வாக்கரிசி – சுஷில் குமார்

                                                    சுஷில் குமார்                             

வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும் கிட்டத்தட்ட பத்து குட்டிப் பன்றிகளும் என்னை நோக்கி வந்தன. வழக்கமாக இடைவேளை மணி அடிக்கும்போது பன்றிக் குட்டிகளுக்கு இலந்த வடையும் கல்கோனா மிட்டாயும் கொடுத்து அவை அவற்றை சப்பிக் கொண்டிருக்கும்போது குட்டிப் பன்றிகளின் வாலைப் பிடித்து விளையாடுவேன். அன்றும் கூட தாத்தா கொடுத்திருந்த இரண்டு ரூபாய்க்கு கல்கோனா வாங்கி வைத்திருந்தேன். அந்தப் பன்றிக் கூட்டம் என் சன்னல் அருகே வந்ததும் ஒரு மிட்டாயை எடுத்து சன்னல் வழி நீட்டினேன். திடீரென என் தலையின் பக்கவாட்டில் ஏதோ வந்து தாக்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தேன். முகம், தலையெங்கும் சாக்பீஸ் பொடி. என் ஆங்கில ஆசிரியர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். கண்களால் அவர் சைகை செய்ய அந்தக கரும்பலகைத் துடைப்பானை எடுத்துக் கொண்டு போய் அவரருகே நின்றேன்.

“என்ன டே வாய்பொளந்தான்! தாத்தாவுக்கு போன் பண்ணட்டா? எப்பிடி?”

நான் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றேன்.

“என்ன டே? கல்லுளிமங்கன் மாதி நிக்க? எதாம் கேட்டா ஒண்ணுந் தெரியாத்த அப்பாவி மாதி மொகத்த வச்சிருவான். செரியான சிமிளனாக்கும்.” என்று சொல்லியவாறு என் வலது காதை பிடித்துத் திருகினார். நான் அப்போதும் அசையாமல் நிற்க, என் தலையில் படிந்திருந்த சாக்பீஸ் பொடியை தட்டி விட்டவர், “போ, போ. ஒன் தாத்தாக்காக வுடுகேன், என்னா? ஒழுங்கா கிளாஸ கவனிக்கணும், கேட்டியா?” என்றார்.

“செரி சார்.” என்று நான் எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். பன்றிக் குட்டிகள் என் சன்னல் சுவரருகே படுத்துக் கிடந்தன. அவை பசியாகவிருக்கும். இந்த ஆங்கிலப் பாடவேளை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? பள்ளிக் கூடத்தின் பெயர் ‘மலையாளப் பள்ளிக்கூடம்’, ஆனால் மலையாளப் பாடம் கிடையாது. பின் ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்? ஒரு பன்றிக் குட்டியாக பிறந்திருந்தால் ஆங்கிலம் என்ன, மலையாளம் என்ன, எதுவும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்திருக்கலாம், என்ன, அந்த பீக்குண்டில் கிடந்து புரள வேண்டும். அதெப்படி அதைப் போய் சாப்பிட முடியும்?

“டேய் சரவணா. எந்திரி, இங்க வா.” என்று ஆசிரியரின் குரல் என் காதுகளுக்குள் இரைச்சலாய் வந்து விழுந்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்க்க, ஆசிரியரின் அருகே என் அப்பா நின்றுகொண்டிருந்தார். பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க எழுந்து நின்று ஆசிரியரின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.

“என்ன டே, பேந்தப் பேந்த முழிக்க? பைய எடுத்துட்டு வா.” என்று சொல்லிய ஆசிரியர் அப்பாவிடம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆசிரியரின் முன் சென்று நிற்க, அவர் என் தோளில் தட்டி, “செரி அண்ணாச்சி. கூட்டிட்டுப் போங்கோ. என்னத்தச் சொல்ல? ஒங்கப்பா எனக்கு ஆசானாக்கும். என்ன செய்ய? நல்ல வயசாயாச்சுல்லா? கெடைல கெடக்காமப் போறதுக்கும் குடுத்துதான் வைக்கணும். பொறவு தகவல் சொல்லி அனுப்புங்கோ.” என்றார். ஆசிரியரின் முகம் சிறிது சோகமாகியிருந்தது.

