சிலை – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

அவர்கள் எங்கள் நாட்டின் மன்னனைக் கொன்றுவிட்டு எங்கள் நாட்டின் எல்லையாகிய பன்றிக்கால் ஓடையில் இருந்த பெரிய பனைமரப் பாலத்தை பெரும் படையுடனே மன்னன் முன்வரத் தாண்டி ஒரு நொடி நின்று அந்த பெண் சிலையைப் பார்த்தார்கள். அது நான் செய்த சிலை. எங்கள் நாட்டின் கலையுச்சம் என்று எங்கள் மன்னனால், நாட்டின் அடையாளமாக, நாட்டின் நுழைவாயிலாக, இருந்த பன்றிக்கால் ஓடைப்பாலத்தின் ஓரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது.

“நாம் இந்தச் சிலையை நம் அரண்மனையின் முன்னிருக்கும் ஆயிரம் சிலைகளில் ஒன்றாக வைப்போம். அதுவே இந்த எளிய நாட்டு பெருமைகளுக்கு நாம் அளிக்கும் கீழ்மை,” என்றவாறு சிரித்தார் அந்நாட்டு அமைச்சர்.

“இல்லை இதை வெட்டி வீழ்த்துவோம், பொழி ஓடுகிறது, பன்றிக்கால் ஓடையில் சென்று இந்த சிலை கடல் சேரட்டும்,” என்று தன் வாளை உருவி வெட்டி வீழ்த்தினான் மன்னன். உண்மையான மனிதவுடல் வெட்டப்படுவதைப் போல் நெளிவுகளுடன் அந்தச் சிலை குழைந்து நீரில் வீழ்ந்தது.

நாங்கள் காலங்காலமாக சிலை செய்பவர்கள். எங்கள் கைகளில் இருக்கும் உளி எங்கள் மூதாதை ஓருவனின் உடைக்கப்பட்ட பெருவிரல் என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை உளியைத் தொடும்பொழுதும் எங்கள் கைகள் நடுங்கும். ஆனால் உளி கல்லைத் தொடும் தருணம் நடுக்கம் இறங்கி கற்களுக்குள் சென்றுவிடும். பின் நிகழ்வது வில்லுப்பாட்டில் கதையின் இடையே வரும் பாடலின் ஓய்வுத்துளியில் கேட்கும் குடமடி ஓசையை மட்டும் எடுத்துத் தொடுத்த ஓர் மாலை. நாங்கள் மருந்துவாழ் மலையின் அருகிலிருந்த சிற்றூரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தோம். உயர்ந்திருந்த மருந்துவாழ் மலையினை ஒட்டி அதனால் மறைக்கப்பட்டிருந்த ஒரு கருங்கல் குன்றின் வடக்கு பக்கமாக எங்கள் ஊர் இருந்தது. நாங்கள் அந்த சிறு குன்றை அய்த்துமலை என்று அழைப்போம்.

அனுமன் சஞ்சீவி மலையை கையில் ஏந்தி தென்னிலங்கைச் செல்லும் பொழுது அதில் முதலில் விழுந்தது இந்த அய்த்துமலை. அதை எடுக்க அனுமன் குனிந்தபொழுது மருந்துவாழ் மலை கீழே விழுந்தது. அனுமன் விழுந்துவிட்ட மருந்துவாழ்மலையை பார்த்துவிட்டு அய்த்துமலையை மறந்துவிட்டார். அய்த்துமலையின் கல் மருந்துவாழ்மலையின் கல்லிலிருந்து வேறுபட்டது. உண்மையில் ஒரு இலையின் திண்ணம் அளவே வருமாறு எளிதாக அதை தீட்ட முடியும். நாங்கள் அரிதாக அந்த மலையின் கல்லெடுத்து சிலை செய்வோம். பன்றிக்கால் ஓடையில் வெட்டி வீழ்த்தப்பட்ட சிலை அய்த்து மலைக்கல்லில் செய்தது. அய்த்துமலையின் ஒரு ஓரத்தில் உதிரிக் கற்களின் கூட்டம் இரண்டு இருந்தன. அவற்றில் ஒன்றின் நிறம் சற்றே பழுப்பாகவும் இன்னொன்றின் நிறம் நல்ல ஆழமான கறுப்பாகவுமிருக்கும். நாங்கள் அந்த பழுப்பு நிற கற்களை தெற்கே சொத்தவிளை கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மணலினால் அமைக்கப்பட்ட குன்றின் மேல் பரப்பி அடுக்கப்பட்ட விறகுகளின் மீது போட்டு, விறகுகளுக்கு தீயிடுவோம். அந்த தீக்குழியிலிருந்து எழும் தீயின் நாக்கு கருமை நிறமுடையதாக இருக்கும். அதில் நாங்கள் அந்த கருமை நிற உதிரிக்கற்களை ஒரு இரும்பு கம்பியால் பிடித்து காணிப்போம். பின் அந்த கறுப்பு உதிரிக் கருங்கல்லை ஆறவிட்டு அதன் மேல் கைகளால் வழித்தால் எண்ணைப் பசை கொண்ட கறுப்பு மை கிடைக்கும். அதை நாங்கள் செய்யும் பொருட்களின் மீது தடவுவோம். அந்த மையின் தன்மையால் அது தடவப்படும் பொருட்கள் அனைத்தும் கொடும் வெயிலடிக்கும் பாலையில் மிகக் குளிர்ச்சியாகவும் பெருமழை பெய்யும் அடர் காடுகளில் வெம்மையாகவும் இருக்கும்.

