– பூவன்னா சந்திரசேகர் –
“மணி ஆறாச்சு. ஊராளக பூராம் மேய்ச்ச முடிச்சு அது அத கொண்டாந்து கசாலையில கட்டிட்டாக. காலையிலே நீச்சத் தண்ணிய வெறும் வயித்துல குடிச்சுட்டு போன மனுஷன பொழுதடைஞ்சும் இன்னும் காணோம். இப்பிடி ஆடாக்கும் மாடாக்கும்னே அலைஞ்சா, அந்த உடம்புதான் என்னத்துக்கு ஆகுறது?”
மாட்டுக் கசாலையை கூட்டிபெருக்கி முடித்து விட்டு மாட்டுக்கு காடித்தண்ணியில் புண்ணாக்கு கொட்டி கலக்கிக் கொண்டிருந்தாள் காளியம்மா. அறுவடை முடித்து ஒருவார காலமே ஆயிருந்தது. அவர்களது முப்பது சென்ட் நிலத்தில் விளைந்த நெல்லின் குட்டிக் குவியல் வாசலில் தார்ப்பாய் விரிப்பில் கொட்டிக் கிடந்தது.
மூன்று பத்தி வீடு. முதல் பத்தி இருப்பு. ரெண்டாம் பத்தி கிடங்கு. மூன்றாம் பத்தி கைவிடப்பட்டது. முழுக்க வவ்வால் மூத்திர வாடை. கீரிப்பிள்ளைகள் நடமாட்டம். அரவுகளின் ஊர்வு சில சமயம்.
பனியிறங்கத் துவங்கிவிட்டிருந்தது. மார்கழி மாத பாவனை அது. மஞ்சள் விழுங்கி மெல்ல வெள்ளுரு சுமக்கத் துவங்கிருந்தது மேலை வானம். கருப்பையா, கதிர் தாளை மிதித்து நசுக்கி மேய்ச்சலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார். அவர் கழுத்தில் சரடாக சாரதி துண்டு ஒன்று தழுவலாய்க் கிடந்தது. மாடுகளின் கழுத்துப்பட்டை மணியோசை கிணிங்…கிணிங்…கிணிங்….
சத்யாவின் ஆசை மாடு ஒய்த்தக்கா அவரின் நடையை ஒத்து உடன் ஒரு நாய்க்குட்டி போல சிலுப்பிக்கொண்டே வந்தது. அவருக்கு பிரியமான காரி மாடு அது. வீட்டுத் தொழுவத்திலே தான் பிறந்தது. ஒரு எட்டு வயசிருக்கும். கடவாய்ப் பல்லெல்லாம் போட்ட தொழுவத் தாய் மாடு. எவற்றுக்கும் மூப்பு. ராணி.பனைமட்டை எரித்த கருஞ்சாம்பல் நிறம். நெற்றியில் மட்டும் வெற்றிலை அளவு வெள்ளை கிரீடம். நிஜமாகவே ராணிதான். மகாராணி. இப்போதும் கன்று ஈந்திருந்தது. ஐந்தாவது ஈத்து.
கட்டுத்தளையில் கட்டிக் கிடந்த மரைக்கன்று, முளைக்குச்சி பிடிங்கும் ஆர்ப்பரிப்போடு ஆத்தாக்காரியின் அருகாமை உணர்ந்தமையினால் மாப்போட்டுக் கொண்டிருந்தது. கன்றின் நெற்றியில் கூட ஒரு கொழுந்து வெற்றிலை அளவில் வெள்ளை. ஒய்த்தக்கா வயிற்று வழியல்லவா?
ஒரு நாள் மேய்ச்சலில் கடந்த, நடந்த, குடித்த, படுத்த எல்லா நில சேறும் குளம்படியில் ஒட்ட கசாலை அடைந்த செவலைக்கிடேரி ஈரக்கூலத்தை அவசரமாய் வாயில் அதக்கித் திணித்து மென்றது.கட்டறுத்த மரைக்கன்று மாரை முட்டிக் கொண்டிருந்தது.
“இன்னும் பாலே பீச்சலே, அதுக்குள்ள என்னவாம் இதுகளுக்கு அவசரம்” காளியம்மாள் கன்றுக்குட்டியின் பிடிகயிற்றை வல்லூட்டியமாய் இழுத்து, முளைக்குச்சியில் தழைத்தாள்.
“நாப்பூரா அதுக மேஞ்சுட்டு வாரது, ஒனக்கும் எனக்கும் இல்லடி. அதுக்க பிள்ளைக்கு பாலுக்கும், அதுக்க வயித்துக்கும்தாண்டி, கூதரக் கழுத. கன்டுக்க கட்ட அவுத்துவிடு. அதுக்க வயிறு சலம்ப மிச்ச மீசாடி நமக்குப் போதும் என்ன?”
“வீடு விரிசப்பட்டு கெடக்கு. ஒரு மூட்டை சாந்து கொழைச்சு அப்ப நேரங்கெட்டுத் திரியுறோம். உனக்கும் எனக்கும் காப்பி தண்ணிக்குக் கூட காண மாட்டேங்குது பாலு. இதுல அம்புட்டும் கண்ணுக்கு குடிக்க விட்டா, எங்குட்டு இருந்து கடைக்கு பால் ஊத்துவே? எவன் தாலிய அறுத்து உள்ள கடனை கட்டுவே? அந்த பிள்ள இருந்த மட்டும் மில்லுக்குப் போயி வயித்த ரொப்புச்சு. எந்த கோயிலுக்கு கொறை வச்சமோ? எந்தச் சாமிய பழிச்சுப் பேசுனமோ அறியல. இருந்த ஒன்னையும் காவெடுத்துக்கிடுச்சு. எம்மவ போயி வருஷம் ரெண்டும் மூனும் போயி, இப்ப ஆறு ஆகிப் போச்சு. அந்த புள்ள பொறந்து, ஆளாகி, கடைசியில சீவன் போன இந்த ஒத்த வீட்டையும் இப்போ கரைய விட்டுகிட்டு கிடக்கோம். அதெல்லாம் உரைக்கல உனக்கு. கன்டுக்கு பால் வேணுமாம் பாலு.”
முட்டிப் பால் குடித்த கன்றை, தயவே இல்லாமல் ஆங்கார வேகமாய் இழுத்து வந்து கட்டில் தழைத்தாள். வாயோரம் முலை முட்டிய நுரையோடு பால் கசிய பாவமாய் கதறியது கன்று.”ம்மா… ம்மா…”
முன்னமே ஒருமுறை காளியம்மா, அவருக்கு அறியாது ஒரு வெள்ளைக் கிடேரியை விலைபேசி ஏற்றியே விட்டாள். விலை சொல்பம்தான். சீட்டுக்காரனிடம் அதைச் சொல்ல முடியாதே. அப்புறம் மனுஷன் மூணு நாளா வேளைக்கு சாப்டல. சத்யா போனப் பிற்பாடு, அவர் அளவளாவி பேச சிரிக்க உள்ளதானால் அவை மாட்டோடும் கன்றோடும் தான். பிள்ளை பத்தின மூச்செழுந்தாலே காளியம்மா புகையடித்த கண்ணாய் நாள் முச்சூடும் அழுது தேமி ஒடுங்கியே போவாள். தனியே அவளிருக்கும் சமயங்களில் லேசான விசும்பலாய் ஒரு ஒப்பாரி அதிர்ந்து வீட்டை நிறைக்கும். ஒத்தைப் புள்ள. அதுவும் பொம்பளப் புள்ள. மூணு தரம் தப்பி நாலாவதா நிலைச்ச உசுராச்சே. இருக்கத்தான் செய்யும் வேதனை.
கருப்பையா பாலூற்றப் போனாலும் மாட்டுக்கு மருந்து வாங்க டவுனுக்குள் போனாலும் சத்யா சைக்கிளின் கேரியரில் தான் ஒட்டியிருப்பாள். ஒரு மடிப்பு சீனிச்சேவு வாங்கித் தாந்தால் பொட்டுப்போல கொறித்துக்கொண்டு அடங்கி இருப்பாள்.
வளனை, சூராணம், முத்துப்பட்டணம் சுற்றில் பெரும்பான்மை சாயா கடைகளில் பொங்கியது கருப்பையாவின் கசாலை மாட்டு, மடி கறந்த பால் தான்.குடுப்பதைக் காட்டிலும் குறைவாயினும் சிணுங்கல் இல்லாமல் வாங்கிக் கொள்வார். ஓரிரு வருடப் பழக்கமில்லை, இரண்டு தலைமுறையாக பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம் இந்தத் தெருக்கடைகளில்.பால்காரர் உடையாரைத் தெரியாத சுற்றமும் அவர் மகன் கருப்பையாவை நன்கறியும். ”நல்ல கன்று ஈன்ற பசுவின் குணம் அவருக்கு.”
புத்துக்கால் சீக்கு. அப்பனுக்கு இருந்தது. சித்தப்பனுக்கு இருந்தது. கருப்பையாவுக்கும் இருக்கிறது. வெறுங்காலால் நடமாட்டம் ரணமாய் வெடிக்கும். செருப்பில்லாது அடி நகர திராணியிராது. செருப்பே போட்டு நடந்தாலும் குண்டூசிகளாய் அவ்வப்போது குடையும். பெரும்நேரம் பஞ்சு செருப்பு தான். அதுவும் குதிகால் பக்கம் ஒரு ஓரம் மட்டும் குழியாகி இருக்கும். மழைக் காலங்களில் வாசலில் கிடக்கும் அவரது செருப்பு ஒரு குட்டிக் குளத்தை தன்னில் நிறைத்து வைத்திருக்கும். இந்த மாதிரியான அமைப்போடு அவர் நடப்பது, மணல் சாலையில் மாட்டு வண்டி ஆடி ஆடி கடப்பது மாதிரி கூட அல்ல. அப்படியே அதன் அசலாய் தான் இருக்கும்.
கருப்பையாவின் வயதையொத்த ஒரு பழஞ்சைக்கிள் ஒன்று கடைத்தெருக்களுக்கு பாலூற்றப் போகும் அவருக்கு நெடுங்காலத் துணை. அவரின் தோற்றம் மூப்பேறிக்கொண்டே இருந்தது சைக்கிளின் மேல் துருவேற கூட அவர் விடுவதில்லை. அவரின் தலைமயிர் எப்போதும் கண்டிராத தேங்காய் எண்ணெய் வாங்கி, பழைய வேட்டியைக் கிழித்து அதில் சலம்ப ஊற்றி துடைத்து சைக்கிளை மினுமினுப்பாக வைத்திருப்பார். அது அவருக்கு வெறுமனே சைக்கிள் மட்டுமல்ல.அது அவர் அப்பனைச் சுமந்தது, அவர் அப்பன் ஓட்ட பின்னே இவர் அமர, கடை கண்ணி எங்கும் பாலூற்றி வந்த பழ நினைவுகளைச் சுமந்தது. அவரது மகள் அந்த சைக்கிளில் தானே ஊடுகால் போட்டு ஓட்டப் பழகினாள். அதிலே தானே பத்தாப்பு வரை பள்ளிக்கூடம் போய் வந்தாள். மஞ்சள்காமாலை முற்றலாகி அவள் மெல்லச் செத்துக் கொண்டிருக்கையில் அந்த அழகு பெத்த சைக்கிளில் தானே அவளைச் சுமந்து ஆஸ்பத்திரி போனார்.
அப்படி பார்த்தால் அது என்ன வெறுமனே இரும்படித்து செய்யப்பட்ட சாதாரண சைக்கிள் மட்டுமில்லை தானே?
சத்யா பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பஞ்சு மில்லுக்கு அனுப்பப்பட்டாள். அவளும் மேற்கொண்டு படிக்கணும் என வாய் திறக்கவில்லை. அப்பன் சீக்காளி, ஆத்தா வெகுளி, மழைக்கு கரையும் வீடு எல்லாம் நினைத்தாளோ என்னவோ. மேலே படிக்க வைக்கச் சொல்லி அவள் கேட்கவுமில்லை.இவரே படி என்றும் சொல்லவில்லை. நல்ல வடிவான முகம். தாட்டியமான உடம்பு. வெந்தய நிறம். வட்ட முகத்துக்கே அழகாய் மூக்கும் அதில் கிராம் பவுனில் செய்த மூக்குத்தியும். மாதம் ஆறாயிரம் ஊதியம். உண்ண உறங்க இடம் வேலையிடம் பார்த்துக்கொள்ளும். கொஞ்சம் பாரமில்லாமல் காலம் கழிக்கப்பட்டது. வீடு கூரை பிரித்து வேயப்பட்டது. மாதம் ஒரு தரம் மீனோ நண்டோ எடுத்து சாப்பிட வாய்த்தது. மூன்று மாத இடைவெளியில் ஒரு வாரம் ஊருக்கு வந்து போவாள்.
“எப்பா… ஏய்… கருப்பையா, மாடு மூனு நாளா அப்பவோ இப்பவோன்னு ஈத்துக்கு நிக்கி, ராவும் பகலுமா ஒரே சத்தம். என்ன எழவோ தெரியல, மசுரு மயம்புட்டு கன்டு போடத்தான் மாட்டிங்குது. என் வீட்டாளும்,போடுறது காளையங்கன்டா இருந்தா மனியங்குடி கருப்பு கோயிலுக்கே நேந்து விடுறதா வேண்டி காணிக்கை முடிஞ்சு போட்டுருக்கா. அந்த டாக்டக் கூப்பிட்டா மருந்துன்றான், மாத்திரைன்றான், ஊசின்றான். நமக்கு அதுக மேல எல்லாம் ஒரு பிடிப்பும் இல்ல. நீ ஒரு எட்டு வந்து பாத்தாக்கா நல்லா இருக்கும்யா. நல்லபடியா ஈத்தெடுத்து குடுத்துட்டீனா கூட ஒரு ரூவா கூட்டி தாரேன். கொஞ்சம் வெரசா வந்தாய்னா சௌரியமா இருக்கும்” தடியப்பன் அவதி அவதியாய் ஒப்பித்தார்.
“ஈத்து வலி எடுத்துக் கிடக்குன்னு இம்புட்டு சல்லிசா சொல்றியேப்பா. ஏறுப்பா மொத வண்டியில.” பின் கேரியரில் தடியப்பனை ஏற்றிக் கொண்டு பெடலை அழுத்தினார். பிடி வரப்பு போன்ற கால்களால் அவர் சைக்கிளை செலுத்த, அது கண்மாய்க் கரையில் சீறலுடன் பாய்ந்து கொண்டிருந்தது.
மாடு தொழுவத்திலிருந்து வெளியில் கட்டப்பட்டிருந்தது. விழி பிதுங்கலாய் மிரண்டு ஒரே இடத்தில் உலப்பிக் கொண்டிருந்தது. பிருஷ்டம் வழி அக்கி வழிந்தது.கால் செருப்பைக் கழற்றி கையிலெடுத்து தொழுவ ஓரமாகப் போட்டார். தோளில் கிடந்த சாரதி துண்டை தலையிலேற்றிக் கட்டினார். விட்டம் பார்த்து தெளிந்த மேகங்களினூடே கடவுளே இருப்பது போல கை கூப்பி வேண்டினார். மாடு கட்டிக்கிடந்த இடம் வைக்கோலும் சாண மூத்திரமும் குழைந்து நசநசப்பாகக் கிடந்தது. அருகில் எவர் போனாலும் மாடு சீறியது. பேற்று வலியாதலால் கோபமும் பயமும் பலியாக வரத்தான் செய்யும். மெல்ல எக்கி மூக்கணாங்கயிற்றைப் பிடித்தார். மாட்டை மெல்ல அடங்கி பெருமூச்செறிந்தபடி மெல்லத் தரையில் கிடத்தினார். தலையை வளைத்து பெருங்குரலெடுத்து ஓங்கலாய் மாடு கத்தியது. வயிற்று மேட்டை மெல்ல வருவி விட்டார். தடியப்பன் வீட்டம்மா மாட்டின் தலைமாட்டில் அமர்ந்து வாயில் சேலைத் தலைப்பை பந்தாய் சுருட்டி வைத்துக்கொண்டு விசும்பியபடியே அதன் நெற்றியையும் தாடையையும் வாஞ்சையாய் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். மாட்டின் விழி மேலேறிக் கொண்டிருந்தது. மூச்சு பலமாய் வீசியது. தடியப்பன் தலையிலடித்து கதற ஆரம்பித்துவிட்டிருந்தார்.
“ஏய்… அழுகைய நிறுத்துய்யா மொத. சீவனமா கெடக்க மாட்ட அழுதே கொன்னுப்புடுவே போலேயே. போப்பா… அழுகைய முழுங்கிட்டு போயி கங்கெடுத்து அதுல சாம்பிராணியோட அளவா வரமிளகா ரெண்டு பிச்சுப் போட்டு கொண்டா ஓடு. மிளகா நெறிக்கு மாடு கொஞ்சம் அசராம திடப்பா கிடக்கும். வெரசா போயி அத கொண்டா மொத.” இடுப்பு கைலியை வரித்து எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டே வேகமாய் வீட்டுக்குள் ஓடினார்.
ஈயச் சாம்பிராணிக் கரண்டியில் மாட்டுக்கு சோறு பொங்கும் அடுப்பைக் கிளறி கங்கள்ளி சாம்பிராணி போட்டு ரெண்டோ மூன்றோ மிளகாய் கிள்ளிப்போட்டு அதை மாட்டின் தலையைச் சுற்றி காட்டினார். காரநெடி புகை அந்த இடத்தைச் சூழ்ந்து இருமலைக் கிளப்பியது. மாடு மெல்ல விழியை உருட்டி சுயநினைவுக்குத் திரும்பி சீராக மூச்சுவிடத் தொடங்கியது.
தொடர்ந்து விடாது வயிற்றை வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். சற்று நேரத்திற்குள் நன்கு வெந்த சேனைக் கிழங்குகளைப் போல இரண்டு இளங்குளம்புகள் பிருஷ்ட வழியே வெளியே துருத்தின. கருப்பையா இரண்டு கைகளிலும் விளக்கெண்ணெய் தடவி கன்றின் இரண்டு கால்களையும் பிடித்து பதுசாக இடைவிட்டு இடைவிட்டு இழுத்தார்.
“ இந்தாய்யா… தடியப்பா, அஞ்சாறு கூலம் அள்ளியாந்து இங்குன போடு. கன்டெ இழுத்து அதுல தான் கிடத்தனும்.”
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உடைபட்ட கஞ்சிக்கலயம் போல பனிக்குட நீர் ஒழுக கன்றை இழுத்து கூலக் குவியலில் போட்டார். உடனேயே கன்றின் மூக்கிலும் கண்ணிலும் அப்பியிருந்த அக்கியை வழித்து எறிந்தார். அதன் காதில் ஊதி தெளிவாக்கினார். கன்று தொண்டையைக் கமறி, ம்ம்ம்மா… என்றது. ஒரு முழுப் பிரசவம். கலங்கி நின்ற கண்ணீர் திவலைகள் வழிந்தோட சிரிப்போ சிரிப்பாய் கன்றை வாரி தன் மடியில் போட்டுக்கொண்டாள் தடியப்பனின் வீட்டாள்.
“மனியங்குடியான் மாட்டக் காப்பாத்திட்டான். காளையங்கன்டு தான் போட்டுருக்கு. சொன்னாப்புல அவனுக்கே அத நேந்து விட்டுரும்மா நீயி…” சொல்லி நிறைய சந்தோசமாய் சிரித்தார். அவர் முகமெல்லாம் ரத்தமும் அக்கியும் தெறித்திருந்தது. தன் தலைக்கட்டை அவிழ்த்து முகம் துடைத்து, அதை மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார். தன் இடுப்பில் இருந்த குட்டி சூரிக் கத்தியை எடுத்து கன்றின் கிழங்குக் குளம்பை சமமாய் வகுந்து விட்டார்.
“ இன்னும் சத்த நேரத்துக்கெல்லாம் மாடு இளங்கொடி போட்டுரும் பாத்துக்க. மாட்டத் திங்க விட்டுறாம ஒழுங்கா சாக்குல முடிஞ்சு முக்கு ஆலமரத்துல கட்டிப்புடு. நல்லா ஒசக்க ஏத்திக் கட்டனும். இல்லாட்டி இந்த நாய்ப்பண்ணைக தின்னுபுடும். அப்புறம் கன்டுக்குக் கூட பால் வடியாது சொல்லிட்டேன்.” பிசுபிசுப்பாக ரத்தக் கறையோடு இருந்த கையில் துட்டைத் திணித்தார் தடியப்பன்.
“காசு கீசு குடுக்கனும்னு நினைப்பே வேணாம் பாத்துக்க. மாடெல்லாம் மனுஷ ஆளா, நான் பெத்த மக்களா நினைச்சுகிட்டு தான் இதுகல எல்லாம் செய்றேன். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சினை மாட்டை கருதுல மேயவிட்டதுனால தான் இம்புட்டு தொல்லை. மாட்டுக்கு பனிப்புல்லு அறுத்துப் போடு, அளவா வீட்டுக்கு கரந்துக்கிட்டு கன்டுக்கு வயிறு நிறைய குடிக்க விடு. தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அப்பப்ப நீச்சத்தண்ணியில கலந்துவிடனும் என்ன? விளங்குச்சுல்ல?. அப்பச் சரி நான் வாரேனப்பா.” சைக்கிள் ஸ்டாண்ட் நீக்கி, ரெண்டு கிந்து கிந்தி சீட்டில் ஏறிக்கொண்டார். கேரியரில் கட்டிக் கிடந்த பால் டவராக்களின் சப்தத்தோடு கரையேறி வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்.
கருப்பையாவின் வீட்டுக்கான பாதை சாலையிலிருந்து ரெண்டு வீடுகளின் வாசல் வழியாகத்தான் விரிந்து போகும். நல்ல மிடுக்கான வீடுகள். திடமான கான்கிரீட் வீடுகள். மச்செடுத்து கட்டப்பட்டவை. நிலம்புலம்,காசு,வண்டி என அடுக்கடுக்காய் கணக்கில் வரும் கனமான செல்வம் படைத்தவர்கள் அந்த வீட்டாட்கள். மாடும் கன்றும் அவர்கள் வீட்டு வழியே போவதை கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போல கொனட்டலான முகச் சுளிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மாடு கன்று சாணம் அவர்களது வீடுகளருகே சாணம் போடுவதையும் மூத்திரங்களிப்பதையும் தினசரி குறை கூறலில் ஒப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்தப் பாதை பொது. இடம் புறம்போக்கு. இந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு கருதறுப்பு எந்திரம் சாகவாசமாய் போகும்படியானதாக இருந்த பாங்கிலிருந்து குறுக்கப்பட்டு ஒற்றையடிப் பாதையளவாய் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மச்சு வீட்டுக்காரர்கள் இருவருக்கும் பேச்சற்று இருந்தாலும் இந்த பாதையழிப்புக்கு பேசிக்கொள்ளாமலே சமாதானமாய் சமபங்கிட்டு தங்கள் வெளிகளுக்குள் ஒளித்துக் கொண்டார்கள். இரண்டொருமுறை சத்தம் போட்ட கருப்பையாவுக்கு ஆறுதலான பதிலே கிடைத்தபாடில்லை. கோர்ட்டோ கேசோ அவர் அறியாதவர். பாவம், முதுகு உப்பு வெடிக்க காடு கரை அலைபவருக்கு போலிசென்றால் ஒரு பயம். கேஸ் என்றாலே ஒரு நடுக்கம். அவரும் என்ன செய்வார். நடையை சுருக்கிக் கொண்டார். மாடுகளை ஒற்றை வரிசையில் ஓட்டிச்செல்ல பழகிக் கொண்டார்.
மறு ஆண்டு புரட்டாசி, கனத்த மழையையும் காட்டுங்காற்றையும் விசிறியடித்துக் கொண்டிருந்தது. அம்மியில் மஞ்சள் தட்டும் சத்தத்திலேயே அதிரும் சுவர்கள், ஆகிருதி காலநிலைக்கு மட்டுப்பட்டுவிட்டது. விரிசல் இன்னும் அதிகம் வளர்ந்தது. வெயிலோ மழையோ தயவு தாட்சண்யமின்றி வீட்டுள்ளே சமயங்களில் குதித்தது. பத்து வருடங்களுக்கு முன்னே கப்பரை பிரித்து வேய்ந்தது. அதுவும் பரிந்து கொண்டு வரத் துவங்கியிருந்தது. காசில்லை. கடன் வாங்கவும் நாதியில்லை. அடகு வைக்கலாமென்றால் வீட்டில் குழுமைப் பானையில் விதை நெல்லைத் தவிர்த்து விற்றுப் பொருளாக்க ஏதுமில்லை. சத்யாவின் குட்டியூண்டு மூக்குத்தி செலவழிக்கக் கூடாத செல்வமாயிற்றே. அதை தீண்டவும் கூடாது. எப்படி மனம் ஒப்பும்.ரெண்டு தலைமுறை வெள்ளாமைக் காடான கார்ச்செய் விலைக்கு தள்ளப்பட்டது. நிலம் கரைந்து பணமாகி, பணம் பொருளாகி வீட்டுக்கு கொஞ்சம் திடம் சேர்த்தது.
காளியம்மாவுக்கு இளைப்பு நோய் வந்தது முதல் கருப்பையா சவலைப் பிள்ளையாய் என்ன செய்ய எனத் தெரியாமல் திணறிப்போக ஆரம்பித்தார். மாடு கன்டைக் கூட பார்த்துக் கொள்ளும் நிதானத்தை இழந்தார். மாட்டுக் கூடாரத்தில் கானை வர, மாடுகள் ஒன்றொன்றாக எண்ணில் கழியத் தொடங்கின. கண் முன்னே சாகும் பிரியங்களை காணச் சகியாமல், குறைந்த விலைக்கே அத்தனையையும் வண்டியேற்றினார். கங்கு நொறுங்கும் சப்தமாய் உள்ளே என்னமோ உடைவது போன்றிருந்தது அவருக்கு. எல்லாம் முடித்தாகிவிட்டபின், சவக்களை வந்து குடிகொண்ட தொழுவத்தை வெறித்து வெறித்துப் பார்த்தபடியே எவ்வளவு நேரம் நின்றிருப்பார் எனத் தெரியாது. மாடும் கன்றும் உலப்பிய தடங்களை பூவைத் தொடும் லயத்தோடு தொட்டும் தொடாமலும் வருடி வருடி வெக்கை நீர் உதிர, பிடிகயிற்றை கட்டிக் கொண்டு துடித்து அழுதார். அவருக்கு அப்போது ஆறுதல்கள் ஏதும் தேவைப்படவில்லை. முடிந்தமட்டும் அழுது தீர்க்கவே நினைத்துக்கொண்டார்.
முன்னர் போல ஆள் நடமாட்டம் அதிகமில்லாமலே ஆகிப்போனார் கருப்பையா. அப்படி வெளியே போனாலும், நேமத்து முக்குக் கடைக்கு ஒரு சாயா சாப்பிடப் போவதோடு சரி. யாருடனும் விவரணையான பேச்சேயில்லை. காளியம்மாவும் அந்த வட்டத்திற்குள் தள்ளப்பட்டாள். சாப்பாடு போட்டுவைத்துவிட்டு கூப்பிட்டால், குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவார். சிலசமயம் பிடி பருக்கைகளை பொறுக்கித் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். இராமுச்சூடும் கசாலையில் தான் உறக்கம்..மழை பெய்தாலும்,கொசுக் கடி பியத்தாலும், குளிர் அனத்தினாலும். ஊருக்குள் ஏவர் மாட்டுக்கு நோவு வந்தாலும் கருப்பையா இப்பொது வைத்தியத்திற்குப் போவதில்லை. நாட்செல்லச் செல்ல அவர்களும் அவரை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். ஆஸ்பத்திரி மருந்துகளுக்கும் மாத்திரைகளுக்கும் தொழுவத்துப் பிள்ளைகளைப் பழக்கினார்கள்.
“பித்துக்குளி ஆகிட்டான்டா இந்தாளு. ஆளு எம்புட்டு சூட்டிப்பான மனுஷன். இந்த ஆறு மாத்தையாவே அவரு கூறு சரியில்லை. ராத்திரிலாம் டவீர்னு… கத்தி ஒப்பு வைக்கிறாராம். பொண்டாட்டியைப் போட்டு தும்புக் கவுத்தாலே அடி வெளுக்குறாராம். என்னமோ… பாவம்… நல்ல ஆளு. மண்டை முத்தி இப்படி திரிய விட்டுருச்சு நேரமும் விதியும்.” ஊரே கருப்பையாவை பைத்தியமெனும் போர்வைக்குள் அவரறியாமலே நெட்டித் தள்ளியது. அவருக்கு அது குறித்த எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அது ஒரு பொருட்டுமில்லை. காளியம்மாவுக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டு போனது. அவளும் மனம் விட்டுப் போனாள். என்ன மிச்சம்?. பிள்ளை போச்சு.வீட்டாம்பள விட்டேத்தியா அலையறான். பொட்டு நிம்மதியில்லாத பொழப்பு என்ன பொழப்பு?.
நல்ல மழை நாளொன்றில் காளியம்மாவின் அஸ்தியும் அந்த வீட்டுச் சுவரோடு கரைந்து போனது. காளியம்மாவும் வீடும் ஒரு ராவில் தடமற்று போனார்கள். கொஞ்ச நஞ்ச நாளில் கருப்பையாவும் ஊரில் தங்கவில்லை. எங்கே போனார் என்றும், என்ன ஆனார் என்றும் யாரும் அறிந்திரவில்லை. வெறித்த பார்வையும் அழுக்கு உடுப்புமாய் சூராணம் ரோடுகளில் கருப்பையா அலைந்து திரிவதாக சிலர் சொல்லிக் கொண்டார்கள். பொய்யாகவோ புறமாகவோ ஊர் சொன்ன கோட்டை அவரே கடந்து போய்விட்டிருந்தார்.. கருப்பையாவும் இப்போது ஒரு பைத்தியக்காரன்.
” நல்ல செனை மாடா வாங்கனும். நாம பால் யாவாரம் பண்ணாதனால ஊரே நல்ல காப்பித்தண்ணி அத்துல்லா போயில்ல கிடக்கு”
அவர் இப்பதெல்லாம் யார் பேசினாலும் திருப்பிப் பேசும் உரையாடல் சுருக்கம்.
“காளையார்கோயிலு மாட்டுத் தாவணியில நல்ல காரிக் கிடேரி ஒன்னுக்கு அச்சாரம் போட்டு வச்சுருக்கேன். ஒரு ஆறேழு மாத்தைக்குள்ள கன்டு ஈண்டுப்புடும். பழைய மாறி பால் யாவாரம் பண்ணப் போறேன், மாப்ளே… இன்னும் நாப்பது நாள்ல ரூவாயும் தாரேன்னு சொல்லிப்புட்டென். ஒங்கிட்ட தான் கேக்கணும்டே கிடைந்தேன். ஒரு ஓர்ரூவா பணமாத் தந்தாய்னா, நல்ல சவுரியமா இருக்குனு பாத்தேன். என்ன மாப்ளே. ரோசனை பண்ணி சொல்லுங்க.”
சரியான அன்ன ஆகாரம் அற்று அலைந்தவர் மெலிந்து ஒரே இடத்தில் படுக்கையாகிப் போனார். ஊர் ஆட்கள் ஊர் மத்தியிலுள்ளப் பொதுத் தொழுவில் அவரைக் கிடத்தி, சின்ன அளவில் வைத்தியம் பார்த்தனர். எதுவும் பலித்தபாடில்லை. அரைகுறையாய் கரைந்து நின்ற அவர் வீட்டு ஒற்றைக் குட்டிச்சுவரும் அன்றிரவு மடீர்… என விழுந்து நொறுங்கிப் போனது. மறுநாள் கருப்பையா கீற்றுப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார். கால்மாட்டில் பக்காப்படி நிறைய நெல் அள்ளி வெற்றிலை குத்தியிருந்தார்கள். தலைமாட்டில் ஊதுபத்தி சுருள் சுருளாய் புகைந்து எரிந்துகொண்டிருந்தது. அமைதியாய் இருந்த கூட்டம் சட்டென சலசலத்தது.
“ஆரோ மாட்டு யாவாரியாம். கருப்பையாவைத் தேடி வந்துருக்காராம்.”
“என்னவாம் யா”
“அதொன்னும் இல்லப்பா. இந்தா நம்ம கருப்பையா ஒரு நாப்பது நா முன்ன, சந்தைக்கு வந்து மாடொன்னு வாங்கிக்கிறதாச் சொல்லி அச்சாரம் போட்டுட்டு போனாப்புல. அதான் நாளாகிப் போச்சே, சரி ஒரு எட்டு பாத்து என்ன ஏதுன்னு பாத்துப்புட்டு வரலாம்னு வந்தேன். பாத்தாக்கா…”
சொல்லிக்கொண்டே கருப்பையாவின் துணி சுற்றப்பட்ட மெலிந்த உடலைப் பார்த்தார். கருப்பையாவின் மடித்த கைகளுக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தும்புக் கயிற்றை அவரது கைகள் மேலும் இறுக்கமாய் பிடித்துக் கொள்வது போல் இருந்தது அவருக்கு. மேந்திசை போர்வைக்குள் விழுந்து புதைந்தது பொழுது. அந்த ஒரு நாள் மாலைக்குள் கருப்பையாவும் அவர் சந்ததியும் இருந்த தடமே இல்லாது மண் மூடப்பட்டது. புதைத்த இடத்தில் கருவேலங்குச்சி அடையாளத்துக்கு நடப்பட்டது. சத்யா உறங்கும் அதே இடுகாடு.
அவரது வீடிருந்த இடமும் அண்டை வீட்டு வேலிகளுக்குள் சுருட்டப்பட்டுவிடும். அவரது மாட்டுத் தொழுவம் மட்டும் நுடமாய் ஓடிந்த கட்டை கம்புகளோடு நின்றுகொண்டிருக்கும். காலப் போக்கில் கருவேலம் மண்டிப்போய் அரவமில்லாமல் ஆகிப்போகும். அன்றைய இரவின் சாமத்தில், கருப்பையா வீட்டுத் தொழுவத்திலிருந்து அடையாளமில்லாத ஒப்பாரிச் சத்தமும் பசிக்கு அலறும் கன்றின் கதறலும் அலையாய் எழுந்து ஊரை நிரப்பிக் கொண்டிருந்தன.
One comment