– ஸ்ரீதர் நாராயணன் –
“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”
லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக
“என்ன சார்” என்றான்.
“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.
“எந்தூரு உனுக்கு?” என்றார்.
உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.
“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”
“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”
அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி
‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’
‘டீச்சர்ஸ் காலனிப் பக்கம் சார். மெயின் ரோடுக்கு பின்னாடி கவுன்சிலர் ரவிக்குமார் பெட்ரோல் பங்க் இருக்கில்ல சார். அங்கிட்டுத்தான்’
‘கடைல இருக்கற அத்தினி பொண்ணுங்க வீடும் உனக்குத் தெரியுமாக்கும்’ அதிரடியாக வந்தது அடுத்தக் கேள்வி.
‘அப்பாருக்கு கவுன்சிலர் அண்ணன் பங்காளி முறைங்க. கடைக்கு வாறதுக்கு முன்ன அங்க கொஞ்ச நாளு வேலைல இருந்தன் சார்’ கிடைத்த இடைவெளியில் தன்னை சரியாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டான் என்பது லட்சுமணன் இதழ்களில் விரிந்த சிறிய புன்னகையில் தெரிந்தது.
முத்துராமன் பக்கம் திரும்பி ‘இவனும் நேத்து ஓட்டலுக்கு போயிருந்தானா’ என்று கருணாகரனைச் சுட்டிக் காட்டி கேட்டார்.
‘சேச்சே…. அந்த குரூப்பெல்லாம் சேட்டு ஃப்ரெண்டுங்க சார்’
‘ஓ!’ என்றவர், ‘சரி, வீட்டக் காட்ட இவனையும் அனுப்புங்க. நான் அஙக் போயி மிச்சத்த விசாரிச்சுக்கறேன்’ என்று கடை வாசலை நோக்கி சென்றார்.
‘சார், அண்ணே இதக் கொடுக்கச் சொன்னார். வீட்டுக்கு ட்ரெஸ்ஸு’ குடுகுடுவென பின்னால் ஓடிய முத்துராமன் நீட்டிய பெரிய பிரவுன் கவரை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவர், மீண்டும் கீழுதட்டை மடித்துக்கொண்டு தலையாட்டினார்.
‘எல்லாம் லேட்டஸ்ட் மாடல் சார். சூரத் சரக்கு. போனவாரம்தான் வந்திச்சு’ என்றார் முத்துராமன்.
லட்சுமணனின் முகக்குறிப்பை புரிந்து கொண்டவன் போல கருணாகரன் சட்டென அந்தக் கவரை வாங்கிக் கொண்டு அவர் பின்னாலேயே நடந்து சென்றான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, காரின் முன் சீட்டில் டர்க்கி டவல் போர்த்தியிருந்தது. பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு தங்கள் இருக்கையை உயர்த்திக் காட்ட ஒரு டர்க்கி டவல் தேவை. அவனுக்கு இன்னமும் லட்சுமணன் எந்தவகையான அதிகாரத்தின் பிரதிநிதி என்று புரியவில்லை. ஏதோ போலிஸ் சம்பதப்பட்ட ஆள் என்று மட்டும் ஒரு தினுசாக புரிந்து கொண்டிருந்தான். காலையில் கடைக்கு வந்தபோதே எல்லோரும் தனம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். தினகரன் பேப்பர் மூன்றாவது பக்கத்தில் ‘நட்சத்திர ஓட்டலில் ஜல்சா. காருக்குள் அழகியுடன் உல்லாசம்’ என்ற கவர்ச்சியான செய்திகளுடன் தனம் புகைப்படமும் வந்திருந்தது என்று காட்டினார்கள். அது சம்பந்தமாக ஏதோ விசாரணை என்று மட்டும் புரிந்துகொண்டான்.
பின் சீட்டில் அவன் ஏறி உட்கார்ந்ததும், டிரைவர் வண்டியை கிளப்ப, லட்சுமணன் முன் சீட்டிலிருந்து சற்றே தன் உடலை திருப்பியயபடி,
‘கவுன்சிலர் பங்காளி முறைங்கற.., இந்த சேட்டுங்க கிட்ட ஏம்ப்பா வந்து மாரடிச்சிக்கிட்டிருக்க. எஸ்ஸை செலக்சன் எதுக்காச்சும் போட்டிருக்கியா?’
