இருளின் மெல்லிய இலைகள்

மலையாள மொழி மூலம்:  கே. ரேகா  
ஆங்கிலம்:  ரீனா சலீல் 
தமிழில்:  தி.இரா.மீனா  

சுமையேற்றப்பட்ட வண்டி

அந்த ரயில் நிலையம் பனியில் குளித்திருந்தது. ஏறுவதற்கு அதிக பயணிகள் இல்லாத சிறு ரயில் நிலையத்தில், பயணச் சீட்டுக்களை வெளியிடும் மிகப் பழைய இயந்திரம் டுக்–டுக் என்னும் ஒலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அங்குள்ள வாகை மரம் பூக்களைக் கொட்டியிருந்தது. ஒரு பள்ளியிலிருந்து மணியடிக்கும் சப்தம் கேட்டது. அந்த ரயில் நிலையத்தின் உச்சியில் பறவைகள் வந்து உட்காருவதும், பறப்பதுமாக இருந்தன- அந்த நிலையம் பழைய காலத்ததாயிருந்தது.

இன்று அந்த இரவு ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து்விட்டது. சரியாக இரவு10.35 மணி. பொதுவாக அது பதினொன்று, பதினொன்றரைக்குத்தான் வரும். ஏறுவதற்கு ஏழெட்டுப் பயணிகள் மட்டுமேயிருந்தனர். நான்கு பேர் கொண்ட குடும்பம்— அப்பா, அம்மா, மகள், பேத்தி- நிலையத்தின் தென் பக்கத்திலிருந்த வயல் வழியினூடே வந்திருந்தனர். ரயில் சில நிமிடங்கள் மட்டுமே அங்கே நின்றது. அந்த நேரத்திற்குள் வண்டிக்குள் ஏறுவதென்பது அந்த வயதானவர்களுக்குக் கடினமாகவேயிருந்தது.

அம்மா சுற்றியிருந்த சால்வையை சரியாகப் போர்த்தும் அன்பான பாவனையில் அப்பா சரி செய்ய முயன்றார். அவர் கையைத் தட்டிவிட்டு அவள் ஒதுங்கினாள். தாங்கள் அந்த மாதிரி விஷயங்களுக்கான வயதைக் கடந்தவர்கள் என்று அவள் சொல்வதாக அவர் நினைத்தார். ஒருவித சங்கடம் அவர் முகத்தில் படர்ந்தது.

அவள் ஒரு போதும் தன் விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்தியதோ, கோபம் காட்டியதோ இல்லை. ஆனால் நம்பிக்கையின்மை என்னும் சுமையோடு அவள் வலிந்து இன்று வரை வாழ வேண்டியிருந்தது. இறுதியில் அவள் இந்தத் தேர்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அவளைக் கிழித்துக் கொண்டிருந்ததை மகளும் உணர்ந்திருந்தாள்.

அம்மாவுக்கு ஐம்பது வயது கடந்து விட்டது. தன் வயதுக்கு அவள் பலகீனமானவள். சர்க்கரை நோய், நெஞ்சு நோய்கள், இரத்த அழுத்தம் என்று எல்லாமுண்டு. வெட்கக்கேட்டுணர்வில் அவள் செய்யும் முதல் பயணமாக இது இருக்கலாம். அவர்கள் ஒரு கணக்கின் சரி, தவற்றை அவர்களின் இளமை நாட்களிலேயே கணக்கிட்டிருக்கின்றனர்.

இது எல்லாவற்றிற்கும் தான்தான் காரணமென்று மகள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் நிறம் மட்டும் மிகச் சிவப்பானதில்லையென்றால் மற்றவை எல்லாம் அமைதியாக இருந்திருக்கும்! அவளையறியாமலேயே அவள் கை கன்னங்களைத் தொட்டது. ரயில் நிலையத் தரையில் தன் பிரதிபலிப்பைப் பார்த்தாள். அது ஒரு பரிசோதனைக் கூடத்தின் மாதிரி முகம்.

விளக்கை நோக்கி ஒன்றிரண்டு அடி எடுத்து வைத்தாள்
.
உண்மை—என்ன சிவப்பழகு!

அவள் அப்பா இருள் போல கருப்பு, அம்மா ஒயின் போன்ற நிறம். பிறகு அவர்களுக்கு எப்படி இப்படி ஒரு சிவப்பான குழந்தை? அவள் தந்தை சந்தேகப்பட்டிருந்தால் அது ஒன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால் அதைப் பரிசோதிக்க எடுத்துக் கொண்ட காலம் மிக நீண்டதுதான், அவளுக்கு இப்போது வயது முப்பது.

தன் அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருடைய சந்தேகம் பரவியிருக்கும் முகம்தான் அவளுக்கு நினைவில் வரும். அவள் குழந்தையாக இருந்தபோது அப்பா அவள் கன்னங்களைத் தட்டி விட்டு முடிவில்லாத சந்தேகங்களோடு அவளைப் பார்ப்பார். “அப்படி ஒன்றுமில்லை,” என்று கடைசியில் சிறிது சத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்டதும் அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பும். குழந்தைகள் வளரத் தொடங்கியதும் அம்மா அதைக் கேட்காமல் இருப்பவள் போலிருக்கக் கற்றுக் கொண்டாள். இந்த நாட்களில், இப்படியான கேள்விகள் தன்னைப் பாதிக்காது என்ற ரீதியில் உதட்டைச் சுழித்துக் கொள்வாள். ஆனால்,அப்பா இளமைக் காலத்திலிருந்தே தனது முணுமுணுப்பைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். முடிவற்ற சந்தேகங்கள்… இந்தப் பயணம் அவருடைய சந்தேகத்தாலான மனதை விடுதலைப்படுத்தலாம்.

தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு திரும்பும் ஜெய்சன் பணத்தை எதிர்பார்க்கலாம். இந்தச் சோதனை அந்தப் பணத்திற்கு வழி வகுக்கலாம்.
அவளுடைய மகள் தாத்தா வாங்கித் தந்திருந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்தப் பயணம் பிடித்திருப்பது போலத் தெரிந்தது. அவள் வெளுத்த முகம் மகிழ்ச்சியின் அடையாளத்தைக் காட்டியது.

“எதைப் பற்றியும் நினைக்காதே அஞ்சு… கவலைப்படாதே…” அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

“அவருக்கு யோசிக்கும் ஆற்றலிலும் நோய் வந்துவிட்டது. அப்படி நினைத்துக் கொள் அவ்வளவுதான்.”

அம்மா அப்பாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கணவன் சொன்ன அந்தச் சோதனைகளைப் பற்றி நினைத்து தன் மகள் வருத்தமாக இருக்கிறாளென்று அம்மா நினைத்தாள்.

அம்மாவிற்கு ஜெய்சனின் விவகாரங்கள் பற்றி எதுவும் தெரியாது…ஆனால் யாருக்குத்தான் தெரியும்! கடவுளே! அவன் இப்போது எங்கேயிருக்கிறான்? வங்காளத்திலா? திரிபுரா? ஆந்திரா? நிச்சயமில்லை. ஒருவர் மனதிலிருப்பதைக் கொட்டித் தீர்க்க முடிந்தால்… ஆனால் அதற்குச் சாத்தியமில்லை. அவள் தோளின் சுமை மிக அதிகம், அவளால் குனியக் கூட முடியாது.

குழந்தைக்குப் போர்த்துவதற்காக அப்பா பெட்டியைத் திறந்து, சால்வையை எடுத்தார். அவளுக்கு அது பிடித்த மாதிரித் தெரியவில்லை. அவர் பெட்டியை மூடுவதற்கு முன்னால் ரயில் வண்டியின் சத்தம் கேட்டது. அம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக ரயிலில் ஏறினாள்.

