“ஒருத்தரோட சந்தோஷம் பெரும்பாலும், இன்னொருத்தருடைய துக்கமாய் போயிடறதுதான் ஆச்சரியம். இதுக்கு நிவர்த்தியே கிடையாதா? இன்னொருத்தருடைய சிரிப்பு, பெரும்பாலும் நம்முடைய துக்கத்தை ஏன் கிளறணும்? ஒருத்தர் சிரிக்கறதப் பாக்கும்போது, நாமும் நாம் எப்பவோ சிரிச்சுண்டிருந்ததையெல்லாம் அப்ப நினைச்சுண்டு சந்தோஷப்படக்கூடாதா?…. ஆனா இந்த விவஸ்தை கெட்ட மனசு, அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலே, இழந்த சுகங்களைத்தான் நினைச்சுக்கறது… தான் அனுபவிச்ச கொடுமைகளையும், அவமானங்களையும் நினைச்சுக்கறது…”, இப்படிப் போகின்றன பங்கஜம் மாமியின் எண்ணங்கள்.
பங்கஜம் மாமி, ஆதவனின் ‘சிரிப்பு‘ சிறுகதையின் நாயகி. கணவரை இழந்த மத்திய வயதைத் தாண்டிய பிராமணப் பெண். மகளும் மாப்பிள்ளையும் மகனும் மாட்டுப் பெண்ணும் இருந்தும் தனியாகவே தன் வாழ்வை தொடர்பவர். அவரின் ஒரு நாள் வாழ்வும், அந்த நாளிலே நடைபெறும் சிறு சிறு சம்பவங்களும், அவரது மொத்த வாழ்வையும் திரும்பத் திரும்ப அசைபோடும்,எண்ண ஓட்டங்களுமே இந்தச் சிறுகதை.
அன்றைய நாளும் என்றும் போல அவரது தோழியும் காவலருமான ‘எல்லாம் தெரிந்த’ மீனாட்சி மாமியால் சமையல் எரிவாயுக் கசிவிலிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுக் கடிந்து கொள்ளப்படுவதிலிருந்து துவங்குகிறது. மீனாட்சி மாமி, மகா சாமர்த்தியசாலி, டில்லியையே ஜெயித்து வந்துவிடுவாள். பங்கஜம் மாமி, சற்றே அசடு. தனித்து வாழும் பங்கஜம் மாமிக்கு மீனாட்சி மாமிதான் friend, philosopher and guide .அவரை மீறி பங்கஜம் மாமியால் ஏதும் செய்துவிட முடியாது. எப்போதும் இன்னொருவர் நிழலிலேயே தன் வாழ்வை வாழ்ந்தவர் அவர்.
அன்று பம்பாயிலிருந்து வரும் மகளின் கடிதத்தைப் படிப்பதிலிருந்து இறுதியில் மீனாட்சி மாமி மற்றும் ’20ம் நம்பர் ஆத்து’ மாமியோடு கோவிலுக்குப் போவதில் முடிகிறது பங்கஜம் மாமியின் ஒரு நாள். அந்த இடைவெளி மாமியின் மொத்த வாழ்வுக்குமே ஒரு விசாரணை போல அமைகிறது. முதலில் மேலே சொன்ன வரிகள். .ஆனால், அன்று, அந்த நாளின் முடிவில், எல்லாம் தெரிந்த, டில்லியையே ஜெயித்து வரக்கூடிய மீனாட்சி மாமி, ஒரு பிஸ்கெட்டை எடுக்கப்போய் தொபுக்கடீரென்று கீழே விழுவதைக் கண்டு சிரிப்பதில் தன் அன்றைய நாளின் இறுக்கத்தை எல்லாம் களைந்து விடுகிறார் பங்கஜம் மாமி. மேலும், கோவிலில் முருகனை தரிசிக்கும்போது முருகனின் முகத்தில் தெரியும் தேஜஸில் இருப்பது என்ன என்ற பேச்சு வரும்போது, முதன் முறையாக மீனாட்சி மாமியுடன் அவரே அதிசயிக்கும்படி, தைரியமாக முரண்படவும் செய்கிறார். அங்கு முடிகிறது கதை.
