எனக்கு இந்தப் பரிசு அளித்துள்ள நீங்கள், இது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை சற்று விரிவாக அறிந்து கொள்ள விரும்பலாம்.
பரிசுகளில் நிலவும் போட்டிச் சூழல் அசூயை அளிக்கும் ஒன்று. இந்தப் பரிசு பொறுத்தவரை, பரிசு பெறுபவர்களின் குறும்பட்டியல், வலிந்து விளம்பரம் செய்யப்பட்ட சஸ்பென்ஸ், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் குறித்த குதிரைப் பந்தய ஊகங்கள், வெற்றி பெற்றவர்கள் தோற்றுப் போனவர்கள் என்று பிரமாதப்படுத்தப்படுவது, இவை போலியானவை, இலக்கியச் சூழலுக்கு பொருந்தாதவை.
இருந்தாலும்கூட பரிசுகள் ஒரு தூண்டுதலாய் செயல்படுகின்றன- எழுத்தாளர்களுக்கு என்றல்ல, பதிப்பாளர்கள், வாசகர்கள், புத்தக வியாபாரிகள். எனவே, ஒரு பரிசின் அடிப்படை கலாச்சார மதிப்பீடு என்பது அது எதன் தூண்டுதலாய் இயங்குகிறது என்பதைச் சார்ந்தது. சந்தைக்கும் சராசரி ஒருமித்த கருத்துக்கும் இணங்கிப் போதல்; அல்லது, வாசகர் மற்றும் எழுத்தாளர் தரப்பில் கற்பனையின் சுதந்திரத்துக்கு இடமளித்தல். பரிசு கருத்து இணக்கத்தை மட்டுமே தூண்டுகிறது என்றால் எது வெற்றி பெறும் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ அதற்கான உத்திரவாதமாய் மட்டுமே செயல்படுகிறது. வெற்றிக்கதையின் வேறு எந்த அத்தியாயத்துக்கும் மாறுபட்டது அல்ல இது. கற்பனைச் சுதந்திரத்தைத் தூண்டுகிறது என்றால் மாற்றுக்களைத் தேடும் மனத்திட்பத்தை ஊக்குவிக்கிறது. அல்லது, மிக எளிமையாய்ச் சொல்வதானால், மனிதர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்கிறது.
நாவல் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்றால், வேறு எந்த இலக்கிய வடிவமும் எழுப்ப முடியாத கேள்விகளை நாவல் கேட்கிறது: தனி மனிதன் தன் விதியை தீர்மானித்துக் கொள்வது பற்றிய கேள்விகள்; தன்னுடையது உட்பட வாழ்வில் அடையக்கூடிய பயன்கள் பற்றிய கேள்விகள். இந்தக் கேள்விகளை அது அந்தரங்கமான முறையில் எழுப்புகிறது. நாவலாசிரியரின் குரல் அந்தரங்கக் குரல் போல் இயங்குகிறது.
இதை நான் சொல்வது ஒரு வகையில் பொருத்தமற்றதாகத் தோன்றலாம் எனினும், இந்த ஆண்டின் தேர்வுக்குழு இவ்விஷயத்தில் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் நடந்து கொண்டமைக்கு வணங்கவும் நன்றி கூறவும் விரும்புகிறேன். இக்குழுவினர் தேர்ந்தெடுத்த குறும்பட்டியலில் உள்ள நான்கு நூல்களுமே நான் பேசும் இணக்கமற்ற கற்பனையினை வெளிப்படுத்துகின்றன. என் புத்தகத்துக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது- காரணம், அது ஒரு எதிர்வினை நிகழந்திருப்பதைக் குறிக்கிறது, பிற எழுத்தாளர்களின் எதிர்வினை.
