சீஸர்

– ஆதவன் ம – 

நவாப்பழ மரத்தை சுற்றி சுற்றி வந்து மூக்கை விடைத்து முகர்ந்தது சீசர். முன்னங்கால் எக்கி மரத்தில் ஏற எத்தனித்தது. வேலு பெல்ட்டை இழுத்தான். கண்களை சுருக்கியடி தலையை குனிந்து மீண்டும் தரையை மோப்பம் பிடித்தது.

சின்னப்பையன் தன் அன்றைய வேலையைத் தொடங்கியிருந்தார். அவரைச் சுற்றி காகங்கள் எழுந்தமர்ந்து பறந்து கொண்டிருந்தன.

புலரியின் மஞ்சள் கீற்றுகள் கீழ் வானத்திலிருந்து வெளிவருவதை கம்மாய் மேட்டில் படுத்திருந்த மாடுகள் அசைபோட்டபடி பார்த்துக் கொண்டிருந்தன. எங்கும் மஞ்சளின் ஔிப்பிரவாகம். கழுத்தைத் திருப்பி கொம்பால் காகத்தை விரட்டியது பசு.றெக்கைகளை அறக்கப் பறக்க அடித்து தாழ்வாக பறந்த காகத்தை தாவி பிடிக்க முனைந்து தாவியது சீசர். காகம் பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து கரைந்தது. சீசர் சோகமான கேள்விக்குறியுடன் காகத்தைப் பார்த்து குரைத்தது. படிப்பகம் பூட்டிக் கிடந்தது. வேலு சீசரை இழுத்துக்கொண்டு நடந்தான்.

சந்திரன் கைகளில் தூக்குவாளியுடன் எதிரே வந்தார்.

‘என்னா மருமகனே, எங்கேயா’ என்று கேட்டுவிட்டு ‘ வெளிக்கா’ என்று நடந்து சென்றார்.

‘அத்தே, மாணிக்கம் எந்துருச்சுட்டானா’ என்றபடி வந்தான் வேலு.

‘என்னடா வெள்ளனயே வந்துருக்க’

‘ சீசர அவுத்துவிடனும்ல’

‘ ஏன், அண்ணே எங்க’

‘ அப்பா, கூட்டத்துக்கு போயிருக்காரு, நேத்தே போயிட்டாரு’

‘ டீ குடிக்கிறயா’

‘ வேணாந்த்த’

‘அந்தா தூங்குறான் பாரு, எளவு விடுஞ்சு நாயெல்லாம் வெளிய சுத்துற நேரமாயிருச்சு, இவனோட ஒடனொத்த பயலுகள்ளாம் காலைல கௌம்பி வீட்டுக்கு ஏதாவது கொடுக்கனுமே அப்டின்னு அலையிறானுக, இத பாரு தூக்கத்த’ என்றபடி காலால் எட்டி எழுப்பினாள்.

மாணிக்கம் தூங்கும் பாயில் இருந்து மூத்திர நாற்றம் அடித்தது. பிளாஸ்டிக் யையை போட்டுத்தான் படுப்பான். ஆனாலும் கைலியும் போர்வையும் நாறும். தினமும் துவைக்க தண்ணி கிடைக்காது. தண்ணீர் எடுக்க முக்கு கொழாயடிக்குதான் போகனும். நல்ல தண்ணிக்கு ஐயரம்மா வீட்ல கொடத்துக்கு ஒர்ருவா.

‘ மாமா எங்கத்த, படிப்பகத்துல காணாம்’ என்றபடி மாணிக்கத்தை எழுப்பினான்.

மாணிக்கமும் அதற்கே காத்துக் கொண்டிருந்தவன் போல எழுந்து பின்பக்கம் சென்றான். பின்பக்கம் என்பது ஒரு சிறு முற்றம். அதன் வலது மூலையில் சின்னச் சுவர் எழுப்பி, துணி மறைத்து கக்கூஸாக பயன்படுத்தினர். அதையொட்டி சிறு மேட்டில் பப்பாளி மரமும் முருங்கை மரமும் இருந்தன. அதையொட்டி மண் படிந்த திருக்கையும் பணியாரச்சட்டியும் கிடந்தன. மழைத் தண்ணீர் ஒழுகி ஏற்படுத்திய கருப்பு தடம் அதையொட்டிய மதில் சுவரில் தெரிந்தது.

அந்த மதிலுக்கு பின்னிருந்த சேட்டின் மரஅறுவை மில்லில், சனிக்கிழமை, அறுத்து மீந்த மரத்தூளை விற்பார்கள். வாங்கி வைத்துக் கொண்டால், மண்ணெண்ணை வாங்க முடியாத நேரத்தில் அதை எரித்துக் கொள்ளலாம். கனகம் வீட்டில் பெரும்பாலும் அடுப்பெரிவது டீ கொதிக்க வைக்கத்தான்.

வீடு என்பது ஒரு அறை, நீள்சதுர அறை. அதிலேயே கட்டில் போட்டு படுத்துக் கொண்டார்கள். அதையொட்டி யாரும் படிக்காத அரசியல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நீள் சதுரத்தின் வடக்கு பக்கத்தை ஒட்டி அடுப்படி. மண்ணெண்ணை அடுப்பு, கொஞ்ச பாத்திரங்கள் இருந்தன. தோசைக் கல்லும், டீக்கரை படிந்த பாத்திரமும் அடுப்பை ஒட்டி இருக்கும். மேற்கு பக்கத்தில் சிறு பானா வடிவில் மாணிக்கத்தின் முழங்காலை ஒட்டிய திண்டும் பானாவின் இரண்டு தாங்குகோடுகளை ஒட்டி கீழே கிடக்கும் கிடைக்கோடு அவன் கெண்டைக் கால் வரை இருக்கும். தெற்கு பக்கம் கண்ணாடி பாதரசம் ஓரத்தில் பிரிந்து இருப்பதை வீட்டுக்குள் நுழைபவரின் முதல் பார்வையில் படும்படி அவருக்கு இடப்பக்கம் மாட்டப்பட்டிருந்தது. அதையொட்டிய தென்மேற்கு மூலையில் பெஞ்சில் துண்டு மடிப்பதற்கு கிடக்கும். அறை என்று சொன்னால், கிடக்கும் பொருட்களையெல்லாம் எடுத்துவிட்டால் மொத்தமாக பத்து பேர் படுக்கலாம்.

