துபாயின் நீல நிறக் கடலைப் பார்த்தபடி மிக உயர்ந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயர்தர ஹோட்டலில் அமர்ந்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஹத் ஹஸன் தன் பூனைக் கண்களில் அங்கிருக்கும் பெண்களை மேய்ந்துகொண்டே அவ்வப்போது பேசவும் எத்தனித்தான். உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் ஹெட் என்பது அவனது மிடுக்கிலும் திமிரிலும் தெரிந்தது. மென்மையான தலைமயிர் அவன் கண்ணை மறைத்து விழுவதும் அதை மிகப் பொறுமையாக கையால் தள்ளிவிடுவதுமென அவனைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் அவன் மடியில் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் நீல்ஸ்.
ஐந்து நட்சத்திர விடுதிகள் பலவற்றுக்கும் இதுபோன்று அலுவலக விஷயமாக நீல்ஸ் போயிருக்கிறார் என்றாலும் இந்த ஹோட்டலின் பகட்டு அதற்கும் மேலே. முதலில் இதை ஹோட்டல் என்பதே அவதூறு என்று அவருக்குப்பட்டது. இதற்கான சரியான வார்த்தையைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அவரது தாழ்வுணர்ச்சி இப்படி அடிக்கடி எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ஏனோ அவருக்கு தன்னை நினைத்துக் கூச்சமாக இருக்கும். அவரது இந்தியாவும் அவரது திண்டுக்கல்லும் அவரது சக்கம்பட்டியும் அவரது அப்பா பழனிச்சாமியும் அம்மா தாயம்மாவும் இப்போதும் இதோ நிமிடத்தில் அந்த உயர்தர ஹோட்டலில் அவருக்குப் பின்னே ஓர் ஓரத்தில் அமர்ந்து ‘சாப்பிட்டியா தம்பி’ என்று ஒரே குரலில் கேட்பதுபோல் அவருக்கு எப்போதும் தோன்றும். மெல்ல நாசுக்காக யாருக்கும் தெரியாமல் நீல்ஸ் திரும்பிப் பார்த்தார்.
“யாரையாவது எதிர்பார்க்கிறீங்களா? வீ வில் வெய்ட்” என்றான் ஹஸன். நீல்ஸ் பதற்றத்துடன் இல்லை இல்லை என்று வேகமாக மறுத்தார். ஹஸனின் வழுக்கும் ஆங்கிலம் இன்னும் அதிக படபடப்பைத் தந்ததை நீல்ஸ் உணர்ந்தார். மனதுக்குள் தாயம்மா போயிரு என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டார். ‘நீலகண்டா, இன்னைக்கு நம்மூர்ல தீவாளிடா, அம்மா சோத்து உருண்டை கொடுப்பேனே’ என்றபடி அவர் அம்மா மெல்ல நகன்றாள். தீபாவளியின் நினைவுகளில் மூழ்க இப்போது நீல்ஸுக்கு நேரமில்லை. தனது கடந்தகால வறுமையை அவர் நினைக்கவே விரும்புவதில்லை. தீபாவளிக்கு காசில்லாத புதுத்துணி இல்லாத வீட்டில் உலை எரியாத அந்த இந்தியா இனி அவருக்குத் தேவையே இல்லை. அந்த சக்கம்பட்டியை அவர் தாண்டி பல வருடங்கள் ஆகிவிட்டன.