பிடிக்கப்பட்டுவிட்ட எங்கள் நாட்டினை ஆட்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்த மன்னன் ஈத்தாமொழியில் கூடி துறைவாரியாக அமைச்சர்கள் பணித்தான். உண்மையில் அப்படி துறையெதுவுமில்லை. எங்கள் நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும் விளையும் அல்லது உண்டாக்கப்படும் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு விலையமைத்தல் மட்டுமே இநதத் துறைகளின் பணி. இவற்றில் பணிபுரிந்தவர்களின் வேகம் அச்சமூட்டுவது. சற்றொப்ப இரண்டு திங்களில் இவர்கள் தங்கள் பணியினை முடித்து மீண்டும் ஈத்தாமொழிக்கு வந்த மன்னனின் கூடுகையில் ஒப்பித்தார்கள். அடுக்கடுக்காக ஓலைச்சுவடிகள். மன்னனின் தனிப்பணியாள் அதை வாசித்தான். அந்தப் பொருட்களின் பட்டியலில் உச்ச விலை என்று “கல்லிலைக்கட்டில்” என்ற பொருள் இருந்தது. அதன் விலைக்கும் அதற்கு அடுத்ததாக வந்த பொருளின் விலைக்கும் இடையில் இருந்த வேறுபாடு மன்னனுக்கு திகைப்பை அளித்தது. அவன் மீண்டும் மீண்டும் கல்லிலைக்கட்டிலின் விலையை தனிப்பணியாளிடம் கேட்டான். அந்தப் பட்டியலில் உள்ளூர் காசு அளவைக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டான். இல்லையென்றும் நம் நாட்டின் காசு கணக்கில்தான் இந்த விலை வருகிறதென்றும் சொன்னான்.

“அப்படியானால் இது என்ன பொருள், எங்கே செய்யப்படுகிறது, ஏன் இத்தனை விலை, நான் உடனடியாக அதைப் பார்க்க வேண்டு,ம்” என்று கேட்டான் மன்னன்.

அப்படித்தான் அந்த அழகிய வெள்ளிக்கிழமை காலைப் பொழுதில் எங்கள் ஊருக்குள் தன் தேரில் வந்து இறங்கினான் மன்னன். நாங்கள் எப்பொழுதும் போல் எங்கள் வெள்ளிக்கிழமை காலை பூசையில் இருந்தோம். எங்கள் ஊரின் தெருக்களில் யாருமில்லை. அரிதாக எங்களில் ஒரு பிரிவினர் வேட்டைக்கு செல்லும் பொழுது கூட்டிச் செல்லும் நாய்கள் மட்டும் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தன. ஊரினுள் வந்த மன்னன் அமைச்சர்களைப் பார்த்துக் கேட்டான்.

“இங்கே மாளிகைகள் எப்படி, இந்த சிற்றூரில் எப்படி இத்தனைச் செல்வம்?”

உண்மையில் அத்தனை செல்வம் கொழிக்கும் ஒரு சிறிய சிற்றூரை அந்த மலையின் அடிவாரத்தில் அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இத்தனை செல்வம் எப்படிக் கொள்ளை போகாமல் இருக்கிறது?” என்று அடுத்த கேள்வி கேட்டான் மன்னன்.

