களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன். சிலவேளைகளில் களுத்துறைக்குச் செல்லாமலே நான் வீடு திரும்பி விட நினைத்ததுமுண்டு. எதேச்சையாக அவளை அங்கு சந்திக்க கிடைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களை இயன்றளவு தவிர்ந்து கொள்ளவே நான் அப்படி நினைத்தேன்;.
எங்கள் பல்கலைக்கழக நாட்களில் எங்களுக்குள் ஓர் ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. அது எப்படி ஆரம்பித்தது எப்படி முடிந்து போனது என்பது இன்றளவும் ஒரு கனவு போல என்னுள் ஈரமாக அப்பிக்கிடக்கிறது. எனது பெட்ச்மெட்டான அவள் ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாகப் பயின்றாள்.
நான் இப்போது பஸ்ஸில் ஏறிக் கொண்ட போது அவளும் இதில் வரக்கூடாதா என்று என் கட்டுப்பாட்டையும் மீறி ஏதோ ஒரு நப்பாசையில் பஸ் முழுவதும் ஒரு கணம் சுற்றிப் பார்க்கிறேன். முன்பொரு முறை நான் களுத்துறைக்குச் செல்லும்போது எதேச்சையாக இருவரும் ஒரே பஸ்ஸில் அருகருகே அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மழைக்காலத்தில் வாய்த்த அந்த சந்தர்ப்பத்தை என்னை விட அவளே வளாகத்தில் வைத்து அதிகம் நினைவுகூர்ந்தாள்.
‘வீடு செல்கிறீர்களா?’ என்று நான் அப்போது அவளைக் கேட்டேன்.
‘ஓவ்’ என்று தலையசைத்தாள். அவள் எப்போதும் இப்படித்தான் தலையசைப்பது வழக்கம். பகிடிவதைக் காலத்திலிருந்தே அவள் என்னை அடிக்கடி ‘வேண்டுமென்றே’ பார்ப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் ‘பாவம் இவனெல்லாம் எப்படித்தான் இந்த ‘ரெகிங்’ கை தாங்கிக் கொள்ளப் போகிறானோ’ என்று என் மீது பரிதாபப்பட்டுத்தான் இவள் என்னைப் பார்க்கிறாள் என்று நினைத்துக் கொள்வேன். எனினும் அது உண்மையிலேயே பரிதாபப் பார்வைதானா என்பதில் எனக்கு உள்ளுர ஒரு இலேசான சந்தேகமும் இருக்கத்தான் செய்தது.
ரெகிங் பீரியட்டில் முதலாமாண்டு மாணவர்கள் தாங்கள் நினைத்தபடி ஆடையணிய முடியாது. சிரேஸ்ட மாணவர்கள் விதித்திருந்த வரையறையின்படியே நாங்கள் ஆடையணிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆயினும் அந்த ஆடையில் கூட அவள் அழகாக இருந்தாள். அவளிடம் சற்று அமைதியான சுபாவம் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவள் என்னுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த முனைபவள் போல் காணப்பட்டாள். ‘ரெகிங் பீரியட்டிலுங்’கூட அதற்கான சந்தர்ப்பங்களை அவள் வலிந்து உருவாக்கிக் கொள்வதை ஓரளவு என்னால் அவதானிக்க முடியுமாக இருந்தது. அதற்கான காரணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
‘ஒரியன்டேஷன்’ நாளில் முதலாமாண்டு மாணவர்கள் தங்களுக்கிடையில் நண்பர்களாகிக் கொள்ள வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் நண்பர்களாகி தங்களைப் பற்றி அடுத்தவருக்குத் தெரியப்படுத்திக் கொள்வது இந்த நட்புமயமாதலின் உள்ளடக்கமாக இருந்தது. இதற்கென சில மணித்தியாலங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அதற்குள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன அதிர்ஸ்டம்! எனக்கருகில் தேடிப்பிடித்து அவள் வந்து சேர்ந்திருந்தாள். அந்த நட்புமயமாதலின் முதல் நாளிலேயே அவளது பெயர் மிதிலா என்பதையும் அவளது ஊர் பாணந்துறை என்ற தகவல்கள் உள்ளடங்களாக அவள் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீனியர்ஸ் கேட்கும் போது நான் அவற்றை ஞாபகம் வைத்திருந்து சொல்ல வேண்டும். அவளும் என்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டாள்.