இந்தக் கதை விவாதிப்பது, நமது செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் முற்றிலும் நம் சுயம் சார்ந்தே இருக்க முடியுமா என்பதைதான். குறிப்பாக, பெண்கள் தம் சுயம் இழக்காமல் குடும்பம் எனும் அமைப்பைக் காத்து, கொண்டு செல்ல முடியுமா? காலமெல்லாம் தன் சுயத்தை குடும்பம் எனும் மகா யந்திரத்தில் கரைத்த்துக் கொண்டே வாழும் ஒரு பெண் தன் வாழ்வின் இறுதியில் அடைவதுதான் என்ன? இவையெல்லாம் பெண்ணியம் சார்ந்த ஆக்ரோஷமான கேள்விகளால் எழுப்பப்படவில்லை. இந்தக் கதையில் மீனாட்சி மாமி தன் இன்றைய நாளின் ஒவ்வொரு கணத்திலும் தன் ஒட்டு மொத்த வாழ்வை சலிப்புடனும், கோபத்துடனும், ஆயாசத்துடனும், சமயங்களில் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், நினைவு கூர்வதில் விரிகிறது
தன் பிறந்த வீட்டிலிருந்து தான் இயல்பாக பெற்று வந்த ருசிகளையும் ரசனைகளையும் கணவனின் ருசிக்காகவும் மாமியாரின் ரசனைக்காகவும் புகுந்த வீட்டில் ஒவ்வொன்றாக இழப்பது; கலகலப்பாகச் சிரித்து மகிழும் தன் இயல்பான குணம் மாறி, கணவரது வீட்டுக்குரிய இறுக்கமான முசுட்டுத்தனத்தின் பிரதிநிதியாக மாறுவது; தன் கணவருடன் தன்னை உணர்வு ரீதியாக மிகவும் பிணைத்திருக்கக்கூடிய இசை ரசனையைக்கூட தன் மாமியாரின் எரிச்சலைத் தவிர்ப்பதற்காகக் கைவிடுவது; தன் சாப்பாட்டு ருசிகளை, தன் இஷ்ட பிரார்த்தனைப் பாடல்களை, என்று ஒவ்வொரு சிறு கூறாகத் தன் சுயத்தை இழந்த கதையை நினைத்துக் கொண்டே இருக்கிறார் பங்கஜம் மாமி. இதோ இப்போது மீனாட்சி மாமியின் சொற்படி ஆடவேண்டிய கட்டம்.என்றும் நினைத்துக் கொள்கிறார்.
கூடவே தன் அடுத்த தலைமுறை பெண்களான தனது மகள் மற்றும் மருமகள் இருவரது வாழ்வையும் அசை போடுகிறார். அவர்கள் அவரை விட சுதந்திரமாக இருப்பது போல தோன்றினாலும், அவர்களும், குறிப்பாக மருமகள் தன் கணவனுக்கு இணையாக அவனது நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதிலும், அவர்களுக்கு மது பரிமாறுவதிலும் ஈடுபடுவதுகூட, ஒரு பெண் தன் தனித்துவத்தை பேணுவது என்பதல்லாமல் வேறு ஒரு வகை அடிமைத்தனம் என்றே அவருக்குத் தோன்றுகிறது. மருமகளின் சிரிப்பை நினைவு கூரும்போதுதான், முதலில் சொன்ன அந்த வரிகள் அவர் மனதில் எழுகின்றன.
