அந்த வருட சுதந்திர தின விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில் பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ் தேர்வு செய்து கொண்டிருந்தார். எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம் ஆடும் உமா, நாடகத்தில் நடிப்பவர்கள் என எப்போதும் போல் சிலர் இந்த வருடமும் பெயர் கொடுக்க, விருப்பமில்லாத வேறு சிலர் வழக்கம் போல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான நேரங்களில் பங்கு பெறுபவர்களின் இறுதி பட்டியல் தயாராகும்வரை மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தோடு தன் மீது கவனம் விழாதவாறு அமர்ந்திருந்தவன் வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்க, இம்முறையும் பிழைத்து விட்டோம் என்று தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போது ”இன்ட்ரவெல்ல ஸ்டாப் ரூமுக்கு வாடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராவ்.
ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவனிடம் ‘கண்ணன் ஒங்க தாத்தா பத்தி சொன்னான்டா’ என்று ஆரம்பித்தார். இவன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ‘ஆர்மில இருந்தார்ல?’ என்று கேட்டார். ‘எஸ் ஸார்’, என்றவனிடம், ‘ப்ரீடம் ஸ்ட்ரகுள்லகூட பார்டிசிபேட் பண்ணிருக்கார்ல’, என்று மீண்டும் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். ‘என்னடா, கண்ணன் அப்படித்தானே சொன்னான்’, என்றார் ராவ். .’இல்ல ஸார்…’ என்று முனகியவனிடம் ‘என்னடா இல்ல ஸார், அப்போ அவர் ப்ரீடம் பைட்டர் இல்லையா, கண்ணன் சும்மா சொன்னான்னா?’என்று கருணாகரன் ஸார் கேட்க, ‘அப்டி இல்ல ஸார்’ என்று இழுத்தான். ‘இந்த வருஷம் இன்டிபென்டென்ஸ் டே பங்க்ஷல யாராவது ப்ரீடம் பைட்டர சீப் கெஸ்ட்டா போடலாம்னு ஐடியா இருக்கு’ என்ற ராவிடம், ‘தாத்தா பேசுவாரான்னு தெரியாது ஸார்,’ என்று முனகினான். ‘என்னடா அலட்ற?’ என்று கருணாகரன் ஸார் அடிப்பதுபோல் போலியாக கையோங்கியபடி வந்தார். ‘ஸார், அப்டிலாம் இல்ல ஸார்…” என்று அவன் மீண்டும் முனகவும், ‘சரி போடா’, என்று சலித்த குரலில் ராவ் சொன்னார்.
சென்ற மாதம் நடந்த சாதாரண நிகழ்வுதான். தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த அந்த பதினைந்து பதினாறு வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் சேர்க்கப்படாதது குறித்தும், அடுத்த வரவிருந்த பாகிஸ்தானுடனான தொடரிலாவது சேர்க்கப்படுவானா என்பது குறித்தும் மாலை வீட்டிற்கு வெளியே சந்துருவுடனும் கண்ணனுடனும் பேசிக்கொண்டிருந்தான். இரானி ட்ரோபியில் அவன் அடித்திருந்த சதத்தை முன்வைத்து இவனும் சந்துருவும் அவன் சேர்க்கப்பட வேண்டுமென்ற கட்சியில் இருந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை அந்தச் சிறுவனால் எதிர்கொள்ள முடியாதென்பது கண்ணனின் வாதம். ‘அவன் இண்டர்வ்யு வந்துதே, சண்டே அமர்நாத் கிரிக்கெட் டிவி ப்ரோக்ராம் பாத்திருக்கியா, வெஸ்ட் இண்டீஸ் பௌலர்ஸ பேஸ் பண்ண ரெடின்னு தைரியமா சொன்னான், பௌனஸ்னால பால் ஈஸியா பாட்க்கு வரும்னான்’.