அவனுடன் வந்தவர்களுக்கு அதற்கான பதில் எதுவும் தெரியவில்லை. மன்னன் சினத்துடன் அவன் அருகிருந்தவர்களை நோக்கிவிட்டுச் சற்றென வெறிகொண்டவன் போல் தேரிலிருந்து குதித்து அருகிலிருந்த மாளிகையின் கொண்டியைத் தென்னி இழுத்து உள்நுழைந்தான். ஆளரவமற்ற அந்த மாளிகையுன் பூசையறையிலிருந்து எழும் ஓசை கேட்டு மூடியிருந்த பூசை அறையின் கதவைத் திறந்தான்.

அதுதான் நான் அவனை நேருக்கு நேராக சந்தித்த முதல் சந்திப்பு. என் கண்கள் வெட்டி உள்வாங்கின. சில பொழுதுகளின் பிறகே அவன் மன்னன் என என் உணர்கொம்புகள் அறிந்தன. பின் உடல் துடிக்க நான் கைகளால் அவனைத் தொழுதேன். மன்னன் வாளெடுத்து அவனைத் தொழுது கொண்டிருந்த என் கைகளை தட்டி விட்டான். பின் என் கண்களை நோக்கி “ஏது உங்களுக்கு இவ்வளவு செல்வம், எங்கே கல்லிலைக்கட்டில்?” என்றான்.

உடல் மரத்து நின்ற என்னை தன் வாளினால் தட்டி, “சொல், எங்கே கல்லிலைக்கட்டில், நான் அதைப் பார்க்க வேண்டும்?” என்றான்.

பின் அருகிருந்தவர்களை நோக்கி, “அவனோடு சென்று கல்லிலைக்கட்டிலைத் தூக்கி வாருங்கள்,” என்றான்.

வேண்டாம் நான் ஒருவனே அதைத் தூக்கி வரமுடியுமென்று சொல்லிவிட்டு மன்னனின் பதிலுக்கு காத்திராமல் தரையில் கால்கள் பாவும் எந்த உணர்ச்சியுமற்று, நான் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்து என் படுக்கையறைக்கு சென்றேன். படுக்கையறையிலிருந்து நான் என் ஒற்றைக் கையால் அதை தூக்கி வருவதைப் பார்த்து அதிர்ந்து குரல் சற்றே அதிகாரம் கொள்ள, “கல் எப்படி இத்தனை மென்மையாக இருக்கமுடியும்? எங்கிருந்து கல் எடுக்கிறீர்கள், எப்படி இத்தனை ஆழமான கருமை கொள்கிறது கல்?” என்றான்.

நான் பதிலெதுவும் சொல்லாமல் அவன் முன் கல்லிலைக்கட்டிலை வைத்தேன்.

தன் வாளை உடையில் மாட்டிவிட்டு கல்லிலைக்கட்டிலை தொட்டவன் திடுக்கிட்டு தன் கைகளை தீயில் பட்டதைப் போன்று உதறியெடுத்துக் கொண்டான்.

“இந்த சித்திரை மாதம் எங்கனம் இத்தனைக் குளிர்ச்சி இந்தக் கல்லில்?”. மீண்டும் ஒருமுறை தன் கைகளால் கல்லிலைக்கட்டிலைத் தொட்டான். பின் பெருஞ்சினம் கொண்டு, “இந்த மாய வித்தைகள் என்னிடம் வேண்டாம், என்னிடம் மாயவித்தை காட்ட முயன்ற இரண்டு வித்தைக்காரர்கள் குடும்பத்தை ஒரே வாள் வீச்சில் கொன்றவன் நான்,” என்றான்.

பின் வேகமாக வெளியேறி அய்த்து மலையின் முன்னால் சென்று நின்றான். அதன் அடிவாரத்தில் கூடாரமிட்டு தங்கியிருந்த பாலைவன மக்களைப் பார்த்து திகைத்தான். அவர்கள் அங்கே எங்கள் உற்பத்திப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அவன் அருகிருந்தவர் ஒருவர் அவனுக்கு சொன்னார். அவன் கற்பனை செய்தும் பார்த்திராத நாடுகளுக்கு எல்லாம் இந்தப் படுக்கை செல்கிறது என்றதை அறிந்து அவன் வன்மம் பெருகிப் பெருகிச் சென்றது.

