கொலை

-உத்தமன்ராஜா கணேசன்- 

அந்த அதிகாலைப் பேருந்தினில் தனது இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரிடம் ரகு, என்னங்க தம்பி, தினமும் உங்கள இந்த நேரத்தில பார்க்க முடியுது, எங்க போறிங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க, எனக் கேட்டதுதான் தாமதம்-தன் கையிலிருந்த கத்தியை எடுத்து ரகுவினுடைய வயிற்றில் இறக்குகின்றான்.

பக்கத்திலிருந்தவன், அதிர்ச்சியில் அவன் சத்தம் போடுவானோ என ரகுவின் வாயைத் தனது கையினால் மூடுகின்றான். காலை நேரப் பேருந்து என்பதினால் பயணம் செய்த அனைவருமே அரைத் தூக்கத்தில் இருந்ததினால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை, நடத்துனர் உட்பட. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ரகுவைத் கைத்தாங்கலாக, தன்னுடன் வந்தவன் போல கீழே இறக்கிவிட்டு அவனுடன் சேர்ந்து இவனும் இறங்குகின்றான்.

நடந்தது என்ன , எதற்காக என ரகு யோசித்தபடியே மயங்கிக் கீழே சரிகின்ற நிலையிலிருக்க, சுதாரித்துக் கொண்ட இவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு பேசி உடனடியாக முதலுதவி செய்யச் சொல்கிறான். தனக்கு நன்கு தெரிந்தவன் சொல்வதால் ரகுவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார் மருத்துவர்.

பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தபோது கலந்து கொள்ளாத போட்டிக்காக பரிசு பெற்றது இன்பம் தந்த போதிலும் எதுவுமே செய்யாமல் வாங்கியதில் அதிலென்ன பெருமை என்பது இப்போது கத்தியால் குத்தியவனுக்கு புத்தியில் உரைக்கின்றது.

கத்தியால் குத்தியவன் இன்னொரு பேருந்தில் ஏறி அமர்ந்து சற்றே கண்மூடி பால்ய நினைவுக்குள் செல்கையில் கோலிக்குண்டு விளையாடி அனைவரது கோலிகளையும் வெற்றி கொண்டிருக்கின்றான் கூட்டத்தில் ஒரு சிறுவன். அம்மையப்பனின் அறிவுரைப்படி உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு.

கண்விழித்து மனதிற்குள், ஏன் அவனை இப்படிச் செய்தோம், அவன் என்ன கேட்டுவிட்டான், என தனக்குள் பிறந்த கேள்விக்கான விடையை நினைத்துப் பார்க்கின்றான். சிறிது கண்முடித் தூங்குகிறான்.

கத்தியெடுத்துச் சொருகிய இவன் இங்கு கனவினில் சிறுவர் விளையாடும் சுரண்டல் பரிசுச் சீட்டு விற்றுக் கொண்டிருந்தான்- பரிசு விழும் எண்கள் அனைத்தையும் எடுத்து விட்டிருந்தான், யாருக்குமே அதிக மதிப்பிலான பரிசு விழாதபடி.

பம்பரம் குத்தி விளையாடிக் கொண்டிருந்தவன் பின்பு கத்தியெடுத்துக் குத்தியது ஏன்?

சட்டென தூக்கத்திலிருந்து விழிப்பு வந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறான். அலைபேசியில் மருத்துவரை அழைத்து, அவர் இப்ப என்ன நிலைமையில் இருக்கிறார் என தான் குத்திவிட்டு வந்தவனைப் பற்றி குசலம் விசாரிக்கின்றான். கவலைப்படும்படியாக ஏதும் இல்லை என மருத்துவர் விளக்கமளிக்கிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவார். எப்படி அவருக்கு இது நடந்தது என மருத்துவர் கேட்கையில், ஒரு சின்னப் பிரச்சனையால் நடந்தது, எனச் சுருக்கமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து, போய்க் கொண்டிருக்கிற திசைக்கு எதிர்த்திசையில் சென்று பேருந்து ஏறி மருத்துவமனை செல்கிறான்.