அப்பா மேல் பர்த்தில் கஷ்டமின்றி ஏறினார். அம்மா கீழ் பர்த்தில் உட்காரக்கூடக் கஷ்டப்பட்டாள். வாழ்க்கை அப்பாவை விட அம்மாவை மிகுந்த களைப்புக்குள்ளாக்கி இருப்பதை ஒரே பார்வையால் யாராலும் புரிந்து கொள்ள முடியும். அப்பா மட்டும் இந்த விஷயங்களை கவனமாகப் பார்த்திருந்தால், மனம் போராடிக் கொண்டிருக்கிற அக்னிப் பரீட்சையிலிருந்து அவரால் தப்பித்திருக்க முடியும்.

தாத்தாவுடன்தான் படுப்பேன் என்று பேத்தி பிடிவாதம் பிடித்தாலும் சீக்கிரம் முடிவை மாற்றிக் கொண்டாள். இருட்டில் எல்லாக் குழந்தைகளுமே தாயின் சுகமான அரவணைப்பைத்தான் விரும்புவார்கள். நான் ஏன் சந்தேகங்களிலும், பதட்டத்திலும் மூழ்கியிருக்கிற அப்பாவின் பக்கத்தில் படுக்க விரும்பினேன்? அது எப்போதும் உலையின் துடிப்பாகவே இருக்கும். ரயில் விழித்துக் கொண்டு, தூங்கும் மனிதர்களுடன் முன்னே சென்றது.

இந்தப் பயணத்தின் விளைவு என்னவாக இருக்குமென்று முதல் முதல்முறையாக மகள் நினைக்க முயன்றாள். ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்து விட்டால்? அவள் அவருடைய மகள் இல்லையென்று நிரூபிக்கப்பட்டால்? அம்மா அப்பாவை முட்டாளாக்கி விட்டதாக அவள் வாழ்க்கையின் நாடித்துடிப்பு சொல்லி விட்டால்….

எங்கோ சாலையில் ஒரு வெள்ளை நிறக் காதல் அம்மாவிற்காகக் காத்திருந்து அவளுடைய நிழலாகி, அவள் முடியில் மறைந்து கொண்டு பிறகு அவள் கருப்பையில் இடம்பிடித்து தன் அழுகையால் அப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி- அவளுக்கு இந்த மோசமான எண்ணம் வந்தது. பிறகு அம்மாவை அவளால் எப்படி வெறுக்க முடியும்? அம்மாவை எப்படி எதிர் கொள்வது என்று நினைத்தாள். அம்மாவை மட்டுமல்ல, அவளுக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது… பொறுக்க முடியாத வலியைக் கொடுத்தவர்கள் வெறுக்கப்படவில்லை. அவள் அம்மாவை வெறுக்க மாட்டாள். அவள் தந்த வலிகள் பாரமாகத் தலையில்… எந்த இருளிலும் அது வலிகளின் மெத்தையாகத்தான் இருக்க முடியும்

’மகிழ்ச்சியாக பயணம் அமையட்டும்“ என்று ரயிலில் எங்கே எழுதப்பட்டிருக்கிறது? கனத்தைக் குறைத்து, பயணத்தை வசதியாக்கும் எந்த யோசனையையும் அவள் பார்க்கவில்லை. ரயிலின் ஒவ்வொரு அசைவிலும் கனம் குறையவேயில்லை. அது அதிகரிக்கத்தான் செய்தது. அவள் தலையில் வலி மலையாக வந்து விழுந்தது..

அந்த ஒத்திராத பூங்கா

அந்த பக்கத்து பர்த்திலிருந்து இருட்டில் தன்னை நோக்கிப் பளபளத்த இரண்டு விழிகளை உணர்ந்து ஒரு குலுக்கலோடு விழித்துக் கொண்டுவிட்டாள். அது ஒரு திருடனாக அல்லது பெண்ணின் உடலில் பரவத் துடிக்கும் விருப்ப நெருப்பாக இருக்கலாம். அந்த விழிகளில் ஏதோ ஒன்றிருப்பதாக அவள் பயந்தாள். அவனுக்கு தாடியிருந்தது. திருடனின் தந்திரம் அந்த முடியில் தெரிந்தது.

ஜெய்சனுக்கும் மீசையுண்டு. ஆனால் அவனுடைய ஒவ்வொரு மயிர்க்காலலும் கருணை இருந்ததாக அவள் நினைத்தாள். அதனால்தான் தனக்குச் சுலபமாகக் கிடைத்திருக்கக் கூடிய பொறியியல் படிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகம் படித்தால் அவனிடமிருந்து தொலைவில் இருக்க வேண்டி வரும். அவள் மேலே மேலே போக வேண்டியிருக்கும். அவள் மிக உயரத்திற்குப் போய் விட்டால் ஜெய்சனிடமிருந்து வெகு தூரம் விலகிவிட நேரலாம், என்று அவளுடைய குறைந்த அறிவு எச்சரித்தது. ஆனால் அவள் ஒரு பட்டப்படிப்புடன் நின்று விட்டால் அவளால் ஜெய்சனைப் பார்க்க முடியும். என்ன வகையான ஒரு தவறான வாதம்!

ரயில் அப்பாவிற்கு ஒரு தொட்டில் போல இருக்க, குழந்தை சிறு சிறு சேட்டைகள் செய்துவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டது. அம்மா இன்னும் தூங்கவில்லை என்பதை அடித்தட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ஆஸ்துமா மூச்சு சொன்னது.

இரவு இரண்டு மணியாக இருக்கலாம். அவளால் இப்போது தூங்க முடியாது. ரயில் எங்கேயிருக்கிறது என்று பார்ப்பதற்காக ஜன்னல் கண்ணாடியை லேசாகத் தூக்கினாள். தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், மற்றும் நிழலால் அந்த இடம் எதுவென்று அறிய முடியவில்லை. இருட்டில் எல்லா இடங்களும் ஒத்ததாகவே இருக்கும். பெண்ணுக்கும் மண்ணுக்குமிடையே ஒப்புமை அங்குதான் தொடங்கியது.

மெதுவான காற்று வந்தது. மரங்கள் விளையாடின. பூமிக்குக்கூட இருட்டில் ஏழு எழிலுண்டு. நிலமும் அதற்கேற்றாற் போல எங்கும் அழகாகவும் குளிர்ச்சியாகவுமிருந்தது. இருட்டில் எல்லாப் பெண்களுக்கும் ஒரே முகம்தான். கன்னிப் பெண்ணின் வாசம் பரத்தைக்கும் உண்டு. பிரம்மம் வரும் கணம் வரை, அரக்கன் கூட தேவகன்னியின் அழகுடையவன்.

அருணுக்கு யட்சினிகளைக் கண்டு பயம். வீட்டின் தென் பகுதியில் பலாமரத்தில் மலர்கள் மலரும்போது காற்று முழுவதும் மலர்களின் மணத்தால் நிரம்பியிருக்கும். அம்மாவின் வயிற்றில் தலையை வைத்துக்கொண்டுதான் அருண் தூங்குவான். மீசை வளர்ந்த பிறகும்கூட. ஏன் அப்படியிருக்கிறான் என்று அம்மா ஆச்சர்யப்படுவாள். அருண் இறந்த பிறகுதான் அப்பா அந்த மரத்தை வெட்டினார். அப்பாவின் முடிவுகள் எப்போதுமே அப்படித்தான் — காலம் கடந்து.

அம்மாவை அக்னியினூடே நடக்க வைக்கும் இந்தச் சோதனைகூட மிகத் தாமதமானதுதான். இந்த மாதிரியான சோதனைகள் இல்லாமல் ஒருவர் வாழ்க்கையைக் கடப்பதென்பது அதிர்ஷ்டம்தான்! அருண் இப்போது இருந்திருந்தால் அவன் மிக வலிமையற்று உணர்ந்திருப்பான். ஆனால் அவனுக்கு அந்தச் சோதனை தேவைப்பட்டிருக்காது. படைத்தவன் அவனுக்கு போதுமான அளவு கருமையைக் கொடுத்திருந்தான். கண்ணிற்கும், கண் இமைக்கும் இடையில் அவனுக்கு அப்பாவைப் போல மச்சமிருந்தது. அருண் அம்மாவின் சௌகர்யமான மண்டலம்.

