முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1
கடல், இதமான வசந்தகாலம், ஒளியில் நனையும் தீவுகள், கிரேக்கத்தின் அலங்காரமற்ற அழியா திருமேனியின் மீது மென்மழை தெள்ளிய திரையாகப் பரவியது. ஏஜியன் கடலை மரணிப்பதற்கு முன் தன் வாழ்நாளில் கடப்பவன் உண்மையில் பாக்கியவான் என எண்ணிக்கொண்டேன்.
பெண்கள், பழங்கள், சிந்தனைகள்– ஆம் இவ்வுலகின் இன்பங்கள் கணக்கற்றவை. ஆனால் இந்த அற்புதமான வசந்த காலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு தீவின் பெயரையும் முணுமுணுத்தபடி கடலைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதில் உள்ள மகிழ்ச்சிதான் என்னளவில் மனிதனின் இதயத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த மார்க்கம். வேறெங்கும் நிகழ்காலத்திலிருந்து கனவிற்குள் இத்தனை எளிதாக, அமைதியுடன் நுழைந்துவிட இயலாது. எல்லைகோடுகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன, புராதனமான கப்பல்களின் கொடிகம்பங்களில் இருந்து கிளைகள் முளைத்து கனிகள் காய்க்கின்றன. கிரேக்கத்தில், தேவையே அற்புதங்களை உண்டாக்கும் அன்னை என்றாகிறது.
மதியம் மழை நின்றது. சூரியன் கழுவிவிட்டது போல் புத்தம் புதிதாக மேகங்களை பிளந்து மென்மையாக ஒளிவிட்டு, தன் நேசத்துக்குரிய நீரையும் நிலத்தையும் மெல்ல வருடிக் கொண்டிருந்தது. நான் கப்பல் மேற்தளத்தின் முற்பகுதியில் நின்றேன், பார்வை எட்டும் தொலைவு வரை நான் கண்ட அற்புதம் என்னை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தியது.
கப்பலில் என்னுடன் கிரேக்கர்கள் இருந்தார்கள், பேராசை மின்னும் கண்கள், அவர்களின் மூளை கடைத்தெரு வணிகர்களின் மதிப்பற்ற பகட்டு பொருட்கள் போல் இருந்தன, ஏமாற்றிகொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, சுருதி சேராத பியானோ போல், நேர்மையான அதே வேளையில் விஷமிகுந்த சுண்டெலிகள் போல் சண்டையிட்டுக் கொள்பவர்கள். கப்பலின் இருமுனைகளையும் பிடித்து கடலுள் அமிழ்த்தி நன்றாக குலுக்கி, அந்தக் கப்பலை மாசடைய செய்த உயிரினங்கள்- மனிதர்கள், எலிகள், பூச்சிகள் என எல்லாவற்றையும் கழுவி கொட்டிகவிழ்த்துவிட்டு, இவை ஏதுமற்ற சுத்தமான கப்பலை மீண்டும் மிதக்க விட வேண்டும் என்பதே ஒருவரின் முதல் உந்துதலாக இருக்கக்கூடும்.
ஆனால் சிலவேளைகளில் நான் கருணையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன் புத்தரின் கருணை, மீபொருண்மையின் தர்க்க மயக்கத்தின் முடிவையொத்த குளிர்ந்து இறுகிய கருணை. இந்தக் கருணை மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, போராடி, அழுது, நம்பி, சூனியத்தின் மாயபிம்பங்கள் தான் அனைத்துமே என்று உணராத எல்லா ஜீவராசிகளுக்குமானதும். இந்த கருணை எல்லா கிரேக்கர்களின் மீதும், பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் மீதும், புத்தரை பற்றி எழுதிமுடிக்காத எனது கைப்பிரதி மீதும், பரிசுத்தமான காற்றைச் சலனமடையச் செய்யும் ஒளியின் மீதும் நிழலின் மீதும் கவிந்தது.
மெழுகு படர்ந்து உறைந்தது போலிருக்கும் ஜோர்பாவின் முகத்தைக் கண்டேன். கப்பல் முகட்டில் சுருண்டு கிடந்த கயிறுகளின் மீது அமர்ந்திருந்தான். எலுமிச்சையை முகர்ந்த வண்ணம் அவனுடைய பெரிய காதுகளை கூர்மையாக்கி அருகில் வேறு சில பயணிகள் மன்னனை குறித்தும் வெனிஜெலோஸ் குறித்தும் தங்களுக்குள் சர்ச்சை செய்து கொண்டிருப்பதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். தலையாட்டி காரி உமிழ்ந்தான்.
‘கிழட்டு தண்டம்!’ அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா’ வெறுப்புடன் முணுமுணுத்தான்.
‘கிழட்டு தண்டம் என யாரை சொல்கிறாய் ஜோர்பா?’
‘இந்த மன்னர்கள், ஜனநாயகம், மக்கள் கருத்து, துணை அதிகாரிகள், அற்பத்தனங்கள்.எல்லாம்.. ஏன் இப்படியோ?’
தற்கால நிகழ்வுகளை ஜோர்பா கடந்து சென்றுவிட்டான். அவனளவில் அவையெல்லாம் காலாவதியான குப்பைகள் மட்டுமே. தந்தி, புகை கப்பல், என்ஜின்கள், தற்காலத்து அறம் – ஆன்மிகம் என இவையாவுமே துருவேறிய பழைய துப்பாக்கிகள் போலிருந்திருக்க வேண்டும் அவனுக்கு. உலகத்தின் வேகத்தைக் காட்டிலும் அவனுடைய மனம் வெகு வேகமாக முன்னேறிச் சென்றது.
பாய்மரத்தில் கட்டுண்ட கயிறுகள் கீச்சிட்டன. கரைகள் வளைந்து நெளிந்து நடனமிட்டன. கப்பலில் பயணித்த பெண்கள் எலுமிச்சையைக் காட்டிலும் மஞ்சளாக தெரிந்தனர். தங்கள் ஆயுதங்களை அவர்கள் கைவிட்டனர் – சாயம், மேலாடைகள், ஜடை மாட்டிகள், சீப்புகள். உதடுகள் என எல்லாம் வெளிறிப் போயின, நகங்களில் நீலமேறியது. கிழட்டு மாக்பை பறவையைப் போல் சலசலத்துக் கொண்டிருந்தவர்கள் கடன்பெற்ற சிறகுகளை இழந்து கொண்டிருந்தனர் – ரிப்பன்கள், போலி புருவங்கள், கரு மச்சங்கள், உள்ளாடைகள் என எல்லாமும் தான். குமட்டலுடன் வாயிலெடுக்க காத்திருக்கும் அவர்களை காணும்போது அருவருப்பாக இருந்தது, கூடவே ஒரு பெரும் கருணையும் பிறந்தது.
ஜோர்பாவும்கூட மஞ்சளும் பச்சையுமாக மாறிக்கொண்டிருந்தான். மின்னும் அவன் கண்கள் மங்கின. மீண்டும் மாலையில்தான் அவனது கண்கள் ஒளிவிடத்துவங்கின. கப்பலுக்கு அருகில் இரண்டு ஓங்கில்கள் துள்ளி குதித்து போனதை சுட்டினான்.
‘ஓங்கில்கள்!’ மகிழ்ச்சியாகக் கூவினான் ஜோர்பா.
அப்பொழுதுதான் முதன் முதலாக கவனித்தேன், அவனது இடது கை ஆள்காட்டி விரலின் சரி பாதியை காணவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது.
‘உனது விரல்களுக்கு என்னாயிற்று?’ நான் கூவினேன்.
‘ஒன்றும் ஆகவில்லை’ அவன் சுட்டிக்காட்டிய ஓங்கில்களைக் கண்டு நான் பரவசமடையாததில் அவனுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
‘ஏதேனும் இயந்திரங்களில் சிக்கிக்கொண்டாயா?’
‘ஏன் தேவையின்றி நீ இயந்திரங்களை வம்புக்கு இழுக்கிறாய்? நானே துண்டித்துக் கொண்டேன்’
‘நீயேவா? ஏன்?’
‘உனக்கு புரியாது பாஸ்!’ தோள்களைக் குலுக்கிக்கொண்டு சொன்னான்.