மாணிக்கம் முகத்தை முருங்க மரக்கொடியில் காய்ந்த துண்டில் துடைத்தபடி வந்தான். பெஞ்சில் மேல் கிடந்த கவட்டையையும் எடுத்துக்கொண்டான். கனகம் அதை வேகமாக பிடுங்கப் போனாள். மாணிக்கம் பின்பக்கம் வைத்து மறைத்துக் கொண்டான்.

‘அத்தே விடுங்கத்த ‘ என்றான் வேலு

‘ஒனக்கு ஒன்னும் தெரியாது, இந்த சனியன வச்சுக்கிட்டு இந்த சனிய ஊர் வம்பெல்லாம் வெலக்கி வாங்குது’

அவனிடம் இருந்து பிடுங்க முடியாததினால் ‘என்னமோ செஞ்சு தொலங்க’ என்றாள்.

ஒரு கவரில் பழுத்த இரண்டு பப்பாளியையும், காயையும் போட்டு ‘அம்மாட்ட கொடு’ என்றாள் கனகம்.

இருவரும் நடந்து ஆத்துக்கு சென்றனர். மிகப் பழமையான படித்துறை படியில் வயதானவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். தண்ணீர் ஒரு ஓரமாக ஓடிக்கொண்டிருந்தது. சீசரை மாணிக்கம் பிடித்திருந்தான். ‘நான் போயி ஆய் இருந்துட்டு வர்றேன், அதுக்கப்பறம் நீ போ ‘ என்று வேலு நடந்து ஆற்றில் வளர்ந்திருந்த ஒரு மறைவை தேடி அமர்ந்தான். மாணிக்கம் கரை ஓரத்தில் இருந்து கற்களை எடுத்து தேங்கியிருந்த தண்ணிரில் அடித்தான். பின்பு வானத்தை நோக்கி இலக்கில்லாமல் கற்களை கவட்டையால் விசிறினான்.

பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி மன்ற நிழற்குடையில், மயில் நிற கரு நீலமும் பஞ்சு மிட்டாய் நிற பார்டர் சேர்ந்த பட்டுச் சேலை கட்டி நின்றிருந்த அம்மாளின் முந்தானையை பிடித்தபடி ஒரு சிறுவன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை தின்று கொண்டிருந்தான். முகத்தில் கண்ணிர் வழிந்த தடம் தெரிந்தது. ஒரு சிறு பெண், மாணிக்கத்தின் வயதிருக்கும், அவன் அக்காவாக இருக்கலாம், கையில் இருந்த மிட்டாயை சீசரை நோக்கி நீட்டி அழைத்தது. சீசர் அவர்களை நோக்கி இழுத்தது. இதுபோன்ற அடர் நிறங்கள் சீசரை ஈர்த்துவிடும். அது குரைத்த குரைப்பில் தங்கள் சின்னச் சிரிப்புகளை மறந்து குழந்தைகள் இவன் பக்கம் பார்த்தார்கள்.

தங்க பிரேம் கண்ணாடி அணிந்த ஒருவர் ஆட்டோ பிடித்து வந்தார். குழந்தைகள் எல்லாம் சீட்டுக்கு பின்னால் இருந்த திண்டில் ஏறி அமர போட்டி போட்டது. ஆட்டோ கிளம்பி சென்றது.

பஸ் ஸ்டாப்பிற்கு பின்னால் இருந்த கம்பெனியில் இருந்து கரும்புகை, புகைபோக்கி வழியாக வெளியேறியதும் நீண்ட ஊதொலி எழுப்பப்பட்டது. ஆற்றில் சாலையின் அடியில் சென்ற பெரிய சிமெண்ட் பைப்பில் இருந்து கறுப்புநிற கழிவு சென்று ஜீவமுக்தி அடைந்தது. சீசர் சத்தத்தை கேட்டு வாலை பின்னால் சொருகியபடி மாணிக்கத்தின் கால்களை சுற்றி வந்தது. கால்கள் ஈரத்தில் நனையும்படி நக்கியது.

சீசரின் உயர்ரக ஐரோப்பிய ஜாதிப் பண்புக்காகவே அதை நேசித்தார், வேலுவின் அப்பா. அதன் மின்னும் கறுப்பு நிறமும் அதற்கு அடைவு கட்டியது போன்று அமைந்த ‘காப்பிக்கலர்’ நிறத்திற்கும் அவர் சந்தோஷமாக செலவழிக்க தயாராய் இருந்தார். ஆனால் சிறியதாய் விடைக்காத காதுகளும் குட்டைக் காலுடன் நாட்டு நாயைப் போன்ற அதன் நடையும் அவரின் ஆசையை தடுத்தது. ஆனாலும் சீசருக்கு சாப்பாடு பிரச்சினையில்லை. அது கிடைத்தபோது உண்டது, கிடைக்காதபோது காதை மடக்கி, குழைந்து, கால்களை நக்கி பணிந்து நடக்க கற்றுக் கொண்டது .

மாணிக்கத்திடம் அதற்கு அளவற்ற வாஞ்சை. அவனைக் கண்டால் தலையை அவன் கால்களுக்குள் நுழைத்து பின் வெளிவந்து மேலேறி அவன் முகத்தை நோக்கி தாவும், முடியாமல், அவன் முன்னால் வந்து முகத்தை திருப்பி அவனைப் பார்த்தபடி வாலையும் பின்பக்கத்தையும் ஆட்டும். மாணிக்கத்திற்கும் அதனுடன் பெரும் பரிவு ஏற்பட்டு போய்விட்டது. இருவரும் ஒருவகையில் ஒன்றாகினார்கள்.

‘ டேய், ஒங்கப்பெனங்கடா, வீட்ல இருக்கானா’ என்றார் படியிலிருந்த எழுந்த வந்த கிழவனார்.

‘ இல்ல தாத்தா, அப்பா தெர்லியே…,’ என்றான்.

வேலு வந்தான், இவனும் வெளிக்கிருந்தபின் ஆற்றுக்குள் இருந்த ஓடுகாலில் குளித்தனர். சுற்றிலும் மாதுளையும், வேம்பும் புங்கனும் வைத்திருந்தனர். வாசலை ஒட்டி பன்னீர் மரம் வளர்ந்திருந்தது. அதற்கடுத்து பனைமரங்கள்.