‘பாக்கலாம்டா, பர்ஸ்ட் செலக்ட் ஆகட்டும், அவன பத்தி எழுதிருக்கறத படிச்சுட்டு எங்கப்பா ஒன்னோட மூணு நாலு வயசுதான் பெரியவன், எவ்வளவு அச்சீவ் பண்றான் பாருங்கறார்’, என்றான் கண்ணன். அவனுடைய தந்தை மூவருடைய க்ளாஸ் டீச்சராகவும் இருப்பதால், அவன் முன் அவர் குறித்த விமர்சனங்கள் குறித்து ஜாக்கிரதையாக, அவருடைய பட்டப் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்துதான், இருப்பார்கள். எனவே பொத்தாம்பொதுவாக கண்ணனுக்கு ஆசுவாசம் அளிக்குமாறு பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த இவன் தாத்தா, ‘கோந்தே உள்ள போய் பேசு, பனியாருக்கு பாரு, இல்லன்னா மப்ளர் கட்டிக்கோ,’ என்று சொல்லியபடி இவன் தோளைத் தொட்டு அணைக்கவும், அவன் விலகி உள்ளூர நெளிந்தான். இவனுடைய அசௌகர்யத்தை கவனித்த கண்ணன், ‘என்னடா கோந்தேங்கராறு, நைட் சாப்பாடு தாத்தாதான் வூட்டி உடுவராடா ‘ என்று கிண்டலாகக் கேட்கவும், ‘இவங்க பாட்டி இவன கூப்டறது உனக்கு தெரியாதுல்ல, அது இத விட சூப்பராருக்கும், என்னடா சொல்லட்டுமாடா,’ என்று ராகத்துடன் ‘கிக்.. கி… கி ..’ என்று அப்பெயரைச் சொல்ல ஆரம்பித்த சந்துருவை, ‘சும்மாருங்கடா, உள்ள போலாம்’ என்று இடைமறித்து அழைத்துச் சென்றான்.
‘இந்த தாத்தாதான ஆர்மில இருந்தார்னு சொன்ன?’ என்று கண்ணன் இவனிடம் கேட்டான். முழங்கை வரை நீளும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, இன்னும் ஆக்கிரமிக்க மிகக் குறைவான இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்த வழுக்கை, மழிக்கப்பட்ட மீசை, அகன்ற நெற்றியில் விபூதிப் பட்டை, முகத்தை நிறைத்திருக்கும் மென்மை எல்லாமே இவனுக்கேகூட அவ்வப்போது அந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆமாண்டா தோ வரேன் இரு,’ என்றவன், உள்ளறைக்குச் சென்று தாத்தா ஊரில் தன் வீட்டில் வைத்திருக்காமல் இவர்கள் வீட்டில் ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்த பதக்கங்களை எடுத்து வந்தான். அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், ‘என்னடா இந்த மெடல் வித்தியாசமா இருக்கு,’ என்று சிவப்பு வெள்ளை நீல நிறக் கலவையில் சிலுவை வடிவில் நெய்யப்பட்ட துணி பதிக்கப்பட்டிருந்த பதக்கத்தைப் பற்றி கேட்க, இவன் அவசரமாக, ‘தாத்தா ஆர்மில சேர்றதுக்கு முன்னாடி ப்ரீடம் ஸ்ட்ரகிள்ல பார்டிசிபேட் பண்ணிருக்கார்டா’ என்று பொய் சொல்லி விட்டான்.
இவன் தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்ததும், உலகப் போரின்போது அவர் மத்திய கிழக்கின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டதும், பின் சுதந்திர இந்திய ராணுவத்தில் பணியாற்றி கேப்டனாக ஓய்வு பெற்றதும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் பற்றிய சிறு குறிப்புடன் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்திய பூந்தளிர் இதழில் பார்த்ததிலிருந்து அது குறித்த ஒரு சிறிய ஏக்கம் மட்டும் உருவாகி இருந்தது. அதனால்தான் இவன் அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் கண்ணன் தொடர்ந்து கேட்ட கேள்விகளை சமாளிப்பது பெரும் பாடாகி விட்டது. அவன்தான் தன் தந்தையிடம் உளறி வைத்திருக்க வேண்டும்.
தப்பித்த உணர்வோடு வெளியே வந்து தண்ணீர் குடிக்கும்போது இடைவேளை முடிவிற்கான மணி அடித்தது. இந்த வகுப்பு அடிக்க அஞ்சாத மார்கரெட் மிஸ்ஸுடையது என்பதால் வேகமாக நடக்க ஆரம்பித்தவன், வழியில் பெண் ஆசிரியர்களின் அறையில் இருந்து திருத்தப்பட்ட ரெகார்ட் நோட்டுக்களுடன் வந்து கொண்டிருந்த உமாவை எப்போதும் போல் கள்ளப் பார்வை பார்த்தவன் அவள் பார்த்ததும் தலையை திருப்பி கடந்து செல்ல முயன்றான்.
