இந்த இரவுகள் என்னை
அவளிடமிருந்தும் அந்நியப்படுத்தியுள்ளன
அருகருகான உறக்கத்தில்
ததும்பும் பேரின்பத்தை
எதிர்பார்த்த கண்களிலிருந்து கசியும்
ஏகாந்தம் அறை முழுதும்
வியாபகங் கொள்கிறது
ஆ.
இந்தப் பொழுதுகள்
மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
இறை காதல் கொண்டு
துயிலில் அரற்றுகிறாள் அவள்.
தவம் பூண்ட சந்நியாசியாய்
படுக்கையின் ஓரங்களில்
ஆணி அடித்து அறையப்பட்டிருக்கிறது
என் உடல்
எனினும்
ஆன்மா சாத்தானின் குகைக்குள்
ஒடுங்கித் திரிகிறது
இ.
வேதத்தை ஓதி
இறை காதலனாய் ஆகவும்
அவன் மீது தீராக் காதல் கொண்டு
ஒரு சூபியாய் உரு மாறவும்
இந்த சலனமற்ற கருப்பு இரவுகளில்
என்னைப் பணிக்கிறாய் நீ
நான் சாத்தானின்
உணர்வுகள் கொண்டு
இறை காதலை எப்படி அடைவேன்?
ஈ.
புனிதப்படுத்தப்பட்ட நாட்களில்
என்னை உதறித் தள்ளியபடி
இருள் சூழ்ந்துவிட
இந்த அறை எங்கும் அவள் மவுனத் தவம்
உறைகிறது.
அலட்சியப்படுத்தப்பட்ட
என் அன்பின் ஆழமான வார்த்தைகளை
ஒரு மவுனத்தால் வென்று விட்டவள் நீ
உயிரின் ஆழம் அவாவி எழும்
என் தவிப்பை இறை காதல் கொண்டு
நிரப்புகிறாய் நீ
உ
இந்த நாட்கள் மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
நம்மைச் சூழும் இருட்டின் கருமையிலும்
பிரகாசிக்கின்றன
உன் சொற்கள்
ஊ
வேதத்தின் சொற்கள்
இருட்டை விரும்புவதில்லை!