கதிரேசன் மணி பார்த்தான். நிஷாவை இன்னமும் காணோம். அவன் பெஸண்ட் நகரில் அந்த காஃபி ஷாப்பின் போர்டிகோ காத்திருப்புப் பகுதியில் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. அவள் வருகிற சுவடைக் காணோம். அவன் ஏற்கெனவே அவள் மேல் மகா எரிச்சலில் இருந்தான். இப்போது எரிச்சல் கோபமாக உருமாறிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றறியாமல் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். ஆர்டர் எடுக்க அவனைச் சமீபித்த பேரர் பெண்ணிடம் ‘ஒருத்தர் வரணும்’ என்றான்.
நிஷா இன்று நிச்சயமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். அவன் எரிச்சலுக்குக் காரணமே அதுதான். ஊரில் அவனவன் காதலியோடு தினசரி நகர்வலம் வந்துகொண்டிருக்க இவளோ ஒரு முறை பார்த்துக்கொள்வதற்கே இன்றைக்கு நாளைக்கு என்று அலையவிட்டுக் கொண்டிருக்கிறாள். கேட்டால் 1) ஆஃபிஸில் ப்ராஜெக்ட் டெலிவரி, 2) திடீர்னு வீட்ல கெஸ்ட், 3) அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. 4……. என ஆயிரம் காரணங்கள் சொல்வாள். நான் மட்டும் என்ன வெட்டியாகவே இருக்கிறேன்? ஃபோன் செய்தால் முழுசாய் ஒரு நிமிடம்கூடப் பேசாமல் துண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறாள். ’என்னைப் பார்க்கணும்னு உனக்குத் தோணலையாடி?’ என்று கேட்டால் ‘தினம் பாத்துக்கிட்டாத்தான் லவ்வா?’ என்று மடக்குகிறாள்.
ஒவ்வொரு முறையும் நிஷாவைச் சந்திக்க அவளிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்கு கதிரேசனுக்கு நாக்குத் தள்ளிக்கொண்டிருந்தது. அவனுக்கோ அவளைப் பார்க்காமல் இருப்பது அன்றாட அவஸ்தை அல்லது உபாதை. அவன் உள்ளக்கிடக்கையை அவள் புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இத்தனை பிகு ஆகாதுதான். கருணையில்லாத ராட்சஸி.
இன்றைய சந்திப்புக்காக அவன் அவளிடம் கெஞ்சவில்லை. மாறாக இன்றைக்கு மட்டும் சொன்ன சமயத்துக்கு டாண் என்று அவள் வரவில்லையெனில் அதன் பிறகு ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவன் பொறுப்பல்ல என்று மிரட்டலாகச் சொல்லிவைத்திருந்தான். வருகிறேன் என்றாள் நிஷா. இப்படியே விட்டால் சரியாகாது. இன்றைக்கு கறாராக அவளிடம் இரண்டில் ஒன்று பேசி முடிவு செய்துவிடவேண்டும். கொஞ்சம் டோஸ் விட்டால்தான் சரிப்படும்.
திடீரென்று இடி இடிப்பதுபோல ஒரு சப்தம் கேட்டது. கதிரேசன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். மொபைலைத் தடவிக்கொண்டிருந்த விரல் அப்படியே நின்றது.
காஃபி ஷாப் வளாக கேட்டுக்குள் ஒரு பெரிய பைக் நுழைந்து கொண்டிருந்தது. அவன் கேட்ட இடிச் சப்தம் அந்த பைக்கினுடையதுதான். பைக்கின் மேலே ஆகிருதியுடன் ஒரு இளைஞன். அந்த சிவப்பு நிற எந்திரத்தின் பெட்ரோல் டாங்கின் மேல் டுகாட்டி என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் கதிரேசன் மேலும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
ஆரம்பம் படத்தில் ’தல’ ஓட்டுவாரே. அந்த பைக் என்பதை உடனே மனதுக்குள் பொருத்திப் பார்த்துக்கொண்டான். அப்பா! என்ன ஒரு என்ஜின் உறுமல்!!