‘நான் எல்லாவிதமான தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னது நினைவிருக்கிறதா? ஒருகாலத்தில் குயவனாக இருந்தேன். நான் அதன் மீது பித்து கொண்டிருந்தேன். ஒருபிடி மண்ணைப் பிடித்து நீ விரும்புவதை உருவாக்குவது எத்தகைய நிறைவைத் தரும் என்பது உனக்கு புரிகிறதா? நீ சக்கரத்தைச் சுற்றுகிறாய் அதோடு மண்ணும் சேர்ந்து சுழல்கிறது, பேய் பிடித்ததுபோல், அதன்முன் நின்றுகொண்டு ‘ ‘நான் ஒரு ஜாடி செய்யப் போகிறேன், ஒரு தட்டு செய்யப் போகிறேன், விளக்கு செய்யப் போகிறேன், இன்னும் என்னவெல்லாம் இந்த சாத்தானால் செய்ய முடியுமோ! இப்படிப்பட்டவனைத்தான் நீ சுதந்திர மனிதன் என்றழைப்பாய்!’ அவன் கடலையே மறந்துவிட்டான். அவன் எலுமிச்சையைக் கடிப்பதை நிறுத்திக்கொண்டான். கண்கள் மீண்டும் தெளிவாயின.
‘சரி…உன் விரலுக்கு என்ன ஆயிற்று?’
‘ஒ அது சக்கரத்தின் இடையில் புகுந்து கொண்டே இருந்தது.. இடையில் குறுக்கிட்டு எனது திட்டங்களை குலைத்துக்கொண்டே இருந்தது, எனவே ஒருநாள் ஒரு சின்ன கோடரியை எடுத்து..’
‘உனக்கு வலிக்கவில்லையா?’
‘என்ன கேள்வி இது? நான் ஒன்றும் மரக்கிளை இல்லையே, உயிருடன் இருக்கும் மனிதன் நான், வலிக்கத்தான் செய்தது, ஆனால் அது குறுக்கிட்டுக் கொண்டே இருந்தது, அதனால் வெட்டி வீசி விட்டேன்..’.
சூரியன் கடலுள் மறைந்தது. கடலில் மெல்ல அமைதி திரும்பியது. மேகக்கூட்டம் கலைந்தோடின. நட்சத்திரங்கள் மினுங்கின. நான் கடலை நோக்கினேன், வானத்தை நோக்கினேன், சிந்தித்தேன். கோடரி எடுத்து வெட்டி அந்த வலியை உணர்ந்து, இதில்தான் எத்தனை பிரியம், ஆனால் நான் என்னுணர்வுகளை ஒளித்து கொண்டேன்.
‘ இது மிக மோசமான அமைப்பு ஜோர்பா!’ சிரித்துக்கொண்டே சொன்னேன், ‘எனக்கொரு புராணக்கதை நினைவுக்கு வருகிறது, ஒரு துறவி பெண்ணொருத்தியைக் கண்டு உடலளவில் சஞ்சலம் கொள்கிறான், ஆகவே அவன் ஒரு கோடரியை எடுத்து..’
‘அட சாத்தானே, அவன் அதை செய்திருக்க கூடாது!’ நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உணர்ந்தவனாக ஜோர்பா குறுக்கிட்டான் ‘வெட்டிக்கொண்டானா! முட்டாள்! இருளில் சிக்கிய பாவப்பட்ட அப்பாவி! எந்தவிதத்திலும் அது தடையல்ல!’
‘ஆனால், அது ஒரு பெருந்தடையாக இருக்கும்’ நான் வலியுறுத்தினேன்.
‘எதற்கு?’
‘சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு’
ஏளனமாக என்னை ஓரக்கண்ணால் பார்த்தான் ஜோர்பா.
‘ஆனால், முட்டாளே, அது அல்லவா சொர்க்கத்தின் திறவுகோல்!’
மெல்ல தலையை உயர்த்தி உற்று நோக்கினான். நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை அறிய முற்படுவது போலிருந்தது அவனுடைய பார்வை. வருங்கால வாழ்வு, பரலோக ராஜ்ஜியம், பெண்கள், பூசாரிகள். ஆனால் அவனால் அதிகம் அறிந்துகொள்ள இயலவில்லை. தன் பெருத்த சாம்பல் நிறத்து தலையை ஆட்டியபடி சொன்னான்.
‘ சுவர்க்கத்திற்குள் முடமானவன் ஒருகாலும் செல்ல முடியாது” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.
நான் எனது அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். புத்தர் பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. புத்தருக்கும் ஆட்டிடையனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை மீண்டும் வாசித்தேன். இந்த ஒரு உரையாடல் அமைதியை பற்றியும் பாதுகாப்பை பற்றியும் பல வருடங்களாக என்னுள் தீரா வினாக்களை எழுப்பியவண்ணம் இருக்கிறது.
ஆட்டிடையன் – எனது உணவு தயாராகிவிட்டது, நான் எனது ஆடுகளிடமிருந்து பால் கறந்துவிட்டேன், எனது குடிசையின் கதவு தாழிடப்பட்டுள்ளது, உள்ளே தணல் எரிகிறது, ஓ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்- எனக்கு உணவும் தேவையில்லை பாலும் தேவையில்லை. இந்த காற்றே எனது புகலிடம், தணல் அணைந்துவிட்டது. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
ஆட்டிடையன்– என்னிடம் எருதுகள் உண்டு, மாடுகள் உண்டு, என்னிடம் என் தந்தை எனக்களித்த வயல்வெளிகள் உண்டு, எனது மாடுகளைச் சினையாக்கும் காளையும் உண்டு, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்– என்னிடம் மாடுகளும் இல்லை, காளைகளும் இல்லை, எருதுகளும் இல்லை, வயல்வெளிகளும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. ஆகவே எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
ஆட்டிடையன்– எனக்கு நான் சொல்வதை கேட்கும், நம்பிக்கையான மனைவி இருக்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவள் என் மனைவியாக இருக்கிறாள். இரவுகளில் அவளுடன் விளையாடும்போது நான் மகிழ்வாக இருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்– நான் சொல்வதை கேட்கும் சுதந்திரமான ஆன்மா என்னிடம் இருக்கிறது. நான் பலவருடங்களாக அதைப் பயிற்றுவித்திருக்கிறேன் என்னுடனே விளையாட அதற்கு கற்று கொடுத்திருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
இவ்விரு குரல்கள் என்னுள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருந்தன, தூக்கம் ஆட்கொண்டது. காற்று மீண்டும் பலமாக வீசத்தொடங்கியது. அலைகள் பக்கவாட்டுச் சாளரங்களின் கனத்த கண்ணாடிகளை அறைந்து மோதின. நான் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடும் புகை போல் மிதந்தேன்.
கொடூரமான புயல் வீசியது, வயல்வெளிகள் நீரில் மூழ்கின, எருமைகள், மாடுகள், காளைகள் என எல்லாவற்றையும் நீர் விழுங்கி கொண்டது. குடிசையின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு போனது, தீ அணைந்தது, அந்தப்பெண் கதறினாள், மயங்கி மண்ணில் விழுந்து மரித்தாள், ஆட்டிடையன் தன் புலம்பல்களைத் தொடங்கினான். அவன் சொல்வது என் காதில் விழவில்லை ஆனால் அவன் உரக்க அழுது கொண்டிருந்தான், உறக்கத்திற்குள் மூழ்கி கொண்டிருந்தேன், ஆழ்கடலுக்குள் தப்பித்துச் செல்லும் மீனைப்போல் மூழ்கி கொண்டிருந்தேன்.
பொழுது விடிந்தது, துயில் எழுந்த போது எனது வலப்பக்கம் அந்த மேன்மைதாங்கிய கட்டுப்பாடுகளற்ற, கம்பீரமான தீவு இருந்தது. வசந்த காலத்து சூரியனுக்கு கீழிருக்கும் வெளிறிய இளஞ்சிவப்பு மலைகள் மூடுபனியை துளைத்துக்கொண்டு புன்னகை புரிந்தன.
