ஒருநடுவ வட்டங்கள்

சிவேந்திரன் –

மஞ்சள் நிற வெளிச்சத்தை இருபுறங்களிலும் பாய்ச்சியபடி வீதியின் நடுவில் நின்றுகொண்டிருந்த விளக்கு கம்பங்களின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருந்தார் விரிப்பைக் காட்டிவாறு சென்று திருப்பத்தில் மறைந்தது. அதிலிருந்து விலகி சற்று தொலைவில் நடந்து செல்லும் உருவங்களை அதிகமாக இனம் காணமுடியாத அளவிற்கு இருட்டு போர்த்தியிருந்தது. வாகனங்கள் குறைவாகவே சென்றன. அவற்றில் பெரும்பாலானவை டாக்ஸிகள்.

வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். நிலவினை காணவில்லை. ஒரேயொரு நட்சத்திரம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதை நானும் உற்று நோக்கினேன். சுற்றிவர எல்லையற்று விரிந்து செல்லும் வானத்தில் தனித்து நிற்கும் அவ்விண்மீன் அலைகடலின் மத்தியில் இருக்கும் ஊர்காவற்றுறை கடற்கோட்டையை நினைவுபடுத்தியது. இப்போது அந்தக் கடற்கோட்டையும் இந்த உடுவினை நோக்கிக் கொண்டிருக்கக்கூடும். சடுதியில் மனம் மெல்ல அதிர்ந்தது. நட்சத்திரத்தை நோக்கி கை அசைத்தேன். உங்களை வியந்து வியந்து பார்த்த சிறுவன் எங்கோ மணற்காட்டில் எழுந்து நிற்கும் கட்டிடக்காட்டில் இருக்கிறான். இப்போது அவன், இளமைக்காலங்கள் மணற்கடிகாரத்தின் மணலைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவன் என்று அவ்விண்மீன் அந்தக் கடலிடமும் கடற்கோட்டையிடமும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன்.

கடற்கரையில் அலைகள் கால்களை தழுவிக் கழுவிச் சென்று கொண்டிருந்தன. “மகன் எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டு நிற்கப்போறீங்க? நேரம் போகுது, வாங்க போவம்,” அம்மாவின் குரல் என் காதிற்குள் கேட்டது.

“என்ன மகன் யோசிக்கிறீங்க.”

“இந்தக் கடல் எங்களை பிரிக்குதா? இணைக்குதா?”

“யாரை?”

“கோடிக்கரைக் குழகரையும் எங்களையும்”

“எப்படியாவது எடுத்துக் கொள்ளு,.இப்ப வா.”

“அம்மா பராக்கிரமபாகுவின்ட கல்வெட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்தவங்க?”

“அப்பாட்ட கேளு. வா மகன், நேரம் போகுது”

“பராக்கிரமபாகு தமிழனா? சிங்களவனா?”

“சிங்களவன்”

“அப்பா சொன்னவர் பராக்கிரமபாகுவின்ட அப்பப்பா பாண்டிய இளவரசன். அதனால அவன் தமிழன். அதுதான் கல்வெட்டெல்லாம் தமிழ்ல வெட்டினவன் என்டு”

“சரி.அப்ப அவன்ட அப்பம்மா, தாத்தா, அம்மம்மா எல்லாரும் சிங்களவங்கள்தானே. அப்படிப் பார்த்தாலும் அவன் சிங்களவன்தான்.”

“நானும் இதைக் கேட்டனான். அப்பான்ட வழிதான் உரிமை. அதைத்தான் பார்க்க வேணும் என்டு அப்பா சொன்னவர். அப்படிப் பார்த்தா பாண்டிய இளவரசன்ட மகன் மாணாபரன் தமிழன். அவன்ட மகன் பராக்கிரமபாகு. அப்ப அவனும் தமிழன்.”

“அப்படியெல்லாம் இல்லை, மகன். அப்பாக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளவு உரிமை அம்மாக்கும் இருக்கு. அம்மாவுக்கு என்ன உரிமை இருக்கோ, அந்தளவு மட்டும்தான் அப்பாக்கும் இருக்கு”

“அப்ப எனக்கு பராக்கிரமபாகு வேணாம். கருணாகரத் தொண்டமான் போதும்”

“நீ கடல்புறா வாசிச்சனியா? சாண்டிலியன்ட கதையள் வளந்த பிறகு வாசிக்கலாம் என்டெல்லா பறிச்சு ஒளிச்சு வைச்சனான்.”

“நீங்க ஒளிச்சு வைச்சது முதலாம் பாகம். நான் இரண்டாம் பாகத்தில இருந்து வாசிச்சு முடிச்சிட்டன்”

“பிஞ்சில பழுக்கிறதுக்குதான். பத்தாம் வகுப்பு முடிய வாசிக்கலாம் என்டு சொன்னான். நீ சொல்வழி கேட்கமாட்டாய், என்ன?”