ஆர்வத்துடன் அந்த டுகாட்டி இளைஞனைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் ஆறடி உயரம் இருந்தான். காலர் இல்லாத கருப்பு நிற பனியனில் I tried to be normal twice. Worst two minutes of my life. என்று எழுதப்பட்டிருந்தது. நெற்றியில் தவழும் ஒழுங்கற்ற முடி. ஜீன்ஸ். உயர்தர ஷூக்கள் மற்றும் பணமும் வசதியும் தந்த தோரணை. ’டுகாட்டி பைக் மினிமமே ஆறு லட்ச ரூபாயாம்ல..” என்று நண்பனொருவன் முன்னெப்பொழுதோ அங்கலாய்த்தது கதிரேசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இளைஞன் டுகாட்டியில் வந்திறங்கிய மறு நிமிடம் கடை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து ஒரு யுவதி இறங்கினாள். ’ஹாய்’ என்றவாறு நேராக டுகாட்டி இளைஞனை நோக்கி வந்தாள். டுகாட்டி அவளை நோக்கி நகர்ந்தான். இருவரும் அருகருகே நெருங்கிய கணத்தில் லேசாக சம்பிரதாயமாக அணைத்துக் கொண்டு ஆங்கிலக் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். கதிரேசனுக்கு லேசாய் தொண்டையை அடைத்த மாதிரி இருந்தது.
கதிரேசனின் ஆர்வம் இப்போது இருமடங்கு அதிகமானது. நிஷாவை லேசாய் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான். இப்போது அவர்கள் இருவரும் கதிரேசனின் அருகே உள்ள டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களிருவரும் பேசுவது தெளிவாக இல்லாவிட்டாலும் ஓரளவு காதில் விழுந்தது.
”ஸோ.. வாட்ஸப்” என்று டுகாட்டி கேட்டான். அவனுக்குக் கொஞ்சம் பெரிய கட்டைக் குரல்தான் நுனி நாக்கு ஆங்கிலச் சரளத்தில் உரையாடல். ஆனால் அவர்கள் பேசுகிற ஸ்பீடில் கதிரேசனுக்குத் தலை சுற்றியது.
யுவதி டேபிளின் மேல் கழற்றி வைத்திருந்த கூலர் க்ளாஸின் மேல் மாலை இளவெயில் பட்டுச் சிதறி அவள் முகத்தில் பிரதிபலித்தது. மாடலிங் செய்பவள் போல இருந்தாள். லிப்ஸ்ட்டிக் உதடுகளை அழகாகப் பிரித்து அவ்வப்போது சிரித்தாள். நெற்றியில் புரளும் முடியை, தலையை வெடுக்கென்று சாய்த்து சாய்த்து பின்னுக்குத் தள்ளினாள். டுகாட்டி பாக்கெட்டிலிருந்து டன்ஹில் சிகரெட் டப்பாவை எடுத்து அதில் ஒன்றை உருவிக்கொண்டு லைட்டரால் பற்ற வைத்தான். சாய்ந்திறங்கிய வெயிலில் புகை ரம்மியமாய் நெளிந்தது.
டுகாட்டிக்கும் யுவதிக்கும் இடையே பெரிய அந்நியோன்யம் இருப்பதுபோல் தெரியவில்லை. அவர்கள் நண்பர்களாக இருக்கலாம். அல்லது தொழில் நிமித்தம் இதற்கு முன் ஓரிரு முறை சந்தித்தவர்களாக இருக்கலாம். அவர்கள் நடந்துகொள்கிற விதத்தில் ஒரு சின்ன நெருக்கமும், விலகலும் ஒரே சமயம் தெரிவதாக கதிரேசன் உணர்ந்தான். சிறிது நேரம் டுகாட்டியானவன் புகை கிளப்பியபடி அவளிடம் எதையோ ஸீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தான். அவள் தலை சாய்த்தபடி அவனையே வைத்தகண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.
கதிரேசன் மொபைலில் கண்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க முயற்சித்துக்கொண்டிருந்தான். ஜர்னலிஸம், ஹாரி பாட்டர், ஹாலோ எர்த், பில்டர்பெர்க் மீட்டிங், எம்.ஹெச். த்ரீ ஸெவண்டி, ஹூ ஸேஸ் எலிஃபண்ட் கேண்ட் டான்ஸ், ஃபோட்டோகிராபி ஸொசைட்டி ஆஃப் மெட்ராஸ், ஆண்ட்ராய்ட் லாலிபாப் அப்டேட், இண்டியன் பொலிடிக்ஸ், ஹ்யூமன் ட்ராஃபிக்கிங்.. எஸ்.வி. சேகர் காமெடி சிடி, லிட்டில் ஜானி (இந்த இடத்தில் இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள்) என்று கலவையாக ஏதேதோ காதில் விழுந்துகொண்டிருந்தது.
