பூத சரணம்

விஜயகுமார்

1

தாத்தா சொன்னார், “மேலே வராதேன்னு சத்தம் கேட்டுது பாரு, நான் செதறி அடிச்சு கீழ ஓடியாந்தனாகும். கீழ வர்றதுக்கு முழுசா ரெண்டு நாளாகும். தவறி கால வெச்சோம், பாறையில பெயிண்ட் அடிச்சிடுவோம். சந்தேகமிருந்தா காயம் பட்ட தளும்பப் பாரு.”

“ஆள்திண்ணி பூதம் மலை உச்சிக்கு போறவங்கள விடாதுன்னு சொன்னாங்க” சிறுமி கேட்டாள்.

“நான் இளவட்டம்ல அப்போ. குரல் கேட்டதும் ஓடியாந்துட்டேன். உசுரோட வந்தது நான் மட்டும்தானாக்கும்.”

“அப்போ நீங்க அந்த பூதத்த பாக்கலயா?”

“கீழ ஓடியாறப்ப திரும்பி ஒருவாட்டி பாத்தேன். அது நாலு யானை ஸைஸ்ல எட்டு தென்னைமரம் நெட்டுக்கு இருந்துச்சு. பதினாறு கண்ணு, மூக்கே இல்ல, ஆனா பெரிய வாய்.

“அம்மாடியோ”

“புல்ஷிட்”

“யாரும்லே அது. அவ்ளோ தெகிரியம்னா சஞ்சீவி மலைய ஏறித்தான் பாக்கறது.” கூட்டத்தில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. “ஆள்திண்ணின்னா என்ன சும்மாவாலே. அது எமனுக்கு பிள்ளையாக்கும். பூதகணத்திலயே பெரிய கணமாக்கும். அதைய அதுவே சாப்பிடும் பூதகணம்லே.”

“அதைய அதுவே சாப்பிடும்ன்னா அப்புறம் எப்படி ஆள்திண்ணின்னு பேரு?” யாரோ ஒருவர் கேட்டார்.

“கேள்வி பெலமாத்தான் இருக்கி. ஆனா சிந்திக்கோணும்லே. அது அனுமாரு தூக்கியாந்த மலை. எல்லா பூதமும் ஓடிப்போக இது ஒன்னு மட்டும் மாட்டிகிடுச்சு. அனுமாரு யாரு. அத இறக்கி விட நேரம் இருந்துச்சாலே. இல்லேல்ல. தங்கூட்டத்த விட்டு வந்த பூதம் சாப்பாட்டு பழக்கம் மாறிலா போச்சுது. தன்னையே தின்ன பூதம் ஆள திங்க ஆரம்பிச்சுது. எல்லாம் டேஸ்ட்டு வந்து போட்டுச்சு. அந்த சிவனோட பூதகணத்த கொல்ல முடியுமா. முடியாதுலே. ஆனா தடுக்க முடியும். மலையோட ஒண்ணாம் அடுக்குல எல்லை அம்மன காவலுக்கு நேந்துவிட்டுப்புட்டாரு ராமரு. அந்த எல்லைய தாண்டி அது கீழ வராதுலே. மனுசங்க கீழ ஜீவிதம் பண்ணலாமல்ல இப்போ.” குழந்தைகள் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தனர்.

“மலை உச்சில சாமிதான இருக்கும், எப்படி பூதம்?” சிறுமி கேட்டாள்.

“உச்சிக்கு போனதுக்கு பொறவு சாமி என்ன பூதம் என்ன. நம்ம உச்சிலயும் பூதமும் இருக்கி சாமியும் இருக்கி,” தாத்தா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சிலர் நமட்டு சிரிப்புடன் எழுந்து சென்றனர்.

“எங்கலே போறீக” தாத்தா கேட்டார்.

கூட்டத்தில் ஒருவன், “ஹ்ம்ம்.., சாவரதுக்கு…” என்றான். அவர்கள் கூட்டமாக சிரித்தனர்.

“அதுக்கு ஏலே எக்காளச் சிரிப்பு … ஆள்திண்ணிட்ட போங்கலே. சுளுவா உயிர் எடுத்துரும். நீ இருந்ததே தெரியாதும்லே..அகத்தியன் உசுரு உட்டான் பாரு, அந்த மாறி..” கூட்டம் சட்டை செய்யாமல் அப்பால் சென்றது. தாத்தா குழந்தைகளை பார்த்து தொடர்ந்தார். “மொதல்ல உன் பேர உறிஞ்சும் அப்புறம் உன் மனச உறிஞ்சும் அப்புறம் ஒடம்பு உஷ்ணத்த. ஒடம்பு நீரு அப்படியே வழிஞ்சு ஓடிடும். அப்புறம் நரம்பு, சதை கடைசியா எலும்பு.”

“அப்புறம்?”

“மயிரு மட்டும் தான் மிஞ்சும்”

“அய்யே தாத்தா மயிரு சொல்றாரு”. “எல்லாம் டூப்பு டூப்பு.” வாய் பிளந்திருந்த மற்ற குழந்தைகளும் சேர்ந்து பரிகாசம் செய்துவிட்டு எழுந்து ஓடினார்கள். “ஏலே நில்லுங்கலே..” தாத்தா குட்டு வெளிப்பட்ட சிரிப்போடு கை அசைத்து கத்தினார். அவர்கள் ஓடி விட்டார்கள்.