‘ஒங்க தாத்தா ப்ரீடம் பைட்டரா?’ இவனுடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை மற்றவர்கள் மூலமாக பெற்று பார்வையிடும், ஆனால் இதுவரை நேரில் ஒரு வார்த்தைகூட இவனிடம் பேசியிராத உமா இப்போது இவனிடம் வலிய வந்து பேசுகிறாள். மையமாக தலையை ஆட்டி வைத்தான்.
‘அவர் பங்க்ஷனுக்கு வருவாரா’
‘தெரியல, சாருக்கு இப்போ வேற ஐடியா இருக்குன்னு நெனக்கறேன்’
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏதாவது பேசலாம் என்று திரும்பியவன் கண்ணில் பள்ளி மேடையின் முன் இருந்த கொடிக்கம்பம் கண்ணில்பட, எதுவும் சொல்லாமல் மௌனமாக நடந்த வகுப்பை நெருங்கவும் சற்று பின்தங்கினான். உமா வகுப்பறைக்குள் போனபின் கொஞ்சம் பிந்திச் சென்று, “ஸார் பாக்கச் சொல்லிருந்தார்”, என்று சொல்லியதை சற்று சந்தேகத்தோடுதான் மிஸ் ஏற்றுக்கொண்டார். தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான். ‘என்ன தம்பி பின்னாடியே வர’, ‘ப்ராடு ஒண்ணாத்தான் வந்த்ருப்பான், ஓட்டுவோம்னு தனியா வந்தமாறி வரான்,’ போன்ற சீண்டல்களை எப்போதும் போல் உள்ளூர ரசிக்க முடியவில்லை.
ராவ் இவன் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிப்பதையும் அவருக்கு இவன் வீடு தெரியுமென்பதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பி விட்டதாக எண்ணியது தவறு. அடுத்த நாளான சனிக்கிழமை காலை பத்து மணி அளவில், ‘கோந்தே, உன் க்ளாஸ் ஸார் வந்திருக்கார்டா,’ என தாத்தாவின் குரல் கேட்டவுடனேயே எந்த ஸார் என்று அவர் சொல்லாமலேயே புரிந்தது. தயங்கியபடி வெளியே வந்து எதுவும் சொல்லாமல் நின்றான். அதற்குள் உள்ளே வந்தமர்ந்திருந்த ராவ் ‘உங்களத்தான் பாக்க வந்தேன் ஸார்,’ என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ‘இவன் எதாவது சொன்னானா’ என்று இவனைச் சுட்டி கேட்டார். தாத்தா எதுவும் புரியாமல் இவனைப் பார்க்க, ‘ பிரச்சனைலாம் ஒண்ணுல ஸார், நெக்ஸ்ட் சாடர்டே ஈவனிங் இண்டிபென்டென்ஸ் டே ப்ரோக்ராம்ஸ் வச்சிருக்கோம், அதுக்கு உங்கள மாதிரி ஒருத்தர் சீப் கெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படறோம், இவன் பிரெண்ட் கண்ணன்தான் உங்களைப் பத்தி சொன்னான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘என்ன கோந்தே’ என்று இவனிடம் கேட்டவருக்கு, ‘அதான், ஆர்மில இருந்திருக்கீங்க, நம்ம ப்ரீடம் ஸ்ட்ரக்குள்ல வேற கலந்துட்ட்ரிக்கீங்க, இதபத்திலாம் கண்ணன்ட்ட சொல்லிருக்கான்’ என்று ராவே பதிலளித்தார். இவன் இருவரிடமிருந்தும் இருந்து பார்வையை விலக்கி தலையை குனிந்து கொண்டான்.
