கவியின்கண் – 3 “உயவுநோய் அறியாது”

– எஸ். சுரேஷ்-

உயவுநோய் அறியாது

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

ஔவை, குறுந்தொகை, 28

இதன் எளிய ஆங்கில வடிவம் –

Shall I charge
or shall I lash out
against this town

Or shall I falsely wail

I dont know

the swirling,
swinging breeze
saddens me

not realising
my anguish of love
this town sleeps

முன் இரு பாடல்களைப் போல் இதுவும் ஔவையாரின் பாடலே.

ஔவை புரிந்து கொள்ள முடியாத, ஆனால் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் ஆளுமை. திரை வரலாற்றியலாளரான ராண்டார் கை கே. பி. சுந்தராம்பாள் நடித்த ஔவையார் திரைப்படம் தயாரிக்கப்பட்டது குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “…புகழ்பெற்ற புலவரான ஔவையின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் குறித்து  ஆய்வு செய்து தகவல்கள் திரட்டி ஒரு வரைவு வடிவில் திரைக்கதை எழுதுமாறு வாசன் தன் கதை இலாகாவிடம் சொல்லியிருந்தார். கொத்தமங்கலம் சுப்புவிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் வாசன்  ஆராய்ச்சிப் பணியில் இரண்டாண்டுகளுக்கும் மேல் செலவாயின. ஆனால் முடிவிலோ, நம்ப முடியாதவை, சர்ச்சைக்குரியவை, தரக்குறைவானவை என்று சொல்லும்படியான பலதரப்பட்ட தகவல்கள் கொண்ட ஒரு பெருங்குவியல் உருவானது. “ஔவையார் என்று ஒரு நபர் உண்மையில் வாழ்ந்ததே கிடையாது. யார் யாரோ தத்துவப் பாடல்களும் செய்யுள்களும் எழுதி அவை ஔவையாரால் எழுதப்பட்டவை என்று ஏமாற்றியிருக்கிறார்கள்,” என்றும்கூட சில பண்டிதர்கள் சுப்புவிடம் சொல்லியிருக்கிறார்கள்.” ராண்டார் கை எழுதிய இந்தக் கட்டுரை ஆங்கில இந்துவில் இருக்கிறது. 

பல ஔவைகள் இருந்தது என்னவோ உண்மைதான். சென்ற இரு வாரங்களில் நாம் கண்ட பாடல்கள் புறநானூற்றில் உள்ளவை. நாம் இவற்றில் காணும் ஔவை அஞ்சி என்ற சிற்றரசனின் தோழி. புறநானூற்றுக்கு வெளியே, அகநானூற்றில் காதலை உணர்த்தும் பாடல்கள் பல ஔவையால்  இயற்றப்பட்டவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்விரு ஔவைகளும் ஒருவர்தானா? ஆத்திச்சூடி எழுதிய ஔவை வேறொருவர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட விஷயம். நாம் திரையில் பார்த்த ஔவையும், நம் இலக்கியங்களில் உள்ள ஔவையும் பல ஆளுமைகளின் தொகுப்பேயன்றி, ஒரு தனி நபர் அல்ல என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

சில நாட்கள் முன்னர்தான் காதலர் தினம் கொண்டாடினோம், எனவே இந்த வாரம் காதல் உணர்வுகள் நிறைந்த ஒரு பாடலைப் பேசுவது சரியாக இருக்கும். சங்ககாலத்தில் இயற்றப்பட்ட அகப் பாடல்கள் உலக இலக்கியத்தின் ஆகச் சிறந்த காதல் கவிதைகளின் பட்டியலில் இடம் பெறத்தக்கவை, மிகவும் நவீனமானவை. இன்று எழுதப்படும் கவிதைகளில் இல்லாத நுண்ணுணர்வோடு காதலை அதன் வண்ணங்கள் அனைத்திலும் சித்தரிக்கின்றன.

இந்தப் பாடலின் பொருள் புரிந்து கொள்ளக் கடினமானதல்ல. பாடலைப் போலவே தலைவியிடத்தும் காதலன் இல்லை – அவனுக்காக ஏங்குகிறாள் அவள், ஊர் உறங்குகிறதே என்று கோபப்படுகிறாள். “என் உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே’, என்று அவள் உள்ளத்தில் இருக்கும் கொந்தளிப்பையும் அதையறியாமல் உறங்கும் ஊரையும் உணர்வுகளால் அழகாக வேறுபடுத்துகிறார் ஔவை. எந்த மிகையும் இல்லாமல், இயல்பாக தன் காதலனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் தாபம் வெளிப்படுகிறது. ‘அலமர லசைவளி யலைப்ப’ – சுழன்றசைந்து வரும் காற்றும் நிற்கட்டும் என்கிறாள் அவள். காற்றின் மெல்லிய தீண்டலையும் அவளால் தாள இயலவில்லை.

