“இப்போதான் எழுந்து பல் தேச்சி வெளியில டீ குடிக்க வந்திருக்கோம்”
“……”
“நேத்தி ராத்திரி ஒரு தரிசனம் ஆச்சு. குளிச்சப்புறம் மறுபடியும் ஒரு தரிசனத்துக்கு போவோம்”
“……”
“எல்லாம் பத்திரமா வருவேன். கவலைப்படாத”
“…..”
“ஆமாம். முதல்லையே சொன்னேனே. மத்தியானம் பஸ். ராத்திரி வந்துடுவேன்”
“அம்மாவா?” என்று கேட்டான் பஜ்ஜி.
“ஆமாம்”
நாங்கள் இருவரும் ஸ்ரீசைலம் வந்திருந்தோம். இளங்காலை நேரம் ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம்.
எங்களுக்கு முன் சரிந்து செல்லும் பாதையில் சாது போன்ற ஒருவர் ஏறி வந்துக் கொண்டிருந்தார். காவி உடை. ஜடாமுடி. நீளமான தாடி. அருகில் வந்த பிறகுதான் அவர் ஓர் இளைஞர் என்பது தெரிந்தது.
அவரைவிட, அவர் கயிற்றில் கட்டி இழுத்துகொண்டு வந்திருக்கும் மந்திதான் எங்களை வசீகரித்தது. அது பெரிய குரங்கு. பார்த்தால் எங்களுக்கு பயமாக இருந்தது. ஆனால் அந்த குரங்கு எங்களை பொருட்படுத்தவில்லை.
சாமியார் பெஞ்சில் உட்கார்ந்து கயிற்றை இழுத்தார். மந்தி தாவி அவர் அருகில் உட்கார்ந்தது. அவர் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு வாழைப்பழம் எடுத்து அதன் கையில் கொடுத்தார். அது தோலை உரித்து வாழைப்பழத்தை ஒரு கடி கடித்தபின், சாமியாரின் தொடையைத் தட்டியது. மறுபடியும் பழத்தை கடித்து தின்றுக்கொண்டே சாமியாரின் தொடையைத் தட்டியது. இது இன்னும் இரு முறை அரங்கேற நானும் பஜ்ஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
நாங்கள் விழிப்பதை பார்த்த சாமியார் சொன்னார், “இந்த குரங்குக்கு கண் தெரியாது. கண் தெரியாத இதைச் சிறுவர்கள் சிலர் அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் இதை மீட்டு என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். அது பெஞ்சின் மேல் உட்காரும்பொழுது கயிறு தளர்ந்து விடுகிறதல்லவா, மறுமுனையில் நான் இருக்கிறேனோ இல்லையோ என்று அதற்கு சந்தேகம். அதனால்தான் அது அடிக்கடி என் தொடையை தட்டுகிறது”.
நாங்கள் டீ குடித்துவிட்டு கிளம்பியபோழுது அவர் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
“நாங்க வரோம்”
கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்தார்.