‘ஜி’ எழுத எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆயின. அதன் பின் என் வாழ்வின் அடுத்த ஐந்து ஆண்டுகள் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஐரோப்பாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல் சேகரிக்கத் துவங்கியிருக்கிறேன். நூலின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாவலாக இருக்கலாம். எந்த வகைமைக்கும் உட்படாத புத்தகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது தெரியும்: ஐரோப்பாவில் பதினொரு மில்லியன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் குரல்கள், அவர்களுடைய குடும்பமாகிய, உடனில்லாத இந்தத் தொழிலாளர்களின் கூலியை நம்பி வாழும், நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் குரல்களில் சில, இந்த நூலின் பக்கங்களுக்கு பின்னிருந்தும் பக்கங்களிலும் பேச வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் தங்கள் இடங்களையும் கலாச்சாரங்களையும் விட்டு வெளியேறி, ஐரோப்பாவின் தொழில்மயமாகிவிட்ட பிரதேசங்களில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிக மோசமான வேலைகளைச் செய்கிறார்கள், அங்கு இவர்கள் தேவைக்கேற்ப பயன்படும் தொழிலாளர் தொகையாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? தங்களைக் குறித்து என்ன எண்ணம் கொண்டிருக்கிறார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? தாம் சுரண்டப்படுவதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
இந்தப் பணி நிமித்தமாக பல இடங்களுக்குச் சென்று தங்கியிருப்பது அவசியப்படுகிறது. துருக்கிய மொழி பேசும் நண்பர்களை, அல்லது போர்ச்சுகீசிய நண்பர்களை அல்லது கிரேக்கர்களை, சில சமயம் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கலாம். கிராம மருத்துவர் பற்றிய நூல் எழுதும்போது என்னுடன் இணைந்து பணியாற்றிய புகைப்பட நிபுணர், ழான் மோருடன் நான் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே வாழ்ந்து, மிகக் குறைவான கட்டணத்தில் பயணம் செய்தாலும்கூட இந்த நான்காண்டு பணி முடிக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் பவுண்டுகள் ஆகலாம். இந்தப் பணத்துக்கு எங்கே போவது என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. என்னிடம் எதுவும் இல்லை. இந்த புக்கர் பரிசு ஒரு துவக்கத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தப் பரிசின் ஐந்தாயிரம் பவுண்டுகள் எப்படிப்பட்ட பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈட்டப்பட்டன என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் மிக நுட்பமான தொடர்புப் பின்னல்களைத் தேடிச் செல்ல நாம் நாவலாசிரியராக இருக்க வேண்டியதில்லை. கரீபியன் பகுதியில் புக்கர் மக்கானல் நூற்று முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பரவலான வர்த்தக உறவுகள் கொண்ட அமைப்பு. இது மற்றும் இது போன்ற சுரண்டல்களின் நேரடி விளைவாகவே கரீபியனின் நவீன வறுமை தோன்றியுள்ளது. இந்த கரீபிய ஏழ்மையின் பின்விளைவுகளில் ஒன்றாகவே நூறாயிரங்களில் மேற்கிந்தியர்கள் பிரிட்டன் நோக்கி புலம் பெயர்ந்து வரும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய என் புத்தகம், அவர்கள், அல்லது அவர்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களிடமிருந்து நேரடியாக ஈட்டப்பட்ட லாபத்தின் நிதியால் எழுதப்படும்.
இதைக் காட்டிலும் பெரிய ஒரு தொடர்புண்டு. தொழில் புரட்சி, அதைத் தொடர்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல், அதனால் உருவான நவீன ஐரோப்பியா துவக்கத்தில் அடிமை வர்த்தகத்தின் லாபத்தை முதலாய்க் கொண்டது. ஐரோப்பாவுக்கும் பிற உலகுக்கும், கருப்புக்கும் வெள்ளைக்கும் உள்ள உறவின் இந்த அடிப்படை இயல்பு இன்னும் மாறவில்லை. ‘ஜி’ நாவலில் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நான்கு மூர்களின் சிலை நூலின் மிக முக்கியமான ஒற்றைச் சித்திரம். இதனால்தான் நான் இந்தப் பரிசை அதற்கு எதிராகவே திருப்ப வேண்டும். இதைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பகிர்ந்வதைக் கொண்டு இதைச் செய்வதாக இருக்கிறேன். நான் கொடுக்கும் பாதி, எடுத்துக் கொள்ளும் பாதியின் தன்மையை மாற்றும்.
முதலில் என் நிலைப்பாட்டின் தர்க்கத்தை தெளிவாகவே சொல்கிறேன். இது குற்றவுணர்ச்சி, அல்லது, மனசாட்சியின் உறுத்தல் தொடர்புடைய கேள்வியல்ல. இது நிச்சயம் பரோபகாரமுமல்ல. முதலாகவும் முதன்மையாகவும் அரசியல் விஷயம் என்று கூட சொல்ல முடியாது. ஒரு எழுத்தாளனாய் நான் தொடர்ந்து வளர்வது பற்றிய கேள்வி இது: எனக்கும் என்னை உருவாக்கிய கலாச்சாரத்துக்கும் இடையில் நிலவும் உறவு எப்படிப்பட்டது என்பதே கேள்வி.