திடீரென்று “உங்களுக்கு நாற்பது வயது இருக்குமா?” என்றான் ஹஸன். அவரைப் பார்க்கும் யாருமே அவருக்கு ஐம்பது வயது என்று சொல்லமாட்டார்கள் என்று அவருக்கும் தெரியும். மிகக் கச்சிதமான உடைகளில் கெத்தாக இருக்கும் அவரை எல்லோருமே நாற்பது வயது என்றுதான் மதிப்பிடுவார்கள். நீல்ஸ் கொஞ்சம் இலகுவாகி “கிட்டத்தட்ட” என்று சொன்னார். கொஞ்சம் சிவப்பு நிறமாக, குறைந்தபட்சம் மாநிறமாக இருந்திருந்தால்கூட இந்த இரானியன் முன்னே கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேசும் தைரியம் தனக்கு வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பழனிச்சாமிக்கு இல்லாத நிறம் தனக்கு எப்படி வரும் என்று தோன்றியது அவருக்கு. “ஸோ சிம்பிள் ஆஸ் இட் இஸ் நீல்ஸ். எல்லாவற்றிலும் எனக்கு மிக உயர்தரமானதே வேண்டும். இந்த உயர்தர ஹோட்டலில் நாம் சந்திப்பதே அதன் ஒரு பகுதியாகத்தான். உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் வேலையும் இதேபோல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். பொதுவாகவே இந்திய கம்பெனிகளுடன் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இங்கிதம் தெரியாது. யு ஆர் நாட் ப்ரொஃபஷனல் யு நோ” என்றபடி, மேஜையில் இருந்த பொன்னிற திரவம் ஒன்றை, அது இருந்த கண்ணாடி டம்பளருக்கு வலிக்காமல் எடுத்து மிக ஸ்டைலாக உறிஞ்சினான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அத்திரவம் அவன் உடலுக்குள் செல்வதைக்கூடப் பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டார் நீல்ஸ். ஹஸனும் ஹோட்டல் என்றே இதைக் குறிப்பிட்டது குறித்து மனதின் ஓரத்தில் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“என்ன நீல்ஸ், புரிகிறதா?” என்றான். நீல்ஸ், “அது எங்கள் கடமை. நிச்சயம் உங்களை ஏமாற்ற மாட்டோம்” என்றார். எத்தனையோ வருடங்கள் இந்த அரபு நாட்டில் வாழ்ந்திருந்து எத்தனையோ தொழில்முறைக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தாலும் எதிரே அவரை மிரட்டும் ஓர் ஆண் உட்கார்ந்துவிட்டால் நீல்ஸுக்கு வார்த்தைகள் சிக்கிக்கொள்ளும். கை ஓரங்களில் வியர்க்கும். தன் கழுத்து டையை இழுத்து நேர் செய்துகொள்வது போலவும் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருக்கும் தலைமயிரை இழுத்துவிட்டுக்கொள்வது போலவும் வியர்வையைத் துடைத்துக்கொள்வார். எதிரே இருக்கும் ஹஸனுக்கு இருபத்தைந்து வயது இருக்குமா? ஆனால் அவனுக்கு அராபி தெரியும். சரளமான ஆங்கிலம் தெரியும். இரான் மண்ணின் மகன் அவன். அவன் உயரங்களுக்குச் செல்லாவிட்டால்தான் ஆச்சரியம்.
“நீல்ஸ், வெறும் சம்பிரதாயமாக பேசமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எவ்ரிதிங் டாப் க்ளாஸ். இதுதான் நான். அதில் ஒரு மாற்று குறைந்த எதுவும் எனக்குத் தேவையில்லை.” கண்ணடித்துக்கொண்டே, “யு நோ, இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. டாப் க்ளாஸைத் தேடிக்கொண்டிருக்கிறேன். விதவிதமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆர் யு இண்ட்ரஸ்டட்?” என்றான்.
நீல்ஸ் பதறி வேண்டாம் என்று பதில் சொல்லிவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டார். “இட்ஸ் அ ஜோக் மேன்” என்று சொல்லி ஹஸன் சிரித்தான். பற்கள் மஞ்சளாகத் தெரிந்தன.