ஒருவன் மட்டும் வயிற்றை பிடித்தவாறு அவரை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

2

வானை கிழித்துக்கொண்டு சஞ்சீவி மலை செங்குத்தாக நின்றிருந்தது. பல மைல் தூரம் வரை அதன் ஏழு அடுக்குகளும் தெரியும்படி இருந்தது. அதன் அடிவாரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலும் வீரஆஞ்சிநேயர் கோயிலும் சுற்றுவட்ட மலை கிராமங்களில் பிரசித்தம். அதன் ஐம்பத்தியாறு கிலோமீட்டர் நீளமுள்ள அரைவட்ட முற்பாதி மட்டும் தான் ஊரை நோக்கி இருக்கும். அதன் பிற்பாதி காடு கொண்டுள்ளது. அந்த ஐம்பத்தியாறு கிலோமீட்டர் முழுவதும் வெவ்வேறு மலை கிராமங்கள். கோதண்டராமர் கோயிலின் பின்புறம் உள்ள அகழியில் ஏறி இறங்கினால் மலை ஆரம்பிக்கும் அடிவாரம் வரும். அகழியில் மழை தண்ணீர் நிரம்பியிருந்தால் படகு இல்லை என்றால் படிக்கட்டு பாதை. படிக்கட்டு பாதை மலையின் முதல் அடுக்கு வரை செல்லும். முதல் அடுக்கின் முடிவில் புராதானமான எல்லை அம்மன் கோயில் இருக்கும். அந்த எல்லைக்கு மேல் மனித சஞ்சாரம் நிகழ்ந்ததில்லை என்பது ஊருக்குள் பேச்சு. அதனால் அந்த எல்லையில் அபாய பலகை வைத்திருந்தார்கள்.

“மேலே செல்லாதே! சென்றவர்கள் திரும்பியதில்லை.”

3

“நான் யார்” என்பது போன்ற தத்துவ சிக்கல்கள் ஒரு வயிற்றுவலிக்காரனுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் வெறும் வயிற்றுவலி என்றுதான் சொல்லுவான். எனக்கு எப்போதாவது வலி இல்லாமல் இருக்கும். அப்படி ஒரு நாளில் தான் இந்தக் கேள்வி என்னை வந்தடைந்தது. உண்மையில் நான் யார்? ஊரார் சொல்வதுபோல் நான் அரைப் பயித்தியமா? ஊரார் அப்படி சொல்வதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் என் அண்ணன் ஒரு முழுப் பயித்தியம். என் கிராமத்து தார் சாலையில் கையில் ஒரு போசியுடன் அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருப்பான். போசியில் எது விழுந்தாலும் சாப்பிடுவான். விழாவிட்டால் இல்லை. எனக்கு என் பெற்றோர் விட்டு சென்ற ஒரே துணை. மாதம் ஒருமுறை அவனுக்கு சர்வாங்க சவரம் செய்து விடுவேன். கூட நானும் செய்து கொள்வேன். ஏதோ அரை நிஜார் போட்டு வந்த வெளிநாட்டினர் முன்னிலையில் செய்து கொண்டோமாம். அதற்கு தர்மத்திற்கு அடித்தார்கள் அரை நிஜார் போட்ட நம்மூரார். அன்றிரவு அண்ணன் இறந்து போனான். அப்போது எனக்கு நாற்பத்தி ஐந்து வயது. அப்போதிருந்தே எனக்கு வயிற்றுவலி. இந்த வேதனையை யாரிடம் சொல்ல. என்னிடம் பேசுவாரில்லை. வலி இல்லாதபோது நான் பேசிக்கொள்வேன். சொல்லிக்கொள்வேன். கொஞ்சம் இருங்கள் என்னை யாரோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“டேய்…என்னடா? வயிறு வலிக்குது வாடா..” போய்விட்டான். பார்த்தீர்களா இப்படித்தான். அவர்களும் பேசமாட்டார்கள். ஆனால் வலி நல்லதும் செய்யும்.

இங்கு நான் தனிமையில் இருக்கிறேன். அபாரமான தனிமை. தனிமையே தன் அளவில் எடை மிகுந்தது. அது ஒரு பூதம். அந்த பூதத்தை தாங்கி கொள்ளவே முடியாது. அது அட்டணங்கால் போட்டு அமர்ந்திருக்கும். அதற்கு மருந்தாக மனம் வயிற்று வலியை எதிர்நோக்கி இருக்கும். வயிற்று வலி இல்லாதபோது அதற்கு பதிலியாக ஒரு சாட்டையை எடுத்து என்னை நானே சீடராடிக்கொள்வேன். அது நல்ல துணை. ஆனால் வலி மீண்டும் சஞ்சரிக்கும்போது மூளையின் அனைத்து காந்த அலைகளும் வயிற்றை நோக்கியே இழுக்கும். பூதம் சிறிது ஆட்டம்காணும். ஒற்றை புள்ளியாக வலி தோன்றும் போது இருக்கிறதோ இல்லையோ என்ற அவஸ்தை. சும்மா எட்டிப்பார்த்து விட்டு போய்விட்டால்? வந்ததை எதைக்கொண்டு பிடித்து வைத்திருப்பது. ஆனால் உருண்டு திரண்டு உருக்கொண்டு மின்மினிபோல பிரகாசத்தை சேர்த்து சேர்த்து திடப்பொருள் போல இதோ இருக்கிறேன் என்று வந்து நிற்கும்போது கிடைக்கும் ஆசுவாசம் கோடி புண்ணியம். பூதம் ஓடிப்போகும்.