‘அண்ணன் போட்டிருக்கான் சார். அத்தலெட்ல ஊனிவர்சிட்டி சர்டிபிகேட்டு எல்லாம் வச்சிருக்காப்டி’ என்றான் கருணாகரன்.
‘போச்சொல்ல, பேரு நெம்பர் எல்லாம் எழுதிக் கொடு. செலக்சன் போர்டுல நம்மாளுங்கதான் பூராம். போட்டு உட்டுடலாம், என்ன” அதட்டலாகத்தான் சொன்னார். கருணாகரனும் வேகமாக தலையாட்டினான்.
‘இன்னும் எத்தினி நாளைக்கு இந்த எடுபிடி வேலன்னு இருந்திட்டிருக்கப்போற… ஏதாச்சும் கவர்மெண்ட்டு வேலக்கு போயி உருப்படியாகிற வழியப்பாரு. எங்கய்யன்கூட மாட்டு தரகு யாவாரம்தான். நான் அந்தப் பக்கமே தலவச்சு படுக்க மாட்டேன்னுட்டனே. அரக்காசுன்னாலும் அரசாங்க வேல…. பாதிக்காசுன்னாலும் போலிஸ்க்காரன் வேலன்னு கண்டீசனா இருந்திட்டேன்,’ என்றார்.
‘டிஎன்பியெஸ்ஸி எளுதிருக்கேன் சார். நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா செஞ்சிருவேன்’ என்றான் கருணாகரன்.
‘நமக்கு ரெண்டும் பொட்டப்புள்ளங்களா போச்சுது. களுதய்ங்களப் பிடிச்சு கெட்டிக் கொடுக்கறத தவிர என்னாத்த செய்யிறது? காலேசு கம்யூட்டர் டயிலரிங்னு எல்லாம் படிச்சிருக்கு. இப்பத்தான் எல்லாம் வேண்டியிருக்கே,’ மீண்டும் திரும்பி கருணாகரனைப் பார்த்தார். ‘அப்பாரு என்ன செய்யிறாரு? காடு களனி உண்டா?’ என்றார்.
‘அப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேல பாத்து ரிடயராயிட்டார் சார். இப்பம் கட்சி வேலலதான் ஃபுல்லா. ஊர்ல மெத்த வீடு உண்டு சார். காடு கரம்பல்லாம் கிடயாது சார். நான் இங்க சும்மா ஃப்ரெண்சுங்களோட ரூம்பு எடுத்து தங்கியிருக்கேன்’ என்றான்.
‘பள்ளிக்கூடத்துணியெல்லாம் போடுவீங்களா? சின்னப்பொண்ணு எட்டாப்பு வாசிக்குது. எஸ்பிஓஏல. ரெம்ப வ்ளாட்டுப்புள்ள. டெய்லி உடுப்ப கிளிச்சிக்கினு வருது.’
‘இது ரெடிமேட் கட சார். வடக்காவணி மூல வீதில கட்பீஸ் கடயும் இருக்கு சார். அங்க எல்லா இஸ்கூலு ஊனிஃபார்மும் உண்டு சார்.”
சிறிது நேரம் எதிர்ப்புறம் விரைந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களை பர்த்தபடி வந்தவர், கீழ்ப்பாலம் முனை திரும்பும்போது மீண்டும் பாதி திரும்பியபடி கேட்டார் ‘இந்தப் பொண்ணு…. என்னா பேரு…. தனம்…. எப்படி ஆளு?’ என்றார்.
‘அது… நல்ல பொண்ணாட்டம்தான் சார் இருக்கும்,’ மையமாக சொல்லி வைத்தான்.
‘உங்க சேட்டு என்னய்யா…. எப்பப் பாத்தாலும் பொலிகாளை மாதிரி ஊரெல்லாம் அலையிறான். பேப்பரு வரைக்குமா நூஸ் போகற மாதிரி வச்சுக்கிறது… அதுவும் கார் பார்க்கிங்ல வச்சு. அதான் ஓட்டல் ஓட்டலா ரூம்பு கட்டி போட்டிருக்காய்ங்கல்ல… அந்த போட்டோக்காரன்லாம் போட்டோ எடுக்கற வரைக்கும் கவனமில்லாம…. ‘ அலுத்துக் கொண்டார் லட்சுமணன்.