“கமிங் பேக் டூ தி சப்ஜெக்ட், எங்கள் கம்பெனி பண விவகாரங்களில் பிசுக்குத்தனம் காட்டாது. பணம் ஒரு பிரச்சினையே இல்லை. சர்விஸ். அதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் மிகக் கறாராக இருப்போம்” என்றான். நீல்ஸ் சுருக்கமாக “ஷ்யூர்” என்றார். “ஏன் நெர்வஸாக இருக்கிறீர்கள். நாம் தொழில் பற்றிப் பேசுகிறோம் என்றாலும், ஃபீல் ஃப்ரீ” என்றான். அந்த மேஜையில் இருந்த இன்னொரு கண்ணாடி டம்ப்ளரில் வைனை ஊற்றிக் கொடுத்தான்.
“இது லெபனானின் உயர்தர வைன். இயற்கையான பழங்களை நொதிக்கச் செய்து உண்டாக்கியது. மெல்ல உறிஞ்சினால் சொர்க்கத்தின் முதல் கதவு திறப்பதைப் பார்க்கலாம்” என்றான். நீல்ஸ் கைகள் நடுங்க அதை வாங்கிக் கொண்டார். “வெரி காஸ்ட்லி யு நோ.”
நீல்ஸ், “நன்றி” என்றார். வேறு என்ன அவனுடன் பேச என்று அவருக்குப் புரியவில்லை. இந்த சூழலே அவருக்கு பயத்தைத் தந்தது. இப்படி தன்னையும் தன் கம்பெனியையும் அசரடிக்கவேண்டும் என்றே இங்கே அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்தது. எம்டி ஊரில் இருந்திருந்தால் அவரை வரச் சொல்லிவிட்டு நீல்ஸ் தப்பித்துவிட்டிருப்பார். நீல்ஸின் எம்டி ரானடே இந்த விஷயத்திலெல்லாம் கில்லாடி. ஆர் யு இண்டரஸ்டட் என்று ஹஸன் கேட்டபோதே பெண்களைப் பற்றிய அவரது அனுபவங்களை அவனிடம் கொட்டியிருப்பார். ஒவ்வொரு பெண்ணுக்கும் முக லட்சணம் உள்ளதுபோல முலை லட்சணம் உண்டு என்று ஒருமுறை ரானடே நீல்ஸிடம் சொல்லியது அவருக்கு அப்போது நினைவுக்கு வந்தது. நீல்ஸுக்கு இவற்றில் ஏனோ முதலில் இருந்தே ஆர்வம் இல்லை. ஹஸனுக்கு அவர்தான் சரியான ஆள்.
“நாம் ஒப்பந்தம் செய்துகொண்டுவிடலாம். எல்லாவற்றையும் பேசியாகிவிட்டதே” என்றார். “இட்ஸ் அவர் ப்ளஷர், பட் மேக் ஷ்யூர் யு ஃபாலோ ரூல்ஸ்” என்றான் ஹஸன்.
தூரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாகக் காத்திருந்த பேரரை அழைத்தான். நீல்ஸின் வாயிலேயே நுழையாத உணவு வகைகள் சில பெயர்களைச் சொன்னான். அதில் சில மாற்றங்களையும் சொல்லி, அவற்றை எப்படி சமைக்கலாம் என்பதற்கெல்லாம் ஆலோசனை கொடுத்து, எப்போது எதைக் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தான்.
“எதிலுமே ஒரு முறை இருக்கிறது நீல்ஸ். எதையேனும் மாற்றினால் அது அதைவிட மேம்பட்ட ரசனை கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும்” என்றான். இவனுடன் வேலை செய்து மீள்வது அத்தனை எளிதல்ல என்று நீல்ஸுக்கு நூறாவது முறையாகப் பட்டது. ஒரு கட்டத்தில் அவன் ஆடும் இந்த ஆட்டம் சலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. ஆனால் ரானடே இதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார். அட்வான்ஸ் அவன் கொடுத்துவிட்டால் பின்னர் அவன் நம் அடிமைதான், நம்மை அவன் ஒன்றும் செய்யமுடியாது என்பது அவரது எப்போதுமான விளக்கம். இதுவரை அவர் சொன்னதுபோல்தான் எல்லாமே நடந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.
