நகை எனும் மெய்ப்பாடு

Public Seminar என்ற தளத்தில் Dmitri Nikulin எழுதிய, “Why Comedy Matters”, என்ற கட்டுரையின் தமிழாக்கம்

தார்மீக முடிவுகளோ அரசியல் முடிவுகளோ தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், நம் கைவசமுள்ள நாடகங்கள் மற்றும் இலக்கியத் தொகுப்பில் பதியப்பட்டுள்ள வழமைச் சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறோம் என்பதையொட்டி அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதையும் அவ்வாறே நம் செயல்களும் அமைகின்றன என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் வசமுள்ள வகைமைகள் அனைத்தைக் காட்டிலும், நகைச்சுவையையே நாம் எப்போதும் ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது – பிறரோடு நாம் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் பழகுகிறோம் என்பதைச் சரியாக விவரித்து விவாதிக்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு என்பதை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல்தான் இதைச் செய்கிறோம்.

ரோமானியப் பேரரசில் உள்நாட்டு யுத்தம் துவங்கும் சீஸர், “பகடையை உருட்டியாயிற்று,” என்று பிரகடனம் செய்தான் (“The die has been cast.”). சீஸர் இதைத் தன் தாய்மொழியான லத்தீனில் கூறினார் என்கிறார் சூடோனியஸ் (alea iacta est). ஆனால், ப்ளூடார்க்கோ, சீஸர் கிரேக்க மொழியைப் பயன்படுத்தினான் என்று பதிவு செய்கிறார் (anerrhiphtō kybos)- இதைச் செய்கையில் அவன், நியூ காமெடி என்று அழைக்கப்படும் வகைமையின் பிதாமகர் மெனாண்டர் எழுதிய, தற்போது தொலைந்துவிட்ட, நகைச்சுவை நாடக வசனம் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். கோரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் புனித பால்கூட மெனான்டரை நோக்கித் திரும்புகிறார், Thais என்ற நகைச்சுவை நாடக மேற்கோள் ஒன்றை அவர் இங்கு கையாள்கிறார்: “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்”

கொண்ட கொள்கைக்காக மரணத்தைத் தழுவ பிறரை வற்புறுத்தவோ, அல்லது பிறர் நன்னடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தவோ இன்று ஒருவர் முயற்சி செய்கிறார் என்றால், அதற்குத் தக்க மேற்கோளை அவர் ஒரு துயரகாவியத்திலிருந்தோ இதிகாசத்திலிருந்தோ தேர்ந்தெடுத்துக் கொள்வார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், பொதுவாக ஒன்றையொன்று சந்தேகத்துடன் அணுகினாலும், சர்ச்சும் அரசமைப்பும் நகைச்சுவையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றன. ஏன்?

மெனான்டரின் நாடகங்கள் மிகச் சிறந்த முன்னுதாரணங்களாக இருந்தன. அவர் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் அறியப்பட்டிருந்த அவரது நாடகங்கள், முகமற்ற சாமானியர்களுக்குரிய அறிவுத்தொகுப்பின் தோற்றுவாயாக உருவாயின. கிரேக்க தேசத்தின் தொல் வழிகாட்டிநூல் எழுதிய பாஸானியஸ்,, இதை உறுதி செய்கிறார்- கிறித்துவுக்கு இருநூறு ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ஏதென்ஸ் நகர மக்கள், அரிஸ்டோபேன்ஸை சுத்தமாக மறந்திருந்தாலும் மெனான்டரை ஆராதித்தனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

நவீன ஆங்கில பேச்சுமொழியை உருவாக்கியவர் ஷேக்ஸ்பியர் என்று பலரும் கருதுவதுபோல், மெனான்டரும் அவர் பங்குக்கு, அன்றாட கிரேக்க மொழியை உருவாக்கியவர் என்ற கருத்து உண்டு. பல வகைகளிலும் நம் காலத்தையொத்த பிற்கால பண்டையுலகின் கோளளாவிய புழங்குமொழியாக கிரேக்கம் விளங்கிற்று. ஆனால் தொல்நகைச்சுவையில் நமக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?- இக்காலத்தில் யாரும் அவற்றை நினைவு வைத்திருப்பதாய் தெரியவில்லை.

பண்டைக்கால இலக்கிய வகைமைகளில் மிகச் சிலவே இன்றும் பிழைத்திருக்கின்றன, நியூ காமெடி அவற்றில் ஒன்று. சொல்லப்போனால் நவீனத்துவம் பெருமளவில் தன்னை தொல்மரபுக்கு எதிரானதாய்ப் புதிதாய்க் கண்டறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, அதன்பின் அதுவே தொல்மரபின் முற்றெதிர் பிறிதாகிறது – அதிலும் குறிப்பாக, ஓவியம், நாடகம், தத்துவம் ஆகிய கலைகளைக் குறிப்பிடலாம். எனினும் நியூ காமெடி பெருமளவு மாற்றங்களின்றி எப்போதும் இருந்தவாறே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது, எனவேதான் அது வேற்றுமை காண முடியாத அளவு பழக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. இவ்வாறாகவே அது அயற்திணையற்றதாகவும் காமிக்கவொண்ணாததாகவும் தோற்றமும் தருகிறது.

