தி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்

கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது. கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின் அஞ்சல் உரையாடல்.

Untitled

பதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா? காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில் ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்?

சுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும் இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது. எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம் கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக் கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப் பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.

இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன்.

தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம்.

பதாகை – இந்தக் கதைகள் வேறு வேறு பதிப்பங்கள் மூலம் பல பதிப்புக்களில் வந்திருக்கும். அப்போது பாட பேதங்கள் நேர்ந்திருக்கலாம், அல்லது முந்தைய பதிப்புக்களில் இருந்திருக்கக்கூடிய பிழைகள் களையப்பட்டிருக்கலாம். சில பதிப்புக்கள் இப்போது புழக்கத்திலேயே இல்லாமல் இருக்கலாம், காலச்சுவடில்கூட சில தி.ஜா சிறுகதை தொகுப்புகளின் முதல் பதிப்பு வாசகரிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரு கதையின் செம்பதிப்பு இதுதான் என்று முடிவுசெய்யும்போது சந்தித்த சவால்கள் ஏதேனும் உண்டா, இதுதான் சரியான பதிப்பு என்று இறுதி முடிவு எப்படி எடுக்கப்படுகிறது? (கு.ப.ரா சிறுகதைகளை பதிப்பிக்கும்போது ‘அதப்பாதாளம்’ என்ற வார்த்தை தன்னை எப்படி அலைகழித்தது என்று பெருமாள் முருகன் கூறுகிறார், அப்படி ஏதேனும் நீங்களும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா?)

சுகுமாரன் – தி. ஜானகிராமன் கதைகள் வெவ்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வந்திருக்கின்றன. அவை இப்போதும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றில் பாட வேறுபாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. பெரும்பாலான தொகுப்புகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தவை. அவரது மறைவுக்குப் பிறகு ‘ எருமைப் பொங்கல்‘ என்ற ஒரே ஒரு தொகுப்பு வெளிவந்தது. அதுவும் ‘அடி ‘என்ற பெயரில் குறுநாவலும் சிறுகதைகளும் சேர்ந்த தொகுப்பாக முதலில் வெளியிடப்பட்டு, பிறகு சிறு கதைகள் மட்டும் கொண்ட ‘எருமைப் பொங்கல்‘ என்ற தனித்தொகுப்பாக வெளியானது.

அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரும்பான்மைத் தொகுப்புகளும் வெளிவந்தன என்பதை வைத்து அவற்றின் கதைத் தேர்வும் வரிசை அமைப்பும் அவரே தீர்மானித்தது என்ற முடிவுக்கு வந்தேன். அவரை அறிந்த இலக்கியவாதிகள் அதை உறுதிப்படுத்தவும் செய்திருந்தார்கள். தி. ஜானகிராமனின் நண்பர்களும் சக எழுத்தாளர்களுமாக இருந்த கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்களுடனான உரையாடலில் கிடைத்த தகவல் இந்தத் தீர்மானத்தை எட்ட உதவியது. ‘ ஜானகிராமன் ஒரே இருப்பில் எழுதி முடிப்பார். கதையின் பூரண வடிவம் அவர் மனதுக்குள்ளே இருக்கும். அதைப் பார்த்துக் காகிதத்தில் காப்பி பண்ணுவதுபோல எழுதி முடித்து விடுவார். அப்படியே பத்திரிகைகளுக்கு அனுப்பியும் விடுவார். புத்தகமாக வரும்போதும் பெரிதாக ஒன்றும் மாற்றமிருக்காது’ என்ற தகவல் நினைவுக்கு வந்து உதவியது.

இருந்தாலும் என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, முதல் பதிப்பை ஆதாரமாகக் கொள்வது என்று முடிவு செய்தேன். அதையொட்டியே காலச் சுவடிலும் ஃபேஸ்புக்கிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கிடைத்த முதல் பதிப்புகள் என் தீர்மானத்துக்கு எதிராக இருக்கவில்லை என்பது பெரும் ஆறுதலைக் கொடுத்தது. சில கதைகளை அவை வெளிவந்த இதழ்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். பத்தி பிரிப்பு, அச்சுப் பிழை தவிர வேறு மாற்றங்கள் அநேகமாக இல்லை. கதைகளில் நீக்கல்களோ சேர்க்கையோ இல்லை. விதி விலக்காக ஒரு கதையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ‘தேனீ‘ இதழில் வெளிவந்த ‘ரத்தப் பூ‘ என்ற கதை ‘சிவப்பு ரிக்ஷா‘ தொகுப்பில் சேர்க்கப்பட்டபோது ‘சண்பகப்பூ‘ என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

