அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை

– வெ. சுரேஷ் – 

சென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது!) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வெளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).

நம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது.

அவர் ஒன்றும் அவ்வளவு இலக்கியத்தரம் வாய்ந்த எழுத்தாளர் அல்ல என்று நம் பத்திரிக்கைகளும் எழுத்தாளர்களும் கருதியிருக்கலாம். இது ஓரளவு உண்மைதான் என்றாலும் நான் வாசித்த அவரது சில புத்தகங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.

நிச்சயமாக, “பாகிஸ்தான் போகும் ரயில்” என்று சமீபத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் அவரது கொண்டாடப்பட்ட இந்தியப் பிரிவினை குறித்த நாவல் அதில் ஒன்று. பீஷ்ம சஹானியின் தமஸ் நாவலுக்கு இணையாக வைக்கப்படும் அந்த நாவல், பிரிவினையின்போது பஞ்சாபில் நடந்த கோரச் சம்பவங்களைப் பேசும் நாவல். அச்சமயத்தில் அசாதாரண தீரத்துடன் செயல்பட்ட சாதாரண மக்களையும் காட்டும் ஒன்று.

ஆனால் இந்நாவலைவிட நான் அதிகமும் விரும்பியது நாவலா அனுபவக் கட்டுரையா அல்லது ஒரு வரலாற்று ஆராய்ச்சி நூலா என்று எளிதாக வகைப்படுத்த முடியாத அவரது Delhi என்ற படைப்புத்தான். இதில் நிகழ்காலமும் வரலாற்று காலமும் இணைந்த ஒரு மொழியாடலில் டெல்லியின் வரலாற்றை மிக மிக சுவாரசியமாகக் கூறுவார் சிங். ஏற்கெனவே ஆதவனின் காகித மலர்கள் மூலம் டெல்லியின் மீது உருவாகியிருந்த காதலை சிங்கின் டெல்லி நாவல் அதிகப்படுத்தியது. சிங்கின் இஸ்லாமியர்கள் மற்றும் முகலாய மன்னர்கள் மீதான பார்வை அவர்கள் குறித்த நம் மனதில் உருவாகியிருக்கும் பல தவறான முன்முடிவுகளை மாற்றும் தன்மை கொண்டது. மேலும், சிங்கின் டெல்லி மீதான நேசம் அருமையாக வெளிப்படும் நூல் டெல்லியை இந்த அளவுக்கு நேசிக்க அவருக்கு ஒரு தனிப்பட்ட காரணமும் உண்டு. புதுதில்லியின் உருவாக்கத்தில் சிங்கின் தந்தை சோபா சிங்குக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அக்காலத்தின் முக்கியமான பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் அவர். இஸ்லாமிய சூஃபி ஞானியான ஹஜ்ரத் நிசாமுத்தினின் வரலாறும் இதில் இடம் பெறுகிறது.

பஞ்சாபி மொழி பேசும் சீக்கியரானபோதும் உருது மொழியின்மீது அளப்பரிய நேசம் கொண்டவர் சிங். அவரது மிக அன்பிற்குரிய உருது கவிஞர் காலிப்பின் வாழ்க்கைச் சித்திரமும் உண்டு. பின்னர் நான் படித்த William Dalrympleன் மிகவும் மதிக்கப்படும் City of Djinns என்ற டெல்லி குறித்த ஆராய்ச்சி/ அனுபவக் குறிப்பு நூலுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத நூல் சிங்கினுடையது.

தான் வாழ்ந்த டெல்லி நகரின் மீது சிங் கொண்ட தீராக் காதல் அவரது Nature Watch என்ற புத்தகத்தில் இன்னமும் அழகாக வெளிப்படும். தில்லியின் ஒவ்வொரு மாதத்திலும் ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை உள்ள பருவ நிலை, காணப்படும் விலங்கினங்கள், அவற்றின் நடவடிக்கைகள், சிறு தாவரங்கள் முதல் பெருமரங்கள் வரை அனைத்தையும் கூர்மையாக அவதானித்து ஒவ்வொரு மாதமும் அவற்றில் காணப்படும் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்திருப்பார். தில்லியின் மிகக் கடுமையான கோடையின் முடிவின் இறுதியில் வரப்போகும் தென்மேற்கு பருவமழைக்கு கட்டியம் கூறும் பறவைகள், தாவரங்களில் உண்டாகும் சின்னஞ்சிறிய நுட்பமான மாற்றங்களை சிங் பதிவு செய்திருக்கும் முறை அலாதியானது. தமிழகத்து நகரங்களைக் குறித்து (குறிப்பாக கோவை குறித்து), யாராவது இப்படி ஒரு புத்தகம் எழுத மாட்டார்களா என்ற ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் மிக அருமையான புத்தகம் இது.