பாலைநிலத்தின் கோடைகாலம் முடிந்துவிட்டது. இது குளிர்காலம். 15 பாகை செல்சியஸிற்கு வெப்பநிலை வீழ்ந்துவிட்டிருந்தது. சிலவேளைகளில் 10 பாகையை அண்மித்துவிடும். பூநடுக்கோட்டுக்கு அருகில் பிறந்த ஒருவருக்கு பாலைவனத்தில் குளிரடிக்கும் என்பது புரிந்துகொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கும். தேவா முழுக்கைச் சட்டையையும் சப்பாத்தையும் அணிந்துகொள்ளுமாறு கூறியபோது நான் ஒரு வீராப்புடன் மறுத்துவிட்டேன். அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததால் சிறிது வெடவெடத்தது. குளிர் உடலை நடுக்கினாலும் பழைய நினைவுகளுடன் இணைந்து மனதை இலேசாக்கி விட்டது. பாடத் தொடங்கினேன்.

“ஆழக்கடல் எங்கும் சோழமகாராஜன் ஆட்சி புரிந்தானே, அன்று…”

நான் மறைந்துவிட பாடல் மட்டும் எஞ்சிவிட்டது போன்று இருந்தது. வீதியோரமாக நடந்து போன ஆப்பிரிக்கன் திரும்பிப் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தான்.

“எட்டுத் திசையாவும் தொட்டு பெரும்சோழன் ஏறிக்கடல் வென்றதுண்டு.
அவன் விட்ட இடம் எங்கும் வென்று வருகின்றார்”

‘சர்’ என்று பொலிஸ் கார் கடந்தது. உடல் நடுங்கியது. கை கால்கள் உதறின. கட்டிடத்தின் வெளிப்புறத்தில் குந்தியிருந்த நான் கணப்பொழுதில் நிமிர்ந்து எழுந்தேன். கெட்டிருந்த அறிவு மீண்டும் துலங்கத் தொடங்கியது.

“சே இது நம்ம நாடு இல்லை”

காற்சட்டையின் பின்புறத்தைத் தட்டிக் கொண்டேன். எனது சமநிலை முற்றிலுமாக குலைந்துவிட்டிருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தேன். 2.20. தேவா சென்று இருபத்தைந்து நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன. இவ்வளவு நேரம் என்ன செய்கிறான்? அவனது செல்பேசிக்கு அழைத்தேன். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் இரவு 10.30 மணிக்காட்சி சென்றிருந்தோம். தேவா படம் முடிந்து திட்டிக்கொண்டே வந்தான். அந்த திட்டின் சாரல் எனக்கும் அடித்தது.

“சீ. தமிழ் படத்தில நடிக்கிறவனெல்லாம் நடிக்கிறத்திற்கு வாறானா? இல்லை தமிழ்நாட்டு முதலமைச்சராகிறதுக்கு வாறானா? இவன்ட படம் இப்படித்தான் இருக்கு என்டு நான் அப்பவே நினைச்சன். நீங்கதான் கூப்பிட்டு காசையும் கரியாக்கி நேரத்தையும் நாசமாகிற்றீங்க.”

“நான் என்ன பாலுமகேந்திராவின்ட வீடு மாதிரி இருக்கும் என்டா சொன்னான். நல்ல பொழுதுபோக்கு படமா இருக்கும் என்டு நினைச்சன். இவ்வளவு மோசமா இருக்கும் என்டு எதிர்பார்க்கேல்ல. இப்ப எம்ஜிஆரே வந்தாலும் எம்ஜிஆர் ஆகமுடியாதென்டு இவங்களுக்கு தெரியும். இதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவனை ஏமாத்திற வியாபார தந்திரம். ஆனா என்ன அதுகூட இருபது வருசம் பழைய டெக்னிக் இப்ப செல்லுபடியாகாதெண்டதைதான் விளங்கிக் கொள்ளுறாங்கள் இல்லை.”

தேவாவின் முகத்தில் ஆறுதல் தெரிந்தது. இப்பொழுது படத்தை பற்றி ஏதாவது நல்லது கூறினால் அது எனது காதுகளுக்கு நல்லதல்ல என்பதால் விட்டுவிட்டேன்.

வரும் வழியில் குடிப்பதற்கு ஹோட்டல் செல்லவேண்டும் என்று கூறினான். ஒரு மணியைத் தாண்டிவிட்டது என்று வேண்டாம் என்று மறுத்தும் அவன் கேட்கவில்லை. சரி, நான் போகிறேன் நீங்கள் ஆறுதலாகக் குடித்துவிட்டு வாருங்கள், என்று கூறியும் கேட்கவில்லை. குப்பை படத்திற்கு கூட்டிக்கொண்டு போய் வியாழன் இரவை வீணாக்கிவிட்டதால் நானும் அவனுடன் வந்தேயாக வேண்டும் என்று அடம் பிடித்தான். அவனுடனே இழுபட்டுச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

வழமைபோல நான் கோக் ஒன்றை எடுத்துக்கொண்டேன். முதலிலேயே எனக்கு உறுதியளித்திருந்தபடி தேவா எழுந்து சற்று தொலைவில் சென்று சிகரெட் பிடித்துவிட்டு வந்தான். அந்தப் புகை கடுமையாக வெறுப்பேற்றக்கூடியது. குடிப்பவர்களை சகித்துக் கொள்ளலாம். ஆனால் சிகரெட் பிடிப்பவர்களைச்\ சகித்துக்கொள்ள முடியாது.