 

வேலுவின் வீட்டுக்கு சென்றார்கள். வாசல் கேட்டில் சீசரை கட்டி போட்டுவிட்டு மாடியில் இருந்த அறைக்கு சென்றான் வேலு. மாணிக்கம் முன் வராந்தாவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். சுவரில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் படங்கள் வாசலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவில் வேலுவின் தாத்தா பிச்சையா சேர்வையின் படம் மாட்டியிருந்து. காய்ந்த கனகாம்பர மாலை இருந்தது. வேலுவின் அப்பா வீட்டில் இருந்தால், இந்நேரம் புதிய பூ மாற்றப்பட்டிருக்கும்.

சந்திரா ஒரு தட்டில் வடித்த சோறும் முட்டையும் பாலும் கொண்டு வந்தாள். மாடிக்கு ஏற திரும்பும் விசாலமான படியில் உட்கார்ந்து சோற்றில் முட்டையை உடைத்துப் போட்டு நன்றாக பிசைந்து பாலூற்றி சீசருக்கு வைத்தாள். மாணிக்கத்துக்கு சந்திரா தன்னை பார்ப்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. சிவப்பு நாக்கில் எச்சில் வழிய சீசர் நக்கித் தின்றது.

மேலேயிருந்து வேலு சிவப்பு நிற சட்டை ஒன்றை தூக்கிப் போட்டு ‘போட்டுக்கடா’ என்றான்.

‘ டேய் இப்டி கழட்டி கழட்டி போட்டுட்டு போனா யார் தொவைக்கிறது. இந்த சட்டைய போட்டுட்டு உன்னோடத கையிலய எடுத்துட்டு போயிரு’ என்றாள் பரமு.

மாணிக்கதுக்கு என்ன சொல்ல என தெரியவில்லை. நிமிர்ந்து சந்திராவை பார்த்தான். அவள் இவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், லேசாக சிரிப்பது போலவும் இருந்தது.

‘எம்மா , நீ சும்மா இருக்க மாட்டியா, ஒனக்கு இப்ப என்ன’ என்றாள் சந்திரா.

மாணிக்கம் சட்டையை போட்டுக் கொண்டான்.

‘ஒனக்கென்னடி, இங்க தொவைக்கிறது நான்தான’

‘வாடா, சாப்புடலாம்’ என்றான் வேலு

‘இல்ல, எனக்கு பசிக்கல, அம்மா ஏதாவது செஞ்சுருக்கும்’

‘வாங்க சார், ரெம்பத்தான் பிகு பண்றீங்க, ஒங்கம்மா என்னத்த செஞ்சிருக்கப் போறா’ என்றாள் பரமு.

மாணிக்கத்திற்கு பசி வயித்தை கிள்ளியது.

இட்லி, மைய அரைத்த தக்காளிச் சட்னியுடன் கொஞ்சம் போல தேங்காய் சட்னி இருந்தது. இரண்டு தட்டுகள் இருந்தன, ஒன்றில் நான்கும் மற்றொன்றில் இரண்டு இட்லியும் இருந்தன. சிறியதாக இருந்த தட்டில் மாணிக்கம் உட்கார்ந்தான்.

‘ நீ தேங்காச் சட்னி சாப்பிடுவியா’ என்றாள் பரமு

‘ இல்ல அத்த, நான் சாப்புட மாட்டேன்’

இட்லி நன்றாக இருந்தது. ஒரு இட்டிலியை சாப்பிட்டவுடன் நன்றாக பசித்தது. அடுத்த இட்லியை மிக பொறுமையாக சாப்பிட்டான்.

‘ஏண்டா இட்டுலி புடிக்கலயா, பழைய கஞ்சி இருக்கு சாப்புடுறியா’

பழைய கஞ்சியில் பீ நாற்றம் அடித்தது. இருந்தாலும் பசித்தது, வாங்கி வேறு வைத்துவிட்டான். கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. வாசனையை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு முடித்தான்.

பள்ளத்தை நோக்கி நடந்து சென்றார்கள். இரண்டு பக்கமும் அலுமினிய பட்டறைகளின் சத்தமும் வாசனையும் வந்தது. மழைபெய்யும்போது எழும் மண்வாசம், மண்ணைத் தின்ன ஊறும் வெறி போல பற்களில் ஒரு நறநறப்பை உணர்ந்தான். சுண்ணாம்புக் கட்டிகளை வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும் என்ற வெறி ஏறியது.

கம்மாய்க்குள் ஷெரிப், கணேசன், தர்மராஜன், நிருபன் (எ) மேனேஜர், கருப்பு அமர்ந்திருந்தனர். அனைவருமே மாணிக்கத்தை விட பெரியவர்கள். தர்மராஜனும் கணேசனும் லோடுமேனாக இருக்கிறார்கள். தர்மராஜன்தான் கிரிக்கெட் கேப்டன். இருவரும் பள்ளத்து தெருவில் இருக்கிறார்கள்.

சற்றுத்தள்ளி இருந்த மரத்தினடியில் சின்னப்பையன் அமர்ந்திருந்தார். இரண்டு பக்கமும் மூன்று பொதிமூட்டைகள். அழுக்கு அடையாய் அப்பியிருந்தன. நெஞ்சு வரை சடைபிடித்துத் தொங்கும் தாடிமயிர் நரைத்திருந்தது. மூட்டையின் நிறத்திலேயே சட்டையும் வேட்டியும் கட்டியிருந்தார்.

கம்மாயை சுற்றி சேரும் குப்பைகள் முதல் பொட்டலத்தில் இருந்தது. முதல் பொட்டலத்தில் இருந்து தேவைப்படாத குப்பைகள் இரண்டாவதில். மூன்றாவது மிகப் பழையது. முதல் இரண்டு பொட்டலத்திற்கு சென்ற பொருட்கள் எப்பொழுதாவது தவறுதலாக கீழே விழுந்து பொருட்களின் உரிமையாளருகு சேரலாம். மூன்றாவது பொட்டலம் சின்னப்பையனுடைய சொத்து. என்ன செய்யலாம் என்பதுதான் சின்னப்பையனின் ஆகப்பெரிய சிக்கலாக இருந்தது. குப்பைகள் எங்கு இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து தரம் பிரித்து வைத்துக்கொள்வார். அவரைச் சுற்றி காக்காய்க் கூட்டம் ஒரு வளையம் போல அமர்ந்திருந்தது.

சின்னப்பையன் தீவிரமாக முதல் மூட்டையைப் பிரித்து அன்றைய அலுவலைப் பார்க்கத் தொடங்கினார். எப்பொழுதும் யாரிடமும் பேசுவதில்லை. பேசினால் ஒன்றும் புரியாது. விநோதமான மந்திரம் போன்ற லயத்துடன் இருக்கும். கூர்ந்து கவனித்தால் தான் அது கெட்ட வார்த்தை என்பது புரியும். சாப்பாடு கொடுத்தால் சாப்பிடமாட்டார். டீயும் கஞ்சாவும் வாங்கிக் கொடுத்தால் சொன்ன வேலையை செய்வார்.

மாணிக்கத்தை ஆட்டையில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அவன் எப்பொழுதுமே காவலுக்குத்தான். நிருபன் ஆட்டம் முடிந்தவுடன் மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை தாண்டி, ஆறும் கம்மாயும் சேறும் இடத்திற்கு செல்வான். நன்றாக தடித்து வளர்ந்து குடை விரித்திருக்கும் சீமக்கருவேல மரம் அவனுக்கு பிரியமானது. அதன் கீழே முட்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தான். இரண்டு கற்களுக்கிடையில் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்பில் அமர்ந்து கஞ்சாவை கசக்கி தூளாக்கி பீடியில் ஏற்றி பற்ற வைத்து இழுப்பான். பின்பு மாணிக்கத்தின் தொடைகளைத் தடவி கைகளால் பின்புறத்தை தடவுவான்.

முதல் முறை இங்கு அவர்கள் வந்தபொழுது அன்று தேய்பிறையின் நான்காம் நாள். அடர்த்தியான திரவமாய் காற்று நகராமல் இருந்தது. வரும்பொழுதே மரணவிலாஸில் முட்டை புரோட்டாவும், ஈரலும் வாங்கி வந்திருந்தனர். அன்று எழுந்த முதல் எண்ணம் கைகளை தட்டி விட்டு ஓடத்தான் நினைத்தான். ஆனால், பிரிக்கப்படாத பொட்டலங்களை கடந்து அவனால் செல்ல முடியவில்லை. அன்று பசி அடங்கவே இல்லை. மீண்டும் கடைக்கு சென்று ஆளுக்கு நான்கு புரோட்டாவும் குடலும் சாப்பிட்டார்கள்.

நிருபனின் அப்பாவும் வேலுவின் அப்பாவும் சிறு பட்டறைகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். நிருபன் ஆளானதும் சக்கரவர்த்தி அவனுக்கு சிறு உணவகத்தை போட்டு கொடுத்தார். நான்கு டேபிள் போட்டு, வெளியே தோசைக்கல் போட்டு கூரை வேய்ந்து முக்கில் ஈவ்னிங் மட்டன் ஸ்டால் தொடங்கினான். சாயுங்காலங்களில் வெட்டியாய் ஊரைச் சுற்றி இரவில் அகாலத்தில் தேடிச் சென்று புரோட்டாவும் ஆட்டுக்குடலும் சாப்பிட்டு வருவதற்கு பதிலாக இது நல்ல ஏற்பாடாகவே தோன்றியது நிருபனுக்கு.

எண்ணெயில் சோம்பு பட்டை லவங்கம் பொரிய வெங்காயம் தாளித்து, அரிந்த தக்காளிப் போட்டு மசாலாப்பொடிகளை எண்ணெய் ஊறி வர ,ஈரலைப் போட்டு வதக்கி, வெந்துவிடுமுன் தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய் ஊற்றி கொழுப்பு போட்டு அம்மா வைக்கும் ஈரல் குழம்பின் சுவையை அடித்துக் கொள்ள முடியாது. காரம் குறைந்த குடல் குழம்பு, கூட்டி வைத்த குழம்பு, மட்டன் சுக்கா என கடை ஆரம்பித்த கொஞ்ச நாளில் வியாபாரம் நன்றாக இருந்தது. பின்னர் சுற்றிலும் இருந்த அலுமினியசில்வர் பட்டறையில் வேலை செய்பவர்களுக்காக மதியமும் காலையும் கடையை விரிவாக்க வேண்டியதாக இருந்தது.

நிருபனின் தாத்தாவும் மாணிக்கத்தின் தாத்தாவும் தான் கட்சி வளர அங்கு வேலை செய்தவர்கள். கோட்ஸில் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக தொண்டாற்றினார்கள். ரயில்வே தொழிலாளர் போரட்டத்தின்போது ரயில் மறிப்பை முன்னின்று செய்து சிறை சென்று வந்தார் மாணிக்கத்தின் தாத்தா. ஆனால் காலம் செல்லும் திசையின் விசையை அறியாதவராய் இருந்தார். நிச்சயமாக ஏற்படப் போகும் சோசலிச அரசாங்கத்தினால் தனிமனித கவலைகள் தீர்ந்து போய்விடும் என்று உறுதியாக நம்பினார்.

தர்மர் கையில் இருந்த காசில் மலிவாய் வந்த இடத்தை வாங்கிப் போட்டார். சிறு பட்டறை ஒன்றை ஆரம்பித்துவிடடு கட்சி அனுதாபியாக மாறினார். இப்பொழுது கட்சி செல்லும் திசையை தீர்மானிக்கும் ஒரு விசையாகவும் வளர்ந்து விட்டார்.

‘ என்னடா, நேத்து கூட்டத்துக்கு வர்ல’ என்றார் மேனேஜர்

‘ பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டேன்’ என்றான் மாணிக்கம்.

வேலு, ‘இப்ப நாங்க திமுக’ என்றான்

‘ ஆமா பெரிய்ய மசுரு’

‘ ஏண்டா, ஏற்கனவே ஒங்க மாமாவ கட்சிக்குள்ள இழுத்துட்டு அந்த வைரவமணி ஆடுற ஆட்டம் தாங்க முடியல. போற எடத்துலலெல்லாம் குத்தி காமிக்கிறாங்க’ என்றார் மேனேஜர்.