“அப்பாவிற்கு அஞ்சு அக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும்,” என்று அவன் அடிக்கடி சொல்வான், அவன் இளம் பருவம் அந்த நினைவிலேயே கழிந்தது.

தனது பச்சை ஸ்கூட்டரை எதிர்பார்த்து முகப்பில் காத்திருக்கும் அந்த சிறிய பாவாடையை அப்பாவால் தவிர்த்திருக்க முடியாது. அவர் தன் சட்டையைக் கழற்றிய அடுத்த கணம் அவள் பனியனோடும் முண்டோடும் நிற்பாள். அவர் கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கல்லில் உட்கார்ந்து கொண்டு சுலோகங்களைக் கேட்டுக் கொண்டிருப்பாள். தேர்வுகளில் அவள் வாங்கிய அதிக மதிப்பெண்கள், தன் விளையாட்டிலும் சிரிப்பிலும் அவள் காட்டிய கட்டுப்பாடு… அப்பா தவிர்க்க முடியாமல் அவளை நேசித்தார்.

“அவள் ரோஜாவைப் போன்றவள். அவள் எனக்கானவள் என்றிருந்தால்…” என்று தன் நண்பர்களிடம் அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறாள்.

தன்னுடையவன் என்று நினைத்த அருணை தூரத்தில் வைக்க அவருக்குப் பல காரணங்கள் இருந்தன எனினும் தன் மகளாக நினைக்காத அஞ்சனாவின் மேல் அதிகம் அன்பு வைக்க முடிந்தது.

கருப்பு, வெள்ளைக்கிடையே, தேர்வில் அதிக, குறைவு மதிப்பெண்களுக்கிடையே, எண்ணிக்கை மற்றும் மிட்டாய் அளவுகளுக்கிடையே, ஆழமான முத்தங்கள் மற்றும் அன்பு வெளிக்காட்டுதலினிடையே எல்லா இடங்களிலும் அருணால் அந்த வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மகளைவிட, தன் மகன் ஆற்றலில் மிகப் பின்தங்கியிருந்ததாக அப்பா நினைத்தார். வெறுப்பிலிருக்கும் போது அருண் தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டு, “நீ சிவப்பான அப்பாவின் குழந்தை. என் அப்பாவின் குழந்தையல்ல,“ என்று சொல்வான். அந்த வார்த்தைகளைக் கேட்பதைவிட அவன் முன்னால் தோற்று நிற்பதே மேல். அதனால் மிகச் சிறிய சண்டைகளிலும்கூட அவள் தோல்வியை ஒப்புக் கொள்வாள்.

தோல்வியை ஏற்கும் பழக்கம் அவளுக்கு அங்குதான் தொடங்கியது, தன்னைத் தோல்விப்படுத்திக் கொண்டால், மற்றவனால் ஜெயிக்க முடியும். இந்த பழக்கம்தான் ஜெய்சனை அவள் மீது ஏறி நடக்க வைத்தது. தன் எண்ணக் கூரைகளை வைத்துக் கொண்டு மாளிகைகளைக் கோருவது.

அருணுக்காக அவள் பரிதாபப்படுவது வழக்கம். தான் கருப்பு என்ற வலியில் வாழும் ஒரு குழந்தை. வீட்டில் எல்லோருக்காகவும் அவள் இரக்கப்பட்டாள். அப்பாவிற்குச் சிவப்பு பிடிக்கும், ஆனாலும் ஒரு சிவப்புக் குழந்தை பிறந்தபோது, அதிர்ந்த அவர் அந்தக் குழந்தை தன்னுடையதில்லை என்று நம்பினார். அம்மாவோ வண்ணங்களின் விளையாட்டில்தான் பலியான கதையைச் சொன்னாள் – வெள்ளை கருப்பு இடையில் அவர்கள் எல்லோரும் வலிமையற்ற பாத்திரங்கள். அங்கு கருப்பும்,வெள்ளையும் எப்போதும் சண்டையிட்டன. அந்த மேடையில் அப்பா, அம்மா, அருண், அஞ்சனா எல்லோரும் பார்வையாளர்களே. அது ஒரு கருப்பு வெள்ளை வீடு.

அருணின் பேரில் எல்லாச் சொத்துக்களையும் அப்பா மாற்றியபோதுதான் அம்மா எதிர்ப்புத் தெரிவித்தாள். மதம், ஜாதி பார்க்காமல் மகள் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால்தான் அவளுக்கு அந்த தண்டனை என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அப்பா அந்த தண்டனையை கடைசி வரை நிலுவையில் வைத்திருந்தது அஞ்சனாவுக்குத் தெரியும். சிவப்பான மகளாக இருந்ததற்கு. தன் கோபத்தைக் காட்டி அந்தச் சண்டையை முடிவு செய்யும் அவருடைய எளிய முயற்சி. அவருடைய எல்லா முடிவுகளையும் போல அதுவும் தாமதமாகத்தான் வந்தது. ஜெய்சன் கொள்கை சார்ந்த மனிதன். அதனால் அந்த நேரத்தில் எதுவும் பிரச்னை ஏற்படுத்தவில்லை.

அப்பா தன் சொத்துக்கள் அனைத்தையும் அருணின் பெயருக்கு மாற்றம் செய்தபிறகு அவன் அழுகையோடு சொன்னது: அவளுக்குப் பாதி கொடுத்து அவளோடு சண்டை போடுவது எனக்கு சந்தோஷமே. எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. அப்பாவுக்குச் சொந்தமான எதுவும் எனக்குத் தேவையில்லை.” ஆனால் பிறகு அவன் நண்பர்களோடு சேர்ந்து ஆடம்பரமாக அந்தப் பணத்தைச் செலவழித்தான். ”இது நம் மகளின் சாபம்தான்,” என்று அம்மா சொன்னாள். தன் நண்பர்களுடன் பெங்களுர் சென்றிருந்த அவன் விபத்தில் இறந்த செய்தியைக் கேட்டு அப்பா கண்ணீர் சிந்தவேயில்லை என்று அம்மா சொல்வது வழக்கம்.

“அவர் வினோதமான மனிதர்.அவரால் யாரையும் நேசிக்க முடியாது,” என்று அம்மா சொல்வாள்.

அஞ்சனாவிற்கு அருணைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. உள்ளேயிருந்த பர்சில் அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். எப்போதுமே சண்டை போடுவது அவன் வழக்கம், தன் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டதற்காக அவன் கடவுளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்.

அருணின் இறப்பிற்குப் பிறகு அம்மா தூக்க மாத்திரை போட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். அவளை ஆறுதல் படுத்திக் கொள்ள இப்போது எதுவுமேயில்லை. அதனால்தான் ஜெய்சன் எங்கேயிருக்கிறான் என்று அம்மா கேட்டபோது அவள் பதில் சொல்லவில்லை.

ஜெய்சன் ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால்தான் அவனுடைய எளிய வாழ்க்கைக்குக் குடை பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் துணி ஆலைகளும், சமையல் தொழிலும் ஒரு மேலுறைதான். எல்லாம் இப்போது தலையைச் சுற்றிக் கொண்டிருக்க, ஜெய்சன் எங்கிருக்கிறான் என்பது அவனுடைய மனைவிக்குக் கூடத் தெரியாது. அவனுடைய எல்லாச் செயல்களும் நல்லவை என்ற வண்ணப் பூச்சு செய்யப்பட்டவை. தன் கால்களை ஊன்றிக் கொள்ள அவனுக்கு மற்றொரு இடம் தேவை. இன்னொரு இடம். தான் ஒரு பெரிய முட்டாள் என்று அவன் உணரும்போது, முதல் முறையாக களைப்படைவான். பிறகு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அவன் தனியனாகி விடுவான். தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதது மிகப் பெரிய பாவம் என்று அவன் உணர்வான். வாழ்க்கை முழுவதும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற சத்தியம்.பசியில் மனைவியைத் தவிக்க விட்டு உறிஞ்சுவதற்கு பாலில்லாத நிலையைக் குழந்தைக்குத் தந்து பாவங்கள் செய்தவன் அதற்கான அக்னி பரீட்சையில் இடப்படுவான். அவன் எண்ணங்கள்! அவன் வாழ்க்கை நாசமாகலாம்!