ஹோட்டலில் இருந்து இறங்கும்போது தேவா அதிகம் பேசவில்லை. அம்மிக்கொண்டு வந்தான். நடந்து போகாமல் டாக்ஸி பிடித்து போகவேண்டும் என்றான். அதிக தூரம் இல்லை. ஒரு பத்து நிமிடம் நடை, பின்னர் ஒரு பத்து நிமிடம் படகு, அடுத்து ஒரு பத்து நிமிடம் நடை இருப்பிடத்தை அடைந்து விடலாம். டாக்ஸி தேவையில்லை என்றேன். ஆனால் குடித்திருப்பதால் அவன் முடிவை மாற்றுவது நடக்கிற வேலை இல்லை என்று தெரிந்தது. சிறிது தூரம் நடந்து இப்பொழுது நிற்கும் இடத்திற்கு வந்தோம்.

இவ்விடத்திலிருந்து டாக்ஸியை மறிக்குமாறும், வீதியின் மறுபுறத்தில் நின்று தான் முயற்சி செய்வதாகவும் கூறினான். அது நல்லதுதான் அப்படியானால்தான் விரைவில் கிடைக்கும் என்பதனால் சம்மதித்தேன். டாக்ஸிகள் கடந்து சென்றவாறிருந்தன. எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்கள். வியாழன் இரவு. நாளை வெள்ளி விடுமுறை.

திடீரென்று தேவாவை ஒருவன் அணுகினான். தேவா அவனுடன் பேசுவது தெரிந்தது. “நீங்க கொஞ்ச நேரம் அங்கயே நில்லுங்க நான் ஒரு பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்,” என்று சத்தமாகக் கூறிவிட்டு தேவா அவனுடன் நடந்து சென்றான். அவன் கள்ள டாக்ஸி ஓட்டுகிறவன் போல. அவனது டாக்ஸி பிடிக்கத்தான் செல்கிறான் என்று நினைத்தேன். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு கால் உளைகிறது என்று கட்டிடத்தின் வாசலில் அமர்ந்துவிட்டேன். இப்போது கடந்து சென்ற பொலிஸ் கார் எனது சமநிலையை குலைத்து விட்டது. ஏன் தொலைபேசியை அணைத்து வைத்திருக்கிறான்? அல்லது சார்ஜ் தீர்ந்துவிட்டதா? சிறிது பதற்றமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை.

தூரத்தில் தேவாவை அழைத்துச் சென்றவன் வருவது தெரிந்தது. என்னை நோக்கித்தான் வருகிறான். தேவாவைக்\ காணவில்லை. தேவா எங்கே? அவன் என்னை நோக்கி வர வர எனக்கு பதற்றம் அதிகமாகியது. குள்ளமான, பழுப்பு நிற, சிறிது மங்கோலியச் சாயல் உள்ள அவன் வங்காளியாக இருக்கவேண்டும். என்னை நெருங்கியவன் தயக்கத்துடன் மெதுவாக “லடுக்கி சையே?” என்றான்.

“கியா?”

“இந்தியன், பாகிஸ்தானி, பெங்காலி, பிலிப்பினோ, ரஷ்யன், அஃபிரிக்கன்”

“பொலிஸ் ஆனசே பஹ்லே பாஹ்கோ” நான் குலைத்த குலையில் வந்த வழியாக திரும்பி ஓடினான்.

மீண்டும் கட்டிடத்தின் வாசலில் அமர்ந்தேன். பதற்றம் மறைந்து கோபம் தலைக்கு ஏறியிருந்தது.

தேவாவை எனக்கு நான்கு வருடங்களாகத் தெரியும். ஆரம்பத்தில் சுசந்த பெர்ணான்டோ என்ற சிங்கள நண்பனுடன் அவன் தங்கியிருந்தான். சுசந்த பெர்ணான்டோ ஒரு சிவில் என்ஜினியர். அவனுக்கும் ஒரு வீட்டுப்பணிப்பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. அவள் ஏற்கனவே திருமணமானவள். பிள்ளைகளும் கணவனும் ஸ்ரீலங்காவில் இருக்கிறார்கள். தேவாவிற்கு இந்த விடயம் தெரியவந்தபோது இவ்வாறான கள்ளத்தொடர்புகள் உயிர்ச்சேதத்தில்தான் முடியும் என்று புத்திமதி கூறியிருந்தான். ஆனால் சுசந்த கேட்கவில்லை. ஒரு முறை தேவாவும் சுசந்தவும் வேறு சில நண்பர்களும் குடித்துக்கொண்டு இருந்தபோது பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை வந்துவிட்டது. குடிவெறியில் இருந்த தேவா எழுந்து நின்று நெஞ்சைத்தட்டி தேசியத்தலைவர் இங்கிருக்கிறார் என்று கூற சுசந்த ‘பலு தெமிழு” என்று திட்ட அந்த இடத்தில் அடிபாடு நடக்காமல் நண்பர்கள் விலக்கிப் பிடிக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் சுசந்த கட்டிபிடித்து மன்னிப்பும் கேட்டிருந்தான். தேவாவும் ஒப்புக்கு பரவாயில்லை மச்சான் விடு என்று சமாதானத்தை ஏற்றுக்கொண்டான். ஆனால் அனைவருக்கும் முன்னால் தமிழ் நாய் என்று திட்டியது தேவாவிற்கு இதுவரை வாழ்நாள் முழுதும் சிங்களவர்களுடன் ஏற்பட்ட சகல கசப்பான சம்பவங்களையும் கடைந்து கடைந்து கசப்பெனும் வெண்ணையாக மனதில் திரட்டியவாறு இருந்தது. பணிப்பெண்ணின் கணவனின் தொலைபேசி இலக்கத்தை தேடிப்பிடித்து அவனிடம் சுசந்தவின் கள்ளத்தொடர்பை போட்டுக்கொடுத்த பின்னர்தான் சற்று அமைதியடைந்தான். தன்னைப் பற்றிய விடயத்தை யார் வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்று சுசந்த ஆராயத் தொடங்கியதால் அவனுடன் தொடர்ந்து தங்கியிருப்பது நல்லதல்ல என்று தேவா முடிவு செய்தான். இவ்வாறான சூழலிலேயே அவனுக்கு எனது அறையில் இடம் கொடுக்கவேண்டியேற்பட்டது.