சமன்லாலுக்கு பெண்கள் என்றால் பான்பராக் போதை போன்ற வஸ்து என கருணாகரன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் நேற்றைய சம்பவம் சற்று அதிரடியாகத்தான் இருந்தது. தனம் எப்படி இதில் சம்பந்தப்பட்டிருப்பாள் என்பதுதான் கருணாகரனுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. தனத்தின் அப்பா ஆறுமுகம் ஒரு வணிக வளாகத்தின் வாட்ச்மேனாக இருப்பவர். அந்த வளாகத்தில் சமன்லாலின் நண்பர்களின் கடைகள் நிறைய உண்டு. என்னதான் ஆட்டம் போட்டாலும், ஒரு தராதரம் வேண்டும் என்று நினைக்கும் கவுரவ மைனர்கள்
‘அவனச் சொல்லியும் குத்தமில்ல. தெனமும் பாலும் பாதாமுமா குளிக்கிறான். கோவில்மாட்டுக்கு கொம்பு சீவிவிட்ட மாதிரி திரியறான். ஏதாவது கேஸ் கீஸ்னு ஆகும்போது இருக்கு அவனுக்கு. ஏதோ குமார் சார் சொல்றாருன்னுதான் இப்ப வந்தேன்’ என்றார்.
‘சார், சார், லெஃப்ட்ல அஞ்சாவது பில்டிங்கு சார். அதுக்கு பக்கத்துல இருக்கற சின்ன வீடுதான்’ என்றான் கருணாகரன்.
நீலநிற பெயிண்ட் அடித்திருந்த கதவைத் தட்டியதும், ஆறுமுகம்தான் கதவைத் திறந்தார். கலைந்த தலையும் முறுக்கு தளர்ந்த மீசையுமாக குலைந்து போய் இருந்தார். ‘ந்தா, இவன் கூட கடயில வேல பாக்குற தனம்கிறது…’ லட்சுமணனின் குரலைத் தொடர்ந்து கருணாகரனைப் பார்த்தவரின் முகம், அவமானத்தால் இன்னமும் கறுத்தது.
‘நான் போலிஸ். ஒரு சின்ன விசாரண’ என்ற லட்சுமணன், ஆறுமுகத்தின் பதிலுக்கு காத்திராமல், ஏறத்தாழ அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். சுவர்களின் மங்கிய டிஸ்டெம்பரும், ஒயர் பிய்ந்த நாற்காலிகளும், வெளிறிய சிமிண்ட் தரையுமாக சோபையிழந்த வீடு. புடவைத் தலைப்பை போர்த்தியபடி உள்ளறையிலிருந்து வெளிவந்தவரைப் பார்த்ததும் தனத்தின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான் கருணாகரன். முன்நெற்றி கூந்தலிழைகளில் கூடுதல் நெளி கலந்த நரைகள்.
நாற்காலியை கவனமாக பரிசோதித்தபடியே உட்கார்ந்த லட்சுமணன், ஓரிரு நொடிகளிலேயே சூழலை முழுவதுமாக எடைபோட்டிருந்தார்.
‘எந்தூரு நீங்க?’ என்று ஆரம்பித்தார். கருணாகரன் கவனமாக எதிலும் அமராமல் அவர் பின்னால் நின்று கொண்டான்.
‘பரத்திக்குளம் சார். மாடக்குளம் தாண்டி தெக்கால. இங்கிட்டு வந்து இருவது வருசமாச்சுது’ என்றார் ஆறுமுகம், இன்னமும் குழப்பத்தில் இருந்து வெளிவராதபடி.
‘பொழப்பு தேடி வந்த இடத்துல, நாமதான் கொஞ்சம் சூதானமா இருக்கனும். இப்படி பேப்பரு, போட்டோன்னு போகவிட்டா எப்படி’ என்றார்.
ஆறுமுகம் சட்டென கேவலாக அழத்தொடங்க, அவருடைய மனைவி தழுதழுத்த குரலில், ‘பொட்டப்புள்ளய பெத்து வச்சுட்டு நாங்க படாத துன்பமில்ல சார். ஏதோ கட வேல, ரெண்டு காசு வந்தாக்க, கைக்கும் வாய்க்கும் சரியாப்போகுமேன்னு…. பாவிமக… எங்கப் போயி கொண்டு விட்டா பாருங்க. வெட்டிப் போட்டுறலாம்னுதான் வருது. என்னத்த செய்ய. பெத்து தொலச்சிட்டமே’ என்றார்.
