வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.
கணையாழி
April 1998