தூரத்தில் தேவா துப்பியபடியே வருவது தெரிந்தது. என்னை நேராக நோக்காமல், “போவம்,” என்றான்.

“பண்டி மாதிரி சாக்கடைக்குள்ள பிரள போய்றீங்க.அதுக்கு தனியா வரலாம்தானே. என்னை நடுத்தெருவில விட்டிட்டு ஏன் போறீங்க” எனது வார்த்தைகள் கடுமையாகவே வந்தன.

“மன்னிச்சுக் கொள்ளுங்க வங்காளி வந்து கேட்டதும் தடுமாறிட்டன்.”

“முதலே திட்டம் போட்டுத்தான் டாக்ஸியில போவம் என்டு சொல்லியிருக்கிறீங்க. கொஞ்சமாவது வெட்கம் இல்லையா?”

“இதெல்லாம் சாதாரண விசயம். எங்கட ஆக்கள் ஒரு பொம்பிளையை காதலிக்கிறதுதான் வாழ்நாள் சாதனை என்டும். காலுகளுக்கு இடையிலதான் உலகம் இருக்கென்டும் நினைச்சுக் கொண்டு திரிவாங்க. கல்யாணம் கட்ட முப்பது வயசாகிடும். உங்களை மாதிரி ஆக்கள் அதை தாண்டினா பிறகும் கட்டமாட்டீங்க. அட இவ்வளவுக்குதானா இந்தப்பாடு என்று கல்யாணம் கட்டினப் பிறகுதான் தெரியும். அதுக்கு பிறகாவது ஏதாவது உருப்படியா செய்வம் என்டு யோசிச்சா பிள்ளை குட்டி என்டு வாழ்க்கை இழுபட்டு கொண்டுபோய் கடைசியில சுடலையில போய் கிடக்கவேண்டியதுதான். முந்தின காலத்தில நம்மட ஆக்கள் பெரிய பெரிய சாதனைகள் செய்ததிற்கு அவங்கள் சின்ன வயசிலயே கல்யாணத்தை கட்டினதுதான் காரணம். இது இவ்வளவுதான் என்டு படிக்கிற காலத்திலேயே தெரிஞ்சு கொள்ளுறதாலதான் வெள்ளைக்காரன் இத்தனை விசயத்தை கண்டு பிடிக்கிறான்,” என்று கூறியவாறு தூ தூ என்று துப்பினான்.

குடிச்சிருக்கிறவனோட கதைச்சு பலனில்லை என்பதால் ‘சரி மகெலன் , துப்பாம வாங்க” என்று கூறியவாறு நான் நடந்தேன்.

“இவளவையை கிஸ் பண்ண மட்டும் போகக்கூடாது.முத்தம் ஆன்மாவின் ராகம். மற்றது உடம்பின் தாளம். இந்தமுறை அந்த நிதானம் மட்டும் தப்பிற்றுது. பணிமொழி வாலெயிறு நாறிய நீர்” என்றவாறு மீண்டும் தூ தூ என்று தேவா துப்பினான்.

“தள்ளி வாங்க எனக்கு பறக்குது”

“சொறி”

சிறிது தூரத்தின் பின் தேவாவின் சத்தத்தை காணவில்லை. திரும்பிப் பார்த்தேன். வீதியின் கரையில் இருந்து விலகி வந்துகொண்டிருந்தான்.

“ஐயா, இண்டைக்கு எனக்கு குடுத்த தண்டனை போதும். வாகனம் தட்டப் போகுது. நடைபாதையில் ஏறிவாங்க” என்று குரல் கொடுத்தேன்.

“எனக்கு வெறி இல்லை. நிதானம் இருக்கு”

ஏற்கனவே குலைந்திருந்த சமநிலையை இந்த வார்த்தைகள் மேலும் சரித்தன. வாய் முழுவதும் கெட்ட வார்த்தைகள் நிறைந்துவிட்டன. கோபத்துடன் நிமிர்ந்தேன். தூரத்தில் பள்ளிவாசலொன்றின் முகடு தெரிந்தது.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”

சடாரென்று தணிந்தேன்.

“நிதானம் இருந்தா சிவபெருமானுக்கு எந்தப்பக்கமா நிலவிருக்கு என்டு சொல்லுங்க” என்றேன்.

“மேல் பக்கமா”

மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை. காலைச்சாப்பாட்டுக்குச் செல்வதற்கு தேவாவை கூப்பிடுவதற்கு நினைத்தேன். நேற்றைய இரவின் கோபம் தீராததால் அழைக்கவில்லை. திரும்பி வந்தபோது வெளிக்கிட்டு நெற்றியில் ஒரு விரல் திருநீற்றுக்கோட்டுடன் நின்றான்.

