்ள முடியாத இந்த அண்ணனின் பகட்டு பாவனையை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான். முதல் சில திருத்தங்கள் செய்தபின், இந்தக் கதையின் கைப்பிரதியை எடுத்துப் பார்க்கும்போது, தன் அண்ணனைப் பிடிக்காதவன் போன்ற ஒரூ பாத்திரத்தைக் காண முடிந்தது.. அண்ணன் விஷயமாக இத்தனை விவகாரங்கள் இருக்கின்றன. கதை நெடுக கெலி செய்துகொண்டே இருக்கிறான். இதெல்லாம் சுவாரசியமான விஷயங்கள் அல்ல. தன் பக்கம் இரக்கம் இல்லாத ஒரு பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதையைச் சொல்வது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தேன். அவ்வளவாக அன்பு இல்லாத ஒரு பாத்திரத்தின் பார்வையில் சொல்ல முயற்சித்தேன். தார்மீக அறம் சார்ந்த சிக்கல்கள் இந்தப் பார்வையில் கதை சொல்லும்போது கிடைக்கும் என்று நினைத்தேன்.
௦௦௦
 
நீங்கள் விடாமல் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டே இருப்பவர் என்ற பெயர் உங்களுக்கு இருக்கிறது.  எப்போது நீங்கள் திருத்துவதை நிறுத்துகிறீர்கள்? எந்த புள்ளியில், உங்கள் படைப்பை விலகி நின்று வாசித்து ரசிக்கும் தொலைவு ஏற்பட நீங்கள் அனுமதிக்கிறீர்கள்?
 
அடக்கடவுளே. கஷ்டமான கேள்வி. என்னைப் பொருத்தவரை, திருத்தி எழுதுதல் என்பது இப்படி நடக்கிறது – முதல் கதையின் வித்து கிடைக்கிறது. ஏதோ பிளாட்டுக்குரிய முட்டாள்தனமான ஒரு தனித்தன்மையாக இது பெரும்பாலும் இருக்கிறது – யாரோ ஒருத்தர் தான் வாங்கிய tater totsல் கட்டைவிரல் இருப்பதைப் பார்க்கிறார்கள், மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும் குளம் ஒன்று மனிதர்களை குரங்குகள் மாதிரி நடந்து கொள்ள வைக்கிறது. அதை எழுத ஆரம்பிக்கிறேன்- ஒவ்வொரு முறையும் முட்டிக் கொள்ளும் படிப்பினையை மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு தவிர்க்க முடியாமல் வருகிறேன்: கதையில் என்ன நடக்கிறது என்ற பிளாட் விவகாரங்கள் தம்மளவில் பிரயோசனப்படுவதில்லை. ஒரு கதையில் என்ன நடக்கிறது என்பதைவிட, அவற்றை வாழ்ந்து அனுபவிக்கும் பாத்திரங்களின் வாழ்வில் அவை எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதும், முட்டாள்தனமான என் tater tot ஐடியா எனக்குக் கிடைத்தபோது இருக்காத பாத்திரம் கதைக்குள் வருவதும், இவைதான் முக்கியம். எனவே, திருத்தித் திருத்தி எழுதும்போது, முழுகதையையுமே குப்பையில் வீச வேண்டியதாகிறது, அல்லது நான் உருவாக்கிய மனிதர்களின் உணர்ச்சிகளைப் படுத்தியெடுக்கும் நிகழ்வுகளை, அவை இன்னும் நன்றாக அவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கிறேன்.  
 
000
 
 
நீங்கள் பிளாக்கிங் செய்ய முயற்சித்திருக்கிறீர்களா?
 
இல்லை… வலைப்பதிவு எழுதுவது என்ற நினைப்பே வினோதமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நீங்கள் ஒரு புனைவெழுத்தாளராகவோ, நீண்ட கட்டுரைகள் எழுதுபவராகவோ இருந்தால் கவனமாக எழுதப்படாத எழுத்து என்ற எண்ணமே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அதில் புத்துணர்ச்சியளிக்கும் எதுவோ இருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் எனக்கு எழுத்து என்றால் ஒவ்வொரு வார்த்தையையும் தீவிரமாக யோசித்து எழுதுவதுதான் முக்கியம்- ஏப்பம் விடுவதுபோல் வார்த்தைகளைக் கொட்டுவது என்பது வித்தியாசமாக இருக்கிறது. அப்புறம், இணையமே வினோதமான வஸ்துதான். நீங்கள் எழுதுவது அங்கு இருக்கப்போகிறது, எப்போது வேண்டுமானால், என்றைக்கு வேண்டுமானால் யாரும் அதைப் படிக்க முடியும் என்ற நினைப்பே எனக்குப் பிடிக்கவில்லை. எழுத்து என்றால் அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட காலம் இருக்க வேண்டும், அதை வாசிப்பதிலோ, தொகுப்பதிலோ, யாருக்கும் அக்கறை இல்லாமல் போகும்போது, அது மறக்கப்பட்டுவிட வேண்டும்.
 
உங்கள் ஆதர்ச வாசகர் யார்?
 
வழக்கமான ஒரு சிறுகதையில் எப்படிப்பட்ட நிறைவை எதிர்பார்க்கிறார்களோ, அவர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
 
இது சுவாரசியமான கருத்து – சிறுகதைகள்\, வழக்கமான நிறைவு அளிக்க முடியும் என்பது.
 
ஒருவர் நடந்த ஒரு கதையைச் சொல்வதைக் கேட்கும்போது ஒரு நல்ல பிளாட்டைக் கேட்டதில் கிடைக்கும் திருப்தியைப் போன்ற ஒன்றுக்காகதான் சிறுகதை படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதேவேளை, அந்தச் சிறிய நடந்தகதையை வாழ்க்கையை மாற்றும் கணமாக விரித்துச்செல்லும் ஆழம் கொண்டதாக எடுத்துச் செல்லவும் நாம் விரும்புகிறோம் என்று நினைக்கிறேன். அறிமுகம், வளர்ச்சி, முத்தாய்ப்பாய் ஒரு வாக்கியம் என்ற இலக்கண வடிவை நாம் விரும்புகிறோம். நியாயப்படுத்தும் அந்தக் கணம் உங்கள் கதையில் இல்லாதபோது, திருப்தியளிக்காத, அரைகுறை கதை கேட்டது போன்ற உணர்வுதான் உங்கள் வாசகருக்குக் கிடைக்கும். அதுதான் சிறுகதையின் சுமை, அல்லது அந்தச் சுமையைதான் நான் உணரத் தலைப்படுகிறேன். 

நன்றி – The Story Prize

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.