தி.ஜானகிராமன் மறைந்து ஒரு நூற்றாண்டொன்றும் ஆகிவிடவில்லை. 33 வருடங்கள் என்பது வரலாற்றில் நெடுங்காலமும் அல்ல. ஆனால் இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரின் படைப்புகளைத் தொகுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரும்பாடு பட்டே முதல் பதிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. வெளியான இதழ்கள் கிடைத்தற்கரியனவாக இருந்தன. இவைதாம் சிரமம் தருவதாக இருந்தன. அதைக் கணிசமான அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பலரும் உதவியிருக்கிறார்கள். பல நூலகங்கள் துணை செய்தன.

இந்தக் கேள்வியின் ஒரு பகுதிக்குத் தன்னிலை விளக்கமாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ‘தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பை‘ செம்பதிப்பு என்று குறிப்பிட எனக்குத் தயக்கம் இருக்கிறது. இது முழுமையை நோக்கிய முதல் முயற்சி மட்டுமே. இதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதைச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் பணி எனக்குக் கொடுத்திருக்கிறது. நான் ஆய்வாளன் அல்லன். ஆய்வுக்கான முறையான கருவிகள் என்னிடம் இல்லை. ஆய்வுக்கான ‘கல்விப்புலப் பொறுமை’யும் – அகடெமிக் பேஷன்ஸ் – சுத்தமாக எனக்கில்லை. பகுத்து ஆராயும் நுண்மாண் நுழைபுலமும் கிடையாது. இந்தத் தொகுப்பில் என் கருவிகள் எனது வாசிப்பும் ரசனையும் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளும் மட்டுமே. அதனாலேயே இந்தப் பதிப்பை நான் ‘ஆர்வப் பதிப்பு’ என்றே குறிப்பிடுகிறேன். இந்தப் பதிப்பை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் படுத்துவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்புப் பணி அளித்திருக்கிறது.

பதாகைதி. ஜா தன்னிடம் யாராவது ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்று எழுதியிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெகுஜன பத்திரிகைகளில் எழுதினாலும் இலக்கியதரத்தை இழந்து விடாமல், அதே சமயம் வாசிக்கும் வாசகருக்கு சுவாரசியமாகவும், மனதை விட்டு அகலாது இருக்கும்படியும் படைப்புகள் உருவாக்குவதற்கு அவர் பட்டபாடு அந்த ஒரு வாக்கியத்தில் தெரிந்து விடுகிறது. வில்லியம் ஃபாக்னரின் கூற்றாக “Short story is the most demanding form only after poetry” என்றும் சொல்வார்கள். ஒரு கவிஞராக, திஜாவின் சிறுகதைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

சுகுமாரன் – ஒரே வீச்சில் மூன்று கேள்விகளா? அநியாயம் ஐயா. சரி, முதல் வரியைப் பற்றி.

தி. ஜா.வை அநாயாசமான எழுத்தாளர் என்று சொல்லலாமே தவிர சரளமான எழுத்தாளர் என்று சொல்ல மாட்டேன். புதுமைப்பித்தனிடம்தான் இந்த இரண்டும் ஒன்றிணைந்திருக்கின்றன. ‘தீப்பிடித்த வேஷ்டியை உதறும் வேகத்தில்’ அவரால் கதைகளை எழுத முடிந்திருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். அவரது பலகதைகளும் அதற்குச் சான்றாகவும் இருக்கின்றன. தி. ஜா. ஒரு கதையை அதன் முழு வடிவில் யோசிக்கிறவராகவே இருந்திருக்கிறார். காத்திருந்து வெளிப்படுத்தியிருக்கிறார். ‘சிறுகதை எழுதுவது எப்படி? ”என்ற கட்டுரையில் சிலிர்ப்பு, கண்டாமணி ஆகிய கதைகளின் உருவாக்கம் பற்றி எழுதியுள்ளதை வைத்து இதைச் சொல்ல முடியும். இந்தக் காத்திருப்பு வேளைதான் சிறுகதை கேட்டால் வயிற்றில் புளியைக் கரைக்கும் உணர்வுக்குக் காரணம் என்று எண்ணுகிறேன்.

இரண்டாவது பகுதிக்கான பதில்: தி. ஜா. செவ்வியல்தன்மையைக் கொண்டவர் என்பது என் கருத்து. அவரது படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொள்வதுபோல காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக் கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக் கொண்டிருந்தது என்றே நம்புகிறேன். இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்து விடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான் என்று தோன்றுகிறது.

செவ்வியல்தன்மையின் இன்னொரு கூறு அழகுணர்ச்சி. தமிழில் அழகுணர்ச்சி மேலிட எழுதப்பட்ட கதைகள் தி. ஜானகிராமனுடையவை. தனது எழுத்தை சௌந்தர்ய உபாசனை என்று சொன்ன லா.ச.ரா. நினைவுக்கு வருகிறார். ஜானகிராமனின் சக காலத்தவர். எனினும் அழகுணர்ச்சி குறித்த இரு எழுத்தாளர்களின் பார்வையும் வேறுபட்டவை. லா.ச.ரா. இயல்பிலேயே அழகானதை ஆராதனை செய்யும்போது ஜானகிராமன் தனது ஆராதனை வாயிலாகவே ஒன்றை அழகானதாக ஆக்குகிறார். பொக்கை வாயும் சருமமே தெரியாத அளவு முகச் சுருக்கங்களும் கொண்ட மூதாட்டி பார்வைக்குக் குரூபியாக இருக்கலாம். ஆனால் அந்த முகத்தை நுட்பமாகப் பதிவு செய்யும் ஓவியத்தையோ புகைப்படத்தையோ அழகில்லாதது என்று சொல்லுவதில்லை. எதார்த்தத்தின் மீது கலையின் ஸ்பரிசம் பட்டு அழகானதாகிறது அந்த நகல். ஜானகிராமனின் கலையின் அடிப்படை இதுதான்.

அதனாலேயே அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எதுவும் அழகானதாகவும் வெளிச்சம் நிரம்பியதாகவும் அமைகிறது. அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளின் சிக்கல்களும் மோதல்களும் கிடக்கின்றன. அழகை விரும்பி வாசிப்பவனுக்கு கதை, ஜனரஞ்சக சுவாரசியமுள்ளதாகவும் ஆழத்தை உணர்பவனுக்கு இலக்கிய நுண்மை கொண்டதாகவும் ஆகிறது. இந்த ரசவாதத்தை தமிழ்ச் சிறுகதைகளில் வெற்றிகரமாகச் சாதித்தவர்களில் முக்கியமானவர் ஜானகிராமன் என்பது என் தரப்பு.

மூன்றாம் கேள்விக்கு இந்த பதில். தி. ஜானகிராமன் கதைகளை ஒரு தீவிர வாசகனாகவே பார்க்கிறேன். வாசிக்கிறேன். கவிதையும் சிறுகதையும் வெவ்வேறானவை என்ற போதம் எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். கவிதை ஒன்றைச் சுருக்கிப் படிமமாக்குகிறது. கதை அதை விரித்து வரலாறாக்குகிறது. கவிதைக்குள் எல்லாத் தகவல்களும் சுருக்கப்படும்போது கதையில் எல்லாம் நுட்பமாக நிரல்படுத்தப்படுகிறது. இரண்டிலும் கவித்துவ நிலையை எட்டும் வாய்ப்புகள் அதிகம். செய்தி என்ற தி.ஜாவின் கதையின் உச்சம் கவித்துவமானது. இன்னும் உதாரணங்கள் சொல்லலாம். சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம், தவம். சுளிப்பு என்று பெரும் பட்டியலையே முன்வைக்க முடியும். ஒரு நிகழ்வின் உச்சத்தில் , ஜானகிராமனின் வார்த்தையில் சொன்னால் தெறிப்பு நிகழும் கணங்கள் இவற்றில் இருக்கின்றன. அந்த வகையில் கவிஞனாக அந்தக் கணங்களை ஏற்கிறேன். திளைக்கிறேன். அந்தக் கணங்களுடன் என்னைப் பொருத்திப் பார்த்து சுயமதிப்பிடு செய்து கொள்கிறேன்.

