அவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் – ஸிந்துஜா

ஸிந்துஜா

கிளினிக்கிலிருந்து திரும்பி வரும்போதே லேட்டாகி விட்டது. மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு டாக்டர் சோமநாதன் ஹால் சோஃபாவில் அமர்ந்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவர் எழுந்து சென்று கதவைத் திறந்தார். சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த தங்கம்மா “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். அலங்கரித்து விட்ட பூஜை அறை மாதிரி பளிச்சென்று இருந்தாள்.

அவள் கண்கள் வீட்டைச் சுற்றுவதைப் பார்த்து அவர் “ரேவதி இப்பதான் சாப்பிட்டு விட்டுக் கை அலம்பப் போனாள்” என்றார். “உன்னைத்தான் நினைச்சிண்டிருந்தேன். எங்கே ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரலே?”

“அதை ஏன் கேக்கறேள்? புருஷனையும் பொண்டாட்டியையும் ஒரே இடத்திலே வேலைக்கு வச்சிண்டது தப்பாயிடுத்து. கார்த்தாலே லலிதாம்மா தெனைக்கும் வந்து வீடு பெருக்கி தொடச்சி பாத்திரம் தேய்ச்சு துணி ஒணத்தி எல்லா வேலையும் பண்ணி வச்சிட்டுப் போவா. சாயங்காலம் அவ புருஷன் மோகா வந்து சமையல் வேலை எல்லாம் பண்ணிட்டுப் போவான். மோகாவோட அக்கா பொண்ணுக்குக் கல்யாணம்னு ரெண்டும் லீவை வாங்கிண்டு கோரக்பூருக்குக் கிளம்பிப் போயுடுத்து. ரெண்டு நாளா நான்தான் வேலைக்காரி, நான்தான் சமையல்காரி. அவா வர ஒரு வாரம் ஆகும்” என்றாள் தங்கம்மா.

உள்ளேயிருந்து வந்த ரேவதி “அடக் கண்றாவியே!” என்று தங்கம்மாவின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டாள்.

“சரி, போகட்டும் போ. ஏதோ ஒரு வாரம் பத்து நாள் உனக்கும் எக்சர்சைஸ்னு ஒண்ணு இருந்தா நல்லதுதானே!” என்றார் சோமநாதன்.

தங்கம்மா அவரை நக்கலாகப் பார்த்தாள். “போன மாசம் ரெண்டு நாள் ரேவதி உடம்பு சரியில்லேன்னு படுத்துண்டப்போ நீங்க எக்சர்சைஸ் பண்ணினதைத்தான் நான் பார்த்தேனே !”

ரேவதி அவரைப் பார்த்து “இவ கிட்டே யாராவது வாயைக் கொடுப்பாளா?”என்று செல்லமாகத் தங்கம்மாவின் முதுகைத் தட்டினாள்

“எதுக்கு என்னை நினைச்சிண்டு இருந்ததா நான் நுழையறச்சே சொன்னேள்?” என்று தங்கம்மா கேட்டாள்.

“நேத்திக்கு சாயந்திரம் அபிஷேக் பச்சன் படம் போட்டான். உடனே உன் நினைப்பு வந்தது.”

“ஐயையோ , எப்போ?” என்று பதறிக் கொண்டே கேட்டாள் தங்கம்மா. “எந்த சேனல்லே?”

சோமநாதன் “ஸ்டார்லே” என்றார்.

தங்கம்மா ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டாள். பிறகு அவரைப் பார்த்து “இதானே வேண்டாங்கிறது” என்றாள்.

கணவனும் மனைவியும் அவளைப் பார்த்தார்கள்.

“நேத்திக்கிக் காலம்பற ஃபர்ஸ்ட் கிராஸ்லேந்து பத்தொம்பதாவது கிராஸ் வரைக்கும் ஹோல் ஆஃப் மல்லேஸ்வரத்துக்கே கரண்ட் இல்லாம இருந்து இன்னிக்கிக் கார்த்தாலேதான் ஆறு மணிக்கு வந்தது. அங்கிளுக்கு மட்டும் தனியா யாரோ வந்து அபிஷேக் பச்சன் படம் போட்டுக் காட்டியிருக்கா இல்லே?” என்று தங்கம்மா ரேவதியைப் பார்த்தாள்.