தாத்தாவிற்கு என்ன ஆயிருக்கும்? காலையில் காசு கொடுத்து அனுப்பும் போது நன்றாக இருமிக் கொண்டிருந்தாரே! சாயங்காலம் குமரிசாலைக் குளத்திற்குச் சென்று மீன் பிடிக்கலாமென்று சொல்லியிருந்தாரே!

“எப்பா, தாத்தாக்கு என்னாச்சிப்பா?”

“தாத்தா கீழ விழுந்துட்டா மக்கா.”

“எங்கப்பா விழுந்தா? ஆஸ்பத்திரிக்கி போகலியாப்பா?”

அப்பா பதில் சொல்லாமல் என்னை பின்னால் ஏற்றிவைத்து மிதிவண்டியை வேகமாக மிதிக்க ஆரம்பித்தார். என்னையறியாமல் அழுகை வந்தது. ஆச்சியும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் காலையில் எவ்வளவு  எழுப்பியும் எழுந்திருக்கவேயில்லை. தாத்தா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு அத்தைமார், மாமாமாரெல்லாம் நின்று சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் சிலர் என்னைப் பற்றி ஏதோ சொல்லி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டனர். அம்மாவும் அக்காவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தனர்.

நான் மெதுவாக தாத்தாவின் அறைக்குச் சென்றேன். தாத்தா தன் நார்க்கட்டிலில் படுத்திருந்தார். வாய் நன்றாகத் திறந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் போலிருந்தது. மார்பிற்குக் குறுக்காக கைகளை வைத்து வீட்டு உத்திரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, “தாத்தா, தாத்தா, எந்திரி.” என்றேன்.

தாத்தா மெல்ல மூச்சு விட்டார். அவரால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

“தாத்தா, ஒடம்பு நல்ல வலிக்கோ? நா கால அமுக்கி விடட்டா? நீ என்னத்துக்குப் போயி வழுக்கி விழுந்த? ஒரு எடத்துல சும்மா இருக்க மாட்டியா?”

தாத்தாவின் விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தன. நான் அவரது கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்து விரல்களை மெல்ல நீவி விட்டேன். ஒவ்வொன்றாக சொடக்கு விட மடக்கினேன். தாத்தாவின் கைகள் சிறிது குளிர்ச்சியாக இருந்தன.

அம்மா என்னருகே வந்து நின்றாள். ஒரு சிறிய தம்ளரை நீட்டி, “மக்ளே, தாத்தாக்கு கொஞ்சம் பால் குடு.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.

“தாத்தாக்குப் பால் புடிக்காதுல்லாம்மா?” என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.

“இப்ப பால் தான் குடுக்கணும் மக்ளே. டாக்டர் சொல்லிருக்காரு.”

திறந்திருந்த தாத்தாவின் வாயில் ஒரு மடக்கு பாலை விட்டேன். அது உள்ளிறங்காமல் வாயின் பக்கவாட்டில் வடிந்தது. முறுக்கிய வெள்ளை மீசையின் ஓரத்தில் பால் கசிந்து பனித்துளி போலத் தெரிந்தது. அம்மா தன் சேலைநுனியால் அதைத் துடைத்துவிட்டு வெளியே சென்றாள். நான் தாத்தாவின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டேன். வெளியே அப்பாவும் வேறு சிலரும் பேசுவது கேட்டது.

“சே, அருமாந்த மனுசன்லா? எப்பிடி ராஜா மாதி சுத்திட்டுக் கெடந்தாரு? ஒரு சொக்கேடும் கெடயாத?”

தாத்தா ராஜா மாதிரிதான் வாழ்ந்தார். ஊரில் என்ன நல்லது கெட்டது என்றாலும் தாத்தாவிடம்தான் வந்து நிற்பார்கள். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. தாத்தா பேசும்போது என் அப்பா அசைவற்று நிற்பதைப் பார்த்து நான் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அம்மாவோ அக்காவோ தாத்தா இருக்கும்போது தலையைக் குனிந்துகொண்டுதான் போவார்கள்.

“ஆமாண்ணே, அதுதான் ஒண்ணும் புரியமாட்டுக்கு. வழுக்கி விழுந்தா, அப்பிடியே மலச்சிப் பாத்தா. தூக்கிக் கொண்டு கட்டில்ல படுக்க வச்சப் பொறவும் கண்ணு ஒரு துளி அசையல. டாக்டர் ஒண்ணும் பண்ணாண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. மூச்சு மட்டுந்தான் இருக்கு.” என்ற அப்பாவின் குரலும் தழுதழுத்தது.

