விசிறி

லட்சுமிஹர் 

ஒவ்வொரு முறையும் அவள் திட்டிக்கிட்டு எழும்போதும் “முருகா” என்று தவறாமல் சொல்லிவிடுவாள். பதட்டமிருந்தாலும் போர்வையோடு அதை உதறிவிட்டு அப்பாவிடம் செல்வதுதான் வழக்கம்.  இரவானால்  முருகன் தன்னிடம் வந்து பேசுவதாக சொல்லுவாள். தினம் ஒரு கதை. கதைகள் எப்போது தொடங்கியது என்று மறந்திடும் அளவுக்கு முருகன் அவள் கனவுகளில் வந்து கொண்டிருக்கிறான்.

மரங்கள் நிறைந்த வனத்தின் ஊடாக நடந்து கொண்டே செல்கிறார்கள்.  கதையை முடிக்கும் வரை இடையில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது அவளின் நிபந்தனை. அதுவும் அப்பா எப்போதும் எதையோ கேட்டுக்கொண்டே இருப்பார். அதனால் கட்டளைக்கு பணிந்து அமைதி நிலவியது.

அவர்கள் அந்த வனத்தினை விட்டு வெளியேறும் பாதையை கண்டு பிடித்துவிட்டனர். உடன் வந்த முருகன் “இங்கிருந்து நீ உன் வீட்டுக்கு செல்லலாம்” என்றான். இதுவரை சிரித்துப் பேசி வந்தவளின் முகம் சுருங்கி விட்டதை  அறிந்த முருகன் அதற்கு பதில் சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது எதற்கு என்ற காரணங்கள் தெரியாது. முருகனை பற்றிக் கொண்ட பிஞ்சுக் கைகள் “எங்க வீட்டுக்கு வரியா” என்று கேட்டதற்கு தலையை வேகமாக ஆட்டி சிரித்துக் கொண்டான். “நாளைக்கு அவன கூட்டிட்டு வரேன்” என்று கதையை முடித்தவள் உடனே ஒரு கேள்வியையும் கேட்டாள். “உனக்கெல்லாம் முருகன் கனவுல வந்தது இல்லையா அப்பா” என்று சொல்லிக்கொண்டே தூக்கி கொள்ளுமாறும் கைகளை மேல் ஏற்றினாள்.

வாழ்நாளில் ஆறுமுகம் இதுவரை அப்படி கனவுகள் ஏதும்  கண்டதில்லை. அதுவும் அவர் மகளின் கனவுகளுக்கு எப்படி ஈடு கொடுக்க முடியும். கனவுகளில் முருகனுடன் பேசுவதாகச்  சொல்லும்போது “அப்பனுக்கு இதுவரை காது கொடுக்கலனாலும் மகளோட பேச்சப் பாரு” என்று விளையாட்டுத்தனமாக மனைவியிடம் சொல்லும் போது மகள் கோவித்துக் கொள்வதும் அழகு.அந்த முகத்தை பார்க்க எத்தனை வருடம் தவமிருந்தார்.  ஆறுமுகத்தின் ஐம்பது வயதில்தான் மகள் வள்ளியாய்  வந்து தோளை  அணைத்துக் கொண்டாள். அவளின் கனவுகள் பற்றிய பேச்சு எப்படி சலித்துவிடும்.

அலைகள் ஓயாத கடற்கரையில் அமைந்திருக்கும் கோவிலுக்கு காலையில் நடை திறந்ததும் ஆறுமுகம் கூடை நிறைய விசிறிகளை எடுத்துக்கொண்டு ஸ்பெஷல் தரிசனம் கவுன்ட்டர் அருகில் வியாபாரத்திற்காக நின்று விடுவது வழக்கம். “ஒன்னு பத்துரூபா ..ஒன்னு பத்து ரூபா” என்று கைகளில் அந்த விசிறியை வைத்து பெயர் தெரியாது லைனில் நிற்பவர்களுக்கு விசிறிக்கொண்டே இருப்பார். நேரம் ஆக ஆக அறுபது வயதை நெருங்கிய உடல் சோர்வைக் கொடுக்க நா வரண்டு போய் கைகளில் விசிறியை மட்டும் வைத்து லைனில்  நிற்பவர்களின் பார்வையில்  படும்படி நீட்டிக் கொண்டிருப்பார். அவரை போன்ற பலரை அங்கு காணலாம். பெரிய வருமானம் இல்லை என்றாலும் உடல் ஒத்துழைக்கும் வேலையாக அமைந்தது, அவ்வளவுதான். முதல் பூஜைக்கு வந்தால் இரவு நடை சாத்தும் வரை அந்த கவுன்ட்டர் தரிசனம் அருகிலேயே நின்று விற்றுக் கொண்டிருப்பார்.