மன இறுக்கத்தை மேலும் மேலும் கூட்டும் பல்வேறு சம்பவங்களின், நினைவோட்டங்களின் இறுதியில் அவருக்கு ஒரு மாபெரும் விடுதலை அளிப்பது, அவர் இதுநாள் வரையில் பொத்திப் பொத்தி மறைத்து வைத்திருந்த சிரிப்பு. அன்றைய நாளின் முடிவில் கோவிலுக்குப் போவதற்கு முன் இன்னொரு மாமியின் வீட்டில், பிஸ்கெட் எடுப்பதற்காக குனியும் மீனாட்சி மாமி தொபுக்கடீரென்று விழுவது கண்டு பொங்கி வந்துவிடும் அடக்க முடியாத சிரிப்பு. அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அந்தச் சிரிப்பின் மூலம், தான் வாழ்நாளெல்லாம் பழகி வந்த இறுக்கத்தை ஒரேயடியாக அன்று தொலைத்துவிட்டாரென்று தோன்றுமளவுக்கு சிரிக்கிறார். இதுவரை அப்படி வாய்விட்டு சிரித்திருக்கக்கூடிய, ஆனால் ஒரு போதும் சிரித்திராத சம்பவங்களுக்கெல்லாம் அன்று சேர்த்து வைத்து சிரிக்கிறார். அந்தச் சிரிப்பு தந்த விடுதலை மனநிலையில், எப்போதும் தான் கட்டுண்டிருக்கும் மீனாட்சி மாமியின் சொற்களைக் கூட மறுத்துப் பேசிவிடுகிறார். திகைத்து நிற்கிறார் மீனாட்சி மாமி.
ஒரு கோணத்தில் இந்தக் கதை ஒரு பங்கஜம் மாமியின் வாழ்க்கை அவரிடமிருந்து பிடுங்கும் சுயத்தை விவாதிக்கிறது. ஆனால் இன்னும் ஆழமாக யோசித்தால் இது நம் ஒவ்வொருவருக்குமே பொருந்தக்கூடியது. இன்னொருவருக்காக வாழ்வதில். குடும்பத்துக்காக தியாகம் செய்வதில் நம் சுயம் என்பதை இழப்பது எல்லோர்க்கும் நேர்வதுதானே? நாம் நம் சுயத்தோடு இருந்து, பிறர் சுயத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் வாழ முடியுமா? அதை நாம் நம் குடும்பத்துக்காகவும் பிறருக்காகவும் அணிய நேரும் வேஷங்கள் அனுமதிக்குமா? இதில் வரும் பெண் பாத்திரங்களில் மீனாட்சி மாமி ஒரு ஆதிக்க சுபாவம் மிகுந்த பெண்ணாகத் தோன்றக்கூடும். ஆனால், நுட்பமாகப் பார்க்கும்போது, அவரும், ஒரு பதிவிரதை பிறருக்கு எப்போதும் வழி காட்டுபவர், அவர்களது காவலர் எனும் வேஷத்துக்காக தம் சுயத்தை இழந்தவர் என்றே கண்டு கொள்ளலாம்.
ஆதவன் இறக்கும்போது அவரது வயது 42 தான். அவர் இந்தக் கதையை எழுதும்போது அவருக்கு அதிகம் போனால் 35 வயதே இருந்திருக்க முடியும். ஆனால், நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பிராமணப் பெண்ணின் எண்ண ஓட்டங்களையும் மொழியையும் அவர் சித்தரிக்கும் விதம் பிரமிக்க வைப்பது. குறிப்பாக, பங்கஜம் மாமி தன் மகளிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் அவர் கொடுக்கும் வியாக்கியானங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் ஆழமான உளவியல் கூறுகளைக் கொண்டது. அதே போல், அவரது பார்வை வழியே விரியும் அவரது கணவர் பாத்திரத்தின் மூலம், 20ம் நூற்றாண்டின் மத்திய கால கட்ட பிராமணக் குடும்பத் தலைவரது சித்திரத்தை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆதவன்.
ஒரு வாசிப்பில், எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.
பங்கஜம் மாமியின் அன்றைய தினத்தின் இறுதியில் அவருக்கு வரும் சிரிப்பு ஒரு தருணம்தான். அது அடுத்த நாளும் நீடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இயல்போடு கூடிய சுயம் சார்ந்த வெளிப்பாடுகளே அது போன்ற தருணங்களையும் நீட்டிக்குமோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது இந்தக் கதை. இருந்தாலும் அவரவரது சுயம் என்பதுதான் என்ன என்று அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமா என்ன?
ஆய்ந்தறிந்த விமர்சனம். ந்ன்றி நண்பரே.