“செரி, பாப்பம், கொஞ்சம் கொஞ்சமா பால் விட்டுப் பாப்பம். மனசு நெறஞ்சி போகட்டும். என்ன, பேரன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டுப் போயிருந்தா நெறவா இருந்திருக்கும். எங்க பாத்தாலும் ரெண்டுவேரும் சோடியால்லா சுத்துவா! பின்ன, ஆச்சி போன பொறவு பொடியந்தான கூடவே கெடக்கான்.”

“பய தாத்தா நெஞ்சுலயேதான கெடப்பான். அவரு கத சொல்லி தட்டிக் குடுத்தாதான் அவனுக்கு ஒறக்கம்.”

எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நான் தாத்தாவின் மார்பில் சாய்ந்து உறங்கிவிட்டேன். அம்மா வந்து எழுப்பி, “மக்ளே, வா, சாப்டு, பசிக்கும்லா.” என்றாள்.

நான் வேண்டாமென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன். அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. மெல்ல தலையைத் தூக்கி தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். வாய் அதே போல திறந்திருந்தது. கண்கள் அசையாமல் நின்றன. மூச்சு மெல்ல மெல்ல என் முகத்தின் அடியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சென்ற வாரம் வாய்க்காலில் பிடித்த அட்டையைப் போல. அதெப்படி தொட்டவுடன் சுருண்டு விடுகிறது? தாத்தாவின் மூச்சும் கூட சுருண்டு போயிருக்குமோ? மணிக்கு ஒருமுறை யாராவது வந்து தாத்தாவிற்குப் பால் விட்டுச் சென்றனர். தாத்தாவும் தொடர்ந்து வடித்துக்கொண்டிருந்தார்.

“எண்ணே, இப்ப என்ன செய்ய? சாயங்காலம் வர இழுத்துட்டுன்னா பொறவு இன்னிக்கி காரியம் பண்ண முடியாதுல்லா?” என்று யாரோ கேட்க, இன்னொருவர், “ஒம்ம வாய மூடும் ஓய். அதுக்குள்ள ஒமக்கு காரியச் சாப்பாடு கேக்காக்கும்? ஒம்ம வாய்ல மொதல்ல வாக்கரிசியப் போடணும்.” என்றார்.

சித்தப்பா அப்பாவை தனியாக அழைத்துச் சென்று ஏதோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ஒரே சலசலப்பு.

“என்னத்த யோசிச்சிட்டுக் கெடக்கியோ? சட்டுன்னு ஆக வேண்டியதப் பாருங்கோ. மத்தவன் வந்தாதான் செரி ஆகும். எமகாதம்லா, சும்மாவா பேரு வந்து, வாக்கரிசிப் பிள்ளைன்னு.” என்று இருமினார் பக்கத்து வீட்டுத் தாத்தா.

“அது செரி. ஒமக்கு வரும்போ தெரியும் பாட்டா! ஆனாலும் ஒரு அதிசயந்தான், என்ன ஓய்? மனுசன் வந்து பக்கத்துல நின்னு ரெண்டு வார்த்த சொன்னாப் போறும். அர மணிக்குள்ள சோலி முடிஞ்சிரும். நம்ம கொமரிக் கெழவி எத்தன மாசமா இழுத்துட்டுக் கெடந்தா? பின்ன, செஞ்ச பாவம் அப்பிடி. நம்மாளு வந்துதான தீந்து போச்சி. அவ மவன் துடியாத் துடிச்சான. என்னா படமுங்கியோ? பின்ன, கொஞ்ச நஞ்ச சொத்தா என்ன? அவனே எளனிய கொடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்பான்.”

“கெழவிய விடும் ஓய். அந்த வடக்குத் தெரு பிள்ள தூக்கு போட்டால்லா? எத்தன நாளா இழுத்துட்டுக் கெடந்தா? ஒரு டாக்டரும் ஒண்ணும் பண்ண முடியலல்லா? வாக்கரிசிப் பிள்ள வந்து அந்தப் பிள்ள தலைல கைய வெச்சதுதான் உண்டும், பிள்ள மொகத்துல என்ன ஒரு திருப்தி, ஆத்மா அப்பதான சாந்தி அடஞ்சி. அந்த மனுசனுக்கு ஒரு தெய்வாம்சம் உண்டும், பாத்துக்கோரும்.”