ஹஸன் கேட்ட உணவு ஒவ்வொன்றாக வந்தது. மிக அழகாக அதை அடுக்கி வைத்திருந்தார் செஃப். “இட்ஸ் கிரேட்” என்று ஹஸன் சத்தமாகச் சொல்லி, கை தட்டினான். தன் விலையுயர்ந்த மொபைலில் அதை படமெடுத்து யாருக்கோ அனுப்பினான். ஷெஃபை உடனே அழைத்து வரச் சொன்னான். ஷெஃப் மிக பவ்யமாக அவன் முன்னே நின்றார். “இட்ஸ் அன்பிலீவபிள்” என்று அவரை கட்டிக்கொண்டான் ஹஸன். அவர் “ஹல்லம்திலுல்லாஹ்” என்றார்.
“இந்த உணவின் சிறப்பு தெரியுமா” என்று நீல்ஸைக் கேட்டான். அவரது பதிலுக்குக் காத்திருக்காமல் ஷெஃபிடம், “இவர் என் இந்திய நண்பர். இவருக்குச் சொல்லுங்கள்” என்றான். அது மிக அரிதான உணவு வகை என்றும், குறிப்பிட்ட மாதங்களில் உலகின் வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை மீன்களின் முட்டைகளில் செய்வது என்றும், துபாயில் இந்த ஒரு ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் என்றும் ஷெஃப் சொன்னார். நீல்ஸ் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குள் சக்கம்பட்டியின் சுவடுகளே அப்போது இல்லை.
“இந்த உணவைப் பற்றிச் சொல்லட்டுமா” என்று இன்னொரு உணவைக் காட்டிக் கேட்டார் ஷெஃப். ஹஸன், “வொய் நாட்” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டான். அது பிட்ஸாதான் என்பது நீல்ஸுக்குத் தெரியும். ஆனால் அதிலும் எதாவது சிறப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார். “இதை உலகிலேயே விலை அதிகமான பிட்ஸா என்று சொல்லலாம். இந்த பிட்ஸாவை முதன்முதலில் உருவாக்கிய ஷெஃப்பின் நேரடி மாணவன் நான். மிகச் சிலருக்கு மட்டுமே இந்த பிட்ஸாவைக் கெடுக்காமல் செய்யத் தெரியும். அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த கிட்டத்தட்ட சொர்க்கத்துக்கு உணவின் ருசியைத் தெரிந்த நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை” என்றார்.
ஹஸன், “கிட்டத்தட்ட சொர்க்கம்? குட் ஒன்” என்றார். ஷெஃப் பவ்யமாக பின்னகர்ந்து விடைபெற்றுக் கொண்டார். “பார்த்தீர்களா நீல்ஸ். இதைத்தான் நான் விரும்புகிறேன். செய்யும் தொழிலில் ஒரு ஈடுபாடு. தரம். ரசனை. உங்களிடமும்…” என்றான்.
நீல்ஸ் மையமாகத் தலையாட்டிவிட்டு, “பேமெண்ட் தொடர்பான விதிகளை…” என்று அவர் முடிப்பதற்குள், “எவ்வளவு வேண்டும் அட்வான்ஸ்? இப்போதே தருகிறேன்” என்றான். எங்கு சென்றாலும் அவன் தன்னை ஒரு கட்டத்துக்குள் கொண்டுவந்து நிறுத்திவிடுவது அவருக்கு எரிச்சல் தந்தது. இந்த ரானடே ஏன் இந்தியா சென்றார் என்று கடுப்பாக வந்தது. சம்பந்தமே இல்லாமல் ஹஸனிடம் “யு ஆர் சிம்ப்ளி கிரேட்” என்றார். “ஆஸ் ஆல்வேஸ்” என்றான் ஹஸன்.