கோவில் நடைபாதையில் தன் நண்பன் சாரதியினுடைய  சாமி படங்கள் விற்கக்கூடிய கடைக்கு கூட்டி போய் வள்ளியிடம் ஆறுமுகம் “உன் கனவுல வந்து பேசும்ல முருகன், இதுல எது கணக்கா இருக்கும்” என்று கேட்டவருக்கு பதில் சொல்வதற்காக  அங்கிருந்த படங்களை நின்று நிதானமாகப் பார்த்துக்கொண்டே சென்றவள் குழந்தை முருகனிடம் ரொம்ப நேரமாக நின்றிருந்தாள். ஆறுமுகம் “இது மாட்டமால” என்று கேட்க, காது கொடுத்து அதை கேட்காதவள் போல் அடுத்த போட்டோவுக்கு நகர்ந்தாள். சாரதி ஆறுமுகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். “உன் புள்ள எப்புடி கத சொல்லுதுடே, எங்க முருகன்ல சொல்லுது” என்று சொன்ன சாரதி தான் திருச்செந்தூர் வந்ததிலிருந்து ஆறுமுகத்திற்கு சொந்தம் போன்ற ஆறுதல்.

“ஒண்டிக் கட்டையாவே காலத்த ஓட்டிரலாம்னு நெனைக்காதீங்க அண்ணா” என்று ஆறுமுகத்தின் மனைவி பேச்சு வாக்குல பொண்டாட்டி வேனுங்குரத ஞாபகப்படுத்துரேன்ற பேருல சாரதிக்கு அவங்க அம்மா அப்பா இல்லாத நினைப்ப இழுத்து விட்டுரும். சாரதி கடை திறக்காத நேரங்களை கடற்கரையில் கழிப்பது தான் வழக்கம். “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்ற ஆறுமுகத்தின் கேள்விக்கு  சாரதி எல்லாத்துக்கும் பதிலென சிரித்துக் கொள்வார். அதற்கு பின் இருக்கும் கதை சாரதிக்கு மட்டும் தெரிந்ததே. அதை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை .ஆறுமுகத்தின் அந்த கேள்வியை  உள்வாங்கிக் கொண்டது போல கடல் வீச்சு. “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்பதை சாரதியின் காதிற்குள் கொண்டுவந்து சேர்த்தது மீண்டும் மீண்டும்.   .

மதிய சாப்பாட்டிற்கு எப்போதும் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து விடுவார். “முருகன் பாத்தா தெரியனும்ல அதுனால தான் கோவில் பக்கத்துலையே இருக்கோம்” என்ற அம்மாவின் பேச்சிற்கு ஊம் கொட்டும் வாய் அன்று நேரத்திற்கு வராத அப்பாவை பற்றி கேட்க “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு” என்று மட்டும் சொல்லி வைத்தவளுக்கு கோவிலில் ஆறுமுகம் மயக்கம் போட்டு விட்டார் என்று கூட்டி வந்தனர்.

“ஒன்னும் இல்லடே, வெயிலு” என்று சமாளித்தாலும் அன்றிலிருந்து ஆறுமுகத்திற்கு உடல் ரீதியாக தன் உடம்பில் இருக்கும் குறை என்ன என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை மயக்கம் போட்டு இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தார். வேண்டி உருகி தன் குறை நீக்கச் சொல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுள் ஆறுமுகமும் அந்த முருகனின் காதிற்கு தன் கஷ்டத்தை சொல்லாமல் இல்லை. எத்தனை முகங்கள் ஆறுமுகத்தை தினமும் கடந்து போகிறது எத்தனை வேண்டுதல்கள். எத்தனை நம்பிக்கைகள். எத்தனை எத்தனை ..எத்தனை.. என்று முருகன் நிரம்பிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் முருகனிடம் முறையிடுவதை நிறுத்திக் கொண்டார். “என் கவலைய தீக்கத்தான் முருகன் இத்தன பேர என்னத் தாண்டி சாமி பாக்க வைக்குறான்” என்று நினைத்துக் கொள்வார்.