“உள்ளது, உள்ளது. ஆமா, வாக்கரிசிப் பிள்ள ஊர்ல உண்டுமா ஓய்?”

“அவரு எங்க போகப் போறாரு? மனுசன் என்னா பவுசு காட்டிட்டுத் திரிஞ்சாரு? பெரிய பண்ணையாரு மாதி. பின்ன, எல்லாம் கவர்ன்மெண்டு சோலி உள்ள வரைக்கும் தான. ரிட்டயர்டு ஆன பொறவு கொளத்தாங்கர அரச மரந்தான் கெட. ஊர்ப்பாடு பேசதுக்கும் நல்லா ஆப்பமும் ரச வடையும் முழுங்கதுக்கும் கேக்கணுமா, என்ன?”

“அதச் சொல்லும். வக்கணையான ஆளாக்கும். அடியேந்திரத்துக்கு அவரு வந்து மொத எலைல சாப்ட்டாதான் நமக்கு சாப்பாடு. பின்ன, மேல இருக்கப்பட்டவாளுக்கு அப்பதான ஒரு நெறவு கெடைக்கும்?”

வாக்கரிசிப் பிள்ளை மாமா என் அம்மாவின் பெரியப்பா மகன். பெரும்பாலும் வெள்ளை வேட்டி மட்டும்தான். மேலுடம்பும் பெரிய தொப்பையுமாக தள்ளித் தள்ளி நடந்து செல்வார். கையில் எப்போதும் ஒரு வெற்றிலைப் பெட்டி. வெற்றிலையைக் குதப்பிக் குதப்பி அவர் பேசுவது பல சமயங்களில் எனக்குப் புரிவதேயில்லை. ஆனால், அவர் இருக்கும் கூட்டத்தில் எப்போதும் கேலியும், உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரில் எல்லா பெண்களும் அவருக்கு மைனியோ கொளுந்தியோ தான். ஆண்கள் எல்லோரும் சவத்துப்பயலோ, கிறுக்குப்பயலுக்குப் பொறந்த பயலோ தான்!

எப்போது என்னைப் பார்த்தாலும் “மருமவன, எப்ப வந்து எம்பொண்ணத் தூக்கிட்டுப் போகப் போறீரு?” என்று கேட்டுச் சிரிப்பார். நான் வெட்கப்பட்டு நிற்க, “என்ன ஓய் வெக்கம் ஒமக்கு? பொண்ணு எப்ப வேண்ணா ரெடி, கேட்டீரா? மீச வரட்டும், என்னா?” என்பார். மாமா பெண் என்னை விட பத்து வயதாவது பெரியவள்.

மாமா என்னிடம் மட்டுமல்ல, ஊரில் எல்லாச் சிறுவர்களிடமும் இதேபோலத்தான் கேட்பார். தன் வேட்டி மடிப்பில் எப்போதும் வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை எங்கள் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போடுவார். அப்படியே கட்டிப்பிடித்து ஆளுக்கொரு முத்தம். நாங்கள் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்க் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போது மிக வேடிக்கையாக இருக்கும். மாமா வருவதைப் பார்த்ததும் எதிரில் வரும் தாத்தாக்களும் ஆச்சிகளும் அப்படியே திரும்பி தங்கள் வீடுகளுக்கு விறுவிறுவென்று செல்வார்கள். முதலில் இது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், ஊர்த் தலைவர் தன் கடைசிப் படுக்கையில் இருந்தபோது மாமா வந்து அவரருகே நின்று ஏதோ பேசிவிட்டுப் போனதும் தலைவர் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் எழுந்ததைப் பார்த்ததும் எங்களுக்கும் மாமாவின் மீது சிறிய பயம்தான்.

மாமா நல்ல வேலையில் இருந்தார். ஊரில் எல்லோருக்கும் உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்பார். அடுத்த ஊர்த் தலைவர் அவர்தான் என்று கூட பேச்சு அடிபட்டது. இப்போது ஓய்வு கிடைத்ததும் எங்களைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போவதுதான் மாமாவின் பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டிலும் மாமாவை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மதிய உணவு என்று எழுதப்படாத முறைமையையே உருவாக்கிவிட்டார் வாக்கரிசிப் பிள்ளை மாமா.

“எம்மா, அதெப்படிம்மா, வாக்கரிசி மாமாக்கு மட்டும் எல்லா வீட்லயும் செம சாப்பாடு போடுகா?” என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.