அடிமை வர்த்தகம் துவங்குவதற்கு முன், ஐரோப்பியர்கள் தம் மனிதத்தன்மையை இழப்பதற்கு முன், அவர்கள் தம் வன்முறையில் தம்மையே பிணைத்துக் கொள்வதற்கு முன், கறுப்பும் வெளுப்பும் சமமானவர்களாய் வாழும் சாத்தியக்கூற்றின் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நெருங்கிய கணமொன்று இருந்திருக்க வேண்டும். அக்கணம் கடந்து விட்டது. அதன்பின் எப்போதும் உலகம் அடிமைகளாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் ஆண்டான்களாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் இடையில் பிளவுபட்டது. ஐரோப்பியன் இந்த மனநிலையை தனது சமூகத்துக்கும் கொண்டு சென்றான். இது அவன் அனைத்தையும் காணும் பார்வையின் ஒரு கூறானது.
தனிமனிதனுக்கும் வரலாற்றுப் போக்குக்கும் இடையில் நிலவும் ஊடாட்டமே நாவலாசிரியனின் அக்கறை. நம் காலத்தின் வரலாற்று கட்டாயம் தெளிவடையத் துவங்கி விட்டது. ஒடுக்கியவர்களால் தம் உள்ளத்தினுள் எழுப்பப்பட்ட மௌனச் சுவற்றை உடைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை வெளிப்படுத்துகிறார்கள். சுரண்டலுக்கும் நவகாலனியத்துக்கும் எதிரான தம் போராட்டத்தில்- ஒன்றுபட்ட போராட்டத்தின் காரணமாகவும் அதன் மூலமாகவும் மட்டுமே-, அடிமையும் ஆண்டானும் ஒருவரையொருவர் சமத்துவச் சாத்தியத்தின் திகைப்பும் நம்பிக்கையும் கூடியவர்களாய் நெருங்கி வர முடியும்.
எனவேதான் கரீபியனிலிருந்தும் கரீபியனிலும் தாம் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வரும் மேற்கிந்தியர்களுடன் நான் இப்பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கரீபியனில் புக்கர்களும் பிற கம்பெனிகளும் உருவாக்கியவற்றின் எலும்புகளிலிருந்து எழுந்த அமைப்புதான் பிளாக் பாந்தர் இயக்கம்: இப்பரிசை நான் கருஞ்சிறுத்தை அமைப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காரணம், அவர்களே கறுப்பர்களாகவும் உழைப்பாளர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வருகிறார்கள். புக்கர் மக்கானலின் செல்வத்தின் தோற்றுகையான கயானாவிலும் ட்ரினிடாடிலும் கரீபியன் நெடுகிலும் போராடி வருபவர்களுடன் இவர்கள் கறுமக்கள் தகவல் மையம் வழியே தொடர்பு வைத்திருக்கிறார்கள்: இப்படிப்பட்ட தொழிலாதாரங்கள் அனைத்தின் செல்வத்தையும் நாட்டுடமை ஆக்குவதே இப்போராட்டத்தின் நோக்கம்.
இது ஒரு இலக்கிய பரிசு என்பதைத் தவிர்த்து ஒரு கணம் சிந்தித்தால், இந்தப் பரிசின் தொகை மிகச் சொற்பம் என்பது என்னைப் போலவே உங்களுக்கும் தெரியும். ஐரோப்பாவின் குடியேற்றத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கு பணம் மிக அவசியமாக இருக்கிறது. கருஞ்சிறுத்தைகளுக்கும் தம் செய்தித்தாள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வது எம் இருவரின் நோக்கமும் ஒன்றே என்பதைக் குறிக்கிறது. அந்த ஒரு விஷயத்தை இனங்காண்பதால் பல விஷயங்கள் தெளிவடைகின்றன. முடிவில்- துவக்கத்திலும்தான்- பணத்தை விட தெளிவே முக்கியத்துவம் வாய்ந்தது.
நன்றி : Verso