சாய்ந்திருந்த நிலையில் இருந்து கொஞ்சம் முன்னகர்ந்த லட்சுமணன், ஆறுமுகத்தை விட்டுவிட்டு அவர் மனைவியிடம் பேசத்தொடங்கினார்.
‘இதுக்கெல்லாம் ஆத்திரப்பட்டு, வெட்டிப் போடனும்னு கெளம்பினா என்னாத்துக்கு குடும்பமும் புள்ளைங்களும். நான் காலைலயே சேட்டுங்ககிட்ட பேசிட்டேன்,’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். ஆறுமுகம் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்ள, அவர் மனைவி புடவைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டார்.
‘ஊரெல்லாம் அவனுங்க போடற ஆட்டம்தான். ஆனா நமக்கு நம்ம பொண்ணு ஃபீச்சர்தான முக்கியம். இல்லீங்களா’ என்றார்.
எதிர்தரப்பில் இருந்து பெரிதாக சலனம் எதுவும் நிகழவில்லை என்று நிச்சயித்துக் கொண்டதும், இன்னமும் கொஞ்சம் முன்னகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
‘பணம் படச்சவன் பல மைலுக்கு கையும் காலும் நீளும். நாமதான் உசாரா ஒதுங்கி இருந்துக்கனும். இதோ தம்பியும் சொல்லிச்சு. ஏதோ கடைல வேல செய்யறவங்களுக்கு பார்ட்டி வக்கப் போயி…’
கருணாகரன் பக்கம் திரும்பிச் சொன்னார். கருணாகரன் அறிந்து, கடைத்தொழிலாளிகளுக்கு என்று எந்த பார்ட்டியும் நடக்கவில்லை. ஆனால், மணிலால் கொண்டாட்டங்களின் வகைகளை முழுவதுமாக துய்ப்பதே லட்சியமாக வாழ்பவன். அவனுடைய சிவந்த நிறமா, செண்ட் வாசமா, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் கவர்ச்சியா, எது தனத்தை இழுத்து சென்றது அங்கே என்றுதான் கருணாகரனுக்கு தெரியவில்லை.
லட்சுமணன் நிறுத்தியதும், ‘ஆமாம். ஏதோ பார்ட்டின்னாங்க. எனக்கு வகுறு சரியில்லன்னு நாம் போகல,’ என்றான். அவனுடையை முன்ஜாமீன் பற்றி கண்டுகொள்ளாமல் லட்சுமணன் தொடர்ந்தார்.
‘இந்தக்காலத்து புள்ளங்களை சீரழிக்கிறதே இந்த பார்ட்டிங்களும், ஆட்டமும்தானே. நான் பத்திரிகைல கண்டீசனா சொல்லிட்டன். இனி இதப் பெருசு படுத்தாதீங்கப்பா. ஏதோ நடந்தது நடந்துபோச்சி. நமக்கு நம்ம பொண்ணு ஃபீச்சர்தான் முக்கியம்…. இல்லங்கம்மா’ என்றார்.
ஆறுமுகத்தின் மனைவி அழுகையை நிறுத்துவதாக இல்லை. அந்த சூழலை லட்சுமணன் முழுவதும் தனக்கானதாக ஆக்கிக் கொண்டார். இனி அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஊருக்கு வடக்கே, பேருந்து நிலையம் தாண்டி, ராஜலக்ஷ்மி நகரில் இருக்கும் விடுதியில் ஆறுமுகத்திற்கு கேர்டேக்கர் வேலை ஏற்பாடு செய்துவிடலாம். அங்கேயே ஜாகையெல்லாம் செய்து கொடுத்து விடுவார்கள். மணிலாலில் ஏற்பாடுதான். வாட்ச்மேன் வேலையை விட கேர்டேக்கரில் சம்பளம் கூட. தனத்திற்கும் அங்கேயே ஒரு ப்யூட்டி பார்லரில் சொல்லி வைத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பதிலுதவியாக, பேப்பர் செய்தியை வைத்துக் கொண்டு யாராவது கேஸ் கீஸ் என்று பெரிதாக்க வந்தால் பணிந்து போகாமல் இருப்பது. சோகத்தின் காரணமாக எதுவும் அசம்பாவிதம் நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரைமணி நேர பேச்சுவார்த்தையில், இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த ஆறுமுகம் இப்போது லட்சுமணனின் முகத்தை கவனித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தார். அவருடைய மனைவியின் புடவைத் தலைப்பு முகத்தை விட்டு கீழிறங்கியிருந்தது. லட்சுமணன் அடுத்த ஸ்டேஜுக்கு முன்னேறினார்.