பிறகு ஏன் அவள் மீண்டும் மீண்டும் அவனிடம் போகிறாள்? என்ன விந்தை! எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவள் ஏன் வந்து விடக்கூடாது? அவளால் முடியாது. தொலைவில் தன்னைத் தலை முழுகிவிட்டு வந்தாலும் எஜமானனை மீண்டும் மீண்டும் கண்டு பிடித்து ஓடும் நாய்க்குட்டி போல அவள் இருந்தாள். சிறிய அளவு வாழ்க்கை மிச்சமிருந்தாலும் அவள் ஜெய்சன் இருக்குமிடத்திற்குத்தான் போவாள்.

அப்பாவின் மகள் அவள் என்பது நிரூபிக்கப்பட்டால் தன் சாவில் அருண் விட்டுப் போன பணம் அவளுக்குத் திரும்ப வரும். அதை ஜெய்சனிடம் அவள் சமர்ப்பிப்பாள்.அவன் அதை வைத்துக் கொண்டு உலகக் காதலுக்கு புதிய சாதனங்கள் கண்டுபிடிப்பான். ஒரு நாள் போலீஸ் வரும். அதற்கு முன்னால் அவர்கள் அவளைக் கிழிப்பார்கள். கணவனின் வாழ்க்கையைச் சரிப்படுத்தாத மனைவியின் செயல்களை அளந்து பார்ப்பார்கள். தங்கள் சொந்த உடலோடு அந்த அளவைகளை வைத்துத் திருப்தியடைவார்கள். அவளுடைய பலவீனமான உடல் அவமதிப்பிற்கும் நினைவிற்கும் சரித்திர அடையாளமாக இருக்கும். நான்கு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவன் மனைவி மேல் விழும் அடிகளை தூரத்திலிருந்து அவன் அறிவான். அவன் கவலைப்படமாட்டான், ஏனெனில் அவன் வேறு யாருடைய கண்ணீரையோ துடைப்பதற்கு இருக்கிறான். அவளுடைய குழந்தை போலீஸ்காரனின் முகம் கொண்டதாக இருக்கிறது என்று யாரும் சொன்னதில்லை. ஜெய்சன் அப்பாவைப் போல பலவீனமானவனாக இருந்திருந்தால் அப்படி நினைத்திருக்கலாம்.
.
பக்கத்து பர்த்திலிருந்த அந்தக் கண்களில் இருக்கும் பளபளப்பு அதிகமானது. அந்த மாதிரிக் கண்கள் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அதில் அதிக நெருப்பு இருந்தது. அவள் ஜெய்சனைப் பற்றி நினைத்தாள். ஆணின் கண்களில் இருக்கும் நெருப்பின் வாழ்க்கை எவ்வளவு குறுகியது. அது அவளைச் சிரிக்க வைத்தது.தூரத்திலிருந்து பார்ப்பது ,ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் பலம் ஒன்றை வைத்துத்தான்.அந்தப் பெண் அருகில் வரும் கணம் பலவீனம்,சோர்வு, நம்பிக்கைத் தொலைவு என்று அது பலவீனமாகி விடுகிறது.ஜெய்சனின் திட்டவட்டங்கள் பொதுவான விதியாக இருக்கத் தேவையில்லை. எல்லாவற்றிற்குமே ஜெய்சன் தனது சொந்த விதிகளை வைத்திருந்தான். அவன் கண்களின் வெளிச்சம் என்பது அந்த விதிகள்தான், அது அவனை கருப்பான இருட்டில் தள்ளி விட்டது..

அந்தத் தீர்மானிக்கப்பட்ட ஒன்று

எந்தக் காலத்திலும் எதற்கும் உத்தரவாதமில்லை. முதல் பயம் ஓலமிடும் வயிற்றிற்குச் சிறிது சாப்பாடு கிடைக்குமா என்பது. அவன் அம்மாவின் இரண்டாவது கணவன் வெளியே போன பிறகு தனக்கு ஒரு டம்ளர் தேநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.

சதாசிவன் கதகளி கலைஞனான மதனபாரம்பில்லின் மகனா அல்லது சமையல் செய்யும் போத்தியின் மகனா என்று அண்டை வீட்டினர் ஆச்சர்யப்படுவார்கள்! அவனால் பள்ளிக்கூட கட்டணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட முடியுமா என்பது மற்றொரு பயம். அவனால் தேர்வு எழுத முடியுமா என்பது இன்னொரு பயம். பயம் அவனுடைய நிரந்தரமான நண்பன். பத்தாம் வகுப்பை முடித்த பிறகு படிப்பதற்கு எந்த வழியுமில்லை. அவன் கணக்குப்பிள்ளையானான். சம்பளம் கிடைக்குமா, படிப்பைத் தொடர முடியுமா என்று பயந்தான். ஒரு பட்டம் வாங்கினான். வேலை கிடைத்த பிறகும் அவனுக்கு நம்பிக்கையில்லை. அவன் கறுப்பாகவும், ஒல்லியாகவுமிருந்ததால், எந்தப் பெண்ணும் கவரப்பட்டு வரமாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் அது அவன் வழியல்ல. வேலை கிடைத்து, பிரசன்னாவின் இடத்திற்கு வந்த பிறகும், மனிதர்களின் முகம் பார்த்துப் பேசும் தைரியம் அவனுக்கில்லை. பிரசன்னாவின் தாய் அவனிடம் வந்து தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னபோது வியப்படைந்தான். ”ஒரு தாய் தன் மகளைத் திருமணம் செய்து கொண்டு அவளைக் காப்பாற்றும்படி கேட்டால் அதில் ஏதோ சிக்கல் இருக்கிறதல்லவா?” என்று மக்கள் கேட்டனர்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாள். அவள் உடல் பொங்கி வழிந்தது. அவன் கண்ணில் முதலில் பட்டது பெரிய மார்பகங்கள்தான். அதன் பிறகு அந்த மறைமுகமான சிரிப்பு. அவள் சிரித்தபோது எகிறு ஒளிர்ந்தது. ஒரு பல் எகிறின் மேலிருந்தது.

அவனுக்கு அவளைப் பிடித்தது. அவள் கணவனாக ஆசைப்பட்டான். அவள் கர்ப்பிணியாக இருந்தால்கூடப் பரவாயில்லை, அவளை மன்னித்து விடுவான், தனது துக்கங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவன் அந்த அளவிற்கு பலவீனமானவன்.

ஆரம்பத்திலேயே அவன் ஆத்மா எரிந்தது. பிரசன்னாவின் மூச்சே இது அவளுக்கான வாழ்க்கையில்லை என்று சொல்வதாக இருந்தது. அவன் மனதில் நிரம்பியிருந்த காதல் துருவானது. அவன் உணர்ச்சிகள் ஆவியானது. தான் பலவீனமானவனாக நினைக்கப்படுவோம் என்று பயந்து அமைதியைத் தொடர்ந்தான். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டான்.

உண்மையாக அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குவதற்கு முன்னாலேயே அவள் கர்ப்பிணி என்று அவனுக்குத் தெரியும். தனது சந்தேகங்களை அடக்கிக் கொண்டான். அவளைப் பார்த்தபோது அதிர்ச்சியானான். பிரசன்னா ஒரு கணம் கூட சந்தோஷமாக இல்லை. வெட்கக் கேடான ஒன்றைச் சுமந்து கொண்டிருப்பது போல அவளிருந்தாள்.