கதிரேசன் மறுபடி மணி பார்த்தான். அவன் பல்ஸ் எகிறுவதற்கேற்ப நொடிமுள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. நிஷா இன்னும் வரவில்லை. அவள் நிஜமாகவே வருவாளா என்று இப்போது சந்தேகம் வந்துவிட்டது. அவள் மட்டும் இன்றைக்கு வரவில்லையெனில் அப்புறம் அவளை உண்டு / இல்லை என்று பண்ணிவிடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டான். கோபம் மேலும் கூடியது.
டுகாட்டிக்கு காஃபியும், யுவதிக்கு ஒரு பொன்னிற திரவமும் பரிமாறப்பட்டிருந்தது. யுவதி சிரித்தவாறு ‘ஐ ஆல்வேஸ் லைக் க்ரீன் டீ” என்றாள். கோப்பையைக் கையில் எடுத்து நாசூக்காக ஒரு ஸிப் உறிஞ்சினாள். டுகாட்டி காஃபியைத் தொடாமல் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“யு ஆர் ஸ்மோக்கிங் அ லாட்..” என்றாள் யுவதி அவனிடம்.
“நோ.. நாட் ஆல்வேஸ்.. ஐ ஃபீல் லைக் ஐ நீட் இட் பேட்லி நவ்… யு. நோ!” சொல்லும்போது அவள் கண்களைத் தவிர்க்க முற்பட்டான்.
“கூல்.. ஐ ஜஸ்ட் ஆஸ்க்ட்.. நெவர் மைண்ட்..”
டுகாட்டி பொதுவாகச் சிரித்தான். அவன் ஏதோ கொஞ்சம் பதட்டத்திலிருக்கிறான் என்று கதிரேசனுக்கு ஏனோ தோன்றியது. பேசாத தருணங்களில் டுகாட்டி அந்த யுவதியையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஆயிரம் பேசிக்கொண்டிருந்தாலும் பேசப்படாத வேறு ஏதோ விஷயம் தொக்கி நிற்பது மாதிரி இருந்தது. அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிற மாதிரி அவள் முகத்தில் ஒரு சின்ன ஆர்வ உணர்வு ஒரு புன்னகையுடன் தேங்கிக் கிடந்தது.
அவர்கள் பேச்சில் இடைவெளி விழுந்தது. தத்தம் பானங்களை லேசாய் உறிஞ்சியவாறு இருவரும் மௌனமாக இருந்தார்கள். இடையிடையே ஒருவருக்கொருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
”தென்?” என்றாள் அவள். அவர்கள் பேசவேண்டிய விஷயங்கள் எல்லாம் தீர்ந்துபோனமாதிரியும் மேற்கொண்டு ஏதேனும் இருந்தால் சொல் என்று தூண்டுகிற மாதிரியும் இருந்தது அவள் கேட்டது.
திடீரென்று அங்கே நிலவின மௌன இடைவெளி கதிரேசனுக்கே ஒரு மாதிரி இருந்தது. அவர்களைக் கவனிப்பதை தவிர்க்க நினைத்தாலும் கண்கள் அவர்களின் மேலேயே மறுபடி மறுபடி படிந்தன. இடையே நிஷா வருகிறாளா என்று ஆயிரத்து நாற்பத்தெட்டாவது தடவையாக வாசலைப் பார்த்தான். ஏமாற்றத்தின் இன்னொரு துளியை நெஞ்சில் வாங்கிக்கொண்டான்.
டுகாட்டி இப்போது லேசாய் கண்களை மூடிக்கொண்டிருந்தான். ஒரு சில விநாடிகள் கழித்துத் திறந்தான். பின்னர் அந்த யுவதியின் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தான். ஒரு கனவுலகத்திலிருந்து நேராக இறங்கி வந்தவன் மாதிரி இருந்தது அவன் பார்வை. பின்னர் நெய்ல் ஆர்ட் போட்டிருந்த அவளின் வலது கை தளிர் விரல்களைத் தொட்டு மெதுவாக மிக மெதுவாக அவன் பக்கம் பிடித்திழுத்தான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அது அவன் கைவசப்படுவதை நினைத்து ஒரு அர்த்தப் புன்னகை அவன் முகத்தில் நிலைகொண்டது. அவள் லேசாக திடுக்கிடுவதுபோல பாவனை செய்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்னர் லேசான வெட்கத்தில் அவள் இதழ்கள் பிரிந்தன. என்னய்யா நடக்குது இங்கே என்று கதிரேசன் இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“லயா..” என்று மிருதுவான குரலில் கூப்பிட்டான் டுகாட்டி. அவன் தொண்டைக்குழி ஒரு முறை ஏறி இறங்கியது.