“உன்னைச் சீண்டாட்டா இந்த மனுஷனுக்குப் பொழுதே போகாது” என்று ரேவதி சோமநாதனைப் பார்த்துச் சிரித்தாள்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் ரேவதிக்குத் தங்கம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. சோமநாதனும் ரேவதியும் சொக்கலிங்கம் வீட்டுக் கிருகப் பிரவேசத்துக்குப் போயிருந்தார்கள். சோமநாதன் சொக்கலிங்கத்துக்குக் குடும்ப வைத்தியராகப் பத்து வருஷப் பழக்கம். அந்த விசேஷத்துக்கு வந்திருந்த தங்கம்மாவை சொக்கலிங்கத்தின் மனைவி சிவகாமி
ரேவதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தங்கம்மாவின் கணவர் தனது கம்பனியின் வக்கீல் என்றும் அவர் மும்பை போயிருப்பதால் விசேஷத்துக்கு வரவில்லை என்றும் சோமநாதனிடம் சொக்கலிங்கம் சொன்னார். விசேஷத்துக்கு மறுநாளே தங்கம்மா ரேவதியைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்.

“நாங்க மல்லேஸ்வரம் வந்து ஒரு வாரம்தான் ஆறது” என்றாள் தங்கம்மா ரேவதியிடம் அன்று.

“அதுக்கு மின்னே?”

“மதிக்கரையிலே இருந்தோம். ஏழெட்டு வருஷமா ஒரே வீட்டிலே இருந்தோம்னுதான் பேரு. மூணு பெட்ரூம். வீட்டுக்காரன் வருஷா வருஷம் வாடகையை கண்மண் தெரியாம ஏத்திடுவான். அங்கே
பக்கத்திலேயே இவர் ஆபீஸ் போட்டிருந்தாரேன்னு சகிச்சிண்டு இருந்தோம். இப்ப ஆறு மாசத்துக்கு மின்னாலே அவன் காலி பண்ணிக் கொடுங்கோன்னு நச்சரிக்க ஆரமிச்சிட்டான். நாமென்ன பந்திக்கு இல்லாத வாழக்காயா பந்தல்லே கட்டித் தொங்க விடறதுக்கு? மல்லேஸ்வரத்திலே வீடு பாக்க ஆரம்பிச்சோம். இங்கே பதினேழாவது கிராஸ்லே ரெண்டு பெட்ரூம் தான் கிடைச்சதுன்னு வாங்கிட்டார். வாசல், பெட்ரூம்ஸ், கிச்சன்னு எல்லாம் தலை குனிஞ்சு அடக்கமா இருன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி கட்டியிருக்கான். கைக்கெட்றாப்லே பரண் பண்ணி வச்சிருக்கான். மின்னே இருந்த வீட்டிலே அதெல்லாம் உசர உசரமா, நீள நீளமா இருக்கும். எந்த சாமானை எடுக்கணும்னாலும் எட்டி எட்டி எடுக்கணும். இல்லாட்டி ஏணி வேணும். இது அதுக்கு நேர் மாறா வசதியா இருக்கு. வடக்குப் பார்த்த மச்சு வீடை விட தெக்குப் பார்த்த குச்சு வீடு நல்லதுன்னு வந்துட்டோம். எங்காத்துக்காரருக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்து” என்று சிரித்தாள்.

“உனக்கு?””

“எனக்கும் அங்க இருந்ததை விட இங்க இருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் தங்கம்மா.”அங்கே நாலு வார்த்தை தாய் பாஷையிலே பேச மாட்டமா, இல்லே கேக்க மாட்டமான்னு ஆயிடுத்து. வரவா போறவா கிட்டே ஒண்ணு இங்கிலீஷு, இல்லேன்னா இந்த ஊர் பாஷைதான் பேசணும். எனக்குக் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. அன்னமிடற கையை தூஷணை பண்ணக் கூடாதும்பா. மனசிலே இருக்கறதைச் சொன்னேன். அங்கே இருந்தப்போ நம்ம பாஷையைக் கேக்கறதுக்குன்னே மல்லேஸ்வரம் மார்க்கெட்டுக்கு வருவேன். எட்டாவது கிராஸ்லே ஷாப்பிங் பண்ணுவேன்.”

“இப்ப வீடு எந்த மெயின்லே?’

“பத்தாவது மெயின்லே. மின்னாலே கிரிக்கெட் ஹவுஸ்ன்னு இருந்து அதை இடிச்சிக் கட்டிருக்கால்லியா? அதுக்கு நாலு பில்டிங் தள்ளி. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி” என்றாள் தங்கம்மா.

“ஓ, அது அடுத்த தெருதான். வீட்டு விலையிலே எல்லாம் எப்பவும் நடக்கறதுதானே ! நாம வீட்டை விக்கறச்சே நாடே நாசமாப் போயிடுத்துன்னு சொல்லி அடிமாட்டு விலைக்குக் கேப்பான். நாம வாங்கறப்போ டிமாண்டு பிச்சிண்டு மானத்துக்குப் போயிடுத்தும்பான்” என்று சிரித்தாள் ரேவதி.

இருவரும் குறுகிய காலத்தில் நெருங்கி விட்டார்கள். நீங்கள் நீயாகி விட்டது. எல்லாம் வா, போ தான். சேர்ந்து மார்க்கெட்டுக்கு, புடவைக் கடைகளுக்கு, கோயில்களுக்கு, சினிமா, டிராமாக்களுக்குப் போய் வந்தார்கள். இந்த ஆறு மாதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாத நாள்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு மாறாக ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டவில்லை.

