சமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா? இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை எல்லாம் வேலை பட்டியலில் பார்க்கத் திகிலாக இருந்தது. அவற்றுள் வணிக வளாகங்களில் ஆட்களை தடவி சோதனை செய்யும் பணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கையுறைகளை அணிந்தபடி நம்மை நோக்கி பணிவாக வணக்கம் சொல்லி, பாக்கெட்டுகளில் உள்ள சாவிகளை அழுத்தமாக பிடித்து அவை சாவிகள் தான் என உறுதி செய்து கொண்டு ஏனைய பாகங்களை உறுத்தாத மிதமான ஸ்பரிசத்தில் தடவி உள்ளே அனுமதிப்பார்கள். முதலில் சொல்லப்படும் வணக்கம் என்பது அவர்கள் நம் உடலை பரிசோதிப்பதற்கான அனுமதியும் மன்னிப்பும் கலந்த பாவனையில் இருக்கும்.
தமிழ்ச்சூழலில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அநேகமாக இல்லை. கதையின் மையம் இதுவல்ல எனும் போதிலும் ஷோபா சக்தியின் ‘எழுச்சி‘ சிறுகதையில் ஒரு மெல்லிய சித்திரம் உண்டு. இந்தக் கதையில் பாரீஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அகதி ஒருவன் சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வருவான். அங்கே அவனை வலுக்கட்டாயமாக உடற்பரிசோதனைக்கு உள்ளாக்குவார்கள். இவனது பேய்த்தனமான முக பாவங்களில் சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் நிர்வாண சோதனைக்கும் உட்படுத்துவார்கள். விதைப்பைகளை அழுத்தியதில் தீராத வலி ஏற்பட்டு தனக்குள் சுருங்கிப் போவான்.
அவன் இலங்கையில் வாழ்ந்தபோது ஒரு தகராறில் துப்பாக்கியின் பின்பாகத்தால் இவனது விதைப்பைகளை அடித்திருப்பார்கள். மாங்கொட்டை அளவுக்கு அவை வீங்கிப் பெருத்து மரண அவஸ்தைகளை அப்போது அனுபவித்திருப்பான். அதன் பிறகுதான் தீர்மானமெடுத்து பாரீஸ் வந்திருப்பான். சென்னை விமான நிலையத்திலும் சோதனை செய்வார்கள். இதனால் பழைய சம்பவங்கள் நினைவில் வலியுடன் கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே இருப்பான். உளவியல் ரீதியான மன அழுத்தங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அவனது மனம் விதைக் கொட்டைகளையும் சோதனையையுமே சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். பதினைந்து நாட்கள் மனைவியுடன் உல்லாசமாக கழிந்ததில் இவற்றை தற்காலிகமாக மறந்திருப்பான். விடுமுறை தினங்கள் தீர்ந்தபின், மறுபடியும் விமான நிலையம். மீண்டும் சோதனைகள். அவமானமும் ஆற்றாமையும் நொதித்துத் தளும்பும். பாரீஸில் அவனுக்கு அதிர்ச்சிகரமான மாற்றம் காத்திருக்கிறது.
அவன் பணிபுரியும் தொழிற்சாலையின் வாசலில் அவன் வயதையொத்த நபர் அமர்ந்திருப்பார். பணியாளர்கள் புகுந்து வரவேண்டிய இரும்புக் கூண்டு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த நபர் தொழிலாளர்களின் உடலை தழுவி சோதனை செய்வார். இதற்கு முன் இந்தத் தொழிற்சாலையில் இப்படிப்பட்ட வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இதில் இருந்து தப்பிப்பதற்காக இவன் மூன்று நாட்கள் தொழிற்சாலையின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைவான். பின்னர் காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை செய்வதற்கான அவசியங்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டு முன் வாசல் வழியாக நுழையும்படி உத்தரவிடப்படுவான். ‘இது மனித உரிமை மீறல்’ போன்ற கோஷங்கள் நிர்வாகத்திடம் எடுபடாது.