புகழ்ந்தால் இவனை வீழ்த்திவிடலாமா என்று யோசனை ஓடியது நீல்ஸுக்கு. பெண்கள் விஷயத்தில் தனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று ஏனோ ஏக்கமாக இருந்தது. பின்னர் திரும்பிப் பார்த்தார். சட்டென்று ஹசனைப் பார்த்து உட்கார்ந்துகொண்டார்
மெல்ல அவனிடம், “எப்படி இந்த வயதிலேயே இப்படி கலக்குகிறீர்கள்” என்று கேட்டார் நீலஸ். அப்படி கேட்கவே அவருக்கு என்னவோ போல் இருந்தது. ஆனாலும் கேட்டார். சட்டென்று அவன், “எனிதிங் எல்ஸ்? நாம் உண்டுவிட்டு கிளம்பலாம் அல்லவா? இன்னொரு மீட்டிங் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அவரது பதிலுக்குக் காத்திராமல், போனை எடுத்து யாரிடமோ அராபியில் பேசத் தொடங்கினான். . நீலஸ் ஒன்றும் சொல்லாமல், மேஜையெங்கும் பரப்பிக் கிடந்த உணவுகளில் மிகக் கொஞ்சம் மட்டும் எடுத்து தன் தட்டில் வைத்துக்கொண்டு உண்ணத் தொடங்கினார்.
இனி இது போன்ற உணவு என்றுமே கிடைக்காது என்று அவருக்கு உடனேயே தெரிந்துவிட்டது. இப்படி ஒரு சுவையை அவர் வாழ்நாளில் கண்டதில்லை. ஹஸன் வெறும் பேச்சுக்காரன் மட்டுமல்ல, உண்மையிலேயே பல விஷயங்கள் தெரிந்தவன்தான் என்ற எண்ணம் வந்தது. மேஜை மேல் இருந்த வைனை மெல்ல எடுத்து இதழ் ஓரமாக வைத்து உறிஞ்சினார் நீல்ஸ். அவர் இதுபோன்ற கூட்டங்களில் எப்போதாவது மது அருந்துவதுண்டு. துபாய்க்கு வந்த புதிதில் எல்லாமே சாராயம்தானே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. பின்னர் பல அரிய மது வகைகள் பற்றி தெரிந்துகொண்டார். ஆனால் இந்த மதுவகை வேறு. மதுவின் வாசனை என்ற ஒரு விஷயத்தையே அவர் அப்போதுதான் உணர்ந்தார். வயிறுமுட்ட இந்த ரக மதுவைக் குடித்துவிட்டுப் போனால் வாசனைதான் வருமே ஒழிய சாராய நாற்றமெல்லாம் வாய்ப்பே இல்லை. எல்லாவற்றிலும் அவர் எத்தனை பின்தங்கி இருக்கிறார் என்று அவருக்குத் தோன்றியது. தான் இப்படி அடிக்கடி தொலைந்துபோவது வருத்தத்தைத் தந்தது. கடைசி வரை இதிலிருந்து மீளவே முடியாதோ? இந்த எண்ணத்துடன் அடுத்த மிடறு குடிக்கும்போது ஒரு சொட்டு அவரது சட்டையில் விழுந்து நெஞ்சை நனைத்தது. உடனே ஹஸனிடம் “ஸாரி” என்றார். ஹஸன் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
பேசிக்கொண்டிருந்த போனை தாழ்த்திக்கொண்டு நீல்ஸிடம், “வேறு ஏதேனும் நாம் பேசவேண்டி உள்ளதா” என்று ஹஸன் கேட்டான். “இல்லை” என்றார் நீல்ஸ். ”ஒருநிமிடம்” என்று சொல்லிவிட்டு, போனில் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூமுக்குச் சென்றான் ஹஸன். அவன் இல்லாத நேரத்தில், தன் தட்டில் ஓர் ஓரத்தில் இருந்த உணவை ஸ்பூனில் எடுத்து மேஜையின் ஓரத்தில் வைத்தார். பின்பு அங்கிருந்த எல்லா உணவிலும் வேகமாக இன்னொரு கரண்டி எடுத்து தன் தட்டில் வைத்துக்கொண்டு நீல்ஸ் உண்ணத் தொடங்கினார். கொஞ்சம் நிறைந்தது போலவும் கொஞ்சம் எரிச்சல் வந்தது போலவும் அவர் முகம் சொல்லமுடியாத உணர்வைக் காட்டியது. பின்னால் திரும்பிப் பார்த்து மனதுக்குள் “தாயம்மா, போயிறு” என்றார். தாயம்மா கண்களில் ஏக்கத்துடன் மெல்ல விலகிச் சென்றாள்.