தாய் தனிமையில் இருப்பதில்லை. வயிற்று வலி எனும் இக்கருவை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொள்வேன். கருவிற்கு கை கால் முளைக்கும். என்னை ஆங்காங்கே வருடிக்கொடுக்கும். என்னை நிரப்பும்; ஆனந்தத்தில் திளைக்க வைக்கும். பேசிக்கொள்ள, என் குறைகளை முறையிட ஒரு ஜீவனென அது உருவாகி நிற்கும். தனிமையை விட்டு வெகுதூரம் வந்திருப்பேன். குழந்தைகள் கபடமற்றவை. அவை தீங்கிழைக்காது ஆனால் அப்படியேவும் இருக்காது. அது வளரும். வளர்ந்து பெரிய ஆள் ஆகும். கேட்க ஆள் இல்லை ஆதலால் அது என்னை மிரட்டும். அது சிறிதாக இருக்கும்போது செய்த சேட்டைகள் எல்லாம் தொந்தரவாக இருக்கும். தொந்தரவு வளர்ந்து கொடூரமாக மாறும். அப்படி உருப்பெற்ற கொடூரம் என்னை தின்று இல்லாமலாக்கும். என் இருப்பு அடியோடு காணாமல்போய் அது மட்டுமே நின்று ஆடும். மிச்சசொச்சமாக இருக்கும் என் மனம் தனிமையை எதிர்நோக்கி இருக்கும். இது வேறொரு பூதம். இந்த பூதத்தையும் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இதுதான் என் பெண்டுலம். தனிமைக்கும் வலிக்குமாக ஆடிக் கொண்டிருக்கிறேன். இதன் இனிய பகுதி என்பது நடுவே இருப்பது. பெண்டுலம் மாறும்போது கிட்டும் க்ஷண நேர மத்திமம். மத்திய கதியை பிடித்து நிரந்தரம் செய்வதுதான் சவாலே. சவாலுக்கான ஒரே பதில் பெண்டுலத்தை நிறுத்துவது தான். இரு பூதத்திற்குமான செயல் கலத்தை இல்லாமல் ஆக்குவது. பூதங்களை பூதத்திற்க்கே பலியிடுவது. ஆள்திண்ணியிடம் சரண்புகுவது. சுகமரணம் எய்துவது. உடல் விடுவது. உயிர் பிரிப்பது. இனி கீழ் லோகம் எமக்கு ஆகாது. அதுவும் எம் அண்ணனை அடித்துக் கொன்றவர்கள். பாதாள லோக வாசிகள். நான் மேல் லோகத்திற்கு உரியவன். மோட்ச வீடு எனக்காக திறந்திருக்கும். ஆள்திண்ணி எம்மை இட்டுச் செல்வான். அந்திமம் என்று வந்தவுடன் தான் நான் யார் என்ற கேள்வி முக்கியமாகிவிடுகிறது. இப்போது சொல்லுங்கள் நான் யார். பைத்தியம் எனில் நான் பைத்தியமே. நான் ரோகி எனில் நான் ரோகியே. நான் யோகி எனில் நான் யோகியே. ரோகிக்கும் யோகிக்கும் நடுப்பில் இருப்பவன் போகி. நான் போகி இல்லை. போகியர் அனைவரும் கீழ் லோகத்திற்கு உரியவர்கள். ரோகிக்கும் யோகிக்கும் மட்டுமே கிட்டும் ஒன்று உண்டு. அதுதான் மேல் லோகம். நான் மேல் லோகத்திற்கு உரியவன்.

4

கோதண்டராமரும் வீரஆஞ்சநேயரும் சஞ்சீவி மலைக்கு புறமுதுகிட்டு நின்றிருந்தனர். ஆறுமுகத்திற்கு சில நாட்களாகவே பெண்டுலம் அதி உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. வலி, தனிமை தவிர வேறு எந்த மெய்ம்மையும் அவன் உலகத்தில் இல்லை. ஒரு சுடர் விளக்காக தூரத்து நட்சத்திரமாக ஆள்திண்ணி பூதம் மட்டும் இருந்தது. அந்திம கால அவஸ்தை அவனை ஆட்கொண்டிருந்தது. சுலபமான முடிவு என்றாலும் சுக மரணம் என்றாலும் அது அறுதி முடிவுதானே. முற்றான மரணம் தானே. இதுவரை தெரிந்ததெல்லாம் துடைத்தெடுக்கப்படும் அல்லவா. கருக்கிருட்டு; நிசப்த பிரவாகம்; பிரபஞ்சத்தையே ஊசி முனையில் நிறுத்திய கனம். மலையின் முதல் அடுக்கில் உள்ள எல்லை அம்மன் கோயிலுக்கும் அடிவாரத்திற்கும் மேலும் கீழுமாக போய்வந்து கொண்டிருந்தான். பெண்டுலம் தறிகெட்டு ஆடியது. அந்த உச்ச விசையில் வலியும் தனிமையும் ஒரு தரப்பாக கருக்கிருட்டு மாற்றுத் தரப்பாக நின்றது. இது என்ன புது பெண்டுலம். இந்த புதிய விதிமுறையை அனுசரிக்கவோ அனுபவ வட்டத்திற்குள் வைக்கவோ அவன் தயாராக இல்லை.

“என்ன ஆறுமுகம்! மேல போகப் போறியா?….” என்ற கேள்வி உதிக்கையில் அவன் “ஆமாம்…..” என்று தீர்க்கமாக சொல்லிக் கொண்டான். அவன் சொல்லிக் கொண்டதாலேயே அம்மனின் எல்லையைத் தாண்டி எட்டு வைத்தான்.