“அடிச்சுப் பல்ல ஒடச்சிருவேன் ராஸ்கல். பெரியாளுக்கு மரியாத குடுக்காமப் பேசுக. எங்க செல்ல அண்ணனாக்கும், பாத்துக்கோ.” என்று முறைத்தாள் அம்மா.

“சாரி, சாரி. சொல்லும்மா.”

எதையோ நினைத்து சிரித்த அம்மா, “பின்ன, ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் கொஞ்சமா? பயம், உயிரு போயிருமோன்னு பயம், பின்ன என்னத்துக்குப் பயந்து ஓடப் போறா?” என்றாள்.

“மாமா வந்து பாத்தா தாத்தா ஆச்சில்லாம் செத்துப் போயிருவாளாம்மா?”

“அப்பிடி பேசப்படாது பாத்துக்கோ. அது தெய்வ காரியமாக்கும்.”

அதில் என்ன தெய்வகாரியம் இருக்கும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்பாவும் சித்தப்பாவும் வேகவேகமாக எங்கோ சென்றனர்.

“அதாக்கும் செரி. பெரியவரு ராசிக்கு இன்னிக்கி சொர்க்கம்லா!” என்று ஒரு மாமா சொல்ல, “உள்ளதாக்கும். பின்ன, வாக்கரிசிப் பிள்ள சரக்கடிக்கப் போயிருக்கப் படாது.” என்று இன்னொரு மாமா சொன்னார்.

மாமா சாயங்காலங்களில் வேறு ஒரு மனிதராகி விடுவார். அரச மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டுச் சத்தமாகப் பாடுவார். பெரும்பாலும் மலேசியா வாசுதேவன் பாடல்கள்தான். பக்கத்தில் சென்றால் இழுத்துப் பிடித்து கட்டியணைத்து முத்தமிடுவார். குமட்டிக் கொண்டு வரும் வாடை.

அப்படியொரு சாயங்காலம் நான் அந்த வழியாக வந்தபோது மாமா தனியாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன ஓய் மருமவனே, பாத்தும் பாக்காத மாதி போறீரே ஓய்? இங்க வாரும்.” என்று சிரித்தார்.

நான் அவரது அருகே சென்று நின்றேன்.

“என்ன மருமவனே, மாமாவப் பாத்து எதுக்கு பயப்படுகீரு? நமக்குள்ள ஆயிரம் மேட்டரு உண்டும்லா, ஊருல ஒரு பய கேக்க முடியாது, என்னா? எம் பொண்ண ஒமக்குத் தான் கெட்டி வப்பேன், கேட்டீரா ஓய்? பின்ன, எவளாம் வெள்ளத்தோலுக்காரிய லவ்வு பண்ணிட்டீருன்னா செரியா வராது, பாத்துக்கோரும். மாமாக்க சத்தியமாக்கும்.”

நான் வெட்கத்தில் சிரித்து நின்றேன்.

“இங்கண வந்து இரியும் மருமவன.” என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் மெல்லச் சென்று அவரருகே உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு ஆரஞ்சு மிட்டாயை என் வாயைத் திறந்து உள்ளே போட்டவர், என்னைக் கழுத்தோடு கட்டிப்பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அந்த எச்சிலைத் துடைப்பதைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன மருமவன, எச்சியத் தொடைக்கீரு, என்னா?” என்று கேட்டவர் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. நீளமாக மூச்சிழுத்து விட்டது போலிருந்தது. என் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அப்போ ஒம்ம வயசுதான் இருக்கும் எனக்கு! எங்க அப்பாக்க மொகம் கூட இப்போ செரியா கண்ணுல வர மாட்டுக்கு. வயல் வேலக்கிப் போன மனுசன நாலு வேரு ஒரு கயித்துக் கட்டில்ல தூக்கிட்டு வந்தானுகோ. ஆளு சும்மா சொடல மாடன் கணக்கா இருப்பாரு, கேட்டீரா? ஒத்தக்கி ஒரு பய எதுத்து நிக்க முடியாது. ஊருல எல்லாச் சட்டம்பிப் பயக்களுக்கும் எங்க அப்பாவக் கண்டா பயமாக்கும். புடிச்சி செவுட்டப் பேத்து விட்டுருவாருல்லா! பின்ன, எவனாம் செய்வின வச்சிட்டானோ என்னவோ? வச்சாலும் வச்சிருப்பானுகோ. ஒரு பயலயும் நம்பதுக்கில்ல. கட்டில்ல கெடயாக் கெடந்த மனுசன் ஒரு பொட்டு அசயல்ல. பத்து நாளு. எங்கம்ம அழுது அழுது மயங்கி விழுந்துருவா. நானும் எங்க அக்காவும் என்னத்தச் செய்ய முடியும்? அந்தக் காலத்துல இப்ப மாதி இல்லல்லா? என்ன நோயி, என்ன மருந்துன்னு யாருக்குத் தெரியும்? டாக்டரப் பாக்கணும்னா சும்மா இல்ல, கேட்டீரா? என்னல்லாமோ மருந்தக் குடுத்துப் பாத்தா. அப்பா அலங்குவனா பாருன்னு நீட்டிட்டுக் கெடக்காரு. பின்ன, எத்தன நாளக்கி எல்லாரும் அழுவா? அவரு பாட்டுக்குக் கெடக்கட்டும்னு அம்மா வயலுக்கு நடவும், கள பறிக்கவும் போயிருவா. பின்ன, வயித்துக்குக் கஞ்சி வேணும்லா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

