MY SISTER CHAOS-LARA FERGUS (தமிழில் அனிருத்தன் வாசுதேவன், காலச்சுவடு உலக கிளாசிக் நாவல்)
போர், வன்முறை, அழிவு, நாசம், வன்புணர்ச்சி, அகதிகள், புலம் பெயர்தல், காலம் முழுதும் அடையாளம் வெளிப்பட்டுவிடாமல் வாழ்தல் என்பதை இரு கதாபாத்திரங்கள் மூலமாக, உணர்ச்சிகளின் தீவிரத்தைக் குறிப்பால் உணர்த்தி, இசையும், கணிதமுமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது.
எல்லைகளைத் தகர்க்கும் போரில், எல்லைகள் மீளெழுதப்படும் நிலையில் வரைபடங்கள் என்ன சொல்கின்றன? உயர்ந்து வரும் கடல் மட்டங்கள், புவியியல் ரீதியாக நெருக்கவும், பிரிக்கவுமான கண்டங்கள், இயற்கைச் சீற்றமான நில நடுக்கம், இவற்றின் பின்புலத்தில் நாடுகள், எல்லைக்கோடுகள் இவற்றின் பொருளும் தானென்ன? இந்தக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் தன் வரைபடத்தைக் காட்டுகிறது. போரில் பொது மக்களை, குறிப்பாகப் பெண்களை அச்சுறுவது யார்- சொந்த நாட்டில் பாதுகாப்புத் தர ஆர்வமுள்ள சர்வ தேசப் படையினரா அல்லது சொந்த நாட்டின் பாதுகாப்பில் ஆர்வமுள்ள தேசியப் படையினரா? துரோகம் என்பதைப் பொறுத்தவரை எப்போது என்பதே கேள்வி. எனவே, அரசியல் சதுரங்கத்தில் நிலைத்த இடம் துரோகத்திற்கு உள்ளது. ஆப்கான் நினைவிற்கு வருகிறதா? இதைப் போன்ற பல்வேறு நாடுகளைச் சுட்ட முடியும்.
இந்த நாவலில் மூன்று பாகங்கள் உள்ளன -1-நிலப்பரப்பு, 2- இசையின் படி நிலைகள், 3- பெருங்குழப்பம்.
இதில் இரு பெண்கதாபாத்திரங்கள், அவர்கள் இரட்டையர், அவர்களின் பெயரோ, அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெயரோ, இப்போது வாழும் நாட்டின் பெயரோ சொல்லப்படவில்லை. கதை முடிவிலி என்ற அம்சத்தைக் கணக்கில் கொண்டு ‘சீனோ முரண்பாடு’ என்ற கோட்பாட்டுச் சிந்தனைகளை தூவிச் செல்கிறது. ‘சீனோ’ என்ன சொல்கிறது? கடக்கும் தொலைவில் சரி பாதி எப்போழுதும் மிஞ்சும். அப்படியென்றால் முடிவிலி தடையாகக் கூடுமா, இல்லையா? கணிதவியலாளர் (இவரும் ஒரு கதாபாத்திரம். கிட்டத்தட்ட நாவலின் இறுதியில் வருகிறார்) சொல்கிறார்: நடுவில் இருக்கும் புள்ளிகளில் சிக்கிக் கொள்ளாமல் நேரடியாக இறுதிப் புள்ளியை அடைய உதவுவதே நடைமுறை.