“மேலே வராதே…..” அசரீரி அந்த பிரமாண்ட மலை முழுதும் ஒலித்தது. ஆறுமுகத்திற்கு கண்ணீர் பெருகியது. ஆள்திண்ணி பேசிவிட்டது, மோட்ச வீடு திறந்துகொண்டது. “நான் வாரேன்…. நான் வாரேன்….” என்று கத்திக்கொண்டும் பெண்டுலத்தை இழுத்துக்கொண்டும் பாறையைப் பிடித்து செங்குத்தான மலையில் வெறிகொண்டு ஏறினான். திரும்பிப் பார்க்கவே இல்லை. ஒரு கையில் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டும் மறு கையை பாறையின் மீது ஊன்றியும் கிடுகிடுவென்று ஏறினான். வழுக்கிய செருப்பை உதறினான், மூச்சு வாங்கியது, அடிவயிறு விண்விண்னென்றது. பாறை பிளவுகளை பிடித்து ஏறினான், இடுக்குகளில் முளைத்திருக்கும் செடிசெத்தைகளை பிடித்து ஏறினான். பிடிமானம் ஏதும் இல்லையென்றால் மலையோடு மலையாக சாய்ந்து கை மணிக்கட்டை பாறையில் பல்லிபோல தேய்த்து தேய்த்து ஏறினான். “இனி கீழ் லோகம் எமக்கு ஆகாது. நான் மேல் லோகத்திற்கு உரியவன். மோட்ச வீடு எனக்காக திறந்திருக்கும். ஆள்திண்ணி எம்மை இட்டுச் செல்வான்.” சொல்லிக்கொண்டான். விரல்கள் அனைத்தும் இல்லாதது போல் இருந்தது, வாய் வறண்டது, தொண்டை இறுகியது, தொடைகள் நடுங்கியது. தோள்பட்டை கனத்தது. பாறையின் வெம்மையால் உடல் வெந்தது. பகல் முழுக்க ஏறினான். திரும்பியே பார்க்கவில்லை. “பூதமே சரணம் பூதமே சரணம் பூதமே சரணம்..”, மனம் உச்சாடனம் செய்தது. “இவ்வுலகு எனக்கு வேண்டாம். இவ்வுலகில் எனக்கு எதுவும் வேண்டாம். வாழ்வு மட்டும் அல்ல இவ்வுலகின் மரணம் கூட எனக்கு வேண்டாம். நான் இறைஞ்சுவதெல்லாம் மேல் உலகின் மரணம். நீ மட்டுமே எனக்கு அதை தர முடியும்.”

அவன் ஏறினான். கால நேரம் தெரியாமல் ஏறினான். உடலால் ஏறினான்; எண்ணத்தால் ஏறினான்; உயிரால் ஏறினான். ஏறுவதைத் தவிர அவன் வேறொன்றாக இருக்கவில்லை. வலுவிழந்த கால்கள் எப்போது வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்துவிடும். தளர்ந்த கைகள் அடுத்த கணம்கூட வழுக்கிவிடும். எவ்வளவு இழுத்தாலும் மூச்சுக்காற்று போதவில்லை. இனி தொண்டையில் ஓட்டையே விழுந்துவிடும். செங்குத்தாக செல்லும் மலையில் இன்னும் இரண்டு எட்டு. உடலின் கடைசி வியர்வைத் துளி வெளியேறும் போது ஒரு சமதளம் தன்னை அறிவித்தது. அதன் நுனியை பற்றி ஏறி உருண்டு தரையில் முதுகை பதிய வைத்தான். உடல் அங்கங்கள் செயல் இழந்தன. மொத்த காற்று வெளியையும் உள்ளிழுத்து விட்டுக் கொண்டிருந்தான். குடல் தன்னால் கழிந்தது. அந்தி படர்ந்து கொண்டிருந்தது. உடல் இல்லாதவன் போல அங்கேயே கிடந்தான். நகர்ந்து செல்லும் ஆகாயம்; சூழ்ந்து செல்லும் காற்று; ஊடுருவிச் செல்லும் ஒளி என முதல் முறையாக கடந்து செல்லும் காலத்தை கண்முன் பார்த்தான். ஒவ்வொரு அங்கமாக மீண்டுகொண்டு வந்தது. தூரத்தில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. மூளையின் கட்டளையில்லாமலேயே உடல் அத்திசை நோக்கி ஊர்ந்து சென்றது. அந்த சின்ன சமதளத்தின் ஓரத்தில் ஒரு சுனை. சுனையின் சிறிய தெப்பத்தில் முகத்தை பதித்தான். உயிர் குடித்தான். உடல் சரிந்தான். “மேலே வராதே….” என்ற அசரீரி ஒலித்தது. பூதம் தான் பேசுகிறது என்று உணர்ந்தான். பிரக்ஞை விழித்திருக்க உடலால் தூங்கிப் போனான்.

ஏதோவொரு நாளின் முற்பகலில் அவன் விழித்தான். உடல் எடையின்றி இருந்தது. சுனையை அள்ளிப் பருகினான். கீழ் உலகம் அடியாழத்தில் எங்கோ சென்று கொண்டிருந்தது. “பூதமே சரணம்” என்று தனிச்சையாக வாய் முணுமுணுத்தது. தான் எங்கு செல்ல வேண்டும் என்ற உறுதியை சங்கல்பம் செய்துகொண்டு அக்கம்பக்கம் தேடினான். தண்ணீர் எடுக்குமாறு குவளை போல் எந்த சாதனமும் தென்படவில்லை. இயன்றவரை தண்ணீர் குடித்துவிட்டு மேல் நோக்கி ஏற முற்பட்டான். இரண்டு ஆள் உயரமுள்ள ஒரு நச்சரவம் மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்தது. இவனை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றது. பூத ஒலி கேட்ட பின்பு எதுவும் ஆச்சர்யமில்லை. அவன் முன்னேறி சென்றான். அவனுக்கு இன்று தேர்ச்சி இருந்தது.