இதை இப்படிச் சொல்லலாமா? உப்பில் ஊறியதும் உப்பும் ஒன்றல்ல. ஆனால் சாரத்தில் ஒன்று. கதைக்கும் கவிதைக்குமான கவித்துவம் பொதுவானது. அந்தக் கவித்துவத்தை அடையும் தர்க்கம் நிச்சயம் வேற்பட்டது.

பதாகைஇன்றைக்கு சர்ச்சையில் அடிபடும் காலச்சுவட்டின் வெளியீடான ‘மாதொருபாகனில்‘ இடம்பெறும் சில கூறுகள், தன்னுடைய  ‘நளபாகம்‘ போன்ற படைப்புகளில் திஜா-வும் தொட்டுச் சென்றிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து?

சுகுமாரன் – உங்கள் ஒப்பீடு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இரு நாவல்களையும் அவற்றின் மையப் பொருள் சார்ந்து யாரும் பார்க்கவில்லை. அதற்காகப் பாராட்டுகள். குழந்தைப் பேறு இன்மையும் அதையொட்டிய துயரமும்தான் இரு நாவல்களின் மையம். ஆனால் சொல்லப்பட்ட முறையிலும் மையப் பொருளை அணுகியிருக்கும் முறையிலும் நடையிலும் வேறுபட்டவை. ‘நள பாகம்‘ பிரச்சனையைப் பூடகமாகக் கையாளுகிறது. மாதொருபாகன் சற்று வெளிப்படையாகவும். அது கால நிர்ப்பந்தம். ஜானகிராமன் இதை எழுதிய எழுபதுகள் இன்றைய அளவுக்குச் சுதந்திரமானதல்ல. ஆனாலும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. பெருமாள் முருகன் எழுதியிருக்கும் காலம் அன்றைய அளவுக்குக் கட்டுப்பெட்டித்தனமானதல்ல; இருந்தும் எழுதியதால் வேட்டையாடப்படுகிறார். நாம் காலத்தில் பின்னோக்கிப் போகிறோம் போல.

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுபதுகளின் தொடக்கத்தில் ‘நிர்மால்யம்‘ படத்தை எழுதி இயக்கினார். மரபுக்கு எதிரான முடிவு கொண்ட படம். காலங்காலமாக பகவதியின் பக்தனாக, சேவகனாக வாழ்ந்த வெளிச்சப்பாடு (சாமியாடி) தனது நிர்க்கதியான நிலைக்குக் காரணம் பகவதியே என்ற கோபத்துடன் தெய்வச் சிலையின் மீது உமிழ்வதுதான் உச்ச கட்டக் காட்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.டி.யிடம் ‘நிர்மால்யம்‘ போன்ற படத்தை நீங்கள் ஏன் பிற்பாடு எடுக்கவில்லை என்று கேட்டபோது சொன்னார். ‘இந்தப் படத்தை அன்று எடுத்ததால் தப்பினேன். இன்று எடுத்திருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்’.

நாம் சகிப்பின்மையின் தீச் சூழலில் வாழ்கிறோம் என்பதைத்தான் மாதொரு பாகன் நாவல் சர்ச்சை சொல்லுகிறது.

குறுக்கீடாகச் சொல்லலாம். அம்மா வந்தாள் நாவலை எழுதியபின் தி. ஜா.வும் இதுபோன்ற அவதூறுகளுக்கும் ஊர் விலக்கத்துக்கும் ஆளாகியிருந்திருக்கிறார். சொந்த அண்ணாவே அவரிடம் ஜென்மப் பகை கொண்டிருந்திருக்கிறார். சொல்வனம் தி.ஜா. சிறப்பிதழில் இருக்கும் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையை வாசித்தால் புரியும்.

பதாகைஇந்த நூல் உருவாக்க அனுபவத்தில் நீங்கள் எதிர்கொண்ட எழுத்துக்கு அப்பால், புறச்சூழல் சார்ந்த பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி? இவை உங்கள் பார்வையில், இயங்குதளத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறதா?

சுகுமாரன் – நூல் உருவாக்கம் தனி நபர் வேலை மட்டுமில்லையே, பலரும் உதவியிருக்கிறார்கள். எனவே பிரச்சனைகள் அநேகமாக இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்கான தீர்வுகளை அந்தச் செயல்பாட்டின்போதே கண்டுபிடிக்கவும் முடிந்தது. இந்த நூலாக்கத்துக்குத் தேவையான ஆய்வை மேற்கொண்டிருக்கிறேன். அலைந்திருக்கிறேன். உழைத்திருக்கிறேன். இவையெல்லாம் பிரச்சனைகள் அல்லவே. பார்வையிலும் இயங்குதளத்திலும் மாற்றங்களை இந்த நூலாக்கம் கொண்டு வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் உடனடி பதில் இல்லை. அவை எனக்கே மெல்லத் தெரியலாம்.

பதாகை – தமிழ் இலக்கிய வாசிப்பு பழக்கம் கொண்ட ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருப்பார். தனது ரசனையை வெறும் எழுத்தாக வெளிக்காட்டாமல், ஆத்ம எதிரொலிப்பாக, நிகழ்த்திக் காட்டியவர். திஜா-வின் வீச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்தை எட்டியிருக்கிறதா? இந்த சிறுகதை தொகுப்பு அதன் விடுபட்ட வெளிகளை இட்டு நிரப்புமா?

சுகுமாரன் – தி. ஜானகிராமனின் எழுத்தைக் குறித்த சிறப்பு வாசகங்களைத் தவிர்த்து விட்டு யோசிக்க விரும்புகிறேன். இது தி.ஜாவுக்கு மட்டுமல்ல பிற இலக்கிய முன்னோடிகளுக்கும் பொருந்தும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழில் இலக்கிய விழிப்பு அதிகரித்திருக்கிறது என்பது என் கணிப்பு. இதன் விளைவுகள் எந்த அளவு வலுவானவை அல்லது சோடையானவை என்பதைக் காத்திருந்து அறியலாம். வாசிப்பின் மறு மலர்ச்சிக்காலம் இது என்று சொல்ல ஆசைப்படுகிறேன். தொழில்நுட்ப மாற்றங்கள், பதிப்புத் துறை முன்னேற்றம் எல்லாம் இதற்குக் காரணங்கள். அதைவிட முக்கியம் புதிய இளைஞர் சமுதாயம் வாசிப்பின் உலகில் சரளமாக நடமாடத் தொடங்கியிருப்பது. அதன் மூலம் வாசிப்பின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. இந்த விரிவாக்கம் பிரம்மாண்டமானதல்ல. எனினும் குறிப்பிடத் தகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகும் நூல்களின் எண்ணிக்கையும் புதியவர்களின் இலக்கிய உலக நுழைவும் இதை நிரூபிக்கின்றன. வாசிப்பின் சுப முகூர்த்தம் ஒன்றில் இளைஞர்கள் முன்னோடிகளை எட்டி விடுகிறார்கள் என்றே நம்புகிறேன்.

தி.ஜானகிராமனுக்கும் இந்த வரவேற்பு இருக்கும்; இருக்கிறது. சென்ற ஆண்டு காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இதற்குள் இரண்டாம் பதிப்புக் கண்டிருக்கிறது. இது கவனத்துக்குரியது என்று நினைக்கிறேன். 1990 களை ஒட்டிய ஆண்டுகளில்தான் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகள் காலாவதியானவை என்ற கருத்துப் பரவலாக இருந்தது. புதிய கோட்பாடுகள் பேசப்பட்ட மும்முரத்தில் இந்தக் கருத்துகள் சொல்லப்பட்டன. ஆசிரியன் செத்துப் போனான்; எதார்த்தவாதம் செத்துப் போனது என்று கருமாதிப் பத்திரிகைகள் வாசிக்கப்பட்டன. ஒருவகையில் அது ‘பற்றி எழுத்து’களின் காலம். ஒரு எழுத்தாளரின் படைப்புகளை நேரடியாக வாசிக்காமல் அவரைப் பற்றி எழுதப்பட்டவற்றை மட்டுமே வாசித்து அவரை விலைபோட்ட காலம். ஜானகிராமனின் எழுத்துகளை வாசிக்காமலேயே அவரைப் பற்றிப் பேசப்பட்டது. அந்தக் கோட்பாட்டுக் காலம் கரைந்ததும் எதார்த்தவாத எழுத்து முக்கியத்துவம் பெற்றது. இன்றும் அது தொடர்வதாகவே எண்ணுகிறேன். இது தி. ஜா. போன்ற எதார்த்தவாத எழுத்தாளர்களை மீண்டும் வாசிக்கவும் மதிப்பிடவும் உகந்த காலம். வெறும் சம கால மோஸ்தர்களுக்கு ஒத்து வரும்படி எழுதப்படும் கதைகளால் அலுப்படைந்திருக்கும் புதிய வாசகன் இதை சட்டென உள் வாங்கிக் கொள்வான் என்று உறுதியாக நம்புகிறேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கு. அழகிரிசாமி கதைகள், கு.ப.ரா சிறுகதைகள் போன்றவை மிக வேகமாக இரண்டாம் பதிப்பை எட்டியிருப்பதிலிருந்து இதை ஊகிக்கிறேன். புதிய வாசகர்கள் அல்லது இளைய சமுதாயம் வாங்கியிராமல் இந்த விற்பனை சாத்தியமில்லை. தவிர, எதார்த்தவாதச் சிறுகதைகளே இன்று உலகம் முழுவதும் எழுதப்படுகின்றன. ரேமண்ட் கார்வரின் கதைகளும் ஹருகி முரகாமியின் கதைகளும் உதாரணங்கள். இவை பழைய எதார்த்தவாதக் கதைகளுக்கான அணுகுமுறையில் பார்க்கப்படுவதில்லை. புதிய நோக்கிலேயே பார்க்கப்படுகின்றன. அப்படிப் பார்க்கப்பட வேண்டியவர்தான் தி. ஜானகிராமன் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஒரு வாசகனாகவே இதைச் சொல்ல முடியும். என் போன்ற வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல முடியும்.