“பிரசன்னா என்று உனக்கு யார் பெயர் வைத்தது? அது உனக்குப் பொருந்தவே பொருந்தாது,” என்று அவன் நகைச்சுவையாகச் சொல்ல அவள் கண்கள் கோபத்தில் சிவந்தன. அதற்குப் பிறகு அவன் நகைச்சுவையாகப் பேசவேயில்லை.

குழந்தை பிறந்த பிறகு, அதன் அப்பாதான் சந்தோஷமாகவும், உற்சாகமாகவுமிருந்தார். பிரசன்னா பிணம் போல உணர்வற்றிருக்க அவன் மனம் மீண்டும் சந்தேகங்களால் நிரம்பியது.

அவன் மகள் ஒரு ரோஜா மலராக வளர்ந்தாள். ”இது சதாசிவத்தின் மகளா?” என்று அவர் அலுவலகத்தில் யாரோ கருத்துச் சொல்ல, அந்த இடமே சிரிப்பால் நிரம்பியது.

பிரசன்னாவிற்கு வேலை கிடைத்தபோது ,அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று அவளுக்குத் தெரியாது. அவளுடைய அலுவலகத்திலிருந்த இளைஞர்கள் மற்றும் வலிமையானவர்களுக்கு அந்த வயதில் ஒரு தலைவலியாக இருந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை என்பதால், அவளை வேலையை விடச் சொன்னான்.

மகளைப் போல அவருடைய மகன் இல்லை. அவனுக்குச் சிரிக்கத் தெரியாது, இரக்கமோ, அன்போ கிடையாது, ஒரு சந்தேகக் குழந்தை. மகன் வளரும்போது அவன் எந்த விபத்தில் சிக்குவானோ என்று பயந்தார் அவர். அவன் மோட்டார் விபத்தில் இறந்து போனான். பிணக்கிடங்கறையில் அவன் உடலை எட்டிப் பார்த்தபோது அந்த நீண்ட கால பயம் முற்றுப் பெற்றது.

அவர் மகள் இன்னொரு பயம். சோர்வான முகத்துடனிருந்த பிரசன்னாவைக் காயப்படுத்த தன் மகளிடமிருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அவள் நெருங்கி நெருங்கி வந்தாள். அருணின் மறைவிற்குப் பிறகு, அது முடிந்தது. அவர் வாழ்க்கையில் மிச்சமுள்ள பயம் மகள்! இல்லை, அவள் ஒரு விடுகதை. அவர் அதையும் விடுவித்தாக வேண்டும். அந்தச் சிறிய நியாயம் வாழ்க்கைக்குத் தேவை. அவள் தன் மகள்தானா என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஏன் சந்தேகங்களோடு வாழ்ந்து உன்னை எரித்துக்கொள்ள வேண்டும்? சோதனை செய்து விடலாம். நீ திருவனந்தபுரம் போக வேண்டும், அவ்வளவுதான்,” தாசில்தார் சுகுமாரன் ஆலோசனை சொன்னார். முதலில் அது பற்றி தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதே அவருக்கு கஷ்டமாக இருந்தது. பிரசன்னாவை சமாதானப்படுதுவதும்தான். தன் மகளிடம் இதை எப்படிச் சொல்வதென்று பயந்தார். அவர் கலக்கத்தைப் பார்த்து, “உங்களுக்கு அப்படியொரு பயமிருக்குமானால் நிச்சயமாக நாம் போயேயாக வேண்டும். நம் நோய்களுக்கான சிகிச்சைக்காகப் போகிறோம். இந்தப் பயணம், உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள் அனுபவித்த வேதனைகளுக்கான காயத்தை ஆற்றுமெனில் நாம் கண்டிப்பாகப் போக வேண்டும்…” என்றாள்.

அதுவரை அழுது கொண்டிருந்த பிரசன்னா மகள் இதைச் சொன்னபோது சமாதானமானாள். மலை போன்ற இந்த விசாரத்தை அவர்கள் கடந்தபிறகு, நிழலும், வசதியும் அவர்களுக்காகக் காத்திருக்கலாம். ஓர் ஆழமான குழியாக இருக்கலாம். அப்பா இறந்த பிறகு யாரோ ஒருவர் அந்த ஈர உடையணிந்து சடங்கைச் செய்யலாம். அவள் தன் கைகளைத் தட்டிக் கொண்டு காக்கையை உணவிற்காக அழைக்கும்போது அவள் அப்பாவின் மகள் என்பதில் எந்தச் சந்தேகமுமிருக்காது. காகம் ரத்தவழிச் சடங்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். அது ஒரு சவாலாக எழுமானால் ,எந்த பயமுமின்றி அது அந்தமுக்திக்கான சோற்றைச் சாப்பிட வரவேண்டும்.

எல்லா விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு முடிவு வேறு விதமாக வந்தால்… அவருடைய உடலில் பாயும் ரத்தம் மகளின் உடலில் பாயாவிட்டால்… அப்பாவின் விழிகள் கரிக்கட்டையாக எரிந்து புகை வரும். அம்மா, மகள், பேத்தி எல்லோரும் அந்த அக்னியில் எரிந்து போவார்கள். அது நிச்சயம்.திரும்பி வரும் பயணத்தில் அவர்கள் உடனிருக்க மாட்டார்கள். அவருடைய முடிவுகளின் நெருப்பில் சாம்பலாகி விடுவார்கள்.

கீழ் பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த அம்மா வேகமாக எழுந்து உட்கார்ந்து அப்பாவைப் பார்த்தாள். அப்பாவின் கண்களில் தெரிந்த உறுதியை அம்மா கவனித்தாள். ஒரு நெருப்பு அங்கு எரிந்தது. அவர் சந்தேகங்களோடிருந்த ஒரு பலவீனமான மனிதனில்லை என்பதையும், ஓர் உறுதியான தன்மையோடு அவரிருப்பதையும் அம்மா உணர்ந்தாள். சாதாரணமாகச் சந்தேகப்படும் தாமஸ் இல்லை. ஆனால் நியாயத்தை எதிர்நோக்கும் பொறுப்புள்ளவன். அவள் பயத்தில் நடுங்கினாள்.

கருப்பும் வெள்ளையும்.

கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்குவது போல நடிப்பது அவள் பழக்கம். அவளுடன் படுத்துக் கொண்டவர்கள் தூங்கிய பிறகு, அவள் கண்களைத் திறந்து கொண்டு இருட்டை விழுங்குவாள். கடந்த முப்பது வருடங்களாக இதுதான் அவள் பழக்கம். தூக்க மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு போனாலும் அவளால் தூங்க முடியவில்லை. அவள் கண்களைத் திறந்து கொண்டு படுத்திருந்தால், யாரையோ பார்ப்பதற்காக அவள் விழித்திருக்கிறாள் என்று சந்தேகப்படுவான். இப்படியான ஒரு கணவனுடன் அமைதியாக எப்படித் தூங்க முடியும்? பிறகு ஒரு குழந்தையைப் போல எப்படி அவள் சிரித்து விளையாடியிருக்கிறாள் என்று நினைத்துப் பார்ப்பாள். இந்த நாட்களில் அதுவும் கூட அமைதி தரவில்லை.

சிநேகிதிகள் அவளை காக்கைக்குஞ்சு என்று அழைப்பார்கள். அவள் வளர்ந்த பிறகு அவர்களோடு சண்டை போட்டிருக்கிறாள். சிவப்பான குழந்தை தனக்குக் கிடைக்கும் என்பாள்.

“ஆமாம் ஆமாம். நீ கறுப்பு.உன் அம்மாவும் கறுப்பு. உனக்குக் காக்கையின் நிறத்தில் தான் குழந்தை கிடைக்கும்,” என்பார்கள்.

பள்ளிக்குச் செல்லுமபோது ஆலமரத்தினடியில் இருக்கும் கணபதியிடமும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் சாமியாரிடமும் “கடவுளே, அவர்கள் சொல்வது மாதிரி ஆகி விடக்கூடாது. தயவு செய்து எனக்குப் பனி வெண்மையில் ஒரு குழந்தை கொடு,“ என்று வேண்டிக் கொள்வாள்.