“இதிலிருந்து கல்லெடுக்கும் உரிமம் இனி உங்களுக்கில்லை. இது இனி மன்னன் சொத்து, நீங்கள் இந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடுகிறேன்,” என்றவாறு சென்று தேரில் ஏறினான். தேரில் ஏறியவன் நின்று என்னைப் பார்த்து, “அந்த பண்ணிக்காலோடை பாலத்திலிருந்த பெண் சிலையைச் செய்தது யார்?” என்றான்.

நான் தலையைக் கவிழ்ந்தேன். என்னேரமும் என் தலை வெட்டப்படலாம் எனத் தெரியும். என் மனைவி மாளிகையுள் மயங்கிச் சரிந்தாள். அவள் கன்னம் தரையில் மோதிய ஒலி என் செவிகளில் கேட்டது.

தன் வாளெடுத்து என்னை நெருங்கிய மன்னன் சொன்னான்.

“நான் வெட்டி வீழ்த்திய சிலையினும் மேலான ஒரு சிலை எனக்கு வேண்டும். நாளை காலை நான் வந்து வாங்கிச் செல்கிறேன்,” என்று தேரில் ஏறி மறைந்தான்.

எங்கள் ஊர் மக்கள் அனைவரும் செயலற்று நின்றிருந்தனர். பின் என் அருகில் எல்லாரும் கூடினர். பெண்கள் மாளிகையினுள் சென்று என் மனைவியை எழுப்பி தேற்றினர்.

ஆண்கள் என்னிடம் ஆறுதல் கூறினர். உன்னால் செய்துவிட முடியும் என்று தெரியும் என்று சொன்னார்கள். நான் அய்த்துமலையை என் கைகளால் வணங்கி என் மாளிகையினுள் சென்றேன். உண்மையில் உளியைக் கையில் எடுத்தவுடனே எனக்கு புரிந்துவிட்டது என்னால் பன்றிக்காலோடை சிலையை மீறிய ஒன்றை படைத்துவிட முடியாதென்று. நான் சோர்ந்து சென்று முட்டுகூட்டி அமர்ந்தேன். என் மனைவி அருகில் வந்து அமர்ந்தாள். நான் அவளை நோக்கி கூறினேன், “அந்தச் சிலை என் கலைத்திசு. அதை மீறிய ஒன்றை என்னால் படைக்கமுடியாது. அதை மன்னன் அறிவான். அவன் வாளால் நான் கொல்லப்படுவது உறுதி”.

என் மனைவி சிரித்தாள். பதிலெதுவும் சொல்லாமல் எழுந்து அடுக்களைக்குள் சென்று மீண்டும் திரும்பியவள் என் முன்னால் தட்டில் உளுந்தஞ்சோறையும் கருப்பட்டியும் வைத்தாள். நான் அவளைப் பார்த்தேன். கருப்பட்டி எதற்கென்றேன்.

“உளுந்தஞ்சோற்றுடன் இந்த வீட்டிலிருக்கும் எல்லா உணவுப் பொருட்களையும் இணைத்து உங்களுக்கு விளம்பியுள்ளேன். ஆனால் இன்னும் இணைக்க வேண்டிய அதிச்சுவைக் கொண்ட உணவுப் பொருட்கள் ஏராளம் இருக்கின்றன. எந்த ஒரு மனிதனும் தன் உச்சப் படைப்பு என்று எதையும் நிகழ்த்தி விட முடியாது. சொல்லாததும் காட்டாததும் எஞ்சும். அருகிலிருக்கும் குமரி முனையின் கடலின் திரைகளின் உச்ச அழகு எப்பொழுது நிகழ்ந்தது?” என்றாள்.

அவளை நான் அறிவேன். அவள் என் குருவின் மகள். நான் அவளை முதன் முதலாக பார்த்தது ஒரு சிலையை செய்து எடுத்துக்கொண்டு என் குருவைப் பார்க்க சென்றபொழுதுதான். அந்தச் சிலையைப் பார்த்தவள் தன் அப்பா அருகிலிருக்கிறார் என்பதனால் வெளிப்படுத்தும் வழக்கமான உடல் மொழியை மறந்து காலுடைந்த ஒரு கோழியின் நொண்டித் துள்ளல் போன்ற நடை நடந்து சிலையை தொட்டுப் பார்த்தாள். பின் சன்னமானக் குரலில் என்னை நோக்கி, “படைப்பு போதாமையிலிருந்து எழுகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறது, அனக்கமற்றதில் அனக்கத்தை உண்டாக்குகிறது, பின் நிறைகிறது , தழும்புகிறது, செயலற்றிருக்கிறது, இந்தச் சிலை உங்கள் தாயாரால் உண்டானது,” என்றபடி சென்றாள்.