அவன் தொடர்ந்து மேலேறினான்.ஆங்காங்கே கள்ளிச் செடிகள் அதன்மேல் இளஞ்செந்நிற பூக்கள். மழைத் தண்ணீர் வழிந்தோடிய தடம் வழுக்கியது. மற்ற இடம் உப்பு படிந்து ஏறுவதற்கு சொரசொரப்பாக இருந்தது. தன்னை ஏதோ கண்கள் கவனிப்பதாக உணர்ந்தான். கூட்டான கண்கள். வான் கழுகுகள் அவனுக்கு இணையான உயரத்தில் பறந்தன. அவைகள் இவனை சட்டை செய்யவில்லை. பூதமா? அதுவும் நாலு கால்களிலா? அது பூதமில்லை குதிரைகள். குதிரை வடிவில் உள்ள பூதமா? கண்கள் நிலைகுத்தி இருந்ததினால் இன்னும் கூர்கொண்டு அவ்வுருவங்களை தெளிவு செய்தது. ஏதோ மறி ஆடுகள். இவ்வளவு உயரத்திலா? அவனை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மலைப் பாறை மீது படிந்திருந்த உப்பு படலத்தை நக்கி நக்கி உண்ண ஆரம்பித்தன. தன்னை மறந்து பார்த்தான். கள்ளிச் செடிகளை தீண்டாமல் மேலேறினான்.

மீண்டும் கை கால்கள் சோர்ந்தன. உளம் சேர்ந்து சோர்ந்தது. பாறைத் திட்டுகள் வரும்போதெல்லாம் அதில் அமர்ந்து இளைப்பாறினான். வான் கழுகுகள் அவனுக்கு கீழே பறந்து கொண்டிருந்தன. அடி ஆழத்தில் கீழ் உலகம் உறைந்தாற்போல் தென்பட்டது. சூரியன் சுட்டது. பாறை இடுக்கில் காட்டு காந்தள் செடிகள் சில பூத்திருந்தன. இவ்வளவு உயரத்தில் வண்ணத்துப்பூச்சிகளோ வண்டுகளோ, தேனீக்களோ இருக்க வாய்ப்பில்லை என்றுதான் மனம் சொன்னது. நேர்க்காட்சியாக அவைகளை பார்க்க முடியாவிட்டாலும் அவைகளின் இருப்பை ராட்சஸ காந்தள் மலர்கள் அனுமானம் செய்தளித்தன.

காந்தள், தீ எரிவது போல இருந்தது. அடிப்பாகம் மஞ்சளாகவும்.மேற்பாகம் சிவப்பாகவும். அதோடு சேர்ந்து தானும் எரிவது போல் இருந்தது. உயிர்தான் விடவேண்டும் என்றால் இந்த போராட்டம் எதற்கு? இங்கே இருந்து குதிக்கலாம் அல்லது இப்படியே அமர்ந்தும் போகலாம் அல்லது இந்த காந்தள் விதையையோ கிழங்கையோ சாப்பிட்டாலும் போதும். ராட்சஸ காந்தள்கள்; அப்படியானால் ராட்சஸ தேனீக்கள். தேனீக்கள் தன்னை மொய்ப்பதை, உடலை போர்த்துவதை நினைத்துப் பார்த்தான். மெய்சிலிர்த்தது. “மேலே வராதே…” என்ற ஒலி கேட்டது. உடல் விதிர்த்தது. அட்ரீனல் சுரந்தது. கிடைத்த புது சக்திப் பாய்ச்சலில் “பூதசரணம்… பூதசரணம்… பூதசரணம்…” என்று சொல்லிக்கொண்டு மோட்சக் கதவை தட்டுவதற்கு மேலேறினான்.

அவன் வயிறு முதுகெலும்புடன் ஒட்டியிருந்தது. எப்போது சட்டை கிழிந்து இவன் உடல்விட்டது என்று தெரியவில்லை. கன்னங்கரிய உடல் பாறையின் மீது படிந்து ஏறியது. உடல் அவதி ஒரு அங்கமென அவனில் குடியேறியது.

அந்த அந்திப்பொழுதில் சமதளம் அடைந்தான். குளிர்காற்று அவனை பிடித்து வைத்திருந்தது. தண்ணீர் ஓடும் சப்தம். அந்தியின் வெயில் மலையை பொன்னால் போர்த்தியிருந்தது. மலையிலிருந்து வழிந்தோடி வந்த தண்ணீர் ஒரு தட்டையான நீர் பிரவாகத்தை உருவாக்கி மீண்டும் பாறை இடுக்குகளில் வழிந்து மறைந்து கொண்டிருந்தது. பொன்னால் சட்டகமிட்ட ஆடிபோல் அந்த சிறிய பிரவாகத்தை அவன் சொர்க்கமென பார்த்தான். தன் உடலின் ஒரு பாதி அங்கு கிடப்பது போல. ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான். நீர் அவனை முழுதுமாக ஏந்திக்கொண்டது; அவனை அகமும் புறமுமாக கழுவி எடுத்தது. அவன் அங்கங்கள் மெல்ல மெல்ல தன்னிலை மீண்டன. குளிரியது. இரவில் பாறை இடுக்குக்குள் சென்றான். வெதுவெதுப்பாக இருத்தது. “மேலே வராதே… மேலே வராதே….” என்ற ஒலி மீண்டும் ஒலிக்க அதன் ரீங்காரத்துடன் தூங்கிப்போனான்.