“என்னை விட்டிட்டு சாப்பிட போய்றீங்க என்ன?” அவனின் குரலில் கோபமும் வருத்தமும் கலந்திருந்தது.

“சாப்பிட போகயில்லை. வேற அறை பார்க்க போனன்”, விளையாட்டுக்குச் சொன்னேன்.

“ஏன்?”

“உங்களோட இருக்க ஏலாது”

“இந்த அறையை நீங்கதானே எடுத்திருக்கிறீங்க”

“நீங்க எனக்கு அம்மாள் வருத்தம் வந்த நேரத்தில உதவி செய்திருக்கிறீங்க. உங்கள போ என்டு சொல்லுற அளவிற்கு நான் நன்றி இல்லாதவன் இல்லை. அன்சாரி பாயிடம் உங்களிட்ட அறையை குடுக்கச் சொல்லப் போறன்,” என்றேன். அன்சாரி பாய்தான் ஃபிளாட்டை எடுத்து அதில் ஒரு அறையை எனக்கு வாடகைக்கு தந்திருந்தார்.

“நான் இப்ப என்ன பிழை செய்திட்டன்,” தேவாவின் குரலில் கோபம் தெரிந்தது.

“உங்களிட்ட அடிப்படையான ஒழுக்கம் இல்லை. சரி. அது உங்கட தனிப்பட்ட விசயம் என்று விடுவம். ஆனா என்னை நடுத்தெருவில விட்டிட்டு போனதை ஏற்றுகொள்ளவே முடியேல்ல”

“உங்களை மாதிரி தங்களைத் தாங்களே ஒழுக்கவாதிகள் என்று நினைக்கிறவங்கதான் மதவெறியங்களைவிட மோசமானவங்கள். அவங்கள் தாங்களும் அழிஞ்சு மற்றவங்களையும் அழிக்கிறாங்க. உங்களைப் போல ஆக்கள் தாங்களும் சந்தோசமா இருக்காம மற்றவங்கட சந்தோசத்தையும் கெடுக்கிறீங்க,” தேவாவிடம் இருந்து வார்த்தைகள் கரைபுரண்டன.

“அப்ப ஏன் நீங்க சுசந்தவை மாட்டிவிட்டீங்க?”

“இப்படி கேட்கிறதுக்கு உங்களுக்கே கேவலமா இல்லையா? சுசந்த போல நான் அடுத்தவன்ர பெஞ்சாதியோடையா போனன்? அவனால எத்தின பேருக்கு பாதிப்பு. நான் மற்றவன்ர குடும்பத்தை கெடுக்கேல்ல. பிறன் மனை நோக்கா பேராண்மையாளன்” தேவா நெஞ்சை தட்டினான்.

“நீங்க செய்யிறது மட்டும் நாலு பேருக்கு சொல்லக்கூடிய வேலையா?” எனது குரலும் உயர்ந்தது.

அவனின் சுட்டுவிரல் எனக்கு எதிரே நீண்டது. “நீங்க கையில அடிக்கிறதில்லையா? அதை நாலு பேருக்கு முன்னால் சொல்லுவீங்களா?”

வேகமாகச் சென்று திறந்திருக்கின்றது என்று எண்ணி கண்ணாடிக்கதவில் படீரென்று மோதித்தெறித்த அதிர்ச்சி. சுய இன்பத்தைப்பற்றி பாடசாலைக் காலத்திற்கு பின்னர் நேரடியாக கேட்கப்படுவது இதுவே முதல்முறை.

“அதுவும் மற்ற இயற்கை அழைப்புகள் போல உடல் சமநிலையைப் பேணும் ஒரு வழிதான். வெளிப்படையாக எல்லோரும் அறிந்ததை பொதுவில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை,” நான் தேவாவின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பியவாறு சொன்னேன்.

“உங்கட தர்க்கம் எனக்கு நிஸாமின்ட தர்க்கம் போலத்தான் இருக்கு. நிஸாம் ஹப்பி என்ட் மஸாஜிற்கு போனவன். நீங்க தனியா செய்யிறதை அதில மஸாஜ் செய்யிறவளவை செய்து விடுவாளவை. அவனெட்ட இதுவும் செக்ஸ்தானே என்டு கேட்டா, இல்லை பார்ட் ஒஃப் த மஸாஜ் என்டான். கிளிண்டனுக்கும் மோனிக்கா லுவின்ஸிக்கும் இடையிலான உறவைக்கூட அது முழுமையான செக்ஸ் இல்லை. ஆனபடியால் தப்பில்லை என்டும் வாதிட்டவங்கள்தானே. நீங்க சொல்லுறதும் இப்படியான சப்பைக்கட்டுத்தான்,” தேவாவின் குரலில் நக்கல் மிகுந்திருந்தது.

“இன்னும் ஒருவருடன் உடல்ரீதியா தொடர்பு வரும்போது அது கோட்டுக்கு மற்றப்பக்கம் போயிடும்,” என்று கூறியவாறு வாசலைப் பார்த்தேன். தேவாவிடம் இருந்து தப்பினால் போதும் என்றிருந்தது.

