ஒரு புல்லின் நுனியில்
பனித்துளிகள் இசைக்கும்
பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள்
நான் நுண்மையின் உலகில்
கற்பனைச் சிறகுகள் சூடி
பறந்து கொண்டே
பாடலைச் செவியுறுகிறேன்
பொழுதுகள் குளிர்ச்சியேறி
பனித்துளிகளை விசிறுகின்றன
அந்தக் கணமே
உடல் ஒரு நீர்க்குமிழி
எனக் காண்கிறேன்
ஆன்மா குளிர்ச்சியடைந்து
பனித்துளிகளின் பாடலாகி
கடவுளின் கரங்களைச் சேர்கிறது
அது கடவுளின் புறத்திலிருந்து
கருணையைப் பெறுகிறது
அது கடவுளின் புறத்திலிருந்து
அர்த்தங்களைப் பெறுகிறது
பனித்துளிகளின் பாடலை
மனிதனின் புறத்திலிருந்து பெறுகிறார் கடவுள்
கடவுளைச் சென்றடையும்
பாதைகளை யாரோ இழுத்து மூடிக்கொண்டிருக்கின்றனர்
நான் ஒரு சூஃபியின் ஞானம் கொண்டு
பனித்துளியின் பாடலாகி கடவுளை நெருங்குவேன்
நான் கடவுளின் புறத்திலிருந்து
ஞானத்தை அடைகிறேன்
என் புறத்திலிருந்து கடவுள்
பாடல்களைச் செவியுறுகிறார்
ஒரு தவம் போல் நீளும் என் யாகத்தை
ஆசீர்வதிக்கும் கடவுளின்
கருணையிலிருந்துதான்
விரியும் என் உலகு
எளிய மனிதர்களால்
ஒருபோதும் தரிசிக்க முடியாத கனவுகளால்
சோடிக்கப்பட்ட எனதுலகு!
-ஜிஃப்ரி ஹாஸன்