5

சமதளத்தின் விளிம்பில் நின்று எட்டிப் பார்த்தான். வெண்மேகங்கள் படர்ந்திருந்தன. மேலே பார்த்தான். நீல நிறமாக வெறிச்சோடிக் கிடந்தது. எண்ணங்கள் சீரில்லாமல் சிதறி ஓடின. எண்ணத் தொடர்ச்சி இல்லாததால் ஞாபக சரடு அறுந்திருந்தது. எவ்வளவோ அலசிப் பார்த்துவிட்டான் அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. மூச்சு மட்டும் கனத்திருந்தது. எங்கோ உள்ளிருந்து “பூதசரணம்” என்ற சொல் வந்து விழுந்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டான். “சரணம் செய்… பூத சரணம் செய்… பூதசரணம்… பூதசரணம்… பூதசரணம்…” என்ற உச்சாடனம் அவனை மேலிழுத்து சென்றது.

பாதி வழியில் உச்சாடனத்தையும் மறந்தான். செல்லும் வழியில் பாறை இடுக்கில் ஒரே ஒரு வாய் தண்ணீர் கிடைத்தது. உறிஞ்சி எடுத்தான். மேலே செல்லும் உந்து விசை மட்டும் தான் அவனில் இப்போது மிச்சமிருந்தது. மேலே சென்றான். அடுத்த சமதளம் அடைந்தான். ஆளைக் கவிழ்க்கும் அசுரக் காற்று. உடல் கசிந்திருந்தது. அங்குமிங்கும் பார்த்தான். எங்கும் தண்ணீர் இல்லை. அப்படியே அமர்ந்தான். மண்ணுமில்லாமல் வானுமில்லாமல் எங்கோ ஆகாசத்தில் அமர்ந்திருந்தான். சொற்கள் என்று அவனிடம் ஏதுமில்லை. தொடர்ச்சியற்ற ஆதி உந்துவிசை மட்டும். அங்குள்ள அநாதி அமைதியோடு அநாமதேயனாக பொருந்திப்போய் இருந்தான். எல்லாவற்றையும் முதல் முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோவொரு புலரியின் பனிக்காற்று பட்டு பாறையில் ஈரப் பிசுக்கு வழிந்தது. அவன் பாறையை நக்க ஆரம்பித்தான். அங்குள்ள எல்லா ஈரத்தையும் நக்கினான். நாக்கு கிழிந்து குருதி வழிந்தது. அவன் நக்குவதை நிறுத்தவில்லை. திடீரென்று அவன் கால்கள் அமர விருப்பம் இல்லாதது போல் அவனை எழுப்பி நிறுத்தின. நிறுத்தியவனை மேல் உந்தி சென்றது.

இயந்திரம் போல் சென்று கொண்டிருந்தான். மலையின் சஹஸ்ராரத்தில் இருந்து ஏதோ ஒரு சங்கிலி அவனை இழுத்துக் கொண்டிருந்தது. முழுதுமாக அதன் பிடியில் இருந்தான். மேல்விசை அதற்கு அனுகூலமாக இருந்தது. ஒரே பொழுதில் அவன் மலையின் ஆக்கினைக்கு வந்து சேர்ந்தான். அது பெரிய மைதானம் போல் இருந்தது. மைதானத்தின் முடிவில் மலையின் பின்புறம். அது அடர்காடாக படர்ந்து விரிந்து சென்றது.

மைதானத்தின் இடது ஓரமாக மலை மேலும் சில அடிகள் கூம்பு போல உயரம் சென்றது. மைதானத்தின் வலது ஓரமாக ஒரு மாபெரும் குகை. அதன் வாசல் பனைமரம் உயரம் இருந்தது. நினைவின் அடுக்குகள் இல்லாத அந்த பெயரிலி குகையின் ஓரமாக அமர்ந்து நிழலாறினான். உடல் முழுதும் வழிந்தோடும் வறண்டு கிடக்கும் காயங்கள். ஆதி மிருகமென அதை நக்கிக் கொண்டான். அங்கேயே அப்படியே இருந்தான். வலியின் உக்கிரத்தையோ தனிமையின் அருகாமையையோ உணரும் அளவில் அவன் பிரக்ஞை சுடர் விடவில்லை. அந்த பிரக்ஞையும் அணைந்து வெளியுலகம் முற்றாக மூடிக்கொண்டது. மயங்கி விழுந்தான்.