குழந்தையின் தந்தை சிவப்பாக இருக்க வேண்டும்— அந்த ஆசை அவளுக்குமேலும் சில காலம் இருந்தது; பெண்களுக்கு இந்த மாதிரியான ஆசைகள் உருவாகும் காலத்தில். தனது சிறு வட்டத்தில், அவள் தன் காதலனாக ஒருவனைக் கண்டாள். அந்தக் கோயிலுக்கு வந்த பூஜாரி. அந்தச் சிறு வட்டம் போலவே அவள் உலகமும் சிறியதுதான். கோயில் படிகளின் உயரம் அளவு போன்றதுதான். கோயில் நிலத்தின் அகலம் போலத் தான் அகலமும்.

பூஜையில் கவனமின்றி, மேளமடிப்பவரை பார்ப்பதாக, மந்திரங்களைச் சொல்லும்போதுகூட அவன் மனம் வேறெங்கோ இருப்பதாக பூஜாரியைப் பற்றி பல வதந்திகள் எழுந்தன.இந்த வதந்திகள் பூஜாரியை அவள் காதலிப்பதான நிலையை உருவாக்கியது. கோயில் பூஜையின் போது தனக்குக் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு படித்தான்.

அவளை விரும்பியதாக அவன் சொன்னதில்லை. ஒரு நாளில் இரண்டு முறை, அவள் பூஜைக்கு வருவாள். கண்களை மூடிக் கொண்டு தன் காதலுக்காக வழிபடுவாள். அவனுக்கு அது தெரியும். யார்க்கும் தராத தனது சிரிப்பை அவளுக்குப் பிரசாதமாகத் தருவான். அந்தச் சிரிப்பு, நீண்ட குறிப்பில் அவன் வேறெங்கோ போனபோது, முடிந்தது. அவள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு இது பெரிய நகைச்சுவையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சதாசிவத்தால் உரிமை கோரப்படாத ஆறுதலாக இது அவளிடம் தங்கிவிட்டது. அதற்குப் பிறகு அவள் அடிக்கடி அது பற்றி நினைத்தாள். அவள் உலகம் பெரிதாக இருந்திருக்கும்,இரும்பின் உறுதி போல யாராவது அவளைக் காதலித்திருந்தால். கண்களை மூடிக்கொண்டு அவன் பின்னால் போயிருப்பாள். பலவீனமான பூஜாரியைச் சுற்றி அது வட்டமிட்டிருக்காது. ஒரு மனிதனோ அல்லது ஒரு வழியோ கிடைக்கவேயில்லை. அதுதான் அவளது மிகப் பெரிய துக்கம். பூஜாரி போய்விட்ட சில வாரங்களுக்குப் பிறகு சந்திரனின் வரன் வந்தது

.”நம் குமரன்சிரபரணிக்கு அடிக்கடி வரும் பிரசன்னாவைப் பிடித்திருந்தால் அந்த வரனை முடிக்கலாம்,” என்று டெல்லியிலிருந்து சந்திரன் தன் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தான்.

பரணி திருவிழாவிற்குப் போனபோது அவள் சந்திரனை நாலைந்து தடவை பார்த்திருக்கிறாள்.அவன் அம்மிணி அம்மாயியின் வீட்டுக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து மீசையைச் வரைந்து கொண்டிருப்பான். சந்திரன் பார்க்க அழகாக இருப்பதாகவும், நல்ல வேலையிலிருப்பதாகவும் எல்லோரும் சொல்வார்கள்.ஆனால் அவளுக்கு அவனோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விருப்பமில்லை. அம்மாயி அந்த வரனைப் பற்றிப் பேச்செடுத்தபோது அவள் தன் விருப்பமின்மையைச் சொன்னாள்.

“நீ இதற்காக ஒருநாள் வருத்தப்படுவாய்,” அம்மாயி சொன்னாள். அதற்குப் பிறகு அம்மா அரக்கியாகி விட்டாள். ”உன் மண்டை கர்வத்தால் நீ அதிர்ஷ்டமில்லாதவளாக, வெட்கக் கேடாக இந்த வீட்டிலேயே இருப்பாய்,” என்றாள். அளவில்லாத கோபம் வந்தபோது, அவள் கால்களை இரும்புக் கம்பியால் சுட்டுவிட்டாள்.

சதாசிவன் அந்தக் கிராமத்திற்கு வேலை மாற்றலாகி வந்தபோது, ”தயவு செய்து அவளுக்கு உதவி செய்யுங்கள் சார்,” என்று வேண்டிக் கொண்டாள்.

சதாசிவன் இருண்ட முகத்தோடு வீட்டிற்கு வந்தான். தன் இடது கண்ணால் அவளைப் பார்த்தான். ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. பிரசன்னாவிற்கும் பேச ஒன்றுமில்லை. தன் விருப்பமின்மையை அவள் வெளிப்படுத்தியிருந்தால் ஒரு பெரிய தண்டனை கிடைக்குமென்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை.

அடுத்த வாரம், வீட்டின் முன்னால் ஒரு பெரிய பந்தல் எழுந்தது. பெரிய கண்கள், சிவப்பான நிறம், சிரிக்கும் முகம் ஆகியவற்றைத் தான் அவள் விரும்பினாள். அவள் ஆசைக்கு ஒரு தண்டனையாகத்தான் சதாசிவன் இருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க கரிக்கட்டையைத் தன் மகளுக்குத் தந்து விட்டோமென்று அம்மா வருந்தினாள். அவளுடைய அவசர முடிவு மகளின் தலைவிதியை அழித்து விட்டது என்ற அந்த வலி சாவு வரை அவளுக்கிருந்தது.

அவள் பட்டத் தேர்வு இன்னமும் முடியவில்லை. தான் கருவுற்றிருக்கிறோமென்று தெரிந்தபோது அவள் ஆச்சர்யமடைந்தாள். குழந்தைகள் ,அன்பான பெற்றோர்களுக்குக் கடவுள் தரும் பரிசு என்று நினைத்தாள். அந்த நம்பிக்கையும் விரைவில் போய்விட்டது. காண்பதற்கு கனவு என்று எதுவுமில்லாமல் அவள் உள்ளம் வெற்றிடமாகி விட்டது.

காதலிக்க ஒரு காரணம், அந்தக் காதல் உயிரை உருவாக்குவது— இந்த நிலைதான் ஒருவரை வாழ வைக்கும். வேர்கள் மனிதனுக்கு மனிதன் நீளும். அவர்கள் பூமிக்குள் வளர்ந்து பூமியைத் தொட்டு வேர்களாகப் படர்வார்கள். அந்த வேர்கள்தான் மனிதர்களை பூமியில் இருத்தும் என்று அவள் நினைத்தாள். அந்த நம்பிக்கையும் சதாசிவத்தால் நடுக்கம் கண்டுவிட்டது. அந்த நாட்களில் அவள் பூமியில் எதையும் நேசித்ததில்லை. வாசனைகள், அதிசயங்கள். நிறங்கள். அவள் எல்லாவற்றையும் வெறுத்தாள்
.
அவள் தேர்வுகளைத் தடுப்பது போலவே வயிறு பெரிதானது. சிவப்புக் குழந்தைக்கான விருப்பம்கூட அவளுக்கில்லை. அவள் அதை விரும்பவில்லை. அவள் முகம் ஏன் சோகத்தால் நிரம்பி இருக்கிறதென்று சதாசிவன் கேட்கவில்லை. குறிப்பான பார்வை, முணுமுணுப்பு ஆகியவற்றால் அவள் வேதனையை அவன் அதிகப்படுத்தவே முயன்றான். காதலற்ற பெற்றோரின் குழந்தையாக ஏழாம் மாதத்திலேயே அது பிறந்துவிட்டது.