ஒரு ஹம்மிங் மாதிரி “ம்ம்” என்று அவளிடமிருந்து ஒரு பரவசத்துடன் கூடிய முனகல் மட்டுமே உதிர்ந்தது.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் டுகாட்டி அவள் கையை விடாமலேயே நாற்காலியை விட்டு எழுந்து அப்படியே ஒற்றைக்காலை மட்டும் மடக்கி அவள் முன் மண்டியிட்டு இறைஞ்சுவது போலச் சொன்னான்.
“லயா… ஐ வாண்டு சே இன் திஸ் வொண்டர்ஃபுல் மொமெண்ட் தட் அ யம் இன் லவ் வித் யூ…” என்றான். கதிரேசன் புருவங்களை உயர்த்தினான். பொது இடத்தில் லஜ்ஜையேயில்லாமல் இதென்ன சினிமாத்தனம் என்று நினைத்துக்கொண்டான். சரிதான். பெரிய இடத்து நபர்கள் இந்த மாதிரியெல்லாம் நடந்துகொள்வது சகஜம்தானே என்று சமாதானம் கொண்டான்.
லயா என்ற பெயர் கொண்ட அந்த அப்ஸரஸ் இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல “ஹே.. மிதுன்… ஐ நோ தட் அல்ரெடி.. டோண்ட் ஸே இட்..” என்று மேலும் வெட்கப்பட்டாள். அவன் கையை இறுக்கிக்கொண்டாள்.
கதிரேசனுக்கு ஆலங்கட்டியொன்று சட்டைக்குள் விழுந்ததுமாதிரி உடம்பு லேசாகச் சிலிர்த்தது. உலகத்தில் அவர்களைத் தவிர அங்கே யாரும் இல்லை என்பதுபோல், சூழ்நிலையின் ப்ரக்ஞையை முற்றிலும் இழந்தவர்கள் போல் தங்களுக்குள் திடீரெனப் பூத்துவிட்ட ஒரு காதல் பரவசத்தில் தளும்பி நின்றிருந்தார்கள். அந்த இடத்தில் இப்போது மழை பெய்தால் நன்றாயிருக்கும் என்று கதிரேசன் ஏனோ நினைத்தான்.
லயா என்பவள் டுகாட்டியிடம் திடீரென்று “பீச்?” என்றாள். “ஷ்யூர்” என்றான் அவன். பிறகு எதற்காகவும் காத்திருக்கவில்லை. சடுதியில் பில்லை செட்டில் செய்துவிட்டு கிளம்பினார்கள். மறுபடி இடிச் சத்தம். டுகாட்டியின் பின்னிருக்கையில் அவள் அவன்மேல் சாய்ந்து ஒட்டிக்கொண்டிருக்க நொடியில் சாலையில் கலந்து காணாமல் போனார்கள்.
டுகாட்டி பைக் பார்வையிலிருந்து மறைவது வரை பார்த்துக் கொண்டேயிருந்தான் கதிரேசன். அவனிடமிருந்து ஒரு மகா பெருமூச்சு எழுவதற்கும் நிஷாவின் ஸ்கூட்டி காஃபி ஷாப்பினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. ஸ்கூட்டியைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவசர கதியில் கதிரேசனை நோக்கி வந்தாள். நீல நிற சுரிதார், பின்னலிடப்படாத கூந்தல் என சற்றே நிர்மலமான அழகுடன் ஒரு தேவதை அவனை நோக்கி வருவதுபோல உணர்ந்தான் கதிரேசன்.
“ஸாரிடா… கோவிச்சுக்காத.. கிளம்பற நேரத்துல மீட்டிங்.. ஒரு வழியா தப்பிச்சு வர்ரதுக்குள்ள… ரொம்ப நேரமா வெய்ட் பண்றியாடா?” என்றாள் பதட்டமாக. யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துவிட்டு அவன் தலையை விரல்களால் கலைத்தாள்.
இன்னதென்று புரியாத ஒரு உணர்வு கதிரேசனுக்குள் பிரவாகமெடுத்து அவனை ஆக்ரமித்தது. பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடி அவனருகே வந்து நின்ற பேரரிடம் “ஒரு கிடார் கிடைக்குமா?” என்றான்.
ஒளிப்பட உதவி- Team BHP.com