அந்த இனிமையான நாளில் என்னை ஒரு பாட்டுப் பாடும்படி வினயமாகக் கேட்டாள். தெரிந்த ஒரு சில தமிழ் பாட்டுக்களை எடுத்து விட்டேன். என்னை ஒரு சிறந்த பாடகன் என்று பாராட்டினாள். என் மனம் நோகாமல் இருக்கத்தான்? அவள் அப்படி சொல்லி இருக்க வேண்டும். எதற்கும் அருகில் எனது தமிழ் பேசும் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என ஒரு முறை நோட்டமிட்டுக் கொண்டேன். அதற்கிடையில் அருகிலிருந்த அவளது தோழிகளிடமும் நான் ஒரு பாடகனாக அவளது புண்ணியத்தில் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன். இதை எல்லாம் எனது நண்பர்கள் கேள்விப்பட்டால் என்ற ஒரு அச்ச உணர்வும் எனக்குள் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. ‘அவள் என்ன தப்பா புரிஞ்சிட்டாள் மச்சான்’ என்று சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து ஓரளவு ஆசுவாசப்படுத்தியது. மேற்கொண்டு பாடுவதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. என்னுடைய துரதிஸ்டம் அப்போது அவளையும் பாடும்படி கேட்க எனக்கு அன்றொரு ஜென்ரல் நொலிட்ஜ் இல்லாமல் போய்விட்டது. அதை நினைத்து சில வேளைகளில் நான் துக்கம் அனுஸ்டித்ததும் உண்டு.
அவள் எனது பார்வையில் சற்று வித்தியாசமானவளாகத் தெரிந்தது உண்மைதான். ஏனைய சிங்களப் பெண்களின் நடை உடை பாவனையிலிருந்து அவள் வேறு பட்டிருந்ததை நான் அறிவேன். அது அவளது இயல்பான போக்கா அல்லது திட்டமிட்டு அவ்வாறு நடந்துகொள்கிறாளா என்பது பற்றிய ஆராய்ச்சிகளை நான் அப்போது மேற்கொள்ளுமளவுக்கு அவள் மீது ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் மிகவும் மென்மையான சுபாவமுடையவளாகவும் அழகியலை ஆராதிப்பவளாகவும் இலக்கிய நாட்டமுடையவாளாகவுமிருப்பதை நான் ஓரியன்டேஷன் நாட்களிலிலேயே தெரிந்து கொண்டேன்.
அவளுடன் சரளமாக உரையாடுவதற்கு எனக்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. சிங்களத்தில் ஓரளவு உரையாடும் திறன் எனக்கிருந்தது. இடையிடையே ஆங்கிலக் கலப்பும் உரையாடலின்போது கைகொடுத்தது.
‘நீங்கள் மிகவும் மென்மையானவர்’ என்று ஒரு நாள் என்னிடம் சொன்னாள். நானும் ‘நீங்களும் அப்படித்தான்’ என்று சொன்னேன். இருவருக்குமிடையில் இப்படி ஒரு ஒற்றுமை இருப்பது உண்மைதான். ஆனால் அவளிடம் ஒரு வித பிடிவாதக் குணமுமிருந்ததை நான் பின்னாட்களில் அறிந்து கொண்டேன். அந்தக் குணந்தான் என்னிடம் அறவே வர மாட்டேன் என்கிறதே என்று ஒரு நாள் வெளிப்படையாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்.
அவளுக்கிருந்த இலக்கிய ஈடுபாடு காரணமாக ஆங்கில இலக்கியத்தை தனது பட்டப்படிப்பில் சிறப்புப்பாடமாகத் தெரிவு செய்திருந்தாள். அபாரமான ஆங்கில அறிவு அவளுக்கிருந்ததை நான் அறிவேன். தாங்கள் அன்றைய பாடத்தில் படித்த ஆங்கிலக் கவிதைகள் பற்றி எப்போதும் என்னுடன் உரையாடும் பழக்கம் அவளுக்கிருந்தது. எனக்குள்ளும் ஒரு தீவிர வாசகனும் எழுத்தாளனும் இருப்பதை ஆரம்ப நாட்களில் அவள் அறிந்திருக்கவில்லை. அதை நான் விரும்பி இருக்கவுமில்லை.
ஒரு நாள் கமலாதாஸ் சுரைய்யா என்றொரு ஆங்கிலத்தில் எழுதும் கவிஞையைப் பற்றியும் அவர் இஸ்லாத்தைத் தழுவியது பற்றியும் என்னிடம் பேசினாள். அன்றிலிருந்து அவளை விடத் தீவிரமாக ஆங்கில இலக்கிய வாசிப்பில் நான் மூழ்கத் தொடங்கிவிட்டேன். அவள் சொல்லும் ஒவ்வொரு எழுத்தாளரைப்பற்றியும் நானும் அவளுடன் பகிர்ந்து கொண்டபோது அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள். ‘நீங்களும் ஆங்கில இலக்கியம் எடுத்திருக்கலாம்’ என்றாள். ‘ஓ எடுக்கிற மாதிரித்தான் இரிந்திச்சி’ என எனக்குள் எழுந்த சிந்தனையை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டேன். பின் வந்த நாட்களில் அவளது ஆங்கிலப் பாடப் பரீட்சைகளுக்கு அவளைத் தயார்படுத்தும் விரிவுரையாளர் பாத்திரத்தையும் நானே வகிக்க வேண்டி வந்தது.
தமிழ்மொழியில் நான் ஒரு எழுத்தாளனாக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டு வருவதை அவள் நம்பக்கூடிய ஒரு கட்டம் வந்தபோது வெளிப்படுத்தினேன். அது அவளை மேலும் என்னுடன் இணைத்துப் பிணைப்பதாக இருந்தது.
மிதிலா எனது சமயத்தைப் படிக்கும் ஆர்வத்தை ஒரு நாள் என்னிடம் வெளிப்படுத்தினாள். அதற்குண்டான வசதிகளை நான் செய்து தருவதாக அவளிடம் கூறினேன். இதனை முஸ்லிம் மஜ்லிசுக்கும் தெரியப்படுத்தினேன். இதன் முதல் கட்டமாக குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றை இரகசியமாக அவளது கைகளுக்குச் சேர்ப்பித்தேன். பிறகு பல்கலைக்கழக நூலகத்தில் காணப்பட்ட இஸ்லாம் சம்பந்தமான நூல்களை இரவல் பெற்றுப் படிக்கும்படி கூறினேன். நானும் இரவல் பெற்றுக் கொடுத்தேன். சிங்களத்தில் வெளிவந்து கொண்டிருந்த இஸ்லாமிய சஞ்சிகைகளுக்கு நான் சந்தாதாரனானேன். இவை அனைத்தையும் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நான் செய்து கொண்டிருந்தேன்.
ஆனால் எனக்குள் இருக்கும் ஒரு வித கோழைத்தனமான கூச்ச சுபாவம் இப்போது தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. ஒரு சிங்களப் பிள்ளை என்னுடன் நெருங்கிப் பழகுவதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று என் மனம் இப்போது குறு குறுக்கத் தொடங்கி இருந்தது. பல்கலைக்கழக சூழலில் அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ற போதிலும் அது பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனினும் அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வராது அது பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சுக்கள் கசியும் வரை காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
சில மாதங்களில் அவள் இஸ்லாம் குறித்து என்னளவுக்குத் தெரிந்து கொண்டு விட்டதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு ஃபங்ஷன் தினமொன்றில் மாணவிகள் தங்களை மிகவும் அலங்கரித்து ஆடல் பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இவளோ சற்று மரியாதையான ஆடையணிந்து ஆடல் பாடல்களில் பங்கேற்காது என்னைப் போல் ஒதுங்கி இருந்து வெறுமனே பார்த்தல் இரசித்தல் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டபோது, அவளையும் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும்படி உற்சாகப்படுத்தினேன். அதற்கு அவள் போட்டோ பிடிப்பது ஹராம் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
‘இதுக்கு இவள் இஸ்லாத்தப் படிக்காமலே இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனை அக்கணத்தில் எனக்குள் மின்வெட்டி மறைந்தது.
இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நோன்பு மாதமொன்றில், ‘நீங்கள் நோன்பா?’ என்று என்னிடம் கேட்டாள். நான் ‘ஆம்’ என்று தலையசைத்தேன். ‘நானும் அடுத்த வருசம் நோன்பு பிடிப்பேன்’ என்று அவள் சொன்னபோது அருகிலிருந்த சிங்கள மாணவிகள் அவளை கடுமையாக திட்டினர். நீ என்ன முஸ்லிமா? என ஒருத்தி கடுமையாக அவளை வைய்தது போது எனக்குள் அவள் மீது ஒரு வித பரிவுணர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன். சக மாணவிகளால் அவள் அந்த இடத்தில் கடுமையாக இம்சிக்கப்பட்டாள். ஒரு மதத்தின் மீது தனக்கிருந்த ஈடுபாட்டை அவள் வெளிப்படுத்திய போது அன்று அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தால் அவளை விடவும் நான்தான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்படியானால் அவள் ஹொஸ்டலில் எவ்வளவு இன்னல்களைச் சந்திப்பாள் என்று என் மனம் அவள் மீது மீண்டும் பரிவு கொள்ளத் தொடங்கியது. ஆனால் அது பற்றி எதுவும் நான் அவளிடம் கேட்கவில்லை.
எங்கள் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்துவதற்கென ஒரு Prayer Room தரப்பட்டிருந்தது. எங்களது சமய விவகாரங்களுக்கான மத்திய நிலையமாகவும் அதுவே தொழிற்பட்டது. ஒரு நாள் அதைக் காண்பிக்கும் படி என்னிடம் அவள் கேட்டாள். நான் அவளை உள்ளே அழைத்துச் சென்று அதனைக் காண்பித்தேன். அப்போது அரபியில் அவளது பெயரை எழுதிக் காண்பிக்கும்படி என்னிடம் கையை நீட்டினாள். நான் கையைப்பிடித்து எழுதுவதை தவிர்ந்து கொள்ளும் நோக்குடன் அரபை கையில் எழுதக் கூடாது என்று ஒரு பச்சைப் பொய்யை சொல்லி அந்த இக்கட்டிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். இதிலிருந்து சில நாட்கள் கழித்து கெண்டினில் வைத்து அவளது கையில் எனது பெயரை அரபியில் எழுதி இது சரியா எனக் கேட்டாள். சரியாகத்தான் எழுதி இருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழிகளை கற்பதில் அவளுக்குள் தீவிர ஆர்வமும் ஆற்றலுமிருந்ததை அந்நாட்களில் நான் அறிந்தே வைத்திருந்தேன். இப்படியே போனால் ஒரு நாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதி விடுவாள் என நான் நினைத்துக்கொண்டேன்.
அவள் பரீட்சைக்கான தயார்படுத்தலில் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நாளில் ஆங்கிலக் கவிதை உலகின் இரட்டையர்களான தோமஸ்-ஃப்ரொஸ்ட் ஆகியோரின் கவிதைகளில் வர்ணிக்கப்படும் இயற்கையின் அழகு நமது வளாகத்தின் சுற்றுச் சூழலில் நிறைந்து கிடக்கிறது என்று அவளிடம் எனது ஆங்கில இலக்கியப் புலமையை காட்ட முற்பட்ட போது அது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய சீலமாக முடிந்தது. அவர்களின் கவிதை தனது பரீட்சை வினாத்தாளில் முக்கிய கேள்வியாக இடம்பெறும் எனக்கூறி அவற்றை முழுமையாக எழுதித் தரும்படி ஒரே பிடியாகப் பிடித்துவிட்டாள். அதற்கு முக்கியும் முண்டியும் தயாராகி எழுதிக் கொடுக்க வேண்டி இருந்ததால் எனது பாடத்தில் நான் கோட்டைவிடும் நிலமையும் போதாக்குறைக்கு உருவாகிக் கொண்டு வந்தது.
