கட்டு

ஸிந்துஜா

படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து கதவைச் சார்த்தி விட்டு மாடிப்படிகளில் இறங்கத் திரும்பிய மாதங்கி ஒரு கணம் உறைந்து போனாள். படிக்கட்டு கீழே முடியும் இடத்திலிருந்து சற்று முன் தள்ளி அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு கோபி நின்றிருந்தான். அவன் அந்த விடிகாலையில் அங்கு நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. எதற்காக இங்கு வந்து நிற்கிறான்? அண்ணனைத் தேடி வந்தானா? அவ்வளவு விடிகாலையில் அதுவும் அண்ணன் இருக்கும் படுக்கை அறையில் சந்திக்கும் வண்ணம் அவசரம் என்ன? அவன் காதில் சற்று முன்னால் எழுந்த ஒலிகள் விழுந்திருக்குமோ? அவன் நின்ற இடத்துக்கும் மாடியில் இருக்கும் படுக்கை அறைக்கும் அதிக தூரமில்லை. இப்போது கூட ஆறு மணி அடிக்கும் கடிகார ஒலி அங்கிருந்து கேட்கிறதே? மாதங்கிக்குத் தான் குறுகிப் போய் நிற்பதாகத் தோன்றும் உணர்விலிருந்து தப்பிக்க முடியவில்லை.

கீழே இறங்கி அவனை நெருங்கியபோது அவனுக்கு அவளது அருகாமை தெரிந்திருக்கும். ஆனாலும் திரும்பாது கோபி கல்லைப் போல நின்றான். இது அவள் மனதில் முளைத்த சந்தேக விதை ஆல மரமாக விரிந்து எழுவதை உறுதிப்படுத்தியது.

“கோபி, விடிகாலேல இங்க நின்னு என்ன செஞ்சுகிட்டு இருக்கே?” என்று அவள் கேட்டாள்.

திரும்பிப் பார்த்த அவனைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். எப்போதும் புன்னகையில் மலர்ந்து கிடக்கும் அந்த முகம் இப்போது ஏதோ கைபட்டவுடன் தலை குனிந்து விழும் தொட்டாற்சுருங்கி இலை போல சுண்டிக் கிடந்தது. என்ன ஆயிற்று அவனுக்கு?

“ஏன் என்னமோ போல இருக்கே? ஒடம்பு சரியில்லியா?”

“இல்லியே. ஐம் ஆல்ரைட்” என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் சென்றான். அங்கிருந்து திரும்பிப் பார்த்து “ஒரு வாக்கிங் போயிட்டு வந்திர்ரேன்” என்று வெளியே நடந்தான்.

மாதங்கி இருந்த இடத்தை விட்டு நகராமல் நின்றாள். அவளைப் பார்த்ததும் சிரித்தபடியே “குட் மார்னிங் அண்ணி” என்றும் “காப்பி தரீங்களா?” என்றும் “இன்னிக்கி என்ன டிபன்?” என்றும் அவனிடம் இருந்து வரும் வார்த்தைகள் ஏன் இன்று காணாமல் போய் விட்டன? அவள் நினைத்தது சரிதானா?

அவளுக்கு அவளது கணவன் மேல் கோபம் பீறிட்டது. எல்லாம் அவனால் வந்த வினை. நேற்றிரவு மூன்று முறை ஆன பின்பும் விடிகாலையில் அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளினான் ராம்பாபு.

“ஐய, என்ன இது? விடுங்க. வெள்ளிக்கிழம. சீக்கிரம் எழுந்து எண்ணெ தேச்சுக் குளிக்கணும்” என்று அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள்.

“யார் உன்னய எண்ணெ தேச்சுக் குளிக்க வேணாம்னு சொல்றாங்க? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிரித்தபடி அவளைத் தன் மேல் இழுத்து விட்டுக் கொண்டான். “இஸ்ரேல்ல எல்லாம் காலேல நாலு அஞ்சு மணிக்குத்தான் அப்பிடி ஒரு லவ் வருமாம்!’