பதாகை – முப்பதாண்டு கால படைப்பிலக்கிய பயணத்தில், மூத்த எழுத்தாளரின் சிறுகதைகளை தொகுக்கும் பணி உங்களை எந்த அளவிற்கு நிறைவு கொள்ளச் செய்கிறது?

சுகுமாரன் – மிகவும் நிறைவு தந்தது. ஏனெனில் நான் என்னை ஒரு பெரும் இலக்கிய மரபின் பின் தொடர்ச்சியாகவே நினைக்கிறேன். மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் பின் தொடரவும் நிறைய இருக்கின்றன என்பது என் எண்ணம். என்னைக் கண்ணியமான வாசகனாக நிலைபெறச் செய்பவை அந்தப் படைப்புகள். அவற்றுக்கு நான் செய்யும் பதில் மரியாதையாகவே இந்தப் பணியை எடுத்துக் கொள்கிறேன். அது பெரும் நிறைவைத் தருகிறது. உயர்வு நவிற்சியான சொற் பயன்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அந்த வகையிலேயே சொல்கிறேனே, தி. ஜானகிராமன் கதைகளைத் தொகுக்கும் வேலை எனக்கு வாய்த்த பேறு.

பதாகை– எதிர்வரும் காலத்தில் என்னென்ன புதிய திட்டங்களில் ஈடுபடுவதாக இருக்கிறீர்கள்?

சுகுமாரன்– வாழ்க்கையிலேயே பெரிய திட்டமிடல் எதுவும் கிடையாது. பிறகுதானே இலக்கியத்தில். சில விஷயங்களில் மனம் சென்று பற்றிக் கொள்ளும். பிறகு அதைச் செயலாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும். இது என் பொது இயல்பு அல்லது கோளாறு. அதனால் திட்டமிட்டுச் செயல்படுவதில்லை. ஆனால் என்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்ற எண்ணம் வந்து விட்டால் கச்சிதமான திட்டங்களை உருவாக்கிக் கொள்வேன். இப்போது புதிய திட்டம் எதுவுமில்லை. கொஞ்சம் கவிதைகள் எழுத விரும்புகிறேன். நிறைய வாசிக்க விரும்புகிறேன்.

பதாகை– நன்றி.

(தி.ஜா சிறுகதைகள் தொகுப்பு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை வாக்கில், புத்தக கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் கிடைக்கும்.)

One comment

  1. தி.ஜா.விற்கு நிகழாதது பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது. நாம் பின்னோக்கி செல்வதே நல்லது. நிச்சயம் நளபாகம் காலத்திலிருந்து நாம் முன்னோக்கி செல்லவில்லை எனத்தெரிகிறது. சாதிக் கௌரவங்களும் சாதிச் சங்கங்களுமே முக்கியக் காரணங்களாக இருக்குமென எண்ணுகின்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.