இவன் வந்த சிறிது நேரத்தில் ரகு கண் விழிக்கிறார், எழுந்த அடுத்த வினாடியே பக்கத்தில் தன்னைக் கத்தியால் குத்தியவன் இருப்பதைக் கவனித்து உடனடியாக அவனை அடிக்க அவன் மேல் பாய நினைத்து குத்துப்பட்டிருந்ததால் முடியாமல் மெல்லிய குரலில் கேட்கிறார், ஏன்யா உங்கிட்ட அப்பிடி என்ன கேட்டுட்டேன்னு இந்தமாதிரி செஞ்சிட்ட, நான் அப்பிடி என்னய்யா துரோகம் பண்ணுனேன் உனக்கு.

தப்பாயிருச்சு , ரொம்ப தப்பாயிடுச்சு , மன்னிச்சுருங்க.

யோவ் போயா கத்தில குத்திட்டு மன்னிப்புக் கேட்கிறியா, இருடா உன்னை என்ன பண்றேன்னு என்கிறார் சிறிது உரத்த குரலில்.

ஒத்திகை பாக்கறதுக்கு மனசுக்குள்ள ஒப்பனை பண்ணிட்டிருந்த நேரத்தில நீங்க இடையூறு பண்ணதால இடைஞ்சலா இருக்கிகன்னு நினைச்சு அப்பிடி பண்ணிட்டேன்.

யாருப்பா நீ, அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?

என்னோட வாழ்க்கையில ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது அதை இதில எழுதியிருக்கேன் , மொத்தமும் இருக்கு, படிச்சுப் பாத்திங்கன்னா புரியும். படிச்சுட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டு அவரோட அலைபேசியை வாங்கி இவனோட எண்ணிற்கு அழைத்து இவருடைய எண்ணை அலைபேசியில பதிவு பண்றான்.

யாருடா இவன் சரியான சைக்கோவா இருப்பானோ , எங்க போறிங்கனு கேட்டா கத்தில குத்தறான், எதுக்குடானு கேட்டா பயோடேட்டான்னு பேப்பர குடுக்கறான்

இரண்டு, மூணு நாளா இவனைப் பத்தியே யோசிச்சு மண்டை காய்ஞ்சு போச்சு, அப்படி என்னத்த கிறுக்கி வச்சுறுக்கான் இந்தக் கிறுக்கன், என்னனு பாப்போமா?

‘ஓட்டம் ஆரம்பம்’

தலைப்பே ஓட்டமா, விளங்கும்டா

ஒரு நாள் காலையில் அதிர்ச்சி அடைகிறான் தமன், ஆனந்தை எழுப்பி விசயத்தைக் கூறுகிறான். மச்சி மொபைல் போனைக் காணும்டா. டேய் தூக்கத்தில உளறாத, இங்கதான் எங்கயாச்சும் இருக்கும் போய்ப் பாருடா, என்னோட மொபைல எவன்டா எடுத்து வச்சுருக்கீங்க, என்னது உன்னோட மொபைல காணுமா, டேய் என்னோட மொபைல்கூட இங்க இல்லடா வருகிறது ஒரு குரல் வேலனிடமிருந்து. அனைவருக்கும் பேரதிர்ச்சி.

என்னங்கடா இது காலங்காத்தால.

எல்லா ரூம்லயும் போய்ப் பாருங்கடா, தூங்குற எல்லாரையும் எழுப்பிக் கேளுங்கடா, நான் இங்க தேடுறேன்.

தேடல் தொடர்கிறது. இதற்கு முன்னால் துவைத்துப் போட்டு காணாமல் போன துணிகள், தொலைந்து விட்டதாய் நினைத்த கேரம் போர்டு காயின்கள், செஸ் போர்டு உள்ளிட்ட அனைத்தும் கிடைத்துள்ளது, இன்றளவும் தேடியது காணக் கிடைக்கவில்லை.