அவளின் சொற்கள் உண்டாக்கிய மயக்கத்தில் நான் பித்துகொண்டு இரவில் என் மாளிகைக்குள் ஒவ்வொரு அறையிலும் அவளைத் தேடினேன். இரவில் உறக்கம் கலைந்து எழுந்து மீண்டும் அவளை மாளிகை முழுவதும் தேடிவிட்டு அலைக் கழிக்கும் ஆற்றலோடு சென்று அய்த்துமலையின் முன்னால் நின்றேன். அவ்வாறு நான் செய்த சிலைதான் பன்றிக்காலோடை சிலை. அதை நான் அவளிடம் கொண்டு சென்று காட்டியபொழுது சிலையைப் பார்த்தவள் வியர்த்திருந்த தன் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

நான் உளுந்தஞ்சோற்றையும் கருப்பட்டியையும் உண்டேன். கைகளைக் கழுவிவிட்டு திரும்பி வந்தபொழுது மனைவி அடுக்களை வாசல் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.

“நீங்கள் படைத்த அந்த உச்ச சிலையின் பின்பு அச்சிலையின் போதாமைகளை உங்கள் ஆழ் உள்ளம் உணர்வதை நான் அறிவேன். அந்த போதாமைகள் என்னவென்றும் நான் அறிவேன். நீங்கள் செய்யும் இந்தப் புதிய சிலையில் அந்த இடைவெளியை நிரப்புங்கள். என் உடலை உங்களுக்கு தருகிறேன்” என்று சட்டென கைகளிள் இருந்த கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டாள். நான் தாவிச்சென்று அவளை என் கைகளில் தாங்கிக் கொண்டேன். குருதி என் கைகளின் வழியாக வழிந்தது. அவள் எண்ணைப் பிசுக்கில் மாட்டிய பாம்பைப் போன்று குருதியில் நெளிந்தவாறு என் கைககளில் கிடந்து அசைவுகளற்று உயிர்விட்டாள். என் கைகள் நடுங்கின.

கண்களில் நீர்பெருக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குருதியில் நனைந்திருந்த அவள் உடல் ஒளியில் மினுங்க என் உள்ளம் ஏதோவொன்றை அறிந்தது.

நான் உளியினைக் கையிலெடுத்தேன். விளக்கை அணைத்தேன். மெல்லிய நிலவொளியில் அவள் உடலின் மேல் அய்த்துமலைக் கற்களால் சிலை செய்யத் தொடங்கினேன். கருமையுதிரிக் கற்களைக் கொண்டு செய்த மையைப் பூசினேன். அவள் உடல் முழுவதும் மறைந்துவிட்ட பிறகு அவள் கண்களை கடைசியாக மூடியபொழுது அவள் இமை அசைந்ததைப் போன்ற பிரமை ஏற்பட்டு நான் மயங்கி கீழே விழுந்தேன்.

அதிகாலை மன்னன் வந்த பொழுது நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தேன். அவன் நேரடியாக என் மாளிகையினுள் வந்து தன் கைகளால் என்னை எழுப்பினான்.

நான் கண்களை கைகளால் நவைந்து அவனை நோக்கினேன். அருகில் திரைச்சீலையிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிலையின் திரையை விலக்கப் போனான். நான் அறிவேன் அது எனக்கான தீர்ப்பு என. அடுத்த நொடி என் உயிரின் முடிவு எடுக்கப்படுமென. என் வாய் என்னை அறியாமல் சொன்னது,. “இதை நீங்கள் உங்கள் மனையில் தான் சென்று திரை விலக்க வேண்டும்”.

மன்னன் சினத்தோடு என்னைப் பார்த்தான். சிலையைத் தேரில் ஏற்றச் சொன்னான். என்னை ஒரு படைவீரனின் குதிரையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

ஈத்தாமொழி தாண்டி பன்றிக்காலோடை வந்து சேர்ந்தவுடன் படை நின்றது. நான் குதிரையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன். நேராக ஓடையினுள் விழுந்தேன். படை என் கண்களை விட்டு மறைந்தது.

