“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”
முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள்.
இதையெல்லாம் மீறி, விரும்பி வாசிக்கும் கவிஞர்களும் கவிதைகளும் நிறையவே என்பது ஒரு கொடுப்பினை தான். நவீன கவிதைகளை நோக்கிய என் அறிமுகமும், ஆர்வமும் வளர்ந்தது மற்றும் என் கவிமொழியை நான் உருவாக்கிக் கொண்டது, சுகுமாரன் கவிதைகளைப் படித்த பின்பு தான். தமிழின் நவீன கவிதைகளில் சுகுமாரன் தான் என் ஆதர்சம். அவரின் “பயணியின் சங்கீதங்கள்” மற்றும் “கோடைக்காலக் குறிப்புகள்” தொகுப்புகளிலிருக்கும் பல கவிதைகள் ஒரு செய்யுளைப் போல மனப்பாடமாக என்னால் இன்றும் ஒப்பிக்க முடியும்.
அதற்கு முன் சுப்பிரமணிய பாரதி, தமிழ் மரபுக் கவிதை வரிசையில் என் ஆதர்சமாக இன்னும் நிலைத்து நிற்கிறார்.
சுகுமாரனுக்குப் பிறகு பிரம்மராஜன் தான் என் விருப்பத்திற்குரிய கவிஞர். அவர் கவிதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவராலேயே எனக்கு புதிர் தன்மை மற்றும் ஆரூப வகைக் கவிதைகள் பிடித்துப் போயின. நான் விரும்பி வாசிப்பதும் இப்படிப்பட்ட கவிதைகள் தான் எனினும் எளிமையான நேரடிக் கவிதைகளும் என்னை எப்போதும் கவரவே செய்கின்றன.
திருக்குறள், அகநானுறு, புறநானுறு மற்றும் பல சங்க இலக்கியங்கள் அவற்றின் சந்த நயத்திற்காகவே பள்ளிப் பருவத்தில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பிறகு வைரமுத்து, அப்துல் ரகுமான், கண்ணதாசன் என்ற ஒரு வரிசையை வெகு சீக்கிரம் தாண்டிக் கடந்து வந்துவிட்டேன். சினிமாவிற்கு பாட்டு எழுத மாட்டேன் அம்மி கொத்த சிற்பி எதற்கு என்று சொன்னதால் அல்ல, அவருடைய ஏனைய உலகக் கவிதைகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளுக்காக எனக்கு அப்துல் ரகுமானைத் தனியாகப் பிடித்தது.
ஆரம்பத்தில் பெரும்பாலான நவீன கவிஞர்களை சுஜாதா மூலமே அறிந்து கொண்டு அணுகினேன். பெரும்பாலும் ஏமாற்றமளிக்காத ஒரு கவிஞர் பட்டியல் எனக்குக் கிடைத்தது.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைள் எனக்கு மிகப் பிடித்தமான வடிவம். ஆனால் தமிழில் இந்த வடிவத்திற்கு நேர்ந்த வன்கொடுமையின் துயரம் வர்ணிக்க முடியாதது.
பிரமிளின் படிமக் கவிதைகளும் ஞானக்கூத்தனின் அபத்தவியல் கவிதைகளும் எப்போதும் உவப்பானவை. விக்ரமாதித்யன் மற்றொரு பிடித்த கவிஞர். மேலும் மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாம், ரமேஷ் பிரேதன் ஆகியோரை தனித்துக் குறிப்பிட வேண்டும். இவர்கள் தவிர கலாப்ரியா, சுந்தர ராமசாமி (பசுவய்யா), லீனா மணிமேகலை, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், மகுடேஸ்வரன், என்.டி.ராஜ்குமார், ஆர்.பாலகிருஷ்ணன், பா.ராஜாராம் என்ற ஒரு நீண்ட வரிசையும் எனக்குப் பிடித்த கவிஞர்களே.
பின்வருபவர்கள் எனக்குப் பிடித்த சக கவிஞர்கள் …
மண்குதிரை – அழகியல் உணர்வுகள் பொங்கும் romanticism கொண்டதற்காக
யாத்ரா – அக உணர்வுகளின் தாண்டவம் ஆடும் கொந்தளிப்பை அநாயசமாகச் சொல்வதால்
நேசமித்ரன் – ஒவ்வொரு முறையும் ஒரு அற்புத உலகைப் படைத்து, காலத்தையும் வெளியையும் ஒரு கண்கட்டு வித்தை போல கடந்து விடும் வரிகளால்
விநாயக முருகன் – எளிமையான நேரடித்தன்மை மற்றும் கதை பாணியிலான அமைப்பு; சிறு விஷயங்களையும் நுட்பமான பார்வையுடன் கவனித்து கவிதையாக்குதல் போன்றவற்றிற்காக
முபீன் சாதிகா – பின்மரபுத்துவத்திற்காக
பொன். வாசுதேவன், வா.மு. கோமு, எம்.டி.முத்துகுமாரசாமி – இவர்களையெல்லாம் contemporary எனலாமா தெரியவில்லை. தொன்னூறுகளின் இறுதியிலே கணையாழியில் எழுதிவிட்டதாலேயே என்னை போன தலைமுறை என சொல்வோரும் உண்டு.
வாசுவின் காதல் மற்றும் தத்துவக் கவிதைகள் இந்த நவீன யுகத்திலும் ஸ்வாரஸ்யம் இழக்காமல் இருப்பதால்.
வா.மு.கோமுவின் கவிதைகள் அவிழ்த்துப் போடும் காமத்தின் நிர்வாண அழகிற்காக.
எம்.டி.முத்துகுமாரசாமியின் கவிதைகளின் metaphysical தன்மைக்காக.
நிலா ரசிகன் – இவரின் கவிதைகளின் இயங்கு தளமே ஒரு graphic novelஐப் போல இருப்பதால்
அய்யனார் – பிறழ்வின் மையத்தையும் நெருங்கத் துணியும் கனமான சொற்களுக்காக
வா.மணிகண்டன் – மனித இருப்பின் ஊஞ்சலாட்டமும், நவீன வாழ்வில் நாம் ஆடும் பரமபதம் மற்றும் அதற்கான எதிர்வினைகளையும் பாசாங்கில்லாமல் சொல்வதற்காக
ராணி திலக் – வாழ்வின் அபத்தவியல் தரிசனங்களுக்காக
லாவண்யா சுந்தரராஜன்
போகன் சங்கர் – அதிர்ச்சி மதிப்பு என்பதை ஒரு யுக்தியாக அல்லாமல் இயல்பாகச் செய்வதால்
இசை – சமூகச் சாடல்களை அறிவுரை இல்லாத பகடிகளை கவிதை என்ற வடிவத்தில் ஸ்வாரச்யம் பிசகாமல் சொல்வதற்காக
பெரும்பாலும் நான் அடிக்கடி வாசிக்கும் கவிஞர்களையே இங்கே குறிப்பிடுகிறேன். என் தற்போதைய நினைவில் வேறு சில நல்ல கவிஞர்கள் விடுபட்டிருந்தால் அது என் ஞாபகத் திறனின் குறையே.
பிடித்த கவிதைகள் என்றால் அதைச் சொல்ல இன்னும் நிறைய பக்கங்கள் எழுத வேண்டி வரும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதையும் சொல்கிறேன்.
நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரை சந்திக்கும் பொழுதெல்லாம் பிடித்த கவிதை வரிகளை நினைவிலிருந்து சொல்லி மகிழ்வது நல்ல விளையாட்டாக இருக்கும்.