எங்கள் கப்பலைச் சுற்றி நீலக்கடல் ஒய்வின்றி சீறிக்கொண்டிருந்தது. ஜோர்பா அரக்கு நிற சாக்கை போர்த்துக்கொண்டிருந்தான், அவன் ஆவலுடன் க்ரெட்டையே நோக்கிக்கொண்டிருந்தான். மலைகளில் இருந்து சமவெளிக்கும், பின்னர் கடற்கரைக்கும் அவனுடைய பார்வை திரும்பியது. எப்பொழுதோ புழங்கிப் பழகிய நிலப்பரப்பை, கடற்கரையைக் கண்டு மீண்டும் அங்கு உலவுவதில் அவன் மனம் மகிழ்ச்சி கொள்வதைப்போலிருந்தது. நான் அவனருகே சென்று மெதுவாக தோள் மீது கைவைத்தேன்.
‘ஜோர்பா, நீ க்ரெட்டுக்கு வருவது முதல்முறை அல்ல என்பது நிச்சயம்! பழைய நண்பனைக் காண்பது போல் க்ரெட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறாய்’
அலுத்துக்கொள்வது போல் ஜோர்பா கொட்டாவி விட்டான். உரையாடலைத் துவக்க அவனுக்கு விருப்பமில்லையோ என எண்ணினேன்.
சிரித்தேன். ‘பேசுவது உனக்கு அலுப்பை தருகிறது இல்லையா ஜோர்பா?’
‘அப்படி சொல்லிவிட முடியாது பாஸ். திரும்பப் பேசுவதுதான் கொஞ்சம் கடினம்.’ என்றான்.
‘கடினமா? ஏன்?’
உடனடியாக அவன் பதிலேதும் கூறவில்லை. மெல்ல கடற்கரையில் தன் பார்வையை ஓடவிட்டான். அவன் கப்பல் மேற்தளத்தில் உறங்கியிருந்ததால் சுருண்ட சாம்பல் நிறத்து தலைமயிரிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. கன்னத்திலும், தாடையிலும், கழுத்திலும் வரியோடிய சுருக்கங்கள் உதிக்கும் கதிரவனின் கிரணங்கள் பட்டு மிளிர்ந்தன.
ஒருவழியாக உதடுகளை அசைத்தான். கனத்து சரிந்த அவ்வுதடுகள் ஆட்டுதடுகள் போலிருந்தன.
“காலைப் பொழுதுகளில், வாய்திறப்பது எனக்கு கடினம். மிகக் கடினம். மன்னிக்கவும்”
மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தான். அவனது சிறிய வட்டக் கண்களைக்கொண்டு மீண்டும் க்ரெட்டையே வெறித்து நோக்கினான்.
காலையுணவுக்கான அழைப்பு மணி ஒலித்தது. எலுமிச்சை நிறத்து சங்கட முகங்கள் அறைகளில் இருந்து வெளிவந்தன. பெண்களின் கேசம் கலைந்திருந்தது, ஒரு உணவு மேஜையிலிருந்து மற்றொன்றிற்கு தங்களையே இழுத்துக்கொண்டு சென்ற போது காற்றில் பறந்தது கேசம். வாந்தியின் வாடையும் வடிகொலனின் வாடையும் கலந்து அவர்களிடமிருந்து கிளம்பியது. கண்கள் புகையோடி இருந்தன, அச்சமும் மிரட்சியும் நிரம்பியிருந்தன.
என்முன் அமர்ந்திருந்த ஜோர்பா காபியை ரசித்து ருசித்தான். ரொட்டியில் வெண்ணெயையும் தேனையும் தடவி பரப்பி உண்டான். அவனுடைய முகம் மெல்ல பிரகாசமடைந்து அமைதி தவழ்ந்தது. உதட்டோர கோடுகள் குழைந்தன எல்லாம் மென்மையாயின. அவன் மீது கவிந்திருந்த தூக்கத்திலிருந்து மெல்ல வெளிவந்து கொண்டிருந்ததை நான் அவனறியாமல் ரகசியமாக கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் கண்களில் பிரகாசம் கூடிவருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிகரெட் பற்றவைத்தான். திருப்தியுடன் மெதுவாக உள்ளிழுத்து நீலநிற புகையை ரோமம் அடர்ந்த மூக்குகளின் வழியாக வெளியேற்றினான். வலதுகாலை மடக்கி கிழக்கத்திய பாணியில் அமர்ந்து கொண்டான். இனி அவனால் பேச முடியும்.
‘க்ரெட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறையா?’ கண்களைப் பாதி மூடிக்கொண்டு தொலைவில் மங்கிக்கொண்டிருக்கும் இடா மலைச் சிகரத்தைப் பார்த்தவண்ணம் தொடங்கினான். ‘இல்லை, இது முதல் முறையல்ல. 1896லேயே நானொரு முழு மனிதனாக வளர்ந்திருந்தேன். மீசையும் தலைமுடியும் கருகருவென அதன் அசல் நிறத்தில் அண்டங்காக்கையின் நிறத்தைப் போன்று மிளிர்ந்தன. அப்போது எனக்கு முப்பத்தியிரண்டு பற்களும் இருந்தன. நான் குடிபோதையில் முதலில் பலகாரங்களை விழுங்கினேன், அதன் பின்னர்தான் உணவு. முடிவற்று மகிழ்ந்திருந்தேன். ஆனால் சட்டென்று சாத்தான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக்கொண்டது. க்ரெட்டில் புதிய புரட்சியோன்று வெடித்தது.
‘நான் அக்காலங்களில் ஒரு தெரு வியாபாரியாக இருந்தேன். கிராமம் கிராமமாக மசிடோனியா முழுவதும் சில்லறை தையல் பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்தேன். பணத்திற்கு பதிலாக பாலாடைக் கட்டி, கம்பளி, வெண்ணெய், முயல்கள், சோளம் போன்றவற்றை பெற்றேன். இவைகளை விற்று இரட்டை லாபம் அடைந்தேன். பொழுது சாய்ந்த பின்னர்தான் நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வேன். இரவுகளை எங்கு கழிக்க வேண்டும் என்பதை நானறிவேன். ஒவ்வொரு கிராமத்திலும் ஈரநெஞ்சம் கொண்ட விதவைகள் இருக்கத்தான் செய்தார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராக! சீப்போ, நூற்கண்டோ, அல்லது ஸ்கார்ஃபோ ஏதோ ஒன்றை அவர்களுக்கு அளிப்பேன், கரிய நிறம்தான், இறந்த கணவனின் நினைவாக, பின்னர் அவளுடனேயே படுத்தெழுவேன். பெரிதாகச் செலவோன்றும் ஆகாது. இல்லை, எனக்குக் கிட்டிய மகிழ்வான தருணங்களை ஒப்பிடுகையில் பெரிதாக செலவே ஆகவில்லை பாஸ்! ஆனால் நான் முன்பே கூறியதுபோல் சாத்தான் தன் வேலையை காட்டியது, க்ரெட் மீண்டும் ஆயுதத்தைக் கையிலேந்தியது. “ஆ ..அதன் தலைவிதி! எக்கேடோ கெட்டு ஒழியட்டும் இந்த சபிக்கப்பட்ட க்ரெட் எங்களை அமைதியாக வாழவே விடாதா?’ என்பேன் நான். பருத்தியையும் சீப்புகளையும் அப்பால் வீசிவிட்டு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நானும் க்ரெட்டின் புரட்சியாளர்களுடன் இணைந்து கொண்டேன்.’
ஜோர்பா அமைதியானான். மணல் திட்டுக்கள் நிறைந்து வளையும் கடற்கரையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்தோம். அலைகள் நிதானமாக அறுபடாமல் கரைதொட்டு நுரைத்தடங்கின. மேகக்கூட்டம் விலகி ஆதவன் ஒளிவிடத் துவங்கினான். க்ரெட்டின் அழகிய நிலபரப்பு துலங்கத் தொடங்கியது.
ஜோர்பா ஏளனத்துடன் என்னை நோக்கித் திரும்பினான்.
‘நான் எத்தனை துருக்கியர்களின் தலையைக் கொய்தெறிந்தேன், எத்தனை பேருடைய காதுகளை அறுத்து ஊறுகாய் போட்டேன், ஆம் அதுதான் க்ரெட்டின் வழக்கம், இவைகளை இப்போது சொல்வேன் என எதிர்பார்க்கிறாய் இல்லையா பாஸ்..? ஆனால் நான் அப்படிச் செய்ய மாட்டேன். அப்படிச் செய்வதை நான் விரும்பவில்லை. வெட்கித் தலைகுனிகிறேன். எத்தகைய பைத்தியக்காரத்தனம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது? இன்று கொஞ்சம் சமநிலையுடன் பார்க்க பழகியிருக்கிறேன். இன்று நான் அந்த கேள்வியை கேட்டுக் கொள்கிறேன். மற்றொரு மனிதன் மீது, அவன் நமக்கு எந்த தீங்கும் விளைவிக்காதபோதும், பாய்ந்து, கடித்துக் குதறி, மூக்கறுத்து, காதறுத்து, குடலை உருவி! எல்லாவற்றிற்கும் எல்லாம் வல்ல கடவுளையும் துணைக்கழைத்து! எல்லாம் வல்ல இறைவன் நமக்காக காதறுக்கவும் மூக்கறுக்கவும் குடலை உருவவும் வேண்டும் என்றெண்ணுகிறோமா என்ன? எத்தகைய ஒரு கிறுக்குத்தனம் நம்மை ஆட்கொண்டு இப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது?
‘ஆனால் என்ன செய்ய! அப்போது ரத்தம் சூடேறி இருந்த காலகட்டம். ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிதானித்து ஆராய எப்படி முடியும்? நியாயமாகவும் தெளிவாகவும் சிந்திக்க மனிதன் அமைதியாய், மூப்பேறிய, பற்களற்ற கிழவனாய் இருக்க வேண்டும். பற்கள் விழுந்து கிழடு தட்டிய பின்னர், “விட்டுத்தொலையுங்கள், பசங்களா, கடிக்க கூடாது’ என்று சொல்வது சுலபம்தான். ஆனால் முப்பத்தியிரண்டு பற்களுடன் இருக்கும் போது… மனிதன் இளமையில் கொடூரமான மிருகம். ஆம், பாஸ், அவன் கொடூரமான ஆளுண்ணும் மிருகம்.’
வேகமாகத் தலையாட்டினான்.
‘ஒ. அவன் ஆடு, கோழி, பன்றி என இவற்றையும் உண்பான் ஆனால் மனிதர்களை உண்ணவில்லை என்றால் ஒருபோதும் அவன் வயிறு நிறையாது..’
காபி தட்டில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை அணைத்தான்.
‘இல்லை, அவனுடைய வயிறு நிறைவதே இல்லை. அந்த கிழட்டு ஆந்தை இதற்கு என்ன சொல்ல முடியும்? ஹும்’
பதிலுக்கு காத்திருக்கவில்லை.
‘நீ என்ன சொல்ல முடியும்? நான் யோசிக்கிறேன்.’ என்னை ஏற இறங்க எடைபோட்டான். ‘நானறிந்தவரை, மாண்புமிகு முதலாளிக்கு பசித்ததே இல்லை, எவரையும் கொன்றதும் இல்லை, திருடியதும் இல்லை, பிறன் மனைவியுடன் கூடியதில்லை, உலகத்தைப் பற்றி என்னதான் அறிந்துகொள்ள முடியும்? உன்னுடைய மூளை சூதறியாதது. சூரிய ஒளிபடாத தோலுடையவன் நீ.’ எரிச்சலாக முனகினான் ஜோர்பா.
எனக்கு வெட்கமாக இருந்தது. இந்த மென்மையான கரங்களை, வெளிறிய முகத்தை, புழுதியும் குருதியும் படியாத எனது வாழ்க்கையை எண்ணி எனக்கு வெட்கமாக இருந்தது.
‘சரி..போகட்டும்’ மேசையை நுரைபஞ்சு கொண்டு துடைப்பது போல் தனது கனத்த கையை வீசினான். ‘சரி..போகட்டும்! நான் உன்னிடம் ஒன்றேயொன்று கேட்க வேண்டும்.. நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்தவன் அல்லவா.. ஒருகால் உன்னிடம் அதற்கான விடையிருக்கலாம்..
‘கேள் ஜோர்பா..என்ன அது?
‘பாஸ், இங்கு ஏதோ ஒரு அற்புதம் நிகழ்கிறது. என்னை எப்போதும் வியப்புக்குள்ளாக்கும் கொஞ்சம் வேடிக்கையான அற்புதமும் கூட. மட்டமான தந்திரங்கள், திருட்டுக்கள், பிறகு நடந்த வெட்டுகுத்துகள்- போன்ற செயல்கள் எல்லாம், அதாவது எங்களைப்போன்ற கலகக்காரர்களின் செயல்கள்தான், இளவரசர் ஜியார்ஜை க்ரெட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தியது… விடுதலை!’
வியப்பினால் கண்கள் அகல விரிய என்னை நோக்கினான்.
‘அது ஒரு புதிர்’ முணுமுணுத்தான், ‘மிகப்பெரிய புதிர்! இந்த கேடுகெட்ட உலகத்தில் விடுதலை வேண்டினால், இத்தனை கொலைகளும், தந்திரங்களும் அதற்கு அவசியமா? ஒன்று சொல்கிறேன், நான் அந்த வன்மத்தையும், கொலைகளையும் பற்றி மீண்டும் சொல்லத் தொடங்கினால் உனக்கு மயிர்கூச்செரியும். ஆனால் இத்தனைக்கும் பின் கிடைத்தது என்ன? விடுதலை! ஒரு மின்னலை அனுப்பி எங்களைத் துடைத்தழிப்பதை விட்டு கடவுள் விடுதலை அளித்தார்! எனக்கு புரியவே இல்லை!”
ஏதோ ஒருவகையில் நான் அவனுக்கு உதவக்கூடும் என்பதுபோல் அவன் என்னையே நோக்கினான், அவன் இந்தக் கேள்வியால் வெகுவாக அலைக்கழிக்கபட்டிருக்கிறான், அதன் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள அவனால் முடியவில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது.
‘உனக்குப புரிகிறதா?’ மிரட்சியுடன் கேட்டான்.
‘என்ன புரிய வேண்டும்? அவனிடம் என்ன சொல்லிவிட முடியும்? ஒன்று கடவுள் உண்மையில் இல்லை, அல்லது சூதும் கொலைகளும் உலக விடுதலைப் போராட்டங்களில் தவிர்க்க முடியாதவை.”
ஜோர்பாவிற்கு எளிமையான மாற்று விளக்கம் அளிக்க கடுமையாக முயன்றேன்.
‘எப்படி எருவிலிருந்தும், குப்பைகளிலிருந்தும் ஒரு செடி முளைத்து மலர் விடுகிறது? உனக்குள் கேட்டுக்கொள், ஜோர்பா, குப்பையும் எருவும்தான் மனிதர்கள், பூக்கும் மலர் தான் விடுதலை’
‘அப்படியானால் விதை? மேசையில் ஓங்கி கையால் குத்தியபடி கதறினான் ஜோர்பா. ‘செடி முளைத்துவர விதை வேண்டுமே. யார் நம்முள் இப்படியொரு விதையை விதைத்தவன்? இந்த விதை கருணையிலும் நேர்மையிலும் வளர்ந்து ஏன் பூப்பதில்லை? அதற்கு ஏன் உதிரமும் குப்பையும் தேவையாய் இருக்கிறது?’
நான் தலையாட்டினேன் ‘ எனக்கு தெரியவில்லை’ என்றேன்.
‘எவருக்கு தெரிந்திருக்கும்?’
‘எவருக்கும் தெரிந்திருக்காது’
‘அப்படியானால்…’ தன் கையறுநிலையை உணர்ந்தவனாக தன்னையே நோக்கிக்கொண்டு கூவினான் ‘ உனது படகுகளை, இயந்திரங்களை, கழுத்துப் பட்டைகளை வைத்துக்கொண்டு நானென்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாய்?’
கடற்பயணத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மூன்று பயணிகள் சற்றே தெளிவாகி அருகிலிருந்த மேசையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு தகராறு நடக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டு தங்கள் செவிகளை கூர்மையாக்கிக் கொண்டார்கள்.
மனம் வெறுத்த ஜோர்பா. குரலை தாழ்த்திக்கொண்டு ‘ வேறு ஏதாவது பேசலாம்’ என்றான். ‘அதைப்பற்றி எண்ணினாலே கைக்கு அகப்படுவதை உடைத்தெறிய வேண்டும் என்று தோன்றுகிறது- ஒரு நாற்காலியையோ, விளக்கையோ, அல்லது சுவற்றில் முட்டி என் தலையையோ. ஆனால் அதனால் எனக்கு என்ன பயன்? உடைத்தவைகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். மருந்துக்கடைக்கு சென்று தலையில் கட்டுபோட்டுக்கொள்ள வேண்டும். மேலும் கடவுள் இருந்தாரெனில், நிலைமை இன்னும் மோசம்; நாம் பாழாய் போனோம்! அவர் வானிலிருந்து என்னை உற்றுநோக்கி விலாநோக சிரித்து கொண்டிருப்பார்.’
சடாரென்று விரட்டியும் விட்டகலாத ஈயை விரட்டுவது போல் கையால் சைகை செய்தான்.
‘போகட்டும், அதையெல்லாம் விட்டுத் தள்ளு’ என்றான் வருத்தத்துடன். ‘நான் சொல்ல நினைத்ததெல்லாம், அரச குலத்து கப்பல் கொடிமிளிர ஆர்ப்பரிப்புடன் நுழைந்து, பலசுற்றுகளாக குண்டுகளப் பொழிய தொடங்கியபோது, இளவரசர் க்ரெட்டின் மண்ணில் காலடி எடுத்துவைத்த நொடியில்…ஒட்டுமொத்த மக்களும் தங்கள் விடுதலையை கண்டுகொண்டதால் பித்தேறி கிடப்பதை இதற்கு முன் என்றேனும் கண்டிருக்கிறாயா? இல்லையா? ஆ..பாஸ் அப்படியென்றால் நீ ஒரு குருடு தான்.
‘குருடாகத்தான் பிறந்தாய் அப்படியே மறைவாய். நானொரு ஆயிரம் ஆண்டுகாலம் வாழ்ந்து, காலம் எல்லாவற்றையும் உண்டு செரித்து, வெறும் ஒரு கவளம் சதைபிண்டம் மட்டும் எஞ்சியிருந்தாலும் கூட, அன்று நான் கண்டவற்றை என்னால் மறக்கவே முடியாது! மேலும் நாம் ஒவ்வொருவரும் வானத்தில் நமக்கான சொர்க்கத்தை நம் ரசனைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய முடியும் என்றால், ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும், அப்படி இருப்பதைத்தான் நான் சொர்க்கம் என்றழைப்பேன். நான் எல்லாம் வல்ல இறைவனிடம் ‘கடவுளே, எனது சொர்க்கம் என்பது மிர்டில் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட க்ரெட்டாக இருக்கட்டும், மேலும் க்ரெட்டின் மண்ணில் இளவரசர் ஜியார்ஜ் காலடிவைத்த அந்த கணம் நூற்றாண்டுகளுக்கு நீடிக்கட்டும்! அதுபோதும் எனக்கு!’
மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தான் ஜோர்பா. மீசையை உயர்த்தினான், ஐஸ்கட்டி போட்ட தண்ணீரை ஒரு கண்ணாடி லோட்டாவின் விளிம்பு வரை ஊற்றி ஒரே மிடறில் விழுங்கினான்.
க்ரெட்டில் நடந்தது என்ன ஜோர்பா? என்னிடம் சொல்!
‘’நாம் நீளமான பிரசங்கங்களை நிகழ்த்த வேண்டுமா என்ன?’ என்றான் ஜோர்பா எரிச்சலாக ‘இங்கே பார், நான் சொல்வதைக் கேள், இந்த உலகம் ஒரு மாபெரும் புதிர், மனிதன் ஒரு மகத்தான முரடன்.
‘மகத்தான முரடன்தான் ஆனால் அவன் கடவுளும்கூட. மேசிடோனியாவிலிருந்து என்னுடன் ஒரு கோட்டிக்கார புரட்சியாளன் வந்திருந்தான், யோர்கா என்றழைத்தார்கள் அவன். தூக்கில் தொங்குவதற்கு தகுதியானவன், அசல் பன்றி, அவன் அழுதான், ‘ஏன் அழுகிறாய், யோர்கா வேட்டை நாயே?’ நான் வினவினேன், என் கண்களிலும் நீர் வழிந்துகொண்டிருந்தது. ‘ஏன் அழுகிறாய், கிழட்டுப் பன்றியே?’ ஆனால் அவன் என்னை தோளோடு தழுவிக் கொண்டு ஒரு குழந்தையைப்போல குலுங்கிக் குலுங்கி அழுதான். பிறகு அந்த அற்ப விலைமாதின் மகன் ஜோப்பிலிருந்த கைப்பையை எடுத்து, துருக்கியர்களிடம் இருந்து அவன் திருடிய தங்க நாணயங்களைக் கொட்டி மடியில் கவிழ்த்தான், பிறகு அவற்றைக் கரங்களால் அள்ளி காற்றில் வீசி எறிந்தான். பாஸ், உனக்கு புரிகிறதா? இதுதான் விடுதலை!’
மிதமான கடல்காற்று சுழன்றடித்தது. எழுந்து கப்பலின் முகப்பிற்குச் சென்றேன்.
ஆம், அதுதான் விடுதலை என்று எண்ணிக்கொண்டேன். பெருமுனைப்பு கொள்வது, தங்கங்களை கொள்ளையடித்துக் குவிப்பது, பிறகு சட்டென்று தனது பெருமுனைப்பை வெற்றிகொண்டு பொக்கிஷத்தை காற்றில் வீசியெறிவது.
ஒரு பெருமுனைப்பில் இருந்து விடுபட்டு, மேம்பட்ட மற்றொன்றால் ஆட்கொள்ளப்படுவது. ஆனால், அதுவும்கூட ஒருவகை அடிமைத்தனம் இல்லையா? கொள்கைக்காகவும், இனத்திற்காகவும், கடவுளுக்காகவும் தன்னையே தியாகம் செய்யத் துணிவது.. அல்லது இலட்சியங்கள் உயர உயர நம் அடிமைத்தளையின் நீளமும் நீளும் என்று பொருளா? சற்றே பெரிய வெளியில் நாம் மகிழ்ந்திருக்கவும் கும்மாளமிடவும் முடியும், தளையிலிருந்து விடுபடாமலே, உண்மையில் அதைத்தான் விடுதலை என்கிறோமோ?
பொழுது சாயும் வேளையில் கப்பல் வெண்மணல் பரப்பை அடைந்தது, வெண்பொடிமணல் பரப்பு, அரளிப்பூக்கள் பூத்திருந்தன, அத்தி மரமும் கரோபு மரமும் தென்பட்டன. மேலும் வலப்பக்கம் மரங்கள் அற்ற சாம்பல்நிறத்து குன்று தென்பட்டது, பார்க்க, ஓய்வெடுக்கும் பெண்முகம் போலிருந்தது, அவள் தாடைக்குக் கீழ், கழுத்தையொட்டி, பழுப்புநிற லிக்னைட் நரம்பு ஓடியது.
வசந்தகால தென்றல் வீசிற்று, முட்டிமோதிய மேகங்கள் அதன் நிழல்களால் நிலத்தின் நிற அடர்த்திகளை மாற்றியவண்ணம் மெதுவாக கடந்து சென்றன. வானத்தில் மேகங்கள் பூதாகாரமாக திரண்டவண்ணம் இருந்தன. சூரியன் மாறி மாறி தோன்றியும் மறைந்தும் கொண்டிருந்தது. சஞ்சலமுற்ற மனித முகம் போல் நிலபரப்பு ஒளிர்ந்தும் இருண்டும் கிடந்தது.
சிலநொடிகள் மணல்வெளியில் நிதானித்து நோக்கினேன். ஒரு புனிதமான தனிமை என்முன் விரிந்து கிடக்கிறது, ஆபத்தான, ஆனால் வசீகரமான தனிமை, பாலைவனத்தைப் போல். அந்த மண்ணிலிருந்து எழுந்த அந்த பௌத்த பாடல் என்னுள் ஊடுருவி துளைத்துச் சென்றது. ‘நான் எப்போது தனிமையை அடைவேன்? துணையற்ற, இன்பமும் துன்பமும் அற்ற, அந்த தனிமை, அனைத்தும் வெறும் கனவெனும் உறுதி மட்டும் எஞ்சும் தனிமை? ஆசைகள் துறந்த நிறைவுடன் மலைகளிடம் தஞ்சம் புகுவது எப்போது? இவ்வுடல் வெறும் நோய், பாவம், முதுமை, மரணம் என்றுணர்ந்து, அச்சமற்று அமைதியை உணர்ந்து, வனம்புகுவது எப்போது? எப்போது அது எப்போது?’
ஜோர்பா சந்துரியை இடுக்கிக்கொண்டு, இன்னும் தெளியாத நடையில், என்னை நோக்கி வந்தான். ‘அதோ இருக்கிறது பழுப்பு நிலக்கரி’ எனது உணர்வெழுச்சியை புதைத்துக்கொண்டு சொன்னேன். பெண்முகத்தை ஒத்திருக்கும் அந்த குன்றைக் நோக்கி கரங்களை அகல விரித்தேன்.
ஜோர்பா சுற்றி நோக்காமல் முகத்தை சுளித்தான்.
‘பிற்பாடு. இதற்கான நேரமில்லை பாஸ். ‘பூமி சுழல்வது நிற்கும் வரை காத்திருக்க வேண்டும். அவள் இன்னமும் ஆடிக்கொண்டே இருக்கிறாள், கப்பல் மேற்தளம் போல். நாம் கிராமத்திற்கு செல்வோம்.’
இச்சொற்களுடன் தன் கவுரவத்தைக் காத்துக்கொள்ளும் விதமாக அவன் உறுதியாக காலடிவைத்து நடக்கத் தொடங்கினான்.
அராபியர்களின் பழுப்பு நிறத்தையொத்த நிறமுடைய காலணி அணியாத இரண்டு தெருச் சிறுவர்கள் சாமான்களை தங்கள் பொறுப்பாக்கி கொண்டார்கள். பருத்த சுங்கத்துறை அதிகாரி ஒருவன் சுங்கத்துறையின் கொட்டிலில் ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்தான். நீலவிழியோரத்திலிருந்து எங்களை மேலும் கீழுமாய் ஆராய்ந்தான், எங்கள் பைகளை அலட்சியமாக ஒரு பார்வை நோக்கினான், இருக்கையிலிருந்து எழுவது போல் சற்றே நகர்ந்தான் ஆனால் அதற்கு அதீத ஆற்றல் தேவையாய் இருந்தது. மெல்ல ஹூக்கா குழாயை உயர்த்திப் பிடித்து தூங்கி வழியும் குரலில் ‘நல்வரவு” என்றான். ஒரு சிறுவன் என்னிடம் வந்து தனது ஆலிவ் பச்சையும் கருப்பும் நிறைந்த கண்களை சிமிட்டி ஏளன தொனியில் கூறினான்.
‘அவன் க்ரெட்டுகாரன் இல்லை. சரியான சோம்பேறி சாத்தான்.’
‘க்ரெட்டுகாரர்களும் சோம்பேறி சாத்தான்கள் இல்லையா?’
‘அவர்களும்தான்..ஆம் அவர்களும் அப்படித்தான், ஆனால் வேறுவகையில்’ என்றான் அந்த இளம் க்ரெட்டுகாரன்.
‘கிராமம் வெகு தொலைவில் உள்ளதா?’
‘இங்கிருந்து துப்பாக்கித் தோட்டா விழும் தொலைவுதான். அதோ அந்த தோட்டத்திற்கு அப்பால், ஒரு மலையிடுக்கு. அங்குதான் அற்புதமான கிராமம் இருக்கிறது சார், கரொப்பு மரங்கள், அவரைச் செடிகள், தானியங்கள், எண்ணெய், ஒயின் என எல்லாமே தாராளமாக இருக்கும். கீழே விரிந்து கிடக்கும் மண்ணில் க்ரெட்டிலேயே விரைவாகக் காய்க்கும் வெள்ளரிகள், தக்காளிகள், பூசணிகள், கத்திரிகள் விளைகின்றன. ஆப்ரிக்காவிலிருந்து வீசும் காற்று அவற்றைப் பருக்கச் செய்கிறது. இரவுகளில் காய்கனித் தோட்டங்களுக்கு வந்தால் அவை பெரிதாவதால் எழும் சடசடக்கும் ஒலி கேட்கலாம்.’
ஜோர்பா முன்னால் நடந்து சென்றான். அவன் தலை இன்னும் சமநிலைக்கு வந்தபாடில்லை. காரி உமிழ்ந்தான்.
‘துவளாதே ஜோர்பா’ அவனை அழைத்தேன். ‘எப்படியோ நல்லபடியாக ஊர் புகுந்துவிட்டோம். இனி அஞ்சுவதற்கு ஏதுமில்லை!’
வேகமாக நடந்தோம். நிலப்பரப்பு முழுவதும் மணலும் சிப்பிகளும் கலந்து கிடந்தன. ஆங்காங்கு டாமரிஸ்க் புதர்செடிகள், ஒரு காட்டத்தி மரம், நாணல் கற்றைகள், கசப்பு முல்ளேன் கீரைகளும் தென்பட்டன. புழுக்கமாக இருந்தது. மேகங்கள் மேலும் மேலும் கீழாக திரண்டு கொண்டிருந்தன. காற்றும் தாழ்வாக வீசிக்கொண்டிருந்தது. தன் இரு அடிமரங்கள் பின்னிப்பிணைந்த, வயோதிகத்தால் உள்ளுலர்ந்த, பிரம்மாண்டமான ஓர் அத்திமரத்தைக் கடந்து சென்றோம். ஒரு சிறுவன் சட்டென்று அதிர்ந்து நின்று அந்த முதிர்ந்த மரத்தை நோக்கி கைநீட்டினான்.
‘ எங்கள் இளம் கன்னியின் அத்திமரம் இது’ என்றான்.
நான் கிளம்பினேன். இந்த க்ரெட்டின் மண்ணில் ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு சோகமான வரலாறு இருக்கிறது.
‘எங்கள் இளம் கன்னியின்? ஏன் இந்த பெயர்?’
‘எங்கள் பாட்டன் காலத்தில், நிலக்கிழார் ஒருவரின் மகள் ஆடு மேய்க்கும் இடையனுடன் காதலில் வீழ்ந்தாள். அவள் தந்தை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்த இளம்பெண் அழுதாள், கதறினாள், கெஞ்சினாள். கிழவர் தன் மனதை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஓரிரவு இந்த இளம் ஜோடி காணாமலானார்கள். ஊர்முழுக்க தேடினார்கள். ஒருநாள், இரண்டுநாள் மூன்று நாள் போனது, ஒருவாரமும் ஆனது அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அந்த துர்நாற்றத்தைப் பின்தொடர்ந்தால், ஒருவர் மற்றவரோடு கைகோர்த்தப்படி இந்த அத்தி மரத்தடியில் அழுகிக் கிடந்தார்கள். பாருங்கள், அந்த துர்நாற்றத்தின் வழியாகத்தான் அவர்களைக் கண்டுபிடித்தார்கள்.’
அந்தச் சிறுவன் வெடித்துச் சிரித்தான். கிராமத்து ஒலிகளை கேட்க முடிந்தது. நாய்கள் குறைக்கத் துவங்கின. பெண்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். சேவல்கள் காலமாற்றத்தை உணர்த்த கூவின. மது காய்ச்சப்படும் இடங்களில் இருந்து எழுந்த திராட்சை மணம் காற்றில் மிதந்தது.
‘அதோ இருக்கிறது கிராமம்’ என்று கூவியபடி சிறுவர்கள் இருவரும் ஓடினார்கள்.
மணல்குன்றைச் சுற்றி வரும்போதே அந்தச் சிறுகிராமம் புலப்பட்டது. நீருறிய மலையிடுக்கின் பக்கவாட்டில் ஏறுவது போலிருந்தது. வெள்ளையடிக்கப்பட்ட மாடி வீடுகள் ஒரு குவியலாகக் கிடந்தன. திறந்திருந்த சாளரங்கள் கருந்திட்டுகள் எனத் தென்பட்டன. பார்ப்பதற்கு இரண்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிய மண்டையோட்டை போலிருந்தன.
நான் ஜோர்பாவுடன் இணைந்துகொண்டேன்.
‘கவனமாக இரு, நாம் இப்போது கிராமத்திற்குள் நுழைகிறோம்.’ என்று அவனிடம் கூறினேன். ‘அவர்களுக்கு நம்மைப்பற்றி தெரியக்கூடாது, ஜோர்பா. நாம் உண்மையான வணிகர்கள் போலிருக்க வேண்டும். நான்தான் மேலாளன், நீ ஃபோர்மேன். க்ரெட்டுகாரர்கள் எதையும் அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உன் மீது கண் வைத்துவிட்டால், விந்தையான ஏதோ ஒன்றைப் பிடித்துகொள்வார்கள், அதை வைத்து உனக்கு ஒரு அடைபெயர் இடுவார்கள். அதன் பின்னர், அதை உன்னால் விட்டுவிட முடியாது. நாய் வாலில் கட்டப்பட்ட கரண்டிபோல் உன்னுடன் இழுத்துக்கொண்டே போக வேண்டியதுதான்.”
ஜோர்பா மீசையை நீவியபடி மவுனத்தில் ஆழ்ந்தான். இறுதியாக ‘பாஸ், கேட்டுக் கொள்ளுங்கள், இங்கு ஒரு விதவை இருந்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை..அப்படி இல்லை என்றால்தான்..’
நாங்கள் அந்த கிராமத்தில் நுழைந்து கொண்டிருந்தபோது, கைநீட்டியபடி கந்தலாடைகள் அணிந்த பிச்சைக்காரப் பெண் எங்களை நெருங்கி வந்தாள். அவள் கருத்து, அழுக்காக இருந்தாள், சிறிய கரிய மீசை இருந்தது அவளுக்கு.
‘வணக்கம் சகோதரா’ பரிச்சயமான குரலில் ஜோர்பாவை அழைத்தாள். ‘வணக்கம் சகோதரா, உனக்கு ஆன்மா இருக்கிறதா?’
ஜோர்பா நின்றான்.
‘எனக்கிருக்கிறது’ என்றான் நிச்சலனமாக .
‘அப்படியென்றால் எனக்கு ஐந்து திராக்மஸ் கொடு’
ஜோர்பா தன்னுடைய பைக்குள்ளிருந்து இற்றுப்போன தோல் பையை எடுத்தான்.
‘இதோ’ என்றான், கடுமையான பாவத்தை ஏந்தியிருந்த அவனுடைய உதடுகள் மெல்லிய புன்னகைக்கு சென்றன
சுற்றும் முற்றும் நோக்கிய பின்னர் கூறினான்,‘இப்பகுதிகளில் ஆன்மாவின் விலை மலிவு போலிருக்கிறது பாஸ்! ஐந்து திராக்மசுக்கு ஒரு ஆன்மா!’
கிராமத்து நாய்கள் எங்களை நோக்கி வரத்தொடங்கின, மாடிகளில் இருந்து பெண்கள் எங்களை எட்டிப் பார்த்தனர். பிள்ளைகள் பின்தொடர்ந்தனர். சிலர் கத்தினர், சிலர் உறுமினர், சிலர் உரக்க கொம்பொலி எழுப்புவது போல் ஒலி எழுப்பினர், வேறு சிலர் எங்களுக்கு முன் ஓடிவந்து விழிவிரிய வியப்புடன் எங்களை நோக்கினர்.
கிராமச் சதுக்கத்தை வந்தடைந்தோம். அங்கு இரண்டு பிரம்மாண்டமான போப்லர் மரங்களைச்சுற்றி செதுக்கப்பட்ட மரத் துண்டுகள் அமர்வதற்கு ஏதுவாகக் கிடந்தன. எதிர்சாரியில்தான் ஒரு கஃபெ இருந்தது, வெளிறிய பெரிய பெயர் பலகையில் ‘தி மாடஸ்டி கஃபெ & புட்சர் ஷாப்’ என்றிருந்தது.
‘ஏன் சிரிக்கிறாய்?’ என்றான் ஜோர்பா.
அவனுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. அந்த கஃபெயின் வாயில் கதவின் வழியாக கருநீல அரைக்காற் சட்டையும் சிவப்பு குறுக்குப் பட்டையும் அணிந்த ஐந்தாறு பூதாகார மனிதர்கள் வெளியில் ஓடினார்கள். அவர்கள் ‘வருக நண்பர்களே, உள்ளே வந்து மது அருந்துங்கள், சூடுகுறையாத புத்தம்புதிய மது’ என்றனர்.
ஜோர்பா நாக்கைச் சப்புகொட்டிய வண்ணம் கூறினான் ‘இதை பற்றி என்ன நினைக்கிறாய் பாஸ்?’ திரும்பி என்னை நோக்கி கண் சிமிட்டினான். ‘நாமும் அருந்தலாமா?’
ஒரு லோட்டா குடித்தோம், எங்கள் உட்புறங்கள் தகித்தன. கஃபெ – கசாப்புக்கடையின் உரிமையாளர் முதிர்ந்த சுறுசுறுப்பான கண்ணியமான மனிதர், அவர் எங்களுக்கு இருக்கை கொண்டு வந்தார்.
நாங்கள் எங்கு தங்கலாம் என்று அவரிடம் கேட்டேன்.
எவரோ ஒருவர் மேடம் ஓர்டோன்சின் இடத்திற்குச் செல்லுங்கள்’ என்று கூவினார்.
இங்கு ஒரு பிரெஞ்சு பெண்ணா? ஆச்சரியமாக கேட்டேன்.
‘சாத்தானுக்குத்தான் தெரியும் எங்கிருந்து வந்தாள் என்று. எங்கெங்கோ சென்றிருக்கிறாள். நீங்கள் முட்டி மோதுவதற்கு சாத்தியம் என கருதும் அத்தனை பாறைகளையும் தவிர்த்திருக்கிறாள், இப்போது கடைசியாக இங்கு தொற்றிக்கொண்டு இருக்கிறாள். ஒரு சிறிய விடுதி திறந்திருக்கிறாள்.’
‘அவள் இனிப்புகளும் விற்கிறாள்’ என்று உரக்கக் கத்தினான் ஒரு சிறுவன்.
‘முகப்பூச்சு போட்டுக்கொண்டு, வர்ணங்களால் ஒப்பனை இட்டுக் கொள்வாள்’ என்றான் மற்றொருவன். ‘ கழுத்தைச் சுற்றி ஒரு ரிப்பன் கட்டியிருப்பாள்..மேலும் அவளிடம் ஒரு கிளியும் இருக்கிறது.’
‘விதவையா? ஜோர்பா வினவினான் ‘அவள் விதவையா?’
கஃபே உரிமையாளர் தன்னுடைய தடித்த சாம்பல் நிறத்து தாடியை நீவிவிட்டுக்கொண்டார்.
‘இங்கு எத்தனை மீசைகளை உன்னால் எண்ண முடியும் நண்பா? நல்லது, அவள் அத்தனை கணவர்களின் விதவை. புரியும் என்றெண்ணுகிறேன்.’
‘புரிகிறது’ என்றான் ஜோர்பா உதட்டை நாக்கால் வழித்தபடி.
‘உன்னையும் விதவன் ஆக்கிவிடக்கூடும்!’
‘கவனமாகக் காலெடுத்து வை நண்பா’ என்று கத்தினார் ஒரு கிழவர். பின் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.
பார்லி ரொட்டியும், ஆட்டுப் பாலாடைக்கட்டி மற்றும் பேரிக்காய்களுடன் மற்றுமொரு சுற்று மதுவை தட்டில் வைத்து கொண்டுவந்தார் உரிமையாளர்.
‘இப்போது இவர்களை விட்டுவிடுங்கள். மேடம் இடத்திற்கு போக வேண்டும் என அவர்கள் கனவு காணத் தொடங்கிவிடக்கூடாது. அவர்கள் இந்த இரவை இங்குதான் கழிக்கவிருக்கிறார்கள்!’
‘அவர்கள் என்னுடன் இருக்கட்டும் கொண்டோமனோலியோ ! என்றார் அந்த கிழவர். ‘எனக்கு குழந்தைகள் இல்லை. என் வீடும் பெரிது, நிறைய அறைகள் இருக்கின்றன.’
‘மன்னிக்க வேண்டும் அனக்நோஸ்தி மாமா’ என்று கிழவரின் காதில் கத்தினான் உரிமையாளன். ‘நான் தான் முதலில் கூறினேன்’
‘நீ ஒருவரை வைத்துக்கொள்’ என்றார் கிழட்டு அனக்நோஸ்தி; நான் மற்றொருவரை, அந்த முதிர்ந்தவரை அழைத்து செல்கிறேன்’
‘எந்த முதியவரை’ என்றான் ஜோர்பா அவசரமாக.
‘நாங்கள் சேர்ந்தே இருக்கிறோம்.’ என்று கூறிவிட்டு ஜோர்பாவிடம் சமிங்ஞையால் அமைதி காக்கச் சொன்னேன். ‘நாங்கள் சேர்ந்து மேடம் ஓர்டோன்சின் இடத்திற்குச் செல்கிறோம்’ என்றேன்.
‘வருக! உங்கள் வரவு நல்வரவாகட்டும்! ஒரு குள்ளமான குண்டு பெண் போப்லர் மரங்களுக்கு அப்பால் தென்பட்டாள், வெளிறிய ஆளி நார் வர்ண தலை கேசம், கப்பைக் கால்களை ஒட்டி ஆடியபடி வந்தாள். ஒரு மரு, அதிலிருந்து தடித்த குறுமயிர்கள் நீண்டு அவளுடைய மோவாயை அலங்கரித்தது. கழுத்தைச் சுற்றி சிவப்பும் ஊதாவும் கலந்த ரிப்பனை அணிந்திருந்தாள். அவளுடைய வெடித்த கன்னங்களை இளம் ஊதா நிறத்து ஒப்பனைத் தூள் கொண்டு பூசி மெழுகியிருந்தாள். புருவத்தின்மீது விழுந்த சிறிய சுருள் முடிக்கற்றை நடனமாடியதைக் காண சாரா பெர்ன்ஹார்த் வயோதிகத்தில் லேக்லோன் ஆக பாத்திரம் ஏற்றதை போலிருந்தது.
‘உங்களைக் கண்டதில் பெருமகிழ்ச்சி, மேடம் ஓர்டோன்!’ என்றேன் நான், சட்டென்று ஏதோ ஒரு நகைச்சுவை உணர்வு ஆட்கொண்டதைபோல் அவளுடைய கரங்களை முத்தமிட எத்தனித்தேன்.
டெம்பெஸ்ட் நாடகத்தின் தொடக்க காட்சிகளில் உள்ள தேவதை கதைபோல வாழ்க்கை சட்டென்று தென்பட்டது. கப்பலின் கற்பனை தரைதட்டலில் முழுக்க நனைந்து பிழைத்து நாங்கள் இப்போதுதான் தீவில் காலடி வைக்கிறோம். மகத்தான கடற்கரையை அனுபவித்துக் கொண்டிருந்தோம். இவ்விடத்து வாசிகளுக்கு சம்பிரதாயமான வழியில் முகமன் கூறிக்கொண்டிருந்தோம். இந்தப்பெண், ஓர்டோன், இந்த தீவின் மகாராணியாகத் தோன்றினாள். இந்த மணல்கரையில் விடப்பட்ட பாதி அழுகிய பொற்குழலி மினுமினுக்கும் கடற்பசு போலிருந்தாள். அவளுக்குப் பின்னர் எண்ணற்ற, அழுக்கும் மயிரடர்ந்த, சிரிப்பு உறைந்த முகங்கள் தென்பட்டன அல்லது கலிபனின், அவர்கள் மகாராணியை பெருமையுடனும், வெறுப்புடனும் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஜோர்பாதான் மாறுவேடத்தில் வந்திருக்கும் இளவரசன். அவனும் அவளைப் பழைய தோழனைப்போல், பழைய போர்கப்பல்களில் எங்கோ தொலைதூரத்து கடல்களில் இணைந்து போரிட்டவனைப் போல், வெற்றியும் தோல்வியும் என்னவென்று அறிந்தவனைப் போல் நோக்கினான், மேற்தள கதவுகள் தெறித்து உடைந்து, பாய்மரம் உடைந்து கிழிந்த ஒருத்தி அவள், இப்போது முகத்தில் உள்ள வெடிப்புகளைப் பூச்சுக்களையும், முகப்பசைகளையும் கொண்டு பூசி மெழுகி, இந்த கடற்கரையில் ஓய்வெடுத்துக் காத்திருக்கிறாள். சர்வ நிச்சயமாக அவள் ஜோர்பாவிற்காகத்தான் காத்திருக்கிறாள், ஆயிரம் தழும்புகளை சுமந்துகொண்டிருக்கும் தலைவன் அல்லவா அவன். .
நான் தூரிகையின் சில மெல்லிய தீற்றல்களில் உருவான இந்த எளிய க்ரெட்டின் பின்புலத்தில் இவ்விரு நடிகர்களும் இறுதியில் சந்தித்துக்கொண்ட தருணத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டேன்.
‘இரண்டு மெத்தைகள், மேடம் ஓர்டோன்,’ காதல்காட்சிகளில் நடிப்பதில் பெயர்போன இந்த பழம்பெரும் நடிகையின் முன்னர் தலை கவிழ்த்து கூறினேன் ‘இரண்டு மெத்தைகள், மூட்டைபூச்சிகள் இன்றி’
‘மூட்டை பூச்சிகள் இல்லாமலா! அப்படி இருக்கக்கூடாது என்றே எண்ணுகிறேன்!’ என்றாள் என்னைச் சீண்டும்விதமாக. அட கடவுளே’ என்று கேலியில் கூவின கலிபனின் குரல்கள். ‘இங்கு இல்லை, இல்லவே இல்லை’ என்று பருத்த கால்களை கற்பரப்பின் மீதழுத்தி வேகமாக மறுத்தாள். அவள் கனமான வான் நீல காலுரையும், இற்றுப்போன மெல்லிய பட்டுநூல் சப்பாத்துக்களும் அணிந்திருந்தாள்.
‘போதும் இங்கிருந்து செல், நாடகக்காரி! சாத்தான் உன்னை ஏற்றுக் கொள்ளட்டும்’ கலிபன் மற்றுமொருமுறை உறுமியது. ஆனால், அதீத மரியாதையுடன், சீமாட்டி ஓர்டோன் சென்று எங்களுக்காக தாழ் திறந்து வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார். அவளிடமிருந்து மலிவான சோப்பின் வாசமும் முகப்பூச்சின் வாசமும் எழுந்தன.
ஜோர்பா பசிகொண்ட விழிகளுடன் அவளையே தொடர்ந்தான்.
ரகசியமாக ‘கண்கொள்ளா காட்சி இல்லையா பாஸ்? அந்த பரத்தை இப்படியும் அப்படியும் தன் இடுப்பை ஆட்டுவது.. பஃப் பஃப்! வால்வரையிலும் கூட கொழுப்பு மிகுந்து இருக்கும் ஒரு பெட்டைச் செம்மறியாட்டை போல.”
இரண்டு மூன்று பெரிய மழைத்துளிகள் விழுந்தன. வானம் மேகமூட்டமாய் இருந்தது. நீல மின்னல் மலையில் மின்னி மறைந்தது. வெள்ளைநிற ஆட்டுத்தோல் தொப்பிகள் அணிந்திருந்த இளம்பெண்கள் மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் வேகவேகமாக ஒட்டிவந்தார்கள். பெண்கள் கணப்பறை முன்னர் குத்திட்டு அமர்ந்து மாலைப்பொழுதுக்கு தேவையான நெருப்பை ஊதி பெருக்கி கொண்டிருந்தனர். ஜோர்பா அந்தப் பெண்ணின் புட்டத்தில் இருந்து வைத்த கண் எடுக்காமல் பதட்டத்துடன் உதடு கடித்துக் கொண்டிருந்தான்.
‘ம்ம்’ திடீரென்று பெருமூச்சு விட்டான். ‘ இந்த வாழ்க்கை நாசமாய் போகட்டும்! மானங்கெட்டவள் ஒருபோதும் தனது தந்திரங்களை நிறுத்திக் கொள்வதில்லை.’
முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1
இந்த மொழியாக்கம் தொடர்ந்து வருமா அல்லது சில பகுதிகள் தான் வருமா