அங்கு என்னைத் தவிர யாருமில்லை
இன்னும் சற்று நேரத்தில் கோவிலை மூடிவிடுவார்கள்
பெருமாள் சங்கு சக்ர கதாபாணியாக என்னைப் பார்க்கிறார்
பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட அவரை நான் பார்க்கிறேன்
ஒருவரை ஒருவர் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொள்கிறோம்
கண்களை மூடிக்கொண்டு “சாந்தாகாரம் புஜகசயனம்” என்ற
ஸ்லோகத்தை மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்
மூடிய கண்களுக்குள் பெருமாளின் தோற்றம்
அதே சங்கு, அதே சக்கரம், அதே கதை
பூக்களின் நிறம் மட்டும் மாறியிருக்கிறது
எங்கிருந்தோ அர்ச்சகர் ஒருவர் வருகிறார்
மந்திரங்கள் எதுவும் சொல்லாமல் கற்பூரம் காட்டுகிறார்
கருவறையின் பிற சிலைகள் இப்பொழுது கண்ணில் படுகின்றன
பெருமாளின் முகம் ஒளிர்கிறது, கருமையாகிறது,
மறுபடியும் ஒளிர்கிறது
கருமை, ஒளி, கருமை
கை குவித்து கண்களை மூடிக் கொள்கிறேன்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலின் முகம் தோன்றுகிறது
சங்கு இல்லை, சக்கரம் இல்லை, கதை இல்லை
ஒளிர்கின்ற முகமும் நாமமும் மட்டும்
கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு
மணி அடித்து நிசப்தத்தைக் கலைத்துவிட்டு
பிரகாரத்தை சுற்ற ஆரம்பிக்கிறேன்
வெயில் தகிக்கிறது
கால்கள் தீ மிதிப்பது போல்
மரத்தடி மேடையில் அமர்கிறேன்
அனல் காற்று வீசுகிறது, கண் கூசுகிறது
கண்ணை மூடினால் பெருமாள் தரிசனம் கொடுக்கிறார்
வெறும் முகம், முகத்தை மறைக்கும் நாமம்
முகம் ஒளிர்கிறது
தூரத்தில் வாகனங்களின் ஓசை
மரத்தில் பட்சிகள் எப்பொழுதாவது பேசுகின்றன
குடுமி வைத்த சிறு பையன் எங்கோ ஓடுகிறான்
நான் வானத்தைப் பார்க்கிறேன், மேகங்கள் இல்லா வானம்
சற்றே வெளுத்திருக்கும் வானம்
எதுவும் மனதில் தோன்றவில்லை
ஏகாந்தத்தில் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
பறவைகள் பேசுகின்றன, வாகனங்கள் ஓடுகின்றன
கண்ணை மூடினால் கண்முன் பெருமாள் தோன்றுகிறார்
வானம் வெளுத்திருக்கிறது, தூரத்தில் சிறு மேகம்
அது சங்கு போல் தெரிவது எனக்கு மட்டும்தானா?
வேகமாய் பிரகாரத்தைச் சுற்றி வந்து பெருமாள் முன் நிற்கிறேன்
மறுபடியும் அவர் என்னை பார்க்கிறார்
நானும் அவரைப் பார்க்கிறேன்
அர்ச்சகர் இல்லை, மணியடித்துவிட்டு கண்கள் மூடுகிறேன்
சங்கு சக்ர கதையுடன் பெருமாள் தோன்றி மறைகிறார்
கண்களைத் திறந்து அவரையே உற்றுப் பார்க்கிறேன்
அவர் வேறு எங்கோ பார்ப்பது போல் இருக்கிறது
கரங்கள் கூப்பி சேவித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறேன்