கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?
ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.
கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?
ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.
நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?
கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்
ப- மன்னித்துக் கொள்.
கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.
ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.
கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…
ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?
கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.
ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.
கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம் நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?
பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).
இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.
கேள்வி- நீ பயப்படவில்லையா?
பதில் – அதற்கு மாறாய், எனக்கு நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.
ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?
பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.
கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”
பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.
மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.
கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.
பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”. இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.
“அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).
இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.
ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”) என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.
ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.
கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.
பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.
கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.
நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தேவைப்படுகிறது.
கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?
பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.
கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?
பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.
நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.
எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும் என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?
பதில் – நல்ல கேள்வி!
நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/
image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/