மிதிலாவின் தந்தை ஒர் உயர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். அடிக்கடி கோபப்படும் சுபாவம் அவரிடம் இருந்த போதும் அனைவருடனும் அன்பாகப் பழகக்கூடியவர் என்று மிதிலா தனது அப்பாவைப்பற்றி என்னிடம் சொல்லி இருந்தாள். நான் நண்பனைச் சந்திப்பதற்காக களுத்துறைக்குச் சென்ற போது அவளது அழைப்பை ஏற்று அவளது வீட்டுக்கும் சென்றிருந்தேன். அவளது தந்தையும் குடும்பத்தினரும் என்னுடன் அன்பாகப் பழகினர். அவர்கள் என்னுடன் பழகிய விதத்திலிருந்து அவள் என்னைப் பற்றி ஏற்கனவே அவர்களிடம் சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னிடம் யுத்தம் பற்றியே அதிகம் பேச விரும்பினர். ஆனால் மிதிலா மதத்தைப் பற்றிப் பேசவே விரும்பினாள். ஆனால் இத்தகையதொரு தருணத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்களைத் தவிர்ந்திருக்கவே நான் விரும்பி இருந்தேன். அவளது தந்தை ஒரு அவசர வேலை காரணமாக வெளியேறிச் செல்வதாக என்னிடம் விடைபெற்றுச் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. அது எதிர்பாராத விதமாக எனது புறப்படலை தாமதப்படுத்தி விட்டது.
அந்த இடைவெளியில் மிதிலா தனது வீட்டு நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களும் அங்கு காணக்கிடைத்தன. ஆனால் அதற்கு தனது தந்தையிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததாக கூறினாள்.
‘இந்த மாதிரியான புத்தகங்களை படிப்பது உனது பட்டப்படிப்பில் இல்லாத ஒன்று’ என்று அவளது அப்பா அவளைக் கடிந்து கொண்டதை அம்மாவுக்கு கேட்காத வகையில் என் காதருகே வந்து மெதுவாகச் சொன்னாள். அது காதலர்கள் இருவரின் கிசுகிசு உரையாடலைப் போன்றே இருந்தது. வீட்டில் அவளது வாசிப்புச் சுதந்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததை மிகுந்த மனவேதனையுடன் எதிர்கொண்டேன். அத்தகைய புத்தகங்களை அப்பாவின் பார்வையிலிருந்து மறைத்து வைக்குமாறு அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றேன்.
ஸ்டடி லீவு என்பதால் அவள் வீட்டில் தங்கி இருந்து படிக்க முடிவு செய்திருந்தாள். நான் நண்பனின் வீட்டுக்குச் செல்வதா அல்லது எனது ஊருக்கே சென்று விடுவதா அல்லது வளாகம் மீள்வதா என்ற குழப்பத்துடன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். எனினும் இனம்புரியாத ஒரு சோகம் என் உள் மனதில் எதையோ செய்வதை அன்று முதன்முதலாக உணர்ந்தேன். இன்னும் மழைபெய்து கொண்டிருக்கக் கூடாதா என என் உள் மனம் குறுகுறுத்தது. நினைவுகளின் குப்பைக் கூடையாய் இதயம் கனத்து வழிய நான் பயணத்தை தொடக்க வேண்டி இருந்தது. அன்று களுத்துறைக்குச் சென்று நண்பனைச் சந்திப்பதற்கு மனம் ஒப்பவில்லை. நேரடியாக பல்கலைக் கழகத்துக்கு அல்லது வீட்டுக்குச் சென்று விடுவது என்ற முடிவில் அங்கிருந்து வெளியேறினேன். ஆனால் வளாகத்தில் சும்மா அரட்டையடித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க என் முன்னுள்ள ஒரே தெரிவாக வீடு செல்வதே இருந்தது.
மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரததத்தில் யன்னலருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். எப்போதும் இரயில் பயணங்களில் இரைச்சலால் இடறும் இதயத்தில் இன்று வேறொரு துயரம் நிரம்பி இருந்தது.
இப்போது புகையிரதம் அவளை விட்டும் என்னை வெகுதூரம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இந்த சேய்மை சொல்ல முடியாத வலியை உடலெங்கும் பரவவிட்டது. நாம் நேசிப்பவர்களை விட்டும் நாம் தூரச் செல்லும் போதுதான் அவர்கள் மீதான நேசம் நமக்குள் அதிகரித்து உயிர் கொல்லும் கொடிய அரக்கனாக மாறிவிடுகிறது என்பதை நான் யதார்த்தபு+ர்வமாக உணரும் தருணம் வந்தது.
வழக்கமாக வீடு வரும் போது மேலிடும் ஆவல் இன்றில்லை. அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. நான் அதுவரை காலமும் நம்பி வந்த, வாசித்து வந்த மாபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூட என்னை இரட்சிக்க முடியாமல் அந்நாட்களில் என்னை ஈவிரக்கமற்றுக் கைவிட்டுக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட எதையும் சரியாக ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு வித இழப்புணர்வுசார்ந்த இந்த நிலமையிலிருந்து அவசரமாக விடுபட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு என்னை அந்த நிலமை கொண்டு வந்து சேர்த்தது. எனினும் ஒரு கலாசாரத் தடை அவளை நெருங்க விடாமலும் ஒரு நேசப் பிணைப்பு அவளைப் பிரிய விடாமலும் என்னைத் திணறடித்துக் கொண்டிருந்தன. இரு திசைகளிலும் இடம்பெயர்ந்து திரிந்த என் நெஞ்சின் வலியை யார்தான் அந்நாட்களில் அறிந்திருக்கக்கூடும்?
அவளது விசயத்தில் சமூகத்தை, கலாசாரத்தை மீறி நான் செல்வதில்லை என்ற உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் பின் அந்த முடிவை மீள்பரிசீலனை செய்வதும் என எனது ஸ்டடி லீவு கழிந்து கொண்டிருந்தது. இறுதியில் குடும்பமும் கலாசாரமும் எனக்குள் மேலோங்கி அவளை விட்டும் தூரமாவது என்ற முடிவுடன் வளாகம் சென்றேன்.
ஒருவாரம் கழித்து அவளை வளாகத்தில் சந்தித்தேன். அவளை நேரில் சந்தித்த போது நான் ஏற்கனவே எடுத்திருந்த முடிவு எனக்கே ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. நான் கலாசாரத்தை மீற முடியாத போராட்டத்தில் அவளை இழப்பது என்ற முடிவை தினமும் எடுப்பதும் பின் அவளை நேரில் சந்திக்கும் தருணத்தில் அக்கணமே அதை மறப்பதுமே அன்றைய நாட்களின் அன்றாட நிகழ்வாகிப் போயின. அதுவே எனக்கு மிகப்பெரிய அவலமாகவும், அருவருப்பாகவும் இருந்தது. ஆனால் முடிந்தளவு அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ளும் உத்தியைக் கையாண்டு அவளை விட்டும் விலகிவிடுவது என்ற முடிவை நான் ஒரு போதும் கைவிடுவதாகவுமில்லை.
இதற்கிடையில் அவளும் என்னை விடுவதாக இல்லை. பூனையின் தலையில் பனங்காயை வைத்தது போல என் நிலமை அந்நாட்களில் மாறிப் போயிற்று. நான் வேண்டுமென்றே அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ள விரும்புவதை அவள் அறிந்து கொள்ளும்படி செய்வது என்ற முடிவையும் எடுப்பதும் பின் கைவிடுவதுமாக இருந்தேன். வாலும் இல்லை நூலுமில்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன் என்ற பாடலை எனக்காகத்தான் எழுதி இருக்க வேண்டும் என்று பெரியளவிலும் அப்போது நான் யோசிக்க வேண்டி வந்தது.