“சரி.அதை விடுங்க. உங்கட விசயத்திற்கு வருவம். அந்த நேரத்தில நீங்க என்ன செய்யிறீங்க? கற்பனைதானே பண்ணுறீங்க. அப்ப உங்கட மனதின் ஒழுக்கம் என்ன? இறைபக்தியான விலைமாதும், அவள் செய்யிற தொழிலையே நினைச்சுக் கொண்டிருந்த துறவியின்டயும் கதை தெரியும்தானே. கடைசியில அவள் சொர்க்கத்திற்கும் துறவி நரகத்திற்கும் போனவங்கள்,” தேவா என்னை விடுவதாக இல்லை.

‘மன்னவனே உன் கோயில் புகுவிழாவை வேறொரு நாளில் வைப்பாயாக. நாம் நாளை எம்மடியான் பூசலாரின் கோயிலுக்கு போவோம்’

‘பிறவா யாக்கை பெரியோனே தங்களின் ஆலயத்திற்கு போவதாக கூறினன். அக்கோயில் எங்குற்றதோ.அதில் இவ்வடியவன் பணிந்து செல்ல இங்குற்றேன்.’

‘தொட்டனன் தன் நெஞ்சத்தை மனக்கோயில் நாயனார்’

என் நினைவுகள் அலைந்தன.

“இப்ப சொல்லுங்க நீங்க ஒழுக்கமான ஆளா? உங்கள நியாயப்படுத்திற போல ஒரு ஒழுக்கத்தை வரையறுத்துக்கொண்டு என்னை எப்படி ஒழுக்கமில்லாதவன் என்டு குற்றஞ்சாட்டுவீங்க?” தேவா வார்த்தைகள் எனக்கு கிணற்றுக்குள் நீந்துபவர்கள் பேசுவது வெளியில் கேட்பது போன்று இருந்தது. நான் மௌனமாக அறையைவிட்டு வெளியே சென்றேன்.

ஓரிரு நாட்களிலேயே தேவாவிற்கும் எனக்குமான நட்பு பழைய சுமூக நிலைக்குத் திரும்பிவிட்டது.

தொலைபேசி அழைத்தது. தேவா.

“உங்களுக்காகத்தான் காத்துகொண்டு இருக்கிறம். கெதியா வாங்க”

“சரி.வாறன்” கூறியபின் விரைந்து நடந்தேன்.

முன்கூடத்தில் அன்சாரி பாய், குஜராத்தி வினோத், நிசார், நிஸாம், வெங்கடேஷ் என்று பல நண்பர்கள் குழுமி இருந்தார்கள். தேவாவிற்கு பெண் பார்த்திருக்கிறார்கள். காலையில்தான் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. தேவா போட்டோவைப் பார்த்துவிட்டான். அவனுக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்று சிறிய பார்ட்டி. அடுத்த வியாழன் இரவு ஹோட்டல் ஒன்றில் பெரிய பார்ட்டி வைப்பதாக தேவா சொல்லியுள்ளான் என்று அன்சாரி பாய் மலையாள தொனியிலான ஹிந்தியில் கூறிமுடித்ததும் ஃப்ளாட் முழுதும் ஹோ என்ற கூச்சல் நிறைந்தது. கணப்பொழுதில் ஒரு திருவிழா மனநிலை. தேவாவின் முகத்தில்கூட சிறிது வெட்கம் தெரிந்தது.

அன்சாரி பாயின் அறிவுறுத்தலுக்கு இணங்க முதலில் கேக்கை வெட்டிய தேவா முதல் துண்டை, ” எவ்வளவுதான் நீங்க என்னை திட்டினாலும் உங்கள்ள உள்ள அன்பு குறையாது,” என்று கூறியபடி எனக்கு தந்தான். மனம் நெகிழ்ந்தது. ஒட்டிக்கொண்டிருந்த சிறிது கசப்பும் கரைந்துவிட்டது. மாலையானதும் பேச்சும் சிரிப்பும் கூச்சலும் மெல்ல மெல்ல ஓய்ந்தன. நண்பர்கள் வியாழன் இரவு விருந்திற்கான உறுதிமொழியைப் பெற்றவாறு ஒவ்வொருவராக விடைபெற்றவாறிருந்தனர்.

கணனியை திறந்தேன். முகநூலைப் பார்த்து நீண்டநாட்களாகியிருந்தது. முகநூலில் பல குறுந்தகவல்கள். ஒவ்வொன்றாக வாசித்தவாறு வந்தேன். நிலாவெழில் சிவநாதன். பெயரை பார்த்ததுமே உற்சாகம் ஊறியது. எப்படி இவள்? எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘கறுப்பி’. அவளை எப்போதும் அப்படித்தான் அழைத்து ஆத்திரமூட்டுவேன். அவளிடம் இருந்து பதிலடி வேகமாக வரும். ‘வீட்டில கண்ணாடி இல்லையா?’, ‘என்ன இன்டைக்கு வெள்ளனவே இருட்டிற்றுது என்டு பார்த்தா நீங்க வந்திருக்கிறீங்க, எலிஸபெத் மகாராணியின்ட கடைசி மகன்,’ என்று பல்வேறு விதமாக அடிகிடைக்கும்.