மெனான்டரின் நகைச்சுவை நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டின் மத்திய ஆண்டுகளில்தான் கண்டெடுக்கப்பட்டன என்றாலும், நியூ காமெடி அதைப் பயின்ற ப்ளாட்டியஸ், டெரென்ஸ் முதலிய ரோமானியர்களால் ரகசிய உயிர்ப்புடன் பாதுகாக்கப்பட்டிருந்தது. பின்னர், டெரென்ஸ் நாடகங்களை நேரடியாகப் பயின்று அரங்கேற்றிய மோலியே மற்றும் ஷேக்ஸ்பியரை அது வந்தடைந்தது. வூடி ஆலன் உள்ளிட்டவர்களின் நவீன நகைச்சுவையாக அது இன்றும் செழிக்கிறது. பொதுவெளியிலும் அரசியலிலும் அதற்குள்ள முக்கியத்துவம் காரணமாகவே நகைச்சுவை அழிவற்று இவ்வாறு தொடர முடிந்திருக்கிறது.

துணுக்குகளோடும் சிரிப்புடனுமே நகைச்சுவை எப்போதும் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. நகைச்சுவை துணுக்கு குப்புற வீழ்த்தும் தன்மை கொண்டது- இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, திண்மைத்தோற்றம் பெற்றுவிட்ட மொழிபின் துகிலை நகைச்சுவைகிழித்தெறிகிறது. அமெரிக்க அதிபரும்கூட ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் நகைச்சுவை துணுக்குகள் சொல்லி விருந்துபசாரம் செய்து நிருபர்களை மகிழ்விக்கிறார்.. நகைச்சுவை துணுக்குகளைச் சொல்வதும் சிரிப்பதும் நம் அன்றாட வாழ்வுக்குரியனவாய் இருக்கின்றன, அவை காமெடிக்கு அப்பால் நிலவுகின்றன.

உண்மையில் காமெடி என்பது அதன் பாத்திரங்களாலும் கட்டமைப்பாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று- நம் அன்றாட வாழ்வனுபவங்களுக்கு இணக்கம் கொண்டது. ஒப்புமையளவில் அதன் புறத்தோற்றம் எளியதாக இருந்தாலும், அது தன் வளர்ச்சிப் பாங்கில் நுண்மைகள் திரட்டிக் கொள்ளக்கூடியது. அவலம் நல்லபடியாகத் துவங்கி, நியாயமற்ற, ஆனால் நாம் கலங்கலாக அவதானிக்கக்கூடிய பேரழிவின் மோசமான முடிவை அடைகிறது. அதற்கு மாறாய் நகைச்சுவை, ஒரு சிக்கலில் மோசமான துவக்கம் கொண்டிருந்தாலும் இறுதியில் பிரச்சினைக்கு தீர்வு கண்டு சுபமுடிவு அடைகிறது. இந்தத் தீர்வில் வெளிப்பார்வைக்கு கொச்சையாயும் மிகையாயுமான தோற்றம் தரும் வகையில் காதலையும் வாழ்வையும் கொண்டாடும் களியாட்டத்துக்கு நிறையவே இடமுண்டு.

அவல முடிவு இறுதியானது: அது மரணத்தில் முற்று பெறுகிறது. மாறாய், நகைச்சுவையின் முடிவு எப்போதும் தற்காலிக மெய்ம்மை மட்டுமே கொண்டது. ஒரு பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு வேறொரு பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது, இதற்கு இனி வேறொரு தீர்வு கண்டறியப்பட்டாக வேண்டும். வாழ்வைப் போல், நகைச்சுவையும் முடிவற்ற மறுசீரமைப்புகளும் மாற்றங்களுமாய் தொடர்கிறது. செவ்வியல் தன்மை கொண்ட அவல நாடகங்கள் உறைநிலையிலிருந்து செயல்நிலைக்குச் செல்ல, தெய்வம் திடீரென்று கதைக்குள் நுழைத்து வினைதீர்க்க வேண்டியதாகிறது. இதற்கு மாறாய், நகைச்சுவை, குழப்ப நிலையில் ஓர் ஒழுங்கை உருவாக்கி, தன் கருவிகளைக் கொண்டே சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளக் கூடியது. அதன் நகர்வு பலகாலும் ஒழுங்கற்றது, சிலபோது சிரிக்கவைப்பது, ஆனால் எப்போதும் குப்புறக் கவிழ்ப்பது.