“அப்ப இந்த ஊர்ல யாரு உங்களக் கலியாணம் பண்ணிக்கச் சொன்னாங்க?”என்று கேட்டாள் வெடுக்கென்று. குரலில் அவளது விருப்பமின்மை சிறிய சாயலுடன் வெளிப்பட்டு விட்டதாக நினைத்தாள். ஆனால் அவன் கண்டு கொள்ளாதவன் போல இன்னும் இறுக்கமாக அவளை அணைத்தான்.

மாதங்கிக்கு எரிச்சல் மண்டியது. வெள்ளிக்கிழமை, எண்ணெய் தேய்த்துக் குளியல் எல்லாம் சாக்குதான். அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க அவளால் முடியவில்லை. என்னமோ ஒரு மாதமாக அவளைக் காணாதது போலவும், அப்போதுதான் கண்டது போலவும்… அப்படி ஒரு வெறி. தினமும் இப்படியே நடக்கிறது.

அவள் தன் விருப்பமின்மையைச் செயலால் காண்பிக்க விரும்புபவளைப் போல பலவந்தமாக அவனிடமிருந்து விடுபட்டாள். படுக்கையிலிருந்து எழுந்துதன் உடையைச் சரி செய்து கொண்டாள்.

“நான் சொல்லிகிட்டே இருக்கேன். உனக்கு அவ்வளவு ராங்கியா?” என்று எழுந்து அவள் மீது பாய்ந்தான். சேலை மூடாதிருந்த அவளது இடுப்பில் வேகமாக அவனது கை விழுந்தது. சரியான அடி.

அவள் வலி பொறுக்க மாட்டாமல் “ஐயோ அம்மா !” என்று கத்தி விட்டாள்.

ராம்பாபு அவளைப் பார்க்க விரும்பாதவன் போலப் படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவள் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு அறையைவிட்டு வெளிவந்த போதுதான் கோபி நின்றிருந்ததைக் காண வேண்டியதாயிற்று. அவன் எதற்காக மாடிப்படி அருகில் வந்தான்? யதேச்சையாகவா? இல்லை வேறு காரணம் இருந்ததா? ஆனால் அதைப் பற்றிய விசாரம் தேவையற்றது. வந்தவன் அறிந்து கொண்டிருந்தால் அதுதான் அவளைக் கொல்லும் விஷயமாக இருக்கும். அறிந்து விட்ட முகத்தைத்தான் அவள் பார்த்தது போல அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனும் பழைய மாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாது என்பது போலத்தானே இப்போது வெளியே சென்றான்?

மாதங்கி மனதில் ஏற்பட்ட வலியையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு தின அலுவல்களில் ஈடுபட முயன்றாள்.

கோபி பார்க்கில் உட்கார்ந்திருந்தான். மனது வெதும்பிக் கிடந்தது. சுற்றிலும் காற்றுடன் சரஸமாடிக் கொண்டிருந்த மரப்பச்சை இலைகளும் செடிகளில் விரிந்திருந்த வண்ணப்பூக்களும் அவனை ஈர்க்கவில்லை. இன்று அதிகாலையில் அவன் எதற்குக் கிணற்றுப் பக்கம் போனான்? போகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஒரு வாரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்த சிறிய தோட்டத்தில் போட்டிருந்த ரோஜாப் பதியன் எப்படி இருக்கும் என்று
நினைப்பு வந்து கிணற்றுப் பக்கம் போனான். அதைத் தாண்டித்தான் தோட்டத்துக்குப் போக வேண்டும். செடியில் பச்சை இலைகள் தலை காட்ட ஆரம்பித்திருந்தன. அவன் அருகே வைத்திருந்த உர மூட்டையில் இருந்து ஒரு பிடி உரத்தை அள்ளி வட்டமாகத் தூவினான். பிறகு கிணறு அருகே இருந்த வாளியிலிருந்து நீரை மொண்டு செடியைச் சுற்றி விட்டான். திரும்ப செம்பை வாளியில் போட்டுவிட்டுத் தனது அறைக்குக் கிளம்பும் சமயம்தான் ‘பளார்’ என்ற சத்தமும் “ஐயோ அம்மா!” என்ற அண்ணியின் குரலும் கேட்டன. அவன் பதறிப் போய் மாடிப்படியை நோக்கிப் பாய்ந்தான். இரண்டு படிகள் ஏறியதும் சட்டென்று நின்று விட்டான். இப்போது தீனமான சத்தம் எதுவும் மாடியிலிருந்து வரவில்லை. அவன் தயங்கியபடி படிகளில் இருந்து கீழே இறங்கினான். அண்ணிக்கு என்ன ஆயிற்று என்று மனது படபடத்தது.