காதலும் தனிமையும் இயல்பால் ஒன்றா? காதலில் மனிதன் தன் தனிமையை மேலும் உக்கிரமாக உணர்கிறானா? காதல் உணர்வுகள் மிகும்போது, எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டிய தேவை மனதை ஆட்கொள்கிறது என்பதால் தனிமையும் எப்போதும் உணரப்படுகிறது. இந்தத் தனிமை காதலனின் பிரிவாற்றாமை மட்டுமல்ல, அவனல்லாத பிறராகிய உலகோடு தொடர்பு அற்றுப் போதலின் தனிமையும்கூட. தம் காதலின் ஆழத்தை இந்த உலகு உணர வேண்டும் என்று விரும்புகிறார்கள் இவர்கள். அப்போதுதான் காதல் நிறைந்த இந்தப் புதிய ஓர் உலகில் பிறரும் பங்கேற்க முடியும் – காதலே உலகின் இருப்பாகிறது. அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலற்றுச் சொற்கள் தோற்கின்றன. சொற்களே உணர்வுகளைக் கடத்துகின்றன என்பதால் சொற்களால் வெளிப்படுத்த முடியாத காதல் மனதை தனிமையுணர்வுகளால் நிறைக்கிறது – சொல்லப்படாத காதலை இந்த உலகம் உணராது. ஆக, சொல்ல முடியாத மகிழ்ச்சியே தனிமையின் துயருமாகிறது. இந்தத் தனிமையும் துயரும் சோக உணர்வுகள் அல்ல. சிகரத்தைத் தொட்டவனின் தனிமை இது. ஒரு புதிய காற்றைச் சுவாசிக்கிறான், ஆனால் அக்கணத்தின் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ள அருகில் யாருமில்லை.

இதனால்தான் காதலைச் சமூகம் பிரச்சினையாகப் பார்க்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இலக்கியத்தில் இடம் பெறும் காதலைப் போற்றுபவர்கள், அது தம் கண்முன் வாழ அனுமதி மறுக்கிறார்கள் என்று சினந்தான் பாரதி. பஞ்சாயத்துக்கள் காதலுக்கு எதிராக தண்டனை அளிக்கின்றன. நாம் ஏன் காதலைக் கண்டு அஞ்சுகிறோம்? காதலுக்குக் கண்ணில்லை என்பதுதான் காரணம். இது ஒரு தேய்வழக்காகி விட்டது என்பது எனக்குத் தெரியும். இது ஒரு கேலிப் பேச்சாகிவிட்டதும் தெரியும். ஆனால் நான் அதன் வேறு பொருளில் இங்கே பயன்படுத்துகிறேன்.

காதலர்களுக்கு சமூக வழக்குகள் புலப்படுவதில்லை. அதன் பிரிவினைகளை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்: சாதி, சமயம், அந்தஸ்து என்று அனைத்தும் அவர்களுக்குப் பொருட்டில்லாமல் போகிறது. காதலரின் உணர்வுகளுக்குத் தேவையற்றப் பிளவுகள் இவை. தம் குழந்தைமைக்குத் திரும்பும் காதலர்கள் மனிதனை மட்டுமே காண்கின்றனர், வேறு எந்த அடையாளத்துக்கும் அர்த்தமில்லை. சமூகம் என்பது அடையாளங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதால் காதல் சமூக ஒழுக்கத்துக்கு ஒரு சவாலாகிறது. இதுவே சமூகம் காதலை எதிர்த்து நிராகரிக்கக் காரணம். தன் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பும் சமூகம் காதலுக்கு எதிரானதாகவே எப்போதும் இருக்கும். காதல் அடையாள அழிப்பு.

காதலைக் கொஞ்சம் ரொமாண்டிசைஸ் செய்கிறேன்தான் – சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு என்பது மிகையே. ஏனெனில் இது கொஞ்சம் சிக்கலான விஷயம். காதலர்களும் சமூக உறுப்பினர்கள்தாம் – அவர்களது நோக்கம் சமூக அமைப்புகளை உடைக்க வேண்டும் என்பதல்ல. தன் காதலியோடு வாழ சமூகம் அனுமதிக்க வேண்டும் என்பதுதான். தங்களுக்குரிய இடம் கிடைத்தால் போதும் என்று இவர்களும் இருக்காவிட்டால் இன்றைய சமூகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கும்.

என் நண்பன் ஒருவன் தன் காதலியை மணக்க மிகத் தீவிரமாகப் போராடினான். அந்தப் பெண் வேறு சாதி, இவன் வேறு சதி. அவளது தாயார் இவர்கள் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எப்படியோ ஒரு வழியாக என் நண்பன் தன் முயற்சியில் வெற்றி பெற்றான். தான் விரும்பியவளையே மணம் புரிந்தான். ஆனாலும்கூட தன் தங்கை ஒரு கிறிஸ்தவ இளைஞனைக் காதலித்தபோது அவன் அவர்களின் திருமணத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தான். அவனது தங்கையின் காதல் தோல்வியடைந்தது.

நம் சமூகத்தில் காதலை எதிர்ப்பவர்கள் அனைவரும் காதலை அறியாதவர்கள் அல்ல. அந்தக் காதல் கைகூடியிருக்கும், அல்லது ஒரு கனவாய் கடந்து சென்றிருக்கும், ஆனால் முன்னர் காதலித்தவர்களே இன்று காதலுக்கு எதிராகவும் இருப்பார்கள். மாற்றம் எளிதல்ல என்பதால்தான் சமூக விதிகளும் ஒழுக்கங்களும் அதன் நடவடிக்கைகளும் சிக்கலானவையாக இருக்கின்றன. ,தம்மைப் பொருட்படுத்தாத ஊரை முட்டுவேன், தாக்குவேன், கூவுவேன் என்று காதலர்கள் கோபப்படலாம், இது எதுவும் ஔவை காலத்தில் மட்டுமல்ல, இன்றும் ஊர் உலகத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஒருவேளை, தொலைகாலம் சென்றபின் நம் சமூகம் காதலைப் புரிந்து கொண்டு, அதை இன்னமும் எளிதாக ஏற்றுக் கொள்ளலாம். அப்போதும்கூட ஒன்று மட்டும் மாறாது – என்றும் காதலர்களின் அகக் கொந்தளிப்பு அடங்காது, ஊரின் அமைதியும் உறக்கமும் கலையாது.​

எஸ் சுரேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.