6

முடிவற்ற காலத்தின் ஒரு பொழுதில் அவன் பிரக்ஞை விழித்தது. அவன் தூக்கி எறியப்பட்டது போல் விதிர்த்து எழுந்து நின்றான். சிந்தையில் தொடர்ச்சியற்ற ஏதேதோ சொற்கள். அவன் மலை ஏறி வந்த நினைவு கனவு போல சிதறி சிதறி அலை பாய்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். இது ஒரு குகை. தன்னை யார் இங்கு கிடத்தி வைத்தது. இதோ பிரம்மாண்டமான கல் சிம்மாசனம். கல் படுக்கை. இங்கு யாரோ இருக்கிறார்கள். அதன் அருகாமையை உணர முடிகிறது.. “பூதம்… ஆம் பூதம்… அதை தேடித் தான் நான் இங்கு வந்தேன். ஏன் அது இங்கு இல்லை. எங்கு சென்றது. இதோ அதன் ஆயுதம். ஆயுதமே என் உயரம் இருக்கிறது. கோடாலியா அல்லது கதாயுதமா? இதன் கோட்டைக்குள் நான் வந்திருக்கிறேன். அப்படியானால் அதுவே முதல் வெற்றி. அதன் கண்ணில் படக் கூடாது. ஒளிந்திருந்து கவனிக்க வேண்டும். ஒளிந்துகொள்.” ஓடிச்சென்று குகையின் இடுக்குகளைத் தேடி ஒரு விரிசலில் ஏறி அமர்ந்து கொண்டான். உடல் நடுங்கியது. உளம் அதிர்ந்தது. தான் மலையேறி வந்த நினைவை மீட்க முயற்சித்தான். அது மங்கலாக தழலாடியது. “ஏதோ முக்கியமான ஒன்றை மறக்கிறேனே; அதற்குத்தான் இந்த வேள்விப் பயணம். பூதம்….பூதம்… பூதா… பூதா…பூத…பூத… பூதவதம்!!! ஆமாம் பூதவதம்… வதம் செய்… பூத வதம் செய்… பூதவதம்… பூதவதம்…” முதல் குழப்பம் தீர்ந்தது. மனம் அதை பற்றிக்கொண்டது. பற்றிக் கொண்டதை சொல்லி சொல்லி பழக்கம் செய்தது. ஒப்பித்து ஒப்பித்து புதுப்பித்து. குகைக்குள் சுற்றி வந்த காற்றும் பூதவதம்…பூதவதம்.. என்றே முழங்கியது. அப்படியே அமர்ந்துகொண்டான்.

“நாட்கள் ஓடின

இன்று நேற்றைப்போலவே
அலர்ந்தது.

நேற்று இன்றிற்கு
தகவல் சொல்லியது.

இன்று நேற்றை
புனைந்தது கொண்டது.

நாளையை அறிவித்துவிட்டு
இன்று மறைந்தது”

பசித்தது. வானில் இருந்து வந்த பசி. எத்தனை நாட்கள் தான் இப்படியே அமர்ந்திருப்பது. பூதம் வரும் சாடையைக் காணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தை தளர்த்தினான். இறங்கி குகையை அலசினான். பூதத்தின் இருக்கை; படுக்கை; மலஜல பாறைப் பிளவு, பூதத்தின் கால்தடம் பட்டு பட்டு தேய்ந்த பாறைத் தடம். அவ்விடம் மேலும் பழக்கம் ஆகியது. தயங்கித் தயங்கி வெளியே வந்தான். வெயில் சுட்டெரித்தது. உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. மைதானத்தை நோட்டம் விட்டான். விந்தையான நிலம் அது. குகையின் ஓரத்தில் சுக்குட்டி செடிகள். அதில் அடர் நீல நிறத்தில் சிறிய சிறிய சுக்குட்டிப் பழங்கள். க்ஷணம் தயங்காமல் பொறித்துப் பொறித்து வாயில் போட்டான். புத்துணர்வு.

மைதானத்தின் விளிம்பையும் கடைசியில் உள்ள காடு ஆரம்பிக்கும் விளிம்பையும் தயங்கித் தயங்கி சென்று தடயங்கள் சேகரித்தான். தடயங்கள் எல்லாம் பூதம் அடர் காட்டிற்குள் சென்றிருக்கும் வாய்ப்பையே சொன்னது.

அவன் திட்டம் தீட்டினான். அங்கு கிடைத்த கூறிய கற்களை சேகரித்தான். காட்டிற்கு சென்று மரத்தடிகளை உடைத்து வந்து அதனுடன் கூறிய கற்களை வெட்டுப்புற்களை வைத்து கட்டினான். வெட்டுப்புற்களை ஒன்றாய் முடிந்து அதனுள் சிறிய கற்களை போட்டு கவண் செய்து வைத்தான். கள்ளிச் செடிகள் பிய்த்து குகை எங்கும் பரப்பி வைத்தான். பாறாங்கற்களை உருட்டி குகையின் மீது வைத்து வெட்டுப்புல் கயிற்றால் கட்டித் தொங்க விட்டான். தன் அறிவு என்ன சொன்னதோ அதுவெல்லாம் தயாரித்து வைத்தான். போருக்கு எந்நேரமும் தயாராக இருந்தான்.

நாட்கள் சென்றது. ஒன்றுமே நிகழவில்லை. “பூதத்திடம் போரிட்டு வெல்வது கடினம். அதனிடம் மண்டியிடுவோம்; நம்பிக்கைக்கு பாத்திரம் ஆவோம். ஏவல் வேலைகளைச் செய்வோம்; தக்க சமயத்தில் சோளியை முடிப்போம். முதலில் அதனிடம் நன்முத்திரை பெறவேண்டும்.” சொல்லிக்கொண்டான். வெட்டுப்புற்களை சீமாறாக கட்டி குகையை பெருக்கினான். காட்டிற்குள் ஒழிகிச்செல்லும் ஓடையிலிருந்து மர ஓட்டில் தண்ணீர் சுமந்து வந்து வாசல் தெளித்தான். பூத இருக்கைக்கு சாமரம் தயாரித்தான். படுக்கைக்கு மஞ்சம் தயாரித்தான். மலர்கள் சூடிக்கொண்டான்.