‘இவன்ட்ட சொல்லி வுடுங்க ஸார், இன்னிக்குள்ள சொன்னீங்கன்னா நாங்க ப்ளான் பண்ண வசதியா இருக்கும்’ என்று ராவ் கிளம்பியதும் இவனும் வெளியே ஓடி மதிய உணவிற்குதான் வந்தான். வீட்டுப்பாடம் செய்வதாக மாலை வரை யாருடனும் பேசாமல் ஓட்டினான். மாலை நடைக்கு இவனும் வருகிறானா என்று கேட்ட தாத்தா, வீட்டுப்பாடம் இன்னும் பாக்கி உள்ளது என்று கூறியவனிடம், ‘ஸார்ட்ட நான் வரேன்னு சொல்லிட்றையா கோந்தே’ சென்று சொல்லிச் சென்றார். இரவுணவின்போது ‘என்னடா தாத்தா பத்தி ஸ்கூல்ல பெரிசா சொல்லி வெச்சுருக்க’ என்ற அம்மாவிடம், ‘தாத்தாதானே அவனுக்கு ரொம்ப இஷ்டம்,’ என்றார் தாத்தி. ‘தாத்தா ஆர்மில இருந்தத பத்திதாம்மா பேசிட்டிருந்தேன், கண்ணன் அவங்கப்பாட்ட ஏதோ சொல்லிட்டான் போலிருக்கு,’ என்று சொல்லிவிட்டு தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவர் இவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். ‘இட்ஸ் ஆக்ட்சுயலி எ குட் ஐடியா, பசங்களுக்கு ஆர்மி பத்தி தெரியணும். நீ பிரிட்டிஷ் ஆர்மி எக்ஸ்பீரியென்ஸ் பத்திகூட சொல்லலாம்லபா’ என்று தாத்தாவிடம் அப்பா சொல்ல, இருவரும் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்.
ஊருக்குச் செல்லும்போது கோவிலுக்கு அழைத்துச் சென்று இவன் அடம் பிடித்ததால் கோவில் யானைக்கு ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொடுத்த, கணபதி ஹோட்டலில் இட்லியும் வடையும் வாங்கிக் கொடுத்த, இவனுக்குப் மிகவும் பிடித்தமான ‘ஆக்ஷன்’ நடிகர் மூன்று வேடங்களில் -அதிலும் காவல்துறை அதிகாரியாக மிக ஆக்ரோஷமாக- நடித்து வெளிவந்த அதிரடி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இவனுடைய பிடிவாதத்தால் அந்த வயதிலும் அவ்வளவு கூட்டத்தில் சென்று சிக்கி, போலீஸ்காரரின் தடியடியையும் தாண்டி , ‘ டிக்கெட் கெடச்சாச்சு கோந்தே’ என்று சிரித்தபடி வெளியில் வந்த தாத்தா இவன் சொல்லிய பொய்யை வெளிப்படுத்தாதது இவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றாலும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத மாலை வேளையொன்றில் ‘என்ன பேசப் போற தாத்தா,’ என்று கேட்டவனிடம் ‘பாத்துக்கலாம் கோந்தே ‘என்றவர் பின், ‘கோந்தே… உங்க ஸார் நல்லா பீடா போடுவாரா’ என்று கேட்டார். ‘ஆமா தாத்தா, வெத்தல பாக் பான் பராக்க்னு அவர பசங்க கூப்டுவாங்க,’ என்று இவன் சொல்லவும் சிரித்தவர், மற்ற ஆசிரியர்களுக்கு இவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர்கள் குறித்து கேட்டுக்கொண்டார்.
விழா நாள் வரை இடைப்பட்ட பத்து பதினைந்து நாட்களை தாத்தா ஸ்கூலுக்கு வருவது பற்றி எதுவும் பேசாமலே ஒருவாறு கழித்தான். இப்போதெல்லாம் மாலை நடைக்கு இவனும் வருகிறானா என தாத்தா கேட்பதில்லை. இவனுக்கு ‘புக் கிரிக்கெட்டில்’, ‘முதுகு பங்க்சரில்’ ஆர்வம் குறைந்தது. வகுப்பில் உமாவைக் கள்ளத்தனமாக பார்க்கத் தோன்றவில்லை. தமிழ் ஐயாவிடம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் அடி வாங்காமல் இருந்தவனை ‘என்னடா திருந்திட்டியா’என்று சந்துரு கிண்டல் செய்தான்.