அந்தச் சிலை மன்னனின் தனி ஓய்வறையினுள் வைக்கப்பட்டது. அதை வைத்துவிட்டு வீரர்கள் வெளியேறினார்கள். மன்னன் கட்டிலில் சென்று படுத்தான். சற்று நேரத்தில் அவனுக்கு பசித்தது. எழுந்து உணவறைக்கு செல்ல போனான். சிலையை மூடியிருந்த திரைச்சீலை அவன் கண்களில் பட்டது. சற்று தயங்கியவன் அதை நெருங்கி திரைச்சீலையை விலக்கினான். சிலையை பார்த்த கணம் அவன் மூளையின் நரம்புகள் குழம்பின. பார்வை மங்கியது. சிலையின் முலைகளிலிருந்து பால் சுரக்கத் தொடங்கியது. தரையெங்கும் பரவியது. மன்னன் அரை மயக்கத்தில் வீழ்ந்தான். பால் சுரந்து சுரந்து அவன் அறையை நிரப்பியது. மன்னன் பசி மயக்கத்தில் அதை அள்ளி அள்ளிக் குடித்தான். குடித்த ஒரு துளியைக்கூட அவன் உடல் உணரவில்லை. ஆனால் அவன் வாய்க்குள்ளும் உடலுக்குள்ளும் அது நிறைந்தது. அவன் பசி எள்ளளவும் குறையவில்லை. வயிறு பெருத்து ஒரு கோமாளியைப் போல் ஆனான். பசி, நொடி கூட குறையாத பசி.

பால் அவன் கண் முன்னே பெருகி சென்று கொண்டிருந்தது.அவன் பசியினால் கண்கள் மயங்க மீண்டும் குடிக்க முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு கனவாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.ஆனால் பசியை அவன் தசைகளுக்குள்ளும் உணர்ந்தான். உடல் ஒருவித குளிர்ச்சியை அடைந்து கண்கள் மங்கி தீராத பசியினால் மயங்கிச் சரிந்தான்.

அதிகாலை எழுந்த மன்னன் அமைதியாய் சிரித்தபடியே நின்றிருந்த சிலையைப் பார்த்தான். நேற்றிரவு நடந்தது கனவென்று தன்னைத் தானே நம்ப வைக்க முயன்றவன் கட்டிலிருந்து இறங்கவும் கால்களில் பிசுபிசுப்பாக ஏதோவொன்று ஒட்ட கீழே பார்த்தவன் தரையெங்கும் பால் ஓடிய தடத்தைப் பார்த்ததும் உடல் சில்லிட உதறியபடி கட்டிலின் மீது ஏறிக்கொண்டான். அச்சம் குடிகொண்டது. எழுந்து வெளியே ஓடிவிட எண்ணினான். தன் ஆற்றல் முழுவதையும் திரட்டிக்கொண்டு உள்ளங்காலை தன்வாளால் கீறி தரையிலிருக்கும் பால் உண்டாக்கும் அச்சத்தை தன் மனதினால் தாண்ட குருதி சொட்டும் காலால் நடந்து கதவை அடைந்தான். கதவைத் திறந்து விட்டவன் திரும்பி சிலையைப் பார்த்தான். அதன் அம்மணத்தை கவனித்து திடுக்கிட்டான். மெல்லிய காமம் உண்டாகியது. அவன் சிலையை நெருங்கினான்.

அவன் பின் தோளில் மூச்சுக்காற்று பட்டது. உடல் உதறி திரும்பி பார்த்தான். அவன் வாழ்வில் ஒரு பொழுதும் கண்டிராத பேரழகி நின்று கொண்டிருந்தாள். தூயக் கருமை. அத்தனை பளபளப்பான மின்னும் கருமையை அவன் அறிந்ததில்லை. அவன் அவள் சருமத்தைத் தொட்டுப் பார்த்தான். அவள் உடல் விநோத அசைவொன்றை வெளிப்படுத்தியது.