கதை சொல்லும் இந்தச் சகோதரி, வரைப்படவியலில் தேர்ச்சி பெற்றவர். தான் தற்சமயம் வாழும் நாட்டிற்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொண்டவர். அவர் எவரையுமே ஆழமாக அறிந்து கொள்ள விழையாதவர். அதிலிருந்தே அவர் தனிமையைத் துணையாகப் பற்றியிருப்பது வெளிப்படுகிறது. அவருக்கு, வரைபடத்தில் அடங்க வேண்டுவது விவரங்களா, பரப்பளவா என்ற கேள்வியுடன் எல்லா வரைபடங்களும் பொய்யே இதுவரை என்ற எண்ணமும் இருக்கிறது. வரைபடவியல் ‘காலம்’ என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. அளவெடுக்கும்போது இருக்கும் விஷயங்கள் மட்டுமே அதற்குப் பொருந்தும். அனைத்து வரைபடங்களும் உடனுக்குடனே காலாவதி ஆகி விடும். அலுவலகத்தில், வரைபடப் பணியில் கணினிக்கான சரியான வழிமுறையை எழுதும் துறையில் அவர் இருக்கிறார். தன் வசிப்பிடத்தை ஒரு வரைபடமாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் முக்கிய ஒன்றாக நாவலில் பின்னிப் பிணைந்து வருகிறது. அந்த இருப்பிட வரைபடத்தைத் துல்லியமாக அமைக்கும் ஏக்கமும், அதில் தான் தோல்வியடைந்து கொண்டிருப்பதுவுமான ஒரு உள்ளுணர்வும் இருக்கிறது. அளவுகளை வெறும் அனுமானங்களாகத் தன் சகோதரியின் திடீர் வரவு மாற்றியிருப்பதாக அவர் உணர்கிறார். நாட்டை, வீட்டைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் ஆழ் மன ஏக்கமான உடமை கொள்ளுதலின் பிரதிபலிப்பு தான் இந்த விழைவு. ஆனாலும் அவர் நினைக்கிறார்: “நாம் சொந்தமாக்கிக் கொள்ளும் விஷயங்களில் மிகவும் மோசமானது நிலம்தான். அது நம்மை ஓரிடத்தில் கட்டிப் போட்டு, நாம் இருக்கும் இடத்தை மற்றவர் அறியும்படி செய்து விடுகிறது.” அவர் செய் நேர்த்தியுடன், ஒழுங்கையும் விரும்புபவர். அவர் பார்வையில், தன்னுடன் பிறந்தவளை இவ்வசிப்பிடத்தில் அனுமதிப்பது வீட்டின் அமைதியை, ஒழுங்கை, நறுவிசை குலைப்பது. வந்திருக்கும் சகோதரி அவர் கூடத் தங்க விழைவது அவரைப் பாதிக்கிறது; கால ரீதியாகவோ, இட ரீதியாகவோ அவளது இருப்பை ஒரு வரையறைக்குள் அடக்க இயலாது என்பது தான் சிக்கல். வந்திருப்பவரைப் பற்றி அவர் நினைக்கிறார்: “இவளுக்கு வீடு என்ற ஒன்றுதான் வேண்டியிருக்கிறது; அது அவள் பிறந்து வளர்ந்த குறிப்பிட்ட ஒரு இடத்திற்கான ஏக்கமல்ல; இனி இல்லாது போன இடத்திற்கான ஏக்கம்.”
தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக அவர்கள் தஞ்சம் அடையும் போது அந்த அதிகாரிகள் இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யென்றே நினைக்கிறார்கள்; இவ்விடத்தில் கதை சொல்லி சொல்வதாக ஒரு குளிரும் உண்மை வெளிப்படுகிறது: ‘உண்மை எங்களுக்கு வலுவிழந்ததாகத் தோன்ற ஆரம்பித்தது.’ இறந்தவர்களின் பட்டியலில் இருக்கும் ஒரு முடிவான தகவல், அது தரும் விரக்தி கலந்த ஆஸ்வாஸம், காணாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பதில்லை அல்லவா? நாம் தப்பித்து ஓடக்கூடிய ஒரே இடம் நமக்கு உள்ளேதான் இருக்கிறது. வந்திருக்கும் சகோதரி, தன் காதலியையும், அவளது மகனையும் தேடிக்கொண்டேயிருக்கிறார். ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார். பெற்றுக் கொண்டதற்கேற்ப திரும்பித் தர வேண்டும் என்ற இயற்கை விதியை கேன்வாஸ் அறிந்திருக்கவில்லை. பதிவேட்டைக் களவாடிக் கொண்டு வந்து அந்தப் பெயர்களை ஆராய்கிறார். அவர்களது பெரியம்மா மற்றும் அவரது மகள் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். மற்ற மகள்களின் நிலை தெரியவில்லை. அந்தக் காதலியும், அவரது மகனும் என்னவானார்கள் என்றும். அந்தப் பட்டியலில் எண்கள், உருவக் கோடுகள், எழுத்துக்கள் என ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் சங்கேதக் குறிப்புகள் இருக்கின்றன. ‘உலகளாவிய வரைபடம்’ ஒன்றைச் செய்யும் பணியில் தன் நாட்டில், முன்பு முக்கிய பங்கு ஆற்றிய கதை சொல்லியான வரைபட இயலாளரான பெண், அந்த வரைபடம் அவர்களின் நாட்டிற்கு எதிராகவே, குறிப்பாகக், கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் அடைத்துத் துன்புறுத்தி, கொலைகளும் செய்துவிடும் அமைப்பிற்கு, உதவிகரமாக இருந்திருப்பது தெரிய வருவது எத்தகையதொரு திருப்பம்! பத்து பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த விவரங்கள், அவருடைய விலா எலும்புகளைத் தொட்டுக் கொண்டு ஒரு யூ எஸ் பி எனத் தொங்குகிறது.