ஹஸன் திரும்பி வந்து, “இன்னொரு ப்ளேட் இதே உணவை ஆர்டர் செய்யட்டுமா” என்றான். நீல்ஸுக்கு என்னவோ போல் இருந்தது. ஒருவேளை அவன் பார்த்திருப்பானோ? அவர் வேண்டாம் என்றார். தன் கையிலிருந்த தட்டை மேஜை மேல் வைத்துவிட்டு “எஸ்க்யூஸ் மீ” என்று சொல்லிவிட்டுக் கை கழுவிவிட்டு வந்தார்.
ஹஸன் அவரிடம் கை குலுக்கிவிட்டு, “ஸோ, ஆஸ் வி டிஸ்கஸ்ட்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். பேரர் நன்றி சொல்லி கதவைத் திறந்துவிட்டான்.
அந்த இரவிலும் துபாயின் வெக்கை உடலைத் தாக்க நீல்ஸ் வெளியே வந்து “டாக்ஸி” என்றார்.
வீட்டுக்குள் நுழையவும் அவரது மனைவி, “என்ன நீல்ஸ், காலைல போனீங்க, ஒரு போன் பண்றதில்லையா” என்றாள். அவர் பதிலே சொல்லாமல் தனது அறைக்குள்ளே சென்று கைலியை உடுத்திக்கொண்டு பனியனுடன் படுத்துக்கொண்டார். “சாப்பிடலையா? சோறு இருக்கு. நண்டுக் குழம்பு இருக்கு. ஃப்ரிட்ஜ்ல மீன் குழம்பும் ரசமும் இருக்கு. சூடு பண்ணட்டுமா” என்றாள். வேண்டாம் என்றார். “எதாவது வேணும்னா கூப்பிடுங்க, நீங்களா கிச்சன்ல உருட்டாதீங்க” என்றாள். அவர் பதில் சொல்லவில்லை. “ஊரில் இருந்து எங்க அம்மா அப்பா தீபாவளி வாழ்த்து சொல்லணும்னு கூப்பிட்டிருந்தாங்க.” அவர் மௌனமாக இருக்கவே அவள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
அவள் உறங்கியதும் சமையலறைக்குச் சென்றார். பாத்திரத்தில் இருந்த சோற்றையும் பிரிட்ஜில் இருந்த மீன் கறியையும் நண்டுக் குழம்பையும் ரசத்தையும் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்தார். எப்போது வேண்டுமானாலும் அவர் அழுதுவிடுவார் என்பது போல அவர் கண்கள் சிவந்திருந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தார். கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் சொட்டியது. அப்படியே சோற்றை அள்ளி உருட்டி உருட்டி உண்டார். அவருக்கு விக்கியது. எதோ உருவம் அருகில் வந்து நின்றது. அது அவரது பிரமை என்றுணர்ந்து தண்ணீரை மடமடவென்று குடித்தார். மீண்டும் சோற்றை அள்ளி அள்ளி உருட்டி உருட்டி உண்டார். சில பருக்கை அவரது நெஞ்சின் மீது விழுந்தது. இடது கையால் அதைத் துடைத்துவிட்டு, கையில் சோற்றுச் சட்டியுடன் அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தார்.
ஒளிப்பட உதவி – Etsy.com