தேடல் தொடர்ந்து நடைபெற்றும் காலை 10 மணி வரையிலும் தேடி முடியவில்லை, அனைவரும் ஒன்று கூடி ஆலோசிக்கிறார்கள் , இதற்கு முன்பும் இப்படியான மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இங்கு நடந்துள்ளதாக அறிகிறார்கள்.

எவன்டா நைட் ரூம திறந்து வச்சது, மொத்த குரலும் நான் இல்ல என்கிறார்கள், சரி விடுங்கடா இப்ப அது முக்கியம் இல்ல, எப்படிடா இத்தனை பேர்ல எல்லாருமே அசந்து தூங்கிட்டோம், யாரும் ஒரு ஆள் கூட கொஞ்சமும் எழுந்திரிக்கல.

அவனவன் வாய்க்கு வந்த வார்த்தைகளைக் கூறித் திட்டி விட்டு அடுத்த கட்டமாக முயற்சியில் இறங்கலாயினர், சந்தேகப்பட்ட நபர்களை பொதுவாக 4 பேர் மத்தியில் வைத்து ஜாடை சொல்லித் திட்டியும் பார்த்தனர், யாவரும் வாய் திறக்கவில்லை அன்றைய நாளில்.

அடுத்த கட்டமாக சில நண்பர்களின் ஆலோசனைப்படி காவல் நிலையம் செய்வதாக முடிவெடுத்தனர். அதுதான் சரியெனப்பட்டது அனைவருக்கும். நேராக அந்தப் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறினர். நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் இதைக் கேள்விப்பட்டு கடுங்கோபத்துடன்-

ஏன்டா 4 பேர்ல 3 பேர் மொபைல் ஒரே நைட்ல எடுத்துட்டு போற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க.

அடுத்ததாக வாயிலிருந்து உமிழ்நீரைக் காரித் துப்பி விட்டு, புகாரையும் கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுச் சென்று விட்டார். இந்த சம்பவம் நடந்து முடியும் முன்னரே தமன் அங்கிருந்து வெளியேறி விட்டான், அந்த அதிகாரியின் நடத்தை காரணமாக. மொபைல் போன்கள் காணாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பினும், அதிகாரியின் இந்த செயல் மேலும் மனம் நோகும்படி செய்து விட்டது.

மொபைல் வாங்கிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது , காவல் நிலையத்தில் அளித்த புகார் இருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக எங்களால் நடவடிக்கை எடுக்க இயலும் எனக்கூறி விட்டனர். மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட வேறு பிற மொபைல் நிறுவங்களும் சொல்லி வைத்தார் போல அதே பதிலைக் கூறினர். அதன் பிறகு மற்றுமொரு முயற்சியாக சிம் விற்பனை செய்யும் ஒரு நிறுவன நண்பரை தொடர்பு கொண்டு பேசியபோதும் அச்சு அடித்தது போல அதையே கூறினார்.

மொபைல்களை எடுத்துச் சென்றவன் மற்றுமொரு மாய வித்தையையும் செய்துவிட்டான். தமன் தான் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சில பொருள்கள் வாங்கி பேக்கில் வைத்திருந்தான், பேக்கினை அப்படியே தூக்கிச் சென்று விட்டான். அவனுடைய பொருள்களின் மதிப்பு பதினைந்து ஆயிரம் ரூபாய், மொத்தமாக தொலைந்த மதிப்பு சுமார் இருபத்தைந்து ஆயிரங்கள்.

உள்ளே இருந்த சில பொருள்களின் நினைவுகள் கண்முன்னே வந்து செல்கின்றன.

ஒரு முக்கியமான சாராம்சம் என்னவென்றால் பேக்கில் இருப்பது லேப்டாப் என நினைத்து எடுத்து விட்டுப் போயிருக்கிறான், ஆனால் இருந்ததென்னவோ துணிமணிகள் மற்றும் புத்தகங்கள்.

