இங்கேயே இருந்திருக்கலாம்

பத்மகுமாரி 

“ச்சுஸ்ஸ்” என்ற சப்தம் அம்மா முன் அறையில் வரும்பொழுதே கேட்டிருக்கிறது. அம்மா தினமும் இறைவனின் முகத்தில் தான் விழிப்பாள். கேட்டால் அது பல வருட பழக்கம் என்பாள். எத்தனை வருடம் என்று அம்மாவும் சொன்னதில்லை, எனக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் என் பெயரை நான் விவரமாக சொல்ல தெரிந்து கொண்ட நாட்களிலிருந்து அம்மா இப்படி செய்வதாக தான் எனக்கும் ஞாபகம்.

அன்றும் அப்படிதான் செய்திருக்கிறாள். கட்டிலில் இருந்து எழுந்தவுடன் கண்களை சரியாக திறந்தும் திறவாமலும் சுவரில் தடவி அறையின் விளக்கை ஒரு விநாடி எரியவிட்டு, எதிர் சுவரில் மாட்டியிருந்த ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்திருக்கிறாள். அந்த படம் எங்கள் படுக்கையறை சுவற்றில் ஏழு ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மின்விசிறி முழு வேகத்தில் சுற்றும் பொழுதுகளில் லேசாக அங்குமிங்கும் அசையும்.  முதன்முறையாக அந்த படத்தை வாங்கி கொண்டு வந்து மாட்டியது நான்தான்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாதுலா’ அம்மா சந்தேகமாக கேட்டாள்.

‘அப்படிலாம் ஒன்னுமில்ல’ சொல்லிக் கொண்டே நான் அடுக்களைக்கு தண்ணீர் குடிக்க போய்விட்டேன்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாது ராதா அம்மா. சாமி குத்தம் ஆயிரும்’ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அம்மா கேட்க எதிர் வீட்டு அகிலா அத்தை சொன்னது இது.

ஆனால் அந்த படத்தை இடம் மாற்றக் கூடாது என்று நான் மனதில் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எனக்கு தெரியாது. காரணத்தோடு தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைதானே.

‘சாமி தூணுலயும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என்றால் பெட்ரூம் சுவற்றிலும் இருக்குந்தான? அப்புறம் தனியா படமா மாட்டுறதுனால என்ன குத்தம் வந்திரும்? ‘ அம்மா பிடிவாதமாக அந்த படத்தை கழற்ற சொல்லியிருந்தால் இந்த பதிலை சொல்லி அம்மாவிடம் வாதாடி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அகிலா அத்தை சொன்ன பதிலுக்கு ‘ம்ம்’ கொட்டிய அம்மா, வாசலில் இருந்து வீட்டிற்குள் வந்தபிறகு அந்த படத்தை இடம் மாற்றவுமில்லை, இடம் மாற்ற வேண்டும் என்று என்னிடம் சொல்லவும் இல்லை. அம்மா மனதில் என்ன நினைத்துக் கொண்டாள், ஏன் அதை இடம் மாற்றவில்லை என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அம்மா படத்தை இடம் மாற்ற சொல்லாமல் விட்டதே போதும் என்ற எண்ணத்தில் நானும் அதன்பிறகு அதைப்பற்றி மேலும் பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

படுக்கையில் இருந்து எழுந்து பூஜை அறை வரையிலும்,பாதி கண்ணை திறந்தும் திறவாமலும் போய் சாமி படங்களை பார்க்கும் அம்மா         ‘ராதா கிருஷ்ணர்’ படம் வந்த அடுத்த நாளிலிருந்து முதலில் அந்த படத்தை பார்த்துவிட்டு முழுக் கண்களை திறந்தபடி பூஜை அறைக்கு சென்று சாமி படங்களை பார்க்க ஆரம்பித்து இருந்தாள். கடந்த ஏழு வருடங்களாக இந்த முறை மாறியதே இல்லை.

**************

“ச்ஸ்வு” சப்தம் கேட்டு அம்மா வேகமாக பூஜை அறையில் வந்து பார்த்தபொழுது அந்த ‘மூஞ்சி எலி’ பூஜை அறையின் கீழ் வரிசையில் அன்னபூரணி சிலை முன் வைத்திருந்த அரிசியை கொரித்துக் கொண்டு இருந்திருக்கிறது. அம்மா பக்கத்தில் சென்று “ச்சூ…ச்சூ” என்று விரட்டியத்திற்கும் கூட கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், அப்படியே அரிசியை கொரித்த படி இருந்ததாம். அம்மா அதனோடு போராட பயந்து கொண்டு வாக்கிங் போயிருந்த அப்பா வந்தபிறகு அப்பாவிடம் சொல்லி அதை விரட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு முன்வாசல் தெளித்து கோலம் போட சென்றிருக்கிறாள்.