குழந்தையை அவள் கையில் கொடுப்பதற்கு முன்னால் பல முறை மருத்துவர் அதை முத்தமிட்டார். ”அவள் புத்திசாலிக் குழந்தை,” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். குழந்தை சிவப்பாக வளரத் தொடங்கிய போதே அப்பாவின் சந்தேகங்களும் வளர்ந்தன.

அதன்பிறகு அம்மா அவளை எல்லையின்றி நேசித்தாள். குழந்தை அதிர்ஷ்டத்தோடு வந்ததாக நினைத்தாள். பல மாதங்களுக்கு முன்னால் எழுதின எழுத்துத் தேர்வினால் அவளுக்கு வேலை கிடைத்தது. கணவனை விட அவளுக்குச் சம்பளம் அதிகம். அதனால் தானோ என்னவோ மூன்று நான்கு மாதங்களில் வேலையை விட வேண்டியிருந்தது.

அவள் உடல் முழுவதும் ரணங்கள்— செங்குத்தாக, குறுக்காக, சாய்வாக – அவமானம், புறக்கணிப்பு, வெறுப்பு, சோம்பல்— அந்தக் காயத்தின் முகம் பல வழிகளில் மாறிக் கொண்டேயிருந்தது. சதாசிவன் ஒருபோதும் சத்தமாகக் கத்தியதோ திட்டியதோ இல்லை. யாருமே செய்ய முடியாத அளவுக்கு கூர்மையான கத்தியை மெதுவாகச் சொருகுவார். தன் மகளின் தந்தை முகமற்ற ஊர் சுற்றியோ என்று பயந்தார். அந்தத் தீயில் தானும், மற்றவர்களும் எரிவதில் அவர் சந்தோஷம் அடைந்தார். மகன் பிறந்த போதும் கூட அவர் பயம் குறையவில்லை. தன்னுடையதில்லை என்று நினைத்த மகளை மிக நேசித்தார், மனைவியை அதில் தோல்வி அடையச் செய்ய முயற்சித்தார்.

அமைதி அல்லது சந்தோஷம் அவருடைய இரு குழந்தைகளுக்குமே தெரியாது. தனக்கு ஏதோ குறைகள் இருப்பதாக நினைத்த மகன் அவமானப்பட்டு இறந்து போனான். மகள் அபாயத்திலிருந்து விலகி விலகி அவமதிப்பிலிருந்து தப்பிக்க முயன்றாள். தனது அவமதிப்பிலிருந்து தன்னை தேற்றிக் கொள்ள முட்டாள்தனமாக வலியைத் தழுவிக் கொண்டாள். தன் அம்மாவிற்கு ஆபத்தான தனது வழிமுறைகள் எதுவும் தெரியாதென்று நினைக்கிறாள். அம்மாவைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. தனது ரகசியங்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள். தனது வேதனையை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். தன் தட்டுமாற்றத்தை அம்மா கவனித்து விட்டாள் என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.

தன் மகளை ஜெய்சன் எங்கே கட்டிப் போட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்பு அவள் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தெருவில் நடக்கும்போது, சாலையில் உள்ளவர்கள் அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு என்பார்கள். அதைக் கேட்கும் போது அவளுக்குச் சிறிது பெருமையாக இருக்கும். அதை குறிப்பிட்ட ஒரு தொனியில்தான் சொல்வார்கள். அது இன்னும் அவள் காதுகளில் எதிரொலித்தது– அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு.

கீழ் பர்த்தில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தையைப் பார்த்தபோது ,மனம் எரிந்தது – அப்படியொன்றும் அதிசிவப்பில்லை. ரணங்களின் இடையே ஒரு சிறிய நடுக்கம்.

கனவு நடையாளி

அந்த நாள் தொடங்கியது அவ்வளவே. ஆனால் ரயிலுக்குள்ளே பதட்டம் சீக்கிரமாகவே தொடங்கி விட்டது. ஒவ்வொருவரும் பையைத் திறந்து ,மூடிப் பொறுமையின்றி இருப்பார்கள். எந்த நிலையத்தில் ரயில் நிற்கப் போகிறதென்று வெளியே எட்டிப் பார்ப்பார்கள். இதற்கிடையே, வழக்கமான பயணிகளும், ரயில் பாஸ் வைத்திருப்பவர்களும் ஏறி, தூங்குவதைச் சாத்தியமில்லாமல் ஆக்கி விடுவார்கள். எல்லோரும் விழித்தேயாக வேண்டும்.

இருட்டில் அவளை காமப் பார்வை பார்த்த அவன், இப்போது வெளிச்சத்தில் சாதாரணமானவன் போலத் தன் உடைமைகளைக் கட்டி வைத்தான். அஞ்சனாவிற்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. இப்போது அவன் சரியான குடும்பஸ்தன். அவன் பை முழுவதும் மனைவிக்கும் குழந்தைகளுக்குமான பரிசுப் பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

ஒரு கணவனும் ,மனைவியும் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் போனார்கள்.அவர்கள் மிக நிதானமாக இருந்தனர். சூழ்நிலை அவர்களுக்கு சிறிதும் பொருட்டேயல்ல. தன் தலையிலிருந்த துண்டு விலகியபோது அவள் எரிச்சலடைந்தாள். அவள் குழந்தை சில தடவை அந்தப் பெண்ணைப் பார்க்க அவள் குழந்தையைப் பக்கத்தில் அழைத்து சாக்லேட் தந்தாள். குழந்தையிடம் அதன் பெயரை சில தடவை கேட்டாள். குழந்தை பதில் சொன்னாலும் ,அது தெளிவற்றிருந்தது. அதனால் அவள் அஞ்சனாவைப் பார்த்தாள்.

“அவளுக்கு கொஞ்சம் புத்தி மட்டு” என்றாள் .

அம்மா தன் மகளை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு மாறுதலுமில்லை. வாழ்க்கையைச் சிறிதும் நேசிக்காத ஒருவரின் மனநிலை அது. அம்மாவின் நடுக்கத்தை அது அதிகப்படுத்தியது. இந்தப் பயணம் மட்டும் அவளை நேசிப்பிற்குரியவளாக ஆக்கியிருந்தால்…

சுவாசக் கோளாறுகள் காரணமாக குழந்தைக்கு அறிவு மட்டாக இருக்கிறதென மகள் சொன்னாள். தான் மட்டும் அவளருகிலிருந்து சரியாக கவனித்துக் கொண்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று அம்மா நினைத்தாள். தன் வாழ்க்கையை அவனோடு அவள் இணைத்துக் கொண்டு பல காலம் கழித்துத்தான் அம்மா அவர்களோடு சேர்ந்திருந்தாள்.

“உனக்கு எந்த வகையிலும் ’அவருடைய பணம் மட்டும் பயன்படாதென்று தெரிந்திருந்தால் ,நீ அவருடைய மகளில்லை என்று நான் நிரூபிக்க விரும்பியிருப்பேன்.” அம்மா மிக மெதுவான குரலில் சொன்னாள். தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றவள் போல கண்களை மூடிக் கொண்டாள்.

அப்போது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. பிளாட்பார பெஞ்சில் படுத்திருந்த ஒரு முதியவர் குழாயில் தண்ணீர் குடிக்கப் போனார். அவரருகில் படுத்திருந்த வயதான பெண்மணிக்கு அது காலைப் பொழுதென்பது தெரியவில்லை. லுங்கியால் மூடிக் கொண்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே ஒன்றாகச் சேர்ந்து தூங்கியிருப்பார்கள் என்று அம்மா யோசித்தாள். தெருக்கள்தான் அவர்களின் புனிதத்தைச் சோதிக்கும் இடம் என்று வேதனையோடும், வியப்போடும் அம்மா நினைத்தாள். வெறுப்பின் ஆழம் அம்மாவின் எலும்புகளைக் குத்திற்று. இந்தச் சோதனையில் தோற்றுவிட்டால் அப்பா சொத்து முழுவதையும் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு இரக்க மனிதராகி விடுவார். ஆணுக்கும் பெண்ணுக்குமான நேசிப்பு பரிசோதனைச்சாலைகளில் நுண்ணுயிரிகளிடையே சோதிக்கப்படக்கூடாது. தொட்டால் விழித்துக் கொள்ளும் மென்மை அது. இதை உணர முடியாத முட்டாள்கள் சோதனைக்குச் செல்வார்கள்.