மாமா அழுகிறாரா, சலுவை வடிக்கிறாரா என்று புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஒரு நாளு அம்மயும் அக்காவும் வயலுக்குப் போய்ட்டா. நான் அப்பா பக்கத்துல இருந்து அவ்வோ வாயத் தொறந்து கொஞ்சம் கொஞ்சமா கஞ்சி ஊத்துகேன். எப்பவும் அவ்வோ நெஞ்சு அசையான்னு மட்டும் பாத்துட்டே இருப்பேன். அன்னிக்கி கொஞ்சம் தூக்கித் தூக்கிப் போட்ட மாதி இருந்து. நெஞ்ச இறுக்கித் தேச்சி விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி அவ்வோ ஒடம்பு படபடன்னு ஆடிட்டு, வெட்டு வந்த மாதி. நா ‘எப்பா, எப்பா, என்னப்பா செய்யி’ன்னு அழுகேன். வெட்டு நின்ன பாடில்ல. வீட்டுத் தாக்கோல எடுத்து அவ்வோ கைலக் குடுத்தேன். இறுக்கிப் பிடிச்சிட்டு துடிச்சிட்டே கெடந்தா. சட்டுன்னு ஒரு அசைவு இல்லாம நின்னு. நா ஒத்தக்கி ஒருத்தனா என்ன செய்வேன்? அப்பா செத்துட்டாருன்னு நெனச்சி அம்மக்கிட்ட சொல்ல ஓடுனேன்.”

நான் மெளனமாக கேட்க, மாமா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தார்.

“நா ஓடுகேன். ’மக்ளே’ன்னு ஒரு சத்தம். அப்பா கொரல்தான். எனக்கு நடுங்கிட்டு. திரும்பிப் பாக்கேன், அப்பா எந்திச்சி ஜம்முன்னு உக்காந்திருக்கா. கட்டில்ல இருந்து என்னப் பாத்து கையசச்சிக் கூப்புடுகா. என்னால நம்பவே முடில. ஓடிப் போயி அவ்வோ கையப் புடிச்சேன். அப்பா மெல்ல எந்திச்சி என்னக் கூட்டிட்டு வீடு முழுக்க ஒரு சுத்து நடந்தா. அப்பிடியே வெளக்கு முன்னால கூட்டிட்டுப் போயி நின்னா. அவ்வோ மொகத்துல அப்போ அப்பிடி ஒரு ஐசுரியம். சும்மா தகதகன்னு ஜொலிக்கா அப்பா. அப்பிடியே கண்ண மூடி நின்னா. பொறவு கைய நீட்டி தாம்பாளத்துலருந்து திருநீற எடுத்துக் கேட்டா. நா எடுத்துக் கொடுத்தேன். ஏதோ மனசுக்குள்ள சொன்னா அப்பா. என்னன்னு எனக்குப் புரியல்ல. பெரிய சாமிகொண்டாடில்லா? திருநீற எடுத்து என் நெத்தில பூசி விட்டுட்டு அவ்வோ நெத்திலயும் பூசினா. அப்பிடியே கூட்டிட்டுப் போயி கட்டில்ல இருந்தா. கொஞ்ச நேரம் எம்மூஞ்சிய பாத்துட்டே இருந்தா. சிரிச்சிட்டே மெதுவா கட்டில்ல படுத்தா. நா அப்பா கைய தடவி விட்டுட்டு இருந்தேன். அப்பா என்னயே பாத்துட்ருந்தா. என் கைய எடுத்து அவ்வோ நெஞ்சுல வச்சா. நெஞ்சு மெல்ல மெல்ல அசஞ்சிட்டு இருந்து. அப்பாக்க மூச்சுச் சத்தமும் என்னோட மூச்சுச் சத்தமும் மாறி மாறிக் கேட்டு. எல்லாம் கொஞ்ச நேரந்தான். இந்தா, இந்தக் கை வழியாத்தான் எங்கப்பா போனா பாத்துக்கோ.” என்று சொல்லி என் கையோடு சேர்த்து அவரது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினார்.