புத்தகங்கள் என்றால் கடையிலே போய் சாதாரணமாக வாங்கி வருகின்ற புத்தகங்கள் அல்ல. புத்தக வெளியீடு அன்று நேராகச் சென்று, புத்தகம் எழுதியவரின் கையினாலேயே வாங்கிவிட்டு அவருடைய கையொப்பமும் வாங்கி, புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்தவை.

எடுத்தவனுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. புத்தகமும் தொலைந்து, எடுத்த புகைப்படங்களின் ஆல்பமும் தொலைந்திட வந்தது பாருங்கள் ஒரு உச்சகட்ட கோபம், கையிலிருந்த மற்றுமொரு மொபைல் போன் நொறுங்கியது. எடுத்தவன் யாரேன்று தெரிந்தால் என்னவெல்லாம் நொறுக்கப்படுமோ.

கொண்டு போனவன் புத்தகங்களுடன் துணிகளையும் தூக்கிச் சென்று விட்டான். பணமாக எதுவும் இல்லையென்ற போதினும் பணத்துக்கு நிகரான, மன்னிக்கவும், பணத்துக்கும் மேலான புத்தகங்கள் போனது. மறுபடியும் பணம் கொடுத்து வாங்க முடிகின்ற பொருள்களாக அவை இல்லை என்பது தான் பேரிழப்பு.

ஆற்றின் நிறைய தண்ணீர் ஓடினாலும்கூட நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதைப் போல மதிப்பு தெரியாதவன் கையில் போன புத்தகம் இரண்டோ அல்லது ஐந்தோ ரூபாய்க்கு விற்கப்படுமாயின் அதைவிட ஒரு மிகப்பெரிய இழிவை புத்தகம் வாங்கியவன் புத்தகம் எழுதியவருக்குத் தர முடியாது.

முதன்முறையாகப் பாடலொன்று பாடி அதற்கென வாங்கிய பரிசை பிரேம் போட்டு வைத்திருந்தான , இன்று தொலைந்த காரணத்தால் இனி நீ எங்குமே பாடல் கேட்க கூடாது என்பதைப் போல அது இருந்தது.

எளிதில் நெருங்க முடியாத பிரபலங்கள் சிலருடன் புகைப்படம் எடுத்து ஆல்பம் சிலவற்றைத் தயாரித்து வைத்திருந்தான், புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையுமெனக் கூறும் ஒரு கூற்றும் இங்கு நிஜமாயிற்று.

வெள்ளியிலான சங்கிலி ஒன்றை முதன்முறையாக வாங்கியிருந்தான், ஆடையும் ஆபரணமும் சேர்ந்தே போயிற்று.

நூலிழையில் அரும்பாடு பட்டு உருவாகி வந்த துணிகள் இங்கு வந்தா என்னால் தொலைய வேண்டும் , நெசவுக்கு இழுக்கு.

எனக்கெனத் தனியாக ஏதேனும் சொத்துக்கள் நான் வாங்கி வைத்திருக்கவில்லை, நான் வைத்திருந்த பெரும்பான்மையானவை என்னை விட்டு சென்று விட்டன.

ஆள் பாதி ஆடை பாதியாகத் திரிய இதென்னடா ஆதிவாசி காலமா , கருமம் கலிகாலம். ஆற்றில் துணியில்லாமல் நின்றால் கூட தண்ணீருக்குள் போய் விட்டால் மானம் காக்கப்படும், ரோட்டில் அதே நிலையில் நின்றால்? கவித்துவமின்றித் துக்கப்படக்கூட முடியவில்லை.

அன்றைய தினம் முதல் மீனை போல பெரும்பான்மையான நேரம் தண்ணீரிலேயே வாழ்ந்தான், ஆந்தையைப் போல இரவு முழுவதும் விழித்திருந்தான், ஆமையைப் போல மிக மெதுவாகத்தான் அடியெடுத்து வைத்தான்- ஆனால் மன ஓட்டமானது சில நேரங்களில் முதலையைப் போல ஆக்ரோஷமாக இருந்தது.