ஆனால் நகைச்சுவை இதை எவ்வாறு சாதிக்கிறது? கவனமான சிந்தனையை, செயல்வினையாய் அரங்கேற்றுவதன் வாயிலாக.

சுபமுடிவுக்குக் கொண்டு செல்லும் நகைதர்க்கம், சுற்றிவளைத்துச் செல்வது, அறிவார்ந்தது, துவக்கத்தில் போலி செய்வதான தோற்றத்தில் அரங்கேறியது- ஏன், ஏதென்ஸின் தத்துவார்த்த, அரசியல் விவாதங்களின் பகடியாகக்கூட அது முதற்பொருளில் காட்சியளித்திருக்கலாம். ஜனநாயக அரசியலில் அனைவரும் பங்கேற்பதால், அனைவருக்கும் இதில் பங்குண்டு, அனைவரும் நகை வினை இயற்றுதலில் பங்கேற்கிறோம். இந்த அர்த்தத்தில், நகைச்சுவைக்கு ஒற்றை மையம் கிடையாது. மேலும், இது முற்றிலும் ஜனநாயகத் தன்மை கொண்டது- காரணம் ஏதெனில், பார்வைக்கு அசாத்தியமாய் தோற்றம் தருவதைச் சாதிக்க எவரும் காமெடியில் துணியலாம், யார் வேண்டுமானாலும் எதையும் கேள்விக்குட்படுத்தலாம், தற்போது சந்தேகத்துக்குட்பட்டதாகவும் சீரழிந்திருப்பதாகவும் உள்ள சமூக, அரசியல் நடைமுறைகளைத் திருத்தலாம், புரட்டிப் போடலாம். சுற்றிவளைத்துச் செல்லும் நகைச்சுவை கதைக்கரு, உட்கவிந்து உடைவது போன்ற தோற்றம் கொண்டிருக்கலாம்- ஆனால் அது எப்போதும் குதித்தெழுந்து தன் சுபமுடிவை அடைவதில் வெற்றி பெறுகிறது.

அரிஸ்டாட்டில் தன் பாலிடிக்ஸ் நூலில், பொது நன்மையை நோக்கமாய் கொண்டு குடிமக்கள் தம்மிடையே நிகழ்த்திக் கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களே அரசியல் என்று விளக்குகிறார். இது உண்மையெனில், அடையப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பொது நன்மைக்காக பொதுவெளியில் சிந்தித்தலும் பிறருடன் இணைந்து செயல்படுதலும் விவரணையளவில் நகைத்தன்மை கொண்டதாகவும், செயல்வரையளவில் அரசியலாகவும் இருப்பதை அறியலாம்- சுபம் என்று வரலாற்றுக்கு முடிவு கட்டுவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருத்தலால்.

தனியொருமைத்தன்மை கொண்ட அடையாளம் என்பது நகைச்சுவையில் அவசியமில்லை, ஒருவன் நாயகனாகவோ நவீன தத்துவார்த்த பேசுபொருளாகவோ இருக்க வேண்டியதில்லை. பலகாலும் நகையாளுமையின் அடையாளம் பல்பொருள் கொண்டதாகவும், தீர்மானமற்றதாகவும், உடைந்ததாகவும் உள்ளது. உண்மையைச் சொன்னால், தலைசிறந்த நாடகாசிரியர்கள் இரட்டை அடையாளம் கொண்டவர்களாக இருக்கின்றனர்: அதிகாரம் செலுத்தும் ஆதிக்க கலாசாரத்துக்கு உரியவர்களாக இருக்கும்போதே ஒடுக்கப்பட்ட கலாசாரத்துக்கும் ஏகதேசம் சொந்தமானவர்களாக இருக்கின்றனர். உதாரணத்துக்கு, டெரன்ஸ் ஒரு ரோமனாவும் கார்தஜினியனாகவும் இருந்தார், கொகோல் ருஷ்யராகவும் உக்ரேனியராகவும் இருந்தார்; அதே போல், டாம் ஸ்டப்பார்ட் ஆங்கிலேயராகவும் செக்காகவும் இருக்கிறார், வூடி ஆலன் அமெரிக்கராகவும் யூதராகவும் உள்ளார்.

நகைச்சுவை பாத்திரங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லர்; அவர்களது எண்ணங்களும் செயல்களும் பொதுவில் நிகழ்பவை, அவர்களை மட்டுமன்றி பிறரையும் குறித்தவை – கூட்டு நடவடிக்கையால் மட்டுமே நகைச்சுவை நிகழ்வுகளுக்கு தீர்வு காண இயலும்.. நகைச்சுவையின் களம் குடும்பமும், நண்பர் வட்டமும்- இது அரசு அமைப்பை ஒத்திவைத்து, அழித்தொழிக்கும் சாத்தியத்தின் திசையைச் சுட்டுவதாய் இருக்கிறது.

