காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.
வழி தப்பிய தவிட்டுக் குருவி அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான். அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.
இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’
தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.
வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்…. ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!
சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா? என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’
‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’
‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’
‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’
தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க
இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…
“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”
இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”
‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’
“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”
அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’
“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.
பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?
திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”
அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.
’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’
”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.
இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?
இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.
“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”
‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’
“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”
‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’
“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”
அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.