நாட்கள் சென்றது ஒன்றுமே நிகழாத இடத்தில் ஒன்றுமே நிகழவில்லை. பூதத்தின் வருகைக்கு எந்த சகுனமும் இல்லை. மலையின் விளிம்பில் வந்து நின்று பார்த்தான். மேகக்கூடங்களுக்கு கீழே பரந்து நீண்டு கிடந்த பூமி அந்நியமாகத் தெரிந்தது. பகலில் எந்நேரமும் சூரியன் கடிந்து கொண்டும் இரவில் நிலவு வருடிக்கொண்டும் மீன்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டும் இருந்தது. விசாலமாக உணர்ந்தான். விரிந்து கொண்டிருந்தான்.

நாட்கள் சென்றது. அவன் காலடித் தடம் படாத இடம் அந்த மைதானத்திலும் குகையிலும் இல்லை. சுக்குட்டிப்பழம் திகட்டியது. கோவைப்பழம் புதிய வரவு. காட்டிற்குள் பிரவேசிக்க பிரவேசிக்க புதிய பழங்களும் கிழங்குகளும் கிடைத்தன.

நாட்கள் சென்றது. பூதம் என்ற ஒன்று இருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது. கணம்தோறும் அது வலுப்பெற்றது. இறங்கிச் செல்வோமா என்ற எண்ணம் உதிக்கையில் அவ்விடத்திற்கு பொருந்தாத ஒரு ஒலி கேட்டது. முதலில் மனம் ஏற்க மறுத்தது. ஒலி முணுமுணுப்பாக கேட்டது; உடல் தூக்கிவாரி போட்டது. உடல் குறுக்கிக் கொண்டான். தூரத்தில் ஒரு உருவம் அசைந்தது. பரந்த மைதானத்தில் திடீரென்று அவன் ஒளிவதற்கு ஒரு இடம் இல்லாமல் ஆனது. முணுமுணுப்பு பேச்சொலியாக கேட்டது. உறுமியதுபோல். பிளிறியதுபோல். ஓலமிடுவதுபோல். சடசடவென்று மலையின் சஹஸ்ராரத்திற்கு ஏறினான். குரல் இப்போது தெளிவாகவே கேட்டது.

“மேலே உனக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது..”

விருந்தா? என்னைத் தான். என்னையே தான்.

“என்ன விருந்து மாமா.. எனக்கு கொலைப் பசி..” பெண் பூதக் குரல்.

கணவன் பூதம் மேல் உலகம் அதிர்வது போல் சிரித்தது. மனைவி பூதம் கீழ் உலகம் அதிர்வதுபோல் சிரித்தது. இரண்டு பூதமா? நான் சிறிதும் எதிர்பார்க்காதது. நான் என்ன செய்வேன்? அவர்கள் ஒரு முடிவுடன் வரும்போது நான் மன்றாட முடியுமா? பூதவதம் செய்ய வந்துவிட்டு இது என்ன பயம். உள்ள பயத்தை எப்படி இல்லை என்று சொல்வது. சரி! அவர்களுக்கு விருந்தாவதா அல்லது வீரமரணம் எய்துவதா?

சஹஸ்ராரத்தில் பாறைக்கு பின் மறைந்திருக்கும் அவனுக்கு ஆயுதமென்று ஒன்றும் இல்லை. அவன் காலடியில் இரண்டு பெரிய பாறாங்கற்களை தவிர. இரண்டே இரண்டு கற்கள். அவ்வளவே. அந்தி என்றபோதும் சிறிது வெளிச்சம் இருந்தது. “சீக்கிரம் இருட்டிவிட்டால் இன்று பிழைப்பேன்.” அவனுக்கு பதறியது.

“என்ன விருந்து மாமா? சொல்லுங்க…”

“கொஞ்சம் பொறு. அது தான் என் கல்யாண பரிசு.”

“ருசியா இருக்குமா?”

“அதுக்கு என்ன குறை.”

“நான் ருசியாக இருக்க மாட்டேன். என் காயங்களை நானே நக்கிப் பார்த்திருக்கிறேன். இதை எப்படி பூதத்திடம் சொல்வது. சொன்னாலும் பூதம் விடுமா. என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் சில நேரத்தில் என்னை கண்டுபிடித்துவிடும்… பிழை செய்துவிட்டேனா… இங்கே வந்திருக்கக் கூடாது…” பயத்தில் மனம் இண்டு இடுக்கெல்லாம் சென்று புலம்பியது.

ஏறிவருகிறது; நெருங்கி வருகிறது; பார்க்கப் போகிறது…

இப்போது அவன் தெளிவாகப் பார்த்தான். முழு உருவத்தையும் பார்த்தான். முகத்தில் அறைந்தார் போல் ஒன்று உணர்ந்தான். கொஞ்சம் கீழே குனிந்து “மேலே வராதே..” என்றான்.

“மாமா.. யார் பேசுறது?”

“ஏய் கொஞ்சம் இரு..”

இன்னும் சற்று குனிந்து “மேலே வராதேன்னு சொன்னேன்ல…..” என்று உறுமினான்.

“ஏய் ஓடு…. ஓடு…. ஓடு…. நிக்காத ஓடு….ஓடு….” மனைவி முன்னால் ஓட; அரை நிஜார் போட்ட கணவன் பின்னால் தலை தெறிக்க ஓடினான்.

ஒரு பாறாங்கல்லை எடுத்து ஓடும் அவர்கள் தலையை குறி பார்த்து எறிந்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.