ஒருமுறை கைக்குழந்தையுடன் சென்ற தாய் என்னை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றதாகக் கூறினாள். அவள் காட்டிய திசையில் பார்த்தேன் உண்மையில் பெண்ணொருத்தி குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். ஆனால் திருப்பிப் பார்த்ததாக தெரியவில்லை. ‘அந்தப்பெண் குழந்தைக்கு கறுத்தப்பொட்டு வைக்க மறந்திட்டாள். உங்களைப் பார்த்ததும் உங்களில் தொட்டு வைத்துக் கொள்ளலாமா என்றுதான் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சென்றிருக்கிறாள்,; என்று கூறிச் சிரித்தாள். இன்னும் ஒருமுறை நான் ‘கறுப்பி,கறுப்பி’ என்று கூறியபோது என்னை நோக்கி விரைந்து வந்தாள். எனக்கு உள்ளூர ஒரு நடுக்கம். ‘கையை நீட்டுங்க’, என்றாள். தனது கையை எனது கைக்கு சமந்தரமாக பிடித்தாள். நான் அவளைவிடக் கறுப்பாக இருந்தேன். தனது நெற்றியை கையால் தட்டியவாறு ‘ஐயோ,ஐயோ’ என நக்கலாக கூறியபடி சென்றுவிட்டாள்.

பின்பொருநாள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு பேருந்திற்கு காத்திருந்த அவளை கறுப்பி என்று வழமைபோல கூப்பிட்டேன். எழுந்து என்னருகில் வந்தவள் சற்றுத் தளர்வாக “கறுப்பு வடிவில்லை என்ன” என்றாள். சட்டென்று என் மகிழ்ச்சி மறைந்தது.

“லூஸி, லூஸி நான் கறுப்பி, கறுப்பி என்டு சொல்லுறது உன்ட பதிலைக் கேக்கிறத்துக்குத்தான். அதைக் கேட்கேக்க என்ட தன்னம்பிக்கையும் இன்னும் கொஞ்சம் கூடுது. நீ என்னன்டால் உன்னோட சேர்த்து என்னையும் கீழ இழுத்துக்கொண்டு விழுறாய். வெள்ளை சினிமா பாட்டு மாதிரி எல்லாரும் ரசிக்கலாம். கறுப்பு கர்நாடக சங்கீதம் மாதிரி ரசிக்கிறதுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. உன்னைவிட நான் கறுப்பு. நீ மென்கறுப்புத் தமிழச்சி.நான் வன்கறுப்புத் தமிழன்” என்றேன்.

அவளின் முகத்தில் அப்படியொரு ஒளிபரவிப் படர்ந்தது. அது இப்பொழுதும் எனது ஞாபகத்தில் உள்ளது.

அவள் என்னைவிட சில வயது இளையவளாக இருத்தாலும் ஒரே பாடசாலை, தனியார் வகுப்புகள் என்று எப்போதுமே சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தது. அவள் என்றுமே எனது அன்புக்குரிய நண்பி. அவள் மீது எனக்கு ஏன் காதல் வரவில்லை என்று பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு ஈர்ப்பு நம்மிடையே இருக்கவில்லை என்பதுதான் மீண்டும் மீண்டும் நான் கண்டடைந்த பதில்.
ஏழெட்டு வருடங்களின் பிறகு அவளை முகநூலினூடாக சந்திக்கிறேன். வாசிக்கத் தொடங்கினேன். வழமையான நலன் விசாரிப்புகள். அதன் பின்,

‘உங்கள் முகநூல் நட்புப் பட்டியலிலுள்ள தேவாவை எனக்கு திருமணம் பேசியுள்ளனர். அவர் எப்படியானவர் என்று விசாரித்துச் சொல்லுங்கள். நீங்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாது இந்த உதவியைக் கட்டாயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.’

அன்புடன்

நிலாவெழில் (மென்கறுப்புத் தமிழச்சி)

எனக்கு தலை கிர் என்றது. கணனியை அணைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றேன். இப்பொழுது என்ன செய்வது. தலைமுழுவதும் கொதிப்பதுபோன்று இருந்தது. நடந்து நடந்து நீண்ட தூரம் வந்துவிட்டேன். உடலின் சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போன்ற உணர்வு. கால்கள் வலுவிழந்து தளர்ந்துவிட்டன. எங்காவது இருக்க வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பக்கவாட்டு நடைபாதையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுமி என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் அவர்களுக்குக் கை காட்டினேன்.

“அங்கிள் எங்களுடன் விளையாட வாங்க” ஹிந்தியில் அழைத்தாள் அந்த குட்டிச்சிறுமி.

“குட்டிம்மா. அங்கிள் களைத்துவிட்டேன். இன்னுமொரு நாள் வருகின்றேன்” என்றேன்.

“குட்டிம்மா நஹி, மை நேம் இஸ் துர்க்கா.” என்றாள்.

“ஓகே துர்க்காம்மா”

‘துர்க்காம்மா…’ என்று திருப்பிச் சொன்னவள் ஏன் என்பதுபோன்று நிமிர்ந்து பார்த்தாள்.

உன்னைப் பார்க்க எனது அம்மாவின் ஞாபகம் வருகின்றது, என்று கூறியபடி படியோரமாக அமர்ந்தேன்.