இந்தச் செயல்களுக்கு முடிவு காண இயலாது என்று சொல்லுமளவு திருகலாய் இருக்கும்போதும், ஒருவன் மீண்டும் முதலிலிருந்து துவங்க இயலும் – ஏனெனில், நகைச்சுவை மரணத்தின் இறுதி முடிவைத் தன்னுடன் கொணர்வதில்லை, மாறாய் வாழ்வின் புத்துயிர்ப்பைத் தருவிக்கிறது. நம்மைவிட்டு விலகி நிற்கும் துயர் வடிவம் போலன்றி – அரசன், நாயகன், அல்லது பிரபலம்- நகைச்சுவைப் பாத்திரம், அரிஸ்டாட்டில் தன் போயடிக்ஸில் விளக்கியவாறு, உன்னையும் என்னையும் அப்படியே உரித்து வைத்தவன். அவலம் பெரும்பாலும் வசதி வாய்ந்த ஆண் நாயகர்களுக்கு உரியது, ஆண் தத்துவவியலாளர்களே இது குறித்த பெரும்பான்மை ஆய்வுகள் செய்கின்றனர், நகைச்சுவையோ அதன் பாத்திரங்கள் மற்றும் சிந்தனையாளர்கள் விஷயத்தில் கூடுதல் இணக்கத்தன்மை கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் நகைச்சுவை குறித்து எழுதப்பட்ட ஆகச்சிறந்த தத்துவப் படைப்புகள் அனைத்தும் பெண்களால் மட்டுமே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியும் (இவர்களில் இருவரை மட்டும் குறிப்பிடுவதானால், ஆக்னஸ் ஹெல்லரையும் அலேன்கா யோபான்சிச்சையும் சொல்லலாம்).

நகைச்சுவை பாத்திரம் உனக்கருகில் இருக்கும் சாமானியன் என்பதால், அவன் யாராகவும் இருக்கலாம் – அவனது பாலினம், இனம், தேசம், சமூக நிலை எதுவாகவும் இருக்கலாம். உண்மையில் நகைச்சுவை நாயகன் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவனாகவும், சமூகப் படியமைப்பில் தாழ்நிலையில் உள்ளவனாகவும் இருக்கிறான். அவள் ஒரு வேலையாளாக இருக்கலாம் (அல்லது தொல்காலத்தில் அடிமையாக இருக்கலாம்), பெண்ணாக இருக்கலாம், அல்லது இன்னதென்று சொல்லமுடியாத பாலினம் கொண்டிருக்கலாம்.

மேடையில் ஒரு சிந்தனையாளனாகச் செயல்படும் நகைச்சுவை நாயகன், முடிவில் விடுதலையளிப்பதாகவும் அனைவர்க்கும் நன்மை பயப்பதாகவும் உள்ள வகையில் பிறர் செயல்படுவதற்கான உந்துதல் அளிக்கக்கூடியவனாக இருக்கிறான். நகைச்சுவையின் முடிவு சாதாரணமானது, அனைவரும் புரிந்து கொள்ளக்கூடியது. அது நல்வாழ்வு, நேசம், சாதாரண, எளிய விஷயங்களில் திளைத்தல்.

நுட்பமான, பலபோதும் சிரிப்பூட்டும், எதிர்பாராத, வெளிப்படையான யோசனையால் நிகழ் போராட்டத்தின் தீர்வு காணும் நகைச்சுவை அதன் பாத்திரங்களுக்கு விடுதலையும் நற்பேறும் அளிக்கிறது. முடிவில் அடிமை விடுவிக்கப்படுகிறான், பிரிந்தவர்களும் காதலர்களும் இணைகின்றனர், பெற்றோர் தம் குழந்தைகளோடு ஒன்று சேர்கின்றனர், பணம் சரியான கரங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டடைகிறது. ஆனால், நகைச்சுவை அளிக்கும் விடுதலையும் நல்வாழ்வும் இயல்பானவையென ஒருபோதும் ஏற்றுக் கொள்வதற்கில்லை- மாறாய், விடுதலையும் நல்வாழ்வும் பிறரோடு கூடிப்பழகி மீண்டும் மீண்டும் வென்றெடுக்கப்பட வேண்டிய சவால்கள்.

காமெடி அனைவருக்கும் இத்தகைய சமூக, அரசியல் நீதியளிக்க முடியுமெனில், காமெடியன் ஆக அனைவரும் கடும் முயற்சி செய்தாக வேண்டும் என்றாகிறது.

image credit – blog.flyyarmy.com

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.