அவன் கைகளால் அவளை அணைத்தான். அந்தப் பேரழகியைப் புணர்ந்தான். பின் அந்த அறை முழுவதும் பேரழகிகள் பெருகிக் கொண்டேயிருந்தனர். வேறு வேறு நிறங்கள். வேறு வேறு வடிவங்கள். அவன் உடல் தளரும் பொழுதெல்லாம் முன்னிலும் ஓர் பேரழகி தோன்றிக் கொண்டேயிருந்தாள். அவன் உள்ளம் தளர்ந்து தளர்ந்து மீண்டும் எழுந்தது. உடல் தளர்ந்து கொண்டேயிருந்தது. எப்பொழுது மயங்கினான் என்பதை அவன் அறியவில்லை.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவன் எழுந்து சென்று கதவைத் திறந்தான். அமைச்சர் நின்று கொண்டிருந்தார். “நாம் வெகு நாட்களாக தோற்கடிக்க முடியாத, நம் நாட்டிற்குள்ளேயே தனித்த மலையொன்றை ஆட்சி செய்யும் சிற்றரசன் ஒருவனின் படை தோற்கடிக்கப்பட்டு அந்த மலை பிடிக்கப்பட்டுவிட்டது,” என்றார்.

அந்த சிற்றரசன் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்டான். மன்னன் புன்னகையுடன் கதவை மூடினான். ஏனோ சிலையைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. திரைச்சீலையை விலக்கினான். சிலையின் காலிலிருந்து மண் எழுந்து பெருகியது. பல நிறமுடைய மண். செம்மண், கருமண், கடல் மண், சேறு என விதவிதமான மண். புதைகுழியில் மூழ்கினான் மன்னன். தப்பித்து ஒடி பாலையில் சென்று வீழ்ந்தான். பாலையின் புயல் காற்றைப் போன்று மண் சுழன்றது. அவன் நாசியை மண் நிறைத்து. மூச்சுத் திணறியது. மண் மெல்ல மெல்ல அவனை மூடியது.

மன்னன் அதன் பின் தன் அறைக்குள் செல்லவில்லை. தன் படைவீரர்களிடம் சிலையைத் தூக்க ஆணையிட்டான். அவர்கள் சிலையை தேரில் ஏற்றினார்கள். மன்னன் தானே தன் தேரை ஓட்டிக்கொண்டு பன்றிக்காலோடை பனை மரப்பாலத்தை வந்தடைந்தான். நான் அவனால் வெட்டி ஓடையில் வீசப்பட்ட சிலையின் அருகில் இருந்தேன். மன்னன் சொன்னது போல் இந்தச்சிலை கடல் சேரவில்லை. அவனால் ஒருபொழுதும் நீரின் மேற்பரப்பை வைத்து பொழி ஓடுவதை கணிக்க இயலாது. தேரிலிருந்து ஓடி வந்து என் கால்களில் விழுந்தான். “என்னால் இந்தச் சிலையை தாங்க முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்.இது என் உணர்வுகளை பெருக்குகிறது.என் இயல்பான உணர்வுகள் இதைப் பார்த்தால் நுரைபோல பெருகுகிகின்றன. என் சமநிலை குலைகிறது. கண்ணாடி மாளிகைக்குள் சிக்கிவிட்ட உணர்வு.”

நான் அவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்தான் மன்னன். சிலையின் திரையை மீண்டும் விலக்கினான். பின் அவன் அழுகையை நிறுத்துமுன் மாலை ஆகிவிட்டிருந்தது. ஒப்பாரி, ஆவேசம், தழும்பல், கரைதல், சிணுங்கல் என விதவிதமாக அழுது கொண்டிருந்தான்.அழுகையை நிறுத்திய நேரம் என் கால்களில் கிடந்தான். அவன் மணிமுடி தலையிலிருந்து கீழே விழுந்தது. அவன் தலைமுடி காற்றில் பறந்து பினனங்கழுத்து நரம்புகள் தெரிந்தன. என் கைகளில் உளி இருந்தது. என் கைகள் நடுங்கின.

அவன் பின்னங்கழுத்தை என் உளி சந்தித்தது. பின் என் கைகளின் நடுக்கம் அவன் உடலினுள் இறங்கி மறைந்தது.

நான் கீழே கிடந்த மணிமுடியை கால்களால் எட்டி தள்ளினேன். அது பன்றிக்காலோடையின் ஆழத்தில் சென்று விழுந்தது. இப்பொழுது பொழி ஓடிக்கொண்டிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.