அடுத்த நாள், உள்ளாடை அணியாமல் வருவான். சோதனை செய்பவர் கைகள் இவனது மார்பு வயிறு தொடை என பயணித்து அடிவயிற்றில் திடுக்கிட்டு தயங்கிப் பின்வாங்கும். இவன் ஒரு வெற்றிச் சிரிப்புடன் உள்ளே நுழைவான். மறுநாளும் இதே கதை தான். அடுத்தடுத்த தினங்களில் இவனைக் கண்டாலே சோதனை ஏதுமின்றி அனுமதித்து விடுவார். இதுவும் காமெரா மூலம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சோதனையாளர் தனது சிக்கல்களை சொல்வார். இவனோ, ‘சோதனை செய்வது வேண்டுமானால் தொழிற்சாலை விதியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும் என எந்த நாட்டு சட்டத்திலும் இல்லை’ என மிதப்பாகத் திரிவான். இது குறித்து சட்ட வல்லுனர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு சோதனையாளனை மாற்றுவது என முடிவு செய்து ஒரு கிழவனை பணியில் அமர்த்துவார்கள்.
‘ஆண்டவனே வந்தாலும் சோதிக்காமல் விட மாட்டேன்’ என அவர் வீராப்பாக சூளுரைப்பார். விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பாதாம் கொட்டைகளாக தின்று, தன்னை சோதனை செய்யும் போது பிறப்புறுப்பை விறைப்புடன் வைத்துக் கொள்வான். ஒருவன் மட்டும் சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படும் இரகசியத்தை அறிந்து கொள்ளும் அரேபியத் தொழிலாளர்களும் இவனைப் பின்பற்றி உள்ளாடை அணியாமல் வேலைக்கு வருவார்கள். அந்தக் கிழவர் எத்தனை பிறப்புறுப்புகளைத்தான் தடவுவார்? தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் கடவுளை திட்டி விட்டு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிடுவார்.
இந்த எழுச்சி மெல்ல மெல்ல மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவி, ‘நாம மட்டும் இளிச்சவாயங்களா?’ என அவர்களும் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவார்கள். நாட்டின் பாதுகாப்பா மனிதனின் அடிப்படை உரிமையா என்ற தலைப்பில் இது ஒரு தேசிய விவாதமாக வளர்ந்து, இக்கட்டாய பரிசோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்.
தமிழில் எழுதப்பட்ட சிறந்த பகடிக் கதைகளுள் ஒன்றாக இதைக் கருதுகிறேன். ஷோபா சக்தியின் இலகுவான மொழி கேலியின் அத்தனை நுட்பங்களுடனும் தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. கதையின் தலைப்பு உட்பட திருப்பித் தலைகீழாக்கப்பட்ட சம்பவங்களை வேறொரு தளத்தில் வாசகர்கள் பொருத்திப் பார்க்கலாம். ஆழ் நினைவில் புதைந்துவிட்ட துர்கனவு அசந்தர்ப்பமான சூழலில் அதற்காகவே காத்திருந்தது போல வெடித்துக் கிளம்புகிறது. தாழ்வுணர்ச்சியினால் வீழ்ந்து கொண்டே இருக்கும் மனம் பாலுறவின் லயிப்பில் மட்டும் அதனை மறந்து விடும் சூட்சமம் ஒரு புன்னகையுடன் துலங்குகிறது. ஓயாத மனம் ஆசுவாசம் கொள்கிறது. சிக்கலின் முடிச்சுகளை அவிழ்த்து மீறிச் செல்ல கிட்டிய வாய்ப்பும் பறிபோன பின்னர் அவன் வேலைக்குத் திரும்புவதில்லை.
தொகுப்பு : கண்டி வீரன்
வெளியீடு : கறுப்புப் பிரதிகள்.
சிறிது நேரம் வாய்விட்டுச் சிரித்தேன்
ஷோபா சக்தியின் மொழியில் அந்த எழுச்சியை
குறித்து கட்டுரைரையாளர் விவரித்ததும்
சிரிப்பை அடக்க முடியவில்லை
அருகில் உள்ளவர்கள் வினோதமாக பார்க்கும் படி ஆகி விட்டது
முன்பே படித்ததுதான் திரும்ப வாசிக்க வைத்த
கட்டுரையாளருக்கு அன்பும் நன்றியும்
தி.வேல்முருகன்