எனது போக்கில் ஏற்பட்ட மாறுதலை அவள் புரிந்து கொண்டுவிட்டாளா என்கிற பரிசோதனைகளையும் நான் அவ்வப்போது மேற்கொண்டு வந்தேன். அதைப் புரிந்து கொண்டவள் போலும் புரியாதவள் போலும் அவளும் வேறு தாப்புக் காட்டித் தொலைத்தாள். அதேநேரம் நான் ஏற்கனவே அச்சப்பட்டது போல் தமிழ் பேசும் நண்பர்கள் வட்டாரத்திலும் எங்களது விசயம் முக்கிய பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எங்கள் இருவருக்குமிடையில் இருப்பது இஸ்லாமா? இலக்கியமா? அல்லது வேறு ஒன்றா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சங்கத்திலிருந்து சிலர் புறப்பட்டிருந்தனர். நான் விசயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த இந்த தருணத்தில்தான் அங்கிருந்து விசாரணைகள் முடிக்கி விடப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்து அவளிலிருந்து ஒதுங்கும் முயற்சியில் நானும் தீவிரமாக இருப்பது என்ற முடிவுக்கு வந்தேன். துரதிஸ்டவசமாக அந்த முடிவும் அவளை நேரில் சந்திக்கும் வரைதான் தொடர்ந்தது. இனி எந்தவொரு முடிவும் எடுப்பதில்லை என்றொரு முடிவும் அந்நாட்களில் நான் எடுத்ததாக ஞாபகம்.
இரண்டாம் ஆண்டு முதலாவது செமஸ்டர் பரீட்சைகள் நிறைவுபெற்று ஒரு- மாத விடுமுறை எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை எனக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை மனக் கணக்குப் போட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைய நாளில் அவள் என்னை தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று அழைத்தாள். வீடு செல்வதற்கு முன் அவளை வந்து சந்திக்கும் படி கேட்டுக் கொண்டாள். அவள் எதைப் பற்றிப் பேசப்போகிறாள். இஸ்லாம் பற்றியா? இலக்கியம் பற்றியா? அல்லது “வேறு ஒன்று” பற்றியா? என்ற குழப்பத்தில் மூழ்கியபடியே நடந்து கொண்டிருந்தேன். ஆனால் அன்று அவளது வழமையான கலகலப்பையும் மகிழ்ச்சியையும் அவளது முகத்தில் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. நான் அன்றிரவு ஒன்பது மணிக்கு வீடு புறப்படுவதாக முடிவு செய்திருந்தேன்.
இலேசாக மழை தூறிக் கொண்டிருந்த அன்றைய மாலைப்பொழுதில் சிறு மரங்களின் தலைகளில் மேகங்கள் விசிறிக் கொண்டிருந்த வேளை நான் ஹொஸ்டல் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சிலவேளைகளில் அவளும் என்னுடன் நடந்து வருவதுண்டு. அந்த நடைப் பயணத்தின் முழு நேரத்தையும் இலக்கியமும் இஸ்லாமும் விழுங்கி இருக்கும். ஆனால் அன்று நான் தனிமையில் நடக்க விரும்பினேன். மௌனமாக எனக்குள் உரையாட விரும்பினேன். எனது நேசத்தின் பயங்கரத்தை சுற்றி இருந்த காட்டின் எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படி அலறுவதற்கு விரும்பினேன். அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலைக்காய் ஏங்கினேன்.
அவளும் அதே பதட்டத்துடன்தான் இருந்தாளா? அவளது நேசிப்பும் பயங்கரமானதா? அவளது கதறலும் கானகத்தை நிறைத்ததா? அல்லது கலாசாரத்தின் தடையை ஏறிக் கடக்கும் துணிச்சல் அவளிடம் இருந்ததா? அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் பனி போல் நழுவிச் செல்லும் இலேசான காற்றுப் போல் வளாகத்தில் நான் வீசிக் கொண்டிருந்தேன்.
அவளைச் சந்திக்காமல் வீடு செல்வது என்றொரு முடிவை அன்று உறுதியாக எடுத்து விட்டிருந்தேன்.