சிறிது நேரம் மாமா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“பொறவு நமக்கு இந்தப் பேரு ஒட்டிக்கிட்டு. அது சும்மால்ல, ஒரு தோணக்கமாக்கும். செல மூஞ்சியப் பாத்த ஒடனே தோணிரும், இது தேறாதுன்னு. என்னைக்கு எத்தன மணிக்குப் போகும்னு கூட தெரிஞ்சிரும். பின்ன, நானாட்டு ஒண்ணும் சொல்லதில்ல. அப்பிடி ஒண்ணு ரெண்டு எடத்துல சொல்லப் போயி சொன்ன மாதியே நடந்துட்டு. பின்ன, அதுவே பேராயிட்டு. செரி, நம்மளும் பாவம் ஒண்ணும் பண்ணலல்லா? இழுத்துட்டுக் கெடக்கது கொடூரம்லா மருமவன? போயி பக்கத்துல நின்னாப் போறும். என்ன பேசுகேன்னும் தெரியாது, அங்க என்ன நடக்கும்னும் தெரியாது. சீவம் சொகமாப் போயிரும். அதான மருமவன வேணும். என்னத்த வாழ்ந்து என்னத்துக்கு?”

*

சற்று நேரத்தில் வாக்கரிசிப் பிள்ளை மாமா வந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் பயங்கரமாகக் கோபம் வந்தது. என் தாத்தாவின் மரணத்தைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்பாவும் சித்தப்பாவும் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டு மாமாவை உள்ளே போகச் சொன்னார்கள். நான் அவருக்கு முன்னாக ஓடிச் சென்று தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். எனக்குத் தெரிந்த சாமி மந்திரங்களையெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தேன். மாமாவின் மந்திரம் இன்று பலிக்கக் கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டினேன்.

மாமா வந்து நின்று என் தலையில் கைவைத்து வருடினார். நான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து என் முன் நீட்டினார். நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

“மக்ளே, வெளிய வா கொஞ்சம்” என்று அம்மா அழைத்தாள்.

“ஒண்ணுல்ல மக்ளே. மருமவன் இங்கயே இருக்கட்டும்.” என்று பதில் சொன்னார் மாமா.

அம்மா வந்து மாமாவின் கையில் ஒரு தம்ளர் பால் கொடுத்துச் சென்றாள். ஒரு மடக்கை தன் வாயில் விட்டவர், “மக்ளே, கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா.” என்றார்.

அம்மா சீனி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். மாமா ஏதோ வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார். எனக்குள் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால், எதுவும் நடக்காததைப் போல, அல்லது வேறு யாருக்கோ நடப்பதைப் போல தாத்தா சுகமாகப் படுத்துக் கிடந்தார். அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாகியது. என்ன ஒரு கம்பீரம், அழகு! தாத்தா என்னைப் பார்த்து சிரித்ததைப் போல இருந்தது. மாமா மூன்று முறை தாத்தாவின் வாயில் பாலை விட்டார். தாத்தா நல்ல பிள்ளையாக வடிக்காமல் பாலை விழுங்கினார். மாமா சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடி நின்றார். பின், தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். வெளியே ஒரே சலசலப்பு!

நான் தாத்தாவின் அருகே உட்கார்ந்து எனது கையை அவரது கையோடு சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். எங்கள் கைகள் மேலும் கீழும் மெல்ல ஏறி இறங்கின. எனது மூச்சும் தாத்தாவின் மூச்சும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தது. வாக்கரிசி மாமா வைத்துவிட்டுப் போன ஆரஞ்சு மிட்டாய் தாத்தாவின் தலைமாட்டில் இருந்தது.

 

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.