‘வேலயும் மயிரும் ஆச்சுன்னு நானும் விடல. நாளைக்கு பொண்ணுக்கு சுகமில்லன்னாக என்ன ஆகும்’ கொக்கி போட்டு நிறுத்தினார். பிறகு அவரே தொடர்ந்து,
‘கேஷா அம்பதாயிரம் தர்றேன்னுட்டாப்ல. ராகதேவி நர்சிங்ஹோம்ல நம்ம டாக்டரு இருக்காப்படி. ஒரு செக்கிங் வேணா பண்ணிக்கட்டும். ந்தா… தம்பியவே கூட போய் வரச்சொல்லிடறேன். அப்புறம், பொண்ணு உள்ளதான் இருக்குதா?’ என்றார். அது கேள்வியல்ல என்பதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு சில நொடிகள் பிடித்தது.
ஆறுமுகத்தின் மனைவி கம்மலான குரலில் ‘தனம்… அம்மாடி… ஒருநிமிசம் வந்துட்டுப் போம்மா’ என்றார்.
உள்ளிருந்து தயக்கமாக வெளியே தலையை மட்டும் நீட்டிய தனம், சில நொடி தயக்கங்களுக்குப் பிறகு முழுவதுமாக வெளியே வந்து தலைகுனிந்தபடி நின்றாள்.
“ந்த பாரும்மா, எல்லாம் அப்பா அம்மாகிட்ட சொல்லிருக்கேன். பாத்து பக்குவமா நடந்துக்க. தோ…. நேத்து வந்த ட்ரெஸ்ஸாம். சேட்டு உனக்காக அனுப்பியிருக்காப்டி,’ என்று கருணாகரனை பார்த்து சைகை காட்ட, அவன் வேகமாக வெளியே வந்து காரில் இருந்த பிரவுன் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு போய் வீட்டினுள் இருந்த சிறிய மேசையின் மீது வைத்தான்.
‘அப்ப நான் கெளம்பறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். நம்ம போன் நெம்பர் இந்த கார்டுல இருக்கு. என்ன பிரச்னைன்னாலும் கூப்பிடுங்க. போனதும் டெம்போவுக்கு சொல்லிவிடறேன். நைட்டோட ஷிஃப்ட் பண்ணிட்டுப் போயிடலாம். நான் வந்து திரும்பியும் பாக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு கருணாகரன் பின்தொடர வெளியேறினார் லட்சுமணன்.
காருக்குள் ஏறியதும், பெருமூச்சு விட்ட லட்சுமணன் ‘க்ரீன் டவர்ஸ்க்கு விடுய்யா வண்டிய. அங்கதான் இருக்கானுங்கன்னு கண்ணன் சொன்னாப்ல. எல்லாம் பைசலாயிடுச்சுன்னு சொல்லிட்டுப் போயிடலாம்’ என்றார்.
பிறகு கருணாகரன் பக்கம் திரும்பி ‘இதென்னய்யா, ஓணானுக்கு உறை மாட்டிவிட்ட மாதிரி இருக்கு. இதுக்கா உங்க சேட்டு ஃபைவ் ஸ்டார் ஓட்டல் வரைக்கும் செலவு பண்ணிட்டுப் போனான். தராதரம் தெரியாத நாயி. இவங்கொடுத்து நம்ம வூட்டுக்கு வாங்கிட்டு போற அளவுக்கு வக்கத்து போயிட்டமாக்கும். ஏதோ கண்ணன் சொன்னாரேன்னு இதெல்லாம் பாக்க வேண்டியிருக்கு’ என்றார்.
‘அதான… தரத்துக்கு ஏத்த தரகு. வடியலுக்கு ஏத்த விறகுன்னுவாங்க. நம்ம வீட்டுக்குன்னு ஒரு கவுரதை இருக்கு. நம்ம பொண்ணுங்களுக்குன்னு ஒரு மதிப்பு இருக்குல்ல.’ என்றான் கருணாகரன். அவன் கிண்டல் அடிக்கிறானோ என்கிற சந்தேகத்தில் லட்சுமணன் அவனைத் திரும்பி முறைத்தார். அதற்குள் கருணாகரன் முகத்தை திருப்பிக் கொண்டுவிட்டதால் அவரால் அனுமானிக்க முடியவில்லை.