வரைபடக் கலையும், இசையுமாக இரண்டாம் பகுதி தொடங்குகிறது. இதிலும், மூன்றாம் பாகத்திலும் அத்தியாய எண்கள் முழு எண்களாகவும் பின்னங்களாகவும் வருகின்றன. உதாரணம் 12.5, 13-15 முழு எண்கள் பின்னர் 15.5, 21.75 போன்றவைகளின் தொடர்ச்சி. அந்த ‘சீனோ’ வின் தத்துவத்தைத் தழுவிக்கொண்டு செல்கிறது இத்தகைய எண்ணிடல். கட்டிடக் கலை இசையாய் எழும்பிப் பறப்பதற்கு முன் முணுமுணுக்கப்படும் ஆரம்ப ஸ்வரங்கள் சுண்ணாம்புப் பூச்சு போன்றவை; புத்தக அலமாரிகளே கீழிறங்கும் சுரத் தொகுதிகள். இசை வேகம் பெறும் இடங்களே சுவர்கள். ஒரு கட்டத்தில் அவர் நினைக்கிறார் “எனக்கிருக்கும் வரைபடப் பிரச்சினை செய்முறை சார்ந்தது அல்ல; உண்மையில் கருவியைச் சார்ந்தது. என் வசம் இருக்கும் மிக மழுங்கிய கருவி நானேதான்.” “செய்முறையில் காட்டும் அதீதத் தீவிரமே பணியைத் தோற்கடிக்கும் என்று முன்னமே அறிந்திருந்தேனா?”
முற்றுப் பெறாத, கச்சிதமற்ற முயற்சிதான் அந்த வரைபடம்; ஆனால் அதில் அழகு இருக்கிறது. ஒரு வேளை சமரசம் என்பது தோல்வியில்லையோ… அது சமாதானமோ?
வந்திருக்கும் சகோதரி வீட்டின் நிலவறையைக் கண்டு பிடிக்கிறார். விதானமும், தரையும், நீள, அகல, உயரங்களும், சாய் கதிர் கோணங்களும், மூலை மடிப்புகளும், தாழ்வாரம் என்று தன் வீட்டின் அத்தனையும் தெரிந்து வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வரைபடவியலாளருக்கு இது பேரிடியாக இருக்கிறது. வீட்டின் வரைபடம் எள்ளி நகையாடுவதைப் போல் இருக்கிறது. தான் காட்ட விரும்பும் பரப்பு பற்றிய முழு பிரக்ஞையற்ற அறியாமையில் வந்துள்ள வரைபடம். அந்த வரைபடத்தையும், தங்க வந்துள்ள அந்த மற்றச் சகோதரி கடத்தி நிலவறைக்குக் கொண்டு சென்று விடுகிறாள். காற்று சற்றும் அசையாமல் நிற்கிறது. இசையின் இரு அளவுகளுக்கு நடுவே வீடு நிற்கிறது. கடந்த காலத்தை எந்த வகை எதார்த்தமாக ஏற்றுக் கொள்வது? அவைகளுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்? அப்படியே நாம் ஏற்றுக் கொண்டாலும், அதற்கு கடந்த காலம் இணங்க வேண்டுமே? இரண்டே சாத்தியங்கள் தானே- சரணடை அல்லது தப்பி ஓடு.