அவன் சென்னையிலிருந்து ஆபீஸ் டிரெய்னிங், ஒரு மாதம் தங்க வேண்டும் என்று பெங்களூருக்கு வந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒன்று விட்ட அண்ணனான ராம்பாபு அவனைத் தன்னுடன் வந்து தங்கச் சொன்னான். ‘இங்க வீடு வசதியா இருக்குறப்போ எதுக்கு வெளீல தங்கிகிட்டு ஓட்டல்ல சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துகிட்டு’ என்று சத்தம் போட்டான். மாதங்கியும் கோபிக்கு
தூரத்து உறவுதான். கணவனும் மனைவியுமாக வற்புறுத்தியதால் அவன் வந்தான். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று முன்பு வரை.

மாதங்கி கீழே விழுந்தோ, கட்டில் அல்லது நாற்காலியில் இடித்துக் கொண்டோ அம்மாதிரி கத்தவில்லை என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவள் எழுப்பிய சத்தத்திற்கு முன்பு காதில் விழுந்த ‘பளாரெ’ன்ற சத்தம் ராம்பாபு அவள் மீது கை வைத்தான் என்று அவனுக்குத் தெரிவித்து விட்டது. புருஷன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது அதிகாலையில் கூட நிகழலாம். ஆனால் ஒரு பெண்ணை, அவள் மனைவியாய் இருந்தாலும் கூட அடிப்பது என்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ராம்பாபுவிடம் ஒருவித கெட்ட குணமும் கிடையாது என்று எல்லா உறவினர்களும் வாய்க்கு வாய்
சொல்லுவார்கள். இப்போதுதான் முன்கோபம் உண்டென்று தெரிகிறது. முன்கோபம் இருந்தாலும் கூட மனைவியை அடிப்பது என்பது…

கோபி தலையை உலுக்கிக் கொண்டான். அவ்வளவு கோபம் வருமளவுக்கு அண்ணி என்ன செய்தாள்? அவர்கள் இருவருக்குள் அவள்தான் கெட்டிக்காரத்தனம், பொறுப்பு, இனிமை என்று சற்று ஓங்கி நிற்பவள். ஆனால் ராம்பாபு இதற்காக நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவனே தவிர மற்ற கணவன்மார்களைப் போல் அசூயையில் சுருங்குபவனல்ல என்று கோபி அறிந்திருந்தான்.

சற்று முன்பே அண்ணி அவனைப் பார்த்த போது அவளிடம் அவன் கேட்டிருக்கலாம் – ஏதேனும் அடிகிடி பட்டுவிட்டதா அவளுக்கு, ஏன் அவள் அலறினாள் என்றெல்லாம். ஆனால் அண்ணியின் முகத்தைப் பார்த்த கணத்தில் வாய்க்கு வருமுன்பே வார்த்தைகள் தொண்டைக்கு வந்து அங்கேயே அடைத்துக் கொண்டு நின்று விட்டன. வழக்கமாக அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் மலரும் புன்னகைக்கு என்ன நேர்ந்து விட்டது? அவள் முகத்தில் கலவரத்தின் நிழல் படிந்திருந்தது போலத் தோன்றியது அவனது பிரமையா? அவள் குரலும் கூடச் சரியாக இல்லை.

கோபி வீட்டுக்குள் வருவதைப் பார்த்து மாதங்கி கடிகாரத்தை நோக்கினாள். மணி பத்து.

“ஏன் இன்னிக்கி டிரெய்னிங் க்ளாஸ் போகலியா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் குரல் இயல்பாக இருந்தது.