அப்பா திரும்புவதற்கு முன்பே எழுந்து வந்திருந்த என்னிடம் அம்மா இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ‘மூஞ்சி எலி’ அடுக்களையில் ஓடிக்கொண்டிருந்த சலனம் எங்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது. அது எப்பொழுது பூஜை அறையிலிருந்து அடுக்களைக்கு இடம் பெயர்ந்திருந்தது என்பது அந்த அன்னபூரணிக்கே வெளிச்சம்.

இருவரும் அடுக்களையில் சலனம் வரும் திசையில் அதனை தேட ஆரம்பித்திருந்தோம். ‘எப்படி இது உள்ள வந்ததுனே தெரில. எப்படி இத விரட்ட போறோமோ’ அம்மா அலுத்துக் கொண்டாள்.

‘போகாட்டா விடும்மா. அது பாட்டுக்கு சுத்திகிட்டு போகட்டும். நம்மளதான் ஒன்னும் செய்யலேலா’ இது என்னுடைய பதில்

‘ம்ம்….அது சரி…. அதுபோக்குல சுற்றி குட்டி போட்டு குடும்பம் பெருக்கி வீட்ட நாசம் பண்ணட்டும் சொல்றியா’ அம்மா என்னை முறைத்தபடி கேட்டாள்.

அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நான் அதை விரட்ட, அது அடுக்களை வலது முக்கில் குவித்துப் போட்டிருந்த தேங்காய் குவியலுக்குள் மறைந்துக் கொண்டது. அங்கிருந்து எப்படியோ கஷ்டப்பட்டு விரட்ட அடுக்களையின் மறு முக்கில் வைத்திருந்த காலி சிலிண்டர் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டது.

‘எம்மா, எங்க ஓடுதுனு பாத்துக்கோ’ என்றபடியே காலி சிலிண்டரை இடது கையால் ஒருபக்கமாக சுழற்றி தூக்கி பார்த்தபோது அது அந்த சுவர் முக்கில் இல்லை. ‘எங்க போச்சு பாத்தியாம்மா?’ நான் கேட்டதற்கு, அது அங்க இருந்து வெளிவரவில்லை என்று அம்மா சொன்னாள்.

‘அது எப்பிடி.. இங்கேயும் இல்ல…. மாயமாவா போகும். எங்கேயோ எஸ்கேப் ஆயிருச்சு பாரு… உன்ன கரெக்டா பாரு சொன்னம்ல’ அம்மாவை கடிந்து‌ கொண்டேன்.

அதன்பிறகு வாக்கிங்கில் இருந்து திரும்பி வந்த அப்பாவிடம் சொல்லி வீடு முழுவதும் தேடியும் அந்த ‘மூஞ்சி எலி’ அகப்படவில்லை.

‘அது நீங்க விரட்டினதுல பயந்து வெளிய ஓடிருக்கும்.நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க’ என்று முடித்துவிட்டு அப்பா அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அடுக்களையில் துர்நாற்றம் அடிக்க, நானும் அம்மாவும் சுற்றி தேட ஆரம்பித்தோம். அதற்கு விடையாக செத்துப்போன மூஞ்சி எலியை காலி சிலிண்டர் அடியிலிருந்து கண்டெடுத்தோம். அன்று சிலிண்டரை ஒரு பக்கமாக தூக்கி பார்த்து போது இல்லாத மூஞ்சி எலி  எப்படி பிணமாக அங்கு மறுபடி வந்தது என்று எங்களுக்கு விளங்கவில்லை.

அம்மாவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் மெளனமாக பார்த்துக் கொண்டோம். இந்த மூஞ்சி எலி இங்கேயே சுற்றி குட்டி போட்டு குடும்பம் கூட பெருக்கியிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அம்மா அதன் பிணத்தை மிகுந்த மரியாதையோடு அப்புறப்படுத்தினாள். இப்பொழுதெல்லாம் ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்ததோடு பூஜை அறைக்கு செல்லாமலேயே அம்மா வாளி எடுத்துக் கொண்டு வாசல் தெளிக்கச் சென்று விடுகிறாள்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.