தனக்கு அபிஷேக் பச்சனை மிகவும் பிடிக்கும் என்று ரேவதியிடம் ஒரு நாள் தங்கம்மாள் சொன்னாள். அப்போது சோமநாதனும் அவர்களுடன் இருந்தார்.

“அவன் ஒட்டடைக் குச்சின்னா?” என்றார் சோமநாதன்.

“இருந்தா என்ன? அவனை என்ன நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனா? என்ன உயரம்? வாட் எ பெர்சனாலிட்டி?” என்று சிரித்தாள் தங்கம்மா. “எப்பவும் உடம்பை ட்ரிம்மா வச்சிண்டு…. அந்த உயரத்துக்கு இன்னொரு ஹீரோவை இந்தப் பக்கம் காட்ட முடியுமா?”

“நீ என்ன சொன்னாலும் அவன் நெட்டைக் கொக்குதான்” என்றார் சோமநாதன்.

“சும்மா என்னைச் சீண்டறதுக்கு சொல்லாதீங்கோ. ஆறு அடி. ரெண்டு அங்குலம். ஒரு தொப்பை, தொந்தி கிடையாது. இங்க அஞ்சறை அடி கூட இல்லாதவன் பெரிய ஹீரோன்னு சொல்லிண்டு உட்லண்ட்ஸ் ஷூஸ் வாங்கிப் போட்டுண்டு நாலு இஞ்ச் ஜாஸ்தி உயரமா காமிக்க ட்ரை பண்றான். உண்டா இல்லியா சொல்லுங்கோ அங்கிள்?”

“அடேயப்பா! விட்டா பெரிய ரசிகை மன்றமே வச்சிடுவே போல இருக்கே?” என்றாள் ரேவதி.

“நாளைக்கி ஓட்டீட்டிலே எங்க அபிஷேக்கோட புதுப் படம் லூடோ வரப் போறது. நெட்ஃப்ளிக்ஸ்காரன் அறுபது கோடி குடுத்து வாங்கியிருக்கானாம். நம்ம ஊர் ஆக்ஷன் ஹீரோக்கெல்லாம் அதுலே எத்தனை சைபர் இருக்குன்னு கூடத் தெரியாது. ஒரே ஒரு ஆள். அறுபது கோடி.”

“இதெல்லாம் சினிமாக்காரங்க விடற ரீல் தங்கம் ! ஒரு வாரம் போனா காத்தாடறது எல்லாப் படமுமே.”

“மத்தவா படத்துக்கு அப்படி இருக்கலாம். ஆனால் எங்க அபிஷேக் படம் எப்பவுமே சூப்பர்தான். வாவ். என்ன ஒரு மெஜெஸ்டிக் பெர்சனாலிட்டி!”

“சினி பிளிட்ஸ்லே படிச்சேன் “என்றார் சோமநாதன்.

“என்னன்னு?”

“கதாநாயகியா உங்க அபிஷேக்கோட ஒருத்தி நடிக்கணும்னா எப்பவும் அவ ஹை ஹீல்ஸ்லேதான் இருக்கணுமாம்.!”

தங்கம்மா காயமுற்றவள் போல ரேவதியைப் பார்த்தாள்..

“இதெல்லாம் பத்திரிகைக்காராளே விக்கணுமேன்னு ஏதாவது கற்பனை செஞ்சு போடுவா. கிசுகிசு எழுதுவா.நான் நம்பறதில்லே ” என்று சமாதானமாகச் சொன்னாள் ரேவதி. தொடர்ந்து “நம்ம ஊர் மன்மத ராஜாகூட தன்னோட நடிக்கற ஹீரோயின்லாம் தன்னை விட உயரமா இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடுவாராமே! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கணவனிடம் சொன்னாள்.

தங்கம்மா குபுக்கென்று சிரித்தாள்.

“நம்ம ஊர்னா அவ்வளவு இளப்பமா உனக்கு? சிரிப்பைப் பாரு !” என்றாள் ரேவதியும் சிரித்தபடி.

சோமநாதன் “தங்கம்! நீயும் அஞ்சே முக்கால் இல்லே அஞ்சு பத்து இருப்பியா?” என்றார்.

இரு பெண்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

அப்போது சோமநாதனின் கைபேசி ஒலித்தது.

“…………….”

“ஆமா, டாக்டர்தான் பேசறேன்.”

“………….”

“சரி, நான் ஒரு கால்மணியிலே அங்க வரேன். அவசரம்னுதானே போன் பண்ணினேள் ? இதிலே தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?” என்று போனை வைத்தார்.