திருவனந்தபுரத்திலிருக்கும் ஒரு பழைய நண்பரின் வீட்டுக்கு முதலில் அவர்கள் போவார்கள்.அங்கு யாரெல்லாம் இருப்பார்கள்? நிச்சயமாக அந்த மனிதரின் மனைவியும், குழந்தைகளும். அந்த வருகையின் நோக்கம் மனைவியின் கற்பையும், அப்பா-மகளா என்பதையமறிவதுதான் என்று அந்தக் குடும்பத்திற்குத் தெரிய வரும். அம்மா அவர்களின் இரக்கமான பார்வை, சந்தேகம்…என்று கற்பனை செய்து பார்த்தாள். மனம் குறுகியது.

பூமியில் தனக்கான காற்று இல்லை என்பதை உணர்ந்தாள். வாயும்,மூக்கும் வரண்டது. அம்மா மூச்சு விடத் திணறினாள் அம்மாவின் முதுகை மகள் நீவினாள்.

எத்தனை முகங்கள், சோதனைகள், மூச்சை நிறுத்தச் செய்யும் அளவில், உண்மையை அறியப் போவதற்கு. அப்பாவிற்கு அது சந்தோஷம் தருமா? இந்தச் சோதனைகள் மற்றொரு முடிவைத் தந்தால், அம்மா ஒரு சாகசம் செய்தவள் போல உணர்வாள். எல்லோரிடமும் விருப்பத்தோடு அவள் காட்டிய நேசம், இப்போது அவளைச் சுற்றி வந்து காப்பாற்ற வேண்டும். அந்த நேசிப்பு காற்றின் வழியாக வந்து அவளுடைய மகளின் வாழ்க்கையில் வேர்களையும் கிளைகளையும் பரப்பினால்… நேசிக்கவோ அனபை ஏற்றுக் கொள்ளவோ தெரியாத மனிதனின் மகளாக இருப்பதே மேல். அந்த முகவரி அவளுக்கான புது ஜன்னலைத் திறந்து விடும். அந்த ஜன்னல் வழியாக அம்மா பறவையும், மகள் பறவையும் உயரத்தில் வானத்திற்குள் பறந்து விடும்
.
திடீரென ஆதரவற்ற ஒரு நிலையும், தோல்வியும் அவளை நடுக்கியது. கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். புற்றுநோய் சிகிச்சைக்காகப் போய்க் கொண்டிருந்த பெண்மணி அம்மாவை மெதுவாகத் தொட்டாள்.

அம்மா நிகழ்வுகளை கனவில் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கனவுகளில் வந்த சிவப்பான, அழகான மனிதன் இல்லை… ஒரு கருப்பான மனிதன் கருமையான விழிகளில் முழுக் காதலோடு… மணலில் அவன் பதித்த பாதச்சுவடுகள் ஆழமான காதலாக. அம்மா அவனருகில் நடந்து கொண்டிருந்தாள். அம்மாவின் கன்னங்களில் குழியும் இளமையும் இருந்தது. புன்னகை, மை, நீண்ட பொட்டு, இரட்டை சடை.வழியில் கல்லோ அல்லது தடைகளோ எதிர்ப்பட்டால் அவன் ஓடி வந்து உதவி செய்தான். அவள் தலை குனிந்தாலோ அல்லது முகம் சுளித்தாலோ தன் அன்பைக் கொட்டினான்.

அஞ்சனாவின் அப்பா அந்த நேசிப்பான மனிதர். குழந்தை அஞ்சனா, அம்மா, அந்தக் காதலர் முடிவேயில்லாத வழிகளினூடே நடந்தார்கள். மலைகள், குன்றுகள், பாலைவனங்கள் மற்றும் ஆறுகள், குளங்கள், மேகங்கள் ஆகியவற்றைக் கடந்தனர். அவர்கள் நடந்தபோது வயலெட் பூக்கள் இரு புறங்களிலும் பூத்திருந்தன. சாலைகளில் காய்ந்த இலைகளோடு வயலெட் பூக்கள் பூத்திருப்பதைப் பார்ப்பது எவ்வளவு அழகாயிருக்கும்!

அவனுடைய கைகளுக்குள் அம்மா, மகள் பெருமையும், அன்பும் பாதுகாப்பாக இருந்தன. எந்தக் கையும் அவர்களைத் தொட முடியாது.வானத்தில் இருப்பதைப் போல அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். திடீரென்று அம்மாவிற்கு கருப்பு விழிகளோடு இருக்கிறவனைத் தழுவ வேண்டுமென்ற ஓர் ஆசை உந்திற்று.மகளின் கைகளை உதறிவிட்டு முன் நோக்கி வேகமாக ஓடினாள். அந்த வலிமையான கைகளைப் பிடித்துக் கொண்டு ரோஜாக்களின் வாசனையிருக்கிற, சிவப்பு, மஞ்சள் பூக்கள் பூத்திருக்கிற சாலைகளை நோக்கிப் போனாள்.

ரயில் அந்த அறியாத ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அம்மா வெளியே பார்த்தபோது அந்த முகம் தெரிந்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் கனம் தெரியாமல் ரயிலிலிருந்து இறங்கினாள். அப்பாவும், மகளும் அதை உணர்ந்து கதவருகே போன போது அம்மா இறங்கி ஓடி விட்டாள் .ரயில் வேகமெடுத்தது.

இப்போது ரயிலில் அம்மா ஒரு காட்சியாக.. அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. முதலில் அவள் தொலை தூரத்திலிருக்கிற நட்சத்திரமாகத் தெரிந்தாள்.. அதன் பிறகு நீண்ட வரிசையாக.. பின் புள்ளியாக.. பிறகு அவளைப் பார்க்கவே முடியவில்லை
.
வெளியே கருப்புச் சுரங்கம் ரயிலோடு கலந்து சென்றது. அம்மா அந்த அக்னி பரீட்சைக்கு வரமாட்டாள் என்று மகளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ரயில் தன் பாரத்தை இழந்து விட்டதைப் போல உணர்ந்தாள். பாரமற்றதாய் ரயில் முன்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

தன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே மிக மெதுவாக அவள் நடந்தாள். அவளுக்கும் சிவப்பு, மஞ்சள் பூக்கள் மலர்ந்திருக்கும் வழிகள் தெரிந்தன.

அம்மாவை உடனே பார்க்க வேண்டுமென்ற பிடிவாதமான குழந்தையாக மாறினாள். ரயில் பாரத்தை இழக்க, அவளுள் காற்றின் வேகம் எழுந்தது. அப்பாவின் பலவீனமான கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். அம்மா அசையும் ஓர் இலையாக வெளியே பறந்ததாக உணர்ந்தாள்.

அவள் விசித்திரமான சாகச காதலோடு கலந்தாள். எதிர்காலப் பிறப்புகளுக்காக, நடுக்கமான நெஞ்சோடு அவள் காத்துக் கொண்டிருக்கலாம். அந்தச் சிவப்புப் பெண் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். எதிர்காலத்தில் கருப்பே இருக்கக் கூடாது, சிவப்பு மட்டுமே இருக்க வேண்டும்.

அப்பா ரயிலின் அபாயச் சங்கிலியை இழுப்பதற்கு முன்பாகவே இரண்டு மெல்லிய இலைகள் அம்மாவையடுத்துப் பறந்தன. அம்மாவைப் பார்ப்பதில் அவைகள் உறுதியாக இருந்தன. ’அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு” என்று அந்த அசையும் இலைகளைப் பார்த்து யாரும் சொல்ல மாட்டார்கள்.
——————-
நன்றி : Indian Literature,
Sahitya Akademi s Bi—Monthly Joirnal Sep / Oct 2012

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.