“இல்ல. இன்னிக்கி மத்தியானம்தான் போகணும்” என்றான் அவன்.

“சரி, டிபன் சாப்பிட வா. டெய்லி எட்டரை மணிக்கு சாப்பிட்டுருவே. அப்போலேந்து எங்க போயிட்டேன்னு கவலையா இருந்திச்சு” என்றாள் மாதங்கி.

“இல்ல. நான் டிபன் சாப்பிட்டு விட்டேன்” என்றான் அவன்.

“என்னது? இது என்ன புதுசா இருக்கு!” என்றாள் மாதங்கி.

அவன் அவள் கண்களை நோக்காமல் தலையைக் கீழே கவிழ்த்தவாறு “இல்ல. வழில ஒரு பிரெண்டைப் பார்த்தேன். ரெண்டு பேரும் போய் ஓட்டல்ல சாப்பிட்டோம். அதான் இவ்வளவு நேரம் ஆயிருச்சு வீட்டுக்கு வரதுக்கு” என்றான்.

“அட, கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேனே!” என்றாள் மாதங்கி. அவள் சமையல் அறையிலிருந்து எடுத்து வந்த இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டு மேஜை மீது வைத்தாள்.

அவள் குரலின் உஷ்ணம் கேட்டு அவன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

“பொய் சொல்றதுக்கு எல்லாம் தனி திறமை வேணும் சார்” என்றாள். தட்டில்சட்டினியையும் சாம்பாரையும் போட்டாள்

அவன் பேசாமல் சாப்பிடத் துவங்கினான்.

“காலேல என்ன நடந்திச்சின்னு உனக்குத் தெரியும்?” என்று மாதங்கி கேட்டாள்.

அவன் கிணற்றுப் பக்கம் வந்த காரணத்தையும், மாடியிலிருந்து கேட்ட ஒலிகளைப் பற்றியும் அவளிடம் சொன்னான். சில சமயங்களில் அவள் முகம் சிறுத்து மீண்டும் பழைய நிலைக்குச் சென்றது.

“அதுக்கு எதுக்கு வீட்டுல சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்கிறே?” என்று அவள் கேட்டாள்.

“அண்ணன் உங்களை அடிச்சாருல்ல?” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

மாதங்கி அவனை உற்றுப் பார்த்தாள்.

“நான் இல்லேன்னு உன்கிட்ட பொய் சொல்லப் பிரியப்படல” என்றாள்.

“நீங்க வலி பொறுக்க முடியாம அப்பிடி கத்தற அளவுக்கு என்ன தப்பு பண்ணீங்கன்னு அவரு அடிச்சாரு?” என்று கோபத்துடன் கேட்டான். “பொம்பளைப் பிள்ளைக மேல கை வைக்கிறவன்லாம் ஆம்பிளைன்னு நான் எப்பவுமே நினச்சதில்லே.”

அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவனுக்கு ராம்பாபு மீது மிகுந்த பிரியம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்போது யாரோ மூன்றாம் மனிதன் மீது காறி உமிழுவது போல அவன் பேசுவது உண்மையில் ராம்பாபு மேலேதான்.

“நீ இப்பிடியெல்லாம் உங்க அண்ணன் கிட்ட பேச முடியாது” என்றாள் மாதங்கி.

“நீங்க என்ன காரணம்னு சொன்னா நான் அண்ணன் கிட்ட எப்படிப் பேசணும்னு முடிவு பண்ணிக்குவேன்” என்றான் கோபி.

அவள் திகைத்தாள். எதுவும் பேசாது நின்றாள்.

“சரி விடுங்க. அது எங்க குடும்பப் பிரச்சினை, நீ தலையிடாதேன்னா நான் சொல்ல என்ன இருக்கு? நான் இந்த மாதிரி கோபப்படறது கூட சரியில்ல. கூப்பிட்டு உக்கார வச்சு சோறு போட்டு காப்பாத்துறீங்க. ஐ ஷுட் நோ மை லிமிட்ஸ்” என்றான்.

“என்ன சொல்றே? உன்னைய கீழ கிடக்கிறவன் மாதிரி நான் பாக்கிறேன்னா?” என்று கேட்டாள்.

அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

“அண்ணி, இப்பிடியெல்லாம் என்னைப் போட்டுக் கொல்லாதீங்க” என்றான் நடுங்கும் குரலில்.

“நான் காரணத்தைச் சொன்னா நீ இன்னும் வருத்தப்படுவியேன்னுதான்” என்றாள் மாதங்கி வருத்தம் தொனிக்கும் குரலில்.

அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசாமல் இருந்தார்கள். சுவரில் இருந்து பல்லி கொட்டும் சத்தம் கேட்டது. சாதாரணமாக இருந்தால் சத்தம் வரும் திசை பார்த்து நல்ல சகுனமா அல்லது கெட்டதா என்று அவனுடைய அம்மா சொல்லுவாள். இப்போது கெட்ட திசையில் இருந்து கொண்டுதான் சத்தம் வருகிறது என்று கோபி நினைத்தான்.

எழுந்து தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு போய்க் குழாயில் கழுவி உள்ளே வைத்து விட்டு வந்தான். டைனிங் டேபிளைச் சுற்றிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மாதங்கி உட்கார்ந்திருந்தாள். அவள் முகமும் கவலையில் தோய்ந்து களை இழந்திருந்தது.

அவன் மாதங்கிக்கு எதிரே வந்து உட்கார்ந்தான். அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்று நினைத்தான். ஒரு வேளை அவளே ஒன்றும் சொல்லாமல் சற்றுக் கழித்து எழுந்து போகக் கூடும். அப்படிப் போனால் இதற்கு ஒரு முடிவு கட்டியாயிற்று என்று அவனும் நிம்மதியாய் இருக்கலாம். அவளும்.

“இது ஒரு மாசமா நடந்துகிட்டு இருக்கு. யாருட்டயும் போயி சொல்லற விஷயமா இல்லியே? அப்பா அம்மா அக்கான்னு போயி அழுதுட்டு நிக்கற காரியமா என்ன? வெட்கக்கேடுன்னு உள்ளுக்குள்ள புதைச்சு வச்சு தனியா சாகற விஷமால்ல இருக்கு? இல்லே அப்பிடியே யாரு கிட்டயானும் போயி கால்ல விழுந்து என்னயக் காப்பாத்துங்கன்னு சொல்லிட முடியுமா?” என்று கேட்டாள் மாதங்கி.

அவை தன்னிடமிருந்து பதில்களை எதிர்பார்த்து இறைக்கப்பட்டவை அல்ல என்று கோபி நினைத்தான். அவளுடைய ஆற்றாமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கூச்சத்தில் வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆனால் குரலில்தான் என்ன ஒரு சோகம்? அவளது வார்த்தைகளின் மூலம் கிடைக்கும் சித்திரம், ஜன்னலின் மீது படர்ந்திருக்கும் புழுதியின் மேல் மழை தூறி விட்டுப் போன பின் காணக் கிடைக்கும் கலைந்த கோடுகளால் ஆனது போல. இருக்கிறது. சொல்லியதில் புரிந்தது கொஞ்சமாகவும், புரியாதாது அதிகமாகவும் என்பது போல அவன் உணர்ந்தான்.

அவள் தொடர்ந்தாள்.

“இது திடீர்னு வந்த கோளாறுதான். எதையாவது படிச்சிட்டு வந்து கெடுத்துக்கிட்ட மனசா? எவனாவது சினேகம்னு உருப்படாதது வந்து உளறிக் கொடுத்த முட்டாள்தனமா? கச்சடாவா சினிமான்னு எதாவது அசிங்கத்தைப் பாத்து புழு பூச்சியா ஆயிடணும்னு வேண்டுதலா? ஒண்ணும் புரியலையே. ராத்திரி பகல்னு வித்தியாசம் கிடையாதா? நீ ஊர்லேந்து இங்க வந்தது நல்லதா ஆச்சுன்னு மனசு ஓரத்துல துளி சந்தோஷம் இருந்திச்சுன். ஆனா போன ஞாயத்திக்கிழம நீ உன் பிரெண்டோட மாட்டினி ஷோ போறேன்னு சொன்னதும் உங்க அண்ணனுக்கு வந்த கிளுகிளுப்ப நீ பாத்தேல்ல?”