சில சிந்தனைகள் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன இந்த நாவலில். ‘அறிவியல் நிபுணர்களாக இருப்பவர்கள் பகுத்தறிவுக்கு முரணாக, பாரபட்சமாக செயல்படுவார்கள் என்று நான் ஒரு நாளும் சந்தேகித்ததில்லை. அவர்கள் வெறுப்பின் தரப்பில் இருப்பார்கள் என்றும் நான் நினைத்ததில்லை.’
கதை சொல்லும் சகோதரிக்கு தன் வரைபடம் வேண்டும்; அவளது சகோதரி அதை மறைத்து வைத்துவிட்டாள் அல்லவா? ஆனால், முன்னவரை வரைபடம் தன்னை நோக்கி உறிஞ்சி இழுக்கும் அந்த அதீதப் பற்று கலந்த துயரம் நம்மையும் பீடிக்கிறது. அவர் ஒரு சமாதானத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.
கணிதவியலாளரின் கணினியைப் பயன் படுத்தி அந்த யூஎஸ்பியிலுள்ள விவரங்களை அவர் வெளிக் கொணர்கிறார். யாருமில்லாத அந்த அறையின் தனிமையில் துணிகரமாக அவற்றைப் பிரதியும் எடுக்கிறார். பிடிபடுகிறார். நிறுவனத்தின் இயக்குனர், உலகளாவிய வரைபடத் திட்டத்தின் செயலாளர், அந்த விசாரணையைப் பார்க்க அழைக்கப்பட்டிருந்த மனித உறவுகள் துறையைச் சார்ந்தவர்களை அவர் நான்கு வியூகங்களில் எதிர் கொள்கிறார். 1. மையத்திற்குக் கொண்டு வா. 2. கட்டமைப்பு {——} வரைதல் 3. வலுவிழக்கவில்லை; வலுவடைந்திருக்கிறது 4. தேவைக்கேற்ப கட்டவிழ். சட்டப்படி வழக்கு தொடர முடியும் என்றும் அதை அவர்கள் தற்போது நினைக்கவில்லை என்றும் விசாரணைக் குழு சொல்லும் போது ‘இதென்ன வெறும் வரைபடம் தானே, அவ்வளவு பெரிய விஷயமா என்ன’ என்று அவர் நினைக்கும் இடத்தில் அவரது மொத்த குணாதிசயங்களும் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.
அவர் தன் வீட்டை உடைக்கிறார். அதன் உட்தன்மை காணப்படாததால் அதைக் கண்டுபிடிக்கும் வேகம் கொள்கிறார். உத்திரங்களை அறுக்கிறார். காரைகளை உதிர்க்கிறார். உள் செங்கற்களைத் தடவி மகிழ்ச்சி அடைகிறார்.
அந்தக் கணிதவியலாளர் இவர்கள் வீட்டு வாசலில் நின்று பலமுறை அழைக்கிறார். முடிவில் ஒரு புதிய யூஎஸ்பி கருவியைத் தருகிறார். அதில் தற்போது இருக்கும் வரைபடம், அதற்கான தரவுகள் இருக்கின்றன. சில உணர்வுகள் என்றுமே மங்குவதில்லை.
‘மல்டிபிள் பர்சனாலிடி டிஸார்டர்’ உள்ள கதா பாத்திரமுமாகவும், ஒருவரே இரட்டையராகப் பிரிந்து கருத்து ரீதியில் வேறுபடுவதாகவும், இருத்தலியல் சிக்கல்கள் அவரவர் வழிகளில் மாறுபட்டுள்ளன என்பதாகவும் கூட இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நாவலில் பாத்திரங்களாக, வெய்யில், மழை, ஓசை, இசை, வரைபடக் கருவிகள், ஆக்கும் அழிக்கும் கருவிகள், ஓவியங்கள் என எல்லாமே பயன்படுத்தப்பட்டு கதையின் கனத்தை, செவ்வியல் நோக்கத்தை முன்னேற்றுகின்றன.
‘உன் நினைவுகள்’ என்ற ஆத்மாநாமின் கவிதை நினைவில் வருகிறது.
‘எனினும் நான் உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக்கற்களை சிதறும் ஒளிக்
கற்றைகளை வீசும் விளக்கை
அப்பொழுதேனும் துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள
முடியாது இவ்விதம்
தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின் பரிமாணங்களைச்
செதுக்கிய ஓவியத்திற்குச் செல்வேன்.
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்
உதிர முடியாத காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும் மெல்லிய ஒலியுடன்…..’
ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸின் புகழ் பெற்ற ஒரு பத்திக் கதை “டெல் ரிகோர் என் லெ சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) உறுதிப்படுத்தப்படாத காலத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட்ட இது 1: 1 என்ற விகிதத்தில் அதன் பிரதேசத்துடன் ஒத்த ஒரு வரைபடத்தை கற்பனை செய்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால், ஒரு பரந்த காட்சியின் பிரதி, அது பிரதிநிதித்துவப்படுத்தும் நிலத்தின் துல்லியமாக மேலெழுகிறது. இந்தக் காட்டுத்தனமான வரைபடத்தின் வாரிசுகள், “தங்கள் முன்னோடிகளைப் போலவே நிலப்படக்கலை ஆய்வை மிகவும் விரும்பாதவர்கள்”, அதை அவர்கள் நிராகரித்தனர், பயனற்றதாகத் தீர்ப்பளித்தனர், அது அவர்களின் அலட்சியத்தால் பாழடைந்து போனாலும் முழுதுமாகக் காணாமல் போகவில்லை. அந்தப் பைத்தியக்கார சாம்ராஜ்யத்தின் புதர்ச்செடிகளில், “விலங்குகள் மற்றும் பிச்சைக்காரர்கள் வசித்து வந்த” இடங்களில் தன் சிதறுண்ட சிதைவுகளை விட்டுச் சென்றது. புவியியல் என ஒரு காலத்தில் அறியப்பட்ட அறிவின் கிளையின் நினைவூட்டல்களாக இந்தச் சிதைவுத் துகள்கள் நிற்கின்றன: ஒரு நிலத்தைப் போலவே பெரிதானது அந்த வரைபடத்தின் பிற்கால வாழ்க்கை.
ழான் பாட்ரிலார்த் இந்தக் கதையை “உருவகப்படுத்துதலின் மிக அழகான உருவகம்” என்று அழைக்கிறார். அவர் சொல்கிறார், “முன்னேறியுள்ள முதலாளித்துவத்தில் வரைபடம் பிரதேசத்திற்கு முந்தியுள்ளது; உருவகப்படுத்துதல்கள், உண்மையானவற்றை உருவாக்குகின்றன; அல்லது, மாற்றாக, இரண்டிற்கும் இடையிலான ஊக வேறுபாடு மறைந்துவிடுகிறது.” (அவரது கண்ணோட்டத்தில், போர்ஜஸின் வரைபடம் இன்று முதலில் வரும், அதன் பின்னர் உருவாக்கப்பட்ட பொருள் உலகம், அல்லது வரைபடமும் உலகமும் ஒரே இடமாகக் காணப் பெறும் )
அர்ஜென்டினா நாவலாசிரியர் போலா ஒலிக்சராக்கைப் பற்றி N + 1 இதழ் தன் தலையங்கத்தில் சொல்கிறது “சாவேஜ் கோட்பாடுகள் மற்றும் டார்க் கான்ஸ்டலேஷன்ஸ் இரண்டும், இன்றைய வரைபடங்கள் தாங்கள் சித்தரிக்கும் பிரதேசங்களில் தங்களைத் தாங்களே திணிக்க எவ்வளவு வேலை செய்கின்றன என்பதை இவர் காட்டுகிறார்.” வரைபடங்கள் பல எழுத்தாளர்களை ஈர்த்திருப்பது தெரிகிறது.
நாவலாசிரியர் லாரா ஃபெர்கஸ் ஆஸ்திரேலியர். பெண்கள் வாழ்வைப் பற்றிய மேற்படிப்பும், சர்வதேச சட்டங்கள் துறையில் பட்டப்படிப்பும் பெற்றுள்ள இவர் அறிவியல் படிப்பை பாதியில் நிறுத்தி நடனக்கலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கணுக்கால் பிரச்சினையினால் வேறு துறைகளில் நாட்டம் செலுத்தினார். புலம் பெயரும் பெண்கள், அகதிகளாகும் பெண்கள் ஆகியோருக்கெனச் செயல்படும் அமைப்புகளில் இணைந்து பணியாற்றினார். இது இவருடைய முதல் நாவல். அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.