பதின்மூன்றாம் தேதி காலை உணவை முழுதும் சாப்பிடாமலேயே எழுந்தவனைப் பார்த்து ‘என்னமோ இவன் சீப் கெஸ்ட்டா போற மாதிரி டென்ஷனா இருக்கான்,’ என்று சொன்னார் அம்மா. இந்த மாதிரியான விழா நாட்களில் ஒன்றிரண்டு வகுப்புக்கள் நடக்காது என்பதால் மதியத்திலிருந்து வகுப்பில் பரவசமான சூழல். ‘டேய் கொஞ்சதான் சந்தோஷமா இரேன், என்னமோ நீ ஸ்டேஜ்ல பேசப்போற மாதரி இருக்க, என்னாச்சு ஒனக்கு’ என்று கேட்டான் சந்துரு. மதியம் இரண்டாவது பீரியட் நடந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களை அமர வைப்பதற்கான அழைப்பு வர, எங்கும் ஒரே கூச்சல். மாணவர்கள் மேடையரங்கின் முன்னே இருந்த மைதானத்தில் குழுமி அமர வைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தடியில் வெளியேறி விடலாம் என்றால் கேட் பூட்டப்பட்டிருந்தது. தாத்தா வந்திருப்பாரா என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனை ராவ் தேடுகிறார் என்று இவன் வகுப்பு மாணவனொருவன் சொல்ல, மேடையின் பின்புறத்திற்கு சென்றான் . ‘தாத்தாவா பாத்துக்காம என்னடா அங்க ஒக்காந்திருக்க’ என்றார் ராவ்.
மேடையின் பின்புறம்தான் தலைமையாசிரியர் அறை. தாத்தா வந்தவுடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு ப்ரதருடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த வகுப்பறைகளில் வழக்கம் போல் நேருவும், பாரதியும் காணக் கிடைத்தார்கள். சாதாரண பள்ளிச் சீருடையில் மிக அழகாக தெரியும் உமா, மலையாள பாணி சிவப்பு வெள்ளை உடை மற்றும் கொண்டையுடன் -பல மாநில உடைகளை அணிந்த பெண்கள் நடனத்தின் அங்கமாக- பார்ப்பதற்குச் சகிக்காமல் வெளியே நின்றிருந்தாள். இவனைக் கண்டதும், ‘தாத்தா வந்துட்டாரா?’ என்று அருகில் வந்து கேட்டாள்.
‘வெள்ளாவி ரூம்ல,’ என்றதும் எழுந்த சிரிப்பை மறைத்தபடி அறையினுள்ளே எட்டி பார்த்தவள், ‘ஒன்ன மாதிரியே இருக்கார்’. என்றாள்
‘இல்ல நான்ல அவர மாதரி இருக்கேன்’ என்ற இவன் சொன்னதற்கு ‘அப்போ உனக்கும் அவ்ளோ வயசாயிடுச்சுங்கறியா’ என்று மீண்டும் சிரித்தபடி பதிலளித்தவள், ‘பங்க்ஷன் முடிஞ்சதும் தாத்தாட்ட பேசப்போறேன்’ என்று கேட்டு இவனுடைய சந்தோஷத்தை வடியச் செய்தாள். உரையாடலை நீட்டிக்கும் மனநிலை போனது. அவள் மீண்டும் உள்ளே செல்வதை ஆற்றாமையுடன் பார்த்தவன் தலைமையாசிரியர் அறை அருகே கொஞ்ச நேரம் நின்றிருந்தான். தாத்தாவும் வெள்ளாவியும் சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பதை அதற்கு மேல் பார்க்க முடியாது திரும்பி வந்து நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.
விழா நிகழ்வுகளின்போது அவை குறித்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் வழக்கமான விமர்சனங்களில் இவனுடைய பங்களிப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்தது. நிகழ்ச்சிகள் முடிந்து, பரிசுகள் வழங்கியபின் தன்னுடைய அனுபவங்கள் என்பதாக இல்லாமல் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற வழமையான, ஆனால் சுருக்கமான உரையை நிகழ்த்தினார் தாத்தா.
எல்லாம் முடிந்து அனைவரும் கலைய ஆரம்பிக்க, இவன் காருக்காக தாத்தாவுடன் காத்திருந்தான். ‘ஒங்கள மாதரி ஒர்த்தர் வந்தது பசங்களுக்கு ப்ளெஸ்ஸிங் மாதிரி’ என்று உபசாரமாய் ராவ் சொன்னது அசூயையாக இருந்தது. வேறெங்கோ பார்வையை திருப்பியவன் தாத்தா எதுவும் பதில் சொல்லாததால் அவரை நோக்கினான். அவர் கொடிக்கம்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவன் வகுப்பு மாணவர்கள் சிலர் அவருடன் பேசும் ஆவலில் அருகில் வந்தார்கள். உமா இல்லை, உடை மாற்றிக் கொண்டிருப்பாளாக இருக்கும், அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான். வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, பொதுப்படையான சில பேச்சுக்கள். சுதந்திர போராட்டம் பற்றிய கேள்விகளை லாகவமாக தவிர்த்த தாத்தா பசங்களின் மத்தியில் சற்றே உற்சாகமாகிவிட்டது போலிருந்தது. ‘தாத்தா, உங்க சொந்த ஊர் எது?’ என்று யாரோ கேட்க, ‘பழுவூர்’ என்றவரிடம் ‘ஒங்க வீட்ல நீங்க சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலையா’ என்று இன்னொரு கேள்வி. சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்த தாத்தா ஏதோ சொல்ல ஆரம்பிக்க கார் தயாராக இருப்பதாக ராவ் வந்து சொன்னதும் தப்பித்தால் போதும் என்று தாத்தாவுடன் கிளம்பினான்.