கோபி அந்தத் தினத்தை நினைவு கூற முயன்றான். ஆமாம். அண்ணன் அவனைப் போயிட்டு வா என்று சொல்லி செலவுக்குப் பணம் வேணுமான்னுகேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணி சொல்வது போல குரலில் உற்சாகம்எகிறியதாக இப்போது நினைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. அடக்கண்ணராவி !

“உன்கிட்டயும் இதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. ஆனா நீ என்கிட்டே கேட்ட மாதிரி உங்க அண்ணன் கிட்ட கேக்கப் போயிட்டேன்னா? மொதல்ல அவருக்கு கோபம் மண்டிக்கிட்டு வரும். நீ யார்ரா இதெல்லாம் பேசன்னு உனக்கு வாசலைக் காமிச்சா?”

“காமிச்சா ஒடனே போயிட வேண்டியதுதான்” என்றான் கோபி.

“ஆனா அதோட எல்லாம் நின்னு போயிடுமா? ‘நீதாண்டி அவன் கிட்ட போயி அழுதிருக்கணும்’னு என் மேலே பாஞ்சா? என் வார்த்தைக்கு அவர் வார்த்தைதான் கேள்வியும் பதிலும் ஆனா உண்மை என்னங்கறது நம்பிக்கை வச்சு செய்யற காரியம் ஆச்சே. உன்கிட்ட தன்னோட மரியாதை கெட்டுப் போச்சுங்கிற கோபம் கண்ணை மறச்சிட்டா உண்மைய எங்க போய் திரையை விலக்கிக் காட்டுறது?”

“அப்ப இப்பிடியே சும்மா விட்டிற வேண்டியதுதானா? நீங்க அடியையும் வாங்கிகிட்டு, வாய மூடிக்கிட்டு வீட்டு வேலை செஞ்சிட்டு இருக்கணுமா?”

“சரி. நீ போய்யான்னு விட்டு விலகிப் போயிரலாம். ஆனா அதுக்கு அப்புறம் எங்கப்பா அம்மாவைத்தான் நான் போய் நொறுக்கணும். அப்படியே நொறுங்கிப் போகாட்டாலும் அவுங்க எவ்வளவு காலத்துக்கு என்னை வச்சுக் காப்பாத்துவாங்க? அவங்க எனக்குக் கலியாணம் செஞ்சு அனுப்பி வச்சதே இந்த சுமைய இறக்கி வைக்கத்தானே? அவங்களை விடு நம்ம உறவு ஜனத்துக்கு தெரியும் போது ஊரு உலகத்துல நடக்காததா இப்ப நடந்திருச்சுன்னு வழிச்சுகிட்டு சிரிப்பாங்க. இல்லே நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி நிப்பாங்க. படிச்சிருந்தாலும் வேலைக்கு போயி சொந்தக் கால்னு நிக்கலாம். அதுவும் இல்லாம போச்சு. வேணும்னா பத்துபாத்திரம் தேய்க்கலாம். இல்லே சமையக்காரியாப் போய் வேலை பார்க்கலாம்…” என்றாள்.

அவள் சொல்வதைக் கற்பனை செய்து பார்க்க கோபிக்கு நடுக்கமாக இருந்தது!

“கதப் புஸ்தகத்துல வர்ற பொண்ணா இருந்தா கொடி பிடிச்சுகிட்டு எதிர்த்துப் போராடறான்னு எழுதிரலாம். சினிமாலேன்னா அவ அவனுக்கு திருப்பி செஞ்சு பழி வாங்கினான்னு இன்னொரு ஆம்பிளையோட வாழ வச்சிரலாம். ஆனா குடும்பம் ஊரு உறவுன்னு நடைமுறைல கட்டிப் போட்டு வச்சிருக்கிற ஜென்மமா இருந்தா மறுகிக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். என்னாலயும்
இதுக்கு எதுவும் பண்ண முடியாது. உன்னாலயுந்தான்” என்றாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.