“அங்கிள் வாட்சிங்” என்று கைகளைத் தட்டி சிரித்தவள் மீண்டும் விளையாடத் தொடங்கினாள். பந்தை வைத்து தனது இரண்டு கைகளையும் குழாய் நீரில் நீர் அருந்தக் குவிப்பது போன்று குவித்து உடம்பை முன்னோக்கி வளைத்து அந்த ரப்பர் பந்தை சிறுவனை நோக்கி எறிந்தாள். சிறுவன் இலகுவாக அதைப் பிடித்தான். அவளால் பிடிக்க முடியாதவாறு சாய்வாக ஒற்றைக் கையால் வீசினான். பந்து சிறுமியைத் தாண்டிச் சென்று விழுந்து உருண்டது. சிறுமி முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. துள்ளி ஓடிப்போய் பந்தை எடுத்து வந்தாள். மீண்டும் தனது இரண்டு பிஞ்சுக் கைகளைக் குவித்து முன்னோக்கி வளைந்து பந்தை வீசினாள். சிறுவன் பிடித்தான். சிறுமி முதல்முறை வந்த திசையில் பந்து வரக்கூடும் என்று அத்திசையில் ஒரு கால் முன்வைத்து தனது கைகளை நீட்டியபடி நின்றாள். சிறுவன் அதற்கு எதிர்த்திசையில் சரித்து வீசினான். சிறுமியின் முகம் சுருங்கியது. தான் வீசுவது போன்று பந்தை நேராக வீசுமாறு சிறுவனை வேண்டினாள். ‘பந்தைப் பிடிப்பது உனது திறமையில் உள்ளது,’ என்று சிறுவன் பதிலளித்தான். மீண்டும் மீண்டும் அதே நாடகம் நடந்து கொண்டிருந்தது. சிறுமியைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. சிறுவனை ஒழுங்காக விளையாடுமாறு கடிந்து கொள்ளலாமா என்று சிந்தித்தேன். சிறுவர்களின் உலகத்தை வளர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியுமா? சிலவேளை இதுதான் அவர்களின் விளையாட்டாக இருக்கக்கூடும். தலையிடுவது நன்றாக இருக்காது. நான் அமைதியாக பார்த்தவாறிருந்தேன். இம்முறையும் சிறுவனின் பந்து சிறுமியைக் கடந்து சென்று விழுந்து உருண்டது. சிறுமியின் கண்களின் நீர் தளும்பி பளபளத்தது. சிறுமி தளர்வாக நடந்து சென்று பந்தை எடுத்து வந்தாள். கணப்பொழுதில் அவள் முகம் மாறியது. பந்தை அவள் வலது கையில் மட்டும் பற்றி இருந்தாள். சிறுவனின் திசையில் பந்தைச் சரித்து வீசினாள். சிறுவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். நான் படியில் இருந்து துள்ளி எழுந்தேன். ‘குட்டிம்மா பிறகு சந்திப்போம்…’ என்று கூறிவிட்டு விரைந்து நடந்தேன். மாலைச் சூரியன் சரியத் தொடங்கியிருந்தது.

6 comments

 1. வாழ்த்துக்கள்….மிகவும் சிறந்த சிறுகதை,வாழ்வின் யதார்த்தங்களோடு கலந்த கதை,மிகவும் சிறந்த எழுத்துநடை.”உங்களை மாதிரி தங்களைத் தாங்களே ஒழுக்கவாதிகள் என்று நினைக்கிறவங்கதான் மதவெறியங்களைவிட மோசமானவங்கள்.” ,”கிளிண்டனுக்கும் மோனிக்கா லுவின்ஸிக்கும் இடையிலான உறவைக்கூட அது முழுமையான செக்ஸ் இல்லை. ஆனபடியால் தப்பில்லை என்டும் வாதிட்டவங்கள்தானே” போன்ற சிறந்த சாட்டையடிவசனங்கள்…எழுத்தாளரிடமிருந்து இன்னும் பல கதைகள் மற்றும் நாவல்களை எதிர்பார்க்கிறோம்…விரைவில் பிரசுரம் ஆகும் என்று நம்புகிறோம்…ஆவலுடன் காத்திருக்கிறோம்…வாழ்த்துக்கள்…நன்றி ..

 2. யார் இவர்? இலங்கை தமிழரா?முற்போக்காளரா? இல்லை பழமைவாதியா?புரியவில்லை?ஆனால் ஆண்களின் உலகத்தில் ஒரு சிறு துளியை பதிவாக்கியுள்ளார்.இன்னும் தெளிவு தேவை.பறவாயில்லை!கவனிக்கப்பட வேண்டியவராக தென்படுகிறார்.இவரது வேறு கதைகள் உள்ளனவா?

  1. வருகைக்கும் இடுகைக்கும் நன்றிங்க. இதுவரை ஒரு கதைதான் எழுதியிருக்கார் என்று நினைக்கிறேன்:

   http://www.jeyamohan.in/?p=38249

   மேல்விவரங்கள் விசாரித்துச் சொல்கிறேன். நன்றி.

  2. //யார் இவர்? இலங்கை தமிழரா?முற்போக்காளரா? இல்லை பழமைவாதியா?புரியவில்லை//

   அவர் எழுதியது ஒரு புனைவு. அதைப் புனைவாக மட்டுமே பார்க்கலாம். அதைவிடுத்து புனைவை ஒருவருடைய கருத்தாக பார்த்து, அதை எழுத்தாளர் எப்படிப்பட்டவர் என்று யோசிப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்.

 3. இன்று தான் ஒரு நடுவ வட்டங்கள் வாசித்தேன். அற்புதமாக இருக்கிறது. பல சமூக நெருடல்களை, சிறு பக்கங்களில், எளிய நடைமுறைப் பேச்சில், அழகாக கூறியுள்ளார். வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.