இதில் பருவநிலை மாற்றங்களை அவதானிப்பதில் அவருக்கு இருந்த தேர்ச்சியினைக் காட்டும் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் குறிப்பிட்ட ஒரு வருடம் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகவே டெல்லிக்கு வரும் என்று கூறியிருந்த சமயத்தில், சிங் தன் அனுபவ அறிவால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக டெல்லிக்கு வருகை தரும் The African Paradise Fly Catcher என்ற பறவையின் வருகையைக் கண்டுவிட்டு வானிலை மையத்தின் அறிவிப்புக்கு எதிராக பருவமழையின் வருகையை அனுமானித்து ஒரு பந்தயத்தில் வெல்லும் சம்பவம் அருமையானது.

அவரது அடுத்த முக்கியமான நூல் History of Sikhs என்ற சீக்கியர்களின் வரலாறு குறித்த நூல். முதலில் How the Sikhs Lost their Kingdom என்ற சிறு நூலாக எழுதப்பட்டு பின்னர் விரிவாக எழுதப்பட்டது என்று நினைவு. சிங் இந்த நூலே தனது வாழ்நாள் சாதனை என்றும் இதற்காகவே தான் வருங்காலத்தில் நினைவுகூரப்படுவார் என்றும் நம்பினார். பொதுவாக சீக்கியர்களைப் பற்றிய பொதுப்புத்தி தாண்டிய பெரிய, விரிவான மனச்சித்திரம் எதுவும் இல்லாத ஒரு தமிழ் மனத்திற்கு அவர்களைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலைத் தரக்கூடிய நூல் இது. ஆனால் சிங் எதிர்பார்த்தபடி வரவேற்பு பெற்றதா என்பதும் இன்னமும் படிக்கப்படிகிறதா என்பதும் சந்தேகமே.

தனக்கு மிகவும் நெருங்கிய மனிதர்களின் மரணங்கள் குறித்த அவரது புத்தகமான Death at My DoorStepsம் உணர்வுகளை ஆழமாய்ப் பேசும் ஒரு படைப்பு. இதில் ஒவ்வொரு பிரிவும் தன்னை பாதித்த விதத்தை காலிப்பின் கவிதை வரிகளின் துணை கொண்டு நெஞ்சைத் தொடும் வகையில் எழுதியிருந்தார் குஷ்வந்த் சிங். இந்தப் புத்தகத்தின் இறுதியில்தான் என்று நினைக்கிறேன், தன் காதலுக்குரிய மனைவியின் சுகவீனத்தைப் பற்றி எழுதிவிட்டு, அவர் தன்னைப் பிரியும் நாளோடு தன் எழுத்தும் நின்றுவிடும் என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் பழைய பழக்கங்களை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிவதில்லை அல்லவா? அதற்குப் பின்னும் அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை.

வண்ணமயமான அவரது வாழ்வில் எப்போதுமே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. மேலும் அவர் தன் அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாக சொன்னவர். அதனாலேயே அவரது சுயசரிதை நூலும் மிக சுவாரசியமாக அமைந்தது. தனிப்பட்ட வாழ்வின் சம்பவங்களை மட்டுமல்லாமல் பெரும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவர் என்ன நினைத்தாரென்பதை மிக வெளிப்படையாகச் சொல்கிறார். தன் இளவயதில் லண்டன் இந்தியா தூதரகத்தில் துணை அதிகாரியாகப் பணியாற்றும்போது நேருவுடன் சிறிது பழக்கம் ஏற்படுகிறது. அது அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும், பெரும் தலைவர்களை அருகிருந்து பார்க்கும்போது அவர்கள் மீதான மதிப்பு குறையவே செய்கிறது என்றும் நேருவை முன்வைத்து எழுதியிருக்கிறார்.

சர்ச்சைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர் எமர்ஜென்சியை ஆதரித்தது, பொற்கோவில் ராணுவ நடவடிக்கைக்க்கு எதிராக தன் பத்ம விருதுகளைத் திரும்ப கொடுத்தது போன்ற சம்பவங்கள் நிறையவே உண்டு. இந்த நூலுக்குப் பின்னும் சில புனைவுகளையும் சில கட்டுரை நூல்களையும் அவர் எழுதியிருந்தாலும்கூட அவரது கடைசி நல்ல படைப்பு அவரது சுயசரிதையே என்று நினைக்கிறேன். இதைப் படித்து முடிக்கும்போதும் சரி, பொதுவாகவே குஷ்வந்த் சிங் பற்றி நினைத்துக் கொள்ளும்போதும் சரி, தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசி எழுதி ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு பின் அந்தப் பிம்பத்தை நிலை நிறுத்துவதற்காகவே சிங் தன் வாழ்வை நடத்தினாரோ என்றே தோன்றும். அப்படியே இருந்தாலும்கூட என்னவொரு வண்ணமயமான, சுவாரசியமான வாழ்க்கை!

நிச்சயமாக இந்தியா ஒரு அசலான, துணிச்சலும் சுவாரசியமும்மிக்க ஒரு எழுத்தாளரை இழந்துவிட்டதுதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.