பால்கனியில் தனக்கு மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்கு
ஆடிக் கொண்டிருக்கிறாள் நடன மங்கை
தாழ்வாரத்தில் நடந்தபடி தீவிரமாய்
பாடம் எடுக்கிறாள் ஆசிரியை
வாசற்படியில் குச்சியைச் சுழற்றி
கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளுடன்
போரிடுகிறான் மாவீரனொருவன்
உலகின் மிக வேகமான பௌலரின் பந்தை எதிர்கொள்கிறான்
அவன் தலைமுறையின் முதன்மை பேட்ஸ்மேன்
உள்ளிருந்து ஒலிக்கும் அதட்டலில்
அனைவரின் உலகங்களும் நிலையழிய
அவசரமாக உள்ளே ஓடுகிறார்கள்,
மீண்டும் குழந்தைகளாகி.