‘இல்லண்ணே இப்பலா திமுகதான் மரியாத’

கல் குவியலை தன் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு சுவாதீனமில்லாமல் கை அசைய இழுத்து விட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

‘ ஏண்ணே, இவங்க மாமாவ இந்திக்காரங்க கட்டி வச்சு அடச்சாங்கலாமே புனாவுல, அதுனாலதான் அங்க பதிவிலா கொடுத்து வச்சுருக்காங்க’ என்றான் கணேசன்

‘ ஆமா பெரிய்ய பதவி மயிரு, வேலைக்கு போன எடத்துல சூசுவான்னு இருந்துட்டு வாராமா அங்கன ஒரு பட்றய போட்டுட்டான். அண்ணங்காரனுங்க சும்மா இருப்பானுங்களா, அடி பிருச்சு எடுத்துட்டாங்க. அப்டியே வேல பாக்குற மொதலாளிட்டிட்டயும் போட்டு விட்டாங்க, அந்தாளு தொறத்தி விட்டுட்டான். இங்க வந்தப்ப பாக்கனுமே ஏதோ கேதம் விசாரிக்க வந்த மாதிரில்ல இருந்தான், டேய் ஒன் சூத்த சாத்திட்டு சும்மா இருக்க மாட்டியா, பெரிய்ய வௌக்கன்ன மயிரு’ என்றான்.

மாணிக்கம் அடித்த ஒரு கல்லில் அடிபட்டு சின்னப்பையனைச் சுற்றி அமர்ந்திருந்த காகம் கீழே விழுந்தது. சின்னப்பையன் தன் அலுவலை விட்டு மாணிக்கத்தைப் பார்த்தார். லேசாக சிரித்தது போல் மீசை வலைந்திருந்தது. மீண்டும் பொட்டலத்தை கிண்டத் தொடங்கினார். மாணிக்கத்திற்கு உடல் லேசாக நடுங்கியது.

அனைவரும் அமைதியானார்கள். கருப்பும் தர்மனும் எழுந்து ஓடினார்கள்.

‘ண்ணெ, நீ என்ன வேன்னா சொல்லு, இனி நாங்க தான்’ என்றான் வேலு.

‘அதுவும் சரிதாண்டா, இனி குருட்டு பயலுக்கு போட்டியே இல்ல’

குட்டை போல் தேங்கியிருந்த நீரின் ஒரத்தில் களி மண்ணில் வயிற்றை பரப்பி சுகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது கருப்பு நாய். மாணிக்கத்துக்கு சீசர் ஞாபகம் வந்தது. சீசரின் நிறமும் முடியும் குணத்தில் பாதியும் அப்பாவுடையது. அசப்பில் வெளிநாட்டு நாய் போலவே இருக்கும். ஆனால் சாப்பாட்டில் எந்த பாரபட்சமும் இல்லை. அதில் அம்மாவைப் போல. மாணிக்கத்திடம் பாசமாக இருக்கும். மாமா காலையில் கழட்டி விடுவார். நேராக மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி எழுப்பும். பின்பு மாணிக்கம் கூட்டிக் கொண்டு ஆற்றிற்கு போவான். காலை நடையும் கடனும் தீர்ந்திபின் மாமா வீட்டில் கட்டி விட்டு பள்ளிக்கு கிளம்புவான்.

ஒருமுறை எப்போதும்போல மூத்திரம் பெய்யும் திண்டில் இருந்துவிட்டு அலைந்தது. ஒரு பெண் நாய் இதை நோக்கி வந்தது. மெல்ல கால்களையும் சுற்றி சுற்றி வந்து மூக்கையும் முகர்ந்தது. நாக்கால் முகத்தை நக்கியது. பின்பு திரும்பி தன் பின் பக்கத்தை ஆட்டியது. சீசர் முகர்ந்தது. வாலை தூக்கி ஏதோ ஒன்றை பீச்சியது. வடிந்த திரவத்தை நக்கிய சீசர் பரவசமானது. ஆனால் பெண் நகர்ந்து சென்றது, சீசரும் முன்னால் செல்ல முனைந்து இழுத்தது. மாணிக்கம் இழுத்து பிடித்தபோது அவன் மேல் தாடை பற்களை பயங்கரமாக தெரிய திறந்தபடி குறைத்து தாவியது. சங்கிலியை விட்டு விட்டு தலைதெறிக்க ஓடி வந்தான். அதற்குபின் ‘அவர்கள்’ வீட்டில் இருந்து யாராவது கூடவே வர வேண்டும்.

பொதுவாக வேலுவின் அப்பாவிற்கு நாய் வளர்க்க பிடிக்காது. ஆனால் இது போன்ற உயர்ஜாதி நாய்களின் மேல் ஒரு பிரேமை. அதுவும் உலகத்திற்கு புது வெளிச்சத்தை காட்டிய ஐரோப்பிய நாய்கள் மீது தனி பிரேமை.

இடது கண் பிய்த்தெறியப்பட்டிருந்த காகத்தை எடுத்துக்கொண்டு நிருபனும் தர்மராஜனும் கருப்பும் தம் வழக்கமான இடத்திற்கு சென்றனர்.

வேலு சாப்பிட சென்றான். மாணிக்கம் பள்ளத்து தெருவிற்குள் சென்றான். நடந்து அப்படியே ஆற்றுக்குள் இறங்கினான். வெயில் அவ்வளவாக இல்லை, இருந்தும் கிறக்கமாக இருந்தது. கரையையொட்டி மாடுகள் கட்டப்பட்டிருந்தன. பாதரசம் உதிர்ந்து போயிருந்த கண்ணாடியின் பின்பக்கம் போல கிடந்தது ஆற்றுப் படுகை. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. காடாய் மண்டியிருந்த படுகையின் ஒரு ஓரத்தில் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடியது. குப்பை, மாட்டு சாணம், மலஜல தீர்த்தம் என்று மணத்தது. ஆழ மூச்சை இழுத்து ஆற்றை சுவாசித்தபின் தேங்கியிருந்த குட்டைக்கருகில் சென்றான்.

பாலத்தின் தெற்கே முழுவதும் வண்ணான் தொட்டிகள், அதை ஒட்டி கிணறுகள். சிலர் அந்த நேரத்திலும் துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்துக்கு அக்கரையில் இருப்பவர்கள். பசும்புல் தரையில் வண்ண வண்ண நிறங்களில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. அங்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதற்கு அருகில் சென்றான். தரையில் ஆங்காங்கே அனைத்து கட்சி கொடிகளும் கிடந்தன, காங்கிரஸ் கொடியைத் தவிர.

‘இங்கென்னடா பண்ற’ யாருடனோ பேசிக் கொண்டிருந்த வேலுவன் மாமா திரும்பிக் கேட்டார்.

‘சும்மாதான் மாமா’

‘செரிய்யா சாயங்காலத்துக்குள்ள காஞ்சுருமா, நைட்டு மீட்டிங் இருக்குய்யா’

‘அதெல்லாம் தாராளமா ஆயிரும்யா, நீங்க கவலப்படாதீங்க’

‘அப்ப சேரி, நான் சாயங்காலம் ஆளனுப்புறேன்’ என்று பையில் இருந்து காசை எண்ணி கொடுத்தார்.

மாணிக்கத்திற்கு சந்தோஷமாக இருந்தது.

‘சாப்பிட்யாடா, சாப்புட போவோமா’ என்றபடி அவனுடைய பதிலை எதிர்பாராமல் கரைக்கு நடந்து சென்றார்.

ஆனிமாத நடுப்பகலின் உள்ள வானத்தின் நீலத்தில் குறுக்காக ஒழுங்கில்லாமல் செல்லும் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டைக்கு கருப்பு நிற பேண்ட் போட்டிருந்தார். கைகளை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டு அலட்சியமான கவர்ச்சியுடன் இருந்தார். அடர்த்தியான மீசை, நெளிநெளிவான மேடு பள்ளமான அடர்த்தியான தலைமுடி வாரப்பட்டு நெடுநேரமாகியிருந்தது. உதட்டை ஒட்டிய மருவில் பூனை மயிர் இரண்டு வளர்ந்திருந்தததை வெட்டியிருந்தார். மாநிறம். எதை பற்றியும் கவலைப்படாமல் தனக்குள் ஆழ்ந்து ஏதோ ஒரு யோசனையில் முழ்கியபடி நடந்து சென்றவர் பின்னால் மாணிக்கமும் நடந்து சென்றான். சைக்கிளில் ஏறி வலது காலை எக்கி ஊன்றியபடி காத்திருந்தார். இவனைப் பார்த்தவுடன் பெடலை மிதித்து அழுத்த, மாணிக்கம் ஓடிப்போய் தாவி கேரியரில் அமர்ந்தான்.

‘என்னடா சாப்புடுற’

‘வாங்க மாபள, என்ன மருமகன் எளச்சுபோயிட்டிய’ என்றார் கல்லாவில் அமர்ந்திருந்த தர்மர்.

‘மாமா, எனக்கு பிரியாணி, இவனுக்கு புரோட்டா கொடுத்துருங்க, கொடல் இருக்கா, அது ஒன்னு, சுக்கா ஒன்னு’

‘கொடலு தீந்துருச்சு மாப்ள, மாங்கா சாப்றீங்களா’

‘தோப்ஜாவா’ என்று சிரித்தார்

‘ ஆமாய்யா மாமன் தோப்ஜாவத்தான் போடனும்’ என்று சிரித்தார் தர்மர்.

‘ஏண்டா, இப்படி அழுக்கு சட்டைய போட்டுக்கிட்டு சுத்துற, ஒங்கப்பெங்கடா’

மாணிக்கம் எதுவும் பேசவில்லை. இலையை விரித்து தண்ணீர் தெளித்து புரோட்டாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

‘ இன்னைக்கி நைட்டு கூட்டம் இருக்கு, வர்றியா’

‘ சேரி மாமா’

பிரியாணியும் சுக்காவும் வந்தது. அதில் கொஞ்சத்தை எடுத்து மாணிக்கத்தின் இலையில் வைத்தார்.

‘வரும்போது நாலஞ்சு பேர கூட்டிட்டு வா, நான் வேலுட்டயும் சொல்லிருக்கேன்’ என்றார்

சாயுங்காலமே அறுபதடி சாலை கூட்டமாக இருந்தது. இரவில் தான் கூட்டம். எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடத்தும் கூட்டம் என்பதினால் எல்லாக்கொடிகளும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. ராமன் போட்ட சாரத்தில் மேடை ஏறிக்கொண்டிருந்தது. ஒருவித பரபரப்பான சூழ்நிலை உருவாகியிருந்தது. வேலுவின் மாமாவை சுற்றி நிருபனும் கருப்பும் நின்று கொண் டிருந்தார்கள். மாணிக்கத்துடன் செந்திலும் அழகரும் வந்தனர். கருப்புடன் இருவரும் கொடிகளை வாங்கச் சென்றனர். வேலு எங்கு சென்றான் எனத் தெரியவில்லை.

வானம் அடர்ந்த நீலத்துடன் இருந்தது. இப்பொழுது மழை பெய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

‘சே, வானம் வேற இப்டி இருக்கே, மழ வந்தா என்னா பண்ண’ என்றான் நிருபன்

‘பாக்கலாம், மழ வந்தா வருட்டும்டா’ என்றான் சந்திரன்

‘ எப்பயும் இப்டி ஒரு அசால்டாண்ணே’

‘ வேற என்ன செய்ய, மழையில நனைஞ்சு பின்னாடி எல்லாக்க கூட்டம் ஓங்கடைக்குத்தான்டா வரும்’

‘ ஆ, அது வேற ஒன்னு இருக்குல்ல…. ஏன் அண்னே எப்டி அத மறந்தேன்’

‘ டேய் அதுக்குத்தான் மண்டையில ஒன்னும் இருக்ககூடாதன்றது, ரொம்ப அறிவாளியா இருந்தா, தேவையான அறிவு இருக்காது’

‘ நீங்கதான்னே அறிவாளி, நான் என்னாண்ணே’

‘அப்ப வா, நம்ம கட்சிக்கு’

‘அது ஆகாதுன்னே, அப்பாவுக்கு தெருஞ்சா அவ்ளவுதான்’

‘அப்ப என்ன மயித்துக்கு என்ன பத்தி தேவையில்லாதத பேசிட்டுருக்க’
நிருபன் மாணிக்கத்தை பார்த்தான்.

‘இங்க… இங்க பார்றா, இனி இந்த மாறி ஏதாவது என் காதுக்கு வந்துச்சு மென்னிய முறுச்சுருவேன்’

‘ இல்லன்ணே, யாரோ தப்பா சொல்லிருக்காங்கனே’ என்று கண்கலங்கினான்.

‘சேரி விடு, நாம ஆகுற வேலய பாப்போம்’

மேடை போடப்பட்டிருந்தது, பின்னால் வெள்ளைத் துணியைக் கட்டி ஓர அலங்காரங்களை ஈர்க்கால் குத்திக்கொண்டிருந்தான் ராமன். கீழே இருந்து செல்வம் அவனுக்கு துணியை ஒதுக்கி விட்டபடி ஈர்க்கை கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘என்னா ராமா, மழ வரும்போல தோணுதே’ என்றான் சந்திரன்.

‘ஆமாண்ணே அப்டிதான் இருக்கு’ என்றபோதே மழை பெய்யத் தொடங்கியது. அனைவரும் கலைந்து ஓடத் தொடங்கினார்கள். ஆலமரத்தின் கீழும் மரணவிலாஸிலும் ஆறுமுகம் டீக்கடையிலும் ஓடியவர்கள் ஏறி நின்றார்கள்.

மழை விடும்பொழுது அருணாச்சலம் வந்தார். அருணாச்சலம் சந்திரன் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்.
எட்டு மணிக்கு மேல் தான் முக்கிய பேச்சாளர்களும் தலைவர்களும் வருவது.

இனி இந்த மழை வராது என்பது போல் வானம் கலைந்து எறிந்த துணி போல் கிடந்தது. அருணாச்சலம் ரோஜா நிற சட்டை போட்டிருந்தார். கையில் தங்க பிரேஸ்லட். நனைந்த தலைமுடியை ஏர்நெத்தியில் இருந்து ஏற்றி விட்டார். வெள்ளையாக தடித்து போதையில் கண்கள் இலக்கில்லாமல் இருந்தது. உதடுகள் வெத்தலைக் கறையால் சிவந்திருந்தது.

‘என்னாடா, இன்னும் மழ வருமா’

‘வராதுன்னுதான் தோனுதுண்ணே’

கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் கண்ணாடியை துடைத்துவிட்டு மணிக்கட்டை மடக்கி மணி பார்த்தார்.

‘இன்னும் ஒன்றமண்நேரமாவது ஆகுமாப்பா’

‘ஆகும்ணே’

‘பையன் ஆரு’

‘சொந்தக்காரப் பயந்தான், ஏதாவது சாப்றீங்களா’

‘சாப்டலாம், அண்ணே வர்ற நேராகும்ல’

‘ஆமாண்ணே’

‘ஆமா என்ன ஏதும் இருக்கா’

‘சாராயம் இருக்கு’

‘நம்ம காச்சுனதா’

‘ஒருவகையில அப்டித்தான்’

‘அப்ப அத வர்றவனுக்கு கொடுத்துரு, வேற என்ன இருக்கு’

‘கள்ளு வேணும்னா காலேல சொல்லிருக்கனும், வேற சிவபானம் தான் இருக்கு’

‘கடசீல பரதேசியாக்கிருவீங்கப் போல, சேரி வா, என்ன பண்ண’ என முகம் வீங்க சிரித்தார்.

வளர்பிறையின் சிறு கீற்றை மறைத்து வெளிப்பட்டு கடந்து கொண்டிருந்தது மேகம். இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கிடப்பது எனத் தெரியவில்லை மாணிக்கத்திற்கு. நாளை காலையில் வேகமாக கிளம்பி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியதுமே மனம் கனத்தது. காலையையும் வெளிச்சத்தையும் நினைக்க மனம் கூசியது. இந்த உலகம் வெறும் இரவுகளால் நிரம்பியதாக ஏன் இருக்கக்கூடாது.

ஆனாலும் காலையில் சென்றுதான் ஆக வேண்டும். சந்திராவின் ஞாபகம் வந்தது. தன் இடுப்பு பகுதியில் ஊர்ந்து மேயும் வெற்றிலை உதட்டுக்காரரின் கைகளை உணர்ந்தான். சந்திரா என்ன செய்து கொண்டிருப்பாள், இந்நேரம், இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு படுத்தபடி தன்னை பற்றி எண்ணிக் கொண்டிருப்பாள் என தோன்ற உடல் சிலிர்த்தது.

சந்திராவும் மாணிக்கமும் திருவாப்புடையார் கோவிலுக்கு சென்றிருந்தனர். ஏழாம் நாளான பாவாடை தரிசனத்திற்கு அம்மன் சந்நிதி முன் கூட்டம் முண்டியடித்தது.

எங்கும் பூக்கள் கசங்கி எழும் நாற்றமும் குங்கும விபூதி தரித்த உடல்களில் எழும் வியர்வையின் நெடியும் கலந்திருந்தது. இவற்றினூடாக அனைத்தையும் கடந்து நிற்கும் தூய பெண் வாடை.

மாணிக்கத்திற்கு மூச்சடைத்தது. கூட்டம் கசக்கித் தள்ளியது. திடீரென்று வயிற்றுக்குள் சுழன்றெழும் பந்தொன்றை உணர்ந்தான். பின் முதுகில் அழுத்தும் சந்திராவின் மார்பகம். அலையும் அவள் கைகள் மேய்ந்து அவனை உணர்ந்தது. அவனுடைய கைகளை பற்றி தன் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டாள்.

வயிறு பசித்தது.

‘என்னடா பசிக்குதா ‘ என்றார் அருணாச்சலம்.

ஆமாம் என தலையாட்டினான்.

‘சேரி வா சாப்டுவோம்’ என அவனை உட்கார வைத்துக் கொண்டார். புரோட்டாவைப் பிரித்து அவன் மடி மீது வைத்துவிட்டு அதில் ஈரல் குழம்பை ஊற்றினான் நிருபன்.

வானம் கலையத் தொடங்கியது. மேல் பரப்பு நீங்கி சென்றதும் அடிப்பரப்பிலிருந்து தூறல் விழுந்து கொண்டிருந்தது. காகங்கள் நவ்வாப்பழ மரத்திலிருந்து கரைந்தது பெரிய தொந்தரவாக இருந்தது. கட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த நவ்வாப்பழ மரம் நீண்டு தடித்த பழங்களை கொட்டும். மாணிக்கம் காலையிலே வந்து அறை வாசலை கூட்டிப் பெருக்கி பழங்களை பொறுக்கி பேப்பரில் போட்டுக்கொள்வான். பின்பு பள்ளிக்கு சென்றுவிட்டு சாயுங்காலம் மேல் தான் வருவான். ஒரு வாரமாகத்தான் இந்த கரைதல்.

‘டேய், அங்க எவண்டா, அந்த சனியன தொரத்தி விடுங்கடா’ என்றார் அருணாச்சலம்.

‘ண்ணே, காக்காக் கூட்ட கழச்சோம்னா, அது நல்ல பாம்பு மாதிரி விடாது, தொரத்தி தொரத்தி கொத்தும்’

‘என்னய்யா, எந்த காலத்துல இருக்கீங்க’

‘சத்தியம்னே, நான் கண்ணால பாத்துருக்கேன்’

‘அப்டியா’ என்று தன் சிந்தனையை கொஞ்சம் காக்காயை நோக்கி திருப்பிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சிகரெட்டை பற்றவைத்தபடி வராண்டாவில் நடந்தார். காக்காய் ஒன்று தாழ்வாக பறந்து தலையை உரசி செல்ல உடலில் ஒரு நடுக்கம் தோன்றியது. உள்ளே சென்று மேஜையில் அமர்ந்து ஆழ்ந்து புகைத்தார்.

‘சந்திரன் அந்த காக்கா கூட்ட கழச்சு விடுய்யா’ என்றார் வாசலில் நுழைந்த சந்திரனிடம்.

‘ண்ணே, பாவத்த அதப் போய்ட்டு எதுக்குண்னே’

‘யோவ், சொன்னத செய்யா, நீயும் இவங்க மாறி வளவளன்னு பேசிக்கட்டு’

‘சேரிண்ணே’

காக்காய்கள் காலையிலே தங்களுடைய கரைச்சலைத் தொடங்கிவிட்டது. மாணிக்கத்தைச் சுற்றி வேலுவும் அழகரும் நின்றிருந்தார்கள். வேலுவின் கைகளில் சீசர் இருந்தது. மாணிக்கம் கைகளில் இருந்த உண்டி வில்லால் கிளையில் அமர்ந்திருந்த காக்காயை அடித்தான். அது அந்த கிளையை அசைக்க காக்காய்கள் மேலெழுந்தகு பறந்தன. வேலுவிற்கு பதற்றமாக இருந்தது. ஆனாலும் வெளியே காண்பிக்கவில்லை.

‘டேய் என்னத்த அடிக்கிற, காக்கா கூட்ட பாத்து வீசுடா’ என்றான். பின்பு ‘ இங்கத்தா’ என்று கவட்டையால் குறிப் பார்த்தான். கற்கள் அந்தரத்தில் இரண்டு முறை பறந்து தரையில் விழுந்தன. மாணிக்கம் அடித்த கல் நேராக சென்று கூட்டை கலைத்தது. குச்சி ஒன்று அசைந்தது. இரண்டு மூன்று கற்களை தொடர்ச்சியாக அதன் மீது வீசினான். காக்காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து எழுந்து அந்தரத்தில் பறந்தபடி கரைந்தன. தைரியம் கொண்ட சில தாழ்வாக பறந்து அவர்ளை தோக்கி வந்து சிறகால் வீசியன. மேலேயிருந்து சிறு சிறு குச்சிகளுடன் இரண்டு காக்காய் குஞ்சுகள் நிலத்தில் விழுந்தன. சீசர் பாய்ந்து சென்று காக்காய்க்குஞ்சை கவ்வியபடி ஓடியது. சில காக்காய்கள் சீசரை துரத்தியடி பறந்தன. மற்றவை மாணிக்கத்தை நோக்கி பறந்து வந்தன. தாய் காக்காய் குஞ்சு கீழே விழுந்த இடத்தில் தத்தி தத்தி நடந்தது. அலகால் கீழே விழுந்த குச்சிகளை எடுத்துக்கொண்டு மேலேப் பறந்தது.

வேலுவும் அழகரும் எங்கு சென்றனர் எனத் தெரியவில்லை. மாணிக்கம் கம்மாயைப் பார்த்து ஓடத் தொடங்கினான். காக்காய்கள் அவன் தலையைக் கொத்தியபடி பறந்து வந்தன. கைகளால் தட்டியடி முன்னாடி ஓடிக் கொண்டிருந்தான். கம்மாய்க்கரையிலிருந்து சீசர் நாக்கால் வாயைத் துடைத்தபடி அவனை நோக்கி ஓடி வந்தது. மெல்ல ஆறுதல் அடைய காக்காய்கள் சின்னப்பையன் அமர்ந்திருந்த மரத்தில் மேலேறி அமர்ந்து கரைந்தது.

சின்னப்பையன் கீழே விழுந்திருந்த கவட்டையை எடுத்து முதல் மூட்டைக்குள் போட்டார். உள்ளேயிருந்த குப்பைகளை சிதற வெளியே எடுத்து போட்டுவிட்டு கவட்டையை மீண்டும் கண்டடைந்த ஆச்சர்யத்துடன் இரண்டாம் மூட்டைக்குள் போட்டுவிட்டு, கீழே சிதறியிருந்த குப்பைகளை பதற்றத்துடன் மாணிக்கத்தை பார்த்தபடி அள்ளிப்போட்டோர். முகம் கலவரமாகவே இருந்தது.

இரண்டாம் மூட்டையை பிரித்து கவட்டையை மூன்றாவது மூட்டைக்குள் போட்டபின் உதறிக்கொண்டிருந்த அவர் உடல் நிதானமடைந்தது. முகத்தில் பூரண பரவசம். நார் போன்ற மீசையை ஒதுக்கிவிட்டு மாணிக்கத்தைப் பார்த்து சிரித்தார். புலரியின் ரேகைகள் அவர் முகத்தின் மீது படிந்து ஔிர்ந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.