“சாரி, அர்ஜண்டா மணிப்பால்லே கூப்பிடறா?” என்று எழுந்தார்.

“நானும் வந்து நாழியாயிடுத்து. கிளம்பறேன். நாளைக்கு நீங்களும் ரேவதியும் எங்காத்துக்கு வாங்களேன். எல்லாருமே சேந்து ஜாலியா சினிமா பாக்கலாம்” என்றாள் தங்கம்மா.

“அடடா, நாளைக்கு நாங்க மைசூர் போறோமே,.என் பெரியம்மா பேத்திக்குக் கல்யாணம்னு” என்றாள் ரேவதி. “ஊருக்குப் போயிட்டு வந்தப்பறம் வரோம்.”

ஆனால் அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையில் டாக்டருக்குத் தங்கம்மாவிடமிருந்து போன் வந்தது.

“டாக்டர், நீங்க இன்னும் கிளினிக்குக்கு கிளம்பலையே? நேத்தி மத்தியானத்திலேந்து இவருக்கு ஜொரம். டோலோ கொடுத்து சரியாயிடும்னு பாத்தேன். ஜொரம் எறங்கவே இல்லை. நான் இவரை அங்க ஆத்துக்குக் கூட்டிண்டு வந்து காமிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ எதுக்கு வரே? நான் கிளினிக் போற வழிதானே ? ஒரு பத்து நிமிஷத்திலே அங்கே வரேன். வீட்டு நம்பரும் அபார்ட்மெண்ட் பேரும் மட்டும் வாட்ஸப்பில் அனுப்பிடு” என்றார்.

அவர் தங்கம்மாவின் ஃப்ளாட்டை அடைந்த போது அவள்தான் கதவைத் திறந்தாள். “படுத்துண்டுதான் இருக்கார்” என்று பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அவள் கணவர் தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டிருந்தார். சோமநாதனைப் பார்த்ததும் படுக்கை
யிலிருந்து எழுந்திருக்க முயன்றார். சோமநாதனிடம் “உங்க பேர் எனக்குத் தெரியும். நான் லட்சுமணன்” என்றார்.

சோமநாதன் “எழுந்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமணன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவர் கையைப் பிடித்து நாடி பார்த்தபடி “குளிர்றதா?” என்று கேட்டார் சோமநாதன்..

“ஆமா. இப்ப பரவாயில்லே. ராத்திரி ரொம்ப குளிரினது. அவ்வளவு டோலோ போட்டுண்டும் வேர்க்கவே இல்லே.”

சோமநாதன் அவரை நாக்கை நீட்டச் சொன்னார். கண்களைச் சோதித்தார். ஸ்டெதெஸ்கோப்பை மார்பிலும் முதுகிலும் வைத்துப் பரிசோதித்தார். கை விரல்களை அமுக்கி “வலிக்கிறதா?” என்று கேட்டார். ஆமென்று லட்சுமணன் தலையை அசைத்தார்.

“பசி?” என்று கேட்ட போது தங்கம்மா “கஞ்சியும் ஆர்லிக்ஸும்தான் கொடுத்தேன்.வாயெல்லாம் கசக்கறதுன்னார்” என்றாள்.

“வைரல் ஃபீவர்தான். கவலைப்பட ஒண்ணும் இல்லே” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டு சோமநாதன் கிளம்பினார்.

“இருங்கோ, ஒரு நிமிஷம். முதல் தடவையா ஆத்துக்கு வந்திருக்கேள். காப்பி கொண்டு வரேன்” என்று அவர் மறுப்பதைக் கேட்காமல் தங்கம்மா உள்ளே சென்றாள்.

“ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுங்கோ. ஊர் பூரா இருமலும் காச்சலும்தான். சாயந்திரம் பசியெடுக்கும். ரசஞ் சாதமா கரைச்சு எடுத்துக்கோங்கோ” என்றார் சோமநாதன் லட்சுமணனிடம்.

அப்போது அறையின் மூலையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. லட்சுமணன் எழுந்து போய் அதை எடுத்தார்.

“எதுக்கு நீங்க எழுந்து நடக்கறேள் ? ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொல்லியபடியே சோமநாதன் அவரைப் பார்த்தார். லட்சுமணன் குட்டையாகவும் சற்றுக் குண்டாகவும் இருந்தார். நின்று கொண்டு அவர் பேசியதைப் பார்த்து ஐந்தடிக்கும் கீழேதான் அவர் உயரம் இருக்கும் என்று டாக்டர் நினைத்தார்.

One comment

  1. ஓர் உளவியல் கதையை வெகு எளிமையாகச் சொல்லியிருக்கிறார். ஸிந்துஜா.கணவனது உயரத்தை சொல்லும் போது.தங்கம்மாவின் மனஉயரத்தையும் உணர்த்திவிட்டார் ஸிந்துஜா வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.