வீட்டிற்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை. விழா பற்றி தாத்திக்கு தாத்தா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். பின் தன் வழக்கமான மாலை நேர நடைக்கு தாத்தா கிளம்பினார். அன்றைய நிகழ்வுகளை மனதினுள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே சென்று தாத்தியிடம், ‘தாத்தாவும் பழுவூர், ஓன் ஊர்தானா தாத்தி’ என்று கேட்க, ‘ஆமா, அடுத்த தெருதான் ‘ என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தி விட்டார். வேலை முடிந்து முதலில் வந்த அம்மாவிற்கும் பின் அப்பாவிற்கும் மீண்டும் விழா பற்றி விவரிக்கச் செய்து, ‘அத வுட்டுட்டியே’ என இவன் பேச்சுவாக்கில் தவற விடும் விஷயங்களை நினைவூட்டியபடி தாத்தியும் இவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து போர்ஷனின் பின்புற சுவற்றின் மீது அமர்ந்து காலிமனையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருள் சூழ ஆரம்பிப்பதை கவனித்தபடி இருந்தவன் வெளியே செல்ல எழுந்தான். வீட்டின் இறுதியில் உள்ள அவர்களின் போர்ஷனில் இருந்து வெளியே வர இருள் நிறைந்த சந்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதை இப்போது பொருட்படுத்தாமல் ஓடிக் கடந்து தெருவிற்கு வந்தான்.
முதலில் நாடார் கடைக்குச் சென்று, ‘தாத்தா வந்தாரா நாடார்?’ என்று கேட்க, ‘பழம் வாங்கிட்டு இப்பதான் மேன் கெளம்பினாரு, என்ன மேன் தாத்தாவோட இப்பெல்லாம் வர்ரதுல்ல, ரொம்ப பிஸியோ?’ என்று சொன்ன நாடாரிடம், ‘அதெல்லாம்ல, வரேன் நாடார்,’ என்று கிளம்பினான். தாத்தா கோவில் வழியாக சுற்றுப் பாதையில் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்து ராமர் கோவில் மேட்டின் மீது ஏறி வலதுபுறம் திரும்பி கோவில் குளத்தெரு முனையில் நின்று கவனித்தான். விளக்குகள் இல்லாத, மரங்கள் அடர்ந்திருந்த இடம். இவன் நின்றிருந்த தெருமுனையில் இருந்த வெளிச்சத்தில் குளக்கரை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மங்கலாகத் தெரிந்தார்கள். சற்றே கூன் போட்டிருந்த, கையில் சிறு பை வைத்திருந்தது போலிருந்த உருவத்தை கண்டு கொண்டவன், இருளினுள் நுழைந்து அதன் அருகே சென்றான்.
சிதிலமடைந்திருந்த அந்த வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சேட்டின் அருகில் வழக்கம் போல் வாழைப்பழங்களை வைத்துக் கொண்டிருந்தவர் யாரோ அருகில் வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். இருளுக்கு இவன் கண்கள் பழக, தாத்தாவை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பின் ‘தாங்க்ஸ், ஸாரி தாத்தா,’ என்று இவன் சொல்லவும் தோளில் கைவைத்து அழுத்தினார். ஒரு பக்கம் சலனமில்லாத குளம், மறு புறம் நீண்ட விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆலமரம் என வழக்கமாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் இடத்தை இயல்பாக கடந்தான். சின்ன மேடு ஏறி இறங்கி தெருவுக்குள் நுழைந்தார்கள். விளக்குகளின் ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டும் குறுகியும் ஒன்றியும் பிரிந்தும் பின்தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தாத்தாவின் கையை தன்னிச்சையாக பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும். வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
Classic