அன்று வலியன் குருவி சற்று தாமதமாக கூவியிருக்கும், இல்லையெனில் ஒருவருக்குக் கூடவா அந்நியன் ஒருவன் வந்து மூன்றாவது மாடியிலிருக்கும் பொருட்களை எடுத்து விட்டு இறங்கி சென்றது தெரியாமலிருக்கும். உலகத்தை நேசித்தாலும் ஒருவரையும் நம்பக் கூடாதென்பது சரியாத்தான் இருக்குது. உறங்கும் போதும் எப்படி ஒரு கண்ணை மட்டும் திறந்து வச்சுக்க முடியும்

அன்றைய தினம் தண்ணீருக்குத் தாகம் எடுக்கவில்லை, உணவிற்குப் பசி எடுக்கவில்லை. இயற்கை சுவாசம் மட்டுமே உயிர் தந்தது.

வெறுப்படைந்து போய் ஒரு விளையாட்டு மைதானத்தின் சுவர் அருகில் உள்ள மரத்தின் கீழே போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்தான் தமன். புத்தருக்குப் போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் போல ஏதோ ஒரு மரத்தடியில் அமர்ந்த போதுதான் புகார் அளிக்க வேண்டுமென எண்ணம் தோன்றியது.

ஏனெனில் நாளைய வருங்காலத்தில் மொபைல் போனை வைத்து என்ன மாதிரியான தவறுகள் வேண்டுமானாலும் நடக்கலாம், போன் காணாமல் போன நிகழ்வை புகாராக பதிவு செய்யாவிடில் அது என்றென்றைக்கும் ஆபத்தாக முடியக்கூடிய வாய்ப்புண்டு. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு நிகராக புகார் அளிக்க வேண்டியதும் நமது கடமை என மனதில் பதிந்து விட்டது. பித்தம் தெளியாத சித்தப்பிரமை பிடித்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

அழுதும் பலனில்லை, அடக்க முற்பட்டான், ஆத்திரமாக மாறியது.

இணையத்தினுள் சென்று தேடினான், சில உயரதிகாரிகளின் தொடர்பு எண்கல மற்றும் ஈமெயில் போன்ற தகவல்கள் கிடைத்தது. பகுதி காவல் நிலையத்திலேயே ‘மிகச்சரியான கவனிப்பு’ கிடைத்ததால், மேலதிகாரியிடம் செல்வதற்கும் யோசிக்க வேண்டியதாயிற்று.

இறுதியாக கமிஷனர் ஆபிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் தென்பட்டது. வேறு வழியின்றி காணாமல் போனதை உறுதி செய்ய, மேலும் எதிர்காலத்தில் காணாமல் போனது பற்றிப் புகார் அளிக்காமல் இருந்தால் பிரச்சனைகள் வரக்கூடுமெனத் தோன்றிய மனக்கட்டாயத்தின் காரணமாக புகாரை இணையத்தின் வாயிலாக அளித்தான்.

என்னடா இது சோதனை, ஒரு தாய்த்திருநாட்டில் குடியுரிமை உள்ள ஒரு குடிமகன் தன்னுடைய பொருள்கள் தொலைந்ததைப் பற்றி புகார் அளிக்க அருகதை இல்லையா, இத்தனைக்கும் ஒரு படித்தவனாக இருந்து கொண்டு, நெஞ்சம் பொறுக்குதில்லையே. தன்னிலை மறந்தது.

அடுத்ததாக தன்னுடைய எண்ணம் எப்படியேனும் புகார் கொடுத்தே தீர வேண்டுமென இருந்தது. நாள் முழுவதும் முடியும் தருவாயில் புகாரை அளித்துவிட்டான். இருந்தும் இறந்தவராக இருந்தனர் உடனிருந்தோர் சிலர். அது சரி அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்பதைப் போல இருந்தது. தனக்கென வந்தால்தான் வலி அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது செய்தி என்பது பலர் சொல்லிக் கேள்விப்பட்டது இன்று செய்தியானது வலியாகியது. கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக உடல் உணர்த்தியது, இருப்பினும் ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை உண்டானது.