திருச்செந்தூருல செத்தாலும் புண்ணியம் தாண்டே நீ ஏன் ஒலட்டிட்டு இருக்க என்ற சாரதியின் சிரிப்புக்கு “வாழ்க்க சத்துக்கு கொடுக்கலேனாலும் பரவால சோத்துக்கு கொடுக்கனுல” என்பார் ஆறுமுகம். வீட்டிற்கு தெரியாமல் சாரதியுடன் ஒருமுறை  மருத்துவமனை சென்று பார்த்து வந்தார். “ஒன்னும் இல்ல சரியாகிடும் சத்தா சாப்பிட்டு கவலை இல்லாம இருங்க” என்று டாக்டர் சொன்னதாக சாரதி வள்ளியிடம் சொன்னதற்கு அன்று அவள் கண்ட கனவை தன் பங்கிற்கு சாரதிக்கு சொல்லத் தொடங்கினாள்.

“ரெண்டு பேரு கடலுக்குள்ள தெரியாம மாட்டிக்கிட்டாங்க, அல பெருசு பெருசா அடிக்க யாராலயும் கடலுக்குள்ள போய் காப்பாத்த முடில, நேரம் போகப் போக அவங்களோட சத்தமும் கொறஞ்சு போய் தண்ணிக்குள்ள போய்ட்டாங்க. அவங்கள காப்பாத்த முடியாம கடலையே பாத்துட்டு  கரையில நின்னுட்டு இருந்த அவங்க பையன தூக்கிக்கிட்டு வந்து இனிமேல் நான் வளக்க போறேன்னு முருகன் சொன்னான்” என்ற வள்ளி சாரதியின் கை பிடித்து  “அந்த பையன நான் எங்கையோ பாத்துருக்கேன் சாரதி மாமா….”  என்றாள். சின்னப் புள்ள எப்படி வாயடிக்குது பாரு நேத்து டிவில போட்ட செய்திய அப்படியே சொல்றா என்ன முருகன் கனவு காணுதோன்னு அம்மா கிண்டலுக்கு சிறு வயதில் தாய் தந்தையை கடலுக்கு பலி கொடுத்து ஏதும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு  நின்றிருந்த அதே கண்களுடன்.   வள்ளியின் இறுக்கப் பிடியிலிருந்த சாரதியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்ககையில் விசிறியுடன் நின்றிருந்த ஆறுமுகத்திற்கு மனதில் உடல் ரீதியான பயம் தொத்திக்கொண்டு “செத்துட்டா.. நம்ம குடும்பம் அடுத்து என்னா பண்ணும்,  நம்ம அவங்களுக்கு என்னத்த சேமுச்சு வச்சுருக்கோம், பொண்டாட்டி வள்ளிய பாத்துப்பா இருந்தாலும்.. இந்த விசிறிய வித்து இன்னும் எத்தனைய சம்பாரிக்க முடியும், நின்னு சம்பாதிக்கிற அளவுக்கு தெம்பு இருந்துருந்தா நான் ஏன் இத வித்துட்டு இருக்க போறேன், சொந்தமா ஒன்னும் இல்லையே” என்று அவருக்குள் பல கேள்விகள் எழும்பி அரட்டிக் கொண்டேயிருந்தது. ஆறுமுகம் கையில் வைத்திருந்த விசிறியை இன்னும் விற்காமல் இருந்த விசிறிகளுடன் கூடைக்குள் போட்டுவிட்டு நடுங்கும் கால்களுடன் கல்திட்டில் அமர்ந்தார். இப்படி ஒரு போதும் இதற்கு முன் ஆறுமுகம் நினைத்தது இல்லை. உடல் அவர் பேச்சை கேட்க நிறுத்தியது முதல்தான் இந்த பிரச்னை ஆரம்பித்தது.

“ஐயா ..விசிறி கொடுங்க” உட்கார்ந்திருந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை இளைஞனின் வேகத்திற்கு ஈடாக கூடைக்குள் இருந்த விசிறியை எடுத்துக் கொடுத்து கையில் காசை வாங்கிக் கொண்டார். இன்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே வள்ளி கேட்ட அந்த மூக்குத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பின் உந்துதல் இதுவரை உலட்டிய அனைத்தையும் எட்டி உதைத்தது.

“ஒன்னு பத்து ரூபா.. ஒன்னு பத்துரூபா..” என்று சத்தமாக விற்கத் தொடங்கியதை சாரதி மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

எப்பொழுதும் விற்க வேண்டிய, விற்று முடித்,த கணக்கு வழக்குகள் பெரிதும் வைத்துக் கொள்வதில்லை ஆறுமுகம். இன்று இன்னும் எத்தனை இருக்கிறது, எத்தனை விற்றிருக்கிறது, கையில் எவ்வளவு இருக்கிறது,  என்ற நினைப்பும் புதிதாக சேர்ந்திருந்தது. அது என்ன ஏன் பிள்ளைக்கு நான் வாங்கிக் கொடுக்காத மூக்குத்தி என்று இன்னும் சத்தமாக விசிறியை விற்கத் தொடங்கினார்.

கையில் வைத்திருந்த கூடைக்குள்ளிருந்து விசிறிகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கி வெளிகொண்டு வந்த  மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு இல்லை. மீண்டும் மண்டைக்குள் ஓடிய விசயங்கள் குரல்வளையினை நெருக்கி  வார்த்தைகளை கொன்று கொண்டிருந்தது. கண்கள் மயக்கம் கொள்ளும் அறிகுறியாக உடல் வேர்க்கத் தொடங்கியிருந்ததை  அறிந்து மீண்டும் சாய்வுக்கு தோதான கல்தூனை துணைக்கு  அழைக்க கோவிலை அழகுற செய்யப்  பொருத்தப்பட்டிருந்த இரவுக்கான விளக்குகள் தலையில் இறங்குவது போல இருந்தது. முருகனைப் பார்க்க குறையாதக் கூட்டம் அனாதையாக ஆறுமுகத்தை ஒரு மூலைக்கு தள்ளியிருந்தது.  விற்காமல் மீதியிருந்தவைகள் கவலைகளையும் இன்னும் இன்னும் என்று ஓட வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் கையில் எவ்வளவு வச்சுருக்க அந்த பணம் பத்துமா மூக்குத்திக்கு என்று எண்ணிப் பார்க்கச் சொல்ல பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கும் போதே மயக்கம் கண்களை சொருகியது.

உடல் முழுவதும் பரவத் தொடங்கிய வலி ஏனோ அவருக்கு  இன்று நாம் கண்டிப்பாக செத்து விடுவோம் போல தோன்றியது. எப்படியோ மிச்சமிருந்த விசிறிகளை விற்று வள்ளி கேட்டதை வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தாலும் நாளைக்கு நாம் இல்லாதபோது வேண்டியதை எதிர்பார்த்து அப்பா இருந்துருந்தா வாங்கி தந்துருப்பாருன்னு ஏமாந்து போகுங்கிற நெனப்பும் எந்திரிக்க விடாமா செய்ய கண்கள் சொருகியது. கண்கள் இருளுக்குள் போக போக அதை தடுத்திர முடியாமல் பிடிகூண்டினை ஒத்திருந்தவைகளை என்னவென்று தெரியாது அதனுள் கேட்பார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருந்தவரை நோக்கி வந்த காற்றை புயல் என்று தெரியாது அனுபவித்தவருக்கு அது எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும் அல்லது அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்து அதன் விசையை நோக்கி அவரால் எவ்வளவு வேகத்தில் செல்ல  முடியுமோ அதை அடைந்திட விரைந்தவருக்கு அப்புயல் பெரிய விசிறியின்  வெளியாய்  உருமாறிக்கொண்டிருப்பதை கவனிக்கத்  தொடங்கி திகைக்க வைக்கும்   அப்புயலின் விசையினை  கொண்டிருக்கும்   பிடியின் நுனி தோகையென நீண்டு ஆறுமுகத்திற்காக  விசிறுவது யாராக இருக்கும் என்று அறிந்திட விளைந்தவரிடமிருந்து விலகிக்கொண்டே இருக்க  ஆடும் மயிலேறி இதுவரை விளையாடிய அம்முகத்தை அறிந்தவராய் கண்கள் கூச்செறிய  “முருகா” என்று படுக்கையிலிருந்து அரண்டு எழ அருகில் ஏதும் அறியாது படுத்திருந்த மகள் முருகனுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள் .அவளை மீறி ஆறுமுகத்திற்கு அவள் அணிந்திருந்த மூக்குத்தி கண்களை கவர்ந்தது.

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.