பொருளைத் தொலைத்த ஒரு நபர் மட்டும் கடமையே கண் கண்ட தெய்வமென வேலைக்கும் சென்று விட்டார்.

முழுமையான திருப்தி என்பது இன்னும் கிடைத்தபாடில்லை, தனிப்பிரிவில் அளித்த புகாரின் மூலம் ஒரு மாத காலத்திற்கு பின்பு சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாகவே புகார் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர் நல்ல சில காவல் துறை உள்ளங்கள்.

நாங்கள் அனைவரும் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வருபவர்கள். எங்களது கிளை அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரையும் முதல்முறை புகார் அளிக்கச் சென்றபோது உடன் அழைத்து சென்றிருந்தோம். ஒரு கிளை அலுவகத்தில் நடப்பது தலைமை அலுவலகத்துக்குத் தெரியபடுத்துவது என்பது அனைத்து பிற அலுவலகங்களின் வேலைதான் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்களும் தெரியப்படுத்தியதாக தெரியவில்லை, மேலிருப்பவர்களும் என்னக்கென்ன இதைப்பற்றி என்பதை போல நடந்து கொண்ட விதம்தான் மிக அருமை.

தெரிந்தும் தெரியாததை போல அதிகாரி ஒருவர் காட்டிக் கொண்டார்.

ராத்திரி முழிச்சிக்கிட்டே இருக்க இது என்ன அவதாரமா, சாமிக்கே தாலாட்டு பாடி தூங்க வச்சுட்டு இருக்கானுங்க ஊருக்குள்ள.

ராமர்க்கு அனுமன் போல கூடவே இருந்து பாதுகாவலனாக இருக்க வேண்டுமென நாங்கள் உங்களைக் கேட்கவில்லை, எங்களுக்கு அது தேவையுமில்லை, உங்களோடத பத்திரமா பாதுகாத்து வச்சுருங்கடா, என்பதே எங்களுடைய கருத்து. அத விட்டுட்டு நாங்க உங்களோட போருக்கு வரல, காணாம போனதுக்கு நஷ்ட ஈடும் கேட்கல, அதைப் புரிஞ்சிக்கோங்கடா நொன்னைங்களா என மனதில் நினைத்து விட்டு.

எந்தத் தகரச் செட்டிற்குள் ஒளிந்து கிடக்கிறதோ அல்லது எடுத்தவன் கண்முன்னே தான் அலைகிறானோ என்ற ஐயம் இப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

ரைட்டு, கன்பார்ம் ஆயிடுச்சு இவன் சைக்கோவே தான், சொல்லி முடிப்பதற்குள் புதிய எண்ணிலிருந்து அலைபேசிக்கு ஒரு அழைப்பு. யாருங்க அது இந்நேரத்தில,
சார் நான்தான் கத்தியால குத்தினனே.

மறுபடியும் நீயா , என்னதான்யா வேணும் உனக்கு

சார் படிச்சிட்டிங்களா

யோவ் ஆரம்பத்தில இருந்தே நீ பண்ற எதுவுமே புரியல.

தெளிவா சொல்றேன் சார், என்னோட மொபைலும் பேக்கும் திருடு போயிருச்சுபோலீஸ்ல புகார் குடுத்திருந்தேன். ஆனாலும் 6 மாசமாகியும் எந்த பலனும் இல்லை. இப்ப எடுத்தவன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, அவனப் போட்டுத் தள்ளலாம்னு பிளான் பண்றப்பதான் நீங்க இடையில வந்து கேள்வி கேட்க, இவ்வளவு விளக்கம் தர வேண்டியதாப் போச்சு.

2 comments

  1. சிறுகதையைப் படிக்கும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது. மிகுந்த அலுப்பாக இருக்கிறது. இன்னும்கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம். வாரமலர் தரத்திலான கதை.

    1. முதல